Monday, February 22, 2021

சமயவேல்

கவிஞர் சமயவேல் சமயவேல் (பிறப்பு பிப்ருவரி 04, 1957) சமகாலத் தமிழ்க் கவிதையின் முக்கியமான கவிஞர்களில் ஒருவர். எண்பதுகளில் இறுதிப்பகுதியில் ஒரு முக்கியமான கவிஞராக உருவாகிய இவர் தமிழில் Plain Poetryயை முதலில் அறிமுகப்படுத்தியவர் ஆகிறார். வாழ்வியல் நெருக்கடிகளை, இந்திய கிராமிய சிதைவுகளின் வழியாக தமிழ் அழகியலோடு கவிதைகளாக மாற்றினார் சமயவேல். 1. வாழ்க்கைக் குறிப்புகள் ________________________________________ கவிஞர் சமயவேல் தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகில் நால்வழிச் சாலையின் இடப்புறம் உள்ள வெம்பூர் என்னும் கிராமத்தில் பிறந்தார். அவரது அம்மா திருமதி க.முனியம்மாள், விளாத்திகுளம் அருகில் உள்ள வேலிடுபட்டி கிராமத்தில் உமையன் என்னும் புகழ் பெற்ற சேவற்கட்டு வீரரின் மகளாவார். அப்பா திரு ச.கருப்பசாமி. அந்தப் பகுதியின் மிக நுட்பமான மரச் செதுக்கோவியக் கலைஞராக இருந்திருக்கிறார். 04.02.1957ல் பிறந்த இவர் வெம்பூரில் உள்ள பஞ்சாயத்து உயர்தொடக்கப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயின்றார். பிறகு வெம்பூருக்கு அருகில் உள்ள புதூரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் படிப்பைத் தொடர்ந்தார். பத்தாம் வகுப்பில் இருக்கும் போது "ஆலமரம் தன்வரலாறு கூறுதல்" என்னும் தலைப்பில் இவர் எழுதிய கட்டுரை தமிழாசிரியர்களால் பெரிதும் பாராட்டப்பட்டதால் இலக்கியம் பால் இவரது கவனம் திரும்பியது. புதூரில் உள்ள நூலகத்திலும் பந்தல்குடி நூலகத்திலும் உள்ள நூல்களை வாசிக்க ஆரம்பித்தார். ஆரம்பப் பள்ளி தையலாசிரியர் திரு தேவசகாயம் என்பவரது வழி காட்டுதலின் படி தத்துவம் அரசியல் துறைகளின் ஆரம்பநிலை நூல்களைப் பயின்றார். 1972ல் S.S.L.C. தேர்வில் புதூர் பள்ளியின் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். தனது கல்லூரிப் படிப்பை மதுரை நாகமலை ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் தொடர்ந்தார். இளங்கலை கணிதம் பயின்றபோது அங்கு தமிழ் பேராசிரியர் திரு இ.சு.பாலசுந்தரம் அவர்கள் மூலம் நவீனத் தமிழ் இலக்கியம் பரிச்சயமானது. ஜெயகாந்தனிடம் தொடங்கி மௌனி வரையிலான வாசிப்பு பெருந்தாக்கத்தை உருவாக்கியது. "இளமதி" என்னும் கையெழுத்து இதழை நடத்தினார். சிற்றிதழ்களை வாசித்துவிட்டு இவரும் இவரது நண்பர் மற்றும் கல்லூரித் தோழர் ந.முருகேசபாண்டியுடன் சேர்ந்து கவிஞர் கலாப்ரியா, கி.ராஜநாராயணன், வண்ணதாசன் போன்ற படைப்பாளிகளை நேரில் சந்தித்து உரையாடி நவீனத் தமிழ் இலக்கிய நுட்பங்களைப் பயின்றார். பட்டப் படிப்பை முடித்த பிறகு சென்னைக்கு சென்ற இவர் சுதந்திர இதழாளராக பல இதழ்களுக்குப் பணியாற்றினார். பிறகு மத்திய அரசின் தபால் தந்தித் துறையில் தந்தி எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். துறைத் தேர்வுகள் மூலம் தொலை தொடர்புத்துறை பொறியாளராக பதவி உயர்வு பெற்றார். உப கோட்டப் பொறியாளராக ஒய்வு பெற்று தற்சமயம் தனது துணைவியார் திருமதி பேச்சியம்மாளுடன் மதுரையில் வசிக்கிறார். ஒரு மகளும் இரண்டு மகன்களும் நல்ல பணிகளில் வெளியூர்களில் இருக்கிறார்கள். கவிதைத் தொகுப்புகள் ________________________________________ 1. காற்றின் பாடல் (1987) 2. அகாலம் (1994) 3. தெற்கிலிருந்து சில கவிதைகள் (தொகை நூல்) 4. அரைக்கணத்தின் புத்தகம் (2007) 5. மின்னிப் புற்களும் மிதுக்கம் பழங்களும் (2010) 6. இனி நான் டைகர் இல்லை (2011) (சிறுகதைகள்) 7. பறவைகள் நிரம்பிய முன்னிரவு (2014) 8. >ஒரு ஆட்டுக்குட்டியின் பாடல் – சமயவேல் இந்த இரவு நான் அருந்திக் கொண்டிருப்பது எனக்குப் பிடித்த ரம் இல்லை வெறும் ஆப்பிள் ரஸம் தான் எனினும் இந்த இரவு தளும்பிக் கொண்டே இருக்கிறது நாம் நடந்து வரும் பொழுது எவ்வளவோ வாகனங்கள் நம்மைக் கடந்தன எவ்வளவோ நாம் பார்த்துவிட்டோம் நாம் விவாதிப்பதற்கு ஒரு பொருளும் இல்லை நடந்த மரணங்களும் வரும் மரணங்களும் உறையச் செய்த நம் மெளனங்களின் இடைவெளிகளில் இந்த இரவு தளும்பிக் கொண்டே இருக்கிறது பக்கத்தில் ஆளுக்கொரு பானம் அருந்தியபடி சிரித்துக் கொண்டிருக்கும் இளம் முகங்களில் பறக்கும் சிட்டுக் குருவிகளை நாம் நன்கறிவோம் எல்லாவற்றையும் புரிந்து கொள்கிறோம் எல்லாவற்றையும் தாங்கிக் கொள்கிறோம் ஆப்பிள் ரஸத்தின் இரத்தம் போன்றதோர் நிறம் கோமியம் போன்றதோர் அதன் வாசம் எல்லாவற்றிற்குமான மாயத் திறவுகோலை ஏதோ ஒரு சாலைத் திருப்பத்தில் எப்பொழுதோ நாம் தூக்கி எறிந்து விட்டோம் நமது சிகரட்கள் நம்மை சுவாசிக்கும் நறுமணத்தில் இந்த இரவு நிறைந்து தளும்பிக் கொண்டே இருக்கிறது. (நண்பர் இராஜமார்த்தாண்டனுக்கு) ஒரு ஆட்டுக்குட்டியின் பாடல் ஒரு ஆட்டுக்குட்டியின் பாடல் கசாப்புக் கடையின் வெட்டுமரத்தோடு முடிந்துவிடும் என்று நீங்கள் வருத்தப்படவோ பகடி செய்யவோ வேண்டாம் ஓங்கிய அரிவாளின் கீழே தலையில் தண்ணீர் ஊற்றப்படும் பொழுது கூட மரணம் பற்றிய பிரக்ஞையற்று குலுக்கி எறிவோம் ஓர் உடல்மழையை; உள்ளக இடம்பெயர் மனித முகாம்கள் பக்கத்து நாட்டின் அகதி முகாம்கள் எல்லையோர தற்காலிகக் கொடுஞ் சிறைகள் விசாரணைக் கொட்டடிகள் வீட்டுக் காவல்கள் என்று வதைபடும் மனிதர்களை விட எத்தகு மேன்மையான வாழ்வுடன் நாங்கள் புல்வெளிகளில் அலைகிறோம் என்பதை நினைத்துப் பாருங்கள் எங்கள் மேய்ப்பர்கள் பெற்ற காசுக்காக நாங்கள் கொல்லப் படுவதில் ஒரு அறம் இருக்கிறது ஆனால் நீங்கள் எந்த அறமும் அற்று ஒருவரை யொருவர் கொல்வது பற்றி உங்களால் மே என்று கூட கத்த முடியாது எங்கள் கொலைகளின் கதறல்களுக்கும் உங்கள் கொலைகளின் கதறல்களுக்கும் நடுவில் ஒரு சிறு கிறுக்கலைக் கூட உங்களால் வரைய முடியாது. 2 இருமைகள் என்பது எதார்த்தம் எனில் அதில் ஒரு கை அள்ளி என் கண்களைக் கழுவுவேன் இரவு பகலோ, இறப்போ பிறப்போ இருமைகள் றெக்கைகளாக ஒரு பறவைக் கூட்டமாய் பழுப்பு வானில் பறந்து திரிவேன் மூன்றாம் நான்காம் அடுக்குகள் தேடி அதல பாதாளம் மூழ்கிப் பார்ப்பேன் இதுவும் அதுவும் கவ்வி முயங்கும் இடமோ பொழுதோ வெளியோ சிந்தும் இன்மையின் இனிமையை பருகி மகிழ்வேன் ஒரு சிறு ஆட்டுக் குட்டியல்ல நான் எல்லாப் புள்ளிகளிலும் இருக்க முடிகிற ஒரு முடிவிலி எனக்குள் சுழல்கிறது அதன் வெண்மணற் பரப்பில் கோபுரங்களும் மலைகளும் கடல்களும் நகரங்களும் ஆகாயமும் கூட சிப்பிகள் போலவும் நுரைச்செடிகள் போலவும் புதைந்து கிடக்கின்றன என் புல் வெளியில் மரணம் ஒரு சர்ப்பமென சரசரத்து வருகையில் நான் ஒரு நாகலிங்க மரமாவேன் என் கழுத்தைத் தழுவி ஆயிரம் நாகங்கள் பூக்களாய் தொங்கும் எங்கிலும் என்றென்றைக்கும் ஆனவன் நான். இப்பொழுதெல்லாம் அலுவலகத்தை விட மருத்துவ்மனை பிடித்திருக்கிறது வீட்டை விட அழுக்கு வீசும் விடுதி அறைகளில் விரும்பித் தங்குகிறேன். இசை அரங்குகளை விட சப்தங்கள் உயிர்ப்புடன் எழும் பேருந்து நிலையங்களில் வெகு நேரம் பராக்குப் பார்த்தபடி நிற்கிறேன் சாலைகளை விடுத்து பன்றிகள் அலையும் குறுக்குச் சந்துகளில் நடக்கிறேன் கட்டணக் கழிப்பிடங்களின் பேரழகு குறித்து வாசகர் கடிதம் எழுதுகிறேன் பூங்காக்களை விட பெரு மரங்கள் நிற்கிற மயானங்கள் அழகானவைகள் என்று சுவரொட்டிகள் ஒட்டுகிறேன் வெறும் மண்ணாலாகிய இந்த பூமியை விட மாய விண்வெளியே நிரந்தரம் என்று இப்பொழுதெல்லாம். ************ யதார்த்தம் என்பது சகிக்க முடியாத பொதுமனச் சிதைவு கவிஞர் சமயவேலுடன் ஒரு உரையாடல் உரையாடுபவர்: எஸ்.செந்தில்குமார். --------------------------------------------------------------------------------------------------------------------- கேள்வி 1 70, 80களில் சத்யஜித்ரே, ஷியாம்பெனகல், ரித்விக் கடக் ஆகியோரின் படங்களைப் பார்த்து அதன் தாக்கத்தில் உருவான சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் பலர் இருக்கிறார்கள். இப்போது எழுதுகிறவர்களில் பெரும்பாலும் தென் கொரியப்படத்தின் இயக்குநர் கிம்கிடுக்கின் படங்களைப் பார்ப்பதும் அதன் பாதிப்பில் தங்களது படைப்புகளை உருவாக்குவதிலும் முனைந்திருக்கிறார்கள். நீங்கள் தொடர்ந்து மாற்று மொழி சினிமாவின் பார்வையாளராக இருக்கிறீர்கள். சமகாலப் படைப்பாளிகளை தொடர்ந்து வாசித்து வருகிறீர்கள இது தலைமுறை இடைவெளி என்ற போதிலும் கிம்கிடுக்கின் பாதிப்பின் காரணம் என்னவாக இருக்கமுடியும்? பதில்: 70, 80களின் படைப்பாளிகளில் சிலர்மட்டுமேசத்யஜித்ரே, ஷியாம்பெனகல், ரித்விக்கடக், மற்றும் இன்னும் பல உலகஇயக்குனர்களின் படங்களைப் பார்த்தார்கள். சென்னை, திருச்சி, மதுரை என பலநகரங்களிலும் திரைபடக் கழகங்கள் அமைத்து உலகத் திரைப்படங்களைப்பார்த்தார்கள். தங்களது வாசிப்பு அனுபவங்களோடு அதையும் இணைத்துக்கொண்டார்கள். அவ்வளவுதான். படங்களின் தாக்கத்தில் யாரும் எழுதவில்லை. இப்பொழுது உலகப்படங்கள், குறுவட்டுக்களாகவும் எண்வட்டுக்களாகவும் டோர்ரன்ட், யூ ட்யூப் என எளிதாகக் கிடைத்தாலும் யாரும் அவைகளின் தாக்கத்தில்கதையோ கவிதையோ எழுதுவதாக சட்டென்று கூறிவிட முடியாது. தென்கொரிய இயக்குனர் கிம்கிடுக் எனக்கும் மிகப்பிடித்த இயக்குனர். சமகால இளையவர்களின் சமூக-உளவியல் மற்றும் பாலியல் சிக்கல்கள், வித்தியாசமான இசைவுடன் கூடியஅழகியல் காட்சிக் கோர்வைகளாக பார்வையாளர்களை அலைக்கழிக்கின்றன.சம்மர்,வின்டர்… படம் ஹெர்மன் ஹெஸ்ஸேவின் சித்தார்த்தா நாவலைப் போலஆன்மீகத் தேடலை, பாலியல் ரீதியாக அணுகும் அற்புதமான படம். 3-ஐர்ன்,டைம், தி போ, ப்ரீத், ட்ரீம் என பல படங்கள் எனக்குப் பிடித்தவை. உலகத்திரைப்பட விழாக்களில் முக்கியமான இயக்குனராக அங்கீகரிக்கப்பட்டாலும்கொரியாவில் சர்ச்சைக்குரியவராகவும், பெண்ணிய இயக்கங்களின் கண்டனத்துக்குஉரியவராகவும் கிம்கிடுக் இருந்திருக்கிறார். கிம்மின் 2013 படமான 'மொய்பியஸ்'படத்தில் ஆணுறுப்பைக் கடித்துத் துப்புகிற காட்சிகளைப் பார்த்து பலரும் அதிர்ச்சிஅடைந்தார்கள். எனது நண்பர் லஷ்மிசரவணக்குமார் ஒரு முழு நாவலையும்அந்தப்படம் மாதிரியே எழுத முயன்றிருக்கிறார். அந்த நாவல் களமான சென்னைமாநகரின் அடியுலகம், கிம்கிடுக் படத்தின் அடிஉலகத்தோடு ஒத்துப்போகிறது.மற்றபடி வேறுயாரும், இப்படி எழுதியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. கேள்வி 2 தொடர்ந்து இன்றைய நவீன கவிஞர்களுடன் நேரடியான உரையாடலும் அவர்களது தொகுப்புக்களை உடனுக்குடன் வாசிக்கவுமாக இருக்கிறீர்கள்.தற்போதைய நவீன தமிழ் கவிதையின் இருப்பிடம் என்னவாக உள்ளது? பதில்: 70, 80களின் இளம்படைப்பாளிகள் பலரும் தங்களது மூத்தபடைப்பாளிகளோடு நேரடியான உரையாடலில் இருந்தார்கள். கவிதை, நாவல்,சிறுகதைகள், அரசியல் சித்தாந்தங்கள், தத்துவம், வரலாறு, உளவியல் என்றுஎல்லாவற்றையும் வாசித்தார்கள். உலகத் திரைப்படங்களைப் பார்த்தார்கள். பலநாடகக் குழுக்களும், உலக அளவிலான நாடகவியல் பற்றிய உரையாடலும்இருந்தன. சென்னைக் கலைக்கல்லூரி ஓவியர்களோடு சேர்ந்து, ஓவியக்கண்காட்சிகளை எழுத்தாளர்கள் சுற்றிச் சுற்றி வந்தார்கள். ஆனால் இன்றுநிலைமை முற்றிலும் மாறிவிட்டது. கவிதை எழுதுபவர்கள் நாவல் வாசிப்பதில்லை.கதைக்காரர்கள் கவிஞர்களை இளக்காரமாகப் பேசுகிறார்கள். உலக அரசியல்மற்றும் தத்துவம்பற்றிய ஆழமான புரிதல்கள் இல்லை. தீவிரமான தளங்களுக்கு நகரமுடியவில்லை. புத்தாயிரத்தில் சுகிர்தராணி, இசை, இளங்கோ கிருஷ்ணன், கண்டராதித்தன்,ராணிதிலக், ஸ்ரீநேசன், லீனா மணிமேகலை என ஒரு பெரிய பட்டாளமே தமிழ்கவிதையுலகைக் கலக்கியது. ஆனால் அவர்களது தொடக்கத் தளத்திலிருந்து அடுத்ததளத்திற்கு நகர முடியாத ஒரு தேக்கம் வந்துவிட்டது. இவர்களுக்குப் பிறகு வந்தஇளம் கவிகளின் பட்டியல் இன்னும் பெரியது. பெரிதும் சமூக வலைத்தளங்கள்சார்ந்து இயங்கும் இந்தக் கவிஞர்கள் என்ன செய்யப் போகிறார்கள் எனத்தெரியவில்லை. சிறந்த கவிதைகளை அடையாளம் காண்பது, கவிதைகளைவகைமைப் படுத்துவது, கோட்பாடுகளின் வழியாக கவிதைகளை அணுகுவதுபோன்ற விமர்சனப் பாங்குகள் தமிழில் மிகக் குறைவாக இருப்பதும் ஒரு காரணம்எனலாம். பின் நவீனத்துவம், அமைப்பியல், பின்-அமைப்பியல் சார்ந்தகோட்பாட்டாளர்கள் எழுதுவதை படித்துப் புரிந்து கொள்பவர்களின் எண்ணிக்கைஒற்றைப்படையில் இருப்பது ஏன்? கார்களையும் கணினிகளையும் இறக்குமதிசெய்வது போல, ஏன் கோட்பாடுகளை எளிதாக இறக்குமதி செய்து பயன்படுத்தமுடிவதில்லை?. மொழி சார்ந்த செயல்பாடுகள் அனைத்துமே அந்த மொழிபேசும்இனக்குழுவின் தொன்மத்திலிருந்து இன்று வரையிலான ஆழ்ந்த வாழ்வியல்சார்ந்தவை. வாழ்வியல் உறிஞ்சிக் கொள்ள முடிவதை மட்டுமே நாம் அதற்குவழங்க இயலும். விமர்சகர்கள் இன்னும் ஆழமாகவும் விரிவாகவும் பயின்று நமதுவாழ்வியலின் அடிப்படை அலகுகளுடன் பொருந்தக்கூடியவைகளை எழுதவேண்டும். அமைப்பியல் என்ற கோட்பாட்டை ஐரோப்பியர்கள் வாழ்வின் எல்லாத்துறைகளுக்கும் பயன்படுத்துகிறார்கள். தமிழில், இலக்கிய உலகில் மட்டுமேஇயங்கும் கோட்பாடுகள், ஒரு சமூக ரீதியான பாதிப்பை ஏற்படுத்த முடியாததின்காரணம் பிறதுறைகள் ஏதொன்றிலும் இல்லாத சிந்தனா வறட்சியும், முற்றானஒருங்கிணைவு இன்மையுமே. மொழி மற்றும் இலக்கிய உலகக் கோட்பாட்டுஅறிவுஜீவிகள் தமிழ் வாழ்வின் அடிப்படைகளுக்குள் ஊடுருவ முடியாத ஒரு துயரகாலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். கேள்வி 3 தமிழ் கவிதையைத் தவிர நீங்கள் பிற மொழி கவிதைகள் அதிகமாக வாசிக்கிறீர்கள்.அதனதன் உலகம் என்னவாகவுள்ளது?. குறிப்பாக இந்தியாவில் நாம் அதிகமும்அறியாத அஸ்ஸாம் மற்றும் வட கிழக்கு பகுதிகளின் கவிஞரின் உலகம்? பதில்: தமிழும் ஆங்கிலமும் மட்டுமே எனக்கு வாசிக்கத் தெரிந்த மொழிகள். எனவே எனக்குதமிழிலும் ஆங்கிலத்திலும் கிடைக்கும் படைப்புகளையே வாசிக்கிறேன்.அஸ்ஸாமிய இளம் கவிஞர் பிஜோய் சங்கர் பர்மனை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில்சந்தித்தேன். தன்னுடைய ‘அசோகாஷ்டமி’ தொகுப்புக்காக யுவ புரஸ்கார் விருதுபெற்றிருக்கிறார். குறுந்தொகையை அஸ்ஸாம் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார். அவரது கவிதைகளில் நமது சங்கப் பாடல்களின் கூறுகள்இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியாக இருந்தது. சாகித்ய அகடமியின் ‘இந்தியன்லிடெரச்சர்’ வாசிப்பதுண்டு. ஆனால் இந்திய அளவில் இன்று தமிழ் கவிதைகள்,முன்னனியில் இருப்பதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். பிஜோய் சங்கர் பர்மன் கவிதை: பட்டம் ஒரு நுண்ணிய இழையினால் என்னைக் கட்டிப் போட்டிருக்கிறாய் நீ ஆலய மணியுடன் தனித்த குன்றில் மற்றும் நீ பறந்து கொண்டிருக்கிறாய் மேலே மணி அசைகிறது மேற்கிலிருந்து வீசும் காற்றில் கோடையின் முதல் மழை போல நான் விழுந்துவிட்டேன் புல்லின் இதயத்தின் மேல் எங்கிருக்கிறாய் நீ நிர்வாண மரங்களுக்குப் பின்னால் குன்றின் உச்சியில் சூரியன் கீழே போகிறது அவனது இதயம் பெண்-ஓக்கு மரங்களின் மேல் மேய்கிறது இரவு காத்துக் கொண்டிருக்கிறது நீயும் உன் வழியைத் தொலைத்துவிட்டாய் வெகுதூரம் பறந்தபடி அல்லது வீழ்ந்து மூங்கில் புதர்களின் மேல் கவனிக்கப்படாமல். அஸ்ஸாமியக் கவிதை ஆங்கிலம் வழியாக தமிழில்: சமயவேல். கேள்வி 4 தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்த நீங்கள் தீடீரென சிறுகதை எழுதத்தொடங்கிஒரு தொகுப்பு கொண்டுவந்தீர்கள். பிறகு சிறுகதை எழுதவில்லை. தொடர்ச்சியாகநீங்கள் சிறுகதையில் கவனம் செலுத்தாதற்கு உங்களது சிறுகதைகளை சரியாகவாசகர்கள் வாசிக்கவில்லையென்ற ஆதங்கம்தானா? பதில்: நான் கவிதைகள் எழுதத் தொடங்குவதற்கு முன்பு சிறுகதைகள் தான் எழுதிக் கொண்டிருந்தேன்.கு.அழகிரிசாமி, கு.ப.ரா., கி.ராஜநாராயணன், வண்ணநிலவன், சா.கந்தசாமி, வண்ணதாசன் கதைகளின் தீவிர வாசகனாய் இருந்தேன். வாழ்வின் அலைக்கழிப்புகளால் எழுதிய கதைகள் பல தொலைந்து போயின. சென்னையிலிருந்து கோவில்பட்டிக்கு வந்த பிறகு திருமணம் குடும்பம் என முற்றிலுமாக பிறிதொரு வாழ்வைத் தேர்ந்து கொண்டேன். முக்கியமாக எனது அரசியல் சார்புகளிலிருந்து மொத்தமாக என்னைத் துண்டித்துக் கொண்டேன். அந்த சமயத்தில் நண்பன் கோணங்கி, சிறுகதைகள் எழுதத் தொடங்கியிருந்தார். நான் எழுதாமல் போன பல கதைகளையும் அவர் சிறப்பாக எழுதிக் கொண்டிருந்ததால் நான் எழுதுவதையே நிறுத்திக் கொண்டேன். எனது மகள் பிறந்து ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு, எனது டைரியில் அவ்வப்பொழுது எழுதிய குறிப்புகளையே கவிதைகளாக்கி, உருவானதே எனது முதல் தொகுப்பு ‘காற்றின் பாடல்’. அந்த சமயத்தில் தேவதச்சனோடு ஒரு தீவிரமான உரையாடலில் இருந்தேன். கவிதையில் தத்துவத்தின் பங்கு குறித்த எங்கள் உரையாடலில் உறைந்த மௌனங்களே, எனது கவிதைகளை எழுதின. தத்துவம் vs கவிதை உரையாடல், பல கிளைகளாகப் பிரிந்து எங்கள் கவிதைகளை அவரவர் பாணியில் புதியதாக்கியது. எனது நண்பர்களிலேயே, ஏன் தமிழகத்திலேயே, மிக அற்புதமான உரையாடுபவராக தேவதச்சன் இன்றும் இருந்து வருகிறார். அவரது தோழமையின் பாதிப்பால் தான், நான் முழுக்க கவிதை சார்ந்து இயங்கத் தொடங்கினேன். தனிமனிதன் அல்லது சமூகத்தின் உள்ளார்ந்த தவிப்புகளின் ஆன்மீகத்தை பலநூற்றாண்டுகளாக தொடர்ந்து கவிதைகள் சுமந்துகொண்டு அலைவதைப் புரிந்து கொண்டதால், கவிதை சார்ந்தே இயங்கிவருகிறேன். ஆனால் கதைகள் வழங்கியிருந்த மயக்கமும் கதகதப்பும் தொடர்ந்து தேவைப்பட்டுக் கொண்டே இருப்பதால் எப்பொழுதும் போல கதைகளையும் தேடித் தேடி வாசிக்கிறேன். அவ்வப்பொழுது ஓரிரு கதைகளையும் பரிசோதனை முறையில் எழுதிப் பார்க்கிறேன். வாசிக்கிறார்களா இல்லையா என்பதையெல்லாம் பொருட்படுத்தினால் தமிழில் ஒரு படைப்பாளியும் இருக்க மாட்டார்கள். கவிதை தோழி என்றால், கதை காதலியாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுவேன். இப்பொழுது ஒரு மெகா நாவலையும், ஒரு சிறுவர் நாவலையும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். கேள்வி 5 சமகால நவீன இலக்கிய சூழலில் கவிதை எழுதத்தொடங்கி சிறுகதை நாவல் எனபயணிக்கும் இலக்கியவாதிகளை நாம் பார்க்கிறோம். இச்சூழலில் உங்களதுமாயஏதார்த்த பாணியிலான மற்றும் பின் நவீனத்துவ பாணியிலான கதைகதையற்ற கதைக்கான எதிர்வினைகளும் வரவேற்பும் சரியாக அமைந்ததா? பதில்: கவிதை அனைத்து வகையான படைப்பு வடிவங்களிலும் மையச் சரடாக இருக்கிறது. சிற்பம், இசை, ஓவியம், மட்பாண்டங்கள், ஓலை விசிறிகள், பரதம், கதகளி, சிறுகதை, நாவல் எல்லாவற்றிலும் கவிதையின் தடங்களைப் பார்க்க முடியும். எனவே ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்துக்கான பயணம் அவரவர் வாழ்வின் ஒழுங்கோடு மிக இயற்கையாகவே நடக்கிறது. என்னுடைய கதைகளுக்கான எதிர்வினைகள் அல்லது வரவேற்பு பற்றி நான் ஒருபோதும் யோசிக்கவில்லை. ஆகச் சிறந்த படைப்பாளிகள் எவரும் வாசகர்கள் விருப்பங்கள் பற்றி தனியாகக் கவலைப்படுவதில்லை. அவர்களைக் கலங்கடிக்கும் மொத்த சமூகத்தின் ஒரு பகுதியாகத்தானே வாசகர்களும் இருக்கிறார்கள். மொத்த வாழ்வும் குறித்த எழுத்தாளனின் கவனம் எல்லாவற்றையும் உள்ளடக்கிக் கொள்கிறது. அமைப்பியல், பின் அமைப்பியல் மற்றும் பின்நவீனத்துவக் கோட்பாட்டாளர்கள் தமிழில் ஒரு மிகச் சிறிய குழுவாக இயங்குகிறார்கள். கோட்பாட்டாளர்களே படைப்பாளிகளாகவும் இருப்பதால், அவர்களது சொந்தப் படைப்புகளை முன்னிறுத்தும் பணிகளே இன்னும் நிறைவேறாத சூழலில் இருக்கிறோம். தலித்தியக் கோட்பாட்டாளர்கள் நடப்பது அனைத்தையும் கூர்ந்து கவனிக்கிறார்கள். அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய சமநிலையில் ஒரு சிறிய துண்டு கூட இன்னும் கிடைத்தபாடில்லை. அண்மையில் வலதுசாரி சிந்தனையாளர்கள் பலரும் புத்துயிர்ப்பு பெற்று ஊடகங்களில் புகுந்து விளையாடுகிறார்கள். கார்ப்பரேட்டியம் சகல சிந்தனைப் பிரிவுகளையும் சிதறடித்திருக்கிறது. கிரிமானலிட்டி, ஊடகங்களில், அரசியலில், சமூகங்களில், குடும்பங்களிலும் கூட புற்றாய் வளர்ந்து கொண்டிருக்கிறது. வளர்ச்சி என்ற பெயரில் நிலம், நீர், காற்று என சகலமும் மாசடைந்து அழிந்து வருகின்றன. எனவே இலக்கிய விமர்சனம் நோஞ்சான் பிள்ளையாகத் தானே இருக்கும். ஒரு திசையற்ற சுழற்காற்றுக்குள் தமிழ் இலக்கிய மையம் சிக்கிக் கொண்டதால், இளம் படைப்பாளிகள் விளிம்புகளில் எழும்பி வருகிறார்கள். விளிம்புகளே புதிய மையங்களாக மாறும் மாயமும் நடக்கும். பரிசோதனைப் படைப்புகளைப் பற்றிப் பேசுவதற்கான ஒரு சந்தர்ப்பம் கூடிவராத சூழலில்தான் நாம் பலகாலமாக வாழ்கிறோம். பிரேம்-ரமேஷ் கவிதைகளும் கதைகளும் உச்சபட்ச பரிசோதனைப் படைப்புகள். ஜி.முருகனின் ‘மின்மினிகளின் கனவுக்காலம்’ நாவல் 1993ல் எழுதப்பட்டது. முற்றிலும் புதிய வகைமையினால் ஆன இந்த நாவலை கோட்பாட்டாளர்கள் பலரும் கண்டுகொள்ளவே இல்லை. ஏனெனில் ஜி.முருகன் எந்தக் குழுவிலும் இல்லாமல் இருந்தார். அதே போல் கௌதம சித்தார்த்தனின் மாய யதார்த்த சிறுகதைகள் குறித்து எவரும் பேசவில்லை. ஆர்.சிவகுமார், கால சுப்ரமண்யம் போன்றவர்களது மொழிபெயர்ப்புகள் பரவலாக வாசிக்கப்படவில்லை. கோணங்கி ஒருவர்தான் தனது கல்குதிரை மூலம் எல்லாவகையான தீவிரப் படைப்பாளிகளையும் ஒருக்கூட்டுகிற பெரும் சக்தியாக இயங்கிவருகிறார். கேள்வி 6 உங்களது கவிதை அழகியலும் நுட்பமான அரசியலும் கொண்டது. காண் உலகின்காட்சிகளையும் எதார்த்தமான நிகழ்ச்சிகளையும் எளிமையான அதேநேரத்தில்பொயட்டிக்கான வரிகளில் சிக்கனமாக கவிதை எழுதுவதில் பெயர்பெற்றவர்கள்நீங்கள். இதற்கு நேர் மாறாக ஃபேண்டஸி உலகின் தோற்றத்தை உங்களதுகதைக்குள் கொண்டுவர காரணமாக அமைந்தது என்ன? ஏற்கனவே தமிழில்நிறைய ஃபேண்டஸி மேஜிக்ரியலிச எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்பதைநீங்கள் அறிவீர்கள். நீங்கள் அவர்களுடன் இணைந்து கொள்ளும் முயற்சிதானா? பதில்: கவிதையே ஒரு ஃபேண்டஸி தான். யதார்த்தம் என்பது சகிக்க முடியாத வகையில் பொதுமனச் சிதைவை, சமூக சித்தப்பிரமைகளை உருவாக்கியதால்தான் லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், மெக்சிகோவிலும் மாய யதார்த்த எழுத்துகள் தோன்றின. இங்கும் அப்படியான ஒரு சூழல் இன்று உருவாகிவிட்டது. ஜனத்திரளில் எத்தகைய சூழலிலும் புதிய தளங்களை அமைத்துக் கொள்ள முடிபவர்களாக கலைஞர்கள் மட்டுமே இருக்கிறார்கள். ஒரு இதயத் தாக்கிலிருந்து மீண்டு ஓய்வில் இருந்த ஒரு அதிகாலையில் கண்ட கனவை கொஞ்சமும் மாற்றாமல் அப்படியே எழுதினேன். அதுதான் என்னுடைய “மன்னார் வளைகுடாவில் ஒரு நன்னீரோட்டம்” சிறுகதை. அந்த ஆண்டு நான் எழுதிய சில கதைகளுக்கு கனவுகளே தூண்டலாக இருந்தன. தினசரி வாழ்வின் சலிப்பிலிருந்தே ஃபேண்டஸி உருவாகிறது. ஃபேண்டஸி வகை வாசிப்பு சிறுவயதிலிருந்தே இருக்கிறது. கதையற்ற கதைகள் என்பதெல்லாம் எனது வாசிப்பிலிருந்து கிடைத்தவைதாம். ஒரு கதை எழுதுவதில் உள்ள பலவகையான திறப்புகள், சுதந்திரங்கள், மாய நகர்வுகள் எல்லாம் என்னைப் பெரிதும் கிளர்ச்சியூட்டுகின்றன. ஒரு பத்தியை நாம் எழுதுவதும், அடுத்த பத்தியை கதையே எழுதுவதும் செம த்ரில்லிங். உங்களுக்கும் அந்த அனுபவங்கள் இருக்குமல்லவா? கதைப்பிரிவில் மிகக் குறைவாக எழுதியிருக்கும் என்னை அந்த மேஜிக்ரியலிச எழுத்தாளர்கள் இணைத்துக் கொள்வார்களா என்பது தெரியவில்லை. சா.தேவதாஸ் ஒருவர் தான் எனது கதைகளைப் பற்றிய ஒரு மதிப்புரையை தமிழ் இந்தியா டுடேயில் எழுதியிருந்தார். கால்வினோ போன்ற எழுத்தாளர்களை மொழிபெயர்த்திருக்கும் அவரது மதிப்புரையும், நான் பெரிதும் மதிக்கிற எழுத்தாளர் மா.அரங்கநாதன் தொகுப்பைப் படித்துவிட்டு தொலைபேசியில் பேசியதும் எனக்குப் போதுமானதாக இருக்கிறது. சில நண்பர்கள் என்னய்யா எழுதியிருக்க என ஏசியதையும் மதிக்கிறேன். கேள்வி 7 சமகால சிறுகதைகளையும் நாவல்களையும் உடனுக்குடன் வாசித்துவிடுவிதைநான் அறிவேன். தற்போது இவ்வடிவத்தில் இயங்கும் எழுத்தாளர்களைப் பற்றியும்அதன் உலகத்தையும் நீங்கள் என்னமாதிரியான அபிப்ராயத்தை வைத்துள்ளீர்கள்என்பதை தெரிந்து கொள்ளலாமா? பதில்: இளம் எழுத்தாளர்கள் திசைகளற்ற விளிம்புகளில் இயங்குவது பற்றியும், புதிய மையங்களை அவர்கள் உருவாக்க இருப்பதையும் ஏற்கனவே கூறினேன். சந்திரா, எஸ்.செந்தில்குமார், திருச்செந்தாழை, கால பைரவன் ஆகிய சிறுகதையாளர்கள் இப்பொழுது ஒரு தேக்க நிலையில் இருப்பதாகக் கருதுகிறேன். கார்ல் மார்க்ஸ் ஜி என்பவரது சில கதைகளை விரும்பிப் படித்தேன். ஆனால் அவரது ஆசானின் கதையுலகம் அவரைப் பாதிக்காமல் இருக்க ஆசைப்படுகிறேன். சமீபத்தில் கவிஞர் நரன் எழுதிவரும் சிறுகதைகள் கவனிக்க வைக்கின்றன. அண்மையில் நிறைய நாவல்கள் வந்துவிட்டன. குறிப்பிட்டுச் சொல்வது மாதிரி ஒரு நாவலும் இல்லை. ஜோஸ் சரமாஹோ, மிலன் குந்த்ரே, ஓரன் பாமுக், கால்வினோ, ருல்ஃபோ(ஒரே நாவல்), மிஷிமா, கவாபட்டா, முரகாமி, மியா கூட்டோ, அடிச்சி போன்றவர்களது நாவல்களை வாசித்தபிறகு ஒரு வாசகர், தமிழில் இன்றைய நாவல்களை எப்படி எதிர்கொள்வார் எனத் தெரியவில்லை. நாம் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம். எனக்கு நம்பிக்கை இருக்கிறது. கவிதையில் ஒரு பெரும் பாய்ச்சல் நிகழ்ந்துள்ளதைப் போல கதைப் பரப்பிலும் நடக்கும். கேள்வி 8 கோணங்கி. பா.வெங்கடேசன் இருவரின் நாவல்களுக்கான இடம் அதாவதுபொதுநீரோடையில் இல்லை. அதற்கான வாசகர்கள் கவிஞர்கள் மட்டுமே என்பதும்சாமன்யாமான வாசகர்கள் அப்பிரதியை எளிதில் அணுகமுடியாது என்பதுகுற்றச்சாட்டாக உள்ளது. கோணங்கியும் பா.வெங்கடேசனும் உங்களது நெருங்கியநண்பர்கள். அவர்களது எழுத்துக்களை விவாதித்து வருகிறிர்கள். அதுகுறித்துகட்டுரை எழுதியும் இருக்கிறிர்கள். அவர்களது மொழிகுறித்தும் அவர்களது உலகம்குறித்தும் சாமன்யவாசகனும் புரிந்து கொள்ளவேண்டுமெனில் என்னசெய்யவேண்டுமென நீங்கள் குறிப்பிடுவீர்கள்? பதில்: கொஞ்சம் வாசிக்க வாசிக்கப் பழகிவிடும். கோணங்கியை வாசித்துக் கொண்டே இருக்கலாம். எல்லாம் புரிய வேண்டும் என்பதெல்லாம் பெரிய ஆசை. வாசிப்பதே பெரிய அனுபவம் அவ்வளவுதான் என நண்பர்கள் கூறுகிறார்கள். உலக இலக்கிய இதிகாசங்களை ஊடிழைப் பிரதிகளாக அவர் கொட்டுவதைப் பலரும் வியக்கிறார்கள். எனக்கு அவரது அண்மை எழுத்துக்களில் ‘வெள்ளரிப் பெண்’ தவிர வேறு எதுவும் பிடிக்கவில்லை. அவரது ஊருக்கருகில் உள்ள நென்மேனி (இருக்கண்குடி அருகில்) என்ற ஊரில் உள்ள வெள்ளரித் தோட்டத்திலிருந்து அவரது தாத்தா ஊரான நாகலாபுரம் வரை உள்ள நிலப்பகுதியும், அதன் மரம் செடி கொடி என சகல உயிர்களும் மனிதர்களும் மூச்சுவிடும் அந்த மகத்தான கதையை பல முறை வாசித்தேன். அவரது ‘கல்குதிரை’ ஒரு அசாதரணமான முக்கிய பணி என்றும், அது எதிர்காலத் தமிழ் இலக்கியத்தை வெகுவாக மாற்றும் என்றும் நம்புகிறேன். அவர் ஏற்கனவே ஏராளமான அற்புதச் சிறுகதைகளை எழுதிவிட்டார். ‘சலூன் நாற்காலியில் சுழன்றபடி’ என்னும் அவரது மொத்த சிறுகதைகளின் தொகுப்பு, தமிழின் சிகரம் தொட்ட தொகுப்பு. பா.வெங்கடேசனையும் ‘ராஜா மகள்’ வெங்கடேசனாக மட்டுமே பார்க்கிறேன். அவரது இரு மெகா நாவல்களிலும் சில பகுதிகள் மட்டுமே எனக்குப் பிடித்திருந்தன. ‘தாண்டவராயன் கதை’ நாவலில் முதல் பகுதிகள் கவித்துவமாக வந்துள்ளது. ஆனால் வரலாற்றுக்குள் நாவல் புகுந்ததும் மூடி வைத்துவிட்டேன். எனக்கு தனிப்பட்ட முறையில் வரலாற்று நாவல்கள் என்னும் வகைமையின் மீதே ஒவ்வாமை ஏற்பட்டுவிட்டது. நேரடியாக வரலாற்றை வாசித்து விடுகிறேன். தொன்மங்களும் இதிகாசங்களும் அதே போல புராண இதிகாசங்களை நாவல்களாக எழுதுவதிலும் எனக்கு உவப்பில்லை. ஜேம்ஸ் ஜாய்சின் “யுலிசஸ்" போன்ற இதிகாச ரேகைகளைக் கொண்ட சமகால நாவல்களையே நான் பெரிதும் விரும்புகிறேன். இது எனது தனிப்பட்ட விருப்பம். இதன் மீதான விவாதங்களில் எனக்கு விருப்பமில்லை. கேள்வி 9 ரஷ்ய இலக்கியம், வங்கமொழி இலக்கியம், லத்தீன்அமெரிக்க இலக்கியம் என்றுஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு தேசத்தின் எழுத்துக்கள் நம்தமிழகத்தைகவர்ந்துள்ளது. அதன் பாதிப்பில் எழுத்தாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். சிலர்அதன் தொடர்ச்சியாக எழுதியும் இருக்கிறார்கள். நீங்கள் சமீபத்தில்நைஜீரியாவை சேர்ந்த சீமண்டாஅடிச்சியின் எழுத்து குறித்து கட்டுரைஎழுதியிருந்தீர்கள். பிறகு ஐப்பானிய நாட்டு எழுத்தாளர் முராகாமியின் எழுத்தைகுறிப்பிட்டீர்கள். இவர்களது எழுத்துலகத்தை ஆங்கிலத்தில் வாசித்திருக்கிறிர்கள்.உங்களது அனுபவத்தை சொல்லுங்கள். பதில்: வாசிப்பது என்பதே வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டதால் நிறைய வாசிக்கிறேன். சிமமந்தா அடிச்சி இரண்டு நாவல்கள் மட்டுமே எழுதியிருக்கும் தொடக்க நிலை எழுத்தாளர். அவரது ‘ஊதா நிற செம்பருத்தி’ நாவல் அதன் இறுதிப்பகுதியில் விபத்துக்குள்ளானது போல் மோதி நொறுங்கிவிடுகிறது. அதைவிட பன்மடங்கு சிறந்த நாவல்கள் தமிழில் இருக்கின்றன. பூமணியின் வெக்கை, பிறகு, பா.சிவகாமியின் ஆனந்தாயி, இமயத்தின் கோவேறு கழுதைகள் என நம்மிடம் பல சிறந்த நாவல்கள் இருக்கின்றன. ஆனால் பின்காலனியம் பற்றிய சரியான அரசியல் பார்வை கொண்ட நாவல்கள் நம்மிடம் இல்லை. எனவே தான் சிமமந்தா அடிச்சியை நாம் வாசிக்க வேண்டியதாக இருக்கிறது. அண்மையில் பிரேம் இந்த நாவலை மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார். நைஜீரியா உட்பட்ட ஆப்பிரிக்க எழுத்தாளர்கள் பலரும் காலனிய, பின்காலனிய வாழ்க்கை பற்றி நிறைய நாவல்களை எழுதியிருக்கிறார்கள். முக்கியமாக பூர்வீக கலாச்சார அழித்தொழிப்பு பற்றிய அக்கறை இவர்களது பொதுப்பண்பாக இருக்கிறது. மொசாம்பிக் எழுத்தாளர் மியா கூட்டோ (Mia Couto) என்பவரது ‘தூக்கத்தில் நடக்கும் நாடு’ ‘பெண் சிங்கத்தின் ஒப்புதல் வாக்குமூலம்’ ‘அரளிமரத்தடியில்’ ஆகிய நாவல்களை சென்ற ஆண்டு நான் விரும்பி வாசித்தேன். சரமாஹோ, மிலன் குந்த்ரே, பாமுக், முரகாமி வகை நாவல்கள் நம்மிடம் இல்லை. எஸ்.வி.ராஜதுரை ஜோஸ் சரமாஹோவின் நாவல்கள் பற்றி தொடர்ந்து எழுதி வருகிறார். முரகாமி, பாமுக் ஆகியோரது நாவல்கள் தமிழில் வந்துவிட்டன. எனவே ஒரு புதுவகையான நாவல் எழுத்துக்கு தமிழ் நிலம் தயாராகி வருகிறது. எனக்கு நம்பிக்கை இருக்கிறது. கேள்வி 10 நாவல் எழுதிக் கொண்டிருந்தீர்கள் என்ன ஆனது? பதில்: நிறைய எழுதிக் கொண்டே இருக்கிறேன். இன்னும் நாவலின் வடிவம் புலப்படவில்லை. அண்மையில் எனக்கு மூளையில் கொஞ்சம் செல்கள் அழிந்துவிட்டன. ஞாபகத்திலிருந்து எழுதுவதைவிட மறதியிலிருந்து எழுதுவது எளிதாக இருக்கிறது. நாவல் கட்டுப்பாடில்லாமல் போகிறது. என்ன ஆகும் என்று தெரியவில்லை. ஆட்டோ ரைட்டிங் போன்ற உத்திகளைப் பயன்படுத்திப் பார்க்கிறேன். மெட்டா வகை நாவலாக இருக்கும் என்று நினைக்கிறேன். எப்படியும் வரும் மதுரை புத்தகக் காட்சிக்குள் நாவலைக் கொண்டு வந்துவிடுவேன். ஒரு சிறுவர் நாவலையும் ஓரத்தில் எழுதுவதால் ஒரு சமநிலை கிடைக்கிறது. ooo இந்த நேர்காணல், "பேசும் புதிய சக்தி" ஏப்ரல் 2017 இதழில் வெளியாகியுள்ளது. நண்பர் எஸ்.செந்தில்குமாருக்கும், பேசும் புதிய சக்தி இதழுக்கும் எனது நன்றிகள். சமயவேல் கவிதைகள் இப்பொழுதெல்லாம் அலுவலகத்தை விட மருத்துவ்மனை பிடித்திருக்கிறது வீட்டை விட அழுக்கு வீசும் விடுதி அறைகளில் விரும்பித் தங்குகிறேன். இசை அரங்குகளை விட சப்தங்கள் உயிர்ப்புடன் எழும் பேருந்து நிலையங்களில் வெகு நேரம் பராக்குப் பார்த்தபடி நிற்கிறேன் சாலைகளை விடுத்து பன்றிகள் அலையும் குறுக்குச் சந்துகளில் நடக்கிறேன் கட்டணக் கழிப்பிடங்களின் பேரழகு குறித்து வாசகர் கடிதம் எழுதுகிறேன் பூங்காக்களை விட பெரு மரங்கள் நிற்கிற மயானங்கள் அழகானவைகள் என்று சுவரொட்டிகள் ஒட்டுகிறேன் வெறும் மண்ணாலாகிய இந்த பூமியை விட மாய விண்வெளியே நிரந்தரம் என்று இப்பொழுதெல்லாம். விடுமுறை வேண்டும் உடல் எதைப் பற்றியும் கவலை இல்லை உடலுக்கு தன்னைப் பற்றியே பெரும் கவலை கொள்கிற உடல் முடிந்த போதெல்லாம் விடுமுறை கேட்டு நச்சரிக்கிறது பேருந்துப் பயணம் ரயில் பயணம் அலுவலகம் என எதுவும் வேண்டாம் என்று அடம் பிடிக்கிறது சும்மா ஒரு பனை மரத்தைச் சுற்றியிருக்கும் முசுமுசுக்கைச் செடி (சாறுண்ணி) போல் அல்லது வற்றிய கண்மாயின் அளிச்சகதியில் புரளும் எருமை என எப்படியும் இருப்பேன் என்கிறது விடுமுறை விடுமுறை எனும் யாசகச் சொற்களை பரப்பிக் கொண்டே அலைகிறது எதுவும் செய்யாமல் அக்கடா என்று சும்மா கிடக்கும் ஆனந்தம் பற்றிய அனேக நிறமிகளை மூளைக்கு அனுப்பிய வண்ணம் இருக்கிறது மிகுதியும் கனவு காணும் விருப்ப்த்துடன் வெண்சிவப்பு மதியங்களில் கொட்டாவி விடுகிறது எனது உடல் என்னைவிட்டு வேறு யாரிடம் கேட்கும் என சம்மதித்தபடியே இருக்கிறேன். அழகென்னும் அபாயம் ஒரு நெடுஞ்சாலைப் பயணத்தில் ஊர்தி எந்திரம் நிறுத்தி சாலையோரம் கொஞ்சம் நடந்து ஓங்கி வீசுகிற காற்றில் நிரம்பியபடி சிறுமரக் கூட்டமொன்றை நெருங்குகின்றேன் நுணா மரப் புதரொன்றில் ஒரு சிறு பறவை இறகுகள் அடர் சிவப்பு கழுத்து மயில் நீலம் உருண்டை வயிறு சாம்பல் நிறம் கொண்டை மஞ்சள் நிறம் கண்கள் என்ன நிறம்? கால்கள் பசுமஞ்சள் நிறம் விரல்கள் அரக்கு நிறம் நிற்கிற மரமோ மர நிறம் அந்த இத்தினியூண்டு பறவை கொண்டையை ஆட்டி ஒரு வினோதக் கூவலை எழுப்பியபோது என் பெரு நகர ஆத்மாவின் தலை வெட்டுண்டு உருண்டது மரணத்தின் விளிம்பை ஒரு நடனக் கூடமாக்கியது என் உடல் கூவல் முடித்து பறவை விருட்டென்று பறந்தோடியதும் உயிர் மீட்டு ஓர் குழந்தையாக நின்றேன். எண்பதுகளில் எழுதத் தொடங்கிய சமயவேல் தனது முதல் கவிதைத் தொகுப்பான "காற்றின் பாடல்" மூலம் முக்கியமான தமிழ் கவிஞராக அறியப்பட்டார்.இவரது இரண்டாவது தொகுப்பான "அகாலம்" பலரது கவனத்தையும் பெற்று தமிழின் முக்கிய கவிதைத் தொகுப்பாக அமைந்தது. உயிர்ம்மை பதிப்பகம் இவரது "அரைக் கணத்தின் புத்தகம்" தொகுப்பை வெளியிட்டது.அண்மையில் இவரது புதிய தொகுப்பான "மின்னிப் புற்களும் மிதுக்கம் பழங்களும்" ஆழி பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. மலைகள் பதிப்பகம் 2014ல் 'பறவைகள் நிரம்பிய முன்னிரவு' தொகுப்பை வெளியிட்டது. 'நான் டைகர் இல்லை' என்னும் சிறுகதைத் தொகுப்பை உயிர் எழுத்து பதிப்பகம் வெளியிட்டது.'தெற்கிலிருந்து சில கவிதைகள்' என்னும் தொகைநூலின் ஆசிரியரும் இவரே. உலகின் இமை நடு நெற்றியை மறைத்து விரிந்த கரும் பரப்பில் ஒரு சிறிய மஞ்சள் புள்ளி அருகில் ஒரு நீலத்திட்டு இமைகள் மேலும் இறுக நீலத்திட்டு ஒரு வளையமாகி மஞ்சள் புள்ளியை வளைக்கிறது மஞ்சள் புள்ளி சுழல்கிறது நீல வளையம் எதிர்த் திசையில் சுழல்கிறது. இமைகள் மேலும் இறுக மஞ்சள் புள்ளி பிய்த்துக்கொண்டு பேராழத்துள் ஓடுகிறது நீலவளையம் விரிந்து விரிந்து அடர் கருப்பு இருளாய்ப் போகிறது இமை மேலும் மேலும் இறுகுகிறது தெருவோர சோடியம் கனியில் இருள் பூக்கத் தொடங்குகிறது எனது இமை கொஞ்சம் கொஞ்சமாக உலகின் இமையாக மாறுகிறது எனினும் அது மூடியே இருக்கிறது பார்த்தலின் பரவசத்தை ஒத்தி வைத்தபடி அது மூடியே இருக்கிறது. 2. இரவு மழை இந்த இசை வானத்திலிருந்து அல்லது பெருவெளியிலிருந்து இந்தத் துளி, துளிகள், சிறுதுளிகள், கோர்க்கப்பட்ட துளிகள் கனத்த துளிகள் உக்கிரத் துளிகள் துளிகளின் மழை இரவு மழை முழு இரவும் மழை முழு இரவும் குளிர் முழு இரவும் மின்னல் முழு இரவும் குமுறும் இடிகள் முழு இரவும் கறுப்பிருட்டு முழு இரவும் கோர்க்கப்படாத இசை முழு இரவும் வெதுவெதுப்பு முழு இரவும் கோதுமை நிறக் காதல் 3. பயணம் உட்கார்ந்த நிலையில் பயணிக்கும் உடலில் குமிழியிடும் சித்தம் ஜன்னலோரம் ஓடும் காட்சிகளில் கைப்பு கூடியிருக்கிறது விழுங்க விழுங்கத் தீராத சாலைக் கருப்பு மயில்களும் தட்டுப்படாமல் இல்லை காணாக் காட்சிகளின் வெற்றில் வழுக்கி விழும் சித்தம் ஆழ்கிணற்றில் ஓயா நீச்சல் நீரில்லாக் கண்மாயின் கலுங்கல் கற்கள் எதையோ பேசத் துடிக்கின்றன பெரிய கண்மாய் கிழக்கு ஓடையில் நானும் அப்புச்சியும் தூரி போட்டிருக்கிறோம் ஒரு விசில் சப்தத்தோடு புழுதியெழுப்பி நிற்கிறது பேருந்து ஓலைக் கொட்டானில் வெள்ளைக் கெண்டைகளின் மரண சுவாசம் அப்புச்சியின் முகத்தில் நிலைகொள்ளாமல் உருளும் எப்பாவமும் அற்ற உயிர்விழிகள் ஒரு இலுப்பை மரம் எல்லா இலைகளையும் உதிர்த்துவிட்டு பச்சை அழகாய் அம்மணமாய் நிற்கிறது உயர வளர்ந்த ரயில் கள்ளியின் உயர்ந்த சிறகுகளில் சிவப்பு மலர்கள் இறங்கியாச்சா இல்லையா ரைட் ரைட் துலாபார பூஞ்சிட்டுக் கன்னங்களின் சிவப்பு உன்னதம் என்னவெல்லாமோ ஆகிப்போனது மூத்த ஆசானின் உடல் முரண்களின் அலைகளில் மிதக்கிறது எழுதி வைத்த கடிதம் அவர் முற்றிலும் வெறுத்த ஊடகத் திரைகளில் படபடக்கிறது மயில்களும் தட்டுப்படாமல் இல்லை நாற்கரச் சாலையில் ஏறிப் பறக்கத் தொடங்கும் பேருந்து ஒரு திசையிலும் நான் ஒரு திசையிலும். 4. எதற்கும் எதற்கும் கட்டண வசூலிப்பகம் தாண்டி ஒரு ஓரமாய் வெள்ளை ஆமையாய் நிற்கிறது ஒரு அம்பாஸிடர் கொஞ்சம் தள்ளி பெரும் பாரங்களோடு வரிசையாய் 4 டிரக்குகள்; வாகை மரங்களைத் தாண்டி வாறுகாலில் ஒரு சுமோ தலைகுப்புற நொறுங்கிக் கிடக்கிறது கிழக்கே ஒரு சிற்பமாய் அரிவாளோடு நிற்கிறான் வலையங்குளம் கருப்பசாமி திரும்பி செம்மண் கரை ஏறியதும் தலைக்கு மேலே ஒரு வெள்ளை விமானம் தாழப் பறந்து மேலேறுகிறது எதற்கும் எதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை போய்க்கொண்டே இருக்கிறது என் மகிழ் வுந்து. ••• வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு மனநிலைகளில் எழுதப்பட்ட இந்தத் தொகுப்பின் எல்லாக் கவிதைகளையும் இன்று ஒரு சேர வாசித்தபின் அடர்ந்த வனாந்திரத்தில் பெருமரம் ஒன்றின் கீழ் நிற்பது போல உணர்ந்தேன். இந்த வாக்கியத்தைப் வாசித்த கணத்தில் இதை எழுதிய கவிஞர் சமயவேல் ஒரு பெருமரமாகவும் நான் அதன் உச்சியடைய முயலும் ஒரு சிற்றெறும்பாகவும் உணர்ந்தேன். ‘அரைகணத்தின் புத்தகம்’ சமயவேல் கவிதைகளின் முழுத்தொகுப்பு. காற்றின் பாடல், அகாலம் உள்ளிட்ட இரண்டே தொகுப்புகளைச் சேர்த்து 2007ல் வெளியான நூல். மனுஷன் 1989ல் இருந்தே எழுதுகிறார். முழுதொகுப்பில் மொத்தமே 81 கவிதைகள் தான் இருக்கு. தேடலின் சிறகுகள் கழன்று மலைகளுக்கப்பால் விழுந்தன .. முடிவற்ற அன்பில் உடம்பு வீங்கிய உருண்டை நிலா .. பூமியின் கோடிக் கணக்கான ஜீவன்களில் நானும் ஒன்று என் துக்கம் தாகம் சந்தோஷமென நானொரு பெரும் சமுத்திரம் .. ஆ, காற்றில் களிநடம் புரிகிற புற்களில் ஒன்றானேன் நான் .. பார்வையை மடக்கி உண்ணும் பிரம்மாண்ட நீலம் ஓயாத அலைச் சப்தம் நான் கடல் முன் நிற்கினேன் .. இப்படி அருமையான பல வரிகள். … சமயவேலின் இரண்டு கவிதைகள்: 1. சொந்த ஆத்திசூடி அரசியல் விலக்கு தத்துவம் தவிர் கனவு காண் காதலித்துக் கொண்டே இரு பிரயாணம் செய் கட்டுரை படிக்காதே புரிந்து கொள் இசையை உண் கட்சிகளைக் கண்டு ஓடு ஓடு வரலாற்றை ஒழி குழந்தைகள் பெறு கடிகாரத்தை தூக்கி எறி பறவைகள் பார் செய்தித்தாள்களில் காமிக்ஸ் மட்டும் படி தாமதித்துப் போ ஒரு நாளாவது நடனம் ஆடிப்பார் நடந்து செல் நகரங்கள் வெறு சிறு பெண்களிடம் அரட்டை அடி வாக்குறுதிகளை மீறு உத்யோகம் தவிர் நீச்சல் படி கூட்டங்களுக்குப் போகாதே விவசாயம் செய் பட்டினிகிட கடிதங்களுக்குப் பதில்எழுதாதே அடிக்கடி அண்ணாந்து ஆகாயம் பார் வியாபாரம் வெறு ஒரு செடி முளைத்து வளர்வதை உற்றுக் கவனி கடைவீதிகளில் அலைய வேண்டாம் சும்மா படுத்துக்கிட தேசிய அசிங்கம் (டிவி) நடுவீட்டில் எதற்கு? நுங்கு தின் சிற்பங்களை ரசி அடிவானத்தோடு உரையாடு எதையும் கும்பிடாதே முதுமையைக் கொண்டாடு டீயும் சிகரெட்டும் துணை விஞ்ஞானம் விலக்கு பெண்களோடு இரு ஆயிலும் அரசியலும் மனிதகுல எதிரிகள். 2. என்றும் கூரை முகட்டுப் பட்சிகளின் கரைதல்களுடன் இமைகளைப் பிரித்து வாழ்த்துச் சொல்லும் இளங்காலை ஒரு உடம்பு முறுக்கலில் மெல்லவே பிரியும் நேற்றின் அயர்வுகள் வாசலைத் தாண்டி உப்புக்காரனின் குரலோடு ஒரு மாபெரும் இயக்கம் தொடங்கி விட்டது குளிக்க சாப்பிட வேலைக்கென கலகத்துக்கு அழைக்கும் வாழ்க்கையை இன்றும் ரசிப்பேன். … நீங்க படிச்சே ஆவணும். சமயவேல் கவிதைகள் இப்பொழுதெல்லாம் அலுவலகத்தை விட மருத்துவ்மனை பிடித்திருக்கிறது வீட்டை விட அழுக்கு வீசும் விடுதி அறைகளில் விரும்பித் தங்குகிறேன். இசை அரங்குகளை விட சப்தங்கள் உயிர்ப்புடன் எழும் பேருந்து நிலையங்களில் வெகு நேரம் பராக்குப் பார்த்தபடி நிற்கிறேன் சாலைகளை விடுத்து பன்றிகள் அலையும் குறுக்குச் சந்துகளில் நடக்கிறேன் கட்டணக் கழிப்பிடங்களின் பேரழகு குறித்து வாசகர் கடிதம் எழுதுகிறேன் பூங்காக்களை விட பெரு மரங்கள் நிற்கிற மயானங்கள் அழகானவைகள் என்று சுவரொட்டிகள் ஒட்டுகிறேன் வெறும் மண்ணாலாகிய இந்த பூமியை விட மாய விண்வெளியே நிரந்தரம் என்று இப்பொழுதெல்லாம். விடுமுறை வேண்டும் உடல் எதைப் பற்றியும் கவலை இல்லை உடலுக்கு தன்னைப் பற்றியே பெரும் கவலை கொள்கிற உடல் முடிந்த போதெல்லாம் விடுமுறை கேட்டு நச்சரிக்கிறது பேருந்துப் பயணம் ரயில் பயணம் அலுவலகம் என எதுவும் வேண்டாம் என்று அடம் பிடிக்கிறது சும்மா ஒரு பனை மரத்தைச் சுற்றியிருக்கும் முசுமுசுக்கைச் செடி (சாறுண்ணி) போல் அல்லது வற்றிய கண்மாயின் அளிச்சகதியில் புரளும் எருமை என எப்படியும் இருப்பேன் என்கிறது விடுமுறை விடுமுறை எனும் யாசகச் சொற்களை பரப்பிக் கொண்டே அலைகிறது எதுவும் செய்யாமல் அக்கடா என்று சும்மா கிடக்கும் ஆனந்தம் பற்றிய அனேக நிறமிகளை மூளைக்கு அனுப்பிய வண்ணம் இருக்கிறது மிகுதியும் கனவு காணும் விருப்ப்த்துடன் வெண்சிவப்பு மதியங்களில் கொட்டாவி விடுகிறது எனது உடல் என்னைவிட்டு வேறு யாரிடம் கேட்கும் என சம்மதித்தபடியே இருக்கிறேன். அழகென்னும் அபாயம் ஒரு நெடுஞ்சாலைப் பயணத்தில் ஊர்தி எந்திரம் நிறுத்தி சாலையோரம் கொஞ்சம் நடந்து ஓங்கி வீசுகிற காற்றில் நிரம்பியபடி சிறுமரக் கூட்டமொன்றை நெருங்குகின்றேன் நுணா மரப் புதரொன்றில் ஒரு சிறு பறவை இறகுகள் அடர் சிவப்பு கழுத்து மயில் நீலம் உருண்டை வயிறு சாம்பல் நிறம் கொண்டை மஞ்சள் நிறம் கண்கள் என்ன நிறம்? கால்கள் பசுமஞ்சள் நிறம் விரல்கள் அரக்கு நிறம் நிற்கிற மரமோ மர நிறம் அந்த இத்தினியூண்டு பறவை கொண்டையை ஆட்டி ஒரு வினோதக் கூவலை எழுப்பியபோது என் பெரு நகர ஆத்மாவின் தலை வெட்டுண்டு உருண்டது மரணத்தின் விளிம்பை ஒரு நடனக் கூடமாக்கியது என் உடல் கூவல் முடித்து பறவை விருட்டென்று பறந்தோடியதும் உயிர் மீட்டு ஓர் குழந்தையாக நின்றேன். இடுகையிட்டது சமயவேல் நேரம் 19:20 2 comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest லேபிள்கள்: கவிதைகள் Thursday, July 30, 2009 என்னைப் பற்றி சமயவேல் எட்டையபுரம் அருகில் உள்ள வெம்பூர் என்ற கிராமத்துக்காரன் . முதல் கவிதைத் தொகுப்பு : காற்றின் பாடல் அடுத்து கொஞ்சம் இடைவெளிக்குப்பிறகு : அகாலம் பிறகு நண்பர் எஸ். இராமகிருஷ்ணனின் அட்சரம் இதழில் வந்த கவிதைகள் என மொத்த கவிதைகளும் அரைக்கணத்தின் புத்தகம் உயிர்மை பதிப்பகம் கொண்டு வந்தது. தெற்கிலிருந்து சில கவிதைகள் என்ற தொகை நூலும் வந்திருக்கிறது. இடுகையிட்டது சமயவேல் நேரம் 18:54 No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest சமயவேல் கவிதைகள் இந்த இரவு நான் அருந்திக் கொண்டிருப்பது எனக்குப் பிடித்த ரம் இல்லை வெறும் ஆப்பிள் ரஸம் தான் எனினும் இந்த இரவு தளும்பிக் கொண்டே இருக்கிறது நாம் நடந்து வரும் பொழுது எவ்வளவோ வாகனங்கள் நம்மைக் கடந்தன எவ்வளவோ நாம் பார்த்துவிட்டோம் நாம் விவாதிப்பதற்கு ஒரு பொருளும் இல்லை நடந்த மரணங்களும் வரும் மரணங்களும் உறையச் செய்த நம் மெளனங்களின் இடைவெளிகளில் இந்த இரவு தளும்பிக் கொண்டே இருக்கிறது பக்கத்தில் ஆளுக்கொரு பானம் அருந்தியபடி சிரித்துக் கொண்டிருக்கும் இளம் முகங்களில் பறக்கும் சிட்டுக் குருவிகளை நாம் நன்கறிவோம் எல்லாவற்றையும் புரிந்து கொள்கிறோம் எல்லாவற்றையும் தாங்கிக் கொள்கிறோம் ஆப்பிள் ரஸத்தின் இரத்தம் போன்றதோர் நிறம் கோமியம் போன்றதோர் அதன் வாசம் எல்லாவற்றிற்குமான மாயத் திறவுகோலை ஏதோ ஒரு சாலைத் திருப்பத்தில் எப்பொழுதோ நாம் தூக்கி எறிந்து விட்டோம் நமது சிகரட்கள் நம்மை சுவாசிக்கும் நறுமணத்தில் இந்த இரவு நிறைந்து தளும்பிக் கொண்டே இருக்கிறது. (நண்பர் இராஜமார்த்தாண்டனுக்கு) ஒரு ஆட்டுக்குட்டியின் பாடல் ஒரு ஆட்டுக்குட்டியின் பாடல் கசாப்புக் கடையின் வெட்டுமரத்தோடு முடிந்துவிடும் என்று நீங்கள் வருத்தப்படவோ பகடி செய்யவோ வேண்டாம் ஓங்கிய அரிவாளின் கீழே தலையில் தண்ணீர் ஊற்றப்படும் பொழுது கூட மரணம் பற்றிய பிரக்ஞையற்று குலுக்கி எறிவோம் ஓர் உடல்மழையை; உள்ளக இடம்பெயர் மனித முகாம்கள் பக்கத்து நாட்டின் அகதி முகாம்கள் எல்லையோர தற்காலிகக் கொடுஞ் சிறைகள் விசாரணைக் கொட்டடிகள் வீட்டுக் காவல்கள் என்று வதைபடும் மனிதர்களை விட எத்தகு மேன்மையான வாழ்வுடன் நாங்கள் புல்வெளிகளில் அலைகிறோம் என்பதை நினைத்துப் பாருங்கள் எங்கள் மேய்ப்பர்கள் பெற்ற காசுக்காக நாங்கள் கொல்லப் படுவதில் ஒரு அறம் இருக்கிறது ஆனால் நீங்கள் எந்த அறமும் அற்று ஒருவரை யொருவர் கொல்வது பற்றி உங்களால் மே என்று கூட கத்த முடியாது எங்கள் கொலைகளின் கதறல்களுக்கும் உங்கள் கொலைகளின் கதறல்களுக்கும் நடுவில் ஒரு சிறு கிறுக்கலைக் கூட உங்களால் வரைய முடியாது. 2 இருமைகள் என்பது எதார்த்தம் எனில் அதில் ஒரு கை அள்ளி என் கண்களைக் கழுவுவேன் இரவு பகலோ, இறப்போ பிறப்போ இருமைகள் றெக்கைகளாக ஒரு பறவைக் கூட்டமாய் பழுப்பு வானில் பறந்து திரிவேன் மூன்றாம் நான்காம் அடுக்குகள் தேடி அதல பாதாளம் மூழ்கிப் பார்ப்பேன் இதுவும் அதுவும் கவ்வி முயங்கும் இடமோ பொழுதோ வெளியோ சிந்தும் இன்மையின் இனிமையை பருகி மகிழ்வேன் ஒரு சிறு ஆட்டுக் குட்டியல்ல நான் எல்லாப் புள்ளிகளிலும் இருக்க முடிகிற ஒரு முடிவிலி எனக்குள் சுழல்கிறது அதன் வெண்மணற் பரப்பில் கோபுரங்களும் மலைகளும் கடல்களும் நகரங்களும் ஆகாயமும் கூட சிப்பிகள் போலவும் நுரைச்செடிகள் போலவும் புதைந்து கிடக்கின்றன என் புல் வெளியில் மரணம் ஒரு சர்ப்பமென சரசரத்து வருகையில் நான் ஒரு நாகலிங்க மரமாவேன் என் கழுத்தைத் தழுவி ஆயிரம் நாகங்கள் பூக்களாய் தொங்கும் எங்கிலும் என்றென்றைக்கும் ஆனவன் நான். OOOOOOOO புராதனத் தோழிக்கு ஓவியப் பெண்ணின் இமைகளின் அடியில் பழந் தூரிகையின் மந்திர வரைவில் சிக்குண்டு தள்ளாடும் நாரையின் கால்களில் தொங்குகிறது என் சிற்றிதயம் இரகசியமாக அடிக்கடி திறந்து திறந்து மூடுகிறது ஓவியம் பிறிதொரு நாள் திடீரெனக் கண்டுபிடிக்கிறேன் புதைந்திருப்பது தோழியே உனது கண்களென புராதனத்திலும் நீ யென் தோழியா தெரியாது என மூடுகிறது ஓவியம் கொடிய தூக்க மாத்திரைகளும் அழிக்க முடியாத ஒரு கனவில் நாம் புணர்ந்து கிடந்ததை ஒப்புக் கொள்ள முடியாமல் அறைக்குள் இரவு கருகத் தொடங்கியது உன் உடல்மொழிகளின் மேல் ஒருபோதும் மோகம் கொள்ளாத என் பண்பாடு அக ஆழங்களில் நீந்தும் ஊதா மீன்களைக் கொல்ல முடியாமல் புராதன ஓவியனின் தூரிகையில் உன் அடர்ந்த இமைகளுக்கடியில் பழுப்பு வர்ணமாய் வழிகிறது.

அநுத்தமா / அனுத்தமா / ராஜேஸ்வரி பத்பநாபன்

அநுத்தமா அல்லது அனுத்தமா (ஏப்ரல் 16, 1922 - டிசம்பர் 3, 2010) ஒரு தமிழ்ப் பெண் எழுத்தாளர். ராஜேஸ்வரி பத்பநாபன் என்ற இயற்பெயர் கொண்ட இவர், சுமார் 300 சிறுகதைகள், 22 புதினங்கள், 15க்கும் மேற்பட்ட வானொலி நாடங்களை எழுதியுள்ளார். 1950களில் 60களிலும் நடுத்தர வர்க்கப் பெண்களின் வாழ்க்கையினை சித்தரிக்கும் படைப்புகளை எழுதியவர். தமிழ்நாட்டின் ஜேன் ஆஸ்டென் என்று புகழப்படுகிறார். இவரது குறிப்பிடத்தக்க புதினங்கள் மணல்வீடு, ஒரே வார்த்தை, கேட்டவரம் போன்றவை மெட்ரிகுலேசன் வரை படித்த அநுத்தமா தன் சொந்த முயற்சியில் இந்தி, பிரெஞ்சு, தெலுங்கு ஆகிய மொழிகளைக் கற்றார். தனது 25வது வயதில் எழுதத் தொடங்கினார். இவரது முதல் படைப்பான ”அங்கயற்கண்ணி” (1947) கல்கி இதழ் நடத்திய போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது. அடுத்து கலைமகள் இதழ் நடத்திய போட்டியில் இவரது “மணல்வீடு” புதினம் முதல் பரிசு பெற்றது. இதற்குப்பின் பல்வேறு இதழ்களில் அநுத்தமா எழுதத்தொடங்கினார். 1956ல் இவருடைய பிரேமகீதம் என்ற புதினம் தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் விருதினைப் பெற்றது. ஒரே ஒரு வார்த்தை, வேப்ப மரத்து பங்களா போன்ற அநுத்தமாவின் புதினங்கள் கன்னடத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. வேறு சில சிறுகதைகள் இந்தியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. புனைவுப் படைப்புகளைத் தவிர சில குழந்தைகளுக்கான புத்தகங்களையும் அநுத்தமா எழுதியுள்ளார். மோனிகா ஃபெல்டன் எழுதிய ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார். எழுதிய நூல்கள்[தொகு] லக்சுமி கௌரி நைந்த உள்ளம் சுருதி பேதம் முத்துச் சிப்பி பூமா ஆல மண்டபம் ஒன்றுபட்டால் தவம் ஒரே ஒரு வார்த்தை வேப்பமரத்து பங்களா கேட்ட வரம் மணல் வீடு ஜயந்திபுரத் திருவிழா துரத்தும் நிழல்கள் சேவைக்கு ஒரு சகோதரி சுப்புலட்சுமி (வாழ்க்கை வரலாறு) ருசியான கதைகள் அற்புதமான கதைகள் பிரமாதமான கதைகள் படு பேஷான கதைகள் அழகான கதைகள் விருதுகள்[தொகு] அங்கயற்கண்ணி – கல்கி சிறுகதைப் போட்டியில் 2 ஆவது பரிசு மணல்வீடு, புதினம் , கலைமகள் நாராயணசாமி ஐயர் விருது – 1949. மாற்றாந்தாய், ஜகன் மோகினி இதழின் சிறந்த சிறுகதைப் போட்டிக்கான தங்கப் பரிசு தமிழக அரசின் சிறந்த நாவல் பரிசு தமிழ் வளர்ச்சிக் கழகப் பாராட்டுப் பத்திரம் உசாத்துணைகள்[தொகு] தமிழ் எழுத்தாளர்கள் தளத்தில் அநுத்தமா சமூகப் புதினங்கள், தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தமிழ் ஆன்லைன் தளத்தில் காலச்சுவடு ஆர். சூடாமணி அஞ்சலி செய்தி தி இந்து நாளிதழில் குறிப்பு 1 தி இந்து நாளிதழில் குறிப்பு 2 இந்திய இலக்கியக் கலைக்களஞ்சியம்; சாகித்திய அகாதெமி எழுத்தாளர் அநுத்தமா காலமானார் அநுத்தமா 16.4.1922 -ல் ஆந்திராவிலுள்ள நெல்லூரில் பிறந்தார் என்றாலும், பூர்வீகம் வட ஆற்காடு மாவட்டம்தான். இவரது இயற்பெயர் ராஜேஸ்வரி பத்மனாபன். படிப்பில் மிக ஆர்வமாக இருந்த ராஜேஸ்வரிக்கு எழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போதே அதாவது 14 வயதிலேயே திடீரென்று திருமணம் செய்து வைத்து விட்டார்கள். அதனால் படிப்பு தடைப்பட்டது. திருமணமாகி ஒன்பது வருடங்கள் கழித்து, சென்னையில் மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதி, மாகாணத்திலேயே முதல் மாணவியாக வந்தார். அந்தக் காலத்திலேயே கதை எழுதணும் என்றெல்லாம் இல்லாமல், திடீரென ‘அங்கயர் கண்ணி’ என்ற கதையை எழுதினார். அது ‘கல்கி’ சிறுகதைப் போட்டியில் 2வது பரிசு கிடைத்தது. பரிசு கிடைத்த உற்சாகத்தில் தொடர்ந்து எழுத ஆரம்பித்தார். முதல் கதையைப் படித்த அவரது மாமனார்தான், ‘அநுத்தமா’ என்ற புனைப் பெயரைச் சூட்டினார். அநுத்தமா 22 நாவல்கள், சுமார் 300 சிறுகதைகள், 15க்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள், மற்றும் சிறுவர் நூல்களை எழுதியுள்ளார். இவரது முதல் நாவல் ‘ஒரே ஒரு வார்த்தை’ - மனோதத்துவ ரீதியில் தமிழில் வெளிவந்த முதல் நாவல். 1949-ல் இவர் எழுதிய ‘மணல் வீடு’ நாவலுக்கு கலைமகள் நாராயணசாமி ஐயர் விருது கிடைத்தது. இவரது ஒவ்வொரு நாவலும் மக்களின் கவனத்தைக் கவர்ந்ததோடு, தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசு, தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளார்கள் சங்க விருது எனப் பல விருதுகள் கிடைத்தன. இவரது ‘கேட்ட வரம்’ நாவலை ஸ்ரீ காஞ்சி பெரியவர் புகழ்ந்து ஆசிர்வதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘மாற்றாந்தாய்’ சிறுகதைக்கு ‘ஜகன் மோகினி’ இதழில் சிறுகதை போட்டிக்கான தங்கப் பரிசு கிடைத்தது. இவர் பறவையினங்களைப் பற்றி ஆழ்ந்து ஆராய்ந்து, சிறுவர் இலக்கியமாக நான்கு புத்தகங்கள் எழுதியுள்ளார். இவர் ஒரு சிறந்த மொழி பெயர்ப்பாளரும் கூட. பிரெஞ்ச், ருஷ்யன், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, சம்ஸ்க்ருதம் என பல மொழிகள் தெரியும் என்றாலும், ஆங்கில இலக்கியத்தில் ஆர்வம் உண்டு. பலரின் வாழ்க்கையில் இவரது நாவல்கள் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. தனது துணிச்சலான எழுத்துக்கள் மூலம் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்திற்கு மௌனமாகவே இரு பெரிய நன்மையை செய்திருக்கும் இவர் எழுத்துலகப் ‘பிரம்மா’ (less)

அப்துல் ரகுமான்

அப்துல் ரகுமான்,(நவம்பர் 9, 1937 - சூன் 2, 2017), தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப்பேராசிரியரும் ஆவார். கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார். 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர். எழுதுபவர்களின் தலைவாயிலில் தம் கவிதை வெளியீடுகளின் வாயிலாகப் புதுக்கவிதைத் துறையில் நிலைநிறுத்திக் கொண்டவர்களுள் அப்துல் ரகுமான் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவர் ஆவார். அவர் பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார். அத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார். 1960 க்கு பின் கவிதை உலகுக்கு வந்த இவர் கவியரங்கக் கவிதைகளாலும் சிறப்படைந்துள்ளார். சிலேடை வார்த்தைகளால் கேட்போரைக் கவர்வது இவரது பாணி. வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிந்தவர். அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறை கவிஞர்களுக்கு ஆசானாக விளங்கினார். ஆலாபனை கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர். பொருளடக்கம் [மறை] • 1பிறப்பு • 2கல்வி • 3பணி • 4வக்பு வாரிய தலைவராக • 5நூல்கள் o 5.1படைத்தவை o 5.2நூலாக வேண்டிய படைப்புகள் / தொடர்கள் o 5.3பதிப்பித்தவை • 6விருதுகள் • 7சான்றடைவு • 8வெளி இணைப்புகள் பிறப்பு[தொகு] அப்துல் ரகுமான் மதுரையில் வைகை ஆற்றின் தென்கரையில் 1937 நவம்பர் 2 ஆம் நாள் உருதுக் கவிஞர் மஹி என்னும் சையத் அஹமத் – ஜைனத் பேகம் இணையருக்கு மகனாகப் பிறந்தார். கல்வி[தொகு] அப்துல் ரகுமான் தனது தொடக்கக் கல்வியையும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியையும் மதுரையில் உள்ள பள்ளிகளில் பெற்றார். பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் சேர்ந்து இடைநிலை வகுப்பில் தேறினார். தொடர்ந்து அக்கல்லூரியிலேயே பயின்று இளங்கலை, முதுகலை பட்டங்களைப் பெற்றார். அப்பொழுது முனைவர் மா. இராசமாணிக்கனார், ஔவை துரைசாமி, அ. கி. பரந்தாமனார், அவ்வை நடராசன், அ. மு. பரமசிவானந்தம் ஆகிய தமிழறிஞர்களிடம் பயின்றார். சென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அதன் இயக்குநராகப் பணியாற்றிய ச. வே. சுப்பிரமணியத்தை வழிகாட்டியாகக் கொண்டு புதுக்கவிதையில் குறியீடு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பணி[தொகு] தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றதும் தியாகராசர் நடத்திய தமிழ்நாடு என்னும் நாளிதழில் மெய்ப்பு திருத்துநராகச் சிலகாலம் பணியாற்றினார். அப்பொழுது தமிழகத்தில் இருந்த ஐந்து இசுலாமியக் கல்லூரிகளுக்கு [1] விரிவுரையாளர் பதவிக்காக விண்ணப்பித்தார். அவற்றுள் வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியில் பணியாற்ற அவருக்கு 1961 ஆம் ஆண்டில் வாய்ப்புக் கிடைத்து. அங்கே சிற்றுரையாளர், விரிவுரையாளர், பேருரையாளர், பேராசிரியர், எனப் படிப்படியாக உயர்ந்து 1991ஆம் ஆண்டில் விருப்ப ஓய்வுபெற்றார். இதில் 20 ஆண்டுகள் தமிழ்த்துறையின் தலைவராகப் பணியாற்றினார். வக்பு வாரிய தலைவராக[தொகு] தமிழ்நாடு வகுப்பு வாரிய தலைவராக 2009 மே முதல் 2011 வரை பணியாற்றி வந்தார் நூல்கள்[தொகு] படைத்தவை[தொகு] வ.எண் ஆண்டு நூல் வகை குறிப்பு 01 1974 பால்வீதி கவிதை 02 1978 நேயர் விருப்பம் கவிதை 03 1985 கரைகளே நதியாவதில்லை கட்டுரை சூனியர் விகடனில் வெளிவந்த தொடர் 04 1986 அவளுக்கு நிலா என்று பெயர் கட்டுரை சூனியர் விகடனில் வெளிவந்த தொடர் 05 1986 முட்டைவாசிகள் கட்டுரை சூனியர் விகடனில் வெளிவந்த தொடர் 06 1986 மரணம் முற்றுப்புள்ளி அல்ல கட்டுரை சூனியர் விகடனில் வெளிவந்த தொடர் 07 1987 விலங்குகள் இல்லாத கவிதை கட்டுரை 08 1987 சொந்தச் சிறைகள் வசன கவிதை சூனியர் விகடனில் வெளிவந்த தொடர் 09 1989 புதுக்கவிதையில் குறியீடு ஆய்வு முனைவர் பட்ட ஆய்வேடு 10 1989 சுட்டுவிரல் பாடல் முத்தாரத்தில் வெளிவந்த தொடர் 11 1990 கம்பனின் அரசியல் கோட்பாடு ஆய்வு அமரர் ஏவி. எம். அறக்கட்டளை நினைவுச் சொற்பொழிவு 12 1995 ஆலாபனை கவிதை சாகித்திய அகாதமி விருது பெற்றது. பாக்யா இதழில் வெளிவந்த தொடர். 13 1998 பித்தன் கவிதை குங்குமத்தில் வெளிவந்த தொடர் 14 1998 விதைபோல் விழுந்தவன் கவியரங்கக்கவிதைகள் அண்ணா கவியரங்கக் கவிதைகள் 15 1998 முத்தமிழின் முகவரி கவியரங்கக் கவிதைகள் மு. கருணாநிதியைப் புகழ்ந்து பாடியவை 16 1999 பூப்படைந்த சபதம் கட்டுரை 17 1999 தொலைப்பேசிக் கண்ணீர் கட்டுரை 18 2003 காற்று என் மனைவி கட்டுரை 19 2003 உறங்கும் அழகி கட்டுரை 20 2003 நெருப்பை அணைக்கும் நெருப்பு கட்டுரை 21 2003 பசி எந்தச் சாதி கட்டுரை 22 2003 நிலவிலிருந்து வந்தவன் கட்டுரை 23 2003 கடவுளின் முகவரி கட்டுரை 24 2003 முத்தங்கள் ஓய்வதில்லை கட்டுரை 25 2004 காக்கைச் சோறு கட்டுரை 26 2004 சோதிமிகு நவகவிதை கட்டுரை 27 2004 மின்மினிகளால் ஒரு கடிதம் கவிதை கஜல் கவிதைகள் 28 2005 தாகூரின் 'சித்ரா' மொழிபெயர்ப்பு 29 2005 ரகசிய பூ கவிதை 30 2005 சிலந்தியின் வீடு கட்டுரை 31 2005 இது சிறகுகளின் நேரம் கட்டுரை சூனியர் விகடனில் வெளிவந்த தொடர் 32 2006 இல்லையிலும் இருக்கிறான் கட்டுரை 33 2006 பறவையின் பாதை கவிதை 34 2007 இறந்ததால் பிறந்தவன் கவியரங்க கவிதை முதல் தொகுதி 35 2008 தட்டாதே திறந்திருக்கிறது கட்டுரை 36 2010 எம்மொழி செம்மொழி கட்டுரை 37 2010 பூக்காலம் கட்டுரை 38 2011 தேவகானம் கவிதை 39 கண்ணீர் துளிகளுக்கு முகவரி இல்லை கவிதை 40 2013 பாலை நிலா கவிதை நூலாக வேண்டிய படைப்புகள் / தொடர்கள்[தொகு] • முத்தாரத்தில் வெளிவந்த கேள்வி - பதில் • ஆனந்தவிகடனில் வெளிவந்த ஈழ வரலாறு • கவியரங்கக் கவிதைகள் பதிப்பித்தவை[தொகு] • குணங்குடியார் பாடற்கோவை • ஐந்து சிறுகவிதைத் தொகுப்புகள் விருதுகள்[தொகு] கவிக்கோ என அழைக்கப்படும் அப்துல் ரகுமானுக்கு பல்வேறு விருதுகள் பல்வேறு அமைப்புகளால் வழங்கப்பட்டன. அவை வருமாறு: வ.எண் ஆண்டு விருது வழங்கியவர் குறிப்பு 1 1986 கவியரசர் பாரிவிழா விருது குன்றக்குடி அடிகளார் 2 1989 தமிழன்னை விருது தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் இவ்விருது புதுக்கவிதைக்காக வழங்கப்பட்டது 3 1989 பாரதிதாசன் விருது தமிழக அரசு 4 1989 கலைமாமணி விருது தமிழக அரசு 5 1992 அக்ஷர விருது அக்னி 6 1996 சிற்பி அறக்கட்டளை விருது கவிஞர் சிற்பி அறக்கட்டளை 7 1997 கலைஞர் விருது தி. மு,க. ஒரு இலட்சம் ரூபாய் 8 1998 ராணா இலக்கிய விருது 9 1999 சாகித்ய அகாடமி விருது சாகித்ய அகாடமி, டெல்லி ஆலாபனை கவிதைத் தொகுதிக்காக வழங்கப்பட்டது 10 2006 கம்ப காவலர் கொழும்பு கம்பன் கழகம், இலங்கை 11 2007 பொதிகை விருது பொதிகை தொலைக்காட்சி, சென்னை 12 2007 கம்பர் விருது கம்பன் கழகம், சென்னை 13 2007 சி. பா. ஆதித்தனார் இலக்கிய பரிசு தினத்தந்தி நாளிதழ் ஒரு இலட்சம் ரூபாய் 14 2008 உமறு புலவர் விருது ஒரு இலட்சம் ரூபாய் சான்றடைவு[தொகு] 1. Jump up↑ (1) உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி, (2) சென்னை புதுக்கல்லூரி, (3) வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரி, (4) திருச்சி ஜமால் முகமது கல்லூரி (5) இசுலாமியா கல்லூரி, வேலூர் கவிக்கோ அப்துல் ரகுமான்... உதிர்ந்த மெளனம்! #RIP தமிழின் தனிப்பெரும் அடையாளமாக விளங்கிய கவிக்கோ அப்துல் ரகுமானை காலம் பறித்துக் கொண்டுவிட்டது. தனக்கென இயல்பானதொரு மொழிக்கட்டை கட்டமைத்துக்கொண்டு, தனது வெளியில் சமரசமில்லாமல், எவ்வித விசாரணைகளுக்கும் தலை வணங்காமல் ஆகப்பெரும் படைப்புகளை எழுதிக் குவித்த அந்த மகா கவிஞன், 2.6.2017 அதிகாலை 2 மணி அளவில் இயற்கையில் கலந்து விட்டார். 'எல்லாக் கலை வடிவங்களும் மக்களுக்கானதே' என்ற கொள்கையில் தீவிரம் கொண்டிருந்த கவிக்கோ, தமிழ்க் கவிதை வடிவத்தை வளப்படுத்திய ‘வானம்பாடி’ இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். தமிழுக்கு அரிய பல இலக்கிய வடிவங்களை அறிமுகம் செய்தவர். வெறும் படைப்பாளியாக மட்டுமில்லாமல், அரசியலிலும், சமூக பிரச்னைகளிலும் தம் கவிதையோடு களத்தில் நின்றவர். 1937, நவம்பர் 9ம் தேதி மதுரையில், வைகை ஆற்றின் தென்கரையிலுள்ள கீழ்ச்சந்தைப்பேட்டையில் பிறந்தவர் அப்துல் ரகுமான். தந்தை சையத் அஹமத், புகழ்பெற்ற உருதுக் கவிஞர். மஹி என்ற பெயரில் பல படைப்புகளை வழங்கியவர். அம்மா பெயர் ஜைனத் பேகம். சிறு வயதிலேயே வாசிப்புப் பழக்கம் ஒட்டிக்கொள்ள தமிழார்வமும், திராவிட இயக்க ஈடுபாடும் அப்துல் ரகுமானை எழுத்து நோக்கி நகர்த்தியது. ஒன்பது வயதில் "எழிலன்னை ஆட்சியடா! -அது எங்கெங்கும் காணுதடா! பொழிலெங்கும் பாடுகிறாள் -புதுப் பூக்களில் புன்னகைத்தாள் மாலை மதியத்திலும் -அந்தி மந்தார வானத்திலும் சோலையின் தென்றலிலும் -சுக சோபனம் கூறுகிறாள் மலைகளின் மோனத்திலே- அந்த வானவில் வண்ணத்திலே அலைகளின் பாடலிலே -அவள் அருள் பொங்கி வழியுதடா! " என்ற தனது முதல் கவிதையை எழுதினார் அப்துல் ரகுமான். மதுரை தியாகராசர் கல்லூரியில் முனைவர் மா. இராசமாணிக்கனார், ஔவை துரைசாமி, அ. கி.பரந்தாமனார், அ. மு. பரமசிவானந்தம் போன்ற பெரும் ஆளுமைகளிடம் பயின்ற அனுபவம் அவரின் சிந்தனையையும் எழுத்தையும் செம்மைப்படுத்தியது. புதுக்கவிதையின் நுட்பங்களில் ஒன்றான குறியீடுகள் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். இன்டர்மீடியட் படித்துக்கொண்டிருந்தபோது, 'காதல் கொண்டேன்' என்ற தலைப்பில் அப்துல்ரகுமான் ஒரு கவிதை எழுதினார். அக்கவிதை ஆனந்த விகடன் இதழில் வெளிவந்தது. அவர் எழுதி அச்சாக்கம் பெற்ற முதல் கவிதை அதுதான். ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம், இந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளிலும் புலமை பெற்றிருந்த அப்துல் ரகுமான், படிப்பு முடிந்ததும் தியாகராசர் கல்லூரி நிறுவனர் கருமுத்து தியாகராசர் நடத்திய 'தமிழ்நாடு' நாளிதழில் பிழை திருத்துனராக பணியில் சேர்ந்தார். பிறகு, வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் இணைந்தார். 1961-ல் சிற்றுரையாளராக பணியில் சேர்ந்த கவிக்கோ, படிப்படியாக உயர்ந்து, சுமார் 20 ஆண்டு காலம் தமிழ்த்துறை தலைவராக செயலாற்றினார். 1964-ல் கவிக்கோவின் முதல் கவிதைத்தொகுப்பு 'பால்வீதி' வெளியானது. பல இளம் படைப்பாளிகளுக்கு இந்தத் தொகுப்பு பெரும் ஆதர்சமாக இருந்தது. இன்றளவும் இருக்கிறது. 'சர்ரியலிசம்' என்ற 'மீமெய்மையியல்' பாணியைத் தமிழுக்குக் கற்றுத்தந்த தொகுப்பாக அதைக் கருதலாம். கவியரங்கக் கவிதை வாசிப்பை ஒரு நிகழ்த்துக் கலையாக உருமாற்றியவர் கவிக்கோதான். 'நேயர் விருப்பம்', 'ஆலாபனை', 'பித்தன்', 'பாலைநிலா', 'கண்ணீர் துளிகளுக்கு முகவரி இல்லை' உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகள் கவிக்கோவின் பேராளுமைக்குச் சான்று. அரபி மொழியில் தோன்றி, பாரசீகத்திலும் உருதுவிலும் மலர்ந்து மணம் வீசும் கஜல் இலக்கியத்தைத் தமிழுக்கு அறிமுகம் செய்தது அப்துல் ரகுமான்தான். 'மின்மினிகளால் ஒரு கடிதம்' என்ற பெயரில் கஜல் கவிதைத் தொகுப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். ஹைக்கூ கவிதைகளைத் தமிழுக்கு அறிமுகம் செய்ததும் கவிக்கோதான். 'பூப்படைந்த சப்தம்', 'தொலைப்பேசிக் கண்ணீர்', 'காற்று என் மனைவி', 'உறங்கும் அழகி', 'நெருப்பை அணைக்கும் நெருப்பு' உள்பட 17-க்கும் மேற்பட்ட கட்டுரை நூல்களும் வெளிவந்துள்ளன. கவியரங்கக் கவிதைகளும் தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. ‘ஆலாபனை' என்ற கவிதைத் தொகுப்புக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. அப்துல்ரகுமான் ஜூனியர் விகடனில் எழுதிய 'சொந்தச் சிறைகள்', 'மரணம் முற்றுப்புள்ளி அல்ல', 'முட்டைவாசிகள்', 'அவளுக்கு நிலா என்று பெயர்', 'கரைகளே நதியாவதில்லை' போன்ற தொடர்கள் வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றவை. கவிதை, கட்டுரைகளில் இயங்கிய அளவுக்கு கவிக்கோ நாவல், சிறுகதைகளில் இயங்கவில்லை. இதுகுறித்து கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, "கவிதையே கரைகாணமுடியாத கடல். அதில் மூழ்கி எடுக்க வேண்டிய முத்துக்களோ ஏராளம். எனவே நான் கவிதைகளில் முழுக்கவனம் செலுத்த விரும்புகிறேன். சிறுகதைகளையும் நாவல்களையும் நான் வெறுக்கவில்லை. ஆனால் மூன்றையும் எழுதுவது மூன்று மனைவிகளைக் கட்டிக்கொள்கிறவனின் நிலைமை ஆகிவிடும். அதனால்தான் சிறுகதையையும் நாவலையும் எழுதுவதைத் தவிர்க்கிறேன்.." என்று பதில் அளித்தார். அப்துல் ரகுமான் எழுதிய நான்கு சிறுகதைகள் ஆனந்த விகடனில் வெளிவந்திருக்கின்றன. 'ராட்சஸம்' என்ற சிறுகதை 14.3.1993 ஆனந்த விகடன் இதழில் வெளிவந்தது. அந்தச் சிறுகதை.... ராட்சஸம் தலைவர் ‘பார்ட்’ பார்ட்’டாய் வந்து இறங்கினார். தலையிலிருந்து மார்பு வரை, மார்பிலிருந்து இடுப்பு வரை, இடுப்பிலிருந்து முழங்கால் வரை, முழங்காலிலிருந்து பாதம் வரை என்று நான்கு பெரிய வர்ணத் துண்டுகள். சாரம் முன்பே கட்டப்பட்டுவிட்டது. துண்டுகளை ஒட்டுப் போட்டுத் தூக்கி நிறுத்த வேண்டியதுதான் பாக்கி. பெருமாளின் தலைமையில் ஆட்கள் பம்பரமாய்ச் சுழன்று கொண்டிருந்தனர். நாளை காலையில் கூட்டம். விடிவதற்குள் முடித்தாக வேண்டும். அந்தப் பரபரப்பில் ஏற்பட்ட பதற்றமும் எரிச்சலும் அவருடைய ஏவல்களில் தெரிந்தன. பையன் டீ கொண்டுவந்து கொடுத்தான். வேலையிலிருந்து கண்களைப் பெயர்க்காமலே பெருமாள் டீயை வாங்கிக் குடித்தார். பெருமாள் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர். பெரிய பெரிய தலைவர்களையெல்லாம் அவர் பார்த்திருக்கிறார். அவர்களுக்கெல்லாம் இப்படி ராட்சஸக் கட்-அவுட்டுகள் தேவைப்படவில்லை. அவர்கள் சுயமான விஸ்வரூபத்தில் உயர்ந்து, மக்கள் மனத்தில் பிரமாண்டமாக நின்றார்கள். அவர்களுடைய உயரம் தூரிகையாலும் மரத்தாலும் ஆனதல்ல; அவர்களைத் தூக்கி நிறுத்தச் சாரமும் தேவைப்பட்டதில்லை. “ஐயா...” என்ற குரலில் அவர் சிந்தனை கலைந்தது. எதிரில் ஓர் இளைஞன். “நானும் கூடமாட ஒத்தாசை செய்யட்டுமா?” “வேண்டாம் தம்பி... போதுமான ஆட்கள் இருக்காங்க...” “கூலி ஒண்ணும் வேணாங்க, சும்மா செய்றேன். தலைவருன்னா எனக்கு உசுரு. அவருக்குக் கட்-அவுட் வெக்கறதிலே நானும் சேந்துக்கணும்னு ஆசையா இருக்கு...” “ஓம் பேரு என்ன?” - பெருமாளின் கேள்வியில் கொஞ்சம் வியப்பும் கலந்திருந்தது. “கபாலிங்க...” “சரி.. போய்ச் செய்...” கபாலி உற்சாகமாக ஓடினான். சாரத்தில் கால்பகுதி கட்டப்பட்டு முடிந்திருந்தது. அவன் அந்தக் கால்களில் விழுந்து வணங்கினான். எழுந்து பக்கத்தில் தரையில் கிடந்த தலைவரின் முகத்தை ஆசையோடு தடவினான். வலை வீசும் இந்தப் புன்னகை யாருக்கு வரும்..? அவனுக்குள் சுரந்த பயபக்தி முகத்தில் கசிந்தது. கபாலி கட்சிக்காரன் அல்ல. உண்மையான அர்த்தத்தில் அரசியலும் அவனுக்குத் தெரியாது. காட்டப்படுவதை நம்பும் இனம் அவன். தலைவர் கிழவியின் தலையைத் தடவுவது, ஊனமுற்ற சிறுவனுக்குச் சக்கர வண்டி கொடுத்து அவனுக்கு முத்தமிடுவது, தீ விபத்தில் வீடு இழந்தவர்களுக்கு உணவுப்பொட்டலம், வேட்டி, சேலை கொடுப்பது... இதையெல்லாம் படங்களில் பார்த்து, ஏழைகளுக்காக உருகி உருகிப் பேசுவது, அவர்கள் உரிமைகளுக்காக வீராவேசமாக முழங்குவது... இதையெல்லாம் கேட்டு, அவனுடைய இதயத்தில் ஒரு சிம்மாசனம் போட்டு அவரை உட்கார வைத்திருந்தான். செய்தித்தாள்களில் காட்டப்படும் வெளிப்பக்கத்தை மட்டுமே தரிசிக்கிறவன் அவன். தூண்டில் முள்ளை மறைக்கும் புழுவை அடையாளம் காணும் பக்குவமெல்லாம் அவனுக்கு இல்லை. தலைவர் எங்கே பேசினாலும் அங்கே போய்விடுவான். ‘என் கண்ணின் மணிகளே!’ என்று அவர் தொடங்கும்போது பரவசமாகி, மெய்சிலிர்த்து, விசிலடித்து ஆரவாரித்துக் கைதட்டுவான். தேர்தல் காலத்தில் அவருக்காகப் பசி, தாகம் பார்க்காமல் வேலை செய்வான். போஸ்டர் ஒட்டுவான்; சுவரில் எழுதுவான்; ஊர்வலம் போவான்; உரக்கக் கோஷம் போடுவான்; அவரை யாராவது குறைத்துப் பேசினால், சண்டைக்குப் போய்விடுவான். இதில் எத்தனையோ முறை அடி உதை பட்டு ரத்தம் சிந்தியிருக்கிறான். இதையெல்லாம் தலைவருக்குக் காணிக்கையாகவே நினைத்துக்கொள்வான். தேர்தலில் தலைவர் ஜெயித்துவிட்டால், தானே ஜெயித்ததுபோல் பட்டாசு கொளுத்திக் கூத்தாடுவான். அந்த ராமனுக்குதான் ஓர் அணில் என்று அவனுக்கு நினைப்பு. ஆனால், அவன் முதுகு எப்போதும், யாராலும் தடவிக் கொடுக்கப்பட்டதில்லை. அதை அவன் எதிர்பார்த்ததும் இல்லை. ஆட்கள், இடுப்புப் பகுதியைத் தூக்க வந்தார்கள். கபாலியும் அவர்களோடு சேர்ந்து கைகொடுத்தான். அந்தக் கனம் அவனுக்குச் சுமையாகப் படவில்லை. தலைவரைத் தூக்குகிறோம் என்ற பெருமையும் மகிழ்ச்சியும் அவன் முகத்தில் பளிச்சிட்டன. நேரம் ஆக ஆக, பெருமாளுக்குப் பதற்றம் அதிகரித்தது. கொஞ்ச நேரத்துக்கு முன்னால்தான் அமைச்சர் ஒருவர் வந்து, வேகம் போதாதென்று கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டுப் போனார். அவர் பரபரப்பாக ஆட்களை வேகப்படுத்தினார். அது கட்சிக் கூட்டம்தான். ஆனாலும் மேடை பந்தல் வேலைகளில் அரசாங்க அதிகாரிகள் பயபக்தியோடு ஈடுபட்டிருந்தனர். அரசாங்க வாகனங்கள் இங்கும் அங்கும் புழுதி பறக்க ஓடிக்கொண்டிருந்தன. “இவங்களுக்கெல்லாம் பெரிசாக் காட்டணும். அதுவும் அவசரமா காட்ட ணும். ஜனநாயகம்கிறானுங்க... அமைச்சர்கள் ஜனங்களுடைய சேவகர்கள் என்கிறானுங்க... ஆனா, ஜனங்களைவிட, தான் ஒசத்தி... ஜனங்க தங்களை அண்ணாந்து பாக்கணும்.. தங்களை அற்பமா நெனச்சு கால்லே விழுந்து வணங்கணும்... கப்பம் கட்டணும்னு நெனக்கிறானுங்க... தெரியாத தேவதையைவிட தெரிந்த அரக்கன் மேல்ங்கற ஜனங்க மனப்பான்மையை இவங்க நல்லா தெரிஞ்சு வெச்சிருக்கானுங்க. அதனாலே தங்களுடைய உருவத்தை, முகத்தை செயற்கையா அசிங்கமா பெரிசாக்கி, பாமரர் மனசிலே பலவந்தமா திணிக்க முயற்சி பண்றாங்க. உருவத்தைப் பெரிசா காட்டுனா பெரிய மனுஷன் ஆயிட முடியுமா? இது படங்களை நம்புற தேசம். அதனாலே எல்லாரும் படங்காட்ட றானுங்க.. தூத்தேறி...” - பெருமாள் காறித் துப்பினார். தலைப்பகுதியைப் பொருத்திவிட்டு ஆட்கள் இறங்கிக்கொண்டிருந்தார்கள். கபாலிக்கு உடையெல்லாம் அழுக்காகி விட்டது. உடம்பில் அங்கங்கே சிராய்ப்பு. ஆனால், அவனுக்குக் களைப்போ, வலியோ தெரியவில்லை. அவன் தூரத்தில் போய் நின்று பார்த்தான். தலைவர் வானளாவ உயர்ந்து அட்டகாசமாக, கம்பீரமாக நின்றுகொண்டிருந்தார். பின்னால் இருந்த கோயில் கோபுரம்கூடத் தெரியவில்லை. அதைவிட உயரமாக அதை மறைத்துக்கொண்டு நின்றிருந்தார் தலைவர். அந்தப் புன்னகை... யாருக்கு வரும் அந்தப் புன்னகை? கபாலியின் உடம்பெல்லாம் பரவசம் பரவியது. அவன் கையெடுத்துக் கும்பிட்டான். “எவ்வளவு செலவாகியிருக்கும்?” - யாரோ ஒருவன் கேட்டான். “ஐம்பதாயிரம் ரூபாய்னு சொன்னாங்க...” “ஐம்பதாயிரமா? அடப்பாவிங்களா... ஐம்பது குடும்பம் ஒரு மாசத்துக்குப் பசியில்லாம சாப்பிடலாமே... ராட்சஸன் மாதிரி அவ்வளவையும் விழுங்கிக்கிட்டு நிக்கிறதைப் பாரு...” கபாலிக்கு இதயத்தில் ‘சுரீர்’ என்றது. கோபத்தோடு திரும்பிப் பார்த்தான். கட்டையும் குட்டையுமாக இருந்தவன்தான் அப்படிப் பேசிக்கொண்டிருந்தான். கபாலி அவன்மேல் பாய்ந்தான். “எங்க தலைவரு தெய்வம்யா... அவரைப் போய் ராட்சஸன்னா சொல்றே?” என்று கத்தியபடி அவன் முகத்தில் குத்தினான். எதிர்பாராத தாக்குதலில் முதலில் நிலைகுலைந்து திகைத்துப்போன அந்த ஆள், தன்னைச் சமாளித்துக்கொண்டு கபாலியை ஓங்கி எட்டி மிதித்தான். கபாலி குலைந்துபோய்க் கீழே விழுந்தான். “இவனாடா தெய்வம்? ஏண்டா தெய்வம்ங்கற வார்த்தையை இப்படி அசிங்கப் படுத்துறீங்க... உன்ன மாதிரி முட்டாப் பசங்களுக்குத்தான்டா இவன் தெய்வம்... உடுத்த மறு வேட்டி இல்லாம இந்த ஊருக்கு வந்தவன்டா ஒங்க தலைவன். இப்போ இந்த ஊர்லே பாதி அவனுக்குச் சொந்தம்... எங்கேயிருந்துடா வந்தது இவ்வளவு பணம்? குடியை ஒழிக்காம சாகமாட்டேன்னு கூவுறானே ஒங்க தலைவன்... பினாமியிலே ரெண்டு சாராயத் தொழிற்சாலை இருக்குடா அவனுக்கு... உனக்குத் தெரியுமா? சேரியை எல்லாம் ஒழிக்காம தூங்கமாட்டேன்னு மேடையெல்லாம் முழங்குறானே... அவன் எப்படி எங்க சேரியை ஒழிச்சான் தெரியுமா? தனக்குப் பெட்டி பெட்டியா கொண்டுவந்து கப்பம் கட்டறவன் ஓட்டல் கட்டறதுக்காக, ஒரு சேரியையே நெருப்பு வெச்சுக் கொளுத்த வெச்சவன்டா ஒங்க தலைவன்... அந்தத் தீயிலே வீடு, வாசல், குழந்தையைப் பறிகொடுத்தவன்டா நான்...” - அந்த ஆள் பொங்கி வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தான். கைகலப்பைப் பார்த்துப் பதறிக் கொண்டு ஓடிவந்தார் பெருமாள். வம்பு எதுவும் வந்துவிடக் கூடாதே என்று, அந்த ஆளைச் சமாதானம் பண்ணி காலில் விழாத குறையாகக் கெஞ்சி அவனை அனுப்பிவைத்தார். பிழைப்புக்குக் கேடு வரும் என்றால் எதனோடும் சமரசம் செய்துகொள்ளப் பழகிவிட்டவர் அவர். கபாலியையும் சமாதானப்படுத்திவிட்டு அவர் போய்விட்டார். கபாலிக்கு இதயத்தில் வலித்தது. ‘இல்லை... இல்லை... இதெல்லாம் உண்மையா இருக்க முடியாது... இருக்கக் கூடாது. அவன் எதிர்க்கட்சிக்காரனா இருப்பான்... பொய் சொல்றான்... தலைவர் இப்படியெல்லாம் செய்யமாட்டார்...’ -ஆனால், அவன் இதயத்திலிருந்த சிம்மாசனம் லேசாக ஆடத் தொடங்கியது. கட்-அவுட்டை அவன் நிமிர்ந்து பார்த்தான். ‘தலைவரே, இது உண்மையா? உண்மையா?’ என்று அவன் இதயம் அலறியது. காற்று ‘ஹோ.. ஹோ..’ என்று இரையத் தொடங்கியது. மரங்கள் பேயாடின. தலைவரின் அந்தப் புன்னகை மெதுவாக மறைந்தது. வாயின் இரண்டு பக்கத்திலும் கோரப் பற்கள் முளைத்தன. முகம் விகாரமானது. கபாலி எழுந்து ஓடினான். “இல்லை.. இது உண்மை இல்லை” என்று கட்-அவுட்டின் கால்களைப் பிடித்துக் கொண்டு கதறினான். ஆணைக்குக் காத்திருந்ததுபோல், காற்று சீறிச் சினந்து ஆவேசமாகக் கட்-அவுட்டை அசைத்தது. கொஞ்ச நேரத்தில் கட்-அவுட் மடமடவென்று இரைச்சலுடன் சரிந்து விழுந்தது. கட்-அவுட்டின் இடிபாடுகளை அகற்ற வந்தவர்கள், அதன் அடியில் ஒரு பிணத்தைக் கண்டு திடுக்கிட்டார்கள். பிணம் ரகசியமாக அப்புறப்படுத்தப்பட்டது. அந்த இடத்தில் சாட்சியாகக் கொஞ்சம் ரத்தக் கறை மட்டும் இருந்தது - ‘இது உண்மையா...? உண்மையா?’ என்ற மௌனமான அலறலோடு. அப்துல் ரகுமான் 10 கவிக்கோ எனப் போற்றப்படும் தமிழ் கவிஞர் ‘கவிக்கோ’ என்று போற்றப்படும் சிறந்த தமிழ்க் கவிஞர் அப்துல் ரகுமான் (Abdul Rahman) பிறந்தநாள் இன்று (நவம்பர் 9). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: * மதுரை கீழ்ச்சந்தைப் பேட்டையில் (1937) பிறந்தவர். தந்தை உருதுக் கவிஞர். தாத்தா உருது, பாரசீக மொழிகளில் கவிதை புனையும் ஆற்றல் மிக்கவர். அதனால், இயல்பிலேயே இவரும் கவிதை எழுதும் திறன் கொண்டிருந்தார். * பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, இவருக்கு மேற்கொண்டு படிக்க விருப்பம் இல்லை. தமிழில் மட்டுமே ஆர்வம் கொண்டிருந்தார். மதுரை தியாகராஜர் கல்லூரியில் தமிழை சிறப்புப் பாடமாக எடுத்துப் படிக்கலாம் என்பதை அறிந்தவர் மகிழ்ச்சியுடன் அங்கு சேர்ந்தார். இலக்கண, இலக்கியங்கள் பயின்றார். இவரும் கவிதை எழுதத் தொடங் கினார். * தமிழில் உயர்கல்வி பயின்றார். அப்போது, ஆங்கில இலக்கியம் மீதும் நேசம் பிறந்தது. கீட்ஸ், ஷெல்லி உள்ளிட்ட கவிஞர்களின் கவிதையில் மனம் கவரப்பட்டார். கல்லூரியில் நடக்கும் அனைத்து கவிதைப் போட்டிகளிலும் இவருக்குத்தான் முதல் பரிசு கிடைக்கும். * முதுகலைக் கல்வி பயிலும்போது, மவுலானா ஜலாலுத்தீன் ரூமி, இக்பால், தாகூர், கலீல் ஜிப்ரான் ஆகியோரது கவிதைகளைப் படித்தார். அவர்களைப் போலவே எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டு, அவ்வாறே எழுதவும் தொடங்கினார். ‘தமிழ்நாடு’ என்ற நாளிதழில் சில ஆண்டுகள் பணியாற்றினார். தமிழில் புதுக்கவிதைக் குறியீடுகள் குறித்து ஆராய்ந்து சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். * தமிழ், ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம், இந்தி ஆகிய பல மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார். சமஸ்கிருதமும் கற்றார். எந்தத் துறையில் இறங்கினாலும் அதன் வேர் வரை சென்று ஆழக் கற்பது இவரது இயல்பு. 1974-ல் இவரது முதல் கவிதையான ‘பால்வீதி’ வெளிவந்தது. * ‘திராவிட நாடு’, ‘திராவிடன்’, ‘முரசொலி’, ‘தென்றல்’, ‘இன முழக்கம்’, ‘மன்றம்’, ‘விகடன்’ உள்ளிட்ட பல இதழ்களில் இவரது தொடர் கட்டுரைகள், சிறுகதைகள் வெளிவந்தன. இலக்கியத்தின் பல களங்களில் முத்திரை பதித்தாலும், ஒரு கவிஞராகவே இவர் புகழ்பெற்றார். இவரது தத்துவக் கவிதைகள் நல்ல வரவேற்பைப் பெற்றன. * ‘வானம்பாடி’ இயக்கத்தின் முக்கிய கவிஞர்களில் ஒருவராக மலர்ந்தார். கவியரங்கக் கவிதைகளாலும் புகழ்பெற்றார். பேசும்போது சிலேடை மொழிகளாலும் மெல்லிய நையாண்டியாலும் மற்றவர்களைக் கவர்வது இவரது பாணி. * வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் முதலில் தமிழ் விரைவுரையாளர், பின்னர் பேருரையாளர் அதன்பிறகு பேராசிரியராக உயர்ந்தார். தமிழ்த் துறை தலைவராக 20 ஆண்டுகள் பணியாற்றினார். * இவரது ‘ஆலாபனை’ கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. இதன்மூலம், வெகுகாலமாக தமிழ்க் கவிதைக்கு வழங்கப்படாமல் இருந்த இந்த விருதை தமிழுக்குப் பெற்றுத் தந்தார். ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கிய வகைகளை தமிழில் பரவச் செய்தார். சூஃபி பாடல்களின் தத்துவ தரிசனம் இவர் பாடல்களில் பிரதிபலிக்கும். * கவியரசர் பாரிவிழா விருது, தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி, கம்பர் விருது, உமறுப்புலவர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். ஆய்வுக் கட்டுரை, சொற்பொழிவு, கவியரங்கம் என பல களங்களிலும் முத்திரை பதித்துவரும் கவிக்கோ அப்துல் ரகுமான் இன்று 80-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அப்துல் ரகுமான் என்ற கவி ஆளுமை இது கவிஞர் அப்துல் ரகுமான் நினைவில் நடத்தப்படும் கூட்டம்தான். இஸ்லாமியர் பலரிடையே – எங்கள் பகுதியில் ஒரு வழக்கம் உண்டு. இறந்தவரை நல்லடக்கம் செய்த பிறகு, மூன்றாம் நாள் மற்றும் 10-20-40ஆம் நாள், நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்துக்குச் சென்று பாத்திஹா ஓதிவிட்டு நறுமணத் தைலங்களையும் சந்தனத்தையும் பூக்களையும் தூவிவிட்டு வருவதுண்டு. இப்போதெல்லாம் இந்த வழக்குகள் அருகி வருகின்றன என்பது வேறு விஷயம். அப்படிச் செல்லும்போது, கபரஸ்தானில் இறந்தவர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையை ஒட்டியிருக்கும் இதர கல்லறைகளுக்கும் பூக்களைத் தூவுவார்கள். அதுபோல அப்துல் ரகுமான் பற்றிப் பேசுவதற்கு முன் அவருடைய சமகாலக் கவிஞர்கள் சிலரின் கல்லறையிலும் சில சொற் பூக்களைத் தூவ விரும்புகிறேன். ஏனென்றால், அவர்களும் அப்துல் ரகுமானுடன் பயணித்தவர்கள், அப்துல் ரகுமான் போலவே தமிழுக்குப் பெருமை சேர்த்தவர்கள். அண்மையில் இயற்கை நம்மிடமிருந்து பறித்துக்கொண்ட கவிஞர்கள், படைப்பாளிகள் எண்ணிக்கை அதிகம். அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் புனைவிலக்கிய எழுத்தாளர்கள் அசோகமித்திரன், க.சீ. சிவகுமார், மா. அரங்கநாதன்,மூத்த தமிழறிஞர் ச.வே. சுப்பிரமணியன், அறிவியல் தமிழில் சாதித்த மணவை முஸ்தபா, கவிஞர்கள் ஞானக்கூத்தன்,இன்குலாப், அப்துல் ரகுமான், நா. காமராசன். இவர்களில் இன்குலாப், அப்துல் ரகுமான், நா. காமராசன் மூவரும் கிட்டத்தட்ட சமகாலத்தவர்கள். மூவரும் இந்தி எதிர்ப்பு இயக்கத்துடன் தொடர்புடையவர்கள். மூவரும் மதுரை தியாகராசர் கல்லூரி மாணவர்கள். மூவரும் தமிழ்ப் பேராசிரியர்களாக இருந்தவர்கள். மூவரும் கவிஞர்கள், அதிலும் புதுக்கவிதையின் முன்னோடிகள், மூவரும் நண்பர்கள். ”அப்துல் ரகுமான் என் வலது கண். சிற்பி என் இடது கண். இன்குலாப் என் இடதுகை. காமராசன் என் வலதுகை.” என்றவர் மீரா. இன்குலாப் ஆரம்பகாலத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஒட்டி திமுக ஆதரவாளராக இருந்து, பின்னர் முழுக்கவும் பொதுவுடைமையின் பக்கம் போனார். ஏராளமான பத்திரிகைகளில் கவிதைகளும் கட்டுரைகளும் எழுதினார். அடக்கு முறைகளுக்கு எதிராகவும், குரலற்றவர்களுக்காகவும், மார்க்சியத்துக்கு ஆதரவாகவும் புரட்சிக் குரல் எழுப்பினார். இவருடைய கவிதைகள் நேரடியாக அரசியலைப் பேசுபவை. மனுசங்கடா நாங்க மனுசங்கடா உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு உயரமுள்ள மனுசங்கடா நாங்க மனுசங்கடா எங்களோட மானம் என்ன தெருவில் கிடக்கா- உங்க இழுப்புக்கெல்லாம் பணியுறதே எங்களின் கணக்கா உங்களோட முதுகுக்கெல்லாம் இரும்புல தோலா நாங்க ஊடு புகுந்தா உங்க மானம் கிழிஞ்சு போகாதா என்ற பாடல் ஒலிக்காத போராட்ட மேடைகளே இருந்ததில்லை என்கிற அளவுக்குப் பிரபலமான பாடலை எழுதியவர் இன்குலாப் என்கிற சாகுல் ஹமீது. கே.ஏ. குணசேகரன் குரலில் பாடல் இன்னும் வலுப்பெற்றது. (இவரும் 2016 ஜனவரியில் மறைந்து விட்டார்.) கவிதைகள் மட்டுமல்ல, நாடகங்களும் சிறுகதைகளும்கூட எழுதியிருக்கிறார் இன்குலாப். சென்னையில் ராயப்பேட்டையில் வசித்த காலத்தில் அவருடைய இல்லத்துக்குச் சென்று உரையாடிய நினைவுகள் எழுகின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் முதல் தேதி இன்குலாப் மறைந்தார். மதுரை தியாகராசர் கல்லூரியில் இன்குலாபுடன் சக மாணவராக இருந்து, இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் பங்கேற்றவர் நா. காமராசன். காற்றுக்கும் ஆசை வந்து உன் ஆடை தொட்டு விளையாடும் வாழ்க்கைக் கவலைகளில் நான் வாங்கி விட்ட பெருமுச்சு கடற்கரைக்கு போய் இருந்தால் கப்பல்களும் கவிழ்ந்திருக்கும் என்று வாழ்க்கையையும் காதலையும், சந்திப்பிழை போன்ற சந்ததிப்பிழை நாங்கள் காலத்தின் பேரேட்டைக் கடவுள் திருத்தட்டும் என்று எழுபதுகளிலேயே திருநங்கைகளையும் கவிதைகளில் வடித்தவர் நா. காமராசன். மரபுக் கவிதைகளிலிருந்து புதுக் கவிதைக்கு மாறிய அவருடைய யாத்திரைக்காரன் என்ற கவிதையில் சந்தம் விளையாடும் சில வரிகள் — ஏடெடுத்து கவிஎழுதத் தாய் சுமந்தாள் - எனை ஈன்றெடுத்துத் தாலாட்டிப் பால் கொடுத்தாள் மூன்றெழுத்துப் படித்தவுடன் பாட்டெடுத்தேன் - என் மூச்சு ஊஞ்சல் கவிசுமக்க நான் நடந்தேன். கூடு விட்டுக் கூடு பாய்ந்து போனதில்லை - நான் கொள்கை விற்றுக் கோபுரத்தில் ஏறவில்லை! கூட வந்து கொடி பிடிக்க யாருமில்லை குடியிருக்க எனக்கு ஒரு வீடுமில்லை! இப்படி எழுதியவர்தான் கறுப்பு மலர்கள் என்ற நூலின் வாயிலாக எம்ஜிஆரின் கண்ணில்பட்டு, அவருடைய ஆதரவுடன் திரைப்படங்களின் பக்கம் போனார். 600க்கும் மேற்பட்ட திரைப்படப்பாடல்களை எழுதியிருக்கிறார். ஆர்.எம். வீரப்பனின் சத்யா மூவீஸ் தயாரித்த எல்லாத் திரைப்படங்களுக்கும் ஆஸ்தான பாடலாசிரியர் போல இருந்தார். கொஞ்சம் கொஞ்சமாக கவிஞர் என்ற பெயர் மறைந்து திரைப்படப் பாடலாசிரியர் என்றே அடையாளப்படுத்தப்பட்டு விட்டார். மே மாதம் 24ஆம் தேதி மறைந்தார் நா. காமராசன். “இன்று எழுதிக்கொண்டிருக்கிற இளம் கவிஞர்கள் பலரும் அரை வேக்காடுகள். இரண்டாயிரமாண்டு தமிழ்க் கவிதை நெடுங்கணக்கில் எத்தனை நூல்கள் இருக்கின்றன என்பதைக்கூட அறியாத அரிச்சுவடிக் கவிஞர்கள். இவர்கள் எழுதுகிற கவிதைகளால் அச்சகம் நடத்துகிறவர்களுக்குத்தான் லாபமே தவிர, தமிழ் மொழிக்கோ கவிதையை நேசித்து வாசிக்கத் துடிப்பவனுக்கோ லாபமல்ல. அப்துல்ரகுமான், இன்குலாப் இரண்டுபேரையும்தான் ஆளுமையான கவிஞர்கள் என்று ஏற்றுக்கொள்வேன்.” என்று தயங்காமல் உடைத்துப் பேசியவர் நா. காமராசன். (இனிய உதயம் நேர்காணல். நக்கீரன் குழுமத்தின் இனிய உதயம் பத்திரிகையில் அப்துல் ரகுமான் சில காலம் ஆலோசகராக இருந்தார்.) “இந்த மாத தில்லிகை கூட்டத்தில் அப்துல் ரகுமான் குறித்துப் பேசலாம் என்று தில்லிகை நண்பர்கள் கேட்டார்கள், நீங்கள் பேசுங்கள்” என்று தமிழ்ச் சங்கத் துணைத்தலைவர் பென்னேஸ்வரன் சொன்னபோது, கடந்தகால நினைவுகள் வந்து மோதிச்சென்றன. அப்போதெல்லாம் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் ஆஸ்தான வரவேற்பாளனாக நான் இருந்தேன். தமிழகத்திலிருந்து இலக்கிய உலகைச் சேர்ந்த யார் வந்தாலும் அவர்களைப் பற்றி அறிமுகம் செய்வது, வரவேற்புரை வழங்குவது, தொகுத்துப் பேசுவது போன்றவை என் பொறுப்புகள். அது இன்று இருப்பதுபோல இணையம் இல்லாத காலம்,நூலகத்திலிருந்து நூல்களைக் கொண்டே தயாரிக்க வேண்டும், நூலகத்தில்கூட நூலகக் கல்வி பெற்ற நூலகரோ,கணிப்பொறியில் நூல்களின் பட்டியலோ ஏதும் இல்லாத காலம் என்பதையும் சொல்லியாக வேண்டும். அப்படித்தான் ஒரு நாள், அப்துல் ரகுமானுக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டதை ஒட்டி வழக்கம்போல தமிழ்ச் சங்கத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. கவிஞர் இராய செல்லப்பா தலைமை வகித்ததாக நினைவு. அந்த நிகழ்ச்சிக்கு அவசர அவசரமாக எழுதிய வரவேற்புக்கவிதை துண்டுச் சீட்டுகளாக என் அலமாரியில் ஏதோவொரு கோப்பில் இருந்த நினைவு வந்தது. 1999இல் எழுதிய அந்த அறிமுகக் கவிதையிலிருந்து சில வரிகள் — ஆலாபனை செய்தவரை ஆராதிக்க வந்தது ஏன்? - என் அப்பாவின் பெயர்தான் இவருக்கு என்பதாலா? – இல்லை. என்போன்ற இளைஞர்கள் எண்ணற்ற பேருக்கு புதிதாகக் கவிதைகளைப் புனைந்தவர் என்பதனால். (ஆலாபனை – அப்துல் ரகுமானின் கவிதைத் தொகுப்பு, சாகித்ய அகாதமி விருது பெற்றது. என் அப்பா பெயரும் அப்துல் ரகுமான்தான்.) இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞனையும் இனிய தமிழகம்தான் இயல்பாகப் போற்றியதோ? இல்லை துவக்கத்தில் இருந்த நிலை தொடர்கிறது கவிதை இழிதாகத் தெரிகிறது. அதனால்தான் விருதா எழுத்துக்கும்கூட விருதுகள் தரப்படும் விரல்விட்டு எண்ணும் அளவும் கவிதை விருதுகளைப் பெற்றதில்லை. (சாகித்ய அகாதமியில் விருது பெற்ற கவிஞர்கள் / கவிதை நூல்கள் மிகக் குறைவு. 1968இல் வெள்ளைப் பறவை என்ற கவிதைத் தொகுப்புக்காக அ. சீனிவாச ராகவனுக்கு விருது வழங்கப்பட்டது. அதன் பின் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கவிதைக்கு விருது பெற்றவர் அப்துல் ரகுமான்.) ஏனோ தெரியவில்லை கவிதை என்றாலே தமிழனுக்கு ஓர் அச்சம் தலைநகரத்தானுக்குத் தகும் இந்த அச்சம் தமிழனுக்கு எதற்கிந்த அச்சம்? – ஒருவேளை கதை என்னும் கதைகள் சாதிப்பதைவிட கவிதை என்னும் கைவாள் கலகம் மூட்டுமெனும் கவலைதானோ? எது எப்படியோ... அண்மைக்காலத்தில் அகாதமியில் ஓர் அகமாற்றம் தெரிகிறது, மகிழ்ச்சி. வானம்பாடியின் வழியில் வந்தவர்க்கு வாய்ப்புக் கிடைக்கிறது, மகிழ்ச்சி. எது கவிதை எவன் கவிஞன் என்னுமொரு சண்டை எப்போதும் இருக்கும், இருக்கட்டும். மரபு கவிதையா புதுசு கவிதையா வசனம் கவிதையா உரை கவிதையா என உரசிப் பார்க்கிறவர்களுக்கு ஒரு விஷயம் — உள்ளத்தைத் தொடுவது கவிதை உணர்வைக் கிளர்த்திடல் கவிதை கள்ளத்தைச் சாடல் கவிதை களிப்புற வைப்பது கவிதை ஊருக்கு உழைப்பது கவிதை ஊரறியச் சொல்வது கவிதை இப்படியே சொல்லிப்போனால் இந்த மாலையும் முடிந்து போகும் மனிதன் தான் மனிதனென்று மனதில் கொள்ளச் செய்யும் எதுவும் கவிதையாகும் என்பதை நினைவில் வைப்போம். அப்படித்தான் அப்துல் ரகுமான் ஆலாபனையைச் சொன்னார். விருது என்பதை விமர்சிப்பவர்கள்கூட அது விதை என்பதை மறுக்க மாட்டார்கள். கவிஞரே... கருணையின் தொண்டரே உயர்விருது பெற்றுவிட்டு ஓய்ந்து விடாதீர் இன்னும்பல கவிதைகளை எமக்குத் தாரும் - வாழ்வின் இன்பத்தை ருசிப்பதற்கு வழியைக் காட்டும். இந்த அறிமுக வரவேற்பைத் தொடர்ந்து ஆலாபனை என்ற நூலில் இடம்பெற்ற கவிதைகளைப் பற்றி சிறு அறிமுகம் செய்திருக்கிறேன். இவர் கவிதை ஆராதனை செய்யும் ஆண்டவனைக்கூட அடக்கி வைக்கும் (ராங் நம்பர் என்னும் கவிதை கடவுளைக் கேள்வி கேட்கிறது, கடைசியில் கடவுள் நழுவி விடுகிறார்.) இவர் கவிதை வானத்தோடு போட்டியிட்டு வாகை சூடும் (போட்டி என்னும் கவிதையில் மனிதன் புதுப்புது லட்சியங்களை எடுத்து வைக்க, வானம் தோற்கிறது.) இவர் கவிதை வயிற்றில் விழுந்துகிடப்பவன் இதயத்திற்கு ஏற வேண்டும் வாழ்க்கையை ருசிக்க வேண்டுமென வாதம் செய்கிறது. (ராஜாங்கம் என்னும் கவிதை) வாழ்க்கை என்பது கடைசிப் பக்கம் கிழிந்துபோன துப்பறியும் நாவல் என்று தத்துவம் பேசுகிறது. (அதுதான் என்ற கவிதை) பாதைகள் பலவற்றைக் கண்டாலும் இதயத்திற்குப் போகும் பாதைதான் ஊர்போய்ச் சேர்க்கும் என்று பாதை காட்டுகிறது. (பாதை என்னும் கவிதை) இவர் கவிதையின் வார்த்தையும் ஒருவனுக்கு தாகம் தணிக்கலாம் புன்னகையும் ஒருவன் உள்ள விளக்கேற்றலாம். (கொடுக்கல் என்ற கவிதை. இதைப் பற்றி பிறகு பார்க்கலாம்.) மேலே சொன்ன கவிதைகள் எல்லாம் சாகித்ய அகாதமி விருது பெற்ற ஆலாபனை நூலிலிருந்து எடுத்தவை. வாய்ப்புக் கிடைத்தால் ஆலாபனையை வாசித்துப் பாருங்கள். ‘கவிக்கோ’ என்று பெயர் பெற்ற அப்துல் ரகுமான் 1937 நவம்பர் 2 ஆம் நாள் மதுரையில் பிறந்தவர். தந்தை சையத் அகமத்– தாய் ஜைனப் பேகம். தந்தையும் பாட்டனாரும் உருதுக்கவிஞர்கள் என்று அவருடைய பேட்டியில் சொல்லியிருக்கிறார். (இந்தப் பதிவு எழுதிய பிறகு, அவருடைய தந்தை மஹதி என்ற பெயரில் கான் சாகிப் உள்பட சில நூல்கள் எழுதியிருக்கிறார் என்று தெரிய வந்தது.) மதுரை தியாகராசர் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் பட்டம் பெற்றார் அப்துல் ரகுமான். பள்ளிப்பருவத்திலேயே கவிதைப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றிருக்கிறார். பள்ளிப்படிப்பு முடித்த பிறகு மேற்கல்வியில் விருப்பம் இருக்கவில்லை. மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழைப் பாடமாகப் படிக்கலாம் என்று அறிந்ததால்தான் கல்லூரிக்குச் சென்றதாக அவரே சொல்லியிருக்கிறார். கல்லூரியிலும் கவிதைப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றிருக்கிறார். புதுக் கவிதையில் குறியீடு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து, சென்னைப் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார்.1961ஆம் ஆண்டு வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்து 1991ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றார். தமிழக அரசின் உருதுமொழிக் குழு உறுப்பினராகவும், செம்மொழிக்காக மத்திய அரசு அமைத்த தமிழ்மொழி மேம்பாட்டு வாரிய உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். வானம்பாடி இயக்கத்துடன் இணைந்திருந்தவர் அப்துல் ரகுமான். பால்வீதி என்ற கவிதைத் தொகுப்பின்மூலம் புதுக்கவிதையில் அறிமுகம் ஆனவர், புதுக்கவிதையை அறிமுகம் செய்தவர். புதுக்கவிதையிலும் தனக்கென ஒரு தனி நடையை அமைத்துக் கொண்டவர். ஒருவேளை, புதுக்கவிதை குறித்து ஆய்வு செய்ததன் மூலம் அப்போதுதான் தலைதூக்கிக் கொண்டிருந்த புதுக்கவிதைகள் குறித்தும், பல்வேறு கவிஞர்களின் நடைகள் குறித்தும் ஆய்ந்து அறிந்து கொள்ள முடிந்தது காரணமாக இருக்கலாம். அவருடைய கவிதைகளில் உவமைகளும் உருவகங்களும் படிமங்களும் அதிகம் இருக்கும். ஹைக்கூ என்பது ஜப்பானிய கவிதை வடிவம். ஹைக்கூவைப் பற்றி தமிழர்களுக்கு அறிமுகம் செய்தவர் பாரதியார். சுதேசமித்திரன் இதழில் ஜப்பானியக் கவிதை என்ற தலைப்பில் 16-10-1916இல் ஹைக்கூ குறித்த கட்டுரையை எழுதினார். அதில் இரண்டு ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை மொழி பெயர்த்திருந்தார். இதுவே தமிழுக்கு ஹைக்கூ குறித்தான முதல் அறிமுகத்தைத் தந்தது. பருவ மழையின் புழையொலி கேட்பீர் இங்கென் கிழச் செவிகளே - பூஸோன் யோ ஸாஹோ தீப்பட்டெரிந்தது வீழுமலரின் அமைதி என்னே - ஹோ கூஷி மூன்று அடிகள் கொண்ட ஜப்பானிய ஹைக்கூ ஐந்து, ஏழு, ஐந்து என சீர்களைக் கொண்டு 17 சீர்களில் எழுதப்படும். ஹைக்கூவில் பின்பற்ற வேண்டிய மரபுகளாக அவர் முன்வைப்பவை இவை— ஹைக்கூவில் முதல் அடி ஒரு கூறு. ஈற்றடி ஒரு கூறு. ஹைக்கூவின் அழகும் ஆற்றலும் ஈற்றடியில்தான் உள்ளது. ஈற்றடி ஒரு திடீர் வெளிப்பாட்டை, உணர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி முழுக் கவிதையையும் வெளிச்சப்படுத்த வேண்டும். ஹைக்கூவின் மொழி ஊளைச் சதையற்ற மொழி. தந்தி மொழியைப் போல், அவசியமற்ற இணைப்புச் சொற்களை விட்டு விட வேண்டும். என் வீடு எரிந்து போனதால் நன்றாகப் பார்க்க முடிகிறது உதிக்கும் நிலாவை. என்று மசாஹிடே-யின் கவிதையையும், இந்த அழகிய கிண்ணத்தில் பூக்களை அடுக்கி வைப்போம் அரிசிதான் இல்லையே என்று பாஷோ-வின் வரிகளையும் தமிழில் தந்த அப்துல் ரகுமான் பின்னர் 1974இல் பால்வீதி என்ற நூலில் ஹைக்கூ கவிதைகளை எழுதினார். தமிழில் முதல் முதலாக ஹைக்கூ கவிதைகளைப் படைத்தவர் அப்துல் ரகுமான். இரவெல்லாம் உன் நினைவுகள் கொசுக்கள் தமிழில் ஹைக்கூ எழுதுகிறபோது, ஜப்பானிய ஹைக்கூவின் மரபுகளை கறாராகப் பின்பற்றத் தேவையில்லை என்பது அப்துல் ரகுமானின் கருத்து. “ஒரு மொழியின் கவிதை பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவது வியப்பல்ல. ஆனால் ஒரு மொழியின் கவிதை வடிவம் உலகின் பல மொழிகளிலும் புகழ் பெறுவதென்பது வியப்பானது” என்று ஹைக்கூ குறித்து கூறுகிறார் அப்துல் ரகுமான். இதேபோல, லிமரிக் என்ற கவிதை வகையின் தமிழ் வடிவமாக வந்தது குறும்பா. இதில் ஐந்து வரிகள் இருக்க வேண்டும். முதலாவது, இரண்டாவது, ஐந்தாவது ஆகிய மூன்று வரிகளில் ஒத்த ஓசையுடன் இயைபுத்தொடை இருக்க வேண்டும். அதேபோல மூன்றாவது, நான்காவது வரிகளும் இயைபுடன் முடிய வேண்டும். இயைபுத் தொடை என்றால் வேறொன்றுமில்லை, அடுத்தடுத்து வரும் வரிகளின் கடைசிச் சொற்கள் இயைந்து வருவது. உதாரணமாக, வள்ளுவரும் மாணவராய் ஆனார். திருக்குறளில் தேர்வெழுதப் போனார் முடிவு வெளியாச்சு... அந்தோ ஃபெயிலாச்சு… பாவம் அவர் படிக்கவில்லை கோனார் இது ஒரு காலத்தில் மிகப் பிரபலமான குறும்பா. நமது கல்வி முறையின் என்னும் மிக ஆழமான பிரச்சினையை மிக எளிமையான வரிகளில் வெளிப்படுத்துகிறது. (மேலே சொன்ன குறும்பா எழுதியவர் அப்துல் ரகுமானா வலம்புரி ஜானா என்று ஐயம்.) லிமரிக் வடிவத்தை தமிழில் பிரபலப்படுத்தியவர் ஈரோடு தமிழன்பன் என்பதையும் இங்கே பதிவு செய்ய வேண்டும். ஹைக்கூ வடிவக் கவிதையை நகைச்சுவையாக, கேலியாக எழுதினால் அது சென்ரியூ என்னும் கவிதை வகையாகும். தமிழில் ஹைக்கூ, சென்ரியூ வடிவங்களைப் பரவலாக்கியதில் ஈரோடு தமிழன்பனுக்கு பெரும்பங்கு உண்டு. மீ. ராசேந்திரன் என்னும் கவிஞர் மீராவும் லிமரிக் வடிவில் எழுதியிருக்கிறார். யார் சொல்லிக் கொடுத்தவன் அடி பிள்ளைக்கு வலி வாத்தியாருக்கு இது ஈரோடு தமிழன்பனின் சென்ரியு. அடுத்த தில்லிகை நிகழ்ச்சிகளில் வாய்ப்புக் கிடைத்தால் மீரா, ஈரோடு தமிழன்பன், தமிழறிஞர் ச.வே. சுப்பிரமணியன் ஆகியோரைப் பற்றியும் உரையாடலாம். அண்மையில் மறைந்த ச.வே. சுப்பிரமணியன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவராக இருந்தபோது, அவரின் வழிகாட்டலில்தான் அப்துல் ரகுமான் ‘புதுக்கவிதையில் குறியீடு’ என்ற தலைப்பில் தன் முனைவர் பட்ட ஆய்வினை முடித்தார் என்பதும் குறிப்பிட வேண்டிய செய்தி. பால்வீதியில் துவங்கி, பாலை நிலா வரை நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களில் அப்துல் ரகுமான் எழுதாத தலைப்புகளே இல்லை. “வருடம் தவறாமல் குழந்தைகள் தினம் கொண்டாடுபவர்களே! இனிமேல் தினங்களை விட்டு விட்டுக் குழந்தைகளை எப்போது கொண்டாடப் போகிறீர்கள்?” என்று கேட்டவருடைய கல்வி குறித்த கவிதையில் ஒன்றை குறிப்பாகச் சொல்ல வேண்டும். பித்தன் மழைக்காகப் பள்ளிகூடத்தில் ஒதுங்கினான் குழந்தைகளின் கையிலிருந்த புத்தகங்களைப் பார்த்து புத்தகங்களே சமர்த்தாயிருங்கள் குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள் என்றான் அவன் மேலும் சொன்னான்… குழந்தைகளே பாடப் புத்தகங்களாக இருக்கிறார்கள் அவர்கள் கையில் ஏன் காகிதக் குப்பைகளைத் தருகிறீர்கள்? உங்கள் புத்தகங்கள் கண்களைத் திறப்பதில்லை ஊற்றுக் கண்களைத் தூர்த்து விடுகின்றன காகித ஓடங்களை நம்பி இருப்பவர்களே! நீங்கள் எப்படி அக்கரை போய்ச் சேர்வீர்கள்? இதோ! இரவு பகல் என்ற ஏடுகள் உங்களுக்காகவே புரளுகின்றன நீங்களோ அவற்றைப் படிப்பதில்லை இதோ உண்மையான உயிர் மெய் எழுத்துக்கள் உங்கள் முன் நடமாடுகின்றன நீங்களோ அவற்றைக் கற்றுக் கொள்வதில்லை ஒவ்வொரு பூவும் பாடப் புத்தகமாக இருப்பதை நீங்கள் அறிவதில்லை. நீங்கள் நட்சத்திரங்களைப் படிக்க கற்றிருந்தால் உச்சரிக்க முடியாத எழுத்துக்களில் அதிகமான அர்த்தம் இருப்பதை அறிந்திருப்பீர்கள் நீங்கள் மின்னலின் வாக்கியங்களை வாசிக்க முடிந்திருந்தால் ஒளியின் ரகசியத்தை அறிந்திருப்பீர்கள், உங்களுக்குக் கண்ணீர்த் துளிகளைப் படிக்கத் தெரிந்திருந்தால் நீங்கள் மனிதனின் சாரத்தை அறிந்திருப்பீர்கள். எழுத்துக்களால் அல்ல காயங்களால் கற்பதே கல்வி என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் புத்தகங்கள் விளக்குகளாக இருக்கின்றன. சூரியனைக் காண விளக்குகள் தேவைப்படுவதில்லை. இதை அப்புறம் நிதானமாகப் படித்துப் பார்க்கும்போது நமது கல்விமுறை குறித்த சிந்தனை விரியும். பால்வீதி தொகுப்பில் ஒரு கவிதை தேர்தல் அரசியலை கேலி செய்கிறது — ஐந்தாண்டுக்கு ஒரு முறை சுயம்வர மண்டபத்தில் போலி நளன்களின் கூட்டம் கையில் மாலையோடு குருட்டு தமயந்தி. முன்னர் நான் குறிப்பிட்ட கொடுக்கல் என்ற கவிதை இது — கொடுக்கிறேன் என்று நினைப்பவனே! கொடுப்பதற்கு நீ யார்? நீ கொடுப்பதாக நினைப்பதெல்லாம் உனக்குக் கொடுக்கப்பட்டதல்லவா? உனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம் உனக்காக மட்டும் கொடுக்கப்பட்டதல்ல உண்மையில் நீ கொடுக்கவில்லை உன் வழியாகக் கொடுக்கப்படுகிறது நீ ஒரு கருவியே இசையைப் புல்லாங்குழல் கொடுப்பதில்லை இசை வெளிப்படுவதற்கு அது ஒரு கருவியே இயற்கையைப் பார் அது கொடுக்கிறோம் என்று நினைத்துக் கொடுப்பதில்லை தேவையுள்ளவன் அதிலிருந்து வேண்டியதை எடுத்துக்கொள்கிறான் நீயும் இயற்கையின் ஓர் அங்கம் என்பதை மறந்துவிடாதே கொடுப்பதற்குரியது பணம் மட்டும் என்று நினைக்காதே உன் வார்த்தையும் ஒருவனுக்குத் தாகம் தணிக்கலாம் உன் புன்னகையும் ஒருவன் உள்ளத்தில் விளக்கேற்றலாம் ஒரு பூவைப் போல் சப்தமில்லாமல் கொடு ஒரு விளக்கைப் போல பேதமில்லாமல் கொடு உன்னிடம் உள்ளது நதியில் உள்ள நீர்போல் இருக்கட்டும் தாகமுடையவன் குடிக்கத் தண்ணீரிடம் சம்மதம் கேட்பதில்லை கொடு நீ சுத்தமாவாய் கொடு நீ சுகப்படுவாய் கொடு அது உன் இருத்தலை நியாயப்படுத்தும். இந்தக் கவிதையில் சுஃபி கவிதை மரபு இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. 1999இல் திருவள்ளுவர் கலையரங்கில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவைத் தொடர்ந்து அவர் பேசும்போது கூறியது குறிப்பிலும் நினைவிலும் இருக்கிறது. “காதல் கவிதை எழுதுகிறீர்களே என்று கேட்கிறார்கள். நான் இளமையில் காதல் கவிதைகள் எழுதியதில்லை. இப்போது எழுதுபவையும் எல்லாம் காதல் கவிதைகள் என்று சொல்ல முடியாது. நீ என்பது பெண் மட்டுமல்ல. உலகத்தில் உள்ளது எல்லாவற்றையும் நீ-யாகக் குறிப்பிடுகிறேன். ஆழமாகப் பார்த்தால் அது இறைவனை நோக்கிய பயணம். சுஃபி தத்துவம். இறைவனையே காதலியாகப் பார்க்குமாறு கூறுவது போல – காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாரதி பாடியது போல –சர்வத்தையும் தழுவிக்கொள்கிற, மனிதாபிமானத்துக்கும் மேற்பட்ட நீ அது.” கவியரங்கக் கவிதைகளில் அவருடைய சொல்லாற்றலைக் காண முடியும். செம்மொழியான தமிழ்மொழியே என்ற கவிதையிலிருந்து சில வரிகள் மட்டும் பார்ப்போம் — பத்துப்பாட்டு என்றால் பதறுகிறோம் திரைப்படத்தில் குத்துப்பாட்டு என்றால் குதூகலமாய் ஆடுகிறோம். கங்கைகொண்டவன்தான் இன்று காவிரியையும் இழந்துவிட்டு கையைப் பிசைந்து நிற்கிறான். முப்படையால் நான்கு திசைகளையும் வென்றவன் சாதி சமயம் கட்சி என்ற முப்படையால் தோற்று முகவரியை இழந்துவிட்டான். தாய்ப்பாலுக்கு அப்பால் உன் தனப்பாலை குடித்ததொரு ஒரு வாய்ப்பால் வளர்ந்த மகன் வஞ்சகப் போதையின் நோய்ப்பால் அருந்தி நூதனமாய் சாகின்றான். உன்னை மொழிகளுக்கெல்லாம் முதன் மொழி என்றாய் அதனால் உன்னை முதலாக போட்டு வியாபாரம் தொடங்கிவிட்டான். தனக்குக் கிடைத்த விருதுகளில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் வழங்கிய தமிழன்னை விருது, சாகித்ய அகாதமி விருது, திமுக வழங்கிய கலைஞர் விருது ஆகியவற்றையே சிறந்தவை எனக் கருதினார் அப்துல் ரகுமான். திமுக தலைவர் திரு கருணாநிதியும் அப்துல் ரகுமானும் பரஸ்பரம் மிகுந்த மரியாதை கொண்டிருந்தவர்கள். 2009-11காலத்தில் அப்துல் ரகுமான் வஃக்பு வாரியத் தலைவராக இருந்தார். 1970கள் துவங்கி திரு கருணாநிதி பங்கேற்ற பல கவியரங்குகளில் அப்துல் ரகுமான் கவிதை வாசித்திருக்கிறார். மற்றபடி, அரசியல் பதவிகள் ஏதும் வகித்ததில்லை. திமுக ஆட்சிக்காலத்தில் துதி பாடியதுமில்லை. திரு கருணாநிதி குறித்து அவர் எழுதிய கவிதை — என் கவிதை உனக்கு பூச்சொரியும்: … ஏனெனில் நீ எனக்கு ஆச்சரியம். முதுகு வலிக்கிறது உனக்கு.. வலிக்காதா… எத்தனை காலம்தான் எங்களை சுமக்கிறாய். ஒரு நாள் தமிழிடம் முகவரி கேட்டேன் – அது மே/பா மு.கருணாநிதி என்றது. இரட்டை இலை விரித்து நாட்டையே உண்டவர்களை எச்சில் இலையாக்கி குப்பைத் தொட்டியில் எறிந்தாய் நீ. நட்சத்திர ஆட்சியை இனி இந்த நாடு தாங்காது. சில நட்சத்திரங்கள் நாட்டை ஆள ஆசைப்படுகிறது… தமிழா விழித்துக் கொள்… வெள்ளித் திரை ஆட்சிக்காக உன் வேட்டியும் உருவப்படலாம்…. கவிதை என்ற அளவில் இது என்னைப் பொறுத்தவரை பெரிய அளவுக்கு திருப்தி தரவில்லை என்றாலும், திரு கருணாநிதி மீது அவருக்கு எவ்வளவு மதிப்பிருந்தது என்பதைக் காட்டவே இந்தக் கவிதையை சுட்டினேன். திரு கருணாநிதி அப்துல் ரகுமானைப் பற்றி எழுதியது இது — வெற்றி பல கண்டு நான் விருது பெற வரும்போது வெகுமானம் என்ன வேண்டும் எனக் கேட்டால் அப்துல் ரகுமானைத் தருகவென்பேன். அப்துல் ரகுமான் என் ஆஸ்தானக் கவிஞர் என்று கூறியவர் திரு கருணாநிதி. அப்துல் ரகுமான் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது. ஆனால் கவிஞர் மறுத்து விட்டார். அரசியலுக்குப் போகவில்லையே தவிர, அவருக்கு அரசியல் இல்லாமல் இல்லை. திராவிட முன்னேற்றக் கழக அரசியலின்பால் ஆர்வம் இருந்தாலும், பொதுவுடைமைக் கருத்திலும் ஈடுபாடு இருந்தது. இரண்டையும் அவர் முரணாகப் பார்க்கவில்லை, இணையாகப் பார்த்தார், அதனால்தான் வானம்பாடிக் கவிஞர்களில் ஒருவராக இருந்தார். வானம்பாடியிலும்கூட இணைந்திருந்தாரே தவிர, மூழ்கியிருக்கவில்லை. எல்லாரும் புரட்சிக் கவிதைகளையே எழுதிக் கொண்டிருக்க முடியாது என்றவர் அவர். பாரதிக்கு தாசனாக இருந்தாலும் பாரதிதாசன் கடவுள் மறுப்பாளராக இருந்தார். பாரதிதாசனையும் பயின்று ஈர்க்கப்பட்ட வானம்பாடிக் கவிஞர்கள் பலரும் கடவுளை, பக்தியை, பக்தியின் பெயரிலான மூடத்தனங்களை கேள்வி கேட்பவர்களாக இருந்தனர். அப்துல் ரகுமானும் எழுதியிருக்கிறார். பாபர் மசூதி விவகாரம் குறித்து அப்துல் ரகுமான் எழுதியது இது — இதோ... உனக்கு வீடு கட்டுவதற்காகவே உன் வீட்டை இடிக்கும் மூடர்கள். இடிக்கப்படுவதில் நீ இடிக்கப்படுகிறாயா? கட்டப்படுவதில் நீ கட்டப்படுகிறாயா? இந்தியனே, முதலில் நீ இருக்க ஒரு இடம் தேடு. ஆண்டவனுக்கு வேண்டிய இடத்தை அவன் தேடிக் கொள்வான். மதாபிமானம் இருக்கட்டும் கூடவே கொஞ்சம் மனிதாபிமானமும் இருக்கட்டும் நண்பனே. அவருடைய சமகாலத்தவர்களும், அவருக்குப் பின்னால் வந்தவர்களும் திரைத்துறையில் நுழைந்து புகழும் பணமும் பெற்றபோதும் அப்துல் ரகுமான் திரைப்படப்பாடல் பக்கம் போகவில்லை. அங்கே சுதந்திரம் கிடைக்காது என்று கருதினார். ஏதோ ஒரே ஒரு திரைப்படத்தில் முழு சுதந்திரம் தருவதாகச் சொல்லி வற்புறுத்தவே, அந்தப் படத்துக்கு பாடல்கள் எழுதியதாகவும், ஆனால் அந்தப்படமே வெளிவரவில்லை என்றும் செய்திகள் கூறுகின்றன. அதற்குப் பிறகும் அவர் திரைப்படத்தின் பக்கம் போகவில்லை. ‘சினிமா பல மூட நம்பிக்கைகள் கொண்ட உலகம். அங்கு பெரிய படிப்பு தேவையில்லை. உயர்ந்த விஷயங்களை எழுத முடியாது. எழுதினாலும் யாராவது அதை மாற்றச் சொல்வார்கள். அங்கு எனக்குச் சரிப்பட்டு வராது’ என்று கூறிவிட்டவர் அவர். (பெ. கருணாகரன் கட்டுரை) திரைப்படச் சுருள்களை தீக்குச்சிக்குத் தின்னக் கொடுப்போம் என்று கூறிய கவிஞர் இப்போது எங்கே இருக்கிறார் என்பது எல்லாருக்கும் தெரியும். எந்த மதமும் விமர்சனங்களை ஏற்பதில்லை, பொறுப்பதில்லை. மதத்தின் பெயரால் பின்பற்றப்படும் சில பிற்போக்குத்தனங்களைக் கைவிடுவது குறித்தோ, மாறிவரும் காலச்சூழலுக்கு ஏற்ப மறுபரிசீலனை செய்வது குறித்தோ பேச முடியாது. இந்த மதம் என்றில்லை, எல்லா மதங்களும் அப்படித்தான். அப்படியே யாராவது சில நடைமுறைகளை கேள்விக்கு உள்ளாக்கினால் அவர்கள் அந்த மதத்திலேயே தனிக் குழுவாக உருவாகிறார்கள். அவர்களுக்கென வேறு சில பிற்போக்குத்தனங்களை வலியுறுத்துகிறார்கள். இப்படி ஒவ்வொரு மதமும் தனக்குள் சில அல்லது பல குழுக்களாகப் பிரிந்துபோனாலும், ஒவ்வொரு குழுவும் தனக்கான பிற்போக்குத்தனங்களை பிடிவாதமாய் வைத்துக்கொள்கிறதே தவிர,மொத்தமாய் விட்டொதுக்க எந்த மதமும் தயாரில்லை. இதற்கிடையில், அந்தக் குழுக்களுக்குள்ளும் எத்தனை மோதல்கள், விவாதங்கள்...! இஸ்லாத்திலும் இதற்குக் குறையில்லை. இந்தச் சூழலில், இஸ்லாத்துக்குள் இருந்துகொண்டே மென்மையாகத்தான் குறைகளைச் சுட்ட வேண்டியிருக்கிறது. அதை தன்னால் இயன்ற வழியில் செவ்வனே செய்தவர் அப்துல் ரகுமான். தொடக்கம் உன் பெயரால் தொடர்வதெல்லாம் உன் அருளால் அடக்கம் நீ என் நெஞ்சில் அடங்காத பேரொளியே முதல்வா உன்னை என் முதலாகக் கொண்டதால் என் வாழ்க்கை வணிகத்தில் இழப்பே இல்லை தாள் கண்டால் குனிந்து தலை வணங்கும் பேனா உன் தாள் பணியும் உபதேசம் பெற்ற பின்னர் எழுத்தல்ல இறைவா இவையெல்லாம் என் எழுதுகோல் செய்த ‘சஜ்தாவின்’ சுவடுகள்... என்று நபிகள் நாயகம் பற்றி எழுதிய அதே அப்துல் ரகுமானின் பேனாதான், சகோதரா! எப்படி இருந்த நீ எப்படி ஆகிவிட்டாய்! பிறைச் சின்னத்தைத் தேர்தெடுத்தவனே! பிறையாகவே உறைந்து போனாயே! ஒரு காலத்தில் நீ முழு நிலவாக இருந்தாய் உன் ஏகத்துவ ஒளி இரவுகளை யெல்லாம் மதம் மாற்றியது இருண்டு கிடந்த ஐரோப்பாக் கண்டத்திற்கே ஒளியைக் கற்றுக் கொடுத்த நீ அணைந்து போன விளக்காய்க் கிடக்கிறாய் மனித மலர்களைச் சகோதரத்துவத்தால் மாலையாக்கிய நீ சமுதாய மாலையைப் பிய்த்தெறியும் குரங்காகிவிட்டாய் ஒன்றாக இருக்க வேண்டிய நீ பிரிந்து அல்லாஹ்வின் கயிற்றிலே ‘டக்-ஆஃப்-வார்’ விளையாடிக் கொண்டிருக்கிறாய் ... என்று பகுதிநேர முஸ்லிம் என்ற கவிதையில் திசைதவறிச் செல்பவர்களை, தமக்குள் மோதிக் கொள்கிறவர்களை கண்டிக்கிறார். இந்தக் கவிதை சம உரிமை இதழில் வெளியானது. இன்னும் நீளமான இக்கவிதையை முழுமையாய் வாசிக்க நினைப்பவர்கள் இணையத்தில் வாசிக்கலாம். இஸ்லாமிய நண்பர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய கவிதை இது. சாகித்ய அகாதமி விருது பெற வந்தபோது அல்லது வேறு ஏதோவொரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தபோது, நாங்கள் இருவரும் தனியாக உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது அவர், தான் ஆசிரியராக இருக்கும் இதழுக்கு தில்லியிலிருந்து எழுதுமாறு கேட்டார். அது சம உரிமை இதழா அல்லது சமநிலை சமுதாயம் என்ற இதழா என்று நினைவில்லை. ஆனால், நான் ஊடகத் துறையிலிருந்து விலகி நிற்பது என்று முடிவு செய்திருந்த காலம் அது. நாகரிகமாக,உறுதியாக மறுத்து விட்டேன். இப்போது யோசித்தால் அது தவறான முடிவு என்று தோன்றுகிறது. இஸ்லாத்தின் பெயரால் பழைய மற்றும் புதிதாகப் பிறந்துள்ள சில நடைமுறைகளைப் பற்றிய விவாதம் உள்ளுக்குள்ளிருந்து எழுந்து வருவது அவசியம். வெளியிலிருந்து வரும் விமர்சனங்கள் இன்னும் கூட்டுக்குள் சுருங்கச் செய்யவே உதவுகின்றன. பாருக்குள்ளே நல்ல நாடு என்ற கவிதை, ஜெர்மானியப் பாதிரியார் மார்ட்டின் நீய்மோல்லர் என்பவர், நாஜிகளுக்கு எதிராக எழாமல் கோழைகளைப் போல இருந்த அறிவுஜீவிகளை விமர்சித்து எழுதிய First they came for the Socialists, and I did not speak out— Because I was not a Socialist. Then they came for the Trade Unionists, and I did not speak out— Because I was not a Trade Unionist. Then they came for the Jews, and I did not speak out— Because I was not a Jew. Then they came for me—and there was no one left to speak for me. என்ற வரிகளை நினைவுபடுத்துகிறது. அவர்களைச் சிறையில் சந்தித்தேன். “என்ன குற்றம் செய்தீர்கள்” ? என்று கேட்டேன். ஒவ்வொருவராகச் சொன்னார்கள்.. எங்கள் வீட்டில் திருடிக்கொண்டு ஒருவன் ஒடினான். “திருடன் திருடன்” என்று கத்தினேன். அமைதிக்குப் பங்கம் விளைவித்தாக என்னைக் கைது செய்து விட்டார்கள். “என் வருமானத்தைக் கேட்டார்கள்” ‘நான் வேலையில்லாப் பட்டதாரி’ என்றேன் வருமானத்தை மறைத்தாக வழக்குப் போட்டு விட்டார்கள். “நான் கரி மூட்டை தூக்கும் கூலி” கூலியாக கிடைத்த ரூபாய் நோட்டில் கரி பட்டுக் கறுப்பாகிவிட்டது. கறுப்பு பணம் வைத்திருந்ததாகக் கைது செய்து விட்டார்கள். “என் வயலுக்கு வரப்பு எடுத்துக் கொண்டிருந்தேன் பிரிவினைவாதி என்று பிடித்துக் கொண்டு வந்து விட்டார்கள்” “அதிகாரி லஞ்சம் வாங்கினார், தடுத்தேன். அரசுப் பணியாளரை அவருடைய கடமையைச் செய்ய விடாமல் தடுத்ததாகத் தண்டித்து விட்டார்கள்.” “அலிபாபாவும் நாற்பது திருடர்களும்” படச் சுவரொட்டியை ஒட்டிக் கொண்டிருந்தேன். சட்டமன்ற உறுப்பினர்களை அவதூறு செய்ததாக அழைத்துக் கொண்டு வந்து விட்டார்கள்” “வறுமைக் கோட்டை அழிப்போம்” என்று பேசினேன். அரசாங்க சொத்தை அழிக்கத் தூண்டியதாக அடைத்துப் போட்டுவிட்டார்கள்” “ஊழல் பேர்வழிகளை நாடு கடத்த வேண்டும்” என்று எழுதினேன், “கடத்தல்காரன்” என்று கைது செய்து விட்டார்கள். “நான் பத்திரிக்கை ஆசிரியன். தலையங்கத்தில் உண்மையை எழுதினேன். நாட்டின் ஸ்திரத் தன்மையைக் குலைத்ததாகக் கொண்டு வந்து விட்டார்கள்” “சுதந்திர தின விழாவில் ‘ஜன கண மன’ பாடிக் கொண்டிருந்தார்கள். நான் பசியால் சுருண்டு படுத்துக்கொண்டிருந்தேன். எழுந்து நிற்க முடியவில்லை. தேசிய கீதத்தை அவமதித்து விட்டதாகச் சிறையில் அடைத்து விட்டார்கள்” “அக்கிரமத்தை எதிர்த்து ஆயுதம் ஏந்தச் சொன்னான் கண்ணன்” என்று யாரோ கதாகாலட்சேபத்தில் சொல்லியிருக்கிறார்கள் என்பெயர் கண்ணன். “பயங்கரவாதி” என்று என்னைப் பிடித்துக் கொண்டு வந்து விட்டார்கள். நான் வெளியே வந்தேன். சட்டம் ஒழுங்குப் பிரச்சினை எதுவும் இல்லாமல் நாடு அமைதியாக இருந்தது.. சுட்டுவிரல் என்ற தொகுப்பில் தொலைந்து போனவர்கள் என்ற கவிதை தத்துவம் பேசுகிறது — விடிந்ததென்பாய் நீ அனுதினமும் – வான் வெளுப்பது உனது விடியலில்லை. முடிந்ததென்பாய் ஒரு காரியத்தை – இங்கு முடிதல் என்பது எதற்குமில்லை. மணந்தேன் என்பாய் சடங்குகளும் – வெறும் மாலை சூட்டலும் மணமில்லை. இணைந்தேன் என்பாய் உடற்பசியால் – உடல் இரப்பதும் கொடுப்பதும் இணைப்பல்ல. கற்றேன் என்பாய் கற்றாயா? – வெறும் காகிதம் தின்பது கல்வியில்லை. பெற்றேன் என்பாய் எதைப்பெற்றாய்? – வெறும் பிள்ளைகள் பெறுவது பெறுவதல்ல. குளித்தேன் என்பாய் யுகயுகமாய் – நீ கொண்ட அழுக்கோ போகவில்லை. அளித்தேன் என்பாய் உண்மையிலே – நீ அளித்த தெதுவும் உனதல்ல. உடை அணிந்தேன் எனச் சொல்லுகிறாய் – வெறும் உடலுக் கணிவது உடையல்ல. விடையைக் கண்டேன் என்றுரைத்தாய் – ஒரு வினாவாய் நீயே நிற்கின்றாய. தின்றேன் என்பாய் அணுஅணுவாய் – உனைத் தின்னும் பசிகளுக் கிரையாவாய் வென்றேன் என்பர் மனிதரெல்லாம் – பெறும் வெற்றியிலே தான் தோற்கின்றார். ஆட்டத்தில் உன்னை இழந்து விட்டாய் – உன் அசலைச் சந்தையில் விற்றுவிட்டாய். கூட்டத்தில் எங்கோ தொலைந்துவிட்டாய் – உனைக் கூப்பிடும் குரலுக்கும் செவிடானாய். ‘நான்’ என்பாய் அது நீயில்லை – வெறும் நாடக வசனம் பேசுகிறாய். ‘ஏன்’? என்பாய் இது கேள்வியில்லை – அந்த ஏன் எனும் ஒளியில் உனைத் தேடு. தேசிய நீரோட்டம் என்ற கவிதை, இன்று ஒற்றை மதம், ஒற்றைப் பண்பாடு, ஒற்றை மொழி என்று திணிக்கப்படும் கருத்தாக்கங்களை கேள்வி கேட்கிறது. அணைகளை உடைத்து கரைகளைத் தகர்த்து மரங்களைச் சாய்த்து இதோ பாய்ந்து வருகிறது தேசிய நீரோட்டம் ஏன் விலகி நிற்கிறீர்கள்? குதியுங்கள். நவீன பாவங்களை கழுவுவதற்காகவே புறப்பட்டு வந்த புண்ணிய தீர்த்தம் இது. அதோ சாக்கடைகள் எல்லாம் இதில் சங்கமமாகிப் பவித்திரமடைவதை நீங்கள் பார்க்கவில்லையா? இதோ தங்கள் தீட்டுத் துணிகளை இதில் துவைத்துக்கொள்கிறவர்களை - தங்கள் வலையை வீசி இதில் மீன் பிடித்துக் கொண்டிருப்பவர்களை - நீங்கள் பார்க்கவில்லையா? நீங்கள் மட்டும் ஏன் விலகி நிற்கிறீர்கள்? வான் பொய்த்தாலும் தான் பொய்க்காத நீரோட்டம் இது தாகம் தணித்துக்கொள்ளுங்கள்; வறண்ட வயல்களுக்கு வாய்க்கால் வெட்டிப் பாய்ச்சுங்கள். உங்கள் கப்பரைகளுக்கு இதனால் ஞானஸ்நானம் கொடுங்கள். உங்கள் தீபங்களை இதில் மிதந்து போக விட்டுவிடுங்கள் உங்கள் முகவரிச் சுவடிகளை இதில் போட்டு விடுங்கள் உங்கள் கனவுகளின் அஸ்தியை இதில் கரைத்து விடுங்கள் உங்கள் ரத்தத்தை வெளியே கொட்டி விட்டு இதை நிரப்பிக் கொள்ளுங்கள் இனி நீர்களுக்கு தனி விலாசங்கள் தேவையில்லை நதிகள் குளங்கள் கிணறுகள் எல்லாம் மூழ்கிவிட்டன. கண்ணீரும் மூழ்கிவிட்டது நீங்களும் மூழ்கிவிடுங்கள். இன்றைய அரசியல் சூழலை அன்றே எழுதி வைத்தவர் அப்துல் ரகுமான் எனலாம். அல்லது, அன்று எழுதியது இன்றும் பொருந்துகிறது எனலாம். கடைசியாக, படிமங்களும், உருவகங்களும் பொதிந்த சில கவிதைகளுடன் முடிக்கிறேன். வினாவின் வெயிலுக்கு உங்கள் விடைகள் வெறும் குடைகளே என்பதை அறிவீர்களா? கூண்டுப் பறவை கூண்டின் கூரையையே வானம் என்று வாதாடும். எது பூவானதோ அதுவே முள்ளானது பூவைப் போலவே முள்ளுக்கும் இருத்தல் நியாயம் உண்டு. உங்களைக் குத்துவதற்காக முளைத்ததல்ல முள். நீங்கள்தான் குத்திக்கொள்கிறீர்கள். வெளியே புறப்படுதல் அல்ல வெளியிலிருந்து புறப்படுதல்தான் பயணம். மேலே என்பது மேலே இருக்கிறது என்பதுதான் உங்கள் பெரிய மூடநம்பிக்கை. பசியை நீங்கள் விலங்கு என்கிறீர்கள் நானோ பசியைச் சிறகு என்கிறேன். அந்தச் சிறகு இல்லையென்றால் நீங்கள் இந்த உயரங்களை அடைந்திருக்க மாட்டீர்கள். எழுபதுகளில் துவங்கி எண்பதுகளில் கோலோச்சி, தொண்ணூறுகள் வரை பேசப்பட்டவர்கள் வானம்பாடிக் கவிஞர்கள். புதுக்கவிதை வீச்சுப் பெற்றது. இப்போது பலராலும் கேலி செய்யப்படுகிற அல்லது விமர்சனம் செய்யப்படுகிற பூபாளம்,புரட்சி, செந்தீ போன்ற சொற்கள் அன்றைக்கு உத்வேகம் ஊட்டுகிறவையாகவே இருந்தன. வானம்பாடி இதழ் புதுக்கவிதைகளைப் பரப்பியது. இன்னொரு பக்கம் கவிஞர் மீராவின் அன்னம் புதுக்கவிதைகளை வெளியிட்டது. அன்னம் என்ற பெயரை வைத்தவர் அப்துல் ரகுமான்தான். (அன்னம் பதிப்பகத்துக்கான ஆரம்ப முதலீட்டை மீராவும் அப்துல் ரகுமானும்தான் போட்டார்கள் என்ற செய்திகள் நேற்று இணையத்தில் கிடைத்தன.) மீரா. மீராவைப் பற்றி அவருடைய மகள் எழுதிய கட்டுரை இங்கே படிக்கலாம் அதே சமயத்தில், மக்களிடையே எந்த விஷயம் வரவேற்புப் பெறுகிறதோ அதை தமது லாப நோக்கத்துக்காக வெளியிடுவதில் தயங்காத ஜூனியர் விகடன் போன்ற இதழ்கள் பிரபலர்களின் கவிதைகளை வெளியிட்டன. அப்துல் ரகுமானின் முட்டைவாசிகள், அவளுக்கு நிலா என்று பேர் போன்ற தொடர்கள் வணிகப் பத்திரிகைகளால் பிரபலமடைந்தன. அப்போதெல்லாம் முட்டைவாசிகளோ பால்வீதியோ கையில் எடுத்துச் செல்வது மதிப்புக்குரியதாகக் கருதப்பட்டது. தான் ஒரு கவிதை ரசிகன் என்று காட்டிக் கொள்வதற்காகவே கையில் எடுத்துச் சென்றதும் உண்டு. அப்துல் ரகுமானை நானெல்லாம் அப்படித்தான் படித்தேன். இப்போதும் புதுக்கவிதை புதிய புதிய விஷயங்களை, புதிய புதிய பார்வையில் சொல்லிக் கொண்டேதான் இருக்கிறது. இன்னும் சொல்லிக் கொண்டே இருக்கும். ஏனென்றால், “கவிஞன் என்பவன் சின்னக் குறைகளைக்கூட கண்டிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். கவிஞன் தன் அனுபவத்தைக் கொடுத்து விட்டுப் போக வேண்டும்” என்றவர் கவிதையைக் கைவாளாகக் கையாண்ட அப்துல் ரகுமான். கவிஞர் அப்துல் ரகுமான் மறைந்து விட்டார். அவர் கவிதைகள் இன்னும் பல காலம் நிலைத்திருக்கும்.