Friday, August 10, 2018

மௌனி


மௌனி

















(இயற்பெயர் - மணி, சூலை 27, 1907 - சூலை 6, 1985) ஒரு புகழ் ஈட்டிய தமிழ் எழுத்தாளர். இவர் மணிக்கொடி இதழில் எழுதத் துவங்கி, கசடதபற இதழ் வரை கதைகள் எழுதியவர். கணிதத்தில் பட்டம் பெற்றிருந்த அவருக்கு இசையிலும் மெய்யியலிலும் ஆழ்ந்த ஈடுபாடு உண்டு.
கதாபாத்திரங்களின் அன்றாட உலகை விவரிப்பதை விடவும் அவர்களது மனவுலகின் அரிய தருணங்களை வெளிப்படுத்துவதே இவரது எழுத்து நடையின் சிறப்பு. இவர் 24 கதைகள் மட்டுமே எழுதியுள்ளார்.

வாழ்க்கைச் சுருக்கம்

1907 சூலை 27ஆம் நாள் தஞ்சை மாவட்டம் மாயவரத்திற்கு அருகிலுள்ள கிராமத்தில் பிறந்தார். அவருடைய தந்தையார் செம்மங்குடியில் வாழ்ந்து வந்தார். 1935 வரை கும்பகோணத்தில் படித்தார். கணிதத்தில் பட்டம் பெற்றார். திருமணத்திற்கு பிறகு 14 ஆண்டுகள் கும்பகோணத்தில் வசித்தார்.பின்னர் தன் குடும்ப சொத்து மற்றும் தொழிலை பராமரிக்க சிதம்பரம் வந்து இறுதிவரை அங்கேயே வாழ்ந்தார். மெளனிக்கு மொத்தம் ஐந்து குழந்தைகள். நான்கு மகன்களும் ஒரு மகளும். இரண்டு மகன்கள் இளம் வயதிலேயே விபத்தில் சிக்கி அகால மரணமடைந்தனர். ஒருவர் எம்.. படித்து மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் 2004இல் காலமானார். ஒரு மகன் அமெரிக்காவில் வசிக்கிறார். மகள், மெளனியின் வீட்டில் சிதம்பரத்தில் வாழ்ந்து வருகிறார். மெளனி 1985 சூலை 6ஆம் தேதி காலமானார்.
மெளனியின் மொத்த படைப்புகள் - 24 சிறுகதைகள், 2 கட்டுரைகள்
மெளனி படைப்புகள் முழுத் தொகுப்புகாலச்சுவடு பதிப்பகம் (2010)

படைப்புகள்

சிறுகதைகள்             இதழ்  வருடம்
1.பிரபஞ்சகானம்   மணிக்கொடி            1936
2.ஏன்?                மணிக்கொடி            1936
3.காதல் சாலை        மணிக்கொடி            1936
4.குடும்பத்தேர்        மணிக்கொடி            1936
5.கொஞ்ச தூரம்      மணிக்கொடி            1936
6.சுந்தரி          மணிக்கொடி            1936
7.அழியாச்சுடர்        மணிக்கொடி            1937
8.மாறுதல்     மணிக்கொடி            1937
9.நினைவுச் சுழல்  மணிக்கொடி            1937
10.மாபெருங் காவியம்      தினமணி மலர்        1937
11.மிஸ்டேக் மணிக்கொடி            1937
12.சிகிச்சை ஹனுமான் மலர்     1937
13.எங்கிருந்தோ வந்தான்             தினமணி வருஷ மலர்     1937
14.இந்நேரம்,இந்நேரம்      மணிக்கொடி            1937
15.மாறாட்டம்            மணிக்கொடி            1938
16.நினைவுச் சுவடு               தேனி                1948
17.மனக்கோலம்      தேனி                1948
18.சாவில் பிறந்த சிருஷ்டி             சிவாஜி            1954
19.குடை நிழல்          சிவாஜி மலர்             1959
20.பிரக்ஞை வெளியில்     சரஸ்வதி       1960
21.மனக்கோட்டை எழுத்து            1963
22.உறவு,பந்தம்,பாசம்      குருசேத்திரம்            1968
23.அத்துவான வெளி          குருசேத்திரம்            1968
24.தவறு           கசடதபற      1971
கட்டுரைகள்               இதழ்  வருடம்
1.எனக்கு பெயர் வைத்தவர்        பி.எஸ்.ராமையா மணிவிழா மலர்       1965
2.செம்மங்குடி தன் ஊர் தேடல் ஆனந்த விகடன்     1968



மௌனியின் சிறுகதைகளைப் படிப்பது எப்போதுமே புதுவகை அனுபவமாக அமைகிறது. அவரது மொழி ஆளுமையும் கதை சொல்லும் முறையும் வியக்க வைக்கிறது. 24 சிறுகதைகள் மட்டுமே எழுதிசிறுகதைத் திருமூலர்எனக் கொண்டாடப்படும் ஆளுமையாக விளங்குகிறார் மௌனி!
1907-ல் தஞ்சாவூர் மாவட்டத்தின் செம்மங்குடியில் பிறந்தவர் மௌனி. 1929-ல் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் கணிதத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். சில ஆண்டுகள் கும்பகோணத்திலும் பிறகு சிதம்பரத்திலும் வசித்தார். இசையிலும் தத்துவத்திலும் தீவிர ஈடுபாடு கொண்ட மௌனி மணிக்கொடியில் எழுதியவர். எஸ்.மணி என்ற இயற்பெயரைமௌனிஆக்கியவர் எழுத்தாளர் பி.எஸ்.ராமையா. கல்லூரி காலத்தில் மௌனியை நண்பர்கள்மைல்மணிஎன்று அழைப்பார்களாம். காரணம், ரன்னிங் ரேஸில் நன்றாக ஒடுவார்.
மௌனியோடு கொஞ்ச தூரம்என்று எழுத்தாளர் திலீப்குமார் இலக்கியச் சிந்தனைக்காக ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அது மௌனியின் புனைக் கதைகளைப் புரிந்துகொள்ளத் துணை செய்கிறது என்றால், ஜே.வி.நாதன் எழுதியுள்ளமௌனியின் மறுபக்கம்அவரது வாழ்க்கையை, இலக்கிய ரசனையை, சிறுகதைகள் எழுதிய விதத்தைப் புரிந்துகொள்ளப் பெரிதும் உதவுகிறது. இந்நூலை விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது.
மௌனியோடு 16 வருடங்கள் நெருங்கிப் பழகியவர் எழுத்தாளர் ஜே.வி.நாதன். ஆகவே இந்த நூலின் மூலம் மௌனியின் வாழ்க்கையையும் படைப்பு அனுபவத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
மௌனியின்தவறு’, ‘அத்துவான வெளிஆகிய சிறுகதைகளும் ஜே.வி.நாதனுக்கு மௌனி எழுதிய கடிதங்களும், இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.
மௌனிக்கும் தனக்குமான நட்பு எப்படித் தொடங்கியது என்பதை நினைவுகொள்ளும் ஜேவிநாதன், அந்த நட்பு நாளடைவில் மிகவும் நெருக்கமாகி தினமும் மௌனியைத் தேடிப் போய்ச் சந்தித்து வந்ததையும், சில நாட்கள் மௌனியே அவரைத் தேடி வந்து உரையாடியதையும் நெகிழ்வோடு விவரித்துள்ளார்.
மௌனி அன்றாடம் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சென்றுவரக்கூடியவர். ஆனால், கோயிலில் அவர் சாமி கும்பிடுவதில்லை. இது பற்றி ஜே.வி.நாதன் கேட்டதற்கு மௌனி சொன்ன பதில்:
நான் ஒருநாள் வரலேன்னாலும் நடராஜரும் மத்த சாமிகளும்ஏன் இன்னிக்கு வரலேன்னு கேட்டுக் கோவிச்சுப்பாங்கப்பா. அதனாலதான் நான் நாள் தவறாம அட்டெண்டன்ஸ் கொடுக்கறேன்!”
கடவுளையும் நண்பனாகக் கருதிய மனதே மௌனியிடம் இருந்தது. மௌனி தான் எழுதும் கதைகள் எதற்கும் தலைப்பு வைத்ததில்லை. ஒவ்வொரு கதையையும் திரும்பத் திரும்பப் பலமுறை எழுதக்கூடியவர்.
இந்தப் புத்தகத்தில் அப்படி ஒரு சம்பவத்தை விவரிக்கிறார் ஜே.வி.நாதன்:
மௌனியின் சிறுகதை ஒன்றை படியெடுக்க உதவியபோது, ஒவ்வொரு பக்கத்தையும் மௌனி மீண்டும் மீண்டும் திருத்திக் கொண்டேயிருந்தார். இரவெல்லாம் கண்விழித்துப் படி எடுத்தேன். அவரோ திருத்திய பக்கங்களில் மீண்டும் புதிதாகத் திருத்தம் போட்டுக் கொண்டேயிருந்தார். இதனால் எனக்கு எரிச்சலாக வந்தது. எனக்கு வயது அப்போது 22; மௌனிக்கு 64 வயது. அவர் மீதுள்ள மரியாதையால் கதையைப் பிரதியெடுத்துக் கொண்டிருந்தேன்.
ஒரு நள்ளிரவில் என்னிடம் வந்து நீ கரெக்ஷன் செய்து முடிச்சதும், அப்படியே என்கிட்ட காட்டமாக் கிளம்பி போய்த் தபாலில் சேர்த்துடு. இல்லாவிட்டால் நான் மறுபடியும் கரெக்ஷன் போட ஆரம்பிச்சிடுவேன் என்றார்’. மௌனியின் கதைகள் வடிவரீதியாகவும் மொழியிலும் கச்சிதமாக உருப்பெற்றதற்கு இதுவே காரணம்.
‘‘மௌனி தான் எழுதிய கதைகளைக் காப்பாற்றி வைத்துக் கொள்வதில் ஆர்வம் இல்லாதவர். நிறையப் படிப்பார். அவர் படித்த புத்தகங்களில் தத்துவம் குறித்த நூல்கள் அதிகமாக இருந்தன. அவரது உறவினர்களுக்குக் கூட அவர் ஓர் எழுத்தாளர் என்பது தெரியவே தெரியாது’’ என்கிறார் மௌனியின் சிறுகதைகளைத் தேடித் தொகுத்துப் புத்தகமாகக் கொண்டுவந்த எழுத்தாளர் கி..சச்சிதானந்தம்.
மௌனிக்கு வயலின் வாசிக்கத் தெரியும். அவரது வீட்டில் ஒரு வயலின் வைத்திருந்தார். அதில் ஒரு அதிசயம் உண்டு. இசை எழுப்பும் கம்பிகளுக்குப் பதிலாகத் தேங்காய் நாரைப் பதப்படுத்தி, பழுப்பு சணல் போன்ற மெலிதான இழைக் கயிறுகளை அதில் இழுத்துக் கட்டியிருப்பார். வில்லை அந்த நரம்பு போன்ற இழைக் கயிற்றின் மீது வைத்து இழுத்தால் இசை மிகவும் சன்னமாகக் கீச்சுக் குரல் போல வெளிவரும். வீட்டுக்குள்ளிருக்கும் மனைவிக்குத் தன் வயலின் இசை தொந்தரவாக இருக்கக் கூடாது என்பதற்கு அவர் கண்டுபிடித்த ஐடியா அது.
மௌனிக்கு நான்கு மகன்கள் ஒரு மகள். முதல் மகன் சென்னையில் டிராம் விபத்தில் உயிரிழந்து போனார். இன்ஜினீயராகப் பணியாற்றிய இரண்டாவது மகனும் எதிர்பாராதபடி குளியல் அறையில் மின்சாரம் தாக்கி இளவயதில் இறந்து போனார். மூன்றாவது மகன் தத்துவம் படித்தவர். ஆனால், மனநிலை சரியற்று வீட்டிலேயே இருந்தார். அந்த மகனைப் பற்றிய கவலை மௌனிக்கு வாழ்நாள் முழுவதும் இருந்து வந்ததாம். நான்காவது மகன் அமெரிக்காவில் வசிக்கிறார்.
‘‘அனுபவ வெளியீட்டை அழகாகச் செய்தால் கலை ஆகும். அனுபவம் என்பது வார்த்தையற்றது. உணர்வால் பெறப்படுவது. உண்மையான கலைஞனுக்கு அனுபவம் வெளியீடு ஆகும்போது வார்த்தைகள் தாமாகவே வந்து விழுகின்றன. நாயைக் கட்டி இழுப்பதைப் போல வார்த்தைகளைக் கட்டி இழுப்பதெல்லாம் காலத்தில் அடிபட்டு போய்விடக்கூடியவை. ஒர் எழுத்தாளனுக்கு எதை எழுத வேண்டும் என்று தெரிந்திருப்பதை விட எதை எழுதக்கூடாது என்று அவசியம் தெரிந்திருக்க வேண்டும். வார்த்தைகளை வலிந்து அடுக்கி சுழற்றி மேற்பூச்சு நகாசு வேலை செய்பவன் ஒருபோதும் சிறந்த கலைஞன் ஆக மாட்டான்’’ எனக் கூறுகிறார் மௌனி.
ஆல்ப்ர்ட் பிராங்க்ளின் என்ற அமெரிக்க அறிஞர் மௌனியிடம் ‘‘நீங்கள் எதற்காக எழுதுகிறீர்கள்?’’ எனக் கேட்டபோது, ‘‘என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை; அதனால் எழுதுகிறேன்’’ எனப் பதில் சொன்னார் மௌனி.
பெயரவில்தான் அவர் மௌனி. ஆனால், நிறையப் பேசக்கூடியவர். ‘‘பேசுவது என்பது வார்த்தைகள் மூலமாகத் தன்னைத்தானே தெளிவு படுத்திக் கொள்வது. ஆகவே, நிறையப் பேசுகிறேன். நான் பேசுவது எதிரில் இருப்பவர்களுக்காக அல்ல’’ என்கிறார் மௌனி.
எது நல்ல சிறுகதை என்ற கேள்விக்கு ‘‘நல்ல சிறுகதை என்பது ஒரு கவிதை. என் சிறுகதைகள் ஒவ்வொன்றும் ஒரு கவிதையே’’ எனப் பதில் அளித்திருக்கிறார் அவர்.
டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, இப்சன், அனடோல் பிரான்ஸ், ஆன்டன் செகாவ் இவர்களின் படைப்புகளைத் தனக்கு மிகவும் பிடிக்கும் எனக் கூறும் மௌனி, ராபர்ட் ம்யூசில் எழுதிய ‘The Man Without Qualities’ நாவலை தனக்கு மிகவும் பிடிக்கும் எனக் கூறியிருக்கிறார்.
ஜே.வி.நாதன் தனது எழுத்தின் வழியே மௌனியை நம் கண்முன்னே கொண்டுவந்து காட்டுகிறார். நாமும் மௌனி அருகே அமர்ந்து உரையாடுவது போலவும் உடன் நடந்து செல்வது போலவும் நெருக்கமாக எழுதப்பட்டிருப்பதே இந்த நூலின் சிறப்பு.
மௌனியின் கதைகள் புரிவதில்லைஎன்பவர்கள் ஒருமுறை இதைப் படித்தால் மௌனியைப் புரிந்துகொள்வதோடு, அவரது கதைகளையும் புரிந்துகொள்ள முடியும்.
மௌனி: தமிழின் வசீகரக் கனவு

தமிழில் பிற எழுத்தாளர்கள் மொழியின் எல்லைக்குள் நின்றபடி, மொழியின் சாத்தியங்களைப் பயன்படுத்தி மொழியின் எல்லை வரை சென்றிருக்கிறார்கள்.
இதில் பற்பல சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். ஆனால், மௌனி தொடங்கிய இடமே மொழியின் எல்லைதான். பிரபஞ்சத்தின் விளிம்பில் நின்றுகொண்டு அப்பால் எட்டிப் பார்க்க முயல்வதுபோல்.
மொழியை மீறிச் செல்ல முயன்றவர் என்று மட்டும் மௌனியை வர்ணித்தால் அது பெரும் பிழை. அனுபவத்தையும் சிந்தனையையும் மீற முயன்றவர் அவர். அதனால்தான், ‘காதலின் வசீகரக் கடுமை’, ‘எவற்றின் நடமாடும் நிழல்கள்’, ‘வாழ்க்கை? ஒரு உன்னத மனவெழுச்சிபோன்ற அற்புதங்களெல்லாம் சாத்தியமாகியிருக்கின்றன.
நினைவுச் சுவடுகதையில் ஒரு பெண்ணைப் பின்தொடர்ந்து சென்று ஒரு வீட்டு வாசலில் நிற்கிறான் நாயகன் சேகரன். வீட்டின் வாயிற்புறம் இருட்டாக இருக்கிறது அப்போதுசேகரா- வரக் கூடாதாஎன்ற அசரீரியான சப்தம் கேட்கிறது. அந்த சப்தம் எப்படித் தோன்றியிருக்கக்கூடும் என்று மௌனி சொல்வது பேரற்புதம்: ‘எத்தனையோ காலம் மௌனமாக நின்ற அந்த இருட்டு அப்போது ஒரு உணர்ச்சி வேகத்தில் சப்தமாக உருவாகியது போலும்!’
கால-வெளி
மௌனியின் தருணங்கள் காலமும் இடமும் முயங்கியவை, ஐன்ஸ்டைன் சொன்ன கால-வெளி போன்று. நகுலன் கவிதையில் வருவதுபோலக் காலம் இடமாகத் தெரியும் தருணங்கள் அவை.
மௌனியின் கதைகளைப் படிப்பவர் கனவுலகத்தில் நடமாடுவதுபோல உணர்வார். கனவைப் போன்று தர்க்கத் துக்குள் அகப்படாத சம்பவங்கள் மௌனியின் கதைகளில் நிறைய வரும். நாம் கனவு காணும்போது ஒரு சாதனம் நம் கனவை அப்படியே மொழி வடிவில் பிரதியெடுத்தால் எப்படி இருக்கும்?
அதைப் போன்றவைதான் மௌனியின் கதைகளும். ஆனால் வெறுமனே சம்பவங்களைக் குலைத் துப் போடுவதாலோ கால-வெளி பின்னணியைச் சரித்துவிடுவதாலோ மட்டும் மௌனி இதையெல்லாம் சாதிக்கவில்லை. அர்த்தமற்ற சம்பவங் களின் மங்கிய பின்புலத்தில் அவற்றை ஒன்றுசேர்த்து ஒரு சரடுபோல் ஓடும் மொழிதான் அவரது சாதனைக்குப் பிரதானக் காரணம். அர்த்தமின்மையின் கடலிலிருந்து திடீர் திடீரென்று தெறித்து விழும் மொழியின் அந்தத் தெறிப்புகள் அபாரமானவை.
பிரபஞ்ச ஒருமை
மொழியின் மீறல்கள், சிதைந்த கால-வெளி ஆகிய எல்லாவற்றுக்கும் அடியில் பிரபஞ்ச ஒருமையைப் பற்றிய ஆழ்ந்த தேடல் ஒன்று மௌனியின் கதைகளில் புதைந்திருக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தின் எல்லா சப்தங்களையும் ஆழ்ந்த நிசப்தம் ஒன்றின் வெளிப்பாடுகளாகத்தான் அவர் காண்கிறார்:
எவ்வித உலக சப்தமும் பிரபஞ்ச பயங்கர நிசப்தத்தைத்தான் உணர்த்தியது.’ ‘மாபெரும் காவியம்கதையில் தனது காவியம் அழிந்ததில் ஆனந்தப்படும் கிட்டு இப்படி உணர்கிறான்: “மலரினின்றும் பிரிந்து வதங்கிய இதழை விட்டுச் சென்ற மணத்தை எங்கும் உணர்ந்தான். எதற்காக மலரையும் மணத்தையும்அவன்ஒன்று சேர்த்தான். கேவலம் இது தொழில் செய்வதில் கொள்ளும் ஆனந்தத்திற்காகவா?’ இதேபோல், ‘பிரபஞ்ச கானம்சிறுகதையிலும், பிரபஞ்சமும், பிரபஞ்சத்தின் சப்தங்களும் காட்சிகளும் ஏதோ குறைவுபட்டவைபோல் தோன்றுகின்றன. காரணம்?
அவள்தான் சங்கீதம்; பிரபஞ்ச கானம் அவளுக்குள் அடைபட்டுவிட்டதுஅவளுடைய சங்கீதம் வெளி விளக்கம் கொள்ளாததால் இயற்கையே ஒரு வகையில் குறைவுபட்டது போலவும் வெளியில் மிதப்பது வெறும் வறட்டுச் சப்தம்தான் என்றும் எண்ணலானான்.”
பிரபஞ்சமும் தன்னிடம் குறைவு பட்ட ஒன்றை அவளிடமிருந்து எடுத்துக் கொள்ளத் துடிக்கிறது. அவளிடம் அடைபட்டுக்கிடக்கும் பிரபஞ்சத்தின் அம்சமும் ஆரம்பத்திலிருந்து வெளிப்படத் துடிக்கிறது. இறுதியில் பாடிப்பாடி பாடலின் முடிவில் உயிரை விடு கிறாள். பிரபஞ்சத்திடம் குறைவுபட்ட அம்சம் மறுபடியும் பிரபஞ்சத்தோடு இணைந்து கொண்டது. அப்போதுஉலகப் பேரிரைச் சல் ஒரு உன்னத சங்கீதமாக ஒலித்தது’.
பிரபஞ்சமும் பிரபஞ்ச அம்சமும் ஒன்றுதான் எனினும் ஏதோ ஒரு விஷயம் அவற்றைப் பிரிக்கிறது. பிறகு ஒன்றை யொன்று அடைய முயல்கின்றன. இதன் நிழலாட்டம்தான் வாழ்க்கையோ என்று மௌனி கேள்வி எழுப்பிவிட்டுச் செல்கிறார்.
நீண்ட முத்தத்தில் வாழ்க்கை
மௌனி கதைகளில் வரும் உறவுகள் விசித்திரமானவை. வழக்கமான உறவு களில்கூட அசாதாரணமான பிணைப்பை ஏற்படுத்திவிடுவார் மௌனி. ‘சிகிச்சைகதை அற்புதமான அன்பைச் சுமந்த கதை. சாகும் தறுவாயில் இருக்கும் மனைவி (கமலா) ‘தான் இறப்பினும் தன் ஜீவிய ஞாபகத்தை ஒரே பார்வை யில் பதித்துச் செல்ல முயலுவது போன்றுதன் கணவனைப் (சீனு) பார்த்துக்கொண்டிருப்பாள்.
அவள் இறந்த பின் தன் வாழ்க்கை எப்படிக் கழியும் என்று அரற்றிக்கொண்டிருந்த கணவனை அருகில் வரச் சொல்லி ஒரு முத்தம் அளித்துவிட்டு இப்படிச் சொல்வாள்:
இப்போது தெரிந்ததா உங்களுக்குப் பின்னால் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்குமென்று?” ஒரு நீண்ட முத்தத்தில் கழியும் போலும்.’ இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் மருத்துவர் கோமதி ஆண்களையும் திருமணத்தையும் வெறுப்பவர். ஆனால், அவர் மனதிலும் ஒரு சலனம் ஏற்படுகிறது.
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இவ்வளவு அன்பு இருக்க முடியுமா என்று தோன்றுகிறது. பிறகு, சீனுவைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்ளும் கோமதி இறுதியில் சொல்கிறாள்: “உங்களைத் தனியாக உங்களுக்காகவே நான் உங்களை மணக்கவில்லை. என்னுடைய மனதைக் கவர்ந்து ஆட்கொண்ட கமலாவின் நினைவு ததும்பி இருக்கும் உங்களைத்தான் நான் காதலித்து மணம் செய்துகொண்டேன்.
ஒருவரின் நினைவு எப்போதும் ததும்பி இருக்கும் மனது எவ்வளவு களங்கமில்லாத, அற்புதமான மனது! அதற்காகவே அந்த மனதைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்ளும் மனது இன்னும் எவ்வளவு அற்புதமானது! அந்த உறவுதான் எவ்வளவு ஆனந்த வசீகரம்!
ஒருவரில் இன்னொருவரைக் காண்பது, ஒருவரின் இருத்தல் இன்னொருவரின் இருத்தலை (அந்த இன்னொருவர் இறந்துவிட்டாலும்கூட) நிஜப்படுத்திக்கொண்டிருப்பது, நீட்டித்துக்கொண்டிருப்பது என்பன தொடர்ந்து மௌனியின் கதைகளில் (மலைக்கோட்டை, பிரக்ஞை வெளியில், நினைவுச் சுழல், எங்கிருந்தோ வந்தான்) வரும்.
மௌனியின் சிறுகதைகளைப் பற்றிச் சொல்லும்போதுதமிழர்கள் பாக்கியசாலிகள்என்றார் .நா.சு. தமிழ் மொழியின் சாத்தியங்கள் எவையெவை என்பதை ஒருவர் அறிய விரும்பினால் மௌனியின் கதைகளைப் படித்தே ஆக வேண்டும். ஒருவர் மகத்தான எழுத்தாளராகக் கொண்டாடப்படுவதற்கு 24 கதைகள் மட்டுமே போதுமா என்று மௌனியைப் படிக்காத ஒருவர் கேட்கலாம்.
ஆனால், அவரே மௌனியை ஊன்றிப் படிப்பாரெனில் ஒரு வாழ்க்கைக்கு இந்தக் கதைகள் மட்டுமே போதுமானவை என்றும் சொல்லத் தோன்றும். ஆம், மௌனியின் கதைகளைப் படிப்பதென்பது வாழ்க்கையை நீண்ட முத்த மொன்றில் கழிப்பதுபோலத்தான்.
தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் மௌனி
முனைவர் சி.சேதுராமன்
 முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.E. Mail: Malar.sethu@gmail.com
தமிழிலக்கிய உலகில் அதிகமாக எழுதி புகழ் பெற்றவர்களும் உண்டு. குறைந்தளவே எழுதி புகழ்பெற்றவர்களும் உண்டு. சங்க இலக்கியமான புறநானூற்றில்யாதும் ஊரே யாவரும் கேளிர்என்ற ஒரே ஒரு பாடலை மட்டும் எழுதி மிகுந்த புகழைப் பெற்றவர் கணியன் பூங்குன்றனார். திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள் தான் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒருலட்சம் கவிதைகளுக்கும் மேல் எழுதிப் புகழ் பெற்றவராவார். இதனைப் போன்றே தமிழ்ச் சிறுகதை உலகில் மிகக் குறைந்தளவே எழுதி நிலைத்த புகழைப் பெற்றவர் மௌனி ஆவார். மௌனி அவர்கள் இருபத்துநான்கு கதைகள் மட்டுமே எழுதி உள்ளார்.  அவை அனைத்தும் மனித மனங்களை எக்காலத்திலும் பிணிக்கின்ற வகையில் அமைந்துள்ளன.
இத்தகைய சிறப்புடைய மௌனி அவர்கள் 1907-ஆம் ஆண்டு ஜுலைத் திங்கள் 27-ஆம் நாள் சிதம்பரத்தில் பிறந்தார். அவரது இயற்பெயர் மணி என்பதாகும். இவர் தமது சிறுகதைகளைமௌனிஎன்ற புனைப் பெயரில் எழுதினார்.
தமிழின் தனித்துவமான எழுத்தாளரான மௌனி மணிக்கொடி இதழில் எழுதத் துவங்கி, கசடதபற இதழ் வரை கதைகள் எழுதியவர். கணிதத்தில் பட்டம் பெற்ற இவர் இசையிலும் மெய்யியலிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் படித்ததெல்லாம் ஆங்கிலம்தான். கல்லூரியில் தமிழ் முறையாகப் படித்ததில்லை. ஆங்கில இலக்கியம் நிறையப் படித்திருக்கிறார். சிதம்பரத்தில் மௌனியை  மில் மணிஐயர் என்று கூறினால் மட்டுமே பலரும் அவரைப்பற்றிக் கூறுவர்.
மௌனியின் உலகம் தனித்துவமானது, தமிழ் இலக்கியத்துக்கு அவர் பங்களிப்பு போல. எஸ். மணியாக அவர் உயர் கணிதத்தின், தத்துவ விசார பயின்ற மாணவர். கர்னாடக சங்கீத ரசிகர். எப்போதாவது தனது மகிழ்ச்சிக்கு வயலின் வாசிப்பவர். இலக்கியத்தையும் விட, சங்கீதத்திலும் தத்துவங்களிலும் அவருக்கு ழ்ந்த ஈடுபாடு கொண்டவர் அவர். எஃப். .ஹெச் ப்ராட்லியின் யுppநயசயnஉந யனெ சுநயடவைல அவர் திரும்பத் திரும்ப விரும்பிப் படிக்கும் புத்தகம். இலக்கியத்தில் ஃப்ரான்ஸ் காஃப்கா, ஜோர்ஜ் லூயி போர்ஹே,ராபர்ட் ம்யூசீல் போன்றோரின் படைப்புகள் அவர் மிகவும் ரசித்தவை.
1959ஆம் ஆண்டு மௌனியின் முதல் சிறுகதைத் தொகுப்பு ஹஅழியாச்சுடர்வெளியானது. பின்பு 1967ஆம் ஆண்டு ஹமௌனி கதைகள்என்ற தலைப்பில் ஹக்ரியாபதிப்பகம் ஒரு தொகுப்பையும் 1978ஆம் ஆண்டு மற்றொரு தொகுப்பையும் வெளியிட்டது. 1991ஆம் ஆண்டு ஹபீக்காக்பதிப்பகம் மூலமாக கி.. சச்சிதானந்தம் மௌனியின் எல்லாக் கதைகளும் அடங்கிய ஹமௌனி கதைகள்புத்தகத்தைக் கொண்டுவந்தார். இப்புத்தகத்தில் 1968ல் ஆனந்த விகடனில் மௌனி எழுதிய ஹசெம்மங்குடி _ தன் ஊர் தேடல்கட்டுரையும் 1965 பி.எஸ். ராமையா மணிவிழா மலருக்காக எழுதப்பட்ட ஹஎனக்குப் பெயர் வைத்தவர்கட்டுரையும் இடம்பெற்றது. அதன் பின்னர் இன்றுவரை மௌனி கதைகள் மறுபதிப்பு காணவில்லை.
தன்னுடைய கதைகள் எதற்கும் தான் தலைப்பு வைத்ததில்லை என்றும் எல்லாம் பத்திரிகைக்காரர்களே வைத்த தலைப்புக்கள் என்றும் மௌனி குறிப்பிடுகிறார். தீபத்தில் வெளிவந்த அவரது நேர்காணலிலும் இவ்வாறே குறிப்பிட்டுள்ளார் என்பது நோக்கத்தக்கது. அவருடைய பெரும்பாலான கதைகளுக்குப் பி. எஸ். ராமையாவே தலைப்புக் கொடுத்துப் பிரசுரித்ததாக அறிஞர் பலர் குறிப்பிடுகின்றனர். இதனை,“ 1965பி.எஸ். ராமையா மணிவிழா மலருக்காக எழுதப்பட்ட ஹஎனக்குப் பெயர் வைத்தவர்என்ற கட்டுரையில் மௌனி குறிப்பிடுவது உறுதிப்படுத்துவதாக உள்ளது.
மௌனியின் சிறுகதைகள் பெரும்பாலும் ஒரு புதினத்தின் நடுவிலிருக்கும் ஒரு பகுதியின் தோற்றத்தையே தருவதாக அமைகிறது. பெரிய சூழ்நிலை மாற்றங்களோ, எதிர்பாராத முடிவோ திருப்பமோ நாடகத்தன்மை வாய்ந்த  முடிவோ அவரது சிறுகதைகளில் இருப்பதில்லை.  மௌனியின் கதைமாந்தர்கள் எந்த ஒரு நாடகத் தன்மையோ, தலைமைத் தன்மையோ கொள்ளாமல், சராசரி உணர்வுகளுடன், எல்லா மனிதர்களுக்கும் ஏற்படும் மன உணர்ச்சிகளுடன் தான் இருக்கின்றனர் என்பது நோக்கத்தக்கது.
மௌனியின் கதைகளில் பெரும்பாலும் நிறைவேறாத காதலும் மரணமும் முக்கிய அனுபவமாக தொடர்ந்து வருகிறது. காதல், மரணம் இரண்டும் ஒன்றோடு ஒன்று ஏதோவொரு பிரிக்க முடியாத உறவு கொண்டிருக்கிறது. மரணத்தைக் கடந்து செல்வதும், அதன் தாக்கத்தால் எழுந்த மனஉணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதிலும் மௌனி அதிக அக்கறை கொள்கிறார் எனலாம். அவரது தொடக்காலக் கதைகளில் கூட வழக்கமாகக் கதை கூறும் முறை என்பது கிடையாது.  இதனால் மற்ற எழுத்தாளர்கள் மௌனியை சித்தரைப் போன்றே இவரைக் கருதினார்கள். மௌனி தத்துவார்த்தமாகவே எழுதினார்.
இதற்குக் காரணம் அவரது வாழ்க்கையில் அவருக்கு ஏற்பட்ட மனதைக் கலங்கடிக்கும் வகையில் நடந்த இழப்புகளே காரணம் எனலாம். இதனால் ஒரு உள்ளாந்த சோகம் அவரைக் கவிந்து கொண்டிருந்தது என்பது நோக்கத்தக்கது. ஏனெனில் அவரது நான்கு மகன்களில் ஒருவரைத் தவிர மற்றவர்களின் வாழ்க்கை மிக மோசமாகவும் அதிகத் துன்பத்தைத் தருவதாகவும் அமைந்துவிட்டதே காரணம். மௌனியின் இரண்டு மகன்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் இறந்து விட்டார்கள். இன்னொருவர் தத்துவத்தில் எம்.. படித்து விட்டு மனக்கோளாறோடு அவருடன் அவரது வீட்டில் இருந்தார். இத்தகைய சுமக்க இயலாத சோக உணர்வுகளுடன் அவர் வாழ்ந்ததால்தான் அவர் எழுதி கதைகள் தத்துவார்த்தமாக அமைந்தன.
மௌனியின் சிறுகதைகள் அனைத்தும் 1936, 1937-ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.1960-ஆம் ஆண்டுகளில் மௌனி தான் எழுதுவதைப் பெரும்பாலும் நிறுத்திவிட்டார் எனலாம். ஏனெனில் அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட அவல அனுபவமே இதற்குக் காரணம் என்றும் அறிஞர்கள் கூறுவது நோக்கத்தக்கது.
வாழ்க்கையில் நடக்கும் பலவிதமான இழப்புகள் மனிதனுக்கு மன வலியை அதிகம் ஏற்படுத்துவதுடன் மனிதனது வாழ்க்கை சிதலமடையவும் காரணமாக அமைகின்றன. இதனால் மனிதனின் மனம் பக்குவமடைவதும் உண்டு. மனிதன் சித்தர்களின் நிலையை அடைவதும் உண்டு. மௌனி சித்தர்களின் நிலையை அடைந்தார். இதனை, “தமிழ் மரபுக்கும் போக்குக்கும் புதிதாகவும் சிறப்பாகவும் வழிவகுத்த்வர் ஒருவரை சொல்ல வேண்டுமென்றால் மௌனி என்ற புனைப்பெயரில் எழுதி வருபவரைச் சொல்ல வேண்டும். அவரைத் தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் என்று சொல்ல வேண்டும். கற்பனையின் எல்லைக்கோட்டில் நின்று வார்த்தைக்குள் அடைபட மறுக்கும் கருத்துக்களை மடக்கிக் கொண்டு வரக்கூடியவர் அவர் ஒருவரேஎன்ற புதுமைப்பித்தனின் கூற்று மெய்ப்பிப்பதாக அமைந்துள்ளது.
புதுமைப்பித்தன் கூறிய தமிழ்ச்சிறுகதையின் திருமூலர் என்ற பெயரே மௌனிக்கு சிறுகதை உலகில் என்றும் நிலைத்து நின்றுவிட்டது எனலாம். மௌனி தமது சிறுகதைகளால் பலரின் மனதையும் கவர்ந்தார். ஒருமுறை ஜெயகாந்தன் அவர்களிடம் தங்களுக்குப் பிடித்தமான எழுத்தாளர் ஒருவரைக் குறிப்பிடவும் என்று நேர்காணலில் ஒருவர் கேட்டபோது, அவர் தனக்குப் பிடித்த எழுத்தாளர் மௌனி  என்று குறிப்பிட்டுள்ளார். அதுபோன்றே அவருக்குப் பிடித்தமான சிறந்த சிறுகதை ஒன்றைத் தேர்வு செய்யுமாறு கேட்டபோது அவர் மௌனியின் சிறுகதையைத் தேர்வு செய்த்தாகவும் அறிஞர் திலீப்குமார் தமது நூலில் குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது.
. நா. சுப்ரமணியம் 1959-ஆம் ஆண்டில் தாம் எழுதிய கட்டுரை  ஒன்றில், “ஒதுங்கி நின்று ஒரு குறிப்பிட்ட கோணத்தில் நோக்கிய பூராவையும் கனமான விஷயத்தை ஏற்க மறுக்கிற மெலிந்த வார்த்தைகளில் சொல்லி விடுகிற காரியத்தை மௌனி சாதித்திருக்கிறார். இந்த அளவுக்கு இந்த சாதனையைச் செய்து வெற்றி பெற்றவர்கள் என்று இன்றைய தமிழ் சிறுகதையில் வேறு ஒருவரையும் சொல்லமுடியாது. அவர் நடையும் நோக்கும் பூரணமானவை. இந்த அம்சம் சிறந்தது தனிப்பட்டது என்று பிரித்தெடுக்க முடியாதுஎன்று குறிப்பிடுவது மிகவும் பொருத்தமான ஆய்வுரையாக அமைந்துள்ளது எனலாம்.
இவ்வாறு அனைவரையும் தமது எழுத்துக்களால் கவர்ந்தவரும், சிறுகதையின் திருமூலர் என்று அனைவராலும் புகழப்பட்டவருமாகிய   மௌனி 1985-ஆம் ஆண்டு ஜுன் 6-ஆம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்தார். அவர் மறைந்தாலும் அவரது கதைகள் என்றும் நிலைத்து நின்று தமிழ்ச் சிறுகதை உலகில் அவரது பெயரைக் கூறிக்கொண்டே இருக்கும்.
மௌனி தாத்தா ஒரு எழுத்தாளரா?

புதுமைப்பித்தன் நிகழ்ச்சியில் ஜெயலலிதா ஏன் பங்கேற்கவில்லை?’ கட்டுரை படித்தேன். நம் சமூகம் படைப்பாளிகளை அவரவர் காலத்தில் புறக்கணிப்பது தொடர்பாக மேலும் சிலவற்றைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.
காந்தி சென்னைக்கு வந்தபோது பாரதி அவரைச் சந்திக்கிறார். அப்போது உடனிருந்த ராஜாஜியிடம் காந்தி சொல்கிறார், “இவர் உங்கள் மொழியின் சொத்து. இவரைக் கவனமாகப் பராமரியுங்கள்!”
இவ்வளவுக்கும் பாரதி அவரிடம் பேசியது ஒரே வாக்கியம். காந்திக்கு ஒரு இலக்கிய மேதையைக் கண்டுகொள்ளும் உள்ளுணர்வு இருந்தது. ஏனென்றால், அவர் டால்ஸ்டாய், ஹென்றி டேவிட் தோரோ, தாகூர் போன்ற மேதைகளோடு உறவாடியவர். தாகூரை குருதேவ் என்று அழைத்தார். ஆனால், பாரதி அவர் காலத்தில் வாழ்ந்த முக்கியஸ்தர்களால் அப்படிக் கவனிக்கப்பட்டாரா? .வே.சாமிநாத அய்யரே பாரதியைப் பற்றி ஒரு வார்த்தை எழுதவில்லை. புதுமைப்பித்தனின்சாப விமோசனம்கதைக்காக ராஜாஜி அவரைத் தாக்கி எழுதியதோடு அல்லாமல், அவருக்கு அறிவுரையெல்லாம் சொல்லி எழுதினார். இவை தனிப்பட்ட மனிதர்களின் தவறு அல்ல. எழுத்தாளர்களைப் பற்றி அறிந்துகொள்ளாத ஒரு சமூகத்தின் அவலம்.
அடிப்படையில் எழுத்தாளர்களுக்குத் தமிழ்ச் சமூகத்தில் எந்த அடையாளமும் இல்லை. நம் பக்கத்து மாநிலமான கேரளத்தில் ஒரு எழுத்தாளருக்கு அந்த மாநிலத்தின் உயர்ந்தபட்ச விருதைக் கொடுத்தது அரசு. அதை எப்படிக் கொடுத்தது? எழுத்தாளரின் வீடு தேடிப் போய்க் கொடுத்தார் மாநில முதல்வர். காரணம், எழுத்தாளன் என்றால் அங்கே ஆசான்! மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது நம் இந்திய மரபு. அப்படிப்பட்ட குரு ஸ்தானத்தில் இருப்பவர் எழுத்தாளர். தமிழ்நாட்டில் எப்படி இருக்கிறது நிலைமை?
எழுத்தாளர்களில் பல குழுக்கள் உண்டு. அதெல்லாம் அவர்களின் கொள்கை, கோட்பாடு சம்பந்தமானது. அவர்களுக்குள் பல கடுமையான கருத்து மோதல்களும் உண்டு. ஆனால், எல்லா குழுக்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட சிகர சாதனையாளர்கள் சிலர் இங்கே உண்டு. அசோகமித்திரன் நோபல் பரிசுக்குத் தகுதியானவர் என்று அநேகமாக எழுத்தாளர்கள் அனைவருமே எழுதிவிட்டார்கள். எழுதி என்ன பயன்? சமகாலத் தமிழ்ப் பொதுச் சமூகத்தில் அசோகமித்திரனை எத்தனை பேருக்குத் தெரியும்?
என்னுடைய நண்பர்களில் ஒருவர் ஸ்ரீராம். நாய்கள் நலம் பேணுவதில் நாங்கள் ஒன்று சேருவோம். நான் எழுதிக்கொண்டிருக்கும் தமிழ் இலக்கிய முன்னோடிகள் குறித்த கட்டுரைக்காக ஒருமுறை அவரோடு பேச வேண்டியிருந்தது. அவர் மௌனியின் பேரன். அப்போது குறுக்கிட்ட ஸ்ரீராமின் புதல்வி (பள்ளி மாணவி) “நம் தாத்தா ஒரு எழுத்தாளரா?” என்று கேட்டாள். மௌனி யார்? புதுமைப்பித்தனால் தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் என்று குறிப்பிடப்பட்டவர். இப்படிப்பட்ட சூழலுக்கு அந்தச் சிறுமியை நான் குறைகாண முடியாது. ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகமும் இந்தச் சூழலுக்காகப் பொறுப்பேற்க வேண்டும்!
புனைவு என்னும் புதிர்: போலிகளைப் பகடிசெய்யும் மௌனி

மெளனி பொதுவாக மனவெளி மனிதராகவே பார்க்கப்படுகிறார். இவர் பெயரைக் கேட்டதுமே புரியாது என்னும் எதிர்மறை எண்ணத்துடன் ஒதுக்கி ஒதுங்கிவிடுபவர்களே ஏராளம். ஆனால், மெளனியிடம் புரியாமல் போக என்ன இருக்கிறது, மெத்தப் படித்த பண்டிதர் போல புரியாத வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதி வைத்துள்ளாரா? ஒவ்வொரு வார்த்தையும் புரிகிறது. ஒவ்வொரு வாக்கியமும் புரியும்படியாகவே உள்ளது. ஒவ்வொரு பத்தியும் புரிகிறது. ஆனால் ஒட்டுமொத்தமாகக் கதைதான் புரியவில்லை.
முப்பதுகளிலேயேகதைஎன்கிற அம்சத்தை நீக்கிவிட்டுக் கதை எழுத முயன்ற முன்மாதிரியற்ற முன்னோடி மெளனி. அன்றாட நிகழ்வுகளின் வழியாக மனித வாழ்க்கையை அவர்பார்த்த விதம்இன்றைக்கும் புதிதாக இருப்பதுதான் படித்தவுடன் புரியாதது போன்ற பிரமையை உண்டாக்குகிறது.
மேடை போட்டு மைக் வைத்து ஒலிபெருக்கியில் செய்தால்தான் சமூக விமர்சனம் என்றில்லை என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு இந்தக் கதை. இது வெளியான வருடம் 1938. சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் இருந்த காலகட்டம். தேசபக்தர்கள் என வெளிப்படையாகப் பிரகடனப்படுத்திக்கொண்ட எழுத்தாளர்களால் நடத்தப்பட்டமணிக்கொடிபத்திரிகையில் வெளியான கதை. இதை வெளியிட்டமணிக்கொடியின் சகிப்புத்தன்மையை இன்றுகூடக் காண்பது அபூர்வம்.
சமூக விழிப்புணர்வுடன் சாட்டையைச் சுழற்றிச் சமூக விமர்சனம் செய்த புதுமைப்பித்தன்கூட சுதந்திரப் போராட்டத்தைப் பின்னணியாக வைத்துப் பெரிதாக எதையுமே எழுதவில்லை என்பது அவரிடம் சிலருக்கு இருக்கும் குறை. ஆனால் அன்றைய சமுதாயத்தின் அத்தனை பிரதிபலிப்பும் அவர் கதைகளில் விரவிக் கிடப்பதைப் பார்க்கலாம். எதை எப்படி எழுத வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் இறுதி உரிமை எழுத்தாளனுடையது.
புதுமைப்பித்தனைப் போலவே, ஆனால், சாட்டை சவுக்கைச் சொடுக்காமல், அமைதியாய், தேச பக்தியின் பெயரால் போலித்தனம் எப்படி விரவிக் கிடந்தது என்பதைப் பகடி செய்யும் கதை இது. மெளனியிடமிருந்து இப்படி ஒரு கதை என்பது இலக்கியவாதிகளுக்கே சற்று அதிர்ச்சிகரமானதுதான்.
கதையின் இரண்டாவது பத்தியிலேயே, “அநேகமாக ஊரின்பொறுக்கிகளை’ (பொறுக்கி எடுத்த பிரமுகர்கள்)” என்று எழுதுகிறார்.
கதை சொல்லியின் நெருங்கிய நண்பன், அந்த ஊரில் பெரிய மனிதர்கள் பலருக்கும் வணக்கம் வைக்கும் அளவுக்குக் கொஞ்சம் பிரபலமானவன். தெருவில் யாராவது யாரையாவது கைதட்டிக் கூப்பிடுவது நாகரிகமில்லை என்று எண்ணுகிற அளவுக்கு மத்தியதர வர்க்க கனவான். கையில் கிடைத்த உடையான சில்க் சட்டையை அணிந்து வெளியில் செல்கிறான். யாரோ ஒருநாட்டுப்புறத்தான்கைதட்டி இவனை அழைக்கிறான். சில்க் சட்டை போட்டிருப்பார் என்று அடையாளத்தைச் சொல்லி அவரிடம் அந்தக் கடிதத்தைக் கொடு என்று ரயிலில் ஒருவர் கொடுத்தார் எனச் சொல்லி, சில்க் சட்டை போட்டிருக்கும் இவனிடம் கொடுக்கிறான். அந்த கவரில் இருக்கும் முகவரி அவனுடையதன்று. முகவரிக்கு உரியவர் சமூக அந்தஸ்துள்ள வக்கீல். எப்போதும் சில்க் சட்டை போடுபவர் என்கிற அடையாளம் கொண்டவர். ஆனால் அன்று இவனைத் தவிர ஊரில் எவருமே சில்க் சட்டை போட்டிருக்கவில்லை. காரணம் ஊர் மைதானத்தில் அன்று நடந்துகொண்டிருக்கும் கூட்டம். கூட்டத்துக்கு வந்திருப்பவரோ முக்கியப் பிரமுகரானஜவஹர்’. எனவே ஊரே சீருடை போல் கதராடை அணிந்திருக்கிறது. இதுதான் இந்தமாறாட்டம்எழுதப்படுவதற்கான காரணம். இதில் இன்னும் சிறப்பு, கதையின் இறுதிப் பகுதி.
மெளனியிடம் வளவளப்பு எனும் பேச்சுக்கே இடம் கிடையாது. எழுதிய கதையைப் பலமுறை திரும்ப எழுதி திருத்தி எழுதி கவனமாகச் செப்பனிடுபவர் அவர்.
கதையின் பாத்திரம், கைக்குக் கிடைத்ததை எடுத்து அணிந்தது என்கிற தகவல் சும்மா சொல்லப்படவில்லை. அன்றைய தினம், ஊரே யூனிபார்ம் போல் கதராடை அணிந்திருப்பதுடன் இதைக் கோத்துப் படித்துப் பாருங்கள்.
எது அநாகரிகம்? யாரோ யாரிடமோ கொடுக்கச் சொல்லி, ரயிலில் கொடுத்த கவரை, உரியவரிடம் சேர்த்துவிட வேண்டும் என கர்ம சிரத்தையாய் முயலும்பட்டிக்காட்டான்தெருவில் கைதட்டி அழைப்பதா, அல்லது என்றைக்கும் சில்க் அணியும் ஷோக்குப் பேர்வழியான ஊரின் பெரிய வக்கீல், ஜவஹருடன் மேடையில் அமர்வதற்காக அன்று மட்டும் கதாராடை அணிவதா? பொதுவெளிப் போலி முகங்கள் மேடையில் தியாக தீபங்களாகக் காட்சியளிப்பது இன்றுவரை தொடரும் கதைதானே.
எதிலும் புனிதத்தைத் தூக்கித் தூர வைத்துவிட்டு அதன் மையத்தை ஊடுருவிப் பார்ப்பவனே உண்மையான கலைஞன். ஆகவேதான் அவனால் காலத்தை வென்று நிற்க முடிகிறது.

No comments:

Post a Comment

Ulagam Ippo Engo poguthu * Azhagar Malai -Ilaiyaraaja

https://www.youtube.com/watch?v=cs3zLu6eccg