Friday, August 17, 2018

லா. ச. ராமாமிர்தம்

லா. . ராமாமிர்தம்















லா..ரா என்று அழைக்கப்பட்ட லா. . ராமாமிர்தம் (1916 - அக்டோபர் 29, 2007) தமிழ்நாடு, லால்குடியில் பிறந்த தமிழ் எழுத்தாளர். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா..ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி காலத்தில் இருந்து எழுதி வந்தவர்.
பொருளடக்கம்

             1வாழ்க்கைக் குறிப்பு
             2இலக்கிய உலகில்
             3மறைவு
             4எழுதிய நூல்கள்
o             4.1புதினம்
o             4.2சிறுகதைகள்
             5நினைவலைகள்
             6கட்டுரைகள்
             7பெற்ற விருதுகள்
             8வெளி இணைப்புகள்
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
1916 ஆம் ஆண்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடியில் பிறந்தவர். அவருடைய தந்தை சப்தரிஷி, தாய் ஸ்ரீமதி. அவருடைய மனைவி ஹைமாவதி. அவருக்கு 4 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இலக்கிய உலகில்[தொகு]
லா..ரா.வின் முதல் கதை 18வது வயதில் வெளியானது. தொடக்கத்தில் சிறுகதைகள் மட்டுமே எழுதிவந்த லா. . ராவை அவருடைய 50-வது வயதில் சென்னை வாசகர் வட்டம் "புத்ர" என்ற நாவல் எழுத வைத்தது. அவருக்கு 1989-ல் "சாகித்ய அகாதமி விருது" பெற்றுத் தந்த சுயசரிதை ""சிந்தாநதி தினமணி கதிரில் தொடராக வந்தது.
லா..ரா.வின் படைப்புகள் பல இந்திய, அயல்நாட்டு மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட "மஹஃபில்", பெங்குவின் நிறுவனத்தார் வெளியிட்ட "நியூ ரைட்டிங் இன் இந்தியா" செக் மொழியில் அவரை மொழியாக்கம் செய்த கமீல் ஜீவலபில் என்ற தமிழ் ஆய்வாளர் சுதந்திர இந்தியாவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவராக லா..ரா.வைக் கருதினார்.
அவருடைய "பாற்கடல்" என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள். அவருடைய "புத்ர" மற்றும் "அபிதா" நாவல்கள் மொழிநடையால் தனித்துச் சிறந்து விளங்கும். கட்டுரை நூல் "சிந்தாநதி" அவருடைய இயல்பான குறியீட்டு நடையில் பிரமிக்கத்தக்க விதத்தில் எழுதப்பட்டது.
அவருடைய படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட்டுவிட்டதால், அவற்றில் பல தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் கிடைக்கின்றன.
மறைவு[தொகு]
லா..ரா அக்டோபர் 29, 2007 திங்கட்கிழமை அதிகாலை தமது 91 வயதில், சென்னையில் மரணமடைந்தார்.
எழுதிய நூல்கள்[தொகு]
புதினம்[தொகு]
1.            புத்ர (1965)
2.            அபிதா (1970)
3.            கல்சிரிக்கிறது
4.            பிராயச்சித்தம்
5.            கழுகு
6.            கேரளத்தில் எங்கோ
சிறுகதைகள்[தொகு]
1.            இதழ்கள் (1959)
2.            ஜனனி (1957)
3.            பச்சைக் கனவு (1961)
4.            கங்கா (1962)
5.            அஞ்சலி (1963)
6.            அலைகள் (1964)
7.            தயா (1966)
8.            மீனோட்டம்
9.            உத்தராயணம்
10.          நேசம்
11.          புற்று
12.          துளசி
13.          என் பிரியமுள்ள சினேகிதனுக்கு
14.          அவள்
15.          த்வனி
16.          விளிம்பில்
17.          அலைகள்
18.          நான்
19.          சௌந்தர்ய
நினைவலைகள்[தொகு]
1.            சிந்தாநதி (1989ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
2.            பாற்கடல்
கட்டுரைகள்[தொகு]
1.            முற்றுப்பெறாத தேடல்
2.            உண்மையான தரிசனம்
பெற்ற விருதுகள்[தொகு]
1989ஆம் ஆண்டில் சாகித்திய அகாதமி விருது.

             தமிழ் இலக்கியத்தில் முன்னும் பின்னும் உதாரணமற்ற அபூர்வ ராகம் லா..ரா.
             லா..ராமாமிர்தம்: பிறந்த நாள்-அக். 29, 1916 நினைவு நாள் - அக். 29, 2007
             யார் இந்த லா..ராமாமிர்தம்? நவீன தமிழ் எழுத்தின் தீவிரமான பகுதி பெரும்பாலும் வெகுமக்களின் ரசனை எல்லைக்கு வெளியில்தான் இருந்துவருகிறது. இதில் பல அம்சங்கள் புரிவதில்லை என்பது பெருவாரியான மக்களின் புகார். அத்தகைய புரியாத எழுத்தின் முதன்மையான உதாரணங்களில் ஒருவராக லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் அடையாளம் காணப்படுகிறார்.
             சொற்கள் புரியவில்லை என்றால் அகராதியைப் பார்த்துத் தெரிந்துகொண்டுவிடலாம். வாக்கியங்களே புரியவில்லை என்றால்? ‘கண்ணின் இமையுள், விழிப்பின் முதல் உணர்வாய்க் கவிந்த இருள் முழுவே உனக்கு அஞ்சலிஎன்று ஒரு கதை (த்வனி) தொடங்கினால் எப்படி இருக்கும்? ‘கண்ணாடியில் பிம்பம் விழும் த்வனிகூட எனக்குக் கேட்கிறதுஎன்று சொன்னால் அதை எப்படிப் புரிந்துகொள்வது? ஆனால், இதுபோன்ற வாக்கியங்களில் இருக்கும் வசீகரமே லா..ரா-வைப் புரியாமலும் பலரைப் படிக்க வைக்கக்கூடியதாகவும் இருக்கிறது. அச்சத்தை மீறிப் பாம்பின் அழகு நம்மைக் கவர்வதுபோல.
             மயக்கும் மாயம்
             இரண்டாயிரம் பக்கங்களுக்கு மேல் விரியும் லா..ரா-வின் எழுத்தில் சரி பாதிக்கு மேல் அடிப் படைத் தமிழ் அறிவுகொண்ட எவரும் படித்துப் புரிந்து கொள்ளக்கூடியதுதான். மீதிப் பகுதியில் பெரும் பாலானவை புரியாத நிலையிலும் வசீகரிக்கக் கூடியவை; ரசித்துப் படிக்கக்கூடியவை. ‘இது இருளின் நரம்பு, எண்ணத்தின் மணிக்கயிறு, வானத்தின் நீளத்தினின்று உரித்த பொற்சரடுஎன்பன போன்ற மயக்கும் படிமங்கள் புரியாதவை என்று சொல்வதை விடவும் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பொருள் தரக்கூடியவை என்று சொல்வதே பொருத்தம்.
             புரியாத நிலையிலும் மந்திரம்போல மனதில் ஒட்டிக் கொள்ளும் மாயமே லா..ரா-வின் சிறப்பு. புரிவதும் புரியாததும் தற்காலிக நிலைகள். ஒரு விஷயத்தை இன்று புரிந்துகொள்ளும் விதம் நாளை மாறலாம். ஆனால், லா..ரா-வின் மந்திரச் சொற்கள் தரும் மயக்கம் நீடித்து நிற்கும்.
             மலை உச்சியில் பிறக்கும் நதி பல வடிவங்களையும் பெயர்களையும் எடுத்தபடி கடலை நோக்கிப் பாயும். அதன் மொத்த விகாசத்தையும் குறிப்பிட்ட வகைக்குள் அடக்க முடியாது. லா..ரா-வின் எழுத்தும் அத்தகையதுதான். நனவோடை உத்தி என்று சிலர் சொல்வார்கள். ஆனால், புற உலகில் வேர் கொண்டு சம்பவங்களால் நகர்ந்து செல்லும் வலுவான யதார்த்தக் கதைகளையும் அவர் எழுதியுள்ளார். புலனுணர்வுக்கு அப்பாற்பட்ட அனுபவங்களைக் கதையாக்குபவர் என்று சொல்லலாம் என்று பார்த்தால், வலுவான தர்க்கம் பல படைப்புகளில் அடிச்சரடாக ஓடிக்கொண்டிருப்பதையும் உணர முடிகிறது. கூட்டுக் குடும்பத்தின் ஆராதகர் என்று சொல்லச் சிலர் முனைந்தால், குடும்பத்திலிருந்து முரண்படும் தனிநபர் உணர்வை முன்னிறுத்தும் கதைகள் நம்மைப் பார்த்துச் சிரிக்கும். சவுந்தர்ய உபாசகர் என்று சொல்லலாம். ஆனால், வேதனைகளின் கதையையும் இவர் எழுதிவைத்திருக்கிறார். அன்பின் உன்னதமும் பேசுவார். சுயநலத்தின் தவிர்க்கவியலாத தன்மையையும் காட்டுவார். பெண்களை சக்தியின் வடிவமாகப் பார்ப்பவர், அவர்களது சுயநலத்தையும் வன்மத்தையும் கண்டு பாராமுகமாக இருப்பதில்லை.
             அழகின் கோலங்கள்
             லா..ரா-வுக்குக் கதை என்பது அவரது தேடலின் கருவிதான். தேடல் என்பது அன்றாட வாழ்வில் மறைந்திருக்கும் தெய்விகத் தருணங்களின் மகிமையைக் கண்டுணர்தல். கதையம்சம் என்பதைவிடவும் கதையின் வாழ்வம்சத்துக்கும் அதனுள் ஒளிரும் சத்தியத்தின் தரிசனத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர் லா..ரா. மனித உணர்வுகள் அவருக்கு மிகமிக முக்கியம். மதிப்பீடுகளின் தராசில் வைத்து உணர்வுகளை அளப்பவர் அல்ல அவர். லா..ரா-வின் பாத்திரங்கள், கருவறை, சுடுகாடு, பூஜையறை, படுக்கையறை, தோட்டம், சந்தை என எல்லா இடங்களிலும் உண்மையின் தரிசனத்தைக் கண்டு நெக்குருகுகிறார்கள். புலன்களைத் தாண்டிய அனுபவங் களையும் அந்த அனுபவங்கள் வெளிப்படும் தருணங் களையும் கண்டு நமக்கும் காட்டுகிறார் லா..ரா.
             பச்சைக்கனவு, கஸ்தூரி, சுமங்கல்யன், பாற்கடல் போன்ற கச்சிதமான யதார்த்தக் கதைகளைப் படைக்கும் திறன் கொண்ட இவர், படைப்பின் கட்டற்ற போக்குக்கு வழி விட்டுக் கதையின் கட்டமைப்பைத் தியாகம் செய்யவும் தயங்குவதில்லை. ஒவ்வொரு படைப்பும் எதைக் கோருகிறதோ அதைத் தருவதே ஒரு படைப்பாளியின் வேலை என்று நம்புபவர் லா..ரா. அதனால்தான் அவரது பல கதைகளின் குவிமையம் சிதறுகிறது. சிறுகதைகளின் ஆதார பலமான குவிமையம் சிதறும்போது அதைப் பின் தொடர்ந்து செல்வது வாசகருக்குச் சிரமமாக இருக்கும். ஆனால், கிளை பிரியும் பாதைகளில் வெளிப்படும் தரிசனங்கள் படைப்பின் ஒவ்வொரு வரியையும் மதிப்பு வாய்ந்ததாக ஆக்குவதையும் உணரலாம். ஒளிக் குவியத்தின் அழகைப் பல படைப்புகளில் தரும் இவர், ஒளிச் சிதறலின் எண்ணற்ற அழகுக் கோலங்களையும் காட்சிப்படுத்துகிறார். இத்தகைய எழுத்தைப் படிக்கும்போது கதையம்சத்தின் எல்லை களைத் தாண்டி வாசக மனம் பயணிக்கிறது. அந்தப் பயணம் படைப்பாளியின் பயணத்துக்கு இணை யான பயணமாகி, படைப்பின் தரிசனத்தை விரிவு படுத்துகிறது.
             உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில் நெருப்பு என்று எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்என்று ஒருமுறை எழுதிய லா..ரா. ஒவ்வொரு சொல்லுக்கும் முக்கியத்துவம் அளிப்பதை உணர முடியும். ‘வாசனாதி திரவியங்களின் மணத்தைத் தமிழாக்கிக் கொண்டுவந்தவர் லா..ரா.’ என்று சுந்தர ராமசாமி எழுதியிருப்பது இவரது சொல்லழகு தரும் மயக்கத்தைக் கச்சிதமாக உணர்த்துகிறது.
             லா..ரா-வின் அபூர்வ ராகம்
             சொல்லழகும் மெய்ப்பொருள் தேடலும் தரும் தரிசனங்களின் படைப்பனுபவம் என்று லா..ரா-வின் கதைகளை ஒருவாறாக வரையறுக்கலாம். பாற்கடல், கஸ்தூரி போன்ற யதார்த்த வாழ்க்கைச் சித்திரங்கள்; புரிந்துகொள்ள முடியாத ஆளுமை விசேஷங்களை மையப்படுத்தும் அபூர்வ ராகம், தாட்சாயணி போன்ற சொல்லோவியங்கள்; யோகம், புற்று போன்ற கால, இட எல்லைகளை மீறி வெளிப்படும் தரிசனங்கள் எனப் பல தளங்களில் இயங்குபவை லா..ரா-வின் கதைகள். உறவுகளின் மேன்மையையும், அவற்றின் சிக்கல்களையும், இணைந்து வாழும் விழைவையும், பிரிந்து செல்லும் வேட்கையையும், தனிமையின் சுமையையும் அதன் மகத்துவத்தையும் பேசுபவை இவரது கதைகள்.
             கதைகளைச் சொல்வதைவிடவும், கதைகளை முன்வைத்து வாழ்க்கையின் மாயத் தருணங்களைக் கண்டுணர்ந்து வியப்பதும் வியக்கவைப்பதும்தான் ராமாமிர்தத்தின் எழுத்து. அந்தத் தருணங்களில் தோய்ந்து மாறுபட்ட அனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவது ராமாமிர்தத்தின் எழுத்து. படைப்புகளில் அனுபவிக்கக் கிடைக்கும் மாயத் தருணங்களுக்காகவும் அவை முன்வைக்கப்படும் கவித்துவச் சொல்லழகின் வசீகரத்துக்காகவுமே இவரது கதைகள் என்றென்றும் படிக்கப்படும். சம கால யதார்த்த வாழ்வில் வேரூன்றிய கதைகள் பல சமயம் கால வெள்ளத்தில் நிற்காமல் போய்விடலாம். ஆனால், காலம், இடம் ஆகியவற்றைத் தாண்டிய தருணங் களைப் படைப்பாக்கும் எழுத்து காலம் தாண்டியும் வாழும். லா..ரா-வின் எழுத்து காலம், இடம் ஆகிய வற்றை மட்டுமல்லாமல், புலன்களை மீறிய அனுபவங் களையும் சாத்தியப்படுத்துபவை. அதனாலேயே அவர் தரும் மந்திரத் தருணங்கள் நித்தியத்தன்மை பெற்றிருக்கின்றன.
             அபூர்வ ராகம் கதையை இப்படித் தொடங்குகிறார்: ‘வீணையின் ஸ்வரக் கட்டுகளை விருதாவாய் நெருடிக் கொண்டிருக்கையில், திடீரென்று ஒரு வேளையின் பொருத்தத்தால் ஸ்வரஜாதிகள் புதுவிதமாய்க் கூடி ஒரு அபூர்வ ராகம் ஜனிப்பதுபோல் அவள் என் வாழ்க்கையில் முன்னும் பின்னுமில்லாது முளைத்தாள்.’ லா..ரா-வும் இந்தப் பெண்ணைப் போலத்தான். இலக்கிய உலகில் முன்னும் பின்னும் யாருமற்ற அபூர்வ ராகம்.
லா..ரா. நேர்காணலிருந்து...
# எழுதி புகழ் அடைய வேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே எனக்கு இருந்ததில்லை. ஆனால், எழுதாமலும் என்னால் இருக்க முடியவில்லை. ஆரம்பத்தில் குடும்பத்துக்கு பைசா மிகவும் தேவையாக இருந்தது. அதனால், அப்போது அதற்காக எழுதிக் கொண்டிருந்தேன். அப்புறம் காசின் மேல் ருசி விட்டுவிட்டது. என்னுடைய சாதனை என்னவென்றால், நான் எழுதி எதுவுமே வீணாக ஆனதில்லை என்பதுதான். எல்லாம் பிரசுரமாகிவிட்டது.
# நான் ஜனரஞ்சகமான எழுத்தாளன் இல்லை. புரியாத எழுத்தாளர் என்ற பெயரை சம்பாதித்துக் கொண்டு, அப்படியே, அதனாலேயே பிரபலமாகி விட்டவன். ஏதாவது புரியும்படி எழுதினால், எனக்கு இப்போது ஆபத்து தான். தரம் குறைந்து விட்டது என்று, என்னை வேறு ஒரு பிரிவில் சேர்த்து விடுவார்கள். இரண்டு, மூன்று பேர் சொல்லிவிட்டார்கள்; எனக்கு மாற்றேக் கிடையாதாம்; முன்னாடியும் கிடையாதாம், பின்னாடியும் கிடையாதாம். என்னோடு நான் முடிந்தது. இப்படி இருப்பதில் எனக்கு ஒன்றும் அவ்வளவாக உடன்பாடு இல்லை. ஆனால், நான் என்ன செய்ய முடியும்?
# கதை எங்கே தோன்றுகிறது, கரு எங்கே தோன்றுகிறது? எனக்குத் தெரியவில்லை. ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமலும் இருக்கும். 'அஞ்சலி' என்று ஒரு கதை, ஐந்து பூதங்களையும் உருவகப்படுத்தி எழுதினேன். நான்கு கதைகள் வந்துவிட்டது. காயத்தைப் பற்றி எழுத வரவில்லை. அதற்காக எட்டு வருடம் காத்துக் கொண்டிருந்தேன். அது வரும் என்று எனக்குத் தெரியும். எனவே காத்துக் கொண்டிருப்பது பற்றி, நான் கவலைப்படுவதில்லை. ஒரு நாள் குமுட்டியில் கனல் தகதகவென்றிருந்தது. நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். 'ஏக்கா', என்று ஒரு வார்த்தை அப்போது மனதில் ஓடியது. ஏகாம்பரி, ஏகாம்பரம் என்று உருக்கொண்டு, கொண்டே போய்க் கொண்டிருக்கிறது. இப்படித்தான் கதை உருவாகிறது என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
# நான் ஒரு சௌந்தர்ய உபாசகன்தான். அழகு என்பதை தனியாக வரையறுத்துவிட முடியாது. அந்தந்த சமயத்தில மனதுக்கு என்ன தோன்றுகிறதோ அதுதான் அழகு. எனக்கு பதினெட்டு, பத்தொன்பது வயது இருக்கிற சமயத்தில், அப்போது காஞ்சிபுரம் பக்கத்து கிராமத்தில் ஒரு நண்பி இருந்தாள். அவளைப் பார்த்து ரொம்ப காலம் ஆகிவிட்டது. திடிரென்று ஒரு நாள், அவளைப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆவல் ஏற்பட்டுவிட்டது. நான் கிளம்பி ஓடுகிறேன். போய்ச் சேரும்போது இருட்டிவிட்டது. எப்படியோ, விசாரித்து, விசாரித்து அவள் வீட்டைக் கண்டு பிடித்துவிட்டேன். கதவைத் திறந்து உள்ளேப் போனேன். அவள் படுத்துக் கொண்டிருந்தாள். உடம்பு வயதேறி தளர்ந்துவிட்டது. என்னைப் பார்த்த மாத்திரத்தில், ''அட ராமாமிருதம் வந்தியாப்பா, எப்ப வந்த'' என்றாள். நான் அதிர்ந்து போய்விட்டேன். இது ஞாபக சக்தியில் சேர்த்தியா, அல்லது எப்போதுமே நான் அவளுடைய எண்ணத்தில இருந்து கொண்டிருக் கிறேன் என்று அர்த்தமா; அல்லது அவர்களுக்கே உரித்தான ரத்தத்தோடு ரத்தமாக கலந்த ஒரு சம்பந்தமா? எனக்குத் தெரியவில்லை. அவள் எப்படி என்னை அடையாளம் கண்டு கொண்டுவிட்டாள்? ஒரு நிமிடத்தில், ''நான்தான் ராமாமிருதம்'' என்று சொல்லக்கூட வழியில்லாமல் செய்துவிட்டாளே! இந்தத் தருணம் இருக்கிறதே, அதுதான் எனக்கு முக்கியம். இதைத்தான் நான் சௌந்தர்ய உபாசகன் என்று சொல்கிறேன்.
நன்றி: தளவாய் சுந்தரம்
லா..ரா.வின் மொழிச் சிதறல்கள்
# வீணையின் ஸ்வரக் கட்டுகளை விருதாவாய் நெருங்கிக் கொண்டிருக்கையில் திடீரென்று ஒரு வேளையின் பொருத்தத்தால் ஸ்வரஜாதிகள் புதுவிதமாய்க் கூடி ஒரு அபூர்வ ராகம் ஜனிப்பது போல், அவள் என் வாழ்க்கையில் முன்னும் பின்னுமில்லாது முளைத்தாள்.
# அவன் அசைவற்று நின்றான். ஓடும் பாம்பை நெஞ்சில் அழுத்தினாற்போல் அக்கணம் நில்லென அந்தரத்தில் நின்றது. ஒரு கணம்தான். ஸ்தம்பித்த நேரம் மறுபடியும் தான் இழந்த வேகத்தைப் பன்மடங்கு பெருக்கிக் கொண்டு வெள்ளமாய் இறங்கிற்று.
# அங்கு எப்பவும் சூழ்ந்த மோனாகாராம் ஒரொரு சமயம், தாய் விலங்கு தன் குட்டியைக் கவ்வுவதுபோல், அதன் அகண்ட வாயில் அதைக் கவ்வுகையில், காளையின் இதயத்தில் புரியாத சாயா ரூபங்கள் தோன்றின. தலையை உதறிக்கொண்டு, உடலை நெறித்து, ஒன்றும் புரியாத களி வெறியில் வெகு வேகமாய் நாலுகால் பாய்ச்சலில் ஓடுகையில் அதன் குளம்புகள் தவறற்ற தாளத்தில் பூமியில் பட்டுபட்டெழுகையில், யெளவ்வனத்தின் ஜய பேரிகை முழங்கிற்று.
# கண்ணின் இமையுள், விழிப்பின் முதல் உணர்வாய்க் கவிந்த இருள் முழுவே உனக்கு அஞ்சலி. உதயத்தின் முற்பொருள் நீ. உனக்கு அழிவில்லை. நான் இன்பத்தில் வாழ்த்தியும், துன்பத்தில் தூற்றியும் நீ என்றும் பெருகுவாயாக. நீ உமிழ்ந்த மாணிக்கமாய் ஒளியைத் திரும்ப விழுங்க நீ திருவுளம் பற்றிய தருணமே. காலம், இடம், பொருள், தவம், தத்துவம் என என் ப்ரக்ஞை கட்டி யாடும் வேடங்கள் அனைத்தும் என் அந்தத்தில் குலைந்து அவிந்து உன்னில் அடங்கிவிடும். ஓம் சாந்தி.
லா..ரா. நூற்றாண்டு: லா..ரா. எனும் எழுத்து மந்திரவாதி

அப்பாவைப் பொறுத்த வரையில் அவர் அயராத உழைப்பாளி. தான் தேடும் நயம் கிடைக்கும் வரை மீண்டும் மீண்டும் எழுதியதையே பலமுறை எழுத அவர் தயங்கியதே இல்லை. அலுத்துக்கொள்வதுமில்லை. லா..ராவின் சிறுகதைகள் நினைவின் அடிவாரத்தில் வருடக்கணக்கில் ஊறிக்கிடப்பவை. எந்தச் சமயமும் விட்ட இடத்திலிருந்து அந்த ஸ்ருதி கலையாமல் மீண்டும் தொட்டுக் கொள்ள தன்நினைவைப் பழக்கிக்கொண்டிருக்கிறார். இவர் கதை எழுத உட்காருவதில்லை. கதை இவர் மனதில் உட்கார ஆரம்பிக்கும்போது இவரும் எழுத ஆரம்பிப்பார். கதை தன்னை நடத்திக்கொள்ளும்போது அதன் உருவத்தை எழுத்தாக்குகிறார்.
பெண் குழந்தை தானாகத் தன் பருவம் அடைந்து கன்னியாவதைப் போல அப்பாவின் கதை எவருடைய வற்புறுத்தலுமின்றித் தன் பக்குவம் அடைந்து கன்னிமை அடைகிறது. இவரும் தன் கதையின் வேளைக்கு, தருணத்திற்குக் காத்திருந்தார். வற்புறுத்தப்படாத செழுமையில் இவர் கதைகள் இருப்பதால்தான் அது சிரஞ்சீவத்துவம் பெற்று விளங்குகிறது.
எழுத்தில் தான் பேசுவதாக அப்பா நினைத்ததே இல்லை. தன் மூலமாக, தன் எழுத்தின் மூலமாகத் தன் மூதாதையர்கள் பேசுவதாகவே நம்பினார். இவருடைய எழுத்திற்கு கேமரா கண்கள் உண்டு. அதி அற்புதமான கவிதைகளை உருவாக்கக்கூடிய திறன் பெற்றவை அவரது எழுத்துகள். காட்சித் தன்மையுடன் கூடிய அவரது விவரிப்பு மொழி வாசகனின் மனத்திரையில் சித்திரங்களை உருவாக்கிவிடக்கூடிய ஆற்றல் பெற்றது.
கவிதையும் உரைநடையும் அவரது கை வண்ணத்தில் கதைக் கவிதையாக, கவிதைக் கதையாக மாறிவிடுவது லா..ரா. எனும் மந்திரவாதியின் உச்சபட்ச வித்தை. அப்பாவின் உரைநடை, உயிர் நடை. அப்பாவின் எழுத்துக்கள் பற்றி அவர் பாஷையிலேயே கூற வேண்டுமானால், “மனதில் தோன்றியவற்றைத் தோன்றியபடி தோன்றிய கதியிலேயேநமக்கு மாற்றிவிடும் சக்தி படைத்தவர்.
இந்தக் கதை எப்போது முடியும் என்று கேட்டால் எனக்கென்ன தெரியும்? அது தன்னை முடித்துக்கொள்கிற போதுதான் முடியும் என்கிற பதில்தான் அவரிடமிருந்து வரும். எது எது, எவை எவையோ, அவை அவை அது அதுதான் என்று படிப்பவர்களே புரிந்துகொள்ளும்படி எழுதுவதில் வல்லவர்.
சொல்லாத சொல்லின் அர்த்தத்தைக்கூடச் சொல்லப்பட்ட சொல்லின் அர்த்தத்துக்கு மேலாகப் புரியவைத்துவிடும் ஆற்றல் அப்பாவிற்கு உண்டு.
இவருக்கென எழுத்துலகில் தனி கோஷ்டி கிடையாது. எந்தக் கோஷ்டியிலும் லா..ரா. கிடையாது. அவர் மறைந்த ஆறு மாதங்களுக்குள் அவருடைய படைப்புகள் அரசுடமையாக்கப்பட்டன. அப்பா, 1989-ம் ஆண்டு தனதுசிந்தா நதி கட்டுரைத் தொகுப்புக்காகசாஹித்ய அகாடமி விருது பெற்றார். தனது தொண்ணூற்றி இரண்டாவது வயதில், தனது பிறந்த நாளான 30.10.2007 அன்று எழுத்துலகில் நிரந்தமாகி, இருப்புலகை விட்டுக் கிளம்பினார்.
இவருக்கென எழுத்துலகில் தனி கோஷ்டி கிடையாது. எந்தக் கோஷ்டியிலும் லா..ரா. கிடையாது. அவர் மறைந்த ஆறு மாதங்களுக்குள் அவருடைய படைப்புகள் அரசுடமையாக்கப்பட்டன. அப்பா, 1989-ம் ஆண்டு தனதுசிந்தா நதி கட்டுரைத் தொகுப்புக்காகசாஹித்ய அகாடமி விருது பெற்றார். தனது தொண்ணூற்றி இரண்டாவது வயதில், தனது பிறந்த நாளான 30.10.2007 அன்று எழுத்துலகில் நிரந்தமாகி, இருப்புலகை விட்டுக் கிளம்பினார்.
மகன் என்பதையும் தாண்டி, அப்பாவுடன், வாசகனாகவும் தோழனாகவும் நான் அதிகம் நெருக்கமானவன். அதனால் இத்தொகுப்பிலுள்ள கதைகளை நான் அப்பாவுக்குப் பிடித்த இசைமொழியைப் போல வரிசைப்படுத்தியுள்ளேன். முதல் கதையான ஜனனி முதல் கடைசிக் கதையான பச்சைக்கனவு வரையான முழுத் தொகுப்பையும் படித்துமுடிக்கும்போது வாசகனின் மனதில் ஒரு வித தாள லயத்தோடு அமைதியான மெல்லிய இசையை உணர முடியும் என்று நம்புகிறேன். வேறு உலகம் போனபின்னும் லா..ரா. எழுத்துலகில் நிரந்தரமாகவிட்டதற்கு இப்புத்தகமும் சாட்சி.
அப்பா நூற்றாண்டு காணும் இத்தருணத்தில் இத்தொகுப்பினை மிகுந்த ஆர்வமுடனும் கவனத்துடனும் வெளிக்கொண்டுவரும் டிஸ்கவரி புத்தக நிலையத்தாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
கட்டுரையாளர், எழுத்தாளர் லா..ராவின் மகன்
(லா..ராவின் நூற்றாண்டை ஒட்டி சப்தரிஷி தொகுத்த லா..ரா. சிறுகதைகள் தொகுப்பிற்கு அவர் எழுதிய உரை இது. இத்தொகுப்பை டிஸ்வரி புக் பேலஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.)

லா..ரா. என அறியப்படும் லால்குடி சப்தரிஷி ராமாமிருதம் 1916-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி பிறந்தார். இது அவரது நூற்றாண்டு. தமிழின் முன்னோடி எழுத்தாளரான அவர் மணிக்கொடி எழுத்தாளுமைகளுளின் இறுதிச் சுடராகவும் ஒளி வீசியவர். கதை சொல்லலில் புதிய நுட்பங்களைப் புகுத்தியவர். மனத்தின் அசாதாரணங் களைக் கவிதை மொழியில் புனைவாக ஆக்கியவர். ‘அபிதா, ‘புத்ர’. ‘செளந்தர்யஆகிய அவரது நாவல்கள் தமிழின் செவ்வியல் நாவல்களாகப் போற்றப்படுகின்றன. லா..ரா.வின் எழுத்துகள் குறித்து ‘‘The Incomparable Writer Ramamirtham’ என்னும் பெயரில் ஆங்கிலத்தில் கட்டுரை நூல் வெளிவந்துள்ளது. பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
ஆங்கிலத்திலும் எழுதும் ஆற்றல் பெற்ற லா..ரா.வின் முதல் சிறுகதை ஆங்கிலத்தில்தான் வெளிவந்தது. ‘Babuji' என்னும் அந்தச் சிறுகதை 1934-ம் ஆண்டு ‘Short story' என்னும் பத்திரிகையில் வெளிவந்தது. தனது பதினேழு வயதிலேயே எழுதத் தொடங்கிய லா..ரா. எழுபத்தைந்து வருடங்கள் தொடர்ந்து எழுதிவந்தார். சிறுகதைத் தொகுப்புகள் பதினெட்டு, நாவல்கள் ஆறு , இளமை நினைவுகள் தொகுப்பு ஏழு எனத் தமிழ்ப் படைப்புலகக்கு வளம் சேர்த்துள்ளார். ‘சிந்தாநதிகட்டுரை தொகுப்புக்காக லா..ரா.வுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கிக் கவுரவித்துள்ளது.

1930களில் ஒரு  சாயங்கால நேரம். சென்னை மெரினா கடற்கரையில் அவர்கள் வழக்கமாக கூடும் இட்த்தில் ஒரு நண்பர்கள் ஜமா களைகட்டியிருக்கிறது. நடுநாயகமாக வெண்தாடி மார்பில் புரள ஒருவர் உட்கார்ந்திருக்கிறார், அவருக்குப் பக்கத்தில் கண்ணாடிக் காரர் ஒருவர். நீண்ட நெற்றியுடன் வெடிச்சிரிப்பு சிரிக்கும் இன்னொருவர்இன்னும் ஏழெட்டு பேர். இவர்கள் பேசுவதையெல்லாம் ஆர்வமாக்க் கவனித்துக் கொண்டு ஓரத்தில் உட்கார்ந்திருக்கிறார் இதே கோஷ்டியைச் சேர்ந்த இன்னொரு இளைஞர்.
அந்த இளைஞரான லா..ராமாமிருதம் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு நினைவு கூர்ந்து எழுதிய காட்சி இது – “மணிக்கொடி சதஸ்என்ற கட்டுரையில். அந்த ஜமாவில் நடுநாயமாக இருந்தவர்கள் .பிச்சமூர்த்தி, கு..ரா, புதுமைப் பித்தன்.. சுற்றியிருந்தவர்களில் சி.சு.செல்லப்பா, சிட்டி, எம்.வி.வெங்கட்ராம், மௌனி, பி எஸ் ராமையா எல்லாரும் உண்டு. அனேகமாக நவீன தமிழ் இலக்கியத்தின் Who is Who என்று சொல்லத் தக்க தாரகைகள் அத்தனை பேரும் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள் என்று சொல்லிவிடலாம்.
ந்த மணிக்கொடி யுகத்தின் கடைசி நட்சத்திரமாக வாழ்ந்து மறைந்தவர்லா..ரா.’ என்று இலக்கிய உலகம் பிரியமாக அழைத்துவந்த லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம். 1930களில் எழுத ஆரம்பித்து இடைப்பட்ட வருடங்களில் தொடர்ந்து எழுதி, 2007ம் ஆண்டு மரணமடைந்தார்.
மணிக்கொடி யுகம் என்ற அந்தப் பாரம்பரியத்தின் கடைசி விழுதாக அவர் இருந்தார். ஆயினும், புதுயுகத்திற்கான தேடல், சமூக அக்கறைகள், நவீனத்துவ சிந்தனைகள் போன்ற அந்த இலக்கிய இயக்கத்தின் பொதுப் போக்குகளையும் அபிலாஷைகளையும் லா..ராவின் படைப்புலகம் பெரிதாகக் கைக்கொள்ளவில்லை. அந்த உலகம் தனக்கே உரியதான ஒரு அலாதியான இயல்பையும் பாணியையும் கொண்டிருந்தது.
வீட்டையும், குடும்பத்தையும் விட்டு வெளியே செல்லாத உலகம்.
குடும்ப பாசங்கள், உறவுகள், வீட்டில் நிகழும் சடங்குகள், குடும்பத்தில் நிகழும் மரணங்கள், குழந்தைகள் பிறப்புபெரும்பாலும் இவற்றால் மட்டுமே ஆன ஒரு உலகம்.
பெண்களின் ஆளுமைகளும் ஆகிருதிகளும் ஓங்கி உள்ள உறவுகள்; பாட்டிகள், அம்மாக்கள், மாமியார்கள், மனைவிகள், மகள்கள், மருமகள்கள், பேத்திகள்; இவற்றால் ஆன உலகம். அதிலும் இவர்கள் எல்லாரும் அடிப்படையில் அம்மாக்களாகவே பெரிதும் வளையவரும் ஒரு உலகம்.
இந்த வட்ட்த்திற்கு வெளியே நடக்கும் சமூக மாற்றங்கள், கிளர்ச்சிகள், அரசியல் கொந்தளிப்புகள், போர்கள்இவற்றுடன் லாசராவுக்கும் அவரது பாத்திரங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போலவே அவரது படைப்புகளை வாசிக்கும் எந்த ஒரு வாசகனுக்கும் தோன்றும்.
ஆனாலும் அந்தக் கதைகள், படைப்புகள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் உறைந்து விட்டவை அல்ல. அவற்றில் ஒரு மாபெரும் சலனம், ஒரு இயக்கம் பிரவாகமாக ஓடிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இதுவே அடிப்படையில் லாசாராவின் கலை மேதைமை என்று எண்ணத் தோன்றுகிறது.

படைப்புகள்:
அபிதா, புத்ர என்று இரண்டு முக்கிய நாவல்கள் (இவை நாவல்களுக்கான வீச்சும் விரிவும் கொள்ளாததால், குறுநாவல்கள் என்றே கருதப் படவேண்டும் என்று கறாரான நாவல் கோட்பாடுகளின் அடிப்படையில் கூறும் விமர்சனப் பார்வையும் உள்ளது).
மொத்தம் இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள். இவற்றில் இதழ்கள் என்று ஒரே தலைப்பிடப் பட்டு ஒரே சுருதி லயத்தில் எழுதப் பட்ட கதைகள், பஞ்சபூதக் கதைகள் ஆகியவையும் அடங்கும். ஜனனி, பாற்கடல், பச்சைக் கனவு, புற்று, அபூர்வ ராகம், ராஜகுமாரி ஆகிய கதைகள் தமிழின் ஆகச் சிறந்த சிறுகதைகள் என்று பல்வேறு விமர்சகர்கள் போடும் பட்டியல்களிலும் கட்டாயம் இடம்பெறக் கூடியவை.
அது போக, சுயசரிதை, நினைவலைகள் என்று சொல்லத் தக்க அவரது படைப்புகளும் பரவலாக வாசிக்கப் பட்டவை. பாற்கடல்லாசரா குடும்பத்தின் மூன்று தலைமுறை வரலாறு, அவரது வாலிப வயது வரையிலான நிகழ்வுகள். சிந்தாநதிஇதற்குப் பிந்தைய கால நினைவுகள். இந்த இரண்டு நூல்களிலும் அவரது மற்றும் அவரது குடும்பத்தின் சுய வரலாறு தொடர்ச்சியாக அல்லாமல், அவ்வப்போது நினைவு கூறும் சம்பவங்களின் துணுக்குகளாகக் கூறிச் செல்லப் படுகிறது.
இப்படைப்புகளில், சக்கு, அபிதா, அம்பி போன்றவர்களும், லா.சராவின் சொந்தத் தாத்தா, அத்தைப் பாட்டி போன்றவர்களுமாக, நம் மனதில் மிக ஆழமாகப் பதியும் நிஜமும், புனைவுமான பாத்திரங்களை லாசரா உலவ விட்டிருக்கிறார். இந்தப் பாத்திரங்களில் பல போன நூற்றாண்டைச் சேர்ந்தவை. சில அதற்கும் முந்தைய நூற்றாண்டைச் சேர்ந்தவை (1800களின் கடைசி). ஆனாலும் இந்தப் பாத்திரங்கள், அவற்றின் உணர்வுகள், அவர்களது அக உலகத் தேடல்கள், வாழ்க்கை ஊசலாடல்கள், தத்துவார்த்த பிரதிபலிப்புகள் ஆகியவை 2012ல் வாழும் நம் மீதும் தாக்கம் செலுத்துவதாக, பாதிப்பதாக உள்ளன. லா..ரா ஏன் இப்போதும், வரும் நூற்றாண்டிலும் கூட வாசிக்கப் படுவார் என்பதற்கான காரணமும் அதுவே.
இந்த படைப்புகளை ஒவ்வொன்றாக எழுதிக் கொண்டிருந்த போது, ஒவ்வொன்றிலும் அவரது குடும்பத்தைப் பற்றிய சிந்தனைகளும் விசாரங்களும் எப்படி வற்றாத நீரூற்று போல வந்து கொண்டே இருக்கின்றன? அவற்றை இப்போது ஒட்டுமொத்தமாக வாசிக்கும்போது இது தொடர்பான ஒரு மலைப்பும் அயர்ச்சியுமான எண்ணம் தான் நமக்கு ஏற்படுகிறது.
அபிதா நாவல் குறித்து நண்பர் கோபி ராமமூர்த்தியின் ஒரு பதிவு
உக்கிர உணர்ச்சிகள்:
லா..ராவின் எல்லா பாத்திரங்களும் சாதாரணமாக நாம் அன்றாட வாழ்வில் காண்பவர்கள் தான். ஆனால் கதைகளில் அவர்கள் உணர்ச்சிகளின் கொந்தளிப்பில், கொதிநிலையில் தான் அறிமுகமாகிறார்கள். கதை முடியும் வரை அப்படியே தான் இருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் வருத்திக் கொண்டு வேதனைப் படுகிறார்கள். அந்த வேதனைகளிலேயே ஒருவித குரூர சந்தோஷமும் கொள்பவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இவற்றை இப்படியே விட்டு விடாமல் கடைசியில் ஒரு காலாதீதமான, பிரபஞ்சம் தழுவிய விஸ்தாரத்திற்கு லா..ரா எடுத்துச் சென்று விடுகிறார். இதுவே அந்தப் படைப்புகளை பிரம்மாண்டமாக்குகிறது, கலைரீதியாக முழுமை பெற்றவையாக்குகிறது.
இதன் மைய விசையாக அம்பாள் என்ற அந்த தொன்மையான படிமம் இருக்கிறது. அம்பாள்உச்ச நிலையிலான உக்கிரமும், உச்ச நிலையிலான கருணையும் ஒருங்கே கூடிய பெண்.
லாசராவின் தாய்மை சித்தரிப்பு முழுமையானதுதாய்மையின் கனிவை உருகி உருகி நெகிழ்ந்து நெகிழ்ந்து பல பரிமாணங்களில் படைத்துக் காட்டுவது மட்டுமல்ல. தாய்மையில் உள்ளோடிக் கொண்டிருக்கும் குரூரத்தையும் பேசக் கூடியதாக அவரது படைப்புகள் உள்ளன. தனது மகனுக்கு குழந்தை உண்டாகாமல் போகட்டும் என்று சபிக்கும் தாய் தான் புத்ர நாவலின் மையக் கதாபாத்திரம். பாற்கடலில் வரும் மாமியார் பற்றி மருமகள் எண்ணுகிறாள் – “கபடும் கருணையும் கண்ணில் கூடி அம்மா கண்ணைச் சிமிட்டும் போது அதுவும் ஒரு அழகாய்த் தானிருக்கிறது”.
இந்த பாத்திரங்கள் பிரக்ஞை நிலையில் வெறி பிடித்தது போல நடந்து கொள்வதால் தான், சாதாரண காட்சிகள் நாடகீயமாக ஆகின்றன. சாதாரண மனிதப் பாத்திரங்கள் காவிய ரூபம் கொள்கின்றன. சாதாரணப் பெண் சன்னதம் வந்த நிலையில் காளியாக மாறுவது போல. சாதாரணமாக லுஙகியை மடித்துக் கட்டி பீடி வலித்துக் கொண்டிருக்கும் ஆள், ஒரு குறிப்பிட்ட சடங்கில் சாமியாடும்போது (கேரளத்து பகவதி கோயில்களின் வெளிச்சப்பாடு போல) அந்த உக்கிர தெய்வமாகவே ஆகி விடுவது போல.
ஆனால் அந்த உணர்ச்சிப் பிழம்பு நிலையிலும் அவர்களது சாதாரண குணங்கள் மறைவதில்லை. கேரள விழாக்களில், பயமுறுத்தும்தெய்யம்வேஷம் கட்டி ஆடத் தயாராகிக் கொண்டிருக்கும் ஆள் ஒரு குழந்தையை சகஜமாக தூக்கிக் கொஞ்சுவது போல. இந்த அம்சம் தான் அவரது படைப்புகளுக்கு ஒரு கவர்ச்சிகரமான சுவாரஸ்யத் தன்மையை அளிக்கிறது.
ஒருவித்த்தில் லாசராவே அப்படித் தான் இரண்டின் கலவையாகவும் இருந்திருக்கிறார் என்று தோன்றுகிறது. அவரது புகைப்டங்களைப் பார்க்கும் போது, புருவங்களின் அடர்த்தி, சிங்கம் போன்ற பிடரிமயிர், ஊடுருவும் கண்கள் இவையெல்லாம் சேர்ந்து ஒருவிதமிஸ்டிக்தன்மையை அளிக்கின்றன. ஆனால் நேர்ப்பேச்சிலும், பழக்கத்திலும் அவர் பெரும்பாலும் சராசரி லௌகீகக் கவலைகள் கொண்ட குடும்பத் தலைவராக, ஒரு வங்கி அலுவலராக அத்தகைய பாவனைகளுடனே இருந்திருக்கிறார் என்று பேட்டிகள் மற்றும் அனுபவப் பதிவுகள் வாயிலாக தெரிய வருகிறது.

படிமங்களின் பெருவெளி:
குடும்பம் ஒரு பாற்கடல். அதிலிருந்து தான் லக்ஷ்மி, ஐராவதம், உச்சைஸ்ரவஸ் எல்லாம் உண்டாயின. அதிலிருந்து முளைத்துத் தான் நீங்கள் எனக்குக் கிட்டினீர்கள். ஆலஹால விஷமும் அதிலிருந்து தான் உண்டாகியது; உடனே அதற்கு மாற்றான அமிருதமும் அதிலேயே தான்..”
அனாயாசமாக படிமங்களை வாரியிறைத்துச் செல்லும் எழுத்து லா..ராவுடையது. மொழி படிமங்களாக ஆகும் தருணம் எல்லா இலக்கிய வடிவங்களிலும் ஒரு உச்ச நிலையாக்க் கருதப் படுகிறது. இந்த அம்சம் தூக்கலாக இருப்பதால் தான் லா..ராவின் படைப்புகள் மீண்டும் மீண்டும் வாசகனைத் தம்மை நோக்கி இழுத்துக் கொண்டே இருக்கின்றன.
சிந்தா நதி என்ற அவரது ஒரு நூலின் பெயரே ஒரு அழகிய படிமம். (சில வாசகர்கள்சிந்தாத நதிஎன்று அதற்குப் பொருள் கொள்வதைக் காண்கிறேன். அதில் வரும்சிந்தாஎன்பது சம்ஸ்கிருத சொல். சிந்தா என்றால் சிந்தனை, எண்ணம், நினைவு..) அதில் வரும் சில சொற்கட்டுகள் தரும் படிமங்கள் அற்புதமானவை.
சிந்தாநதி ஓட்ட்த்தில் துள்ளு மீன்.
சிந்தா நதிதலைக்கு மேல் ஆழத்தில், மண்டை ஓடுள் தோற்றங்கள்.
சிந்தா நதியில் தண்ணீர் எப்போதுமே பளிங்கல்ல.
ரொம்ப சரி, அத்தனையும் தூக்கி எறிசிந்தா நதியில்.
சிந்தா நதியில் மிதந்து வந்த ஒரு அகல் சுடர்.
சிந்தா நதி மேல் ஒரு வானவில்.
சிந்தா நதி ஆழத்தில் காலைச் சுற்றிக் கொண்ட ஒரு கொடி.
புற்று சிறுகதையில், புற்றுக்குள்ளிருந்து சீறிய பாம்பு கடித்த தருணம் அவனது எண்ண ஓட்டங்கள் விரிகின்றன. புற்றுக்குப் பால் ஊற்றி வேண்டித் தான் அவனது அம்மா அவனைப் பெற்றெடுக்கிறாள். அவனது பிறப்புக்கும் இறப்புக்கும் புற்றே காரணமாகிறது. அவன் வாழ்வு முழுவதும் புற்று மாபெரும் மர்மமாகவும், திறக்காத ரகசியமாகவும் அவனைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரு மாபெரும் படிமமாகிறது.
ஜன்னி சிறுகதையில் பராசக்தி உலக வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டிப் புறப்படுகிறாள். கரு உயிராக வெளிப்பட வேண்டிக் காத்திருக்கும் யோனிகளைத் தேடி, கடைசியில் அவள் ஆவிர்ப்பவிப்பது முறையற்ற உறவால் பிறக்கும், பிறந்த உடனேயே தாய் தகப்பானால் குளக்கரையில் கைவிடப் படப் போகும் குழந்தையின் உயிர்! அப்படி ஒரு குழந்தையின் உயிரில் லோகமாதாவைப் பிரவேசிக்கச் செய்வதில் லா..ராவுக்கு தயக்கம் ஏதுமில்லை. அனேக கோடி பிரம்மாண்ட ஜனனீ, ஆப்ரஹ்ம கீட ஜன்னீ (பிரம்மன் முதல் புழு வரையிலான உயிர்களின் தாய்) என்று தானே ல்லிதா சகஸ்ரநாமமும் அவளைப் புகழ்கிறது! இக்கதையில் ஜன்னி என்ற அந்தப் படிமம் விஸ்வரூபம் கொள்கிறது.
கடற்கரை மணலில் கால்பட்ட இடமெல்லாம் சங்கும் சிப்பியும் இடறுவது போல, எழுத்தெங்கும் படிமங்கள் இறைந்து கிடைக்கும் வெளி லாசராவின் எழுத்து என்றால் அது மிகையில்லை.

பெண்மைகாமம்சாக்தம்:
அம்பாளின் கால் சிலம்பொலி கேட்கவில்லை? உலகமே உபமானங்களும் உபமேயங்களுமாக மாறி விடுகிறது. நிஜத்தின் ஸ்வரூபங்களில் இப்படியும் ஒன்றோ? ..”
பெண்மையின் ஒளியை, அழகை, வர்ண ஜாலங்களைத் தேடுவது தான் லாசரா எழுத்து கொள்ளும் ஆன்மீகமான தேடலாக இருக்கிறது. அதற்கு மரபு ரீதியான ஒரு வலுவான பின்னணியும் உண்டு. அவரது குல தெய்வமான பெருந்திரு என்ற தேவி. தலைமுறைகளை ஒன்றிணைப்பவள். அவளே சாஸ்வதமான சொத்து என்று பாட்டி சொல்கிறாள்.
தமிழ்ப் பண்டிதரான தாத்தா நோட்டுப் புத்தகம் முழுவதும் பாடல்களாக எழுதிக் குவித்து வைத்திருக்கிறார். எல்லாம் பெருந்திரு மீது புனையப் பட்டது. அவற்றை குடும்பத்தில் யாரும் படிப்பதாகத் தெரியவில்லை. அவை ஒரு மூலையில் கிடக்கின்றன. ஆனால் தாத்தாவுக்கு அது பற்றி எந்த விசனமும் இல்லை. அதை ஒரு இடையறாத தியானமாக, நித்திய வழிபாடாக அவர் செய்து வருகிறார். இதே போன்றதொரு உணர்வு தான் லா.சா.ரா தன் எழுத்துக்கான உந்துதல் பற்றிக் கூறும் போதும் வெளிப்படுகிறது
புரிந்தது புரியாத்து இந்த இரன்டு நிலைகளுக்கும் உண்மையிலேயே என்ன வித்தியாசம் இருக்கிறது? இரண்டுமே தற்காலிக நிலைகள்.. விஷயம் அதனதன் உருவில் ஒரு ஒரு வழி வெளிப்படக் காத்திருக்கிறது.. அதனதன் வேளையில் வெளிப்படுகிறது.. சிந்தாநதி என் எஸ்டேட்டில் ஓடும் எனக்கே சொந்த நதி அல.. உயிரின் பரம்பரை லோகோஸ்ருதியின் மீட்டல் கங்கை இதன் கிளை” (சிந்தா நதி முன்னுரையில்).
ஒருவகையில் அவரது கதைகள் அனைத்தும் சக்தி பூஜை போலவே உள்ளன. அடிப்படையில் நான் சௌந்தரிய உபாசகன் என்று லாசரா அவரது வாழ்வின் கடைசிக் காலகட்ட்த்தில் அளித்த ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
சக்தி பூஜையில் யந்திரம், மந்திரம், தந்திரம் ஆகியவை அதன் அலகுகள். இவையனைத்தும் உள்முகமானவை, அந்தரங்கத் தன்மை கொண்டவை.
முக்கோணங்களும் தாமரை இதழ்களும் புள்ளிகளும் கோடுகளும் இணைந்து உருவாக்கும் வலைப்பின்னல்களான வடிவங்களே தியானத்திற்கான யந்திரங்கள்சக்தி பூஜையில். லா.சா.ராவின் படிமங்கள் இப்படித் தான் இருக்கின்றன.
மீண்டும் மீண்டும் ஒருவித லயத்தில் வரும் உச்சாடனங்கள் போன்ற சொற்கள்மந்திரமாகின்றன.
தராமல் இருப்பாளோ அவள் என்ன சத்தியம் மறந்தவளோ
அவரவர் பூத்ததற்குத் தக்கபடி”.
பரிகாசம் போலம் கடித்த பாம்பு, பலபேர் அறிய மெத்த வீங்கி…”
அபிதா நாவலில் அவளது பெயரை முதல் முறை அம்பி சொல்லிப் பார்க்கிறான்
சிமிழ் போன்று வாயின் லேசான குமிழ்வில்
பிஉதடுகளின் சந்திப்பில்
தாநாக்கின் தெறிப்பில்
அந்தப் பெயரே மந்திரமாகிறது. அது வெளிப்படும் தருணத்தை லா..ரா தனக்கே உரித்தான மொழியில் சொல்கிறார்:
என் நாவில் மந்திரம் போல் ஒரு நாமம் துடித்தது. வெளிப்பட்டால் அதன் நயம் உடனே பொரிந்துபோம். உள்ளிருந்தால், நான் வெடித்துவிடுவேன். அவ்வளவு நுட்பமான, வேக மந்த்ரம், வேதனா மந்த்ரம்
சக்தி பூஜையில் தந்திரம் என்பது பூஜையில் மானசீகமாக செய்யப் படும் உபசாரங்கள், முத்திரைகள் ஆகியவற்றைக் குறிக்கும். லா.சா.ரா படைப்புகளில் வெளிப்படும் உணர்ச்சிகளின் தாரையே, பல்வேறு முத்திரைகளாக, தேவிக்கு செலுத்தப் படும் புஷ்பாஞ்சலியாக ஆகிவிடுகின்றது.
செவ்வரளி மலர்கள், செவ்வாடை, குங்குமம், செம்பருத்திப் பூவின் நிறம்இந்த சிகப்பு காமத்தை, உயிரின் ஆதார சக்தியின் தீண்டலைக் குறிக்கிறது. இங்குகாமம்என்ற சொல் பாலுறவு சார்ந்த கண்ணோட்டத்தில் அல்ல, இந்து ஞான மரபில் வழங்கப் படும் தத்துவார்த்தமான பொருள் கொள்கிறதுஆத்மாவின் காமத்தால்” (ஆத்மனஸ்து காமாய) என்று உபநிஷதத்தில் யாக்ஞியவல்கியர் மைத்ரேயிக்குக் கூறும் வாசகத்தின் பொருளைக் கொண்டு அதைப் பார்க்கவேண்டும். அதுவே எல்லா மனித உறவுகளுக்கும் அடிப்படை.  வாழ்வின் மீதான ஆசை, அந்த இச்சா சக்தியே காமம். பிரபஞ்சத்தின் அனைத்து விருப்புகளும் ஆசைகளும் ஒன்றாய்த் திரண்ட அந்த மகா ஆசையின் குறியீடாகவே சிகப்பு நிறம் அங்கே வருகிறது. இவ்வாறு உன்னதமாக்கப் பட்ட காமம் தான் லா..ரா படைப்புகளின் அடிநாதமாக இருக்கிறது. இந்த நிலைக்கு வருவதற்காக தத்தித் தாவி மோதும் முயற்சியே அவரது சிருஷ்டிகர செயல்பாட்டின் பல வடிவங்களும்.
ஜன்னம், மரணம் இரண்டையுமே சக்தி லீலையின் சங்கிலித் தொடராக காணும் தன்மை சாக்த தரிசனத்தில் உண்டு. லா..ரா படைப்புகளில் இதுவும் இழையோடிக் கொண்டிருக்கிறது.
புத்ர நாவலில் ஒரு இடம். ஆற்றில் அந்தத் தாய் குளித்துக் கொண்டிருக்கிறாள். அவள் சாபமிட்ட மகனின் மனைவி, இந்தப் பெண்ணின் மருமகள் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கிறாள். இந்தத் தாயின் உள்மனம் அதை உணரவும் செய்கிறது. அப்போது அந்தக் குளக்கரையில் ஒரு கிடாரி (பெண் ஆடு) குட்டி ஈனும் சித்தரிப்பின் வாயிலாக அந்த ஜனன அவஸ்தையை மிக நுட்பமாக எழுதிச் செல்கிறார் லா..ரா. இந்த நாவலில் அபாரமான உணர்வெழுச்சி கொண்ட ஒரு இடம் இது.
ஜனனி சிறுகதையின் கடைசிப் பகுதி
ஒரு நாள் ஒரு மரத்தடியில் அவள் மத்தியான வேளையில் தூங்கிக் கொண்டிருந்தாள். மத்தியானம் பிற்பகலாயிற்று. பிற்பகல் மாலையாயிற்று. மாலை இரவாயிற்று. இரவு காலை ஆயிற்று. காலை பகலாயிற்று. அவள் மூக்கிலும் வாயிலும் எறும்பும் ஈயும் தாராளமாகப் புகுந்து புறப்பட்டுக் கொண்டிருந்தன. ஆனால் அவள் எழுந்திருக்கவேயில்லை…’’
நனவோடைமனவெளி:
மனவெளிக் கலைஞர்என்று லா.சா.ரா குறிப்பிடப் படுகிறார். அவரது கூறுமுறை நனவோடை உத்தி (Stream of Consciousness) என்று பரவலாக அழைக்கப் படுகிறது. ஒரு வகைப்பாட்டு (genre) வசதிக்காக இத்தகைய சொல்லாடலை ஏற்றுக் கொண்டாலும், லா..ராவின் எழுத்து வெறும் நனவோடை உத்தி மட்டுமல்ல என்று ஜெயமோகன் ஒரு விமர்சனக் கட்டுரையில் எழுதியுள்ளார். அக விகசிப்பு கொண்டஎழுத்து (Psychedelic writing) என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று அவர் கருதுகிறார்.
நவீன இலக்கியத்தில் நனவோடை உத்திக்கான மாபெரும் முன்னுதாரணமாகக் கருதப் படுவது ஜேம்ஸ் ஜாய்ஸ் 1923ல் எழுதிய உலிசிஸ் என்கிற நாவல். இந்த நாவலை நான் வாசித்ததில்லை.எனவே இது தொடர்பாக நான் வாசித்த விமர்சனக் கருத்துக்களை மட்டும் இங்கு சொல்லிச் செல்கிறேன்.
முதலாவதுபொதுவாக, நனவோடை எழுத்து, அதை உருவாக்கும் படைப்பாளியின் சமூக, கலாசார கூட்டு நனவிலிகள் (collective subconscious) மற்றும் குழூஉக் குறிகளுடன் இணைபிரியாத தொடர்பு கொண்டது. அந்த எழுத்தை முழுமையாக உணர்ந்து அனுபவிப்பது என்பது அந்தக் கலாசார சூழலை நன்கு அறிந்தவர்களுக்கே சாத்தியம். எனவே இந்தியச் சூழலில் உலிசிஸ் போன்ற ஒரு கதையை வாசிப்பவர்களுக்கு அதன் முழுமையும் வந்து சேரும் சாத்தியம் குறைவு என்று விமர்சகர்கள் கருதுகின்றனர். ஏறக்குறைய இதே போன்ற தன்மை லா..ராவின் எழுத்துக்களுக்கும் உண்டு. அதில் வரும் தொன்மங்கள் சார்ந்த, ஐதிகம், மரபு, பாரம்பரியம் சார்ந்த, தஞ்சை மண் சார்ந்த சில சங்கேதங்களை உணர்ந்தவர்களுக்கே அவை முழுமையான ரசனை அனுபவத்தைத் தரும்.
இரண்டாவதுஜேம்ஸ் ஜாய்சின் எழுத்தும் சரி, பொதுவாக மேற்கத்திய நனவோடை இலக்கியங்களும் சரி, வெட்டப் பட்டு, துண்டிக்கப் பட்ட சொற்களாக உள்ளது. வாசகன் அந்த துண்டுகளை ஒன்றுசேர்க்கும் சவாலும் அந்த வாசிப்பு அனுபவத்தின் ஒரு பகுதியாக உள்ளது. ஆனால் லாசராவின் எழுத்து அப்படிப் பட்டதல்ல, அது தொடர்ச்சியறாத ஒரு பிரவாகம் போல உள்ளது என்று வெங்கட் சாமிநாதன் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார்.
இவ்வகையான தானியக்க எழுத்து குப்பைகளையும் மாணிக்கங்களையும் சேர்த்தே கொட்டுவது. எனவே சில ஆரம்பகட்ட கலை வெற்றிகளுக்குப் பிறகு இது வெறும் சொற்பெருக்காக மட்டுமே மாறிவிடும் அபாயம் உள்ளது என்று ஜெயமோகன் கருதுகிறார். இதை அறிந்தே லா..ராவும் நகுலனும்நிறுத்திக் கொண்டார்கள்என்று தனது பழைய பதிவு ஒன்றில் ஜெயமோகன் குறிப்பிடுகிறார். ஆனால் 80களின் கடைசி வரை கூட லா..ரா தீவிரமாக எழுதினார். சிந்தா நதி அந்த காலகட்டத்தில் தான் எழுதப் பட்டு பல புதிய தலைமுறை வாசகர்களை லாசாராவுக்குப் பெற்றுத் தந்த்து என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். அதே பதிவில் லாசரா, மௌனி, நகுலன், பிரம்மராஜன், கோணங்கி என்று இவ்வகையான பாணியில் எழுதிய படைப்பாளிகளை ஒப்பிட்டு விமர்சித்தும் ஜெயமோகன் எழுதியுள்ளார்.
எதுவாயினும், இந்த வகை எழுத்தில், நவீனத் தமிழிலக்கியத்தில் ஆகச் சிறந்த படைப்பாளி லா..ரா தான் என்பதில் சந்தேகமில்லை.
இந்த இலக்கிய கருதுகோள்கள் நவீன உளவியல் சார்ந்த அறிதல்களின் அடிப்படையிலேயே உருவாக்கப் பட்டன. எனவே இவ்வகைப் படைப்புகளில் பொதுவாக உளவியல் கூறுகளும் மிகச் செறிவாக இணைந்திருக்கும். லா..ராவும் அதற்கு விதிவிலக்கல்ல. ‘பிம்பம்என்ற சிறுகதையில் 25 வருடம் கழித்து எல்.கே.ஜி ஆசிரியையை சந்திக்க வருபவன் தேக்கி வைத்திருக்கும் குழந்தைப் பருவ தீண்டலின் ஆழ்மன அறிதல் நன்கு சித்தரிக்கப் பட்டுள்ளது. ‘அபூர்வ ராகம்சிறுகதையில் இறுதியில் அவள் போய்விட்டாள் என்பது அவனது உள்மனத்தின் மூலையில் எங்கோ தெரிந்திருக்கிறது, அதை அவன் எதிர்பார்த்தே இருக்கிறான். அவன் தாய்க்குத் தான் அது பெரிய அதிர்ச்சியாக இருக்கிறதே அன்றி அவனுக்கல்ல. இது போன்ற பல நுட்பமான உளவியல் சித்தரிப்புக்களை லா..ரா சிறுகதைகளில் பார்க்க முடிகிறது.
சொல்மொழித்வனி:
எழுத்தாற்றல்அதிலும் சிலரிடம் காணும் தனித்வம் ருத்ராம்சம் என்றே நினைக்கிறேன். பிறப்பித்த நிமித்தம் நிறைவேறும் வரை சிருஷ்டியால் என்னிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கும் சக்தி. இது அழிக்கும் ஊழித் தீ அன்று. பட்டறையில் எஃகு உருவாவது போல் நெஞ்சின் உலையில் காய்ச்சி அடித்துத் தீட்டிப் பதப்படுத்தி சொல்லுக்கு மந்திரம் ஏற்றும் ஆக்க சக்தி” (“அவள்தொகுப்பின் முன்னுரை)
படைப்பாளி ஒவ்வொரு சொல்லுக்காகவும் காத்திருக்க வேண்டுமா? ஆம் என்கிறார் லா..ரா. அதுதபஸ்என்கிறார். நெருப்பு என்று எழுதினால் வாய் வெந்து போக வேண்டும் என்கிறார்.
ஒரு குறிப்பிட்ட சொல்கட்டுக்காக நாள்கணக்கில் தவித்துக் கொண்டிருக்கயில், “மாம்பூவைக் காம்பு ஆய்ந்தாற் போலஎன்று சுவரில் கை எழுதிச் செல்வதை கனவில் கண்டு அதை அப்படியே எழுத்தில் வடித்ததாவும் கூறியிருக்கிறார்.
மொழி என்பது வெறும் வெளியீட்டுக் கருவி அல்ல லா..ராவுக்கு. சமூகவியல், மொழியியல் துறைகளில் இன்று நாம் பொதுவாகப் பயன்படுத்தும் அர்த்த்த்தில் மொழி என்பதை அவர் கருதவில்லை. அவரைப் பொறுத்தவரை ஒவ்வொரு சொல்லும் ஒரு உயிருள்ள வடிவம், ஒரு ஆளுமை. இந்தக் கருத்து சம்ஸ்கிருத கலை/அழகியல் மரபில் கூறப்படும் த்வனி என்ற கருத்தாக்கத்துடன் இயைகிறது. ஒரு காவியத்தின், கவிதையின் மேன்மையானது சொற்கள் நேரடியாக்க் குறிப்பிடும் பொருளாலும், சொல்லணிகளாலும் அல்ல, அந்த சொற்கள் குறிப்புணர்த்தும் பல்வேறு சாத்தியங்கள் கொண்ட ரசபாவங்களால் தான் மதிப்பிடப் படவேண்டும் என்று இந்தக் கோட்பாடு கூறுகிறது. இந்த த்வனி என்னும் கோட்பாட்டை விரித்து 10-ம் நூற்றாண்டில் ஆனந்தவர்த்தனர் த்வன்யாலோகம் என்ற மகத்துவம் மிக்க கலையியல் நூலையே எழுதியுள்ளார். இந்தியக் கலைமரபில் இது ஒரு ஆழங்காற்பட்ட விஷயம் என்பதால் லா..ரா இதிலிருந்தே கூட அக்கருத்தைப் பெற்றிருக்கக் கூடும்.
இதை வைத்து, சொல்லப் படும் பொருளை விட சொல்லப் படும் முறையே பிரதானமாகிறது. லாசரா ஒரு படைப்பாளி அல்ல, கைவினைஞர் மட்டுமேஎன்பதான குற்றச் சாட்டுகளும் விமர்சனங்களும் தொடர்ந்து லா..ரா மீது தமிழ் இலக்கியச் சூழலில் வைக்கப் பட்டு வந்திருக்கின்றன. அவற்றை அவர் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. கைவினைஞர் என்பதில் என்ன குறைச்சல் வந்துவிட்டது, சரி அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே என்று சிரித்துக் கொண்டே அதைக் கடந்து சென்று விட்டார். ஆனால் லாசாரவின் படைப்புகளை வாசிக்கும் எவருக்கும் முதல் பார்வையிலேயே அவர் வெறும் கைவினைஞர் அல்ல என்பது எளிதிலேயே புலனாகும். அவரது படைப்பின் வண்ணங்களும், புதுமைகளும், நுட்பமான வெளிப்பாடுகளும், ஒன்றை ஒன்று தாண்டிச் செல்ல முயலும் தன்மையும் வெறும் கைவினைத் திறத்தினால் மட்டுமே சாத்தியமாகுபவை அல்ல. ஒரு தீவிர கலைஞனின் சிருஷ்டிகரத்தைக் கோரி நிற்பவை.
இவ்வளவு சிக்கலும் உழைப்பும் ஜீவசக்தியும் தளுக்கும் கொண்டு சிருஷ்டிக்கப் பட்டுள்ள அந்த சொற்கள் மொழிபெயர்ப்பில் என்ன பாடுபடும்? தமிழ் எழுத்தாளர்களிலேயே மொழிபெயர்க்க மிகவும் கடினமான கலைஞர் லாசரா தான் என்று சொல்லலாம் என நினைக்கிறேன். அவரது வாசகர்களில் பெரும்பகுதியினர் அந்த மொழி அளிக்கும் போதைக்காகவே மதுவுண்ட வண்டினம் போல அந்த எழுத்துக்களில் மயங்கிக் கிறங்கிக் கிடக்கின்றனர்.
அவரது உரைநடை எவ்வகையிலும் அடங்காதது. கவிதை, சங்கீதம், ஓவியம், சிற்பம் எல்லாமாகவும் தோற்றமளிக்க்க் கூடிய மாயத்தைத் தன்னுள் பொதிந்து வைத்திருப்பது. நான் கவனித்த ஒரு விஷயம் என்னவென்றால், எனது நண்பர்களில் தீவிர சங்கீத ரசிகர்கள், ஓவியம் போன்ற நுண்கலைகளின் ரசிகர்களுக்குப் பிடித்த எழுத்தாளராக லாசரா இருக்கிறார். இது யதேச்சையான ஒரு விஷயமல்ல; இந்தக் கலைகள் தரும் அபோதபூர்வமான ரசனை அனுபவத்திற்கு நெருக்கமான ஒரு அனுபவத்தை லா..ராவின் எழுத்துக்கள் தருவதும் இதற்கு ஒரு காரணம். அவரது மொழியும் வடிவ நேர்த்தியும் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
லாசராவின் வரம்புகளும் இலக்கிய இடமும்:
இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் லா..ராவின் உலகம் பற்றிச் சொன்னதை இப்போது நினைவில் கோர்த்துப் பார்க்கலாம். அடிப்படையாக, நவீன இலக்கிய பிரதிகளுக்கு இருந்தாக வேண்டிய வரலாற்று பிரக்ஞை, சமூக பிரக்ஞை, கலாசார பிரக்ஞை ஆகியவை லாசரா எழுத்தில் மிகக் குறைவாக இருக்கிறது, சமயங்களில் இல்லாமலே போய்விடுகிறது.
பல கதைத் தொகுப்புகளில் எழுதப் பட்ட தேதிகள் குறிப்பிடப் படவில்லை. அது அவசியமில்லை, ஒரு பொருட்டே இல்லை என்று வானதி பதிப்பகமும், லாசராவின் தீவிர வாசகர்களும் எண்ணியிருக்கலாம். ஆனால் கதைகளின் உள்ளிருந்து கூட பல சமயங்களில் கதை நிகழும் காலத்தையும் சரி, அது எழுதப் பட்டிருக்கக் கூடிய காலத்தையும் சரி, நம்மால் கண்டுபிடிக்க முடியாத வகையில் அவை உள்ளன.
நாவல் கோட்பாடுநூலில் ஜெயமோகன் கண்ட காலம் (துண்டிக்கப் பட்ட காலம்) – அகண்ட காலம் என்று ஒரு கருத்தை எடுத்துரைக்கிறார். அதாவது கண்டகாலம் என்பது ஒரு வரையறைக்குள் அடங்கிய காலத்திற்கும், சூழலுக்கும் உட்பட்ட வாழ்க்கையின் நுண்சித்தரிப்புகள். ஒரு சிறந்த இலக்கியப் படைப்பு இவற்றின் வழியாக அகண்ட காலத்தைத் தீண்ட வேண்டும். இதை வைத்துப் பார்க்கும் போது லா..ரா படைப்புகளின் பிரசினை அவற்றில் எப்போதும் அகண்ட காலம் மட்டுமே வருவது தான்! உதாரணமாக, கதை நிகழும் காலம் சுதந்திரத்திற்கு முன்பா, பின்பா என்பன போன்ற மயக்கங்கள். ஏனென்றால் கண்ட காலம் அவற்றில் பிரக்ஞை பூர்வமாக சித்தரிக்கப் படவில்லை. இதையே வரலாற்று பிரக்ஞை இன்மை என்று கருதுகிறேன்.

லா..ரா. குயவர் குடியிருப்புகளுக்கு நடுவில் வாழ்ந்திருக்கிறார். தச்சு வேலை செய்யுமிடம், பல்வேறு விளிம்பு நிலை மக்கள் புழங்குமிடங்களில் எல்லாம் வாழ்கிறார். அலுவலகப் பணியாளராக நெடுங்காலம் பணியாற்றியிருக்கிறார். ஆனால் இவற்றைப் பற்றிய சித்திரங்கள் எதுவுமே பெரிதாக அவரது எழுத்தில் வரவில்லை. எல்லாவற்றிலும் குடும்பமும் அது சார்ந்த சிக்கல்களுமேகளமாகமுன் நிற்கின்றன. ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பிரசினைகள் கூட குடும்ப சூழல்கள் தாண்டி பேசப் படுவதில்லை.
இதே போலத் தான் கலாசார, தத்துவ பிரக்ஞையும். சாக்தம் பற்றிய ஆழ்ந்த அனுபூதி கொண்ட அவர், கோயில்கள், அது சார்ந்த சிற்ப வடிவங்கள், தாந்திரீகம் போன்ற அம்சங்களை தன் படைப்புகளில் எடுத்தாள்வதே இல்லை. தான் சார்ந்திருக்கும் சாக்த நெறியின் தத்துவப் பின்னணியின் தனித்துவத்தைக் கூட பிரக்ஞை பூர்வமாக கீழ்க்காண்பது போன்ற ஒருசில இடங்களில் மட்டுமே உணர்கிறார். மற்றபடி ஏசு கிறிஸ்து, நியாயத் தீர்ப்பு நாள், பரமபிதா குறித்தெல்லாம் புளகாங்கிதத்துடனேயே பெரும்பாலும் எழுதிச் செல்கிறார்.
கிறிஸ்துவ வேதப்படி ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பிறந்தவர்கள் முதல் பாவத்தின் குழந்தைகள். ஆண்டவனின் கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளானவர்கள். அவர்களின் தந்தை சொல்கிறார் – I am a Vengeful God. ஆனால் நாம் எல்லாரும், சகல ஜீவராசிகளும் அகிலாண்டேஸ்வரி, ராஜராஜேஸ்வரி, ஜகன்மாதா, கருணாகரி,சௌந்தர்ய ரூபிணியின் குழந்தைகள். சௌந்தர்யம் நம்மிலும் நம்மைச் சூழ்ந்து இயங்காமல் எப்படி இருக்க முடியும்? சிறு நுரை ஆயினும் நாம் அவளுடைய லஹரிகள்..”  (சௌந்தர்ய    இறுதி வரிகள்).
லா..ரா குறித்து வெங்கட் சாமிநாதன் எழுதிய ஒரு விமர்சனக் கட்டுரையில், இப்படிக் குறிப்பிடுகிறார்
ரவீந்திர நாத தாகூரின் ஒரு கவிதையில் உலகை சுற்றிக் காணும் ஆசையில் ஒருவன் மேற்கொன்ட நீண்ட பயணத்தில், எண்ணற்ற மலைகள், நதிகள், தேசங்கள் கடந்து, கடைசியில் களைப்புற்று வீடு திரும்புகிறான்.. கண்களில் முதலில் பட்ட்து குடிசையின் முன் வளர்ந்திருந்த புல் இதழின் நுனியில் ப்டிந்திருந்த பனித்துளி. அவன் சுற்றிவந்த உலகம் முழுவதையும் அப்பனித்துளியில் கண்டு அவன் ஆச்சரியப் பட்டுப் போகிறான்.. சுற்றிய உலகம் முழுவதும் அவன் காலடியிலேயே காணக் கிடக்கிறது..”
சாராம்சமாகச் சொன்னால், இது தான் லாசராவின் படைப்புலகம்.
நாம் சமூக, வரலாற்று பிரக்ஞை பற்றித் தொடுத்த கேள்விகளை லாசரா எப்படி எதிர்கொள்வார்? அதே கட்டுரையில் வெ.சா மேலும் எழுதுகிறார்
கண்கள் பிரகாசிக்க, குறும்புப் புன்னகையுடன் ராமாமிருதம் நம்மைக் கேட்கக் கூடும்ருஷ்ய புரட்சியும் வியட்நாம் யுத்தமும் புல்லின் மீது படிந்திருந்த பனித்துளியை என்ன செய்தன? அது எம்மாற்றமும் அடைந்ததா? அல்லது பனித் துளி தான் உலகில் நிகழும் எண்ணற்ற மாற்றங்களை, அது செர்னோபில்லில் இருந்து கிளம்பிய அணுப்புகை நிறைந்த மேகங்களேயாக இருந்தாலும், தன் பனித்திரைக்குள் பிரதிபலிக்க தவறி விட்ட்தா?”
ஒரு கலைஞர் என்ற வகையில், லா சராவின் இந்த அகங்காரம் நிறைந்த தனிமைக்கு நாம் தலைவணங்கியே ஆக வேண்டும் என்று வெ.சா கூறுகிறார். ஏனென்றால் இத்தனிமையில் போலித் தனம் இல்லை. இந்தத் தனிமை சித்தாந்த சார்புகளாலோ, அல்லது வணிகச் சூழலின் அழுத்தங்களாலோ அல்லது அங்கீகாரத்திற்காக செய்துகொள்ளும் சமரசங்களாலோ வடிவமைக்கப் பட்டதல்ல. இது தனது சுய ஆய்வில் தனது ஆளுமைக்கும் தனது நேர்மைக்கும் ஏற்ப லா..ரா என்ற கலைஞர் தானாக தேர்ந்தெடுத்துக் கொண்டது. அவரது படைப்புலகின் எல்லைகளையும், வரம்புகளையும் கருத்தில் கொண்ட போதும் கூட, இதுவே நவீனத் தமிழ் இலக்கிய உலகில் லா..ராவின் மகத்துவம் மிக்க இலக்கிய இடத்தை அழுத்தமாக உறுதி செய்யும் அம்சமும் ஆகும்.

(முற்றும்)

No comments:

Post a Comment