Monday, August 13, 2018

எஸ். சம்பத்



சம்பத்தின் இடைவெளி

பாலின்பத்தின் உச்சநிலையை பிரெஞ்சில் petit mort    என்கிறார்கள். அதன் பொருள்    mini-deaths  அதாவது நிமிச நேர மரணம். சாவு குறித்த பயத்திலிருந்தே பாலின்ப வேட்கை உருவாகிறது என்கிறார்கள் உளவியலாளர்கள்.
பாலுறவும் சாவும் ஒன்றோடு ஒன்று நேரடியாகத் தொடர்பு கொண்டது. தன்னை விருத்தி செய்து கொள்வதற்காகவே பாலின்பத்தை நாடுகிறான் மனிதன்.  அது சாவிலிருந்து தாண்டிச் செல்ல முனையும் எத்தனிப்பே.  பாலுறவின் ஈடுபாடும் சலிப்பும் சாவு குறித்த அடிமனதின் எண்ணங்களின் வழியே தான் தூண்டப்படுகிறது என்கிறார் சிக்மண்ட் பிராய்ட்.
இந்திய புராணீகத்தில் யமன் யமி உரையாடல் என்று ஒரு பகுதியிருக்கிறது. சாவின் கடவுளான எமன் பாலின்பம் குறித்து தனது தங்கை யமியோடு கொள்ளும் விவாதம் அது. அதில் உடல்களுக்கு தனித்த அடையாளம் எதுவுமில்லை. அவை வெறும் கருவிகள். ஆகவே உடலின்பம் என்பது உடலை கடந்து செல்வதற்கான எத்தனிப்பு என்றே குறிப்பிடப்படுகிறது.

சாவு பற்றிய பயமே வாழ்வை  இறுகப்பற்றிக் கொள்ள செய்கிறது. அந்த பற்றுதலை சாத்தியமாக்குவதில் முதல்காரணி பாலுறவே. இந்த இரண்டு புள்ளிகளில் தான் சம்பத்தின் இடைவெளி நாவல்  எழுதப்பட்டிருக்கிறது.

சம்பத்தின் இடைவெளி நாவல் உமாபதி நடத்திய தெறிகள் என்ற காலண்டிதழில் வெளியானது. மிக சிறிய நாவல் 110 பக்கங்கள் கொண்டது. 1984ம் ஆண்டு இதை க்ரியா பதிப்பகம் வெளியிட்டது. அதன் பிறகு இன்று வரை மறுபதிப்பு வரவேயில்லை.

சம்பத் நாலைந்து சிறுகதைகளும் ஒரேயொரு நாவல் மட்டுமே எழுதியிருக்கிறார். அநேகமாக எல்லாக் கதைகளிலும் சம்பத் தான் கதாநாயகன். அல்லது சம்பத்தின் சுய அனுபவத்திலிருந்து உருவான ஒருவனை பற்றியது. அந்தக் கதைகள் வெவ்வேறு காலங்களில் வெளியாகியிருந்த போதும் அதன் உள்ளே தொடர்ச்சி காணப்படுகிறது. நிலை கொள்ள முடியாத மனதின் தத்தளிப்பு காரணமற்ற வேதனையுமே அவரது அகவுலகம்.

சாமியார் சூவிற்கு போகிறார் என்ற சம்பத்தின் நீண்ட சிறுகதை ஒன்றிற்கும் இடைவெளி நாவலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அது தான் வளர்ந்து நாவலாகி இருக்கிறதோ என்று கூட தோன்றுகிறது. சம்பத்தை வாட்டிய இரண்டு முக்கிய பிரச்சனைகள் ஒன்று பாலுறவு இரண்டாவது சாவு.
இரண்டை பற்றியும் ஆழ்ந்து யோசித்திருக்கிறார். சுவரில் செல்லும் எறும்பை உற்று கவனிப்பதை போல தன் உடலின் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்திருக்கிறார்.
அந்த அவதானிப்பில் இருந்து உருவான சந்தேகங்கள் கண்டுபிடிப்புகளை பகிர்ந்து கொள்ள யாருமின்றி தனக்கு தானே சொல்லிக் கொண்டிருந்திருக்கிறார். அவை பல நேரங்களில் அவரை பிரமிக்க வைக்கின்றன. பல நேரம் நீங்காத துக்கம் கொள்ள செய்கின்றன.

சாவு குறித்த சித்தாந்தங்கள், தத்துவ கேள்விகள் மீது அவருக்கு நாட்டமில்லை. அவர் ஒரு கலைஞராக தனது தேடலின் வழியே அதைக் குறித்து சுயமாக அறிந்து கொள்ள வேண்டும் என்று எத்தனிக்கிறார். அதையும் வாழ்வனுபவத்திலிருந்தே அறிய  வேண்டும் என முயற்சிக்கிறார். ஒரு வகையில் சாவை புரிந்து கொள்வதன் வழியே தனது வாழ்வின் நிஜமான அர்த்தத்தை தெரிந்து கொள்ளப் போராடியிருக்கிறார் என்றே படுகிறது.

சாவு குறித்த மகத்தான உண்மை ஒன்றை தான் அறிந்து கொண்டுவிட்டதாகவே சம்பத் கருதுகிறார். அதை வெளிப்படுத்துவதிலும் பகிர்ந்து கொள்வதிலும் அவருக்கு ஏற்பட்ட தடுமாற்றங்களே நாவலாகியிருக்கிறது.

சாவு குறித்த பயம் பெரும்பான்மை எழுத்தாளர்களுக்கு தீவிரமாக இருந்திருக்கிறது. அந்த ஒற்றை மையத்தில் உழன்றபடியே தான் வாழ்க்கையை ஆராய்ந்திருக்கிறார்கள். குறிப்பாக தஸ்தாயெவ்ஸ்கி போல சாவின் அருகாமையை உணர்ந்த எழுத்தாளர் வேறு எவருமேயில்லை. அவர் சாவின் பிடியிலிருந்து தப்பி வந்த பிறகு வாழ்வை கொண்டாடத் துவங்குகிறார். உலகம் மிக புதிதாக தெரிகிறது. எல்லா கசப்பு வெறுப்புகளை தாண்டி மனிதர்கள் மீதான அவரது அன்பும் அக்கறையும்  எழுத்தில் ஆழமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

சம்பத்தை உலுக்கிய கேள்வி சாவை எப்படி புரிந்து கொள்வது என்ற கேள்வியே. அது குறித்து மருத்துவர்கள் ஆய்வாளர்கள் என்று பலரையும் சந்தித்து விளக்கம் கேட்கிறார். அவர்கள் பாடப்புத்தங்களில் உள்ள விபரங்களை தாண்டி எதையும் தருவதில்லை என்று சலித்து கொள்கிறார்.


சாவு வீட்டிற்கு சென்று அருகில் அமர்ந்து பார்க்கிறார். அப்போது துயரத்தையும் அழுகையையும் அறிந்து கொள்ள முடிகின்றதேயன்றி மரணத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. அவரை அது அலைக்கழிக்கிறது.உறக்கமற்று செய்கிறது. சாவு குறித்த நிஜம் என்று எதையும் அறுதியிட்டு வரையறை செய்ய முடியாத போது அதை பற்றிய கற்பனைகள் அதிகமாக தேவைப்படுகிறது. அந்த கற்பனைகளை கூட நம்மவர்கள் செய்ய மறுக்கிறார்களே என்று அலுத்து கொள்கிறார்


சாவின் மீதான மனஉளைச்சலில் ஆழ்ந்து போயிருந்தவர் பிரெஞ்ச் எழுத்தாளரான மார்சல் புரூஸ். அவரால் தனது தாயின் மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியவேயில்லை. அந்த மரணம் அவரை ஆழ்ந்து யோசிக்க வைக்கிறது. அதிலிருந்து கடந்த காலத்தின் நினைவடுக்குகளை மீட்க துவங்குகிறார். அவருக்கும் காமமும் சாவும் நெருக்கமானவை என்றே படுகிறது.

இதே தளத்தில் இதே உண்மைகளை சொன்ன இன்னொருவர் ஆல்பெர் காம்யூ.
அவரது அந்நியன் நாவல் சாவு வெறும் சடங்காகிவிட்டது. அதன் வெறுமை நம்மை எப்படி பாதிக்கிறது. அதிலிருந்து எப்படி விடுபடுவது என்று தெரியவில்லை. சாவு எப்போதுமே உள்ளுற ஒரு நெருக்கடியை உருவாக்குகிறது அது மனிதனின் இயல்பை மாற்றிவிடக்கூடியது என்கிறார் காம்யூ. அதனால் தான் அந்நியன் நாவலில் வரும் மெர்சோ தன் தாய் இறந்து போன இரண்டு நாட்களில் உல்லாசமாக பெண்களுடன் கழிக்க விரும்புகிறான். மனது காமத்தை அன்றி வேறு எதிலும் சாந்தம் கொள்வதில்லை என்பது பொதுவான விதி போலும்.

இடைவெளி நாவலின் நாயகன் தினகரன். அவன் சம்பத்தின் சாயலில் உருவானவன். தினசரி வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் குறித்து அவன் ஆழ்ந்து யோசிக்க கூடியவன். அதில் தனது மனநெருக்கடியின் தீர்வு ஒளிந்திருக்கிறதா என்று பரிசீலனை செய்து பார்க்கிறான்.  நாவலின் முதல் பக்கத்திலே அவரது மனத்தீவிரம் தெளிவாக சொல்லப்பட்டுவிடுகிறது. சாவு கடைசி பட்ச உண்மை என்பது எவ்வளவு நிஜமோ அவ்வளவு உண்மை உயிர்வாழ்தலின் ருசி என்றும் சம்பத் விவரிக்கிறார்.

தினகரன் நாற்பது வயதானவன். தோல் ஏற்றுமதி செய்யும் கம்பெனியில் வேலை. சாவு வாழ்வு பிரபஞ்சம் காதல் என்று தீவிரமாக எதைஎதையோ யோசித்து கொண்டிருப்பவன். லௌகீக வாழ்வில் அவன் திறமைசாலியில்லை. தலை முடி கொட்டி போய்விட்டது. அடிக்கடி தலை சுற்றல் வருகிறது. தினகரனுக்கு தஸ்தாயெவ்ஸ்கியை பிடித்திருக்கிறது.

அதுவும் குறிப்பாக அவர் இயேசு கிறிஸ்து குறித்து எழுதிய விமர்சனம் அவனை ரொம்பவும் யோசிக்க வைத்திருக்கிறது. காரணம் தினகரனுக்கு இயேசுவை ரொம்பவும் பிடிக்கும்.  தஸ்தாயெவ்ஸ்கி சாவை சமூகபிரச்சனையாக்கிவிட்டார் என்று அவனுக்கு உள்ளுற வருத்தமிருக்கிறது. ஆனால் தஸ்தாயெவ்ஸ்கியால் சாவு குறித்து அறுதியாக ஏதாவது சொல்லியிருக்க முடியும். ஏனோ அவர் அதை வெளிப்படுத்திக் கொள்ளவேயில்லை என்று அவன் நினைக்கிறான்.


தஸ்தாயெவ்ஸ்கியை படித்த காரணத்தால் அவனுக்கு தினசரி பேப்பர்களில் வரும் கொலை வழக்குகள் மீது மனது தானே ஈர்ப்பு கொண்டுவிடுகிறது . எது அந்த மரணத்தின் ஆதார காரணம் என்று அவனாகவே கற்பனை செய்து கொள்கிறான். அது அவனுக்கு வாழ்வின் புதிராட்டத்தின் மீது வசீகரம் கொள்ள வைக்கிறது. சூதாட்டப்பலகையில் சுழன்று நிற்கும் முள்ளை போல அவன் வாழ்வு சாவை காண்கிறான்


தினகரன் மனைவி பத்மா அவனை புரிந்து கொள்ளவில்லை. அவளுக்கு தினகரன் பைத்தியம் என்ற எண்ணமிருக்கிறது. தினகரனுக்கு பத்மாவை தவிர கல்பனா என்ற பெண்ணோடு ஸ்நேகமிருக்கிறது. அது பத்மாவிற்கு பிடிப்பதில்லை. புத்தகங்கள் ரொம்ப ஆபத்தான விசயம் அதை ஜாக்கிரரையாக கையாள வேண்டும் என்று  நினைக்கிறாள் பத்மா . அதனால் தான் அவளது மகன் டி.ஹெச் .லாரன்ஸ படிப்பதை அவளால் தாங்கி கொள்ள முடியவில்லை. வெடித்து கத்துகிறாள். அவளது ஒரே ஆறுதல் பாலுறவு மட்டுமே. அதில் கூட தினகரன் நிறைய கற்பிதங்களையும் மாயகற்பனையும் கொண்டிருக்கிறார் என்பதே அவளது எண்ணம். அந்தச் சிந்தனை குழப்பம் படிப்பதால் தான் உருவாகிறது என்றே நம்புகிறாள்.

தினகரனுக்கு ஆறுதல் தருகின்ற ஒரே அம்சம் கடல். அவன் கடலின் முன்னால் தன் இருப்பு கரைந்து போவதை உணர்கிறான்


தினகரனின் பிரச்சனை சாவு குறித்து அவன் தர்க்க ரீதியாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதே. அதை வெறும் நிகழ்வாக கருவதில்லை. அதே நேரம் அது குறித்த அதீத பயம் எதுவும் அவனிடம் இல்லை. அவன் மனது கருத்தியல் ரீதியாக புரிந்து கொள்ள எத்தனிக்கிறது. அதற்கு தடையாக உள்ளது எது என்பதை ஆராய்கிறது.


இந்த தடுமாற்றங்களுடன் அவனது தினசரி வாழ்க்கையை கொண்டு செலுத்த முடியவில்லை. உராய்வும் பிரச்சனைகளும் அதிகமாகின்றன. அவன் தான் ஒரு பிரபஞ்ச உண்மையை தேடிக் கொண்டிருப்பதாக நம்புகிறான். அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறான். அவனால் முழுமையாக இயற்கையில் தன்னை கரைத்து கொள்ள முடிவதில்லை. அவன் விலகி நின்று பார்க்கும் மனநிலையே கொண்டிருக்கிறான் . அவனது கனவில் ஒரு சிறுமி கயிறு தாண்டி விளையாடுகிறாள் . அவன் பிடியிலிருந்து நழுவி ஏதேதோ சம்பவங்கள் நடக்கின்றன. அந்த கனவு அவனை நிம்மதியற்று போக செய்கிறது. வாழ்க்கை நிகழ்வுகள் அபத்தமானவை என்று சில வேளைகளில் நினைக்கிறான். அதனாலே அதன் மீது அதிக ஈடுபாடு காட்ட மறுக்கிறான்.


விஞ்ஞானம் சாவு குறித்த அறிவார்ந்த விளக்கங்களை முன்வைக்கும் போது கலைகள் சாவு குறித்த கற்பனைகளையே முன்வைக்கின்றன. இந்த கற்பனையின் எழுச்சியும் வேகமும் அறிவார்ந்த தன்மைகளை ஒன்றுமில்லாமல் செய்துவிடுகின்றன. தினகரன் விசயத்தில் நடப்பதும் அப்படியே.


அவன் சாவு குறித்த தனது குழப்பங்களுக்கு தீர்வாக மதத்தையோ, ஞான குருக்களையோ நம்ப மறுக்கிறான். அதற்கு மாற்றாக எளிய வாழ்க்கை அனுபவங்களில் இருந்து அவன் உணர்ந்து கொள்வதை ஒரு கருத்துருவமாக மாற்றுகிறான். புதுமைபித்தனின் மகாமசானம் கதையில் ஒரு மனிதன் சாலையோரம் செத்து கொண்டிருப்பான்.  அதை ஒரு குழந்தை வேடிக்கை பார்த்தபடியே  இருக்கிறது. சாவில் முன்னால் குழந்தையின் இயல்பு மாறுவதில்லை என்பது போன்ற காட்சியது.

கிட்டதட்ட அந்த குழந்தையின் மனநிலையில் தான் தினகரன் இருக்கிறான். அவனை சாவு தொடர்ந்து யோசிக்க வைக்கிறது. குழப்பம் கொள்ள செய்கிறது. ஆனால் அதை விட்டுவிட முயலவில்லை. ஆசையாக பின்தொடர்கிறான்
மௌனியின் கதைகளில் சாவு ஒரு தீராத பிரச்சனை. ஆனால் அவர் அதை தத்துவார்த்த தளத்திற்கு கொண்டு போய்விடுகிறார். அதனால் அவரது கதைகளில் இல்லாமல் போவது இருப்பதை போன்று நினைவுகளின் வழியே மீள்உருக் கொண்டுவிடுகிறது. சாயைகளாக நடமாடுகின்றன. மௌனி சாவை ஒரு கடந்து போவதாக மட்டுமே கருதுகிறார். சம்பத்திற்கு அது போதுமானதாகயில்லை. சம்பத் இன்னும் ஆழமாக அதற்கான பிரத்யேக விடை ஒன்று இருக்ககூடும் என்று நம்புகிறார். அதை நோக்கி தீவிரமாக செல்கிறார்


ஜே.கிருஷ்ணமூர்த்தி சாவை பற்றி குறிப்பிடும் போது அது ஒரு சொல். அந்த சொல்லை ஒரு பயமுறுத்தும் உருவமாக மாற்றி வைத்திருக்கிறோம். ஆகவே தான் மனது அந்த சொல்லை நினைத்தவுடன் பயம் கொள்ள செய்கிறது. வாழ்வது சாவது  என இரண்டை பற்றியும் அதிகமான கற்பிதங்களே நம்மிடம் இருக்கின்றன. எப்படி அதை பிரித்து பார்க்கிறோம். எப்படி புரிந்துகொள்கிறோம் என்பதற்கு இடையில் பயம் புகுந்து கொண்டிருக்கிறது. பயமில்லாமல் இதை பற்றி நாம் யோசிப்பதேயில்லை என்கிறார். வாழ்வு பற்றிய புரியாமையே சாவு பற்றிய புரியாமையாக உருமாறியிருக்கிறது என்றே சுட்டிக்காட்டுகிறார். தினகரன் அதையே வேறு வகையில் கண்டு உணர்கிறான்.


தினகரனை வசீகரிப்பது எதிர்பாராமை. அது எங்கே முழுமையாக கிடைக்கிறதோ அதை நோக்கி செல்கிறான். அது சூதாட்டமாகவோ, குதிரைபந்தயமாகவோ எதுவாயினும் அதில் அவனை ஈர்ப்பது எதிர்பாராத அதன் முடிவுகள். அதற்கான காத்திருத்தல்கள். மற்றும் விடாப்பிடியான அதன் மீதான ஆசை. இந்த சுழல் தினகரனை ஆழத்திற்கு இழுத்து போகிறது.


பாதி விழிப்பு பாதி கனவு இரண்டுக்கும் இடைப்பட்ட மனநிலையில் தான் தினகரன் சஞ்சரிக்கிறான். அதனால் தான் அவனால் நட்சத்திரங்களை அவ்வளவு நெருக்கமாக நேசிக்க முடிகிறது. அது போலவே அல்பமான விசயங்களில் கூட தீவிரமாக அக்கறை கொள்ள சாத்தியமாகிறது. சம்பத் கண்டுபிடித்த இடைவெளி என்ற கருத்துருவம் வெறும் சொல் அளவில் நின்று போகிறது. அதை தாண்டிய ஆழமான அனுபவ தாக்கத்தை உருவாக்குவதில்லை. ஆனால். தினகரன் அதற்கு தரும் விளக்கமும், தர்க்கமும் அதை நோக்கி நம்மை ஈர்ப்பது மட்டுமே நிஜம்.


மனதை உன்னிப்பாக கவனிப்பது ஒரு கலை. அதில் மிக தேர்ச்சி பெற்றவன் தினகரன் என்பது நாவல் முழுவதும் தெளிவாக காட்டப்படுகிறது. எழுதி முடிக்கபட்ட பிரதியை மறுபடி வாசிப்பவனை போல அவன் தனது மனதின் ஒவ்வொரு சிறு அசைவையும் துல்லியமாக படிக்கிறான். விளக்கி சொல்கிறான். அவன் மனதின் இருண்ட பக்கங்கள் என்று தனியே எதுவுமில்லை. அவன் தனது ரகசியங்களை முன்னிலை படுத்தியே தனது நிகழ்கால வாழ்வை பரிசீலனை செய்து பார்க்கிறான்.


ஒரு வகையில் சம்பத்தின் இடைவெளி தினசரி வாழ்க்கையை நாம் எவ்வளவு மொண்ணையாக புரிந்து வைத்திருக்கிறோம். எவ்வளவு அலுப்பூட்டும் அர்த்தமற்ற செயல்களால் நிரப்பிக் கொண்டிருக்கிறோம் என்பதை சுட்டிக்காட்டுகிறது. உடல் பற்றிய நமது புரிதல் அற்பமானது. ஒரு போதும் உடலின் புதிர்தன்மைகளை நோக்கி நாம் நகரவேயில்லை.


உடலை உணரும் தருணங்களான பாலின்பத்தில் கூட நாம் கற்பிதங்களின் வழியே உடலை சுற்றி புனைவுகளையே ஏற்படுத்திக் கொள்கிறோம். ஆகவே உடலின் சூட்சுமங்கள். அதன் ஊடாடும் வெளிகள் பற்றி நமக்கு அறிமுகம் ஏற்படுவதேயில்லை. காலம் பற்றிய நமது பிரக்ஞையற்ற நிலையே இதற்கு முக்கிய காரணம். காலத்தை தீவிரமாக புரிந்து கொள்ள முயற்சிப்பவன் இந்த குழப்பங்களுக்கு உள்ளாவதில் இருந்து தப்ப முடியாது என்பதை இடைவெளி நாவல் நுட்பமாக விளக்கிகாட்டுகிறது.


நவீனநாவல்கள் அன்றாட வாழ்க்கை பிரச்சனைகளை  அதிகம் முன்வைத்தபோது இது போன்ற கருத்தியல் சார்ந்து வாழ்வை தீவிரமாகி அணுகி ஆராயும் முயற்சி கொண்ட நாவல் தமிழில் வெகு குறைவே. நகுலனின் புனைகதைகளை மட்டுமே சம்பத்தின் எழுத்திற்கு அருகாமையில் சொல்ல முடிகிறது. சம்பத்தின் எழுத்து நிறைய இடங்களில் இதாலோ செவோவின் எழுத்துமுறையையும் புனைவுலகையும் நினைவுபடுத்துகிறது. இருவரும் ஒருவகையான ப்ளாக் ஹ்யூமர் வகையை எழுத்தில் உருவாக்குகிறார்கள்.


தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களை யதார்த்தமான நாவல் என்பதோடு தத்துவார்த்தமான எழுத்தும் என்றும் இணைத்தே வகைப்படுத்துகிறார்கள். சம்பத்தின் இடைவெளி ஒன்றை மட்டுமே தமிழில் அப்படி வகைப்படுத்த முடியும்.
**

இடைவெளி நாவல் எழுதிய  எஸ்.சம்பத் நாராயணன் 42வயதில் மூளை ரத்தநாளச்சேதத்துக்கு ஆளாகி 1984 ல் மறைந்து விட்டார் . தன் எழுத்துக்களில் முதன் முதலாக புத்தகவடிவம் பெற்ற ' இடைவெளி ' நாவலை முழு புத்தகமாய்ப் பார்ப்பதற்கு முன்னர் மறைந்து விட்டார்.


தன் திறமைகளுக்குரிய கவனிப்பு தனக்கு கிடைக்கவில்லை என்ற வருத்தம் இவருக்கும் இருந்தது . 'அம்மாவுக்கு ' நாவல் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

ஆதவனும் சம்பத்தும் கல்லூரியில் இந்திராபார்த்தசாரதியின் மாணவர்கள். இந்திரா பார்த்தசாரதி பள்ளியில் படிக்கும்போது தி.ஜானகிராமனின் மாணவர.
சம்பத் மறைந்து மூன்றே வருடத்தில் 45வயதில் 1987ல் ஆதவன் மறைந்தார். தி.ஜாவுக்கும் 1982 ல் 62வயது தான். சாகிற வயசா ?

இடைவெளி - சாவு பற்றிய சம்பத்தின் ஆழ்ந்த தவம். ' சாவு என்னை ஈர்த்தவிதம் -' கடைசியாக எல்லாம் போய்விடுகிறது . இதற்கு என்ன செய்வது? தற்கொலைத்தனமான இந்த எண்ணம் எனக்கு ஒரு மகத்தான உண்மையை உணர்த்தி விட்டது. இடைவெளி நாவல் - ஒரு ஆன்மாவின் கைதேர்ந்த அறிவின் சத்திய சோதனை. விவரிக்கமுடியாத சிக்கல்களைக் கொண்ட பிரபஞ்சம், ஏதோ ஒரு கனிவில், மனிதனிடம் காட்டும் ஞானப் பிச்சை. '

சம்பத் அவரே சொல்வது போல அடிப்படை விஷயங்களில் உழல்பவர்.

சாவு என்பது இடைவெளி . வெற்றி எல்லை தெரியாமல் ஓடும் குதிரை.
எதிராளி தோற்றுப்போனால் சொல்லிக்கொடுக்க வேண்டும். ஆனால் சாவிடம் மட்டும் ஏன் இந்த வெறி போகவே இல்லை . இது நாள் வரை தன்னுடைய தன்மையை மரணம் உணர்த்திக்கொள்ளாமலே இருந்திருக்கிறது. குறைந்த பட்சம் அதற்கு ' போர் ' அடிக்கவில்லை. எப்போதுமே ஜெயிப்பது விடலைத்தனமான காரியம் இல்லையா?

காந்தி முழத்துண்டுடன் நின்று குண்டுகளை வெறும் மார்பில் வாங்கிக் கொண்டார் . காந்தி வெறும் உடம்புடன் நின்றது தான் அவருடைய அத்தனை கால தற்காப்புக்கும் காரணம். வெறும் உடம்பில் சுடுவது என்பது அவ்வளவு ஈசியான காரியமா ? வெறும் உடம்போடு எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டேன் என்ற மனிதனை !

கம்யுனிஸ்ட் கடவுளை நம்பினா அவன் சமுதாயத்துக்கே பயங்கரமானவன் .

இப்படி இடைவெளி நாவலில் படித்த விஷயங்கள் இன்றும்
மறக்கமுடியவில்லை .

டெல்லியிலேயே வளர்ந்த சம்பத் சென்னைக்கு வந்த பின் மவுண்ட் ரோடு குறித்து சில வார்த்தை சொல்கிறார் :' மவுண்ட் ரோடு - மதராசின் கனாட் ப்ளேஸ்.இதுவும் இதனுடைய மூஞ்சிகளும் ! எப்படி ,எங்கு வேண்டுமானாலும் பிறக்கலாம் . வளர்ந்த நிலையில் இங்கு இருக்கக்கூடாது .

இந்த நாவல் பற்றி சொல்ல சம்பத் நாவலில் ஒரு இடத்தில் எழுதும் வார்த்தைகளையே சுட்ட வேண்டியுள்ளது ." எண்ண ஓட்டங்களுக்கு, பெரிய எண்ண ஓட்டங்களுக்கு ஒரு பூ மணப்பின் குணம் உண்டு . அதை யாருமே அசட்டை செய்து விட முடியாது ."

பூமியில் விளைவது எல்லாமே மனிதனுக்கு சொந்தம், எல்லாமே எல்லோருக்கும் சொந்தம் என்ற காலம் வராதா என பகல் கனவு கண்ட சம்பத்.

சம்பத் தின் இடைவெளி நாவல் நூறு பக்கங்கள் தான் . நாவலில் வாமன அவதாரம்! க்ரியா வெளியிட்ட இந்த நாவல் (August,1984) அதன் பிறகு இன்னும் மறுபிரசுரம் செய்யப்படவே இல்லை.

அந்த காலத்தில் டெல்லியில் சம்பத் ஆயிரம் பக்கங்களுக்கு ஒரு நாவல் எழுதி கையெழுத்துப் பிரதியாக . பா.விடம் படிக்க கொடுத்திருக்கிறார் . சில நாளில் .பா படித்தவுடன் அவர் வீட்டிற்கு போகிறார் . .பா நாவல் பற்றி " Rambling இருக்குடா . நல்லா எடிட் பண்ணனும் ." என்று வெராண்டாவில் சொல்லிவிட்டு வீட்டினுள்ளே போயிருக்கிறார் . சம்பத் ஆயிரம் பக்க நாவலின் கையெழுத்துப் பிரதியை நெருப்பு வைத்துக்கொளுத்தி விட்டார்!" டே டே .. ஏண்டா " இபா பதறிப் போய்க்கேட்டிருக்கிறார். " குருநாதருக்கு பிடிக்காத நாவல் இனி எதற்கு ?" என்று சாவகாசமாக சம்பத் சொன்னாராம்.

இன்று சம்பத் எழுதி வாசகர்களுக்கு இந்த இடைவெளி நாவல் தான் மிஞ்சியிருக்கிறது. கணையாழியில் அருமையான இரண்டு குறுநாவல்கள் எழுதினார். '' சாமியார் ஜூவிற்கு போகிறார் '' அடுத்து " பணம் பத்தும் செய்யும் " என்ற குறுநாவல் .
கசடதபற வில் 'கோடுகள் ' என்ற சிறுகதை . ' இடைவெளி ' என்ற தலைப்பிலேயே கூட ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார் . அவர் சிறுகதையொன்றில் திஜாவின் மூத்த மகன் சாகேத ராமன் ஒரு பாத்திரமாக வந்திருக்கிறார் .

ஜி . நாகராஜனின் படைப்புக்கள் தொகுக்கப்பட்டது போல சம்பத்தின் படைப்புகளும் தொகுக்கப்பட்டால் நல்லது .ரொம்ப சொற்பமாகத்தான் எழுதினார் . அவர் மொத்தப்படைப்புகளும் கூட ஒரு சிறு நூல் அளவுக்குத்தான் வரும் .
Read more at http://rprajanayahem.blogspot.com/2009/10/blog-post_21.html#QslqId1hKlKmL5FI.99

சம்பத் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளைத் தேடியபோது அழியாச்சுடர் இணைய இதழில் கீழ்க்காணும் விபரங்கள் கிடைத்தன:

சம்பத் நாராயணன் என்கிற எஸ். சம்பத் 1941-ம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி பிறந்தார். அப்போது சம்பத்தின் தந்தை சேஷாத்திரி ஐயங்கார், டில்லியில் ரயில்வே போர்ட் அதிகாரியாகப் பணியாற்றினார். எனவே சம்பத்தின் இளமைப்பருவம் முழுவதும் டில்லியிலேயே கழிந்தது. பொருளாதாரத்தில் எம்.., பி.எட். பட்டம் பெற்ற சம்பத் டில்லியிலேயே தனியார் நிறுவனங்களிலும் ஆராய்ச்சி நிறுவனங்களிலும் பணியாற்றினார். தன் உறவுப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட சம்பத்துக்கு மூன்று குழந்தைகள். சேஷாத்திரி ஐயங்கார் பதவி ஓய்வு பெற்று சென்னை திரும்பியபோது, சம்பத்தும் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்னை திரும்பினார். சென்னையில் பல நிறுவனங்களில் வேலை செய்த சம்பத் கடைசியில் பெரியமேடு பகுதியில் உள்ள தோல் பதனிடும் மண்டியில் கணக்கு எழுதுபவராகப் பணியாற்றினார். கடைசியாக, சில ஆண்டுகள் வேலை ஏதும் பார்க்காமல் இருந்தார். ’

1984-ல் இடைவெளி நாவல் வெளிவருவதற்கு முன்பு எஸ். சம்பத் என்று அறியப்பட்ட சம்பத் இடைவெளி வந்த பின்இடைவெளி சம்பத்என்றே அறியப்பட்டார். இன்றளவும் அப்படியே அறியப்படுகிறார். இவ்வளவுக்கும் இடைவெளி, க்ரியா பதிப்பகத்தின் வெளியீடாக வருவதற்கு ஒருசில தினங்களுக்கு முன்பு மூளையின் ரத்த நாளம் வெடித்து இறந்து போனார் சம்பத். இன்னொரு துயரகரமான ஆச்சரியம் என்னவென்றால், இடைவெளி என்ற அந்த சிறிய நாவல் மரணத்தைப் பற்றி விவாதிக்கிறது. மட்டுமல்லாமல் சொந்த வாழ்விலும் கூட சம்பத் பெரும்பாலும் மரணத்தைப் பற்றியே யோசித்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருந்திருக்கிறார். இன்னொன்று, அவர் சாகும் போது அவருடைய ஒரு நூல் கூட வெளிவந்திருக்கவில்லை.

கிளாஸிக் என்ற பதத்துக்கு காலத்தைக் கடந்த கலைப் படைப்பு என்றும் வாழ்வின் அடிப்படை உண்மைகளைப் பேசுகின்ற படைப்பு என்றும் பொருள் கொள்ளலாம். மஹாபாரதம் அப்படிப்பட்ட ஒரு கிளாஸிக். உலகின் ஆகப் பெரிய காவியம். அதேபோல் உலகிலேயே மிகச் சிறிதாக எழுதப்பட்ட ஒரு கிளாஸிக் உண்டென்றால் அது சம்பத் எழுதிய இடைவெளி என்று தயக்கமில்லாமல் கூறலாம். சென்ற வாரக் கட்டுரையில் ஜான் ஜெனே, முகமது ஷுக்ரி, சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி ஆகியோரை விட . மாதவன் சிறந்த எழுத்தாளர் என்று நான் கூறியதற்குக் காரணம், மூவரும் தங்களுடைய சொந்த அனுபவத்தை எழுதினார்கள்; மாதவனோ மற்றவர்களின் அனுபவத்தை எழுதினார் என்பது. ஏனென்றால், தன்னுடைய வேதனையை எழுதுவதை விட அடுத்தவரின் வேதனையை எழுதுவதே கடினம். ஆனால் அதே காரணத்தினால்தான்அதாவது, மற்றவர்களின் அனுபவத்தை எழுதாமல் தன்னுடைய அனுபவத்தையே எழுதியதால் சம்பத் சுயசரிதைத்தன்மை கொண்ட genre-ல் எழுதிய மற்றவர்களை விடவும் சிறந்து விளங்குகிறார்.

 



ஏனென்றால், சம்பத் எழுதிய அனுபவம், மரணம். வேறு யாருடைய மரணமோ அல்ல; அவருடைய மரணம். தன்னுடைய மரணத்தையே அணுஅணுவாக வாழ்ந்து, அதனோடு உரையாடி, தர்க்கித்து, பிணங்கி, பயந்து, மோதி, சரணடைந்து அந்த அனுபவத்தை எல்லாம் தொகுத்து ஒரு மகத்தான கலைப்படைப்பாக உருவாக்கியிருக்கிறார் சம்பத். மரணத்துடனான அவரது உரையாடல் முடியும் தருணத்தில் - இடைவெளி நாவலின் அச்சுப் பிரதியில் பிழை திருத்தம் செய்து கொண்டிருந்த வேளையில்சம்பத் மூளையின் ரத்த நாளம் வெடித்து இறந்து போனார். அந்த வகையில் சம்பத்தின் இடைவெளி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால் ஆல்பெர் கம்யூவின் அந்நியனை விட உலக அளவில் பெரிதும் பேசப்படும்.

வெங்கட் சாமிநாதன் கூறுவது போல் சம்பத் இறப்பதற்குச் சற்று முன் எழுதிய மரண சாசனம்தான் இடைவெளி. அல்லது, மரணத்தைப் பற்றிய ஒரு தத்துவ விசாரணை. சம்பத் பற்றி யோசிக்கும்போது ஆதவனைப் பற்றிய நினைவையும் தடுக்க முடியவில்லை. இருவரும் தில்லியில் வளர்ந்தவர்கள். இருவருமே தென்னிந்தியாவுக்கு வந்த பின் இளமையிலேயே இறந்து போனார்கள். ஆதவன் 1987-ல், 45 வயதில் ஒரு விபத்தில் இறந்தார். இருவருக்குமான இன்னொரு ஒற்றுமை, சம்பத்தும் ஆதவனும் தில்லியில் கல்லூரியில் படிக்கும்போது இந்திரா பார்த்தசாரதியின் மாணவர்கள்.

இடைவெளியின் கதை இதுதான்: சென்னையில் உள்ள பெரியமேட்டில் தோல் ஏற்றுமதி செய்யும் ஒரு நிறுவனத்தில் எழுத்தராக வேலை பார்க்கும் சுமார் 35 வயது தினகரன் இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளவன். (சம்பத்தும் அதே இடத்தில் அதே நிறுவனத்தில் அதே வேலைதான் செய்தார்.) தினகரனுக்குப் பிடித்த எழுத்தாளர் தஸ்தயேவ்ஸ்கி. (சம்பத்தின் ஆதர்ச எழுத்தாளரும் அவரே.) தஸ்தயேவ்ஸ்கியைப் போலவே தினசரிகளில் வரும் கொலை வழக்குகளை ஈடுபாட்டுடன் வாசிக்கிறான் தினகரன். அவரைப் போலவே சூதாடுகிறான். (சம்பத்தும் ரேஸுக்குப் போய் மனைவி மற்றும் உறவினரின் வெறுப்புக்கு ஆளாகியிருக்கிறார். பிழை திருத்தம் செய்வதற்காக க்ரியா அலுவலகத்துக்குப் போகும்போது அவருடைய சட்டைப் பாக்கெட்டில் ஏகப்பட்ட லாட்டரி டிக்கட்டுகள் இருக்கும் என்று எழுதுகிறார் சி. மோகன்.) தினகரனின் மனைவி பத்மா. குழந்தைகள் குமார், ஸ்ரீதர், ஜெயஸ்ரீ. (சம்பத்தின் மனைவி மற்றும் குழந்தைகளின் பெயர்களும் இவையே.) நாவல் முழுக்கவும் சம்பத், அதாவது தினகரன், ‘அடிப்படைகள்குறித்துஅதாவது மரணம் குறித்து - செய்யும் தத்துவ விசாரணையை அவனைச் சுற்றியிருந்தவர்கள் எப்படி மனநோயாகப் பார்த்தார்கள் என்பதை விவரித்துக் கொண்டே போகிறார் சம்பத். அந்த விவரணைகளுக்கும் அசோகமித்திரன் சம்பத் பற்றி எழுதியுள்ள ஒரு உண்மைச் சம்பவத்துக்கும் அதிசயிக்கத்தக்க ஒற்றுமை உள்ளது.

சம்பத் பற்றிய அசோகமித்திரனின் கட்டுரைத் தலைப்புபஸ் அடியில் விழவா?’ ஒருநாள் காலை வேளையில் சம்பத்தின் மனைவி பத்மா தன்னுடைய இரண்டு சிறு குழந்தைகளையும் (ஒரு குழந்தைக்குக் கண் பார்வை பாதிக்கப்பட்டிருக்கிறது) அழைத்துக் கொண்டு அசோகமித்திரனின் வீட்டுக்குப் போய் அவர் காலில் விழுகிறார். அதைக் கண்டு பதறிப் போகிறார் அசோகமித்திரன். ‘எனக்குப் பயமாக இருக்கிறது; நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்என்று சொல்கிறார் அந்தப் பெண். ‘அவர் (சம்பத்) ஏதாவது செய்து கொண்டு விடுவாரோ என்று பயமாக இருக்கிறது; நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்.’ அந்தச் சமயத்தில்தான் அசோகமித்திரனின் மூத்த சகோதரி மயக்கம் போட்டு விழுந்து வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அசோகமித்திரன் எழுதுகிறார். ‘நிலைமை மிகவும் நெருக்கடி. நான் மயக்கம் போட்டு விழக் கூடாது. பணம் வேண்டும்.’ (அசோகமித்திரன் ஏன் உலகின் முதல்தரமான எழுத்தாளராக அறியப்பட வேண்டியவர் என்று நான் சொல்வதன் காரணம் இதுதான். எப்பேர்ப்பட்ட துயரத்தையும் black humour-ஆக மாற்றும் கலையில் வித்தகர்.) அன்றைய தினமே அசோகமித்திரன் எழுதி அச்சேற வேண்டிய ஒரு கட்டுரை வேறு எழுதப்படாமல் இருக்கிறது. அப்போது மருத்துவமனைக்கு வரும் சம்பத் அசோகமித்திரனை காஃபி சாப்பிட வெளியே அழைக்கிறார். தான் மிகுந்த கவலையிலும் பதற்றத்திலும் இருப்பதைச் சொல்கிறார் அசோகமித்திரன். ம்ஹும். சம்பத் அதைக் கேட்கத் தயாராக இல்லை. இருவரும் காஃபி ஹவுஸ் செல்கிறார்கள். (அப்போது அசோகமித்திரன் தி. நகர் பேருந்து நிலையத்துக்கு எதிரே உள்ள தாமோதர ரெட்டி தெருவில் - இப்போது தாமோதரன் தெரு - வசித்து வந்தார். அவர் வீட்டிலிருந்து கொஞ்சம் நடந்தால் இண்டியன் காஃபி ஹவுஸ் வரும்.) அந்த காஃபி ஹவுஸில் அசோகமித்திரனுக்கும் சம்பத்துக்கும் நடந்த உரையாடல்:

சீக்கிரம். அங்கே என் அக்கா தனியாக நினைவில்லாமல் இருக்கிறாள்.’

எனக்குக் கொடுங்கள்.’

எதை?’

உங்கள் மந்திர சக்தி.’

என்ன, என்ன, என்ன?’

உங்கள் மந்திர சக்தி. அதோ அந்த பஸ் அடியில் விழட்டுமா?’

என்ன பைத்தியக்காரத்தனமாக இருக்கிறதே? மந்திரமாவது, தந்திரமாவது. நான் ஒவ்வொரு ரூபாய்க்கும் திண்டாடிக் கொண்டிருக்கிறேன்.’

அந்த பஸ் முன்னால் விழட்டுமா?’

நீ எது முன்னாலும் விழ வேண்டாம். என்னைப் பார்த்தால் மந்திர சக்தி இருக்கிற மாதிரியாகவா இருக்கிறது?’

இண்டியா காஃபி ஹவுஸை ஒட்டியபடி உள்ள பர்க்கிட் சாலையில் நிமிடத்துக்கு ஏழெட்டு பஸ்கள் போய்க் கொண்டிருக்கும். சம்பத் பஸ் அடியில் விழ பத்து விநாடிதான் தேவை. ‘ஆளை விடு; என் அக்கா அங்கே சாகக் கிடக்கிறாள்என்று சொல்லியபடி காஃபியைக் குடித்தவாறே வெளியே ஓடுகிறார் அசோகமித்திரன். ஒரு வாரம் கழித்து சம்பத்தைத் தன் தெரு அருகே பார்க்கிறார். ‘என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டே போய் விட்டான்,’ என்று எழுதுகிறார் அசோகமித்திரன்.

அசோகமித்திரன் மந்திரவாதியாகிய கதை என்னவென்றால், சம்பத்தின் மிக நெருங்கிய நண்பர் ஐராவதம். இருவரும் சில கதைகளைக் கூட சேர்ந்து எழுதியிருக்கிறார்கள். ஐராவதத்திடம் சம்பத், அசோகமித்திரன் சாமியார் கதையெல்லாம் எழுதியிருக்கிறாரே; எப்படி எழுதினார் என்று கேட்க, ஐராவதம்தான்ஒருவேளை அதெல்லாம் அவருக்குத் தெரிந்திருக்கலாம்என்று சொல்லியிருக்கிறார். அப்படியாகத்தான் சம்பத்துக்கும் அவர் மனைவிக்கும் அசோகமித்திரன் மந்திரவாதியாகத் தெரிந்திருக்கிறார்!

மீண்டும் இடைவெளிக்கு வருவோம். ஒருநாள் மாலையில் தனது வழக்கமான மரண ஆராய்ச்சியின்களப் பணிகளில் ஒன்றாக, மெரினா கடற்கரையில் உடைகளைக் கழற்றிப் போட்டு விட்டு வெறும் ஜட்டியுடன் அலைகள் உடலைத் தழுவப் படுத்துக் கொண்டு மரணத்தைப் பற்றி வாய் விட்டு யோசித்துக் கொண்டிருக்கிறான் தினகரன். மரணத்தைப் பற்றி இதுவரை யாரும் சொல்லாத ஒன்றைத் தன்னால் சொல்லி விட முடியும் என்றும் நம்புகிறான். அப்போது அந்தக் கடல் மணல்கள் மனித இனத்தை விடப் பன்மடங்கு சக்தி கொண்டது என்றும், அதற்கும் தனக்கும் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் சம்பந்தம் உண்டு என்றும் அவனுக்குத் தோன்றுகிறது. உடனே எழுந்து முழங்காலைக் குத்திட்டு உட்கார்ந்து கொண்டு மணலை கோபுரம் போல் குவிக்க ஆரம்பிக்கிறான்.

மற்றொரு நாள் தினகரனின் பெரியப்பா சாகக் கிடப்பதாகவும், சாவதற்கு முன் அவனைப் பார்க்க விரும்புவதாகவும் செய்தி வருகிறது. பெரியப்பாவின் அருகில் இருந்தால் மரணம் சம்பவிப்பதை நேரடியாக அனுபவம் கொண்டு விடலாம் என்று எண்ணி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் அருகே உள்ள அவர் வீட்டுக்குக் கிளம்புகிறான். இடையில் புகாரி ஓட்டலில் டீ குடிக்கச் செல்கிறான். அப்போது மரணம் பற்றிய விசாரணை குறுக்கிடுகிறது. அப்படிச் சொல்வது கூட தவறு. எப்போதும் அவன் நினைவை விட்டு அகலாதபடி இருக்கும் அந்த விசாரணை, அப்போது ஒரு புதுவிதப் பாதையை எடுக்கிறது. எண்ண ஓட்டங்களும் தர்க்கங்களும் பிய்த்துக் கொண்டு போகின்றன. அதில் ஒரு பாதைதான் Probability theory. ஹென்றி ஷாரியர் எழுதிய பட்டாம்பூச்சி நாவலைப் படித்திருக்கிறீர்களா? அதில் ஒரு தீவிலிருந்து அவன் தப்பிக்கும் போது இந்த Probability theory தான் உதவுகிறது. யாருமற்ற தீவு அது. கீழே பெரும் ஆழத்தில் பாறைகளோடு கூடிய கடல். விழுந்தால் எலும்பு மிஞ்சாது. மேலேயிருந்து பாறைகளில் மோதும் கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் அவனுக்கு ஒருநாள் ஒரு உண்மை புலப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்குப் பிறகுதான் அலையானது பாறையின் மீது மோதுகிறது. இடையில் உருவாகும் அலைகள் பாறையில் மோதுவதில்லை. உதாரணமாக ஏழாவது அலை மோதுகிறது என்று வைத்துக் கொண்டால், ஆறு அலைகள் பாறையில் மோதுவதில்லை. அந்த ஆறு அலைகள் எடுத்துக் கொள்ளும் நேரத்தைக் கணக்கிட்டு மேலிருந்து குதித்துத் தப்பி விடுகிறான் ஷாரியர்.

மரணத்துக்கும் இந்தக் கணித உண்மைக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாகத் தோன்றுகிறது தினகரனுக்கு. அதனால்தான் அவன் ரேஸுக்குப் போகிறான். படச் சீட்டு சூது ஆடுகிறான்.

மனதில் தோன்றும் இம்மாதிரியான விஷயங்கள் ஹேஷ்ய ஸ்வரூபம் கொண்டதாக உள்ளதை நிர்ணயிக்க, முக்கியமாக அர்த்த ரீதியில் அவை தங்கிவிட வேறு ஏதாவது யுக்தியைக் கையாள வேண்டும் என்று அவருக்குப் பட்டது. அதாவது ஹேஷ்யங்கள் மனதில் தோன்றி வலுவடைய, நிஜம் அல்லது பொய் என்கிற நிரூபணம் கிடைத்துக் கொண்டிருந்தால், ஹேஷ்யங்கள் தம் கதியில் தன்னில் தங்கும் என்று நினைத்தார். இதற்காக அடிக்கடி குதிரைப் பந்தயத்திற்குப் போகலாம் என்று பட்டது. ஆனால் அதற்கு ஏகப்பட்ட பணம் தேவையாக இருந்தது

இந்த நிலையில்தான் அவர் மூர் மார்க்கெட் எதிரில் இருக்கும் ஒரு சூதாட்டக் கிடங்கைப் பார்த்தார். நின்ற படிக்கே தலைகள் குனிந்து, வரைந்த படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தன. ஒரு பெரிய ரப்பர் துணியில் ஆறு படங்கள் வரையப்பட்டு இருந்தன. அவர் நின்ற இடத்துக்கு நேர்கோடியில் ஒட்டகப் படம். அதற்குப் பூஜை போட்டு வாழைப்பழத்தில் எரியும் ஊதுபத்தி செருகப்பட்டிருக்கும். அங்கே எப்போதும் கூட்டம் இருப்பதை அவர் கண்டிருக்கிறார். காலை ஒன்பது மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை அங்கே கூட்டம் இருக்கும்

தாட்டின் முன் உட்கார்ந்திருப்பவன் இவ்வாறு கூவுகிறான். ‘மோசடி, ட்ரிக்ஸ் கிடையாது சார். நீங்களே வைக்கலாம். நீங்களே பிரிக்கலாம். உள்ளேயிருந்து எடுக்கும் கவர்ல என்ன இருக்குன்னு உனக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது. வை. இன்னும் வைஅண்ணன் வச்சா தம்பி வைக்கக் கூடாதுன்னு இல்லே. வை. யாரு வேணும்னாலும் வைக்கலாம். ஆனா ஒரு கட்டத்திலே பத்து ரூபா தான் வைக்கணும். அதுக்கு மேலே வைச்சுடாதீங்கபத்து ரூபா லிமிட். நேர்த்துப் பாருங்கோ ஒரு சேட்டுப் பையன் பத்து பத்தா ஆறு பத்து மடிச்சு வைச்சான். அந்த மாதிரி பண்ணாதீங்கோ, நமக்குத் தாங்காது. வைச்சாச்சாஎடுக்கலாமாஏன் பெட்டியப் பெட்டியப் பாக்குறீங்க. பெட்டிக்குள்ளே என்ன இருக்குஒரு கோழி முட்டை, ஒரு பாம்பு இருக்கு. பசிச்சுதுன்னா பாம்பு கோழி முட்டையைத் தின்னும். அவ்வளவுதான். தாட்ல போடு பணத்தைம்வச்சாச்சா…’ பெட்டியைத் திறக்கிறான். பெட்டிக்குள்ளே நிறைய பழுப்பு நிறக் காகித உறைகள் இந்தக் கோடிக்கு அந்தக் கோடி வரிசையாய் வைக்கப்பட்டிருக்கின்றன. அதிலிருந்து தன் பக்கமாக உள்ள முதல் உறையை எடுக்கிறான். படங்களின் நடுவே மீண்டும் அந்த உறையைப் போட்டு விட்டு மீண்டும் பேசுகிறான். இப்பக் கூட பத்து ரூபா இனாம் தர்றேன். இதிலே இருக்கும் படம் என்னன்னு சொல்லிட்டாகாசு போடு… (வெறி பிடித்துக் கத்துகிறான்) காசு போடுகாசு கொடுத்தா தாசி, காசு இல்லே தாசி இல்லேபோடு, பிரிக்கப் போறேன்.’ ஒரு ஆக்ரோஷத்துடன் உறையைப் பிரிக்கிறான். மூன்று ஒட்டகப்படம் தெரிகிறது. ரப்பர் துணியில் ஒரு ஆள் நாலரை ரூபாய் போட்டிருக்கிறான். அவனுக்கு அத்துடன் 13.50 சேர்த்துத் தரப்படுகிறது. குதிரையில் கிட்டத்தட்ட பத்து ரூபாய் இருக்கிறது. புலியில் நூறு ரூபாய் சில்லரை தேறும்.

தினகரன் இப்போது மீண்டும் ஒட்டகம் வராது என நம்பி மானில் எட்டணா போடுகிறார். சிறிது நேரம் செல்கிறது உறையைப் பிரிக்க. மீண்டும் ஒட்டகமே வருகிறது. குதிரையில் எட்டணா போட்டார். மயில் வந்தது. யானையில் எட்டணா போட்டார். மீண்டும் ஒட்டகமே வந்தது.

அவருக்கு ரொம்பவும் ஆச்சரியமாக இருந்தது. ‘இது என்னடா கூத்துஎன்று சொல்லிக் கொண்டார். வரும் படத்தை எப்படி நிர்ணயிப்பது? அவருக்கு ஒன்று மட்டும் பட ஆரம்பித்தது. இதில் தொடர்ந்து அவர் சரியாகச் சொன்னால், சாவு விஷயத்தைப் பற்றி எண்ணுவதில் ஒரு தொடர்ச்சியும், அந்தத் தொடர்பில் உருவாகும் இணைப்புச் சக்தியும் கண்களுக்கு, மனக் கண்களுக்கு புலப்படும் என்று அவர் நம்பினார். அன்றிலிருந்து அவர் தினமும் மாலை அங்கே போக ஆரம்பித்தார். அவர் விளையாடிய வேகத்தில் ஒரு வாரத்திற்குள் 117 ரூபாய் தோற்று விட்டார். இதனாலெல்லாம் சொல்ல முடியாத தொல்லை. அந்தப் பணம் போய் பால் கணக்கிலிருந்து குழந்தைகளின் பள்ளிக்கூடக் கட்டணம் வரை உதைத்தது. இருபது நாட்களில் மூன்று மாத சம்பளம் போயிற்று. ஆனால் ஒன்று, அந்தக் கவர்கள் பிரிக்கும் முறையில் ஒரு சித்தாந்தம் தெரிய ஆரம்பித்தது. என்றாவது ஒருநாள் தற்செயலாக இல்லாமல், முழுமையாக, சித்தாந்த அடிப்படையில் அந்தக் கூட்டத்தை மொத்தம் பத்து தடவைகள் ஜெயித்து, அந்த உலகம் தனக்குப் பிடிபட்டு விட்டது என்கிற நிலையில் அந்த மூன்று மயில் மூன்று புலி ஆட்டத்திலிருந்து விடுதலை அடைவது என்று தீர்மானித்துக் கொண்டார்.’

பிறகு தினகரனுக்கு அந்த இடத்தில் ராஜ உபசாரம் கிடைக்க ஆரம்பிக்கிறது. ஆனால் ஒருநாள் அந்த மூன்று மயில் மூன்று புலி ஆட்டத்தின் சூட்சுமத்தைத் (Probability) தெரிந்து கொண்டு அந்த ஆளை போண்டி செய்து விடுகிறான் தினகரன். பிரபஞ்ச லயத்துக்கும் சூதுக்கும் இருக்கும் தொடர்பைத் தெரிந்து கொண்டு அவனை வென்ற பிறகு அவன் அங்கே போவதை நிறுத்திக் கொண்டு விடுகிறான்.

 



இப்போது மீண்டும் நாம் மரணப் படுக்கையில் கிடக்கும் தன் பெரியப்பாவைப் பார்க்கக் கிளம்பிய தினகரன் இடையில் புகாரி ஓட்டலில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த இடத்துக்கு வருவோம். தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் போது மீண்டும் அவனுக்குப் பிரபஞ்ச லயம் பற்றியும் மரணம் பற்றியுமான சிந்தனை வருகிறது. ஒரு நாணயத்தை எடுத்துச் சுண்டி சுற்ற வைக்கிறான். பூவா, தலையா? மீண்டும் சுண்டுகிறான். பூவா, தலையா? மீண்டும் சுண்டுகிறான். பூவா, தலையா? மீண்டும்மீண்டும்மீண்டும்… ‘வெளியில்அதாவது பிரபஞ்சத்தில் ஒரு திட்டமிட்ட லயம் இருக்கிறது. அந்தத் திட்டமிட்ட லயத்துக்கும் இந்தப் பூவா தலையாவுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. சுண்டுகிறான். பூவா, தலையா? சுண்டுகிறான். பூவா, தலையா? அப்போது அவனிடம் வரும் சர்வர் சொல்கிறான்: ‘நீங்கள் ஒருமணி நேரமாக இந்தக் காயினை சுண்டிக் கொண்டிருக்கிறீர்கள். எல்லோரும் உங்களையே பார்க்கிறார்கள்.’

வெறும் நூறு பக்கங்களே உள்ள இந்த இடைவெளி என்ற நாவலைப் படிக்க எனக்கு ஒரு வார காலம் ஆயிற்று. அதுவும் உறங்கும் நேரத்தைத் தவிர்த்து மற்ற எல்லா நேரத்திலும் படித்துக் கொண்டிருந்தேன். என் வாழ்நாளில் இத்தனை சிறிய நாவலைப் படிக்க இவ்வளவு நேரத்தை எடுத்துக் கொண்டதில்லை. காரணம், ஆங்கிலத்திலும் தமிழிலும் நான் படித்த அத்தனை நூறு நாவல்களிலும் இடைவெளியே ஆகச் சிறந்ததாக இருந்தது. வழக்கமாக வாசிப்பதைப் போல் ஒரு வாக்கியத்தைப் படித்தவுடன் அடுத்த வாக்கியத்தை நோக்கி நகர முடியவில்லை. படித்த வாக்கியம் அதைப் படித்த உடனேயே நம்மை ஒரு மயக்கநிலைக்குக் கொண்டு சென்று விடுகிறது. புரிய வைப்பதற்காக மயக்க நிலை என்று சொல்கிறேனே தவிர அந்த மனநிலையை என்னால் வார்த்தையால் விளக்க முடியவில்லை. இப்படியே யோசித்து யோசித்து வாசித்து முடிக்க ஒரு வாரம் ஆகி விட்டது.

உலக இலக்கியப் பரப்பில் இதுபோல் ஒரே ஒருமுறைதான் நிகழ்ந்திருக்கிறது என்று குறிப்பிட்டேன். அமெரிக்க எழுத்தாளர் வில்லியம் பர்ரோஸ் தன்னுடைய ஹெராய்ன் அனுபவங்களை Naked Lunch என்ற நாவலில் எழுதியிருக்கிறார். ஆனால் அதை விட இடைவெளி physical and metaphysical தளங்களில் இன்னும் செறிவானது என்று சொல்லலாம். எனக்கு அப்படித் தோன்றிய உடனேயே தமிழ்ச் சூழலில் இடைவெளி பற்றிய எதிர்வினை எப்படி இருந்தது என்பதைத் தேடினேன். அதில் ஆகச் சிறந்ததாகத் தெரிந்தது, சி. மோகனின் கட்டுரை. (ஆனால் ஒரு காலத்தில் சி. மோகன் சிபாரிசு செய்ததாலேயே இந்த நாவலைப் படிக்காமல் போனேன் என்பதும் இதில் உள்ள ஒரு நகைமுரண்.) சி. மோகன் சொல்கிறார்:

பாரீஸ் ரிவ்யூ நேர்காணலில் வில்லியம் ஃபாக்னரிடம் ஐரோப்பிய எழுத்தாளர்கள் பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்டபோது, ஜேம்ஸ் ஜாய்ஸை ஒரு மகத்தான படைப்பாளி என்று குறிப்பிட்டுவிட்டு, ‘ஞானஸ்நானம் செய்விக்கும் கல்வியறிவற்ற ஒரு உபதேசி பழைய ஆகமத்தை அணுகுவதைப் போல நம்பிக்கையோடு ஜாய்ஸின் யூலிஸஸை நீங்கள் அணுக வேண்டும்என்று கூறியிருப்பார். என்னைப் பொறுத்தவரை, ‘இடைவெளியுடனான என் உறவு அநேகமாக இப்படித்தான் இருந்து வருகிறது.’




No comments:

Post a Comment