Monday, February 22, 2021
அயோத்தி தாசர்
அயோத்தி தாசர்
அயோத்தி தாசர்
பண்டிதர் அயோத்திதாசர்
பிறப்பு காத்தவராயன்
மே 20, 1845
நீலகிரி மாவட்டம்
இறப்பு 1914[1]
தேசியம் இந்தியர்
பணி சித்த மருத்துவர்
அறியப்படுவது தென்னிந்திய சாக்கிய பெளத்த இயக்கம்
அயோத்தி தாசர் (C. Iyothee Thass, மே 20, 1845 – 1914) தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி, சமூக சேவகர், தமிழறிஞர் மற்றும் சித்த மருத்துவர் ஆவார்.திராவிட இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் ஒருவர். ஆதி திராவிட பின்புலத்தில் இருந்து வந்த இவர், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்துக்காக அரசியல், சமயம், இலக்கியம் ஆகிய களங்களில் தீவிரமாகச் செயல்பட்டார். பௌத்தத்திற்கு மாறிய இவர் பறையர்களின் மூலச் சமயம் பௌத்தம் என்றும் அதனால் அவர்கள் பௌத்தத்திற்குத் மாறவேண்டும் அறிவுறுத்தினார்.[2] 1891 இல் இரட்டைமலை சீனிவாசனுடன் இணைந்து பஞ்சமர் மகாசன சபையைத் தோற்றுவித்தார். பஞ்சமர் என்போர் வருணாசிரம முறையில் வராமல், அவர்ணாக்கள் என அழைக்கப்பட்டனர்.
பெரும் கல்விப்புலம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர். இவருடைய தாத்தா பட்லர் கந்தப்பன் பிரதிகள் அழிந்து நூற்றாண்டுகளாக வழக்கில் இல்லாமல் போயிருந்த திருக்குறளைத் தன் குடும்ப சேமிப்பு ஏடுகளில் இருந்து மீட்டு எல்லிஸ் துரையிடம் வழங்கியவர். அதன் பின்னர்தான் திருக்குறள் இன்றைய அச்சு வடிவுக்கு வந்தது.
பொருளடக்கம்
[மறை]
• 1கல்வியும், புலமையும்
• 2சமயம் தொடர்பான கருத்துகளும் பணிகளும்
• 3ஆதி திராவிடர்களுக்கான செயற்பாடுகள்
• 4பௌத்தத்திற்கு மாறல்
• 5தமிழன் இதழ்
• 6திராவிட அரசியலின் முன்னோடி
• 7படைப்புகள்
o 7.1தொடங்கி நடத்திய இதழ்கள்
• 8இவற்றையும் பார்க்க
• 9சான்றாவணங்கள்
• 10மேற்கோள் கட்டுரைகள்/நூல்கள்
• 11வெளி இணைப்புகள்
கல்வியும், புலமையும்[தொகு]
அயோத்திதாசர் 1845 மே 20 இல்[3] சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் பிறந்து, பிறகு தனது தந்தையின் பணியின் காரணமாக நீலகிரிக்குபுலம்பெயர்ந்தார்[2]. இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் காத்தவராயன் ஆகும். நீலகிரியில் இவரது தாத்தா ஜார்ஜ் ஹாரிங்டனிடம் வேலைபார்த்து வந்தது இளம்வயதில் அயோத்திதாசருக்கு பலவகைகளில் உதவியாய் இருந்தது.[1]
தனது தந்தையிடமும் காசி மேடு சதாவதாணி வைரக்கண் வேலாயுதம் புலவர் (1830-1892), வல்லக்காளத்தி வீ. அயோத்தி தாசர் பண்டிதர் (1836-1900) ஆகியோரிடமும் கல்வி கற்றார். தமிழ், சித்த மருத்துவம் மற்றும் தத்துவம் ஆகியவற்றில் ஆழ்ந்த புலமையும் ஆங்கிலம், வடமொழி, மற்றும் பாலி போன்ற மொழியறிவும் பெற்று விளங்கினார். தன் குருவின் மீது கொண்ட மதிப்பால் காத்தவராயன் என்ற தனது பெயரை அயோத்தி தாசர் என மாற்றிக் கொண்டார்.
சமயம் தொடர்பான கருத்துகளும் பணிகளும்[தொகு]
தன்னுடைய 25 ஆம் வயதில் நீலகிரியில் ஒடுக்கப்பட்ட மக்களான தோடர்களை அணிதிரட்டி 1870 களில் 'அத்வைதானந்த சபை' ஒன்றை நிறுவி கிருத்துவ மதமாற்றத்திற்கு எதிராகச் செயல்பட்டார். அவரது குடும்பம் வைணவ சமய மரபுகளைப் பின்பற்றியது. அதனடிப்படையில் தன் ஆண் குழந்தைகளுக்கு மாதவராம், பட்டாபிராமன், ஜானகி ராமன், இராசராம் என்றும். புத்த மதத்தைத் தழுவிய பின்னர் பிறந்த தனது பெண் குழந்தைகளுக்கு அம்பிகா தேவி, மாயா தேவி எனப் பெயர் சூட்டினார்.
அத்வைத வேதாந்தத்தில் ஈடுபாடு கொண்டிருந்தாலும் அதனுடைய இறைக்கொள்கை, சடங்குவாதம், பிராமணீய ஆதிக்கம், ஆன்மீகக்கொள்கை, மத பண்பாட்டுத்தளங்கள் என அனைத்து வடிவங்களுக்கும் எதிரான ஒரு பகுத்தறிவு ரீதியான விடுதலை மெய்யியலே அவரது தேடலாக இருந்தது. அதன் அடிப்படையில் சுய சிந்தனை, சுய கருத்தியல் தேடலாகவும் அது அமைந்தது.
பண்டிதருடைய காலம் (19 நூற்றாண்டின் பிற்பகுதி ) இந்துத்துவம் மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட காலமாக இருந்தது. பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம் போன்ற அமைப்புகள் மூலம் அனைத்தும் இந்து சமயத்துக்குள் திணிக்கப்பட்டது. 'யாரெல்லாம் கிறித்துவர்கள், இசுலாமியர் இல்லையோ' அவர்களெல்லாம் இந்துக்கள் என 1861 முதல் 1891 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பில் 'இந்து' அடையாளத்திற்குள் வலிய திணிக்கப்பட்டார்கள். பண்டிதர் வைணவ மரபை ஆதரித்தாலும் 'இந்து' என்ற அடையாளத்தை ஏற்க மறுத்தவர். அவ்வாறு 'இந்து' அடையாளத்தை ஏற்றுக்கொண்டால் 'இந்து' சமூகத்தின் சாதீய அமைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். சாதியக்கொடுமையை மிக அதிகமாக அனுபவிக்கும் ஆதிதிராவிட மக்கள் இந்து அடையாளத்தை ஏற்கக்கூடாது என்பதில் மிக எச்சரிக்கையாக இருந்தார். அதற்கு மாற்றாக இந்து அல்லாத மாற்று அடையாளம் ஒன்றைத் தேடத் துவங்கினார். தமிழகத்தில் பக்தி வடிவங்களில் 'தமிழ்ச் சைவ' மீட்டுருவாக்க முயற்சி நடந்தது. இதுவும் ஒரு வகையில் சாதியத்தை உள்வாங்கியவர்களின் முயற்சியாகவே இருந்தது. 'தமிழ் சைவம்' பிராமண எதிர்ப்புப் பேசினாலும் 'சாதி ஒழிப்பு' பற்றி எதுவும் பேசவில்லை. அதனால் பண்டிதர் தமிழ் சைவத்தோடு இணையவில்லை.
பண்டிதரால் துவக்கப்பட்ட 'சாதியற்ற திரவிட மஹா ஜன சபையின்' சார்பாக 1891 திசம்பர் 1 திகதி நிறைவேற்றப்பட்ட இலவசக் கல்வி, கோவில் நுழைவு, தரிசு நிலம் ஒதுக்குதல் போன்ற 10 கோரிக்கை அடங்கிய மனு ஒன்றை இந்திய தேசிய காங்கிரசு கட்சிக்கு அனுப்பினார். அந்த கோரிக்கைகள் இறுதிவரை நிறைவேற்றப்படவே இல்லை. சென்னை மகா ஜன சபை 1892 இல் ஏற்பாடு செய்த கூட்டத்தில், நீலகிரி மாவட்டப் பிரதிநிதியாய்ப் பண்டிதர் கலந்துகொண்டு, மேற்படி 10 கோரிக்கையை சமர்ப்பித்து, விஷ்ணு, சிவன் கோவில்களில் நுழைய அனுமதி கேட்டார். அது உடனே மறுக்கப்பட்டு அவமதிக்கப்பட்டார். இந்த அவமானபடுத்துதல் பண்டிதரை இன்னொரு சிந்தனைக்கு இட்டுச் சென்றது. நாம் யார்? இந்துக்களா ? சாதி இழிவுகள் ஏன் நம்மீது திணிக்கப்படுகிறது? என எண்ணி சுயத்தைத்தேடி நகர்ந்தார். வேதம், இந்து, பிராமணீயம்,சடங்குவாதம்..முதலானவற்றை கேள்விக்குட்படுத்தினார்.
ஆதி திராவிடர்களுக்கான செயற்பாடுகள்[தொகு]
1870 களில் அயோத்தி தாசர் நீலமலையின் தோடர் மற்றும் பிற மலைவாழ் பழங்குடியினரையும் ஒருங்கிணைத்தார். 1875இல் அத்வைதானந்த சபையை நிறுவினார். வெசிலியன் மிஷன் பள்ளியை ஆயிரம் விளக்கு பகுதியில் ஆதி திராவிடர்களுக்காக நடத்திய அருட்திரு டி ஜான்ரத்தினத்துடன் (Rev. John Rathinam) தொடர்பு ஏற்பட்டது. ஜான்ரத்தினம் நடத்திய 'திரவிடர் கழகம்' அதன் சார்பாக வெளிவந்த 'திராவிட பாண்டியன்' என்ற செய்தி இதழிலும் பண்டிதர் பங்கெடுத்துக் கொண்டார்[3].
1886 களில் ஆதி திராவிடர்கள் "இந்துக்கள்" அல்ல என்று அறிக்கை விட்டார்.[3] அப்பிரகடனத்தைத் தொடர்ந்து 1891 இல் திராவிட மாகாசன சபையை நிறுவினார். 1891 இல் நடத்தப்பட்ட மக்கட்தொகைக் கணக்கெடுப்பில் ஆதி திராவிடர்கள் தங்களை இந்துக்கள் என அடையாளப்படுத்திக் கொள்ளாமல், "சாதியற்ற தமிழர்கள்" எனப் பதிவு செய்யுமாறு வலியுறுத்தினார்[3] இவரது நடவடிக்கைகள் இலங்கையின் பௌத்தப் புத்துயிர்ப்பிப்பாளர் அனகாரிக தர்மபாலருக்குப் பெரிதும் ஊக்கமளித்தன.[4]
அப்போதிருந்த ஒரே கட்சி இந்திய தேசிய காங்கிரசு கட்சி அதை இரண்டு பிரிவாக பிரித்து ஒன்று வடநாட்டு காங்கிரசு, அது வங்காளின் கங்கிரசு மற்றொன்று தென்னாட்டு காங்கிரசு அது பிராமண காங்கிரசு என விமர்சித்து காங்கிரசு கட்சியை ஒதுக்கிவிட்டார். ஆக மதமாற்றம், அத்வைதம், தமிழ் சைவம், தியாசபிகல் தொடர்பு, காங்கிரசு கட்சி, அனைத்திலுமிருந்து வேறுபட்டும் பிற்போக்குத்தனத்திற்கு எதிராகவும் சுய கருத்தியலை, சுய அரசியலைத் துவக்கினார்.
ஆதி திராவிட மக்களை ஒடுக்குவதற்கு எழுப்பிய பண்பாட்டு, மதத்தடைகளை நீக்குவதுதான் ஒடுக்கப்பட்ட மக்களின் மெய்யான விடுதலையைக் கொண்டுவரும் என்றும் பௌத்தம் என்ற சாதி, வருண எதிர்ப்பு சமயமான பௌத்தமே அதற்கு ஏற்றது என்றும் கருதினார். பௌத்தமே ஆதி திராவிடர்களின் மூல சமயமாகவும் அவர்களின் தாழ்வு நிலைக்கு காரணமாகவும் அமைந்தது (அதாவது பெளத்ததை பின்பற்றியதால் ஆதி திராவிடர்கள் அடிமைகளாக்கப்பட்டார்கள்). அதே பௌத்த சமயம்தான் ஆதி திராவிடர் விடுதலைக்கும், அதிகாரம் பெறுவதற்கும் உறுதுணையாகவும் வழியாகவும் இருக்கும் எனக் கருதினார்.
இந்தியப் பாரம்பரியம் பௌத்த மதமாக இருந்தது என்பதைத் தன் தமிழ்ப் புலமை மூலம் விளக்கினார்:
இந்திய என்ற சொல் 'இந்திரம்' என்பதன் திரிபு. இந்திரனாகிய புத்தனும் அவனைக் குருவாக கருதும் மக்களும் வாழும் நாட்டிற்கு 'இந்திரதேசம்' என்ற பெயர் வந்தது. ஆரியர் வருகைக்கு முன் இங்கே ஒரு தேசம் இருந்தது, அந்த தேசியத்தைப் பௌத்தம் உருவாக்கியது. அதில் பகுத்தறிவு, மனித நேயம், சமத்துவம், அறக்கருத்தொற்றுமை, மெய்யியல் மற்றும் நடைமுறை சார்பானதாகவே இருந்து வந்திருக்கின்றது. இதில் அன்னியரான வெளியாரின் ஊடுருவலால், படையெடுப்பால் காலப்போக்கில் அது மந்திர அல்லது மாயத்தன்மையென திரிக்கப்பட்டது என்று பண்டிதர் விளக்குகிறார். சொந்த நாட்டின் சாதியற்ற பண்பாட்டை அயல் சக்திகள், வெளியாட்கள் நசித்து திரித்துவிட்டார்கள். பிறப்பால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை அழித்து சமத்துவத்தை நோக்கி நகரும் ஓர் அரசியல் கருத்தியலை உருவாக்கும் ஒரு தேசியத்தைக் கட்டமைக்க முயற்சித்தார்.
1912 அக்டோபர் 30 தமிழன் இதழில், இந்தியாவிற்கு சுதந்திரம் அளித்தால் இம்மண்ணிண் மைந்தர்களாம் ஆதி தமிழர்களிடம் அரசியல் அதிகாரத்தை வழங்கவேண்டுமென ஆங்கிலேயர்களிடம் (சுதந்திரத்திற்கு 35 வருடங்களுக்கு முன்) கோரிக்கை வைத்தார். "கருணை தாங்கிய பிரிட்டீஷ் துரையவர்கள், சுதேசிகள் மீது கிருபை பாவித்து சுயராட்சியத்தை அளிப்பதாயினும் இத்தேச பூர்வக்குடிகளுக்கு அளிப்பதே கருணையாகும். நேற்றுக் குடியேறி வந்தவர்களையும், முன்னாடி குடியேறி வந்தவர்களையும் சுதேசிகள் எனக் கருதி அவர்கள் வசம் சுயராட்சிய ஆளுகையைக் கொடுத்தால் நாடு பாழாகி சீர்கெட்டுப்போகும்" என்றார். ஆதி திராவிடர்கள் அரசியல் அதிகாரம் பெறவேண்டும் என்பதை வலியுறுத்தினார்.இந்தியாவில் தமிழனுக்கு கிடைக்கவேண்டிய அதிகாரத்தை துணிந்து கேட்ட ஈடுஇணையற்ற மாமனிதர்.
பௌத்தத்திற்கு மாறல்[தொகு]
அயோத்தி தாசர் தனது வழிநடப்பவர்களுடன் ஹென்றி ஸ்டீல் ஆல்காட்டைச் சந்தித்து பௌத்தத்திற்கு மாறும் தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.[3]தமிழகப் பறையர்கள் பௌத்த மதத்தினரே என்றும் அவர்களுக்குச் சொந்தமான தமிழகத்தை ஆரியர்கள் கைப்பற்றிவிட்டதாகவும் அயோத்திதாசர் கருத்துத் தெரிவித்தார்.[2]:9–10 ஆல்காட்டின் உதவியுடன் இலங்கைக்குச் சென்று அங்கிருந்த சிங்கள பௌத்தத் துறவி சுமங்கல நாயகரிடம் தீட்சைபெற்றார்.[3] அங்கிருந்து திரும்பிய அயோத்திதாசர் சென்னையில் சாக்கிய பௌத்த சொசைட்டியைத் தோற்றுவித்து, தென்னிந்தியா முழுவதும் அதன் கிளைகளை ஏற்படுத்தினார். ’’இந்திய பௌத்த சங்கம்’’ எனவும் அறியப்பட்ட சாக்கிய பௌத்த சொசைட்டி 1898 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.[5][6]
தமிழன் இதழ்[தொகு]
ஒரு பைசாத் தமிழன்-ஜூலை 1907 இதழ்
ஒரு பைசாத் தமிழன்
சென்னை இராயப்பேட்டையிலிருந்து 19 சூன், 1907 முதல் புதன் கிழமை தோறும் நான்கு பக்கங்களுடன் அன்றைய காலணா விலையில் "ஒரு பைசாத் தமிழன்" என்று பெயர் சூட்டப்பட்டு வெளிவந்தது[4][7]
இந்த இதழ் வெளிவருவதற்கானத் தேவையையும் யாருக்கானது என்பதையும் பண்டிதர் அந்த இதழில் விளக்கியிருந்தார்:
"உயர் நிலையும், இடை நிலையும், கடை நிலையும் பாகுபடுத்தி அறியமுடியாத மக்களுக்கு நீதி, சரியான பாதை, நேர்மை ஆகியவற்றைக் கற்பிப்பதற்காக சில தத்துவவாதிகளும் இயற்கை விஞ்ஞானிகளும், கணிதவியலாளரும், இலக்கியவாதிகள் பலரும் ஒன்று கூடி இப்பத்திரிக்கையை "ஒரு பைசாத் தமிழன்" வெளியிட்டுருக்கிறோம். தமிழ் மணம் பரவ விரும்பும் தமிழர் ஒவ்வொருவருக்கும் கையொப்பம் வைத்திதனை ஆதரிக்க கோருகிறோம்" என்று அறிவித்தார்.
இதழின் முகப்பில் 'ஒரு பைசாத் தமிழன்' என்ற இதழின் பெயரை புத்தக் குறியீட்டு வடிவமான ஒன்பது தாமரை இதழ்களின் மீது எழுதி அதன் இடப்புறம் 'ஜெயது' என்றும் வலப்புறம் 'மங்கள்ம்' என்றும் நடுவில் 'நன்மெய்க் கடைபிடி' என எழுதி, இருபுறமும் மலர் கொத்து என அழகுணர்வோடும் நேர்த்தியாகவும் இதழின் சின்னம் இருந்தது.
முதல் இதழில், கடவுள் வாழ்த்து, அரசர் வாழ்த்து, தமிழ் வாழ்த்து, பூய்வத்தமிழொளி (அரசியல் தொடர்) வர்த்தமானங்கள் (நாட்டு நடப்புச்செய்திகள்) சித்த மருத்துவ குறிப்புகள் என செய்திகளின் முக்கியத்துவம் கருதி வகைப்படுத்திப் பிரசுரிக்கப்பட்டது.
பெயர்மாற்றம்
தமிழன்-செப்டம்பர் 1908 இதழ்
ஓராண்டுக்குப் பிறகு, வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க 'அச்சுகூடமும் பத்திரிக்கைப்பெயரும் மாறுதலடைந்தது' (26. ஆகத்து 1908 - பக் 2) என்ற விளக்கத்துடன் 'ஒரு பைசாத்' நீக்கப் பெற்று 'தமிழன்' என்ற பெயரோடு 26. ஆகத்து 1908 முதல் வெளிவந்தது.
தமிழனில் வெளி வந்த செய்திகளும் விரிவாக்கம் செய்யப்பட்டிருந்தன. சிறப்பாக மகளிர் பத்தி (Ladies column) தலைப்பில் பெண்கள் கல்வி, வேலை வாய்ப்பு, பெண்கள் முன்னேற்றம் பற்றிய செய்திகள் இடம் பெற்றது. அடுத்து பொதுச் செய்தி (Genaral news) பகுதியில் பொது வர்த்தமானம், நாட்டு நடப்புகள், பொதுச் செய்திகள், வானிலை அறிக்கை, வாசகர் கடிதங்கள் அயல் நாட்டுச் செய்திகள், விளம்பரங்கள் மற்றும் நூல் விமர்சனங்கள் தொடர்ந்து இடம் பெற்றிருக்கின்றன. தமிழர்கள் அதிகம் வசித்த கர்நாடக கோலார் தங்க வயல், குடகு, பர்மா, தென்னாப்பிரிக்கா, இரங்கூன், சிங்கப்பூர்.. போன்ற அயல் நாடுகளிலும் தமிழன் இதழ் பரவியது.
மூட நம்பிக்கை, தீண்டாமை கொடுமைக்கு ஆதரவளிக்கும் வேத இதிகாசப் புரட்டுகள் பற்றி, பிராமணீய மேலாதிக்கம் பற்றி விரிவாக ஆய்வு செய்தார். ’யதார்த்த பிராமண வேதாந்த விவரம்’, ’வேஷ பிராமண வேதாந்த விவரம்’, ’ஸ்ரீ முருகக் கடவுள் வரலாறு’, ’விபூதி ஆராய்ச்சி’ போன்ற நூல்களில் வேத மத எதிர்ப்பு, பிராமணீய எதிர்ப்பு, மூடப்பழக்கம் எதிர்ப்பு,சாதி ஒழிப்பு போன்ற கருத்துக்களைக் குறித்து விரிவாக எழுதினார்.
தமிழகத்தில் எந்த இயக்கமும் தோன்றாத காலத்தில், சமூக நீதி, சமூக மதிப்பிடுகள் விளிம்பு நிலை ஒடுக்குமுறைகள் குறித்து பேசினார். அதிகாரத்தில் பங்கு, பிரதிநித்துவ அரசியல் ஒடுக்கப்பட்டோர் விடுதலை, பெண்ணியம், தமிழ் மொழியுணர்வு, பகுத்தற்வு, சுயமரியாதை, சாதி ஒழிப்பு, இந்தி மொழி எதிர்ப்பு, வேத மத, பிராமணீய எதிர்ப்பு, தீணடாமை போன்ற கருத்துகளை உரையாடல் செய்து பல இயக்கங்களுக்கு ஒரு முழுமையான அரசியல்கொள்கை தொகுப்பை வழங்கிய தமிழன் இதழின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு கொண்டாடி பெருமைப்படுத்தியது. இதழியலிலும், அரசியலிலும் நவீனம் குறித்த கருத்தாக்கங்கள் தமிழன் இதழிலிருந்தே துவக்கம் பெற்றன.
திராவிட அரசியலின் முன்னோடி[தொகு]
திராவிட மகாஜன சபை இவரால் கி.பி. 1891 தொடங்கப்பட்டது. அயோத்தி தாசர் 1885 ஆண்டிலேயே திராவிட பாண்டியன் என்னும் இதழைத் தொடங்கினார். அவர் கி.பி. 1886ஆம் ஆண்டில் இந்துக்களில் தீண்டத்தகாதவர்கள் என அழைக்கப்பட்டவர்கள் இந்துக்கள் அல்லாதவர்கள் என்றார். அவர்கள் யாவரும் சாதியற்ற திராவிடர்கள் என்னும் கருத்தையும் முன்வைத்தார். இதனால் இவர் திராவிட கருத்தியலின் முன்னோடி என அறியப்பட்டார். திராவிட மகாஜன சபையை நிறுவி திராவிட அரசியலைத் தொடங்கி வைத்ததால் திராவிட அரசியலின் முன்னோடி எனவும் கூறப்படுகிறார்.[8][9][10]
படைப்புகள்[தொகு]
பண்டிதர் க. அயோத்திதாசர் சுமார் 25 நூல்கள் 30 தொடர்கட்டுரைகள் 2 விரிவுரைகள், 12 சுவடிகளுக்கு உரை தவிர அரசியல் கட்டுரைகள், கேள்வி பதில்கள், பகுத்தறிவுக் கட்டுரைகள் எனச் சில நூறு கட்டுரைகளை எழுதினார். அவர் மறைவதற்கு ஒரு வருடம் முன்பு எழுதத் துவங்கிய திருக்குறள் உரையானது அவரது மரணத்தால் 55 அதிகாரங்களுடன் நின்று விட்டது.
க. அயோத்தி தாசர் நூல்கள்
1. அம்பிகையம்மன் அருளிய திரிவாசகம்
2. அம்பிகையம்மன் சரித்திரம்
3. அரிச்சந்திரன் பொய்கள்
4. ஆடிமாதத்தில் அம்மனை சிந்திக்கும் விவரம்
5. இந்திரர் தேச சரித்திரம்
6. இந்திரர் தேச பௌத்தர்கள் பண்டிகை விவரம்
7. கபாலீஸன் சரித்திர ஆராய்ச்சி
8. சாக்கிய முனிவரலாறு
9. திருக்குறள் கடவுள் வாழ்த்து
10. திருவள்ளுவர் வரலாறு
11. நந்தன் சரித்திர தந்திரம்
12. நூதன சாதிகளின் உள்வே பீடிகை
13. புத்தர் எனும் இரவு பகலற்ற ஒளி
14. புத்த மார்க்க வினா விடை
15. மாளிய அமாவாசை எனும் மாவளி அமாவாசி தன்ம விவரம்
16. முருக கடவுள் வரலாறு
17. மோசோயவர்களின் மார்க்கம்
18. யதார்த்த பிராமண வேதாந்த விவரம்
19. விபூதி ஆராய்ச்சி
20. விவாஹ விளக்கம்
21. வேஷ பிராமண வேதாந்த விவரம்
22. பூர்வ தமிழ்மொழியாம் புத்தாது ஆதிவேதம்
23. வேஷபிராமண வேதாந்த விவரம்
தொடங்கி நடத்திய இதழ்கள்[தொகு]
• திராவிடப்பாண்டியன் (1885)
(ரெவரென்ட் ஜான் ரத்தினத்துடன் இணைந்து)
• ஒரு பைசாத் தமிழன் (தமிழன் (1907–1914)
• அயோத்திதாசப் பண்டிதர் 1845ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் தேதி சென்னையில் பிறந்தார். அவரது தந்தையாரின் பெயர் கந்தசாமி, தாயாரின் பெயர் தெரியவில்லை. அயோத்திதாசருக்கு அவரது பெற்றோர் இட்ட பெயர் காத்தவராயன் என்பதாகும். அவரது தாத்தா கந்தப்பன் என்பவர் ஜார்ஜ் ஆரிங்டன் பிரபு என்பாரிடம் பட்லராகப் பணியாற்றியவர். அவரும் தமிழ் மீது பற்றுக் கொண்டவர். அவர்தான் திருக்குறள் மற்றும் நாலடி நானூறு ஆகிய நூல்களின் ஓலைப் பிரதிகளைத் தமது பாதுகாப்பில் வைத்திருந்து எல்லீஸ் துரையிடம் கொடுத்தவர். அந்தப் படிகளே பின்னர் அச்சில் வெளியிடப்பட்டன. ஆங்கிலேயரிடம் பணிபுரிந்த காரணத்தால் கந்தப்பனுக்கு ஆங்கிலத்திலும் நல்ல தேர்ச்சி இருந்தது.
• சென்னையில் இருந்த காலத்தில் பத்ர தேசிகானந்தர் என்பவரிடமும், அயோத்திதாச கவிராஜ பண்டிதர் என்பவரிடமும் தமிழ் மொழியின் இலக்கண, இலக்கியங்களையும் அயோத்திதாசர் ஆழமாகக் கற்றுத் தேர்ந்தார். இவை மட்டுமன்றி. சமற்கிருதம், பாலி, ஆங்கிலம் ஆகிய மொழிகளையும் அவர் கற்றுத் தேர்ந்தார். தனது இயற்பெயரை விடுத்து தனது ஆசிரியர்களில் ஒருவரான அயோத்திதாச கவிராஜ பண்டிதரின் பெயரையே தனக்குச் சூட்டிக் கொண்டார். இதனிடையே அவரது தந்தையாருடைய பணியின் நிமித்தமாக அயோத்திதாசரின் குடும்பம் குன்னூருக்குக் குடி பெயர்ந்தது.
• இளம் வயதினராயிருந்த அயோத்திதாசர் தான் ஈட்டிய அறிவைப் பூட்டி வைத்திருக்கவில்லை. அதை அரசியலில் துணிவோடு இணைத்து நடைமுறைப் பணிகளில் ஈடுபட்டார். குன்னூர் பகுதிகளில் வாழ்ந்திருந்த தோடர் என்னும் பழங்குடியினரிடையே அரசியல் பணிகளை மேற்கொண்டு அவர்களை அமைப்பாக்கிட முயன்றார். அந்த சமூகத்துப் பெண் ஒருவரை மணந்து பின்னர் அவரோடு ரங்கூனுக்குச் சென்றார். அங்கு ஆண் குழந்தையொன்று பிறந்ததெனவும் அங்கே அவர் மனைவி இறந்து போனதால் அயோத்திதாசர் சென்னைக்குத் திரும்பி வந்தாரெனவும் தி. பெ. கமலநாதன் கூறுகிறார். (பார்க்க: போதி _ காலாண்டிதழ் ஏப்ரல் 2005, பக் 15). ரங்கூனில் பிறந்த மகன் அங்கேயே தங்கிவிட்டாரெனவும் அவர் குறிப்பிடுகின்றார். இந்தச் செய்தியைத் தவிர பண்டிதரின் ரங்கூன் வாழ்க்கை குறித்த செய்திகள் நமக்கு அதிகம் கிடைக்கவில்லை.
• அயோத்திதாசர் தமது இருபத்தைந்தாவது வயது முதற் கொண்டே (1870) ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்காகப் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டாரெனத் தெரிகிறது. தமிழ் இலக்கியத்தில் அவருக்கிருந்த ஆழ்ந்த புலமை தனித்துவமான தத்துவப் பார்வையொன்றை நோக்கி அவரை இட்டுச் சென்றது. அவரது மெய்யியலின் உள்ளீடாகத் தொடக்ககாலம் முதலே பகுத்தறிவு என்பதுதான் இடம் பெற்றிருந்தது. கடவுள் நம்பிக்கை, சடங்குகளை உயர்த்திப் பிடித்தல், பார்ப்பன வைதீக மதக் கொள்கை முதலானவற்றை முற்றாக நிராகரித்து மானுட விடுதலைக்கான ஒரு தத்துவமாகவே அவரது பார்வை உருப்பெற்றிருந்தது.
• அயோத்திதாசரின் அரசியல் பணிகள் தொடங்குவதற்கு சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பே அதாவது 1779ஆம் ஆண்டிலேயே- _ பறையர் சமூகத்தவர் ஒன்று திரண்டு தமது உரிமைகளுக்காக ஆங்கில அரசிடம் மனு ஒன்றைக் கொடுத்துள்ளனர். புனித சார்ச் கோட்டைக்கு அருகில் குடியிருந்த பறையர்களை அங்கிருந்து காலி செய்துவிட்டு வெளியேறும்படி ஆங்கில அரசாங்கம் கூறியபோது, தாமும் தமது முன்னோரும் ஆங்கில அரசுக்குச் செய்த பணிகளைக் குறிப்பிட்டு அப்பகுதியில் தாம் தொடர்ந்து குடியிருக்க இசைவுதரும்படி அம்மனுவில் அந்த மக்கள் கேட்டிருந்தனர்.
• சென்னை சார்ச் டவுனில் பறையர் குடியிருந்த பகுதி பெரிய பறைச்சேரி எனவும், பின்னர் அது ப்ளாக் டவுன் எனவும் வழங்கப்பட்டது. அங்க குடியிருந்தவர்கள் அரசுக்கு வரி கட்ட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது அந்த வரியை ரத்து செய்ய வேண்டுமென 1810ஆம் ஆண்டு அங்கே குடியிருந்த அரசுக்கு வேண்டுகை ஒன்றை அளித்தனர்.
• தீண்டாத மக்களின் இந்த அரசியல் நடவடிக்கைகளுக்கும் இந்தியாவில் ஆங்கிலேயர் நிலை பெற்றதற்குமிடையே ஒரு தொடர்பு உள்ளது. இக் காலகட்டத்தில்தான் இந்தியா வெற்றி கொள்ளப்பட்டது என அம்பேத்கார் குறிப்பிடுகிறார். (தொகுதி 23 பக்கம் 122_123) 1757ஆம் ஆண்டில் நடைபெற்ற பிளாசிப்போர் தொடங்கி 1818இல் நடைபெற்ற கோரேகௌன் போரின் வெற்றியோடு ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் உறுதிப்பட்டது. “பிளாசிப் போரில் கிளைவுடன் சேர்ந்து போரிட்டவர்கள் துசாத்துகள். அவர்கள் தீண்டாத சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கோரேகௌன் போரில் பங்குகொண்டு சமர் புரிந்தவர்கள் மகர்கள். அவர்களும் தீண்டாத சமூகத்தவரே ஆவார்கள்.” என அம்பேதகர் குறிப்பிடுகின்றார். ஆங்கிலேயர் ஆட்சிக்குத் தாங்கள் தந்த பலிகளையும் உழைப்பையும் குறிப்பிட்டே தீண்டாத மக்கள் வேண்டுகைகளை அளித்தார்கள்.
• இப்படிக் கூட்டாகச் சேர்ந்து கோரிக்கைகளை அளிப்பதே அக்காலத்தில் தீண்டாதாரின் போராட்ட மரபாக இருந்துள்ளது. ஆனால், அதே காலகட்டத்தில் பிராமணர்கள் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள அச்சுறுத்துவது, தம்முடைய குழந்தைகளையும் பெண்களையும் கொலை செய்வது, அவர்களை உயிரோடு எரிப்பது முதலான வழிமுறைகளைக் கையாண்டு வந்தனர். இந்த வழக்கத்தைத் தடைசெய்து 1795ஆம் ஆண்டு வங்காள ஒழுங்குமுறைச் சட்டம் என்றொரு சட்டத்தை ஆங்கிலேயர் கொண்டு வந்தனர். (அம்பேத்கார் நூல் தொகுதி 23 பக்கம் 165_ 177)
• சென்னை மாகாணத்தைச் சேர்ந்த சாதியற்ற தொல்குடி மக்களின் அரசியலில் ஒரு முடுக்கத்தை ஏற்படுத்தியவர் அயோத்திதாசர் ஆவார். இந்தியாவில் குடிக்கணக்கெடுப்பு எடுக்கும் வழக்கம் தொடங்கியபோது அதனை ஒரு அரசியல் போராட்டத்துக்கான வாய்ப்பாக அயோத்திதாசர் அடையாளம் கண்டார். தீண்டாதாராய் வைக்கப்பட்டிருந்த தொல்குடி மக்களிடம் அரசியல் ரீதியான விழிப்புணர்வை உண்டாக்க, அவர்கள் தம்மை “சாதியற்ற திராவிடர்கள்” எனக் குடிக் கணக்கெடுப்பில் பதிந்து கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
• 1881ஆம் ஆண்டுதான் இந்தியாவில் முதன் முதலாக பொதுக்குடிக்கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களின் மக்கள் தொகையைக் கண்டறிந்து இந்தியாவின் மொத்த மக்கள் தொகையை அளவிடுவது ஒன்றே அந்த குடிக்கணக்கெடுப்பின்போது சாதிவாரியகக் கணக்கெடுக்குமட் முயற்சி மேற்கொள்ளப் பட்டது. 1901இல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டபோது “உள்ளூர் மக்களின் கருத்துகிணங்க சமூக ரீதியில் வகைப்படுத்துதல்” என்ற புதிய முறையை ஆங்கில அரசு அறிமுகப்படுத்தியது.
• 1911ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட நான்காவது குடிக்கணக்கெடுப்பின் போதுதான் தீண்டாத மக்கள் எவ்வளவு பேர் இந்த நாட்டில் உள்ளனர் என்று தனியே கண்டறிவதற்கான முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டது. இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்து ஆண்டுகளில்தான் இந்திய அரசியலில் முஸ்லிம்களின் போராட்டம் எழுச்சி பெற்றது.
• சட்டமன்றங்களில் தங்களுக்கு வேண்டிய பிரதிநிதித்துவம் வேண்டுமெனக் கேட்டு அவர்கள் போராடி வந்தனர்(அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுதி 5, பக்கம் 229_246) 1909ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி இசுலாமியர்களின் குழு ஒன்று மார்லி பிரபுவைச் சந்தித்து மனு ஒன்றைத் தந்தது. அதுவரை தீண்டாத மக்களை ஒரு பொருட்டாகவே நினைக்காத சாதி இந்துக்கள் அப்போதுதான் தீண்டாதாரின் மக்கள்தொகை முகாமைத்துவத்தை உணர்ந்தனர். தீண்டாத மக்களைத் தனியே கணக்கெடுப்புச் செய்வது ஆங்கில ஆட்சியாளர்களும் இசுலாமியர்களுக்கும் செய்யும் கூட்டுச்சதி என அவர்கள் கூக்குரலிட்டனர். ஆனால், அந்த எதிர்ப்புகளைத் தாண்டி குடிக்கணக்கெடுப்பு முற்றுப் பெற்றது.
• 1911ஆம் ஆண்டு குடிக்கணக்கெடுப்பின் போது இந்துக்களையும், இந்துக்கள் அல்லாதவர்களையும் பிரித்தறிய கேட்கப்பட்ட வினாக்களை ஆதரித்து அயோத்திதாசர் எழுதினார் (31.11.1910), “பாப்பானுக்கு வேறு தெய்வம் பறையனுக்கு வேற தெய்வமென்று பாடித் திரிகின்றவர்களும்; பறையனை பிணத்திற்கு ஒப்பானவன், பிணத்தைக் கண்டாலும் தொட்டாலும் ஸ்நானம் செய்வது போல பறையனைக் கண்டாலும் தொட்டாலும் ஸ்நானம் செய்ய வேண்டுமென்ற மனுசாஸ்திரம் எழுதி வைத்துக் கொண்டிருப்பவர்களும்” சென்சஸ் கமிஷனர் தான் பிளவுபடுத்தப் பார்க்கிறார் என வீண் கூச்சல் போடுவது ஏனென்று கேட்டார். “இக்குடிமதிப்புக் காலத்தையே குலச் சிறப்பின் காலமெனக் கருதி சீலம் பெற்று இராஜாங்கத்ததார் நன்னோக்கத்திற்கு இசைந்து நன்மார்க்கமும் நற்சீரும் அடைய வேண்டும்” என்பதே அவரது நோக்கமாக இருந்தது.
• நமக்கு இப்போது கிடைக்கிற விவரங்களைக் கொண்டு பார்த்தால் இந்திய அளவில் குடிக்கணக்கெடுப்பின்போது அயோத்திதாசரைப் போல அதனை ஓர் அரசியல் பிரச்சினையாக மாற்றியவர்கள் வேறு யாரும் கிடையாது. இந்துக்களை விட்டு அகன்ற கிறித்தாவ்களாகவோ, இசுலாமியர்களாகவோ, பௌத்தர்களாகவோ மாறிவிடுங்கள் என தீண்டாத மக்களுக்கு அப்போது அவர் ஆலோசனை கூறினார்.
• 1881 குடிக்கணக்கெடுப்பின்போது தொடங்கி பின்னர் 1911இல் குடிக்கணக்கெடுப்பு எடுக்கப்பட்ட காலம் வரை சாதியற்ற தொல்குடி மக்களின் தனித்துவமான அடையாளத்தைப் பேண அவர் கடுமையாகப் போராடியிருப்பது வியப்பளிக்கிறது.
• “இந்துக்களுக்கு மத்தியில் இந்துவல்லாமல் வாழ்பவர்கள் இத்தேசப் பூர்வக்குடிகளேயாகும். இக்கூட்டத்தோருக்கு இந்துக்கள் சத்துருக்களேயன்றி மித்துருக்கள் ஆகமாட்டார்கள். பெரும்பாலும் இவர்கள் சாதிபேதமற்ற திராவிடர்களும், மதத்தில் பௌத்தாகளுமேயாகும். . . சென்ற குடிமதிப்பெடுத்த காலத்தில் பறையனென்னும் பெயர் ஆயிரத்து ஐநூறு வருடங்களுக்குப் பின்னரே தோன்றிய சாதிப் பெயரென்று சென்ற சென்சஸ் கமிஷனர் தன்னுடைய குடிமதிப்பு ரிப்போர்ட்டு புத்தகத்திலும் வெளியிட்டுருக்கின்றார்கள். இவைகள் யாவையும் தற்கால சென்சஸ் கமிஷனர் கனந்தங்கிய மிஸ்டர் கேய்ட் அவர்கள் கண்ணுற்று குடிமதிப்பு எடுக்குங்கால் தங்கள் அறியாமையாலும், பயத்தினாலும் இந்துக்களுக்குப் புறம்பான பூர்வ குடிகளில் சிலர் பறையர்களென்றும் கூறுவார்கள். அவர்கள் யாவரையும் அப்பெயரால் குறிக்காது ‘சாதிப்பேதமற்ற திராவிடர்களென’ ஒரே பெயரால் -குறிப்பது உத்தமமும், பிரிட்டிஷ் ஆட்சியில் இந்துக்கள் அடையும் சுதந்திரங்களைச் சாதிபேதமற்ற திராவிடர்டகள் அடையவும் ஏதுவுண்டாகும்,” என அயோத்திதாசர் எழுதியுள்ளார் (17.12.1910)
• அதுமட்டுமல்லாது கிருத்தவர்களையும், இசுலாமியர்களையும் தவிர்த்து பிறர் அனைவரையும் இந்துக்களென்றே குடிக்கணக்கெடுப்பில் குறிக்க வேண்டும் என்று வடநாட்டினர் சிலர் ஏடுகள் வாயிலாகத் தெரிவித்துவந்த கருத்துக்களையும் கடுமையாக அவர் எதிர்த்துள்ளார்.
• ஏசு கிறித்துவின் போதனைகள் கிருத்தவ மதத்தின் மையமாக இருப்பது போல, நபிகளின் போதனைகள் மகம்மதியர்களின் மதநம்பிக்கைக்கு ஆதாரமாக இருப்து போல இந்து மதத்துக்கு எதுவும் கிடையாது என்பதை கேலியோடு அவர் சுட்டிக் காட்டினார். “இந்து என்பவனுக்கு தேசமும் கிடையாது. பெற்று வளர்த்த தந்தையாரும் கிடையாது. அவன் போதித்த தர்மமும் இன்னதென்று கிடையாது. அவனால் சீர்திருத்திய மக்கள் கூட்டமும் கிடையாது. அவனது சரித்திரமும் கிடையாது. இத்தகைய யாதுமற்றோன் மதம் இந்து மதமாம். எந்த மதத்திற்கும் சொந்த மில்லாத மாம் இந்து மதமெனில் அவை யாருக்குரியவை? யார் அவற்றைத் தழுவுவார்?. . . . . . இந்து ஒருவன் உண்டாவென்னில் வேதாந்தி மதம் என்பதும், வேதாந்தி ஒருவன் உண்டாவென்னில் அத்துவித மதம் என்பதும், அத்துவிதி என்பவன் ஒருவன் உண்டாவென்னில் விசிட்டாத்துவித மதம் என்பதுமாகிய மாறுதலைக் கூறிவருவார்களன்றி எதற்கும் தக்க ஆதாரங்களைக் கொடுக்கமாட்டார்கள்.” என்று குறிப்பிட்ட அயோத்திதாசர், கிருத்தவர்களும் மகமதியர்களும் இந்த தேசத்தாருடன் சகல பாவனைகளிலும் சம்பந்தித்திருக்கின்றார்கள். அவர்களை விலக்கச் சொல்வின்றவர்கள் இந்த தேசத்தோருடன் ஒரு சம்பந்தமும் வைத்துக் கொள்ளாத ஆரியர்களை இந்த நாட்டிலிருந்து அகற்ற முன் வருவார்களா? என்றும் கேட்டார்.
• ஆக, அயோத்தி தாசரின் திராவிட அடையாளம் என்பது சாதிபேதமற்றது. தனித்துவமானது. அது, கிறித்தவர்களை, இசுலாமியர்களை சகோதரர்களாகப் பார்க்கின்ற ஓர் அடையாளமுமாகும்.
• தமிழ்ச் சமூகத்துக்கு இன்றும் பயன்படக்கூடிய சிந்தனைகளை முன்வைத்த அயோத்திதாசப் பண்டிதர் 1914 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் நாள் சம்மணமிட்டு அமர்ந்த நிலையில் பௌத்த மந்திரங்களை உச்சரித்தபடி இந்த உலகைத் துறந்தார். இன்று அவரது நினைவு நூற்றாண்டு.
இன்று ஒரு சாதரண மனிதனும் எடுத்துக்காட்டி பேசும் அளவுக்கு வெகுசனத்தன்மையை அடைந்துவிட்ட திருக்குறளைத் தமிழக்கு வழங்கியவர் அயோத்திதாசரின் பாட்டனார் கந்தப்பன் ஆவார் என்பதை எத்தனை தமிழ் இலக்கியவாதிகள் அறிவர்? திருக்குறளுக்குப் பக்கம் பக்கமாய் விளக்கவுரைகள் எழுதிச் தள்ளியவர்களும், பல்வேறு அடைமொழிகள் வழங்கி திருவள்ளுவரையும் திருக்குறளையும் பேசும் தமிழறிஞர்களும் தமிழாய்ந்த இந்த வரலாற்றை நேர்மையாக எங்கும் பதிவு செய்யாமல் கவனமாகத் தவிர்த்துவிட்டு திருக்குறளை வைத்துப் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.இப்படியாகத் தமிழ் இலக்கிய ஆர்வமும் ஆங்கிலப் புலமையும் கொண்டு, சித்த மருத்துவத் தொழிலைக் குடும்பத் தொழிலாகவே செய்து வந்த ஒரு வளமான குடும்பச் சுழலில் பிரிந்து வளர்ந்தவர் அயோத்திதாசர் என்பதுடன் குடும்பத்தில் நிலவிய அவ்விலக்கியச் சூழலே பிற்காலத்தில் அவரது செழுமையான இலக்கியப் பணிகளுக்கு அடிப்படையாகவும் விளங்கியிருக்கின்றன என்றால் அது மிகையாகாது. பண்டிதரிள் தமிழ் இலக்கிய/ சமூக அறிவாற்றலை வாளிப்புடன் வளர்த்தெடுத்தவர் . அவரது தமிழாசிரியர் தேனாம்பேட்டை வீ.அயோத்திதாச கவிராஜ பண்டிதர் ஆவார். அவரது நினைவாலேயே காத்தவாராயன் என்னும் தமது பெயரை அயோத்திதாசர் என்று மாற்றியமைத்துக்கொண்டார். மேற்கண்டவற்றின் தொடர்ச்சியாக எழுச்சிபெற்ற பண்டிதரின் எழுத்துப் பணியானது அவரது சினேகிதர் ரெவரண்ட் ஜான் ரத்தினம் நடத்திய ‘திராவிடப் பாண்டியன்’ இதழிலிருந்து துவக்கம் கொண்டிருக்கிறது எனலாம்.1907 ஜூன் பத்தொன்பதாம் நாளில் அயோத்திதாசப் பண்டிதர் ‘ஒரு பைசா தமிழன்’என்னும் வாரப் பத்திரிகையைத் துவக்கினார். “உயர்நிலையையும் இடைநிலையையும் கடை நிலையையும் பாகுபடுத்தி அறியமுடியாத மக்களுக்கு, நீதி, சரியானபாதை மற்றும் நேர்மையைக் கற்பிப்பதற்காகச் சில தத்துவவாதிகளும் இயற்கை விஞ்ஞானிகளும் கணிதவியலாளரும் இலக்கியவாதிகளும் ஒன்றுகூடி ஒருபைசாத் தமிழனை வெளிக்கொண்டு வந்தார்கள்” என்று இதழ் கொண்டுவரப் பட்டதன் நோக்கம் குறித்து அயோத்திதாசர் எழுதினார். தாழ்த்தப்பட்ட சமூகத்தவரை ‘பைசா பெறதாவர்’ என்பது போல இளப்பமாகக் கூறுவது வழக்கமாயினும் அத்தகைய ஒரு பைசாத் தமிழன் அருமை அறியாதவர் அதன் உண்மையை உணர்ந்தால் ஒரு கோடிப் பொன் இது தான் என்று உரைப்பார் என்று தாம் நடத்திய இதழுக்கு ஒரு பைசாத் தமிழன் என்றுபெயரிடப்பட்டதாகவும் விளக்கமளித்தார் பண்டிதர். அத்துடன் இதழின் விலை ஒரு சல்லி பைசா(ஒரு பைசா) வாக நிர்ணயிக்கப்பட்டு அவ்விலையை எடுத்துரைப்பதுபோல இதழுக்கும் பெயர் சூட்டப்பட்டதாகவும் தெரியவந்தது.ஒரு பைசா தமிழன் பத்திரிக்கை ‘தமிழன்’ என்று பெயர் மாற்றம் கொண்டு 1908 ஆகஸ்டு 26ல் வெளியிடப்பட்டதுடன் அதுமுதல் பண்டிதர் மறைந்த 1914 மே 5 வது நாள் வரைக்கும் தொய்வில்லாமல் இதழ் வெளிந்தது. வாசகர் எண்ணிக்கை பெருகி அயல்நாடுகளிலும் தமிழனின் செல்வாக்கு உயர்ந்தபோது இதழின்அளவு இரட்டிப்பாக்கப்பட்டிருக்கிறது. அயோத்திதாசர் ஆசிரியராகவும் , வெளியீட்டாளராகவும் இருந்து பல்வேறுபடைப்பாளுமைகளின் ஆக்கங்களை ஒருங்கிணைத்து கட்டுரைகள், கவிதைகள், விளக்கவுரைகள், நாட்டு நடப்புகள், வினா-விடைகள் கொண்டதொரு பன்முக இதழாய் ஒளிர்ந்துள்ளது தமிழன். பூர்வத் தமிழொளியாம் பௌத்தரது ஆதிவேதம், இந்திரர் தேச சரித்திரம் , யதார்த்த பிராமணர்களும் வேஷப் பிராமணர்களும், அரிச்சந்திரன் மெய்யெனெனும் கதையும் பொய்யான விபரமும் திருவள்ளுவநாயனர் உண்மை சரித்திரம், வேஷப் பிராமணரின் வேதாந்த விவரம் போன்ற அயோத்திதாசரின் முக்கியமான படைப்புகள் தமிழன்இதழில் வெளிவந்தவையாகும். பண்டிதர் சுமார் 25 நூல்கள், 30 தொடர் கட்டுரைகள், 21 விரிவுரைகள், 12 சுவடிகளுக்கு உரை எழுதியவை தவிர அரசியல் கட்டுரைகள், கேள்வி பதில்கள், பகுத்தறிவுக் கட்டுரைகள் எனச் சில நூறு கட்டுரைகள் எழுதினார்.
என்று பண்டிதரின் எழுத்துப் பணிகளை மகாபண்டிதர் அயோத்திதாசர் என்னும் கட்டுரையில் பட்டியலிடுகிறார் அன்பு. பொன்னோவியம் அவர்கள்.ஆதிபகவனாம் புத்தபிரான் ஓதியுள்ள திரிபிடகத்தில் முதலாம் பிடகத்திற்கு வழிநூவலாகத் திரிக்குறளை திருவள்ளுவர் இயற்றியுள்ளார் என்றதுடன் திரிமந்திரம், திரிவாசகம், திரிவெண்பா, திரிகடுகம், மற்றும் சித்தர் நூல்கள் யாவும் சார்பு நூல்கள் என்றும் விளக்கமளித்தார்.திருக்குறளை திரிபிடகங்களின் வழிநூல் என்ற பண்டிதர் 1330 குறள்களுக்கும் பதவுரை ,பொழிப்புரை., கருத்துரை, விரிவுரை எழுதுவதைத் தமது லட்சியமாக கொண்டு வந்துள்ளார்.55 வது அதிகரமான தெரிந்து தெளிதல் அதிகாரத்துக்கு விளக்கவுரை எழுதி வெளியிட்டு விட்ட நிலையில் மிச்சத்தையும் எழுதிமுடிக்கும் முன்பு காலம் அவரது வாழ்வுக்கு முடிவுரை எழுதிவிட்டது.ஒளவையார் எழுதிய ஆத்திசூடி, கொன்iறை வேந்தன் ,வெற்றிஞானம் (வெற்றிவேற்கை) ஆகிய மூன்று நூல்களையும் ஒருங்கிணைத்து திரிவாசகம் என்று பெயரிட்டழைத்தார் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. அறம் செய விரும்பு என்பதை அறன் செயல் விரும்பு என்று மாற்றியமைத்து எழுதியதுடன் அறக் கடவுளாகும் புத்த பிரானின் அட்டாங்க மார்க்வு செய்கைகளை விரும்புக என்று அதற்கு தக்க விளக்கத்தையும் வழங்கினார். திருக்குறளுக்கு எழுதியது போல ஆத்திசூடிக்கும் புதுவகை அர்த்தத்தை ஏற்கத்தக்க வகையில் வழங்கினார். ஏற்பது இகழ்ச்சி என்ற சொற்பதத்தை ஏற்பதிகழ்ச்சி என்றெழி யாசகத்தால் பெறப்படும் பொருள் இகழ்ச்சியானது என்றிருந்த அதன் விளக்கத்தை “ஒருவர் சொல்லும் வார்த்தையை விசாரணையின்றி ஏற்றிக்கொள்வது இழிவைத் தரும் என்பதாம்” என்று மாற்றியமைத்து எழுதினார்.இந்திரர் தேச சரித்திரம் என்பது பண்டிதரின் ஆக்கத்தில் தமிழன் இதழில் தொடர் கட்டுரையாக வந்து நூல்வடிவம் கெண்டநூலாகும்.
சித்தார்த்தர் ஐம்பொறிகளை வென்ற திறத்தால் ஐந்திரர் என்ற பெயர் கொண்டு அழைக்கப்பட்டார். ஐந்திரர் என்பது இந்திரர் என்று திரிந்து அதன் பெயராலேயே இந்திர தேசம் என்று அழைக்கப்பட்ட தேசம் நாளடைவில் இந்திய தேசம் என்றுமானதாக இந்நூலில் எழுதினார்.பண்டிதரின் எழுத்துப் பணி , இதழ்ப் பணி உள்ளிட்ட இலக்கியச் சிந்தனகைள் செயல்பாடுகள் யாவும் சாதிகளை அழித்தொழித்து சமத்துவ சமுதாய உருவாக்கம் செய்வதை மையமாகக் கொண்டிருப்பவை.பர்ப்பனியம் தன் சுயநலத்துக்காக இங்கு கட்டி எழுப்பிய இந்து மதமும், மனு தர்மம் எனப்படும் அதர்மம் உட்பட அதன் சாஸ்திரங்கள், ஸ்மிருதிகள், புராணங்கள் யாவும் சாதி/ மத பிரிவினைவாத சித்தாந்தச்செயல்பாடுகளாலானவை என்ற உண்மைகளை மக்கள் முன் கொட்டிக் கவிழ்த்தது பண்டிதரின் இலக்கியம்.
Subscribe to:
Post Comments (Atom)
Raagam Thaalam Pallavi - ராகம் தாளம் பல்லவி - Theerppugal Thiruththapadalaam
Raagam Thaalam Pallavi ராகம் தாளம் பல்லவி Theerppugal Thiruththapadalaam Movie - Theerppugal Thiruththapadalaam Music - Shankar Ganesh S...
-
புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ . விருத்தாசலம் ( ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948), மிகச்சிறந்த த...
-
ஞானக்கூத்தன் ஞானக்கூத்தன் ( அக்டோபர் 7, 1938 - சூலை 27, 2016) ஒரு தமிழ்க் கவிஞர் ஆவார் . இவரது இ...
No comments:
Post a Comment