Wednesday, February 17, 2021

எஸ்.வைதீஸ்வரன்

 



எஸ்.வைதீஸ்வரன் 80 | கவிதையின் உயிர்த் தொடர்ச்சி

செப்டம்பர் 22 - எஸ்.வைதீஸ்வரன் பிறந்த தினம்

சி.சு.செல்லப்பா தொடங்கி நடத்தி வந்த 'எழுத்து' சிற்றிதழே தமிழ்க் கவிதையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. புதுக் கவிதை என்ற வடிவத்துக்குக் கவனத்தையும் வாசக ஏற்பையும் பெற்றுத் தந்தது. அந்த மாற்றத்தை நடைமுறைப்படுத்திய முன்வரிசைக் கவிஞர்களில் எஸ். வைதீஸ்வரனும் ஒருவர். எழுத்து இதழில் எழுதியவர்களில் மிகுந்த சமகாலப் பொருத்தம் கொண்ட கவிஞரும் அவர்தான். பிற கவிஞர்கள் பிரத்தியேகமான பாடு பொருட்களைக் கவிதைக்காகத் தேடிக்கொண்டிருந்தபோது அன்றாட வாழ்வின் எளிய நிகழ்ச்சிகளிலிருந்து இவர் தன் கவிதையைக் கண்டெடுத்தார்.

கவிதைக்குள் அன்றாடப் பொருட்கள்

'எழுத்து' காலக் கவிஞர்களில் பலரும் புதிய கவிதையைச் செய்யுள் வடிவத்திலிருந்து விடுபட்டது என்றும் உரைநடையைச் சார்ந்தது என்றும் கருதியபோது பிரமிள், நகுலன், சுந்தர ராமசாமி. சி.மணி போன்றவர்கள் அதை முற்றிலும் புதிய உணர்வு நிலை என்று நிறுவினார்கள். அவர்களில் எஸ். வைதீஸ்வரனும் ஒருவர். முன் சொன்ன கவிஞர்களேகூடப் புழக்கத்திலிருக்கும் பொருட்களையோ இடங்களையோ தயக்கத்துடன் கவிதைக்குள் கொண்டுவந்தபோது மிகச் சுதந்திரமாக நடைமுறைப் பொருட்களைக் கவிதைக்குள் அனுமதித்தார் வைதீஸ்வரன். அச்சில் வெளியான அவரது முதல் கவிதையே இந்த ஜாலத்தை மிக இயல்பாக மேற்கொண்டது. பிற கவிஞர்களுக்கு நிலவு ஆகாயப் பொருளாக இருந்தபோது வைதீஸ்வனுக்கு அது நிலத்தில் கிடைத்தது. .நா.சுப்ரமணியன் எழுதிய கவிதையொன்றில் நிலவு 'நாரியர் புடை சூழ மேக மண்டலத்தில் நடக்கிற' பெண்ணாகவே உருவகம் செய்யப்படுகிறது. வைதீஸ்வனிடம் 'கிணற்றில் விழுந்த நிலவு' கவிதைப் பொருளாகிறது.

'கிணற்றில் விழுந்த நிலவைக் கீழிறங்கித் தூக்கிவிடு

நனைந்த அவளுடலை நழுவாமல் தூக்கி விடு

மணக்கும் அவளுடலை மணல்மீது தோய விடு

நடுங்கும் ஒளியுடலை நாணல் கொண்டு போர்த்தி விடு'

என்ற கவிதையில் தென்படும் வித்தியாசமும் புதிய தொனியும் அன்று அதிர்ச்சியையும் திகைப்பையும் அளித்தன என்பதை இன்று விசுவாசமில்லாமல் நம்ப வேண்டியிருக்கிறது. இந்தக் கவிதையை ஒட்டியும் வெட்டியும் இன்னொரு 'எழுத்து' கவிஞரான தி.சோ.வேணுகோபாலன் 'ஒட்டு வெட்டு' என்ற கவிதையை எழுதினார். வைதீஸ்வரனின் கவிதையை முகாந்திரமாக வைத்து ஜெயகாந்தனும் 'எழுத்து'இதழில் வெளியான தனது ஒரே கவிதையை எழுதினார். எழுத்து இதழில் வெளியான கவிதைகளில் அன்றைக்கு உடனடிப் பார்வையில் மிக நவீனமானவையாக இருந்தவை வைதீஸ்வரனின் கவிதைகள் என்பதைப் பழைய கவிதை நூல்களை ஆராயும்போது காண முடிகிறது.

'மறந்து வைத்த பிளாஸ்டிக் பையாய்

மரத்தின் மேல் ஒரு தேன்கூடு'

என்ற உவமையும் 'எவர் சில்வர் நிலவு' என்ற சொற்சேர்க்கையும் புதுமையாகத் தொனித்தன. நகரத் தெருக்களும் ரிக்ஷாக்களும் இயல்பாகக் கவிதையில் இடம்பெற்றன. இன்று இந்தப் புதுமையின் கருக்கு அழிந்திருந்தாலும் எழுதப்பட்ட காலத்தில் மெருகு குன்றாமல் வாசிக்கப்பட்டன என்பது புரிகிறது.

எனது நகர வழிகாட்டி

புதுக் கவிதை என்ற இலக்கிய மாற்றமே நகர்ப்புற, படித்த, நடுத்தர வர்க்க இளம் மனதின் உருவாக்கம்தான். அதன் சரியான பிரதிநிதி என்று எஸ்.வைதீஸ்வரனைச் சொல்லலாம். நகர்ப்புறக் காட்சிகள், மனநிலை, அன்றாடப் பழக்கங்கள் ஆகியவற்றைக் கவிதையில் வலுவாக இடம்பெறச் செய்தவர் அவரே. கவிதை எழுத்தில் ஈடுபட்ட ஆரம்ப காலங்களில் என்னைப் பாதித்த பலருடைய கவிதைகளும் என் கவிதையாக்கத்தில் செல்வாக்குச் செலுத்தியதை உணர முடிந்தது. அப்படி உணர்ந்ததும் வேகமாக விலகவும் முடிந்தது. ஆனால் யாரோ ஒருவருடைய நிழலான பாதிப்பைத் தொடர்ந்து உணர்ந்துகொண்டேயிருந்தேன். நான் நகரத்துப் பண்டம். எனவே என் கவிதைகளில் நகரத்தைச் சார்ந்த கூறுகள் படிந்திருப்பதை அறிய முடிந்தது. மரபு சாராத குறிப்பீடுகள், வட்டாரத் தன்மையில்லாத மொழி, பிரத்தியேகத் தன்மை யில்லாத படிமங்கள் என்று நான் பயன்படுத்தியிருந்தேன். ஆனால் இதை வேறு ஒருவரின் புலப்படாத தூண்டுதலாகவே பார்த்தேன். 'உதய நிழல்' என்ற தொகுப்பின் கவிதைகளை மொத்தமாக வாசித்தபோதுதான் எனது நகர வழிகாட்டியைக் கண்டுகொண்டேன் - எஸ்.வைதீஸ்வரனை.

இன்னொரு விதத்திலும் வைதீஸ்வரன் என்னை மறைமுகமாகப் பாதித்திருந்தார். அவரது கவிதைகளில் அதிகம் இடம்பெறும் பறவை கிளி. 'காற்றில் கிளி உருண்டு சிரிப்பொலியாய் சிறகு கொட்டுவதும், வெளியில் பல கிளிகள் மிதிபட்டுக் கிடப்பதும், பசிக்குரலின் உறுமலில் பசுங்கிளிகள் ஊமையாவதும்' அவர் கவிதைகளில் இடம்பெற்றிருக்கின்றன. அவரது கவிதை உலகில் அவ்வப்போது சிறகடித்துப் பறந்த கிளியை எனது கவிதைகள் சிலவற்றில் வாழ்வின் மீதான இச்சையைக் காட்டும் உருவகமாக மாற்றிக்கொண்டேன். இந்த இரண்டு நுண்ணிய பாதிப்புகளுக்காக அவரை எப்போதும் நினைத்துக்கொள்வேன். இவற்றை மீறி அவரை நான் நினைவுகூர்வது அசோகமித்திரனின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு 'இன்னும் சில நாட்க'ளுக்கு எழுதிய கச்சிதமும் ஆழமுமான முன்னுரைக்காக.

வைதீஸ்வரன் அறுபதுகளில் எழுதத் தொடங்கியவர். அவரது முதல் கவிதை 'எழுத்து - அக்டோபர் - நவம்பர் 1961' இதழில் வெளிவந்திருக்கிறது. தொடர்ந்து அதே இதழிலும் பிற சிற்றிதழ்களிலும் எழுதியிருக்கிறார். உதய நிழல் என்ற முதல் தொகுப்பு வெளிவந்து இருபது ஆண்டுகளுக்குப் பின்பே இரண்டாவது தொகுப்பான 'நகரச் சுவர்க'ளும் பின்னர் 'விரல்மீட்டிய மழை'யும் இறுதியில் அவரது மொத்தக் கவிதைகளின் தொகுப்பும் வெளிவந்தன. சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். 'கால் முளைத்த மனம்' அவரது சிறுகதைத் தொகுப்பு. எனினும் கவிஞராகவே அறியப்பட்டவர் அவர். அவரது கைரேகை படிந்திருப்பதும் கவிதைகளில்தான்.

நகர மத்தியதர வாழ்க்கையே கவிதைகளின் களம். அதன் சலனங்கள் பற்றிய பார்வையே அவர் கவிதைக்கான தூண்டுதல். எளிமையான மொழி. சாதாரணப் பொருட்களை அலகாகக் கொண்ட படிமங்கள். இயற்கை மீதான காதல். சமூக அவலம் பற்றிய கோபம். வாழ்வையும் மரணத்தையும் பற்றிய அலசல். இவைதான் வைதீஸ்வரன் கவிதைகளின் மையப் பொருட்கள். ஒருவகையில் எல்லாக் காலத்திலும் கவிதையின் நிகழ்கால அக்கறை இந்த மையங்களைச் சார்ந்ததுதான்.

நேற்றைய கவிதையின் உயிர்த் தொடர்ச்சி

வைதீஸ்வரனின் நீண்ட கவிதைகளைவிட என்னைக் கவர்ந்தவை அவரது சிறு கவிதைகள். சாதாரணமான ஒரு நிகழ்வை அவை அசாதாரணமான நிலைக்கு மிக இயல்பாக எடுத்துச் சென்றுவிடுகின்றன.

'இருட்டுக்குப் பயந்து

கண்ணை மூடிக் கொண்டேன்

உள்ளே புது இருட்டு

'உர்' ரென்றது' என்ற நான்கு வரிகள் பல விளக்கங்களுக்கு விரிகிறது. அவரது இன்னொரு கவிதையான 'பறக்கும் மலர்' எளிய வரிகளில் தீராத காட்சியைத் தீட்டிச் செல்கிறது - ஒரு ஜென் கவிதைபோல.

'கொடியில் மலரும் பட்டுப் பூச்சி

கைப்பிடி நழுவிக்

காற்றில் பறக்கும் மலராச்சு' .

எஸ் வைதீஸ்வரன் 1935-ம் ஆண்டு பிறந்தவர். அச்சில் அவரது முதலாவது கவிதை இருபத்தைந்தாம் வயதில் வெளியாகியிருக்கிறது. இன்றும் கவிதைகள் எழுதிக்கொண்டி ருக்கிறார். கட்டுரைகள் எழுதுகிறார். ஓவியரும் கூட.

இன்று அவரது கவிதையை வாசிக்காமலேயே புதிய தலைமுறைக் கவிஞன் ஒருவன் செயல்பட முடியும். அவரது கவிதைகளும் இன்று காலத்தின் முன் பழையனவாக மாறியிருக்கவும் கூடும். எனினும் இன்றைய கவிதை செயல்படும் நுண்ணுணர்வுத் தளத்தில் அவரது கவிதையாக்க அணுக்களும் இருக்கின்றன. இன்னும் இருக்கும். கவிதையின் உயிர்த் தொடர்ச்சியும் கவிஞனின் நிரந்தர இருப்பும் அதுதானே?

வைதீஸ்வரன் கவிதைகள்-முழு தொகுப்பு

            ஒரு வித மானசீகப் பிடிவாதத்தின் வெளிப்படுகளாக’ 366 மலர்கள் பூத்திருக்கின்றன. மலர்களின் பெயர்வைதீஸ்வரன் கவிதைகள்’. ‘கிணற்றில் விழுந்த நிலாவாகத் தொடங்கி இறுதியில்மொழியற்ற கணமாகஇந்தப்பிடிவாதம்பரிணாமம் அடைந்திருக்கிறது.

கவிஞரின் முதல் கவிதையிலிருந்து அவர் எழுதியுள்ள அண்மைக்காலத்துக் கவிதை வரைத் தொடர்ந்து படிக்கும்போது, அந்தந்தக் காலத்துச் சம்பவங்களின் தாக்கம் வேறுபட்டாலும், குரல் ஒலி மாறவில்லை என்பதை நம்மால் உணரமுடிகின்றது. இதுதான் கவிதையின்உள்ளீடான ரிதம்’.

வியட்நாம் போரின் போது, ஒரு பிரபலத் தமிழ் எழுத்தாளரை ஒருவர் கேட்டாராம்உங்களை ஓர் அமெரிக்கன் சிப்பாய் கண்மூடித்தனமாக மை லாய் வீதியில் வெறிபிடித்தாற்போல் குழந்தைகளையும்,பெண்களையும் சுட்டுக் கொண்டே ஓடியது பாதிக்கவில்லையா? நீங்கள் அதைப் பற்றி ஏன் எழுதக் கூடாது?’ என்று கேட்டாராம். எழுத்தாளருக்குக் கோபம் வந்து விட்டது. ‘நான் எதைப் பற்றி எழுத வேண்டும், எழுதக் கூடாது என்று சொல்வதற்கு நீ யார்?’என்றாராம்.

எழுத்தாளர் கூறிய பதிலை என்னாள் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.’ மைலாய் வீதிச்சம்பவம் ஒரு குறியீடு. அந்தப் போர்வீரன் மீதும் தவறில்லை. போர் எப்படி ஒரு மனிதனை மிருகமாக்குகிறது என்பதின் குறியீட்டு உருவகந்தான் அந்தச் சம்பவம்.

இந்தத் தொகுதியில் வைதீஸ்வரன் அதை ஒரு குறியீட்டு உருவகமாகத்தான் கையாளுகிறார்.

கற்கால இருட்டுக்குள்
கண் புதைத்து
இருதயத்தைப் பிடித்துக் கொள்
உயிர் வாழப் பழகிக் கொள்
இருபதாம் நூற்றாண்டு

கற்காலத்தில் மனிதனை நோக்கியிருந்த ஒரே பிரச்னை கொடிய விலங்குகளினின்றும், இரக்கமற்ற இயற்கையினடமிருந்தும் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதுதான். இன்று மனிதனே கொடிய விலங்காக மாறி விட்டான்! ஓர் அணுகுண்டு வீசி லட்சம் பேரைக் கொல்கின்றான்! மனிதன் தன்னைச் சக மனிதனிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும்! கவிஞரின் நயமான குரலில் எவ்வளவு கூர்மை! ‘சொல்லொக்கும் சுடுசரம் ‘ !

கடலில் ஒரு துளியாகமைலாய் வீதிஎன்ற கவிதையைச் சுட்டிக் காட்டினேன். தொகுப்பு முழுவதும் வைரமென மின்னும் கவிதை ஒளி மின்னல் கீற்றுக்கள்1

அநாமிகா பிரசுராலாயத்தின் அதிபர் லதா ராமகிருஷ்ணனைப் பாரா ட்ட வேண்டும். அற்புதமான வடிவமைப்பு. கவிஞரே வரைந்த நுண்ணிய சித்திரம் முகப்போவியமாக அமைந்திருக்கிறது..’கவிதை நுண்கலைகளின் அரசி என்றால் ஓவியம் இளவரசிஎன்பார் ஆடன். அரசி, இளவரசி ஆகிய இருவர்மீதும் ஆளுமை கொண்டிருக்கும் வைதீஸ்வரனுக்கு என் பாராட்டுக்கள்!

கவிஞர் வைதீஸ்வரனின் படைப்புலகம்

லதா ராமகிருஷ்ணன்

லதா ராமகிருஷ்ணன்

கவிஞர் வைதீஸ்வரனுக்கு இந்த செப்டம்பர் மாதம் 22ஆம் நாள் வயது 80! அதே வருடம் அதே மாதம் பிறந்த என்னுடைய அம்மாவுடைய பிறந்தநாளுக்கு இரண்டுநாட்கள் கழித்துப் பிறந்தவர். (என்னுடைய அம்மா என்னளவில் ஒரு அருங்கவிதை!) இன்றளவும் தொடர்ந்து கவிதை, கதை, கட்டுரைகள் எழுதிவருகிறார். எழுத்தின் மூலமாக மட்டுமே தன்னை வெளிப்படுத்திக்கொள்ளத் தெரிந்தவர். அதனாலேயே பல விருதுகளும் அங்கீகாரங்களும் இவரைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. விளக்கு விருது கவிஞர் வைதீஸ்வரனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அம்ருதா இலக்கிய இதழில் கவிஞர் வைதீஸ்வரனின் படைப்பாக் கங்கள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன. VAIDHEESWARAN VOICES என்ற பெயரில் இயங்கிவரும் அவருடைய வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்பாக்கங்களும் கோட்டோவியங்களும் (கவிஞர் வைதீஸ்வரன் சிறந்த ஓவியரும் கூட!) குறிப்பிடத் தக்கவை.http://www.vydheesw.blogspot.in/கவிஞர் வைதீஸ் வரனு டைய கவிதைகள் சில THE FRAGRANCE OF RAIN என்ற தலைப்பில் ஆங்கில மொழியாக்கத்திலும் வெளி யாகியுள்ளன. 2006ஆம் ஆண்டு தேவமகள் அறக் கட்டளை கவிச்சிறகு விருது வழங்கும் நிகழ்ச்சியின் போது கவிஞர் எஸ்.வைதீஸ்வரன் ஆற்றிய ஏற்புரைஅடர்செறிவானது!)

 

vaideeswaran

 (*இக்கட்டுரை வரிகளின் கருணை என்ற தலைப்பில்2005இல் சந்தியா பதிப்பகத்தால் பிரசுரிக்கப்பட்ட சில நவீனத் தமிழ்க்கவிஞர்களை முன்வைத்து எழுதப்பட்ட 19 கட்டுரைகள் அடங்கிய எனது நூலில் இடம்பெற்றுள்ளது)

 

நீ

 விரும்பினாலும்

விரும்பாவிட்டாலும்

வெயில் அடிக்கிறது

வேண்டாம் என்று

 மழையைத் தடுக்க முடிவதில்லை.

 

போதும் நிறுத்து என்று

 புயலுக்கு உத்தரவிட இயல்வதில்லை.

 

நீர்வீழ்ச்சி விழுந்து கொட்டிய பின் தான்

ஆறாகி அடங்குகிறது.

 

இந்தக் கவிதைகளும் அப்படித்தான்

போலும்

ஒருவித மானஸீகப்

பிடிவாதத்தின்

மர்ம வெளிப்பாடு.

 

வைதீஸ்வரன்.

 

 

 

_மேற்காணும் சிறு கவிதை, கவிதை பற்றிய கவிஞரின் பார்வையை கனசுருக்கமாக, அதே சமயம், கனகச்சிதமாகப் புலப்படுத்திவிடுகிறது! இந்தச் சிறுகவிதையிலே இடம்பெறும் மழை, வெயில், புயல், ஆறு, நீர்வீழ்ச்சி முதலிய இயற்கையின் பல்வேறு அம்சங்களும் வைதீஸ்வரனுடைய கவிதை வெளியின் முக்கிய உந்துவிசைகளாகத் திகழ்கின்றன. நீர்வீழ்ச்சி விழுந்து கொட்டிய பின் தான் ஆறாகி அடங்குகிறது என்ற இரட்டை வரிகளே ஒரு தனிக் கவிதையாகத் திகழ்வதோடு கவிதை என்பது SPONTANEOUS OVERFLOW OF POWERFUL EMOTIONS என்ற கவிதைக் கோட்பாட்டை நினைவுகூரச் செய்வதாகவும் இருக்கிறது. மானஸீகப் பிடிவாதத்தின் மர்ம வெளிப்பாடு என்ற சொற்றொடரும் வைதீஸ்வரன் கவிதைகளில் துல்லியமாக இயங்கும் உள் உலகத்தைக் குறிப்பாலுணர்த்துகிறது.

 

எழுத்து இலக்கிய இதழின் மூலம் அறிமுகமாகிய கவிஞர் வைதீஸ்வரன் நவீன தமிழ்க்கவ்தையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் பங்களிப்பு செய்த குறிப்பிடத்தக்க கவிஞராக அறியப்படுபவர். ஓவியம், இசை, நாடகம் ஆகிய துறைகளில் அவருக்கிருக்கும் ஆர்வம்  அவருடைய கவிதைகளின் லயத்திற்கும், நுட்பமான காட்சிப்படுத்தலுக்கும் முக்கி யக் காரணமாகிறது என்று கூறலாம். உதய நிழல், நகரச்சுவர்கள், விரல் மீட்டிய மழை முதலானவை அவருடைய கவிதைத்தொகுப்புகள், வைதீஸ்வரன் கவிதைகள் என்ற அவருடைய முழுத்தொகுதியில் (கவிதா பதிப்பக வெளியீடு) ஏறத்தாழ 250 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றைத் தாண்டியும் அவர் பல கவிதைகளை இன்றளவும் எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நிலவின் விரலோட்டம்

நெளியும்

மணல் வெளி முதுகெங்கும்.

 

ஒரு முனையில்

நீண்ட சிற்றலைகள்

கரைகளின் செவியோரம்

நிரந்தர ரகசியங்கள்

சொல்லிச் சொல்லி

உலர்ந்து போகும்.

 

படபடக்கும் கூந்தலுடன்

அவளுக்கும், அருகே,

அவனுக்கும் இடையே

செறிந்த மௌனத்துள்

அநிச்சயங்கள் ஆயிரம்

பொருமும், பலஹீனத்

தழுவல்கள் மனத்துக்குள் மட்டும்.

 

அதோ!

நீண்டு வருகிறது

மீண்டும் சிற்றலை ஒன்று,

அவள் உடல் முனையை சீண்டி விட, ஆதிகால நாகத்தின்

நாக்குத் தீ போல.

 

சலனம் என்ற கவிதையின் வரிகள் மேலே தரப்பட்டிருக்கின்றன. என்ற அணுகுமுறையை விட இயற்கையை ஒரு பரவசக் கொண்டாட்டக் களமாகவே பாவித்துக் குதூகலிக்கின்றன வைதீஸ்வரனின் கவிதைகள்! இயற்கையின் கலைடாஸ்கோப் கோலங்களை இவருடைய பல கவிதைகள் பூரிப்புடன் படம்பிடித்துக்காட்டுகின்றன. இதனாலேயே, ஒரு கவிதை அதன் மொத்த அளவில் வாழ்க்கையின் துயரம் அல்லது தத்துவம் என்பதாகப் பேசும்போதுகூட அதில் பல வரிகள் இயற்கையை அழகுறக் காட்சிப்படுத்தும் கோலாகலமான தனிக்கவிதைகளாக மிளிர்கின்றன. உதாரணமாக, வீட்டு வாழ்வுக்குள் சில சூரியத் துளிகள் என்ற நீள்கவிதையைக் குறிப்பிடலாம். அந்தி ஒளியில் ஜவலிக்கும் ஓராயிரம் இலைகளில், கிடைத்த இடைவெளிகளில் சிரித்த சூரியத்துளிகள் தூல வாழ்வின் இயந்திரத்தனத் திலிருந்து சில மனிதர்களை மீட்டெடுத்து வேறோர் அற்புத உலகத்தில் சிறுபொழுது வேர்விடச் செய்கின்றன. தூல இருப்பு இன்மையாக, வேறோர் இருப்பு உண்மையாகும் சில மந்திர கணங்களைப் பதிவுசெய்யும் இக்கவிதையில் இயற்கையின் அழகில் ஒரு மனிதன் இரண்டறக் கலக்கும் ரசவாதம் ஆனந்தமாகப் பேசப்படுகிறது. அந்த உன்னத மனோநிலை நீடிப்பதில்லை என்ற சோகம் குறிப்பாலுணர்த்தப்படுவதாய் கவிதை முடிந்தாலும், அதைவிட அதிக அளவில் அந்தக் குறும்பொழுதின் பரவசம் வரவாக்கும் ஆனந்தமே கவிதை முழுவதும் விரவி நிற்கிறது.

 

தூரத்தில் ஒரு வெண் மேகம்

நடந்து வருகிறது. ஒளியால் செய்த

விண்ணகத்துப் பறவை

இறகில்லாமல் பறக்கிறதா,

தரையில்? இருக்கலாம்.

 

அவர் நடையில்

மனித முயற்சிகள் இல்லை.

சக்தியின் வியாபகம்

அந்த அசைவு.

 

இந்த வரிகளில் வரும், தரையில் பறக்கும் விண்ணகத்துப் பறவை எழுதுவோன் பிரதியில் அபூர்வ மனிதன் யாரையேனும் கூடக் குறிக்கலாம். வாசிப்போன் பிரதியில் அதுவே, அந்த மந்திர கணங்களில் மேகம் உயிருடைய, மதிப்பிற்குரிய ஜீவியாகவும் புரிபடுவதாகலாம். (ஜே.கிருஷ்ணமூர்த்தியின் உரையைக் கேட்கும் அனுபவத்தைப் பற்றிய கவிதையோ இது என்று நினைக்கத் தோன்றுகிறது). கவிதை முழுக்க இயற்கையின் பல காட்சிகள் குறியீடுகளாகக் கட்டமைந்திருக்கின்றன. (-ம்)

 

இலைகள்

பச்சைக் காதுகளாகி

எங்கள் உள்ளம் போல் குவிந்து

கூர்மையாகின்றன.

 

மனக்குருவி, தீர்ப்பு, மரம் முதலிய பல கவிதைகளில் இயற்கையின் அம்சங்கள் குறியீடுகளாய் கவிதையை வடிவமைத்திருப்பதைக் காண முடிகிறது.

 

இயற்கை போலவே ஆண்-பெண் உறவுநிலைகளும் வைதீஸ்வரன் கவிதைகளின் முக்கியக் கண்ணிகளுள் ஒன்றாகப் பிடிபடுகிறது. பாலுறவை அதனளவிலான ஆனந்தத்திற்காய் பரவும் கவிதைகளும், அதன் வழி பெறப்படும் ஆத்மானுபவத்திற்காய் பரவும் கவிதைகளும் வைதீஸ்வரன் படைப்புவெளியில் கணிசமாகவே இடம்பெற்றுள்ளன. உறவில் என்ற கவிதையை உதாரணமாகக் காட்டலாம்.

 

தேனாய் உருகித் தழுதழுத்துக்

கடுமூச்சில் கன்னம் சுட்டு தெய்வம்.தெய்வம் என்று

நெஞ்சுக்குள் நெருங்கிக் கொண்டாய்.

நான் நம்பவில்லை.

 

வம்பாக _

ஊமையிருட்டில்

உனைத் தேடும் உள்ளங்கைக்குள்

தாழம்பூ முள் தரித்து

ரத்தம் இயங்கியதும்

நான் சிரிக்கக் கண்டேன்.

 

உடல் திறந்து

உனை நாடும் மர்மத்தில்

பட்டதெல்லாம் இன்பமாச்சு

ரத்தம் தேன்

உடல் கைப்பொம்மை

நீ நான்

கைகோர்த்த புயல்கள்.

 

கூடல் என்ற தலைப்பிட்ட கவிதை:

 

வியர்வை, ஒழுக்கம்

வறுமை வெட்கம்

தேவையற்ற துகிலை

வேண்டித் திறந்து

ஒரு கணம் பிறப்பின்

சோகச் சுகமறியும் வெறியில்

உடல்கள் படுமோர்

இன்ப முயற்சி.

 

என்று உடலுறவை பிறப்பின் சோகச் சுகமறியும் யத்தனமாய் விவரிக்கிறது.

 

நான் சந்தனம்

பூசிக்கொள்

மணம் பெறுவாய்

 

நான் மலர்

சூடிக்கொள்

தேன் பெறுவாய்

 

நான் நதி

எனக்குள் குதி

மீனாவாய்

 

நான் காற்று

உறிஞ்சிக்கொள்

உயிர் பெறுவாய்

 

நான் உயிர்

கூடிக்கொள்

உடம்பாவாய்.

 

என்று விரியும் கூடல் 2’ மிகக் குறைந்த, எனில் மிகச் சிறந்த வார்த்தைகளில் கலவியின் சாரத்தை எடுத்துரைக்கிறது. தோயும் மது நீ யெனக்கு, தும்பியடி நான் உனக்கு என்று காதலில் தோய்ந்த ஆண்-பெண் இரண்டறக் கலத்தலை, அதன் உணர்வுநிலையில் பாடிப் பரவும் பாரதியாரின் கவிதை தவிர்க்கமுடியாமல் நினைவுக்கு வருகிறது.

 

நம் குரல் கொடிகள்

மொழிகளை உதிர்த்துவிட்டு

ஒலிகளைக் காற்றால் பின்னிப்பின்னி

உணர்ச்சிகளை

உச்சிப் பூவாய் சிவப்பாக்குகிறது.

நமக்குள்

காலமும்

உலகமும்

உடலும்

காணாமல் போய்விடுகிறது

 

என்று முடியும் உச்சிப்பூவும் அடர்செறிவான பாலியல் கவிதை.

 

இந்த நிறைவான பாலுறவின் மறுபக்கமாய், மூளை பிறழ்ந்த ஏழைப்பெண், வன்புணர்ச்சி காரணமாய் வயிற்றில் உருவாகியிருக்கும் கர்ப்பத்தோடு செல்லும் காட்சியும் கவி மனதில் தவறாமல் இடம்பெறுகிறது.

 

குப்பையை தலையிலும்

குழந்தையை வயிற்றிலும்

சுமந்து நடந்த அவள்

சம்பந்தமில்லாமல்

சிரித்துக்கொண்டு போகிறாள்.

(மின்னல் துளிகள்),

 

வயதின் வாசல் என்ற நீள்கவிதையையும் பாலியல் கவிதைக்குச் சிறந்த உதாரணமாக முன்வைக்கலாம்.

 

அசிங்கமாய் சின்ன வயதில்

வெறுப்புடன் தெரிந்த

பல பாறை இடைவெளிகள்

இன்றெனக்கு

ரகசிய அடையாளங்களை

அங்கங்கே காட்டுகின்றன

 

என்ற வரிகள், மற்றும் _

 

பனிக்குடம் வெடித்ததென

எரிமலைக் குழம்புகள்

பாய்கிறது சமவெளியெங்கும்

வெடிக்கும் பூக்களும்

இசைக்கும் புயலும்

தந்தை தாய் பரஸ்பரத் தழுவலும்

அன்பின் ஓசையும், புழுக்கமும்

அத்தனையும் கலந்த கனவுக் குழப்பம்

துயில், மந்திரக் கம்பளமாகி

தூக்கிச் செல்லும் என்னை

மலையுச்சி நட்சத்திரத்திற்கு.

 

முதலிய வரிகளும், இறுதி வரிகளான _

 

எனக்குள் நிச்சயமாக ஒரு தந்தை எழுந்துவரக் கண்டேன்.

நீருக்குள் தோன்றும்

நெருப்புப்பந்தம்போல.

 

என்ற வரிகளும் இக்கவிதையை செறிவடர்த்தி மிக்க பாலியல் கவிதையாக இனங்காட்டு கின்றன.

 

சமூகப் பிரக்ஞையுள்ள மனிதராய் கவிஞர் வைதீஸ்வரனை இனங்காட்ட அவருடைய எல்லாத் தொகுப்புகளிலும் கணிசமான என்ணிக்கையில் கவிதைகள் உண்டு. இந்த வகைக் கவிதைகளில் நீள் கவிதைகள், குறுங்கவிதைகள், இறுக்கமாகக் கட்டப்பட்ட கவிதைகள், தளரக் கட்டப்பட்ட கவிதைகள், நேரிடையான கவிதைகள், பூடகமான கவிதைகள் முதலான பல பிரிவுகளைக் காணலாம். மைலாய் வீதி, நிலைகள், ஊமையின் சாபம், , பெஞ்சி, பசிமுதலிய பல கவிதைகளை உதாரணங்கூறலாம்.

வாழ்க்கையின் நிலையாமை குறித்த கவிதைகளும் கணிசமாகக் காணக்கிடைக்கின்றன. நாளொன்றின் ஒவ்வொரு கணப்பொழுதும் கவி மனம் தன்னைச் சுற்றி நிகழும் இயக்கங்களைத் துல்லியமாக அவதானித்தும், அனுபவித்தும், இரட்டிப்பு உயிர்ப்புடனும், அதன் விளைவாய் இரட்டிப்பு வலியுடனும் இருந்துவரும் நிலையை வைதீஸ்வரன் கவிதைகள் பதிவு செய்யும் நுண் விஷயங்களிலிருந்து அறிய முடிகிறது. நாய், பூனை, வௌவால், கிளி, ஆடு, என பல உயிரினங்களின் வாழ்க்கைகளை இவர் கவிதைகள் அவற்றின் அளவிலும், அவை வாழ்வுக்குக் குறியீடுகளாலும் அளவிலும் எடுத்தாளுகின்றன. சாவை நோக்கி என்ற கவிதையில் காகம் ஒன்றின் சாவு மனித வாழ்க்கையை நிறைய வரியிடை வரிகளோடு அவதானிப்பதை உதாரணங்காட்டலாம்.

 

கொல்லைப்புறத்தில்

விழுந்த காகம்

கோமாளித் தொப்பியாய்

குதிக்கிறது.

மனத்திற்குள் பறப்பதாக

இரண்டடிக்கும் குறைவாக.

 

வயதான பறவைக்கு

வானம் ஒரு சறுக்குப்பாறை.

உயரப் பறக்கும் குடும்பங்கள்

உதவியற்ற தூரத்துப் பறப்புகள்.

 

நிலமும் மனிதனும்

அபாயமாய் நெருங்கி

நிழல் நகங்கள் நீண்டு கவ்வ

கிழிந்த காகத்துக்குள்

பயம் மட்டும்

படபடக்கிறது

இறக்கைகளின் பொய்யாக.

 

மண்ணில் உதிர்ந்த

இறகுகள் இரண்டு

காற்றின் விரல்கள் போல்

கருப்பாய் பதறுகின்றன,

காகத்தின் அர்த்தத்தை மெதுவாக அழித்தவாறு.

மேற்கண்ட கவிதையில் காகத்தின் சாவு வழி வாழ்க்கையின் நிலையாமை அவதானிக்கப் படும் போக்கில் எத்தனை நிறைவான கவிதானுபவம் கிடைக்கிறது!

 

வயதான பறவைக்கு

வானம் ஒரு சறுக்குப்பாறை.

 

கிழிந்த காகத்துக்குள்

பயம் மட்டும்

படபடக்கிறது

இறக்கைகளின் பொய்யாக.

 

மண்ணில் உதிர்ந்த

இறகுகள் இரண்டு

காற்றின் விரல்கள் போல்

கருப்பாய் பதறுகின்றன,

காகத்தின் அர்த்தத்தை மெதுவாக அழித்தவாறு.

 

என எத்தனை கவித்துவமான வரிகள் வாசிப்போனுக்கு வரவாகின்றன!

 

வாழ்க்கை பற்றிய தத்துவமாகட்டும், மரணம் பற்றிய எண்ணவோட்டமாகட்டும், இயற்கை யைப் போற்றிப் பரவும் கவிதையாகட்டும், தினசரி வாழ்க்கையில் பெறக் கிடைக்கும் அமா னுஷ்ய தருணங்களாகட்டும், பாலுறவு குறித்த கவிதையாகட்டும், மேற்கண்டவிதமான நுட்பமான உவமான உவமேயங்களும், ஒப்புமைகளும், மொழி கையாளப்பட்டிருக்கும் அழகும் வைதீஸ்வரன் கவிதைகளில் வெகு இயல்பாக இடம்பெறுகின்றன.

 

சின்னச் சின்னக் கவிதைகளில்கூட நவீன கவிதையின் முக்கிய குணாம்சங்களில் ஒன் றான மொழிப் பிரயோக வீச்சைத் துல்லியமாக உணர முடிகிறது.

 

பையன் தெருவில்

காற்றைக் கோர்த்து

விரலை ஒட்டி

வானைப் பார்த்தான்

 

அங்கே பறந்தன

அவனுடைய குரல்கள்

என்ற பட்டம் என்ற தலைப்பிட்ட ஆறுவரிக் கவிதையின் மொழிவீச்சு பட்டம் விடும் பையனின் குதூகலத்தை எத்தனை நயம்படவும், திறம்படவும் படம்பிடித்துக் காட்டுகிறது! இதுபோல் பல கவிதைகளை உதாரணங்காட்ட முடியும்.

 

கொடியில் மலரும் பட்டுப்பூச்சி

கைப்பிடி நழுவி

காற்றில் பறக்கும் மலராச்சு (பறக்கும் சுவர்)

 

வானத்தைச் சுட்டேன்

காகம் விழுந்தது

காகத்தைச் சுட்டேன்

காகம் தான் விழுந்தது,

 

விரல் மீட்டிய மழை, மரக்குதிரை ஆகியவை வைதீஸ்வரனின் நீள்கவிதைகளில் இரண்டு வகைமைகளை எடுத்துக்காட்டுவதாக உள்ளன. மரக்குதிரை முழுக்க முழுக்க குறியீடுகளால் கட்டமைந்தகவிதை. விரல் மீட்டிய மழை மழையை மழையாகவே கண்டு நுகர்ந்து காட்சிப்படுத்தும் கவிதை.

 

இந்த மழையை விரல் தொட்டு எழுத ஆசை,

இயற்கையின் ஈரம் சொட்ட

எனினும்,

தொட்ட விரல் மேகத்தில்

ஒட்டிக்கொண்டுவிடுகிறது;

ஓரங்கமாக

மேகம் இட்ட கையெழுத்தோவென

கவிதை காட்சி கொள்ள.

 

என்பதாய் முடியும் விரல் மீட்டிய மழை யில் வெளிப்படும் இயற்கையின்பால் ஆன அளவற்ற பிரியம் கவிஞரை சூழல் மாசுபாடு குறித்த கவலையையும், கோபத்தையும் வெளிப்படுத்தும் கவிதைகளையும் எழுதத்தூண்டியிருக்கிறது. உதாரணத்திற்கு, மனித-வெடிகள் என்ற கவிதை மரம் வெட்டப்படுதலையும், காடு அழிக்கப்படுதலையும் வலியோடு பேசுகிறது:

 

கொன்று குவித்த

ஆதிகால உடலங்களாய்

அடுக்கிக் கிடத்திய காட்டு மரங்கள்

 

லாரியின் மேல்

ஊருக்குள் நகரும்

முழு நீளப் பிணங்கள்

 

படுகொலைக்குக் ஆரணமாய்

தொங்கிய இரண்டடிக்

கைகளை என் மேலும்

ஊரெங்கும் பார்த்தேன்.

 

முழு உடம்பையும் யோசிக்க

மனதில்

பயம் வெடிக்கிறது

அணுகுண்டாக.

 

காக்கை ,குருவி எங்கள் சாதி என்று பாரதியார் பாடியதற்கேற்ப கவிஞரின் படைப்பு வெளியில் காக்கை, குருவி, நாய், பூனை முதலிய உயிரினங்கள் இங்குமங்கும் உலவிக் கொண்டேயிருக்கின்றன. -சோக சிங்கங்கள், கோழித் தலைகள், கால்நடையின் கேள்வி, அணில், கிளி நோக்கம், ஆடுகள், வௌவால்கள், எனக்கும் யானை பிடிக்கும், கொக்கு வாழ்வு, என பல கவிதைகள் நான்குகால் உயிரினங்கள் மற்றும் புள்ளினங்களை நலம் விசாரிப்பவை. அவற்றை முன்னிலைப்படுத்தி வாழ்க்கையை இழை பிரித்துக் காட்டுபவை.

 

இலையிடையில்

எலி நினைவால்

பூனை நீண்டு

புலியாகும்.’

 

செவிகள் கொம்பாகி

வாலில் மின் பாயும்

நகங்கள்

கொடும்பசி போல்

மண்ணைத் தோலுரிக்கும்.

 

காற்றின் கண்ணிமைப்பில்

இலைகள் நிலைமாறி

எலிகள் நிலைமாறி

எலிகள் நிழலாகப்

புலி மீண்டும்

பூனைக்குள் பாய்ந்து

முதுகைத் தளர்த்தும்.

 

கிட்டாத கசப்பை

மியாவால்

ஒட்டி, ஓட்டில்

வளைய வரும்

வீட்டுப்பூனை.

 

நிழல் வேட்டை எனத் தலைப்பிட்ட மேற்கண்ட கவிதை பூடகத்தன்மை வாய்ந்த நவீனக் கவிதைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. இதன் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்த அடுக்குகளும், உள்ளார்ந்திருக்கும் நான் நீக்களும் வாசிப்பனுபவத்தைத் தம்முள் தேக்கிவைத்திருப் பவை.

 

இவருடைய நனவோடையில் காற்றாடிகள் பறந்தவண்ணமேயிருக்கின்றன.

 

வானத்தில்

என்றோ கட்டறுந்து போன

என் காற்றாடியை மறந்து

எத்தனையோ நாளாச்சு

இன்றுவரை தெரியவில்லை,

அது

என் வீட்டுக் கூரையிலேயே

வாலாட்டிக் கிடக்குதென்று (பிணைப்புகள்)

 

கிணற்றில் விழுந்த நிலவு என்ற தலைப்பிட்ட, பரவலாகப் பேசப்பட்ட கவிதையில் கிணற்றில் விழுந்த நிலவின் நடுக்கும் ஒளியுடலை நாணல் கொண்டு போர்த்திவிடச் சொன்னவர், (தன்னிடமா, உன்னிடமா, என்னிடமா என்று தெரியாத விதத்தில்) கடைசி வரியில் யாருக்கும் தெரியாமல் சேதியிதை மறைத்துவிடு/ கிணற்றில் விழுந்த நிலவைக் கீழிறங்கித் தூக்கிவிடு என்று சொல்லும்போது நிலவு தவறி விழுந்த, தற்கொலைக்கு முயன்ற ஒரு பெண்ணைக் குறிப்பதாகிறது என்று தோன்றுகிறது.

 

பெண் அழகுணர்வுக்குரியவள் என்பதைத் தாண்டி அவளுடைய கால்களில் தன்னை நிறுத்திக்கொண்டு அவளைப் புரிந்துகொள்ள முயலும் எத்தனம் இவருடைய பல கவிதைகளில் காணக்கிடைக்கிறது. ஊமையின் சாபம், மாடல்,  முதலிய கவிதைகளை உதாரணங்காட்டலாம்.

 

ஆடைகள் அவளைத் துறந்து

ஒரு நாற்காலியை மறைத்துக்கொண்டிருக்கின்றன.

 

என்று சூழலை விவரிக்கும் கவிதை _

 

பெண்ணென்ற அற்புதத்தை

கனவு விரல்களால் பூசும் கலைஞனுக்கு

காலமும், சூழலும் அர்த்தமற்றது,

 

என்று ஓர் ஓவியரின் சார்பாய் பேசுவதோடு நின்றுவிடாமல்,

 

கீழ்படிந்த உருவத்தின்

மடிந்த வயிற்றுக்குள் இரையும்

காலிக் குடல் காற்றும்

விழிக் கடையில் சுவடான நீர்க்கோடும்

ஓவியத்துக்குள் வருவதில்லை

_ எப்படியோ

தப்பிவிடுகின்றன.

 

என்று, வறுமை காரணமாக அந்த மாடல் நிர்வாணமாகத் தன்னைப் படம் வரைய ஒப்புக்கொடுத்திருக்கும் நடப்புண்மையைஉம் பதிவுசெய்து முடிகிறது.

 

சுய விசாரணைக் கவிதைகள், சுய எள்ளல் கவிதைகளும் வைதீஸ்வரனின் படைப்புவெளியில் கணிசமாகவே இருக்கின்றன. நடைமுறை ஒழுக்கம், ரிக்ஷாவும் விருந்தும் முதலிய பல கவிதைகளை உதாரனங்காட்டலாம்.

 

ஆண் என்பதாக சமூகம் கட்டமைத்திருக்கும் பிம்பம் அவனை எப்படி மூச்சுத்திணற வைக்கிறது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்யும் கவிதை பரிணாமத்தின் புழுக்கம்.

 

அழுகிறவன் ஆம்பளையில்லை என்ற

அசட்டு வாக்கியத்தில்

வெட்கப்பட்டு, வயதாகி

ஊமையானவன் வாலிபத்தில்

பிறந்தபோது கேட்டு

உறவுகள் சுற்றி கும்மியடித்த

என் முதல் அழுகை _ அது பூர்வ ஜன்மத்தின் முற்றுப்புள்ளி.

 

இன்று எனக்கு அழ வேண்டும்.

அழுதாக வேண்டும் சாவதற்கு முன்

எதற்காகவாவது அழுதாக வேண்டும்.

 

இறுக்கம் கூடிய கவிதைகளின் அளவு இறுக்கம் தளர்ந்த, உரைநடைத்தன்மை அதிகமான கவிதகளும் வைதீஸ்வரனின் படைப்பாக்க வெளியில் காணப்படுகின்றன. அப்படியான கவிதைக்குரிய தேவையை ஒரு சமூகமனிதனாக அவருடைய கவிமனம் உணர்ந்திருக்கக் கூடும். நவீன தமிழ்க்கவிதையில் தனிமனிதப் புலம்பல்களே அதிகமாக உள்ளது என்று பொத்தாம்பொதுவாய் கூறிவருபவர்கள் இவருடைய கவிதைகளிலுள்ள சமூகப் பிரக்ஞை பற்றி என்றேனும் அக்கறையோடு பேசப்புகுந்திருக்கிறார்களா என்ற கேள்விக்கு இல்லையென்பதே எனக்குத் தெரிந்த பதிலாக இருக்கிறது. ஒரு கட்டுரையில் திரு.வைதீஸ்வரனின் கவிதைவெளி குறித்து அடக்கிவிட முடியாது. இயற்கை, வாழ்வின் அநித்தியம், வறுமை, சுய விசாரணை, நகர வாழ்வு, பெண் பற்றிய ஆர்வை, காலம், புலன் உணரும் அமானுஷய்ப் பொழுதுகள், பாலியல் கவிதைகள், பறவைகள் விலங்குகளோடான கூட்டுறவு எனப் பல விஷயங்கள் வைதீஸ்வரன் கவிதைகளில் பதிவாகியிருப்பது குறித்த அகல்விரிவான ஆய்வுக்கட்டுரைகள் மிகவும் அவசியம்.

 

வைதீஸ்வரன் கவிதைகள்



கண்ணாடியை துடைக்கத் துடைக்க
என் முகத்தின் அழுக்கு
மேலும் தெளிவாகத் தெரிகிறது

தன் கூட்டுக்கும்
வானுக்கும்
பாலம் தெரிகிறது
பறவைகளுக்கு மட்டும்

எழுத நினைக்காத தருணம்
எழுத நேருகிறது
மிகத்தெரிந்தது போல்
தெரியாததை எழுதிக்
கொண்டிருக்கிறேன்
எழுதி முடித்தவுடன் தான்
எனக்கு வெளிச்சமாகிறது
இதைத்தான் நான்
தெரிந்து கொள்ள வேண்டிக்
காத்திருந்தேனென்று



புதிர்

இருட்டை வரைந்திருக்கிறேன்
பார் என்கிறான்
தெரியவில்லையே என்கிறேன்
அது தான் இருட்டு என்கிறான்
இன்னும் தெரியவில்லை என்கிறேன்
மேலும் உற்றுப் பார்த்து
அதுவே அதனால் இருட்டு என்கிறான்
இவன் இருட்டு
எனக்கு எப்போது
வெளிச்சமாகும்

மேலே

வெள்ளைச் சுவரில்
மெல்லிய நிழல்கள்
சிலந்தியின் கலைக்கு
செலவற்ற விளம்பரங்கள்


உபதேசம் நமக்கு

அடுத்த வீட்டுக் காரனிடம்
அன்பாய் இருந்து தொலைத்து விடு
வம்பில்லை

பல்தேய்த்துக் கொண்டிருக்கும் போது
பக்கத்து வீட்டுக் காரனிடம்
வெள்ளையாய் சிரித்துவிடு
தொல்லையில்லை

என்றாவது
உன்வீட்டில்
மழை பெய்யும் போது
அவன் வீட்டில்
குடை இருக்கும்
என்றாவது உன் செடியை
ஆடு கடிக்கும் போது
அவன் கையில் ஆளுயரக்
கம்பு இருக்கும்
உன் வீட்டுக் குழந்தைகள்
ஓடியாட
அவன் வீட்டுத் தாழ்வாரம்
நீளமாயிருக்கும்

எதற்கும்
ஒரு விதமான தவமாக
தினந்தினம்
வேலியோரம் சற்றே
கால் சொறிந்து நில்லு

உளுந்தூரில் அவன் பாட்டி செத்ததால்
உனக்குப் போன தூக்கம்
ஊருக்குள் திருட்டு கற்பழிப்பு
உணவுத்தட்டு கருப்பு மார்க்கெட்டு
யாருக்கோ தவறிவிட்ட
லாட்டரிச் சீட்டு
எவனுக்கோ பிறந்து விட்ட
இரண்டு தலைப் பிள்ளை
இன்னும்
கிரஸின் விலை ஊசி விலை
கழுதை விலை காக்காய் விலை
எல்லா நிலையும் பந்தமுடன்
பல் திறந்து பேசிவிட்டு
வாய்க் கொப்பளித்து வந்துவிடு
தொந்தரவில்லை

என்றாவது நின்று போகும்
உன் சுவர் கடிகாரம் கூட
அவன் வீட்டில் அடிக்கும் மணியை
ஒட்டுக் கேட்கட்டும்

ஏசுவும் புத்தனும்
எதற்கு சொன்னான் பின்னே
அடுத்தவனை நேசி என்று
அவனால் உபகாரம்
ஆயிரங்கள் உனக்கு இருக்கும்

அதை மட்டும் யோசி
நீ ஒரு நகரவாசி.

 

திகைப்பு

இருட்டுக்கு பயந்து
இமைக்கதவை மூடிக்கொண்டேன்
உள்ளே புது இருட்டு
உர் என்றது

—————————————————
உரிமை

அவன் வீட்டு சாக்கடையில்
அடுத்த வீட்டு நாய்படுத்துப்
புரளுவது ஒரு வழக்கமாச்சு.
உரிமையால்
ஆனமட்டும் விரட்டிப் பார்த்தும்
அது நகரவில்லை, ஒரு நாள்
ஆளுயுரத் தடியெடுத்து
ஆத்திரத்தால் அடித்துவிட
அது வள்ளென வால் மடக்கிக்
குதித்தோட,
அவன் வாய்க்குள்ளே
சள்ளென சகதி விழுந்தது தெறித்து.
அவன் வீட்டு சகதி.

—————————————————
குறி

வானத்தை சுட்டேன்
காகம் விழுந்தது
காகத்தை சுட்டேன்
காகம்தான் விழுந்தது.

—————————————————
க்ராஸிங்

மாலை யிருட்டில்
விருட்டென வெளியைக் கலக்கி
தொலைந்து போன
மின்சார ரயிலை
குறுக்கு மறுக்காய்
கேட்டுக்குள் பாய்ந்து
கூட்டமாய் தேடுகிறார்கள்
நகரத்து மக்கள்.

 

1. குழுக்கள்

 

இரண்டையுமே

ஒன்றுபோல நேசித்து வந்தேன்

ஏதோ.....

ஒரு மனிதனுக்கு அது தான்

உயர்ந்த பக்குவம் போல


இரண்டுமே என்னை

ஏகமாகப் பாராட்டின

ஏதோ....

தங்களை மட்டும் நேசிப்பதாக

தவறாக எண்ணிக்கொண்டு

உண்மை ஒருநாள்

பொதுவாக விடிந்தவுடன்

இரண்டுமே என்னை

தூக்கி எறிந்தன தெருவில்

ஒற்றுமையாக!

ஏதோ.........

தங்கள் நேசத்துக்கு நான்

தகுதியற்றவன் என்பது போல

தெருமண் ஒட்டிய உடம்போடு

ஊன்றி எழுந்தபோது தான்

நியாயம் எனக்கும் உறைத்தது

ஊரோடு இனி ஒட்டி வாழவேண்டுமென்று

ஒரு ஆரம்பமாக

அருகில் நின்ற நண்பனை

அந்தரங்கமாக வெறுக்கத் தொடங்கினேன்

முகத்தின் புன்சிரிப்பு மாறாமல்.

 

0

2. தமிழ் பாடம்

 

வீரமாக தமிழ் நடத்த வேணுமென்று

வாத்தியார் விரும்பினார்

அந்த நாளில் அது பரவலமான மோகம்

நான் ஆறாம் வகுப்பென்று ஞாபகம்

வீரம் விளங்காத வயது

பயம் அறியாத கன்று

அரையடி உயர மேடையில் வாத்தியார்

சிகை பறக்கும் வேகமும்

நாற்றிசையும் தெறிக்கும் ஈர வசனமும்

கரகரத்த குரலும் விரிந்த நாசியும்.....

எனக்கு 'பக்கென்றுசிரிப்பு

பொத்துக்கொண்டது

அவர் அதட்டினாலும்அடங்கவில்லை

மறுகணம்

மேடைவீரம் தமிழ்ப்புயலாய்

கோலோடு குதித்தது என்மேல்

நய்யப் புடைத்தார் நாச்சிமுத்து வாத்தியார்

அடியோ பலம்

ஆனால் ஏனோ 'அய்யோ அய்யோ'வென்று கத்தவில்லை

பேச்சைப்போல் கோபம்

பாசாங்காக இல்லை போலும்!

ஒழுங்கைத்தான்

உதைத்து சொல்லியது


ஆடுகள் 

எஸ்.வைதீஸ்வரன்

சாலையோர மூலையில்
கொலை செய்த கையோடு
பீடியும்டீயுமாக
பிடிப்பா ரற்று நின்றவனை

நான் பார்த்ததுண்டு.
புறமுதுகில் கண்ணற்று பிறந்ததனால்
போலீஸ்காரர் பொறுப்பற்று
போக்குவரத்து நடுவில் நின்றிருந்தான்,
என நினைத்தேன்.

கும்பல் தெரியும் பட்டப் பகலில்
கொஞ்சமும் பதட்டமின்றி
சங்கிலி யறுத்துபெண்ணிடம்
மேலும் வம்புகள் செய்து போன
கயவரை நான் கண்ணாரப் பார்த்தேன்.

அவனையும் சட்டம்
அசட்டை செய்தது.

ஏனோ வீட்டுநினைப்பின் அவசரத்தில்
தவறிவிட்டானோ?
ஏதுமறியா மீசை முகத்துடன்
எட்டி நடந்து போகிறானேகான்ஸ்டேபிள்?’
எனப் பதறினேன்.

நாட்டுக்குள் நல்லவர்க்கு
நாதியில்லைநீதியில்லை
கொலைகாரர்கள் திருடர்கள்
குளிர்விட்டுப் போனார்கள்.
நிலைகுலைந்து நாசமாச்சு
நகரத்து மக்கள் வாழ்வு!

எனத் தான் மனங்கொதித்து
நாற் சந்தி சிவப்பு விளக்கில்
கோபமுடன்
காத்திருந்தேன்வாகனத்தில்.

கூச்சலிட்டு விசிலடித்தான் ஒரு
கூர்மையான போலீஸ்காரன்.

கோட்டைத் தாண்டி நிக்கிறியே,
குத்தமின்னு தெரியலையாமிஸ்டர்?
சோடா கடை யண்ட போயி நில்லு-
கோர்ட்டுக்குப் போனா
கூட கொஞ்சம் செலவாகும்…’ என்றான்.

ஆடுகள் தான்
எப்போதும்
அறுபடப் பிறந்தவைகள்.

கிணற்றில் விழுந்த நிலவைக் கீழிறங்கித்தூக்க முயன்றவரின் படைப்பாக்கத்தின் ஆச்சரியங்கள்

ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக எழுதிக்கொண்டிருக்கும் கவிஞர் வைதீஸ்வரனின் ஆளுமைப்பண்புகள்

                                                             முருகபூபதி

" கிணற்றில் விழுந்த நிலவைக் கீழிறங்கித் தூக்கிவிடு.
நனைந்த அவள் உடலை நழுவாமல் தூக்கிவிடு.
மணக்கும் அவள் உடலை மணல் மீது தோயவிடு.
நடுக்கும் ஒளியுடலை நாணல்கொண்டு போர்த்திவிடு."

-- இந்த வரிகளுடன் தொடங்கும் கிணற்றில் விழுந்த நிலவு கவிதையுடன் 1960 ம் ஆண்டிலும்  அதற்கு முன்னரே முத்தாரம் என்னும் சிறுகதையுடன் 1957 இலேயே  இலக்கிய உலகிற்கு அறிமுகமானவருமான  தமிழக கவிஞர் எஸ். வைதீஸ்வரனுக்கு தற்பொழுது 82 வயது.

உடலுக்குத்தான் இந்த வயது. ஆனால், இன்றும் அவரது கவிதைகளும் கதைகளும்  புதிதாக பிறந்திருப்பதுபோன்ற தோற்றம்கொள்வன. திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் தேவமகள் விருது, சிற்பி அறக்கட்டளை விருது, அமெரிக்கத்தமிழர்கள் வழங்கும் புகழ்பெற்ற ' புதுமைப்பித்தன் விளக்கு' விருது முதலானவற்றைப்பெற்றவர்.

தமிழ்த்திரையுலகிலும் நாடகத்துறையிலும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகர்,  மூத்த கலைஞர் சகஸ்ரநாமம் அவர்களின் மருமகன். தி. ஜானகிராமன், சி.சு. செல்லப்பா,  . நா. சு. , பி.எஸ்.ராமையா, கு. அழகிரிசாமி ஆகியோருடன்  நேரடித்தொடர்பும் இலக்கியப்பரிச்சியமும் கொண்டிருந்தவர்.

சகஸ்ரநாமம் நடத்திய சேவாஸ்டேஜ் நாடகக்குழுவில் இணைந்திருந்தவர், பி. எஸ். ராமையாவின் தேரோட்டி மகன், தி. ஜானகிராமனின் வடிவேலு வாத்தியார் , கோமல் சுவாமிநாதனின் புதிய பாதை முதலானவற்றிலும் நடித்திருப்பவர்.

ஜானகிராமன் எழுதிய நாலுவேலி நிலம் கதை திரைப்படமானபோது அதில் மட்டுமன்றி வேறும் சில திரைப்படங்களிலும் தோன்றியிருப்பவர்.

தமது 22 வயதிலேயே எழுத்துலகில் பிரவேசித்த வைதீஸ்வரன் பிறந்தது கோயம்புத்தூரில். சேலத்தில் படித்துவிட்டு, 1948 முதல் சென்னை வாசியானவர்.

சி.சு. செல்லப்பா நடத்திய எழுத்து இதழில் இவரது முதல்கவிதை வெளியானது. அதனையடுத்து தமிழகத்தில் பெரும்பாலான சிற்றிதழ்களிலெல்லாம் எழுதியிருப்பவர்.vatheeswarn1

உதயநிழல், நகரச்சுவர்கள், விரல் மீட்டிய மழை, வைதீஸ்வரன் கவிதைகள், கால - மனிதன் அதற்கு மட்டும் ஒரு ஆகாயம், மனக்குருவி  முதலான கவிதைத்தொகுப்புகள், கால் முளைத்த மனம், திசைகாட்டி, வைதீஸ்வரன் கதைகள், ஆகிய கதைத்தொகுப்புகளையும், தேவனின் எழுத்துலகம் என்ற ஆய்வு நூலையும் வரவாக்கியிருப்பவர்.

சென்னை ஏயர் இந்தியா   நிறுவனத்தில் பல வருடங்கள் நிருவாகியாக பணியாற்றிவிட்டு ஓய்வுபெற்றிருப்பவர். கவிஞர், சிறுகதைப்படைப்பாளி, ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர், அத்துடன் ஓவியர். இவரது நூல்களின் முகப்போவியங்களும் இவருடையதுதான். இவ்வாறு பன்முக ஆற்றலும் மிக்க வைதீஸ்வரன் எமது அவுஸ்திரேலியத்தமிழ்  இலக்கியகலைச்சங்கத்தினதும் நெருக்கமான நண்பர்தான்.

2010 இல் நாம் மெல்பனில் நடத்திய பத்தாவது எழுத்தாளர் விழாவின் கருத்தரங்கில் " இலக்கியப்படைப்பு படைப்பாளியின் பிம்பத்தை உணர்த்துமா?" என்ற தலைப்பில் கருத்துச்செறிவுள்ள உரையை நிகழ்த்தினார். அந்தவுரை பின்னர் வீரகேசரியிலும் வெளியானது. கொழும்பில் 2011 இல்  நடந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டு மலரிலும் இடம்பெற்றது.

இப்பொழுது அதனைப்படித்தாலும் புதிதாக படிக்கும் உணர்வையே தரக்கூடியது. வைதீஸ்வரனின் கதைகள், கவிதைகள் அனைத்திற்கும் இந்தத்தன்மை இருப்பது வியப்பானது.  வைதீஸ்வரனின் குறிப்பிட்ட அந்தக்கட்டுரை இவ்வாறு தொடங்குகிறது:

" எழுத்தாளன் என்பவன் மனிதகுலத்தின் மனசாட்சி என்ற பொன்மொழி மாறி,  அவன் தன் சமுதாயத்தின் பிணசாட்சியாக எல்லாவற்றையும் தயக்கமான குரலில் முணுமுணுத்துக்கொண்டிருப்பவனாக  இன்று செயல்படவேண்டியிருக்கிறது.

பொதுவாக நமக்கு எழுத்தாளர்களைப்பற்றிய அறிமுகம் என்பது அவர்களுடைய புத்தகங்கள்தான். நாம் வாசிக்கும் புத்தகங்கள் மூலம் விவரிக்கப்படும் கதா பாத்திரங்களின் சாயல்களில் ஏதாவது ஒன்றை அந்த எழுத்தாளருடைய ஆளுமையுடன் சம்பந்தப்படுத்திக்கொள்கிறோம். ஆனால், நடைமுறையில் அது வேறாக இருக்கிறது.

இந்த சமயம் எனக்கு ஒரு பழைய சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது. 1971 என்று நினைக்கிறேன். திருச்சியில் ஒரு கவிதைக்கூட்டத்துக்காக நான் அழைக்கப்பட்டிருந்தேன். ரயிலில் இருந்து இறங்கியவுடன் வரவேற்க வந்திருந்தவர்களில் ஒருவர் " ஏன் வைதீஸ்வரன் வரவில்லையா? " என்று என்னைப்பார்த்துக்கேட்டார். " நான்தான் அது" என்றேன். எனக்கு அப்போது 35 வயது இருக்கும். " என்ன ஸார்... நீங்களா...வைதீஸ்வரன்?" உங்கள் கவிதைகளைப்படித்தபோது வயதான முதியவராக  நீண்ட  தாடியும் காவி ஜிப்பாவும் போட்டுக்கொண்டு கைத்தடியுடன் நிற்பீர்கள் என்று எதிர்பார்த்தேன்.  நீங்கள், உங்கள் கவிதையின் முதிர்ச்சிக்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லாத ஆளாக இருக்கிறீர்களே?" என்று சொல்லிச்சிரித்தார்.

ஒரு படைப்பு நம் மனதிற்குள் அதன் ஆசிரியரின் பிம்பத்தை உருவாக்கிவிடுகிறது. ஒரு படைப்பை வாசிக்கும்போது அதை எழுதிய ஆசிரியர் இப்படித்தான் இருக்கவேண்டுமென்று  தீர்மானத்திற்கு வந்துவிடுகின்றோம்."

வைதீஸ்வரனின் இந்தக்கூற்றிலிருக்கும் உண்மை,  அனுபவித்துப்பார்த்தவர்களுக்கு புரியும். அகிலனின் பாவைவிளக்கு திரைப்படமாகிய வேளையில் படப்பிடிப்பு தளத்திற்கு வந்திருந்த அகிலனைப்பார்த்துவிட்டு சிவாஜி கணேசனும் அவ்வாறு ஏமாற்றமடைந்தவர்தான்.

வைதீஸ்வரன் முதல் முதலில் எனக்கு தொலைபேசி ஊடாகவே 1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அறிமுகமானார். அவர் சிட்னியில் தமது பிள்ளைகளிடம் வந்திருந்தசமயம் தொடர்புகொண்டார்.  நண்பர் இந்திரா பார்த்தசாரதியிடத்திலேயே எனது தொலைபேசி இலக்கம் பெற்றிருக்கிறார். ஒருநாள்  தொடர்புகொண்டு " வைதீஸ்வரன் பேசுகின்றேன்" என்றார். அன்றிலிருந்து  இற்றைவரையில்  கடிதங்கள், தொலைபேசி, மின்னஞ்சல் வாயிலாக  என்னோடு பேசிக்கொண்டிருப்பவர்.

இவருடனும் நேர்காணல் நடத்தி, பிரான்ஸிலிருந்து வெளியான நண்பர் குகநாதன் நடத்திய ஈழநாடு இதழில் எழுதியிருக்கின்றேன். 1998 இல் வெளியான எனது சந்திப்பு நேர்காணல் தொகுப்பிலும் இவர் இடம்பெற்றுள்ளார்.

முதலாவது தொலைபேசித்தொடர்பாடலின்போது, " விந்து நிலையிலிருந்து, விந்தையான உயரங்களுக்கு, செயல் திறன்களுக்கு மனிதன் வளருவது விஞ்ஞான - தத்துவ இயல்களில் இன்னும் ஆச்சரிNagarsuvargalயமான  விஷயம். அவன் வளரும் திசைகளை இரண்டு விஷயங்கள்  நிர்ணயிக்கின்றன. ஒன்று, அவன் பிறவித்துளிக்குள் கொண்டு வந்த செய்திகள், இரண்டு அதை பரிமளிக்கச்செய்யும் புறவாழ்க்கை சூழல்கள். அதன் தாக்கங்கள். இந்த இரண்டு விஷயங்களும்தான் தனது இலக்கிய நாட்டத்திற்கான காரணங்களாக இருந்திருக்கவேண்டும்"  என்றார்.

இவர் தமது பள்ளிப்பருவத்தில் பிரதானமான பாடமாக எடுத்துக்கொண்டது வடமொழி சமஸ்கிருதம். ஆனால், பள்ளிக்கு வெளியே ஆர்வமாக மூழ்கியிருந்தது தமிழ்க்கவிதைகளில். இலக்கண பண்டிதத்தமிழிலிருந்து இளமைக்காலத்திலேயே தப்பியிருக்கும் வைதீஸ்வரன், கம்பரையும் இளங்கோவையும் தாயுமானவரையும் திருமூலரையும் சங்க இலக்கியங்களையும் கற்றவர். மகாகவி பாரதி புதுச்சேரியில் பாரதிதாசன், குவளைக்கண்ணன் முதலான நண்பர்களுடன் இணைந்து மாந்தோப்புகளில் இலக்கியம் பேசியதுபோன்று, இவரும் தனது நண்பர்களுடன் மாமர நிழலில் அமர்ந்து இலக்கியம் படித்தவர்.

இளம்வயதிலேயே கையெழுத்து இதழ் வெளியிட்ட அனுபவம் பெற்றவர். ஐரோப்பாவில் 1920 - 25 காலப்பகுதியில் ஆங்கிலத்தில் தோற்றம்பெற்ற புதுக்கவிதை இயக்கம் தமிழகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. பாரதியும் இதன் பாதிப்பிற்கு ஆட்பட்டிருந்தவர்.

சி.சு. செல்லப்பா தமிழகத்தில் புதுக்கவிதைக்காகவே எழுத்து என்னும் சிற்றிதழை தொடக்கியபோது அதில் எழுதத்தொடங்கிய கவிஞர் வைதீஸ்வரன்,  அந்த இலக்கிய வடிவத்தில் தான் ஈடுபட்டதற்கான காரணத்தை இவ்வாறு விளக்குகிறார்:

" இந்தியா சுதந்திரம் பெற்று தாய்க்கொடி பறக்க ஆரம்பித்தவுடன், தமிழ் இலக்கியம் நீண்ட பெருமூச்சு விட்டுக்கொண்டது. சுதந்திரத்துக்கு முன்னம் பக்திப்பரவசமாய் வீர உணர்ச்சிகளைக்குழைத்து, குழைத்து வெள்ளையனை ஏசி, இந்தியனை ஏற்றிப்பாடிய பாட்டுக்களெல்லாம் சுதந்திரத்துக்குப்பின்னர் சற்றே அர்த்தம்  குறைந்து அழுத்தம் குறைந்த ஒலிபெருக்கிக் காற்றாயிற்று.

இந்தியன் குருட்டு உணர்ச்சிவசங்களைக் கைவிட்டு, தன் சொந்த வாழ்க்கையை, தனக்கே சொந்தமாகிவிட்ட  இவ்வளவு  பெரிய நாட்டை, அறிவால், விஞ்ஞானத்தால் புதிய சமூகப்பார்வைகளால் ஆண்டு வளர்க்கவேண்டிய கஷ்டம் வந்தது. அப்போது இலக்கியமும் தன் குரலை - புதுக்குரலாக, புதிய சூழ்நிலைக்கு இசைந்த குரலாக மாற்றிக்கொள்ளவேண்டிய பரிணாம அவசியம் ஏற்பட்டது.

அப்போது பத்திரிகைகளில் உய்யும் வகையறியாமல் திரும்பத்திரும்ப பழைய மரபு உவமைகளை, அலங்கார வெறுமைகளைத் தாங்கி செய்யுள்கள் ஊமையைப்போல் கவிதைகள் என பிரசுரம் கண்டதை நான் பார்த்ததுண்டு.

இப்படிப்பட்ட " காலண்டர்" கவிதைகளுக்கு மாறாக, காலத்தால் "பொய்த்துப்போன" சில மரபுத்தாளங்களை நீக்கி, சிந்தனையின் வேகத்தையே கவிதையின் தாளமாக ஏற்றி ஏன் கவிதை படைக்கக்கூடாது? என்று சிந்திக்க சில படைப்பாளிகள் துணிந்தனர். அந்தவகையில் . பிச்சமூர்த்தி முன்னோடி" 
வைதீஸ்வரனின நகரச்சுவர்கள் கவிதைத்தொகுப்பில் 154 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. "இவருடைய கவிதை மொழி பெரும்பாலும் பேச்சு சந்தத்தையும் மெல்லிய ஓசை நயத்தையும் கொண்டது. இவர் கூர்மையான பார்வையும் ஒலியின் இழைவும் தெரிந்த ஒரு காட்சிக் கவிஞராக வெளிப்படுகிறார். இவரின் கவிதை மாந்தர்கள் நேரடியான இயல்பான வாழ்வுச்செயல்பாடுகளைக்கொண்டு பறவை போன்று மென்மையும் விலங்குகள் போன்று கடுமையும் உடையவர்கள்"  என்று இந்த நூலைப்பற்றிய அறிமுகத்தில் ஆர். ராஜகோபாலன் சொல்கிறார்.

வைதீஸ்வரனின் கால் முளைத்த மனம் கதைத்தொகுப்பு 1993 இல் வெளியாகிறது. இதுவே இவரது முதல் கதைத்தொகுப்பென நினைக்கின்றேன்.   அவரது பேச்சிலும் எழுத்திலும் எனக்கு மிகவும் பிடித்தமானது அவரது  ஆச்சரிய குணங்கள்தான். எனக்கு அவர் எழுதும் மின்னஞ்சல் வரிகளிலும் அதனை அவதானித்திருக்கின்றேன்.

கால்முளைத்த மனம் தொகுதிக்கு முன்னுரை எழுதியிருக்கும் ஐராவதம், " எஸ். வைதீஸ்வரன் என்ற அற்புதமான கலைஞரோ கண்களில் வியப்பு  மறையாமல் உலகை பார்க்கிறார். இத்தகைய பார்வை படைத்திருப்பதே நல்ல கலைஞனின் அடையாளம். நிஜமாகவே குழந்தையின் கண்களில் ஒளிரும் ஆச்சரியத்தோடு உலகைப்பார்க்கிறார். அப்பொழுது எழுத்து புத்துணர்ச்சி தோன்றும் வகையில் அமைகிறது" என எழுதுகிறார்.

இந்தத்தொகுப்பின் முதல் கதை சைக்கிள் சாமி  என்னையும் ஆச்சரியப்படவைத்தது.  எதிர்வரும் நாட்களில் வாசிப்பு அனுபவப்பகிர்வுக்கு  இந்தத்தொகுதியை சிபாரிசு செய்யவிரும்புகின்றேன். சிறுகதைக்குரிய அத்தனை இலட்சணங்களுடனும் கட்டுக்கோப்புடனும் அழகியல் இழையோடும் வகையில் எழுதும் ஆற்றலும் மிக்கவர் வைதீஸ்வரன்.

கடந்த மே - ஜூன் மாதங்களில் இலங்கையில் நின்றேன். எங்கள் ஊருக்கு சமீபமாக இருக்கிறது மினுவாங்கொடை என்ற பிரதேசம். அங்கு கல்லொலுவை என்ற முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் ஒரு கிராமத்திலிருக்கும் எனது நீண்டகால இலக்கிய நண்பர் மு. பஷீரைப் பார்க்கச்சென்றிருந்தேன்.

                                      அவரும் முதுமை தந்த தளர்ச்சியினால் ஊன்றுகோலுடன் நடமாடுகிறார். என்னோடு வெளியே சிறிய உலாத்தலுக்கு வரும்போதும் அந்த  ஊன்றுகோலுடன் புறப்பட்டார். இடையில் நின்று " பூபதி, வைதீஸ்வரனின் ஒரு கவிதையை சொல்கிறேன்"  என்றார்.
அவர் சொன்ன கவிதை:
"
நிலத்தில் ஒரு தடி விதியென  நகருகிறது, 
முதுமையை  வீடுவரை  இழுத்துக்கொண்டு"
இவ்வாறு படிமங்கள் நிறைந்த ஏராளமான கவிதைகளை அவர் வரவாக்கியிருக்கிறார்.   அவரைப்படித்தவர்கள்   எங்கிருந்தாலும் அவரது வரிகளையும்  தத்தமது நினைவுகளுக்குள் கொண்டுவருவார்கள்.  இதுதான் அவரது எழுத்தின் வியப்பு.

சமீபத்தில் எழுதி முடித்த பயணியின் பார்வையில் தொடரின் ஓர் அங்கத்தில் இந்தத்தகவலை பதிவுசெய்திருந்தேன். அதனைப்படித்திருக்கும் வைதீஸ்வரன்,  எனக்கு எழுதிய மடலில், " கடந்த கால தகவல்களையும் நேசங்களையும் வெளிப்படுத்துகிறது. இவ்வளவு பொருத்தமாக இங்கே என்னுடைய கவிதை செருகப்பட்டிருப்பது எனக்கு வியப்பைத்தருகிறது. கவிதைகள் இப்படிப்பட்ட மனித சம்பவங்களுக்காகத்தான் இன்னும் உயிரோடு இருக்கின்றன." என்று எழுதியிருந்தார்.

இந்த வருடம் மீண்டும் சிட்னிக்கு வந்தவுடன் தொடர்புகொண்டார். சிட்னியில்  எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் எதிர்வரும்  02-12-2017 ஆம் திகதி ஒழுங்கு செய்திருக்கும்  கலை - இலக்கியம் 2017 நிகழ்ச்சியில் உரையாற்றுமாறு அவரை அழைத்தபோதும், " இலக்கிய ரஸனை என்பது மிகவும் சார்புள்ள விஷயம். ஒரு படைப்பு எத்தனை மக்களின் பொதுவான உளப்பாங்கை  தொடக்கூடும்  என்பது  ஒரு  புதிர்தான்" என்று சொன்னார். சிட்னி நிகழ்ச்சியில் அவர்,  " குளத்துள் எறிந்த கற்கள் - என் கவிதைகள் " என்னும் தலைப்பில் உரையாற்றவிருக்கிறார்.

எமது சங்கத்தில் அருண். விஜயராணி தலைவராக  இருந்த 2010 ஆம் ஆண்டு  காலப்பகுதியில்  நடந்த எழுத்தாளர் விழாவில் உரையாற்றிய வைதீஸ்வரன்,  அன்று மாணவர் அரங்கில் பங்கேற்ற குழந்தைகளுக்கும் சங்கத்தின் சார்பில்  பரிசளித்து பாராட்டினார்.

அண்மையில் அவர் எழுதிய அனைத்துக்கவிதைகளும் செம்பதிப்பாக மனக்குருவி என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது.

எமது சங்கத்தின் கடந்த கால எழுத்தாளர் விழாக்கள், கலை - இலக்கிய சந்திப்புகள், வாசிப்பு அனுபவப்பகிர்வுகளிலெல்லாம் கவிதை, சிறுகதை, நாவல், பத்தி எழுத்து, நாடகம், ஆடற்கலை, இசை, சங்க இலக்கியம்,  சிறுவர் இலக்கியம், பயண இலக்கியம் உட்பட பல துறைகளிலும்  வெளியான நூல்கள் அறிமுகமாகியிருக்கின்றன.

அந்த வரிசையில் மற்றும் ஒரு அரங்காக சிட்னி நிகழ்ச்சி   அமையவிருக்கிறது.  எங்கள் மத்தியில் நாம் மதிக்கும் மூத்த கவிஞர் வைதீஸ்வரனை சிட்னி நிகழ்ச்சியில் சந்திக்கலாம். அவருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 









 

 


No comments:

Post a Comment

Raagam Thaalam Pallavi - ராகம் தாளம் பல்லவி - Theerppugal Thiruththapadalaam

 Raagam Thaalam Pallavi  ராகம் தாளம் பல்லவி  Theerppugal Thiruththapadalaam Movie - Theerppugal Thiruththapadalaam Music - Shankar Ganesh S...