ராஜமார்த்தாண்டன் (இறப்பு: யூன் 6, 2009) தமிழகத்தைச் சேர்ந்த விமர்சகர்,
இதழாளர், கவிஞர்.
அவரது சொந்த
ஊர் கன்னியாகுமரி அருகே உள்ள
சந்தையடி. அவரது கொங்குதேர் வாழ்க்கை என்னும்
பெயரிலான தொகுப்பு
நூல்கள் குறிப்பிடத்தக்கவை.
ராஜமார்த்தாண்டன் தினமணி உதவியாசிரியராக பணியாற்றியவர்; கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை
நடத்தியவர். தனது
இறுதிக் காலத்தில் காலச்சுவட்டில் பணியாற்றினார். நிறைய கவிதைகள்எழுதியிருந்தாலும்,
ராஜமார்த்தாண்டன் ஒரு
சிறந்த கவிதை
விமர்சகராகவும், திறனாய்வாளராகவும்
முன்வைக்கப்படுகிறார். இவர் எழுதிய "ராஜமார்த்தாண்டன் கவிதைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதை எனும்
வகைப்பாட்டில் பரிசு
பெற்றிருக்கிறது.
பொருளடக்கம்
·
2மறைவு
இவரது நூல்கள்[தொகு]
·
அப்படியே
நிற்கட்டும் அந்த மரம் (கவிதைகள்,
அஜிதா பதிப்பகம்)
·
என்
கவிதை (கவிதைகள்)
·
ராஜமார்த்தாண்டன்
கவிதைகள் (கவிதைகள்,
தமிழினி வெளியீடு)
·
கொங்குதேர்
வாழ்க்கை
·
கொங்குதேர்
வாழ்க்கை தொகுதி
இரண்டு
·
கொங்குதேர்
வாழ்க்கை - 3 (தொகுப்பு, தமிழினி)
·
புதுக்கவிதை
வரலாறு (திறனாய்வு,
தமிழினி)
·
புதுமைப்பித்தனும்
கயிற்றரவும் (திறனாய்வு,
தமிழினி)
மறைவு
61 ஆவது
வயதில் சாலை
விபத்தில் காலமானார்[1].
இவருக்கு மனைவி,
ஒரு மகன்,
ஒரு மகள்
உள்ளனர்.
ராஜமார்த்தாண்டன் – மனதின் கலைஞன்
கவிஞர் ராஜமார்த்தாண்டன் நேற்று அகால மரணமடைந்துவிட்டார். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும். 60ம் கல்யாணம் முடிந்து ஒரு வருடம் கழியாத நிலையில், அவரது மகனின் திருமணம் முடிந்து ஒரு மாதம் முடியாத நிலையில், அவர் குடும்பத்துக்கு பேரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த வருத்தங்கள்.
ராஜமார்த்தாண்டன் கவிஞர்,
திறனாய்வாளர். கொல்லிப்பாவை இதழ் ஆசிரியராக இருந்தவர். தினமணியில் உதவி ஆசிரியராக இருந்தவர்.
நூல்கள்: அப்படியே நிற்கட்டும் அந்த மரம் (கவிதைகள், அஜிதா பதிப்பகம்), என் கவிதை (கவிதைகள்), ராஜமார்த்தாண்டன் கவிதைகள் (கவிதைகள், தமிழினி வெளியீடு), கொங்குதேர் வாழ்க்கை – 3 (தொகுப்பு, தமிழினி), புதுக்கவிதை வரலாறு (திறனாய்வு, தமிழினி), புதுமைப்பித்தனும் கயிற்றரவும் (திறனாய்வு, தமிழினி).
குடும்பம்: மனைவி,
ஒரு மகன்,
ஒரு மகள்.
நிறைய கவிதைகள் எழுதியிருந்தாலும், ராஜமார்த்தாண்டன் ஒரு சிறந்த கவிதை விமர்சகராகவும், திறனாய்வாளராகவுமே முன்வைக்கப்படுகிறார். தொடர்ந்து கவிதைகளின் போக்கையும், கவிஞர்களையும் அவர் உள்வாங்கிக்கொண்டிருந்ததால், இது அவருக்கு சாத்தியமாகியிருக்கிறது. தொடரந்து கவிதைகளை வாசிக்கும் எவரும் ஒருவித தொடர்ச்சியையோ தொடர்ச்சியின்மையையோ காலப்போக்கில் கண்டுகொண்டுவிடமுடியும். மனமாச்சரியங்களுக்கு ஆட்படாமல் தம் கருத்துகளைச் சொல்லும் திறனாய்வாளர்கள் அருகி வரும் நிலையில் ராஜமார்த்தாண்டனின் இடம் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. தமிழினி வாயிலாக கொங்குதேர் வாழ்க்கை என்னும் தமிழின் ஒட்டுமொத்த மரபு/புதுக்கவிதைகளின் தொகுப்பு வந்தபோது, புதுக்கவிதைகளைத் தொகுக்கும் பணியை ராஜமார்த்தாண்டன் செய்தார். கிட்டத்தட்ட 93 கவிஞர்களின் 893 கவிதைகளை அவர் தொகுத்திருந்தார். அத்தொகுப்பில் தி.சோ.
வேணுகோபாலன், நாரணோ ஜெயராமன், என்.டி. ராஜ்குமார், லக்ஷ்மி மணிவண்ணன், பிரம்மராஜன் போன்ற கவிஞர்களை அவர் சேர்க்கவில்லை. இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. தான் அவர்களைத் தேர்ந்தெடுக்காததன் காரணத்தைத் தெளிவாக முன்வைத்தார் ராஜமார்த்தாண்டன்.
“தி.சோ. வேணுகோபாலனைப் பொருத்த வரை பிச்சமூர்த்தியைப் படித்த கவிதை வாசகனுக்கு வேணு கோபாலனைப் படிக்கவேண்டியதில்லை. அதுபோலவே பசுவய்யாவின் அபரிமிதமான பாதிப்புக்கொண்டவர் நாரணோ ஜெயராமன் என்பதாலேயே சேர்க்கப்படவில்லை.”
பிரம்மராஜனின் கவிதைகளை அவர் புறக்கணித்ததற்கான காரணம் முக்கியமானது. கவிதைகளை ஒரு பொது சாதனமாகப் பார்க்காமல், அக்கவிதை எங்கிருந்து எழுகிறது, அதன் போக்கு என்ன என்பதைப் பற்றிய தெளிவான எண்ணம் ராஜமார்த்தாண்டனுக்கு இருந்தது. அவ்வகையில் பிரம்மராஜனின் கவிதைக்குத் தமிழ்ப்பரப்பில் என்ன இடம் என்பதைப் பற்றி யோசித்து, பிரம்மராஜனின் கவிதைகளைப் புறக்கணித்ததற்கான காரணத்தை அவரால் தெளிவாகக் கூற முடிந்தது.
“பிரம்மராஜன் கவிதைகளைப் பற்றி நான் ஏற்கனவே பலமுறை எழுதியும் பேசியும் உள்ளேன். புதுக்கவிதைகளில் அவருக்குள்ள ஈடுபாடு, உலகக் கவிதைகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியதில் அவர் பங்களிப்பு, அவர் நடத்திய ‘மீட்சி’ பத்திரிகை குறித்தெல்லாம் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. எண்பதுகளில் புதுக்கவிதையில் நவீனத்துவத்தை அதிகமும் வலியுறுத்தியவர் பிரம்மராஜன். ஆனால், அந்த நவீனத்துவம் தமிழ் மனம் சார்ந்ததாக இல்லாமல் மேலைநாட்டுக் கவிதைப் போக்கின் அதீதத் தாக்கத்தாலும் படிப்பறிவின் மூலமான அனுபவ வெளிப்பாட்டினாலும் உருவானது. சோதனை முயற்சிக்காகவே சோதனை என்றானதாலும் திருகலான மொழி நடையினாலும் மொழிபெயர்ப்புக் கவிதைகளைப் படிப்பது போன்ற உணர்வை, அந்நியத் தன்மையை இவரது கவிதைகள் தோற்றுவித்துவிடுகின்றன. இதனாலேயே அவரது கவிதைகள் குறித்து மேலான அபிப்பிராயம் ஏதும் எனக்குக் கிடையாது.”
அதுமட்டுமின்றி, சி.சு. செல்லப்பாவின் கவிதைகளையும் அவர் புறக்கணித்தார். இன்றைய நவீன கவிதைகளின் செழிப்பில் சி.சு.செல்லப்பா நடத்திய ‘எழுத்து’ இதழின் பங்களிப்பை அவர் மறுக்கவில்லை. அதே சமயம்,
சி.சு.செல்லப்பாவின் கவிதையை, நவீன கவிதைகளின் சிறந்த ஒரு முகமாக அவர் ஏற்கவில்லை. இப்படி ஒரு தெளிவான நிலையை எடுக்க,
தான் கவிதைகள் குறித்துக் கொண்டிருக்கும் கருத்துகளின் மேலே சற்றும் குன்றாத நம்பிக்கையும், கவிதைகள்/கவிஞர்கள் குறித்த தொடர்ந்த அவதானிப்பும் வேண்டும்.
“தமிழ்ப் புதுக்கவிதையைப் பொருத்தவரையில், சி.சு. செல்லப்பாவின் தீவிரமான முயற்சியும் அவரது ‘எழுத்து’ பத்திரிகையும்தான் தமிழில் புதுக்கவிதை இந்த அளவில் வேரூன்றி வளர்வதற்குக் காரணமாக இருந்தன. புதுக்கவிதை வளர்ச்சியோடு இரண்டறக் கலந்துவிட்ட சிறுபத்திரிகை இயக்கங்கள்கூட செல்லப்பாவின் தொடர்ச்சியே. அவரும் தமிழில் கவிதைகளை மொழிபெயர்த்திருக்கிறார். புதுக் கவிதைகள் குறித்து நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கிறார். சுயமாக நிறையக் கவிதைகளும் எழுதியிருக்கிறார். ஆனால் அவரது கவிதைகள் என்னுள் எவ்விதமான பாதிப்பையும் நிகழ்த்தவில்லை. புதுக்கவிதை வளர்ச்சியில் அவரது ‘எழுத்து’ பத்திரிகையின் பங்களிப்புக் காரணமாக அவரது கவிதைகளையும் நான் மேலான கவிதைகள் எனக் கருத வேண்டியதன் அவசியமென்ன?”
ராஜமார்த்தாண்டன் கவிதைகளை கோட்பாட்டளவில் அணுகாமல், தன் மனத்தினாலேயே அணுகினார். அவரது ரசனை சார்ந்தே கவிதைகளை வகைப்படுத்தினார். ஜெயமோகன் ராஜமார்த்தாண்டனை ‘கவிதைகளை நேரடியாக மனதால் வாங்கிக்கொண்டவர்’ என்கிறார். ராஜமார்த்தாண்டனுடன் மாறுபட பல கருத்துகள் இருந்தாலும், அவர் கவிதைகளை ஏற்றுக்கொண்டதற்கும், நிராகரித்ததற்கும் பின்னால் வேறு காரணங்கள் இருக்க வாய்ப்பில்லை என்பதைப் புரிந்துகொள்ளமுடியும். அஜெண்டாக்களுடன் கவிதைகளை அணுகாமல் இருந்ததையும் பார்க்கமுடிகிறது. இன்றைய நிலையில் தலித் கவிஞரொருவரை நிராகரித்தால் எழும் முத்திரைகளைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
“தலித் கவிஞர் எனப் பரவலாக அறியப்படுகிற என்.டி. ராஜ்குமார் கவிதைகள்கூட எதையோ பிரமாதமாகச் சொல்லும் பாவனையில் ஆரம்பித்து எந்த அனுபவத்தையும் தராமல் சிதைந்துபோய்விடுகின்றன.”
ராஜமார்த்தாண்டனின் கவிதைகள் அவரது விமர்சனத்தைச் சார்ந்தே அமைந்துள்ளதையும் காணலாம். மேல்நாட்டுக் கோட்பாட்டுகளுக்கிணங்க கவிதைகளை அவர் செய்யவில்லை. மனதில் தோன்றும் உணர்வுகள், அனுபவங்கள், இயலாமைகளையே அவர் கவிதையாக்கினார். எஸ்.
வைதீஸ்வரனின் ‘கால் மனிதன்’ கவிதை நூல் பற்றிய விமர்சனத்தில், “மனிதனுக்கும் அல்லது அவன் மனத்துக்கும் வாழ்க்கைக்குமான முரண்பாடே ஆரம்பம்முதல் இன்றுவரையிலான வைதீஸ்வரன் கவிதைகளின் அடிச்சரடாகத் தொடர்கிறது.
இந்த முரண்பாடு ஒரு பார்வையாளனுடையதாக அல்லாமல், தன்னையும் உட்படுத்தியதாக, அதனால் தவிர்க்கவியலாத எள்ளல் கலந்ததொரு விமர்சனப் பார்வையாக வெளிப்படுவது இவரது கவிதைகளின் தனிப்பண்பாக அமைகிறது” என்கிறார். இதையே இவரது கவிதைகளுக்கும் சொல்லலாம். ராஜமார்த்தாண்டனின் கவிதைகள் பெரும்பாலும் அவரைப் பற்றியே பேசுகின்றன. தனது கோபம்,
சோகம், பயம் என எல்லாவற்றையும் அவரது கவிதைகளில் பார்க்கமுடிகிறது. தனது திறமையின்மை என்பதை அவர் பொருளாதாரத்தின் மூலமாக ஒரு காக்கையில் கண்டுகொள்கிறார் என்று தோன்றுகிறது. அவரது கவிதைகள் பறவைகளைப் பற்றிக் கொண்டே சுற்றுகின்றன. எவ்வித கட்டுகளுமில்லாத பறவையாக, பருந்தாகவும் அதன் எதிர்முனையில் காக்கையாகவும் அவர் தன்னைக் கண்டுகொண்டிருந்திருக்கிறார் என்று படுகிறது.
ஒரு விமர்சகராக இருந்ததால், அவரது விமர்சனத்தின் மீதான விமர்சனமாகவும் கவிதைகளைப் பயன்படுத்தியிருக்கிறார். (விமர்சனம் கவிதை.)
கிராமத்திலிருந்து பிரித்து நகரத்தில் நடப்பட்ட ஒரு மனிதரின் அதிர்ச்சியும், அதை எதிர்கொள்ளமுடியாது தவிக்கும் தவிப்பும் அவரது கவிதைகளில் கிடைக்கின்றன. மனிதர்களின் மீதான நம்பிக்கையின்மையைப் பல கவிதைகளில் பார்க்கமுடிகிறது. தான் பருந்து என்றாலும் காக்கையாகும் துருவங்களை அவர் வேறொரு விதத்தில் ‘அதுவொரு பறவை’
கவிதையில் பதிவு செய்கிறார் என்று சொல்லலாம். காக்கை என்றாலும் அதன் மண் சார்ந்த உறவில் அவருக்கு பெருமிதமும் இருப்பதைப் பார்க்கமுடிகிறது. கிளி,
பருந்து, காக்கை,
மைனா, குயில் என்று பறவைகளின் வழியாக அவரது கவிதைகளை மீண்டும் வாசிப்பது பல புதிய அர்த்தங்களை ஏற்படுத்துகிறது.
‘எனது வாள்’ கவிதையில் வாளின் செயல்களைப் பட்டியலிடும் ராஜமார்த்தாண்டன், அதை விட்டெறியும் மார்க்கம் தெரியவில்லை என்கிறார். ‘மனப்பறவை’ கவிதையில் மலைச்சிகரம் நோக்கிப் பறக்கும் கவிதையைப் பற்றிப் பேசுகிறார். அந்த மனப்பறவை ராஜமார்த்தாண்டனே அன்றி வேறல்ல.
‘எல்லாமே நம்பிக்கையில்தான்’ கவிதையில், தன் கவிதை நம்மாலோ நம் வாரிசாலோ எப்படியும் உணரப்படும் என்கிறார். அவர் இறந்த செய்தி கேட்டு, ராஜமார்த்தாண்டனின் கவிதைகளைத் தேடிப்பிடித்து மீண்டும் வாசித்தபோது, அவரது நம்பிக்கை உண்மையாவதை உணர்ந்தேன். அதை உணர அவரில்லை. அஞ்சலி.
1. எல்லாமே நம்பிக்கையில்தான்
உங்களிடம்
ஒரு கவிதை சொல்லப் போகிறேன்
காதுகளை மூடிக் கொள்ளலாம் நீங்கள்
வருத்தமில்லை எனக்கு
உதட்டசைவிலும் என் கவிதை
உங்கள் கண் வழியே புகுந்துவிடும்
கண்களையும் மூடிக் கொள்ளலாம்
அப்போதும் வருத்தமில்லை
காற்றிலே அலைந்து திரியுமென் கவிதை
என்றேனும்
கண்களை விழித்தீரெனில்
உள் புகுந்து அதிர்ச்சியூட்டும்
பிடிவாதமாக மூடிக் கொள்ளலாம் நீங்கள்
அப்போதும் வருத்தமில்லை எனக்கு
உம் வாரிசாலோ வாரிசின் வாரிசாலோ
உணரப்படும் என் கவிதை
என்றேனும் ஒரு நாள்
எனவேதான்
வருத்தமில்லை எனக்கு
நஷ்டமில்லை.
2. எனது வாள்
கூர்வாளொன்று
எப்போதும என்னிடம்.
நண்பர்களைக் கண்டால்
முதுகுக்குப் பின் ஒதுங்கிவிடும்
அபிமானிகளைக் கண்டால்
உரையுனுள்ளிருந்து
கம்பீரமாய் எட்டிப்பார்த்து
அவர் முகம் நோட்டமிடும்
வேண்டாதவரென்றால்
நாக்கில் வந்து ஒட்டிக் கொள்ளும்
அழகிய பெண்களை எதிர்கொண்டால்
முலைகளை அறுத்து ரசித்து மகிழும்
குழந்தைகளிடம்
பிரியம் காட்டுவதாய் நினைத்து
குரல்வளையை கீறிவிடும்
ரோஜாக்களைக் கொய்து
கைப்பிடியில் சூடி மகிழும்
வாளுடன் எதிரி வந்தால்
உறையினுள் பதுங்கிக்கொள்ளும்
வாளின்றி வரக்கண்டாலோ
உறைவிட்டுக் கிளம்பிப் பயமுறுத்தும்.
விட்டெறியும் மார்க்கமறியேன்
என்னிடம் எப்போதும்
கூர்வாளொன்று…
3. மனப்பறவை
விண்ணிலேறிப் பறந்தொரு புள்ளியாகி
விருட்டெனத் தரையிறங்கியதென் சினேகப் பறவை
சாலையோரக் கண்ணாடித் துண்டுகள் பொறுக்கி
குப்பைத் தொட்டியில் போட்டது
எதிர்வீட்டுத் தோட்டத்தில் ரோஜாப்பூ கொய்து வந்து
பள்ளிச் சிறுமியின் தலைசூடி மகிழ்ந்தது
சுடிதார் மாணவியிடம் குறும்பு செய்த
காலிகளை கூரலகால் கொத்தி எச்சரித்தது
நடைபாதைக் குடியிருப்பில் அழும் குழந்தையின் கையில்
கொய்யாப்பழம் கொத்தி வந்து வைத்தது
பஸ் நிறுத்தக் கிழவனின் வீங்கிய காலுக்கு
மூலிகை கொண்டு ஒத்தடம் கொடுத்தது
அரிசிமணிகள் பொறுக்கி வந்து
அவன் பாத்திரத்தில் கவனமாய் இட்டது
தந்திக் கம்பத்தில் பறந்தமர்ந்து
சுவாசமாய் அங்குமிங்கும் நோக்கியபின்
பாட்டிசைத்துப் பறந்தது மலைச்சிகரம் நோக்கி.
4. இப்படியும் சில விஷயங்கள்
பறவைகளில் காகங்கள் மீது
அலாதி பிரியம் எனக்கு
குழந்தைகள் கைப்பண்டத்தை
லாகவமாகப் பறித்துச் செல்லும்
திருட்டு ஜென்மம்தான்
வீட்டு மதில்மேல் வந்தமர்ந்து
சமயா சந்தர்ப்பம் அறியாது
கத்தித் தொலைக்கும் மூடப்பிறவிதான்
எனினும்
நான் தவழ்ந்து வளர்ந்த கிராமத்திலும்
இன்று பிடுங்கி நடப்பட்ட இந்த நகரத்திலும்
தினமும் என்னைப் பார்த்து
கரைந்தழைக்கும் நண்பனல்லவோ அது.
5. அது ஒரு பறவை
ஒற்றைப் பனைமர உச்சியில்
தனித்தொரு பருந்தின் தவசு
அரைவட்டக் கோணத்தில்
தரைநோக்கி அலையுமதன் பார்வை
அவ்வப்போது வான் நோக்கியும்
இரை கண்டால் தரைநோக்கிப் பாய்ச்சல்
இல்லையேல் விண்ணோக்கிப் பறந்து
வட்டமிட்டு மிதக்கும்
அதுவொரு பறவை
இரை அதற்குத் தேவை மட்டும்
பறந்து களித்தலே அதன் இலக்கு.
6. தூரத்துப் பார்வை
நேற்று என்னூரில் பார்த்த
அதே காக்கைகள்
அதே ஜோடி மைனாக்கள்
அதே வண்ணப் புறாக்கள்
அதே பச்சைக்கிளிகள்
அதே சிட்டுக் குருவிகள்
மரங்களும்
கிளைதாவும் அணில்களும்
அப்படியேதான்
மனிதர்கள் மட்டும்
வேற்று முகங்களுடன்
7. வால் மனிதன்
இப்போதெல்லாம் அவனுடன் ஒரு வால்
ஏதேனுமொரு வால்
சிலபோது குரங்கின் வால்
சிலபோது சிங்கத்தின் வால்
சிலபோது நரியின் வால்
சிலபோது குதிரையின் வால்
சிலபோது எலியின் வால்
சிலபோது ஆட்டின்வால்
சிலபோது பன்றியின் வால்
என்றிப்படி எப்போதும்
ஏதேனுமொரு வால்
ஒரு வால் மறைந்த கணம்
ஒட்டிக்கொள்ளும் இன்னொரு வால்
விரைவாக
இப்போதெல்லாம்
அரிதாகி வருகின்றன
வாலில்லாமல் அவன்
நடமாடும் கணங்கள்
8. எனினும்
இல்லாமல் போக
இப்போதும் மனமில்லை
நூறாண்டு வாழ்ந்துவிட்டபோதும்
கொஞ்சம் நேசம்
அநேகம் துரோகங்கள்
கொஞ்சம் சந்தோஷம்
அநேகம் துக்கங்கள்
கொஞ்சம் நிம்மதி
அநேகம் பதற்றங்கள்
கொஞ்சம் நம்பிக்கை
அநேகம் அவநம்பிக்கைகள்
கொஞ்சம் செல்வம்
அநேகம் கடன் சுமைகள்
எனினும்
பூக்களின் புன்னகை
மரஙக்ளின் ஸ்நேகம்
பறவைகளின் சங்கீதம்
எனவேதான்…
9. கணிப்பு
நீ ஒரு அயோக்கியன்
நீ ஒரு சந்தர்ப்பவாதி
என்றெனக்குச்
சான்றிதழ் வழங்கிவிட்டாய்
அவசரப்பட்டுவிட்டாய் நண்பனே
என் நிழலாய் என்னைத்
தொடர்ந்தவன் போலும்
என் மனக்குகை இருளில்
துழாவித் திரிந்தவன் போலும்.
என்னை நானே
இன்னும் தேடிக்கொண்டிருக்கையில்
அவசரப்பட்டுவிட்டாய்.
சற்றே
நிதானித்திருக்கலாம் நண்பனே
என்னைப்போலவே.
10. தாமதமாகவே என்றாலும்…
தொடங்கியாயிற்று
தாமதமாகவே என்றாலும்
தீர்மானத்டுடன்.
திட்டமிட்ட பயணங்கள்
ஆயத்த மூட்டை முடிச்சுகளுடன்
விவாதச் சுமைகளுடன்
அறை மூலையில் கிடக்க
தொடங்கியாயிறு பயணத்தை
இலக்கற்று
பாதைகளற்று
தன்னந்தனியாக
சுதந்தரமாக.
11. விமர்சனம்
எழுது எழுது என்றாய்
எழுதினேன்
உன் மீசையின் கம்பீரத்தைப்
போற்றவில்லை என்று ஆத்திரம் கொள்கிறாய்
மீசையின் வரலாறு தெரியுமா?
அதன் வகைகள் அறிவாயா?
மீசையைப் பற்றி அந்த ஆங்கிலக் கவிஞன் எழுதிய
சர்ரியலிசக் கவிதை படித்திருக்கிறாயா?
கேள்விகளை அடுக்குகிறாய்.
நண்பனே
உன் கற்பனை மீசையைத் திருகி
நீ கொள்ளும் பரவசம்
எவ்விதம் நானறிவேன்
எங்கனம் அதுகுறித்து எழுதுவேன்.
படங்கள், கவிதைகள் – நன்றி: தமிழினி பதிப்பகம்.
sமனிதனும்
பறவையும்
சாலையோரம் கிடக்கிறது
அந்தக் காக்கை
அனாதைப் பிணமாக.
சற்று முன்தான்
நிகழ்ந்திருக்க வேண்டும்
அதன் மரணம்.
விபத்தா?
எதிரிகளின் தாக்குதலா?
இயற்கை மரணமா?
எதுவென்று தெரியவில்லை.
மரக்கிளைகளில் மதில்சுவர்களில்
கரைந்திரங்கல் தெரிவித்து
கலைந்து போயிற்று
உறவுக்கூட்டம்
அனாதையாகக் கிடக்கிறது அது.
சற்று முன்னதாக
ஏதேனும் வீட்டு வாசலில்
அல்லது கொல்லை மரக்கிளையில்
உறவின் வருகையறிவித்து
அதற்கான உணவை
யாசித்திருக்கலாம்.
செத்துக்கிடந்த எலியை
இனத்துடன் சேர்ந்து
கொத்திக் குதறியிருக்கலாம்.
மைனாக் குருவியை
விரட்டிச் சென்றிருக்கலாம்.
கருங்குருவியால் துரத்தப்பட்டிருக்கலாம்.
தன் ஜோடியுடன்
முத்தமிட்டுக் கொஞ்சியிருக்கலாம்.
கூடுகட்ட நினைத்திருக்கலாம்.
இப்போது அனாதையாய்
இந்தச் சாலையோரம்.
மனிதன் இறந்துகிடந்தால்
காவலர் தூக்கிச்செல்வர்.
அற்பப் பறவையிது.
கவனிப்பாரில்லை.
சற்று நேரத்தில்
நாயோ பூனையோ
கவ்விச் செல்லலாம்.
குப்பையோடு குப்பையாய்
மாநகராட்சி வாகனத்தில்
இறுதிப்பயணம் செய்யலாம்.
அற்பப் பறவையன்றோ அது.
காலச்சுவடு 24, ஜனவரி - மார்ச் 99
பயணங்கள்
எதிர்வருவோர் மோதிவிடாமல்
வளைந்து நெளிந்து
நிதானமாக
மிகக் கவனமாக
நடைபாதையில் அவன் பயணம்.
தார் தகிக்கும் சாலையில்
எதிரெதிர் திசைகளில்
வாகனங்களின் அசுரப் பாய்ச்சல் கண்டு
ஒருகண மனப் பதற்றம்.
கிறீச்சிட்டு நின்ற
வாகனங்கள் நடுவே
செந்நிறச் சதைக்குவியலாய் அவன்.
விசிலூதி விரைந்த காவலர்
சிதைந்த கபாலத்தின் மீது
கைத்தடியால் தட்ட
பதற்றத்துடன் எழுந்தவன்
சிதைவுகளைச் சேகரித்துக்கொண்டு
விரைந்தான் நடைபாதை நோக்கி.
பதற்றம் தணிந்து
நிதானமாக
மீண்டும்
நடைபாதையில் அவன் பயணம்
விதிக்கப்பட்டது...
நடந்துகொண்டிருக்கிறான்
மனச் சுமையின்றி
புறச் சுமையின்றி
நடந்துகொண்டிருக்கிறான்.
மரநிழலில் இளைப்பாறி
திண்ணைகளில் படுத்துறங்கி
கிடைப்பதைப் புசித்து
வயிற்றின் வெம்மை தணித்து
நடந்துகொண்டிருக்கிறான்.
கபாலம் பிளக்கும் வாழ்த்தொலிகள்
எதிர்கோஷங்கள்
சவால்கள்
கோரிக்கைகள்
காதுமடல்களில் மோதிப்
பின்வாங்க
சலனமேதுமின்றி
நடந்துகொண்டிருக்கிறான்.
மண்ணில் காலூன்றி
தொடுவான் நோக்கி விரல்களசைக்கும்
மரங்களின் பசுமைக் கம்பீரத்தில்
தாவிச்செல்லும் அணில்களின்
மெல்லிய கீச்சொலிகளில்
விருட்டெனப் பறந்து செல்லும்
குருவிகளின் சிறகசைப்பில்
முன்செல்லும் பெண்ணின்
தோளில் பூத்த மழலைச்சிரிப்பில்
மனக்குளப் பரப்பின்
மலர்கள் பூத்தசைய
நடந்துகொண்டிருக்கிறான்.
காலில் ஏதோவொன்றிடற
குனிந்து நோக்க
துண்டித்த சிறுகரமொன்று
மெல்லப் பற்றியெடுத்து
புதரோரம் வைத்துவிட்டு
ஒருகணம் கனத்த மனம்
மறுகணம் வெறுமையாக
நடந்துகொண்டிருக்கிறான்.
காலோய்ந்தொருநாள்
தெருவோரம் வீழ்ந்தாலும்
மனமெழுந்து காற்றாகி
நடைதொடரும் நம்பிக்கையில்
நடந்துகொண்டிருக்கிறான்.
காலச்சுவடு 24, ஜனவரி - மார்ச் 99
கவிஞர் ராஜமார்த்தாண்டன் 6.6.2009 அன்று காலமானார். ராஜமார்த்தாண்டன் கன்னியாகுமரி மாவட்டம், சந்தையடி கிராமத்தில் பிறந்தவர் (1948). இளம் அறிவியல் கணிதப் படிப்பைக் கும்பகோணத்திலும், முதுகலைத் தமிழ்ப் படிப்பைக் கேரளப் பல்கலைக்கழகத்திலும் முடித்த பின்பு புதுக்கவிதை பற்றி, கேரளப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராக சேர்ந்தார். அப்போது கோகயம் என்னும் காலாண்டிதழை நடத்தினார். ஆய்வு முடித்த பின் 1976-83 வரை கொல்லிப்பாவை (12 இதழ்கள்) காலாண்டிதழை நடத்தினார். தினமணியின் மதுரைப் பதிப்பிலும் சென்னைப் பதிப்பிலும் இருபதாண்டுகள் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். தமிழகத்தில் பல்வேறு சிற்றிதழ்களில் கவிதை விமர்சனங்கள் எழுதியுள்ள ராஜமார்த்தாண்டன், தன் புதுக்கவிதை தொகுதிக்காகத் தமிழக அரசு விருது பெற்றுள்ளார் (2003). இவரது முக்கியமான நூல்கள் புதுமைப்பித்தனும் கயிற்றரவும் (2000), ராஜமார்த்தாண்டன் கவிதைகள் (2002), புதுக்கவிதை வரலாறு (2003), சுந்தர ராமசாமியின் கவிதைக்கலை (2007) ஆகியன. தமிழ்ப் புதுக்கவிதைகளில் சிறந்தவற்றைத் தெரிந்தெடுத்து கொங்குதேர் வாழ்க்கை என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளார். இவர் தினமணியிலிருந்து ஓய்வு பெற்றபின்பு காலச்சுவடு மாத இதழில் பணியாற்றினார். இவர் மனைவி ரெங்கம்மாள். குழந்தைகள் அஜிதா, கிருஷ்ண பிரதீப். |
கவிதையின் காலடியில்:ராஜமார்த்தாண்டனின் கவிதை விமரிசனம்
மதிப்பிற்குரிய கொடிக்கால் அப்துல்லா அவர்களே , அண்ணாச்சி ராஜமார்த்தண்டன் அவர்களே, மற்றும் அவையினரே, அனைவருக்கும் வணக்கம்.
என் மதிப்பிற்குரிய அண்ணாச்சி ராஜமார்த்தாண்டன் அவர்களுக்கு இன்று அறுபது வயதாகிறது. அவருக்கு நீண்ட ஆயுளும் உடல்நலமும் கிடைக்க வாழ்த்துகிரேன். இருபதுவருடங்களுக்கும் மேலாக அவர் மீது ஆழ்ந்த அன்பும் மதிப்பும் கொண்டவன் நான். ராஜமார்த்தாண்டன் என்னுடைய விமரிசனக் கருத்துக்களை முழுமையாக மறுத்து வாதிட்டிருக்கிறார். என்னுடன் பலகோணங்களில் விவாதமும் புரிந்திருக்கிறார். ஆனால் நான் என் ‘வாழ்விலே ஒருமுறை’ நூலை அவருக்குத்தான் சமர்ப்பணம் செய்தேன். இந்த அவையில் அவரை வாழ்த்துவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது
ராஜமார்த்தண்டன் கவிதைகள், பிற திறனாய்வுகள் எழுதியிருந்தபோதிலும் அவரை அடிப்படையில் ஒரு கவிதைவரலாற்றாசிரியராகவும் கவிதைத்திறனாய்வாளராகவுமே நான் மதிப்பிடுகிறேன். அவரது
‘தமிழ் புதுக்கவிதை வரலாறு’ ‘கொங்குத்தேர் வாழ்க்கை தொகுதி இரண்டு’ ஆகியவை முக்கியமான நூல்கள். ராஜமார்த்தாண்டனை கோட்பாடற்ற திறனாய்வாளர் என்று சொல்லலாம்.
வளரும் குழந்தைக்குச் சட்டை தைப்பது போன்றது இலக்கியப்படைப்புகளை கோட்பாடு சார்ந்து அணுகுவது. துல்லியமாக அளர்ந்து நேர்த்தியாக நாம் சட்டை தைக்கலாம். தைக்கும்போதே குழந்தை வளர்ந்து உருமாறிக் கொண்டிருக்கிறது. குழந்தை என்பதே ஒரு தொடர்நிகழ்வுதான். உண்மையில் குழந்தைமைதான் உள்ளது, குழந்தை என நாம் அதைத்தான் சொல்கிறோம். சட்டைகளை குழந்தைகள் ஒவ்வொருகணமும் மீறிச்செல்கின்றன. ஆகவேதான் கவிதைகள் பற்றிய பலநூறு கோட்பாடுகளை நாம் இப்போது காண்கிறோம். கவிதையை விளக்க அவை போதவில்லை என புதிய கோட்பாடுகளை தேடிச் செல்கிறோம்.
இலக்கியத்தின் மீது போடப்படும் கோட்பாடுகள் பலவகை. அரசியல் கருத்தியல்கள் சார்ந்து இலக்கியத்துக்கு உருவாக்கப்படும் கோட்பாடுகள் உண்டு.சமூகவியல், உளவியல், மொழியியல் போன்ற பிற அறிவுத்துறைகளின் கோட்பாடுகள் இலக்கியத்தின்மீது செயல்படுத்தப்படுவதுண்டு. பெரும்பாலான கோட்பாடுகள் இலக்கியத்தை இலக்கியமல்லாத அறிவுத்துறைகளுடன் உரையாடவைக்க முயல்கின்றன.
இக்கோட்பாடுகள் இலக்கியத்தை இறுக்குகின்றன, குறுக்குகின்றன என்ற எண்ணம் இலக்கியவாதிகளிடம் எப்போதுமே உண்டு. நம்முடைய படைப்பொன்று கோட்பாட்டு விமரிசனத்துக்கு ஆளாகும்போது எப்போதுமே நாம் துணுக்குறுகிறோம். பறந்து கொண்டிருப்பது ஊர்ந்துசெல்ல ஆரம்பித்திருப்பதைக் காண்கிறோம். ஆகவேதான் இலக்கியத்தை இலக்கியத்திற்குள் வைத்து மதிப்பிடும் அழகியல் விமரிசன முறைமைகள் உருவாயின. தொன்மையான இலக்கண விமரிசனமுறை ஒன்று எல்லா மொழிகளிலும் காணப்படுகிறது. இன்றைய அழகியல் திறனாய்வுமுறை பிரிட்டிஷ் இலக்கிய விமரிசனத்தில் இருந்து உருவானது. அதை உருவாக்கியவர்கள் கூல்ரிட்ஜ், ஜான்ஸன் போன்ற இலக்கியவாதிகள்.
அழகியல் விமரிசனம் என்பது பெரிதும் அகவயமானது. இலக்கியம்போன்ற ஒரு படைப்புச் செயல்பாடு அது.
மொழிவெளிப்பாட்டின் நுட்பத்தாலேயே நிலைநிற்பது. அதற்கு எதிரான புறவய அணுகுமுறை எப்போதும் இலக்கியத்தளத்தில் உண்டு.
முன்னர் தத்துவம் சார்ந்து புறவய அணுகுமுறைகள் உருவாக்கப்பட்டன. பின்னர் மொழியியல் சார்ந்து. ஆனால் எப்போதுமே அது இலக்கியத்தின் அடிப்படைகளைச் சார்ந்து அழகியல் விமரிசனமுறை வலுவாக இருந்துகொண்டே இருக்கிறது. ஏனென்றால் அது வாசகனின் ரசனையை விமரிசகனின் ரசனை சந்திக்கும் ஒரு புள்ளியில் இயங்குகிறது.
இலக்கியத்தை இலக்கியத்திற்குள் வைத்து அணுகும் போக்கிலும் கோட்பாட்டு அணுகுமுறை உருவாகிறது. அதை அழகியல் கோட்பாடுகள் எனலாம். அழகியல் கருதுகோள்கள் இலக்கியத்தில் இயல்பாக உருவாகின்றன. அவற்றை ஒரு நிலையான அளவுகோலாகக் கொள்ளும்போது, அவற்றை வைத்து அனைத்தையும் புறவயமாக மதிப்பிட ஆரம்பிக்கும்போது அவை கோட்பாடுகளாக ஆகிவிடுகின்றன. இது நவீனத்துவம், இது பின் நவீனத்துவம், இது செவ்வியல், இது மீமெய்யியல் என்றெல்லாம் வகுத்து ஆராய முற்படும் விமரிசகன் அவற்றை கோட்பாடுகளாக ஆக்குகிறான். அந்த கோட்பாட்டு அளவுகோல்களுக்கு அப்பால்தான் இலக்கியப் படைப்பின் பெரும்பகுதி விரிந்துகிடக்கும். அவற்றை வெறும் அறிதல்முறைகளாக, கருவிகளாக காண்பவனே அழகியல் விமரிசகனாக முடியும்.
இந்த இருவகைக்கும் இருவரை உதாரணங்களாகச் சொல்ல முடியும். சி.சு.செல்லப்பா அழகியல் விமரிசனத்தை அழகியல்கோட்பாட்டு விமரிசனமாக மாற்றிக் கொண்டவர். அவருக்கு படைப்பை புரிந்துகொள்வதை விட வகைப்படுத்துவதிலேயே ஆர்வம் அதிகமிருந்தது. பொதுக்கூறுகளைக் கண்டுபிடித்து அவற்றைக் கொண்டு படைப்புகளை இன்னவகை என்று அடையாளப்படுத்தவே அவர் அலசல் விமரிசனத்தை கையாண்டார்.
மாறாக க.நா.சு இலக்கிய விமரிசனத்தை தன் ரசனையின் தளத்தில் மட்டுமே நிறுத்திக் கொண்டவர். அவருக்கும் இலக்கியக் கருதுகோள்களில் ஆர்வம் உண்டு. இந்தப்படைப்பில் ஒரு சர்-ரியலிசத்தன்மை உண்டு என்று சொல்வார், இது ஒரு சர்-ரியலிச படைப்பு என்று சொல்லமாட்டார். தன் ரசனையின் முடிவுகளை மட்டுமே முன்னிறுத்துவார். க.நா.சுவின் வழிவந்தவர் என்று சுந்தர ராமசாமியைச் சொல்லலாம். ராஜமார்த்தாண்டன் அந்த மரபை முழுமையாகச் சார்ந்தவர். சுந்தர ராமசாமி தன் தேர்வுக்கான காரணங்களை விளக்க முயன்றார். ஆனால் அவருக்கு கோட்பாடுகளில் நம்பிக்கை இல்லை. தத்துவம் போன்ற பிற துறைகளில் விரிவான அறிமுகமும் இல்லை.
ஆகவே அவை தன் மொழியின் நுண்ணிய சாத்தியங்களைக் கொண்டு தன் அகவய இயக்கத்தை விளக்க முயலும் யத்தனங்களாகவே நின்று விட்டன.
மாறாக ராஜமார்த்தாண்டன் தெளிவாக தன் ரசனையின் தேர்வுகளை மட்டுமே முன்வைக்கிறார் என்பதைக் காணலாம். அதற்கான காரண காரியங்களை விளக்க அவர் முனைவதில்லை. தன் தேர்வுகளை தீர்ப்புகளாக்க முனைவதில்லை. ஆகவே முழுக்க முழுக்க கோட்பாடற்ற ஒரு இடத்தில் நின்று அவர் தன் இலக்கிய விமரிசனத்தைச் செய்கிறார்.
ஒருவகையில் இது வெறும் பட்டியல், அல்லது ரசனைக்குறிப்பு, இலக்கிய விமரிசனம் அல்ல என்று சொல்லலாம். ஆனால் தமிழ் விமரிசகர்களில் நல்ல படைப்புகளை இனம்கண்டுகொண்டு முன்னிறுத்துவது, நல்ல படைப்புகளின் ஆத்மாவை வாசகனுக்கு உணர்த்துவது இரண்டிலும் க.நா.சுவுக்கு இணையாக எவருமே இல்லை என்பதையே இன்றைய வரலாறு காட்டுகிறது. அழகியல் விமரிசகரான சி.சு.செல்லப்பா ரசனை ரீதியாக பிழைகள் மலிந்தவராகவே தென்படுகிறார். அதேசமயம் நம் கோட்பாட்டு விமரிசகர்கள் முற்றிலும் ரசனைகெட்டவர்களாக, கனியிருப்ப தவறாமல் காய் கவர்பவர்களாக, இலக்கிய நிராகரிப்பாளர்களாக, ஏதாவது ஒரு புதிய கோட்பாட்டுக் கருவியை கண்டெடுத்து இலக்கியவாதிகளை சிறுமைப்படுத்துபவர்களாக மட்டுமே காணக்கிடைக்கிறார்கள். ரசனை விமரிசனம் மீது ஆழமான நம்பிக்கை¨யை நம்மில் உண்டுபண்ணுபவர்கள் இவர்களே.
சுந்தர ராமசாமி முன்பு ஒருமுறை நம் மரபில் இலக்கியவிமரிசனம் இல்லை என்று எழுதியிருந்தார். அதைப்பற்றி நான் அவரிடம் உரையாடியிருக்கிறேன். நம் மரபில் தொகுப்புமுறை உள்ளது. உரை மரபு உள்ளது. இரண்டும் நமக்குரிய விமரிசன முறைகளே. மேலைச்சிந்தனையிலும் இன்றைய இலக்கிய விமரிசனமுறை மறுமலர்ச்சிக்காலகட்டத்தில் உருவானதே. சொல்லப்போனால் பொருளியலாளர்களான ஜெ.எஸ்.மில் போன்றவர்கள் பொருளியல் கட்டுரைகளின் அறிவியல்தர்க்க முறை சார்ந்த உரைநடையில் இலக்கியத்தைப் பற்றி எழுத ஆரம்பித்த போதுதான் இன்றைய விமரிசன முறை உருவாகி வந்தது.
ஒரு ஒட்டுமொத்த மரபில் இருந்து நாநூறு பாட்டுகளை தேர்வுசெய்து அகநாநூறு என்றோ நற்றிணை என்றோ தொகுப்பவர்களின் பிரக்ஞையில் தெளிவான ரசனையும் அளவுகோலும் உள்ளது. அதை அவர்கள் பதிவுசெய்யாமலிருந்தாலும் இன்றும் நாம் அதை அந்நூல்கள் வழியாகவே தெளிவாகக் காணலாம். இன்று ராஜமார்த்தண்டன் செய்வதும் அத்தகைய ஒரு மறைமுக விமரிசனச் செயல்பாட்டையே. ஒருவர் தொடர்ச்சியாக தன் தேர்வுகளை மட்டும் முன்வைத்துவந்தால் ஒரு கட்டத்தில் அது திட்டவட்டமான ஒரு விமரிசன நிலைபாடாக மாறி விடுகிறது. துல்லியமான ரசனையை வெளிக்காட்டுவதாக அமைகிறது. அதன் பின்னால் உள்ள ஆளுமையைக் காட்டுகிறது.
அந்த ரசனையை அவர் விளக்க ஆரம்பித்தால் கோட்பாடுகளை நோக்கிச் செல்லக்கூடும். ஒரு கவிதையை அவர் ரசிப்பதை நியாயப்படுத்தினால் அதற்கு நேர்மாறான ஒரு கவிதையை அவர் ரசிக்கமுடியாமல் ஆகக்கூடும். அவரது சொந்த விளக்கங்களே அவரை கட்டுப்படுத்தக் கூடும். கையறுநிலையிலும் இயற்கை வருணனையை நிரப்பி வைக்கும் புறநாநூறு பாடல்களை தொகுத்த அதே மனம்தான் ‘அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்’ போன்ற ஒரு எளிமையான பாடலையும் உள்ளே சேர்த்துக் கொண்டிருக்கிறது. அத்தகைய தன்னிச்சையான தேர்வு சாத்தியமில்லாமல் ஆகக்கூடும்.
யோசித்துப்பாருங்கள் , அன்றைய தொகுப்பாளர் ஒரு கோட்பாட்டின் அடிப்படையில் அக்கவிதைகளைத் தொகுத்திருந்தால் அந்தக் காலமே வரலாற்றிலும் இல்லாமல் ஆகிவிட்ட இன்று அந்தக் கவிதைகள் எப்படி பொருள்பட்டிருக்கும்? ஒரு தலைமுறைக்குமேல் நீளும் இலக்கியக் கோட்பாடு என ஏதுமில்லை. இன்றைய சூழலில் பத்துவருடம்கூட கோட்பாடுகள் நீடிப்பதில்லை. ஆனால் இலக்கியப்படைப்புகள் சாதாரணமாக பல தலைமுறைகளைத் தாண்டிச் செல்லக்கூடியவை. பத்துவருடம் முன்பு இங்கே அமைப்புவாத கோட்பாடுகள், பின் நவீனத்துவக் கோட்பாடுகள் பேசப்பட்டன. அவற்றை குத்துமதிப்பாக புரிந்துகொண்டவர்கள் அவையே சிந்தனையின் கடைசிப்படி என்று உற்சாகக்குரல் எழுப்பினார்கள். இன்று அவை பழங்கதைகளாக ஆகிவிட்டிருக்கின்றன. புதிய கோட்பாடுகள் பேசப்படுகின்றன. அன்று அந்தக் கோட்பாடுகளைக் கொண்டு ஒரு இலக்கியத்தெரிவு மேற்கொண்டிருந்தால் இன்று என்ன பொருள் அவற்றுக்கு?
கோட்பாட்டு விமரிசனத்தை நான் நிராகரிக்கவில்லை. அதன் எல்லைகளைப் பற்றி மட்டுமே சொன்னேன். ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டு விமரிசனம் இலக்கியத்தின் ஒரு பகுதியை மட்டுமே சுட்டிக்காட்டுகிறது, கவனப்படுத்துகிறது. இலக்கியம் அதுமட்டுமல்ல என்ற போதத்துடன் அதை ஒருவர் கையாள்வார் என்றால் அது பயனுள்ள கருவியே ஆகும். ஆனால் இலக்கியம் ஆராய்ச்சிக்கு உரியதல்ல, ரசனைக்குரியது. ரசனை சார்ந்த அணுகுமுறையே இயல்பானதும் என்றுமுள்ளதுமாகும்.
ராஜமார்த்தாண்டன் தன்னை ஒரு வாசகனாக படைப்பின் முன் நிறுத்துகிறார். தன்னில் அவை உருவாக்கும் விளைவை கவனிக்கிறார். அதன் அடிப்படையில் தன் முடிவுகளை முன்வைக்கிறார். அவரது கொங்குத்தேர் வாழ்க்கை தொகுப்பில் பிரம்மராஜன், யவனிகாஸ்ரீராம் போன்ற சிலரை அவர் தவிர்த்து விட்டாரென்றும், அதைப்பற்றிக் கேட்டபோது அவர்கள் தன்னை கவரவில்லை என்று சொன்னாரென்றும் ந.முருகேசபாண்டியன் சொன்னார். இந்தபெயர்கள் இக்காலகட்டத்தை சார்ந்தவையாதலால் நமக்கு பெரிதாகத் தோன்றுகின்றன. இந்த ஆட்களை நாம் அறிவோம் என்பதனால். எழுபதுகளில் கனகதாரா என்பவர் எல்லா சிற்றிதழ்களிலும் எழுதித்தள்ளினார். அவரது கவிதைகளை ராஜமார்த்தண்டன் சேர்க்கவில்லை. அப்படி அவர் விட்டுவிட்ட ஐம்பது பேரை நான் சொல்லமுடியும்.
இப்படி விடப்பட்டவர்களின் கவிதைகளை மட்டும் கவனித்தால் அவற்றை ராஜமார்த்தண்டன் ஏன் விட்டுவிட்டார் என்பது தெளிவாகவே இருக்கிற்து. அவை பாசாங்கானவை. செயற்கையானவை. அரசியல் சார்ந்த பாசாங்குகள், மேடை சார்ந்த பாசாங்குகள் நம் கண்ணுக்கு உடனே தெரிகின்றன. அவற்றை ராஜமார்த்தண்டன் தவிர்க்கும்போது நாமும் ஒப்புக் கொள்கிறோம். சிற்றிதழ் சார்ந்த பாசாங்குகள் பல உண்டு.
கலகக்காரன் என்ற பாசாங்கு. ‘சூப்பர்’ அறிவுஜீவி என்ற பாசாங்கு. பெண்ணியவாதி என்ற பாசாங்கு. தலித் புரட்சியாளன் என்றர பாசாங்கு. அவை நடுத்தர வற்கத்து எளிய மனிதர்களின் இயலாமையின் விளைவுகள் மட்டுமே. ஒரு புது கோட்பாடு இறக்குமதியாகும்போது உடனே அதற்கேற்ற பாசாங்குகளும் பிறக்கின்றன.நாற்பதுவருடங்களாக மிகமிக நுணுக்கமாக — ஒரு கலைக்களஞ்சியம் என்றே சொல்லிவிடக்கூடிய அளவுக்கு — தமிழ் கவிதையை கவனித்துவரும் ராஜமார்த்தண்டன் இதற்குள் எத்தனை பாசாங்குகள் வந்துசென்றதை பார்த்திருப்பார்? ஆகவே ஈவிரக்கமில்லாமல் ராஜமார்த்தண்டன் அவற்றை கழித்து விடுகிறார்.
மூளையை இலக்கியம் நோக்கி திருப்புவது ஒருவகை வாசிப்பு. கோட்பாட்டு விமரிசகர்கள் செய்வது அதையே.
தமிழில் அம்மூளைகள் திறனற்றவை என்பதனால் அதன் பரிதாபகரமான விளைவுகளை நாம் கண்கூடாகக் காணவும் செய்கிறோம். ஆழ்மனதை படைப்புகளை நோக்கி திருப்புவதென்பது ராஜமார்த்தாண்டன் முன்வைக்கும் வாசிப்பு. அவரது இலக்கியச் செயல்பாடு என்பது இதுவே. தன்னை முழுமையாக, முன் நிபந்தனைகள் இல்லாமல், நிர்வாணமாக படைப்பு முன் நிறுத்துவது. அப்போது ஒன்று நிகழ்கிறது, எந்த ஆழ்மன எழுச்சி இலக்கியப்படைப்பை உருவாக்கியதோ அதே ஆழ்மன எழுச்சி வாசக தளத்திலும் நிகழ்கிறது. எந்நிலையிலும் முற்றிலும் புரிந்து வகுத்துவிட முடியாத பண்பாட்டு ஆழத்தில் படைப்பும் வாசகனும் உரையாடுகிறார்கள்.
ஆகவே ஒரு படைப்பு ஏன் தன்னைக் கவர்கிறது என்று ராஜமார்த்தண்டன் போன்றவர்களால் சொல்லிவிடமுடியாது. சொல்ல ஆரம்பிக்கும்போதே அது தவறாகவும் போதாமலும் ஆவதைத்தான் அவர்கள் உணர்கிறார்கள். புறவயமாகச் சொல்லத்தக்கதாக ராஜமார்த்தண்டன் உணர்வது அப்படைப்பு எழுதப்பட்ட சூழல், அதன் இலக்கிய வரலாற்று மரபு இரண்டைப்பற்றி மட்டுமே. அவர் அவற்றைப்பற்றி மட்டுமே விரிவாகப்பேசி அந்த தருணத்தில் தன் முடிவை முன்வைத்து நிறுத்திக் கொள்கிறார். தன் காலகட்டத்தின் வாசகப்பொதுமனத்தின் துல்லியமான பிரதிநிதியாக ஆவதே அவரது இலக்காக இருக்கிறது. அவர் வழியாக இக்காலகட்டத்தின் வாசக ஆழ்மனம் வெளிப்படுவதனாலேயே அவர் முக்கியமானவராக ஆகிறார்.
சமணத்துறவிகள் பிட்சை ஏற்கும்போது உணவை எந்த வித பாத்திரத்திலும் வாங்க மாட்டார்கள். இலையில்கூட பெற மாட்டார்கள்.வெறும் கையில் வாங்கி நேரடியாக உண்பார்கள். கவிதையை வெறும் இதயத்தால் வாங்கக்கூடிய விமரிசகராக நிற்கிறார் ராஜமார்த்தாண்டன்.
[26-7-08 அன்று நாகர்கோயிலில் நிகழ்ந்த ராஜ மார்த்தாண்டனுக்கு அறுபதுஇலக்கியக் கூட்டத்தில்’ஆற்றிய உரை]
உயிர் எழுத்து:ராஜமார்த்தாண்டன் சிறப்பிதழ்
தமிழ் இலக்கிய திறனாய்வாளரான ராஜமார்த்தாண்டனின் அறுபதாம் ஆண்டு நிறைவை ஒட்டி உயிர் எழுத்து சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அட்டையில் ராஜமார்த்தாண்டனின் அழகான புகைப்படம். புகைப்படம் எடுத்தது யாரென்று குறிப்பிடப்படவில்லை.
உள்ளே சுகுமாரன் எழுதிய ‘நண்பர் அண்ணாச்சி’ என்ற கட்டுரை முதலில் உள்ளது. ராஜமார்த்தாண்டன் தினமனியில் உதவியாசிரியராக இருந்த காலகட்டத்தில் மாலன், ஞாநி ஆகியோர் ஆசிரியர்களாக இருந்து அளித்த ஊக்கத்தால் முக்கியமான மொழியாக்கங்களையும் கவிதைகளையும் தினமணி இதழில் கொண்டுவந்ததையும் சிறந்த பேட்டிகளை வெளியிட்டதையும் சுகுமாரன் நினைவுகூர்கிறார்.
‘ராஜமார்த்தாண்டனின் விமரிசனப்போக்குகள்’ என்ற கட்டுரையை ந.முருகேசபாண்டியன் எழுதியிருக்கிறார். மேலைநாட்டுத் திறனாய்வுப்போக்குகளை அப்படியே இலக்கியத்தில் போட்டுப்பார்க்கும் போக்கு கல்வித்துறையில் இருந்தது. அவர்கள் ஐ.ஏ.ரிச்சர்ட்ஸ் போன்றவர்களை மேற்கோள்காட்டினார்கள். அப்போக்கு சிற்றிதழில் ஊடுருவி ·பூக்கோ போத்ரியா என்று மேற்கோள் காட்டும் போக்கு உருவானது. அது எதையுமே கோட்பாடாக்கும் முறைக்கு வழிவகுத்தது. அதற்கு எதிராக தன் ரசனையின் பலத்தில் நின்ற விமரிசகர் என்று ராஜமார்த்தாண்டனை அவர் வரையரைசெய்கிறார்
சுரேஷ்குமார இந்திரஜித் ‘ராஜமார்த்தாண்டன் 60 ‘ கட்டுரையில் ராஜமார்த்தாண்டனுக்கும் தனக்குமான நட்பையும் ராஜமார்த்தாண்டனின் அலைபாயும் ஆளுமையையும் நினைவுகூர்கிறார்.’ராஜமார்த்தாண்டன் ,வாழ்வும் கவிதையும்’ என்ற கட்டுரையில் இரத்தின கரிகாலன் விட்டேற்றியானனாஅளுமை கொண்ட ராஜமார்த்தாண்டன் தொடர்ந்து பறவைகளைப்பற்றி எழுதுவதில் உள்ள நுட்பத்தை சுட்டிககட்டி அவரது கவிதைகளை ஆராய்கிறார்.
சிபிச்செல்வன் ராஜமார்த்தாண்டன் கவிதைகள் என்ற கட்டுரையில் நகரத்தில் வசித்தும் நகரத்துடன் ஒட்டாமல் அதை வேடிக்கை பார்க்கும் ஒரு கவிஞனின் குரலாக ராஜமார்த்தாண்டனின் கவிதைகள் பேசுகின்றன என்று கண்டுகொள்கிறார். ‘நேர் கொண்ட அகம்’ என்ற கட்டுரையில் ‘காலச்சுவடு’ கண்ணன் சுந்தர ராமசாமிக்கும் ராஜமார்த்தாண்டனுக்கும் இடையே இருந்த உறவையும் தனக்கும் அவருக்குமான நட்பையும் பற்றிச் சொல்கிறார்.
ஓசையின்றி செயல்பட்டுவந்த ஒரு இலக்கியவாதிக்கு அளிக்கப்பட்ட இம்மரியாதை முக்கியமானது. பாராட்டுக்குரியது.
தொடர்புக்கு
இலக்கிய விமரிசகரும், சிற்றிதழாளரும், கவிதைவரலாற்றாசிரியருமான ராஜ மார்த்தாண்டனுக்கு அறுபது ஆண்டு நிறைவு விழா நெய்தல் இலக்கிய அமைப்பின் சார்பில் நாகர்கோயில் ஆர்.ஓ.ஏ.கலையரங்கத்தில் 26-7-08 மாலை ஆறுமணிக்குத்தொடங்கியது. நாஞ்சில்நாடன் கோவையில் இருந்துவந்து வடிவீஸ்வரத்தில் அவரது தம்பி வீட்டில் தங்கியிருந்தார். நான் அலுவலகத்தில் இருந்து முன்னரே வந்து குளித்து உடைமாற்றி ஒரு ஆட்டோவில் ஏறி அவரது வீட்டுக்குச் சென்றேன். அங்கிருந்து இன்னொரு ஆட்டோவில் இருவரும் அரங்குக்கு வந்தோம். அங்கு குளச்சல் மு யூசுப் போன்ற நண்பர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.
ஆறுமணியளவில் மெல்ல மெல்ல கூட்டம்சேர ஆரம்பித்தது. நாகர்கோயிலின் இலக்கிய நண்பர்கள் பெரும்பாலானவர்கள் வந்தார்கள். ஏறத்தாழ அறுபதுபேர். ராஜமார்த்தாண்டன் தன் மனைவி மகனுடன் வந்தார். அவருக்கு இரு குழந்தைகள். மகள் அஜிதா திருமணமாகி சென்னையில் இருக்கிறாள். ஒரு குழந்தை இருக்கிறது. மகன் திருச்செங்கோடு கல்லூரி ஒன்றில் ஆங்கில ஆசிரியராக இருக்கிறார்.
நிகழ்ச்சிக்கு நாகர்கோயிலின் மூத்த அறிஞர்களில் ஒருவராகிய கொடிக்கால் அப்துல்லா தலைமை ஏற்றார். குமரிமாவட்ட உருவாக்கத்துக்கான போராட்டங்களிலும் பின்னர் இடதுசாரி இயக்கங்களிலும் ஈடுபட்டு சிறைசென்றவர் [அப்போது கொடிக்கால் செல்லப்பா] சுந்தர ராமசாமியின் நண்பர். 2001ல் ராஜமார்த்தாண்டனுக்கு அவரே ஒரு பாராட்டுக்கூட்டம் ஏற்பாடு செய்திருக்கிறார்.
அறிமுக உரை வாசித்த நெய்தல் கிருஷ்ணன் ராஜமார்த்தாண்டனுடனான அறிமுகம் சுந்தர ராமசாமி வழியாக உருவாயிற்று என்று நினைவுகூர்ந்தார். சார் என்று அழைக்கத்தொடங்கி மெல்ல மெல்ல ஓய் என்று அழைக்குமளவுக்கு நெருங்கி வந்த உறவு அது என்றார். விழாவை முனைவர் அ.கா.பெருமாள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
கொடிக்கால் தன் தலைமை உரையில் இங்கே கூடியிருக்கும் பெரும்பாலான நண்பர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க வழியமைத்தது சுந்தர ராமசாமியின் ஆளுமையும் அவரது இல்லமும்தான் என்று சொல்லி அவரை இன்று நாம் நினைவுகூரவேண்டும் என்றார். ஏறத்தாழ முப்பது வருடங்களுக்கு முன் கொடிக்கால் ‘புதுமைத்தாய்’ என்ற இதழை வெளியிட காலத்தில் அதில் அன்று மாணவராக இருந்த ராஜமார்த்தாண்டன் தன் ஆரம்பகால கவிதைகளை வெளியிட்டிருக்கிறார் என்று நினைவுகூர்ந்தார்.
மொழிபெயர்ப்பாளரும் பிரதிமேம்படுத்துநருமான எம்.எஸ்.
தன் வாழ்த்துரையில் நண்பனை பிறரிடம் புகழவேண்டும் என்ற விதி ஒன்று உள்ளது. அனேகமாக தினமும் சந்திக்கும் நண்பராக இருக்கும் ராஜமார்த்தாண்டன் மேல் தனக்கிருக்கும் மதிப்பையும் பிரியத்தையும் சொல்ல இந்த மேடை ஒரு வாய்ப்பளிக்கிறது, அதற்கான இந்த சந்தர்ப்பத்திற்கு நன்றி சொல்ல வேண்டும் என்றார்
நாஞ்சில்நாடன், அவரும் ராஜமார்த்தாண்டனும் அ.கா.பெருமாளும் எம்.வேதசகாயகுமாரும் பேராசிரியர் ஆறுமுகம்பிள்ளையும் [ராஜேந்திரன்] தென் திருவிதாங்கூர் இந்துக்கல்லூரியில் ஒருசாலை மாணாக்கர்கள் என்றார். ஆனால் ராஜமார்த்தாண்டனுடன் நட்பு ஏற்பட்டது ‘தலைமீழ் விகிதங்கள்’ நாவலுக்கு சுந்தர ராமசாமி காகங்கள் அமைப்பில் நடத்திய விமரிசனக்கூட்டத்தில்தான். அன்று பொதுவாக எதிர்மறை விமரிசனங்கள் எழுந்தன. மறுநாள் சுந்தர ராமசாமியிடம் ‘நீங்கள் கடுமையாக விமரிசிக்கும்போது வருத்தமாக இல்லை,
ஆனால் இவர்கள் விமரிசிக்கும்போது இவர்களெல்லாம் யார் என்று தோன்றுகிறது’ என்று சொன்னார். சுந்தர ராமசாமி அவர்கள் நாஞ்சில்நாடனின் எழுத்தின் மீதும் அவர் மீதும் அவரைவிட அதிகமாக பற்றி வைத்திருக்கிறார்கள் என்றும் விமரிசனம் அந்த எதிர்பார்ப்பிலிருந்து எழுவதே என்றும் சொன்னார். அந்தக் கூட்டத்தில்தான் கறாரான விமரிசகராக ராஜமார்த்தாண்டன் அறிமுகமானார்
ராஜமார்த்தாண்டன் கவிதைகள் எழுதியிருக்கிறார். இதழ்கள் நடத்தியிருக்கிறார். பெரிய இதழில் பணியாற்றியிருக்கிறார். ஆனால் கவிதை விமரிசகராகவே அவரது இடம் உறுதிப்பட்டிருக்கிறது. சென்னையில் இருந்த காலகட்டங்களில் குடிப்பழக்கத்தால் உடல் நலம் நேரம் ஆகியவற்றை பெரிதும் இழந்துவிட்டார். சில வருடங்களுக்கு முன்னர் அவர் மிக அபாயகட்டத்தில் இருந்தார். அத்துடன் குடும்பகவலைகளும் அவரை வாட்டின. இப்போது உடல்நலம் சீரடைந்துள்ளது. குடும்பநிலை சிறப்பாக இருக்கிறது. இப்போது அவர் முகத்தில் உள்ள
‘தெளிச்சம்’ எப்போதும் இருந்தது இல்லை.
இனி அவரிடமிருந்து மேலும் சிறந்த படைப்புகள் வரவேண்டும் என்றார். பூமிக்கு நிலவு
61 சதவீத முகத்தை மட்டுமே காட்டுகிறது, மீதி பகுதி காட்டப்படுவதேயில்லை. ராஜமார்த்தாண்டன் தன் முழுமையை இன்னும் வெளிப்படுத்தவில்லை. அது வெளிப்படவேண்டும் என்றார் நாஞ்சில்நாடன்.
சுரேஷ் குமார இந்திரஜித் ராஜமார்த்தாண்டன் மதுரையில் தினமணி உதவியாசிரியராக வேலைபார்த்த நாட்களில்தான் தனக்கு அறிமுகமாகி குடும்ப நண்பராக ஆனார் என்றார். அப்போது யாத்ரா இதழை நடத்திக் கொண்டிருந்த ஜெயபால், மணி ஆகியோருடன் இணைந்து அவரை சந்திக்க நேர்ந்தது. ஒரேதெருவில் வசித்தோம். இலக்கிய விவாதம் செய்வோம். ஒரு கட்டத்தில் ஒரு இலக்கிய அமைப்பை உருவாக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. இருவரும் இணைந்து சந்திப்பு என்ற நிகழ்ச்சியை நடத்த ஆரம்பித்தோம். அப்போது இரு பதிப்பகங்கள் மட்டுமே இலக்கிய நூல்களை வெளியிட்டன. க்ரியா ஒருசிலரது நூல்களை மட்டுமே வெளியிடும். ஆகவே அன்று இலக்கிய வெளியீட்டகமாக அணுகக்கூடியதாக இருந்தது மீரா நடத்திய ‘அன்னம்’ மட்டுமே. அன்னத்தின் புத்தக விற்பனைநிலையம் ஒன்று மேலமாசி வீதியில் ஒரு மாடியில் இருந்தது. அங்கே கூட்டங்களை நடத்தினோம்.
சுந்தர ராமசாமி பங்கேற்ற ஒருசந்திப்புக்கு அறைகொள்ளாத கூட்டம் வந்தது. அதைத்தொடர்ந்து காலச்சுவடு இதழுக்கு ஒரு இதழ் அறிமுகக் கூட்டமும் நடத்தினோம். உடனே ராஜமார்த்தாண்டன் அவரே பிரமிள் பங்கேற்கும் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டார். நான் பிரமிளை அப்படித்தான் சந்தித்தேன். பிரமிளுக்கு போடப்பட்டிருந்த அறையில் நானும் என் நண்பர் ஒருவருமாகச் சென்றபோது அவர் கையில் டீ கோப்பையுடன் உலவிக் கொண்டிருந்தார். என்னை பொருட்படுத்தவேயில்லை. சற்றுநேரம் பொறுத்தபின் நானும் நண்பரும் அறையில் கிடந்த ஒரு செஸ் பலகையை எடுத்து வைத்து விளையாட ஆரம்பித்தோம். பிரமிள் சற்றுநேரம் கழித்து அதை கவனித்தார். அருகே வந்து அமர்ந்து ஆலோசனைகள் சொன்னார். அப்படி அவர் எங்கள் உலகில் நுழைந்தார்
பிரமிள் சுந்தர ராமசாமியையும் வெங்கட் சாமிநாதனையும் கடுமையாக வசைபாடுவார். ராஜமார்த்தாண்டன் அதை ஏற்பவர் அல்ல. ஆனால் மாற்றுக்கருத்து சொல்பவனை பிரமிள் வெறுத்து ஆவேசமாகத் திட்டுவார். நாம் கேட்கமட்டுமே செய்ய வேண்டும். ஆனால் ராஜமார்த்தாண்டன் தன் கருத்தை தெளிவாகச் சொல்லிவிட்டு மௌனமாக இருப்பார். பிரமிள் ஊசி ஏற்றியபடியே இருந்தாலும் அசர மாட்டார். கடைசிவரை இம்மூவருடனும் ஒரே நட்புடன் இருந்தார் ராஜமார்த்தாண்டன். அதுவே அவரது இயல்பு என்றார் சுரேஷ்குமார இந்திரஜித்.
கவிஞர் சுகுமாரன், நான் அண்ணாச்சி என்று அழைப்பது இருவரையே. ஒருவர் விக்ரமாதித்யன் இன்னொருவர் ராஜமார்த்தாண்டன். இருவரும் பல ஒற்றுமைகள் கொண்டவர்கள். முறைபப்டி தமிழ் கற்று மரபிலக்கிய அறிமுகம் கொண்டவர்கள். இருவருமே வேட்டியுடன் காணப்படுபவர்கள்.இருவருமே தாடி வைத்தவர்கள். இருவருமே குடிகாரர்கள். என் வளர்ச்சியில் இருவருக்கும் ஒரு பங்குண்டு. என் முதல் தொகுப்பை வெளியிட ஊக்கபப்டுத்தி பிழைநோக்கியும் அளித்தவர் விக்ரமாதித்யனே. என் முதல் தொகுப்புவந்ததும் அதைக் கவனித்து கொல்லிப்பாவையில் முதல் விமரிசனம் வெளியிட்டவர் ராஜ மார்த்தாண்டன்
கடந்த பலவருடங்களில் ராஜமார்த்தாண்டன் எனக்கு தொடர்ந்து இலக்கிய முக்கியத்துவம் அளித்துஎ ழுதியிருக்கிறார். ஆரம்பகால காலச்சுவடு இதழில் அவர் நம்பிக்கையூட்டும் மூன்று கவிஞர்கள் என நான் ராஜசுந்தரராஜன் சமயவேல் ஆகியோரைப்பற்றி முக்கியமான ஒரு கட்டுரையை எழுதினார். எங்களில் பிற இருவரும் அதிகமாக எழுதவில்லை. ஆனால் கவிதையை ஒரு வாழ்வுமையமாகக் கொள்ள எனக்குத்தூண்டுதலாக இருந்தது அந்தக் கட்டுரையே.
பலவருடங்களுக்கு முன் மா.தட்சிணாமூர்த்தி காமத்தை மையமாக்கி ‘திவ்யதரிசனம்’ என்ற கவிதைநூலை கொண்டுவந்தபோது சுந்தரராமசாமியிடம் நான் அந்நூலை விமரிசனம்செய்து பேசினேன். அப்போது ராஜமார்த்தாண்டன் அதை நியாயப்படுத்தினார். பிறகு கேள்விப்பட்டேன் அந்நூலை வெளியிட்டது மட்டுமல்ல அட்டைப்படம் வரைந்ததும் ராஜமார்த்தாண்டன் தான் என்று. ஓவியம் கவிதை இரண்டுக்குமே நல்லகாலமாக ராஜமார்த்தாண்டன் கவிதைவிமரிசனத்துக்கு வந்து சேர்ந்தார்.
ராஜமார்த்தாண்டன் என் கருத்துக்களுடன் பெரும்பாலும் ஒத்துப்போகிறவர். ஆனால் அவ்வப்போது நாங்கள் கடுமையாக முரண்படுவதும் உண்டு. உதாரணமாக அவரது ‘கொங்குத்தேர் வாழ்க்கை தொகுதி இரண்டு’ பற்றி நான் காலச்சுவடு இதழில் கடுமையாக விமரிசனம் எழுதியிருந்தேன். அவர் அதிலேயே அதற்கு மறுப்பும் எழுதியிருந்தார். அப்படிப்பட்ட ஒரு விவாதம் கடும் மனக்கசப்பில் முடிவதே வழக்கம். ஆனால் இப்போது அவர் எனக்கு அண்ணாச்சிதான் என்றார் சுகுமாரன்.
விமரிசகரான ந.முருகேசபாண்டியன் மதுரையில் இருந்த நாட்களில் ராஜமார்த்தாண்டன் தன்னுடைய குடும்ப நண்பராக இருந்தவர் என்றார். ஆனால் அதற்குமுன்னரே ராஜமார்த்தாண்டன்னை தெரியும் அவர் ஆய்வுமாணவராக இருந்த நாட்களில், 36 வருடம் முன்பு, கோகயம் என்ற சிற்றிதழை நடத்தினார். அதற்கு நானும் சமயவேலும் சந்தா செலுத்தினோம். ஒரு விமரிசகனாக நான் உருவாவதற்குக் காரணமே ராஜமார்த்தாண்டன்தான். நான் குற்றாலத்தில் அவரை சந்தித்தபோது சுரேஷ்குமார இந்திரஜித் கதைக¨ளைப்பற்றி அவருக்கு நான் எழுதிய நீண்டகடிதத்தை அவரிடம் சுரேஷ் காட்டினார். அதை ராஜமார்த்தாண்டன் வாங்கி பையில் வைத்துக் கொண்டார். அது தினமனி கதிரில் ஒரு மதிப்புரையாக வெளிவந்தது. அது எனக்களித்த தன்னம்பிக்கையினால்தான் நான் தொடர்ந்து எழுதினேன்.
ராஜமார்த்தாண்டன் தன் இலக்கிய நிலைபாடுகளைச் சொல்வதில்லை. அவருடையது ரசனை சார்ந்த விமரிசனம். அவ்விமரிசனத்துக்கு எதிரான ஒரு அலை தமிழில் எழுந்தபோதும் அவர் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. எழுதுவது சிக்கலாக இருந்தால்தான் விமரிசனம் என்ற நிலை தமிழில் உருவானபோதும் அவர் பொருட்படுத்தவில்லை. தன் ரசனையிலும் வெளிப்பாட்டிலும் உறுதியாக இருந்தார் . அதுவே அவரது விமரிசன பங்களிப்பை உருவாக்கியது என்றார் முருகேச பாண்டியன்.
கடைசியாக நான் பேசினேன். ராஜமார்த்தாண்டனை ஒரு கவிதை விமரிசகராகவே முன்னிலைப்படுத்துவதாகச் சொன்னேன். அவரது
‘தமிழ் புதுக்கவிதை வரலாறு’ ‘கொங்குத்தேர் வாழ்க்கை தொகுதி இரண்டு’ ஆகியவை முக்கியமான நூல்கள். க.நா.சு வழிவந்த ரசனை விமரிசகர் ராஜமார்த்தாண்டன். தன் தேர்வுகளையும் ரசனையையும் மட்டும் சொல்லிவிட்டு ஆய்வையும் அலசலையும் நிகழ்த்துவதில் இருந்து விலவிநிற்கும் முறை இது. இவ்வகை ஆய்வு வெறும் சிபாரிசு என்று தோன்றலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலம் இந்த தேர்வுகள் முன்வைக்கப்படும்போது திட்டவட்டமான ஓர் அழகியல் கோணமும், அதன் பின்னால் உள்ள ஆளுமையும் தெளிவடைந்து வருகின்றன. அதுவும் முக்கியமான ஓர் இலக்கிய விமரிசன முறையே.
ராஜமார்த்தாண்டன் என்னுடைய விமரிசனக் கருத்துக்களை முழுமையாக மறுத்து வாதிட்டிருக்கிறார். என்னுடன் விவாதமும்புரிந்திருக்கிறார். ஆனால் நான் கவிதை பற்றி என் முதல் நூலை எழுதியபோது [உள்ளுணர்வின் தடத்தில், தமிழினி] அவருக்குத்தான் அந்நூலை சமர்ப்பணம் செய்தேன். வாசகனாக எந்தவிதமான தடையும் தராமல் படைப்பின் முன் நிற்பது என்பதே ராஜமார்த்தாண்டன் முன்வைக்கும் விமரிசன முறையாகும் என்றேன்
ராஜமார்த்தாண்டன் தன் ஏற்புரையில் இதுபோன்ற ஒரு சந்தர்ப்பம் இனி கிடைக்காது என்பதனால் தன்னை உருவாக்கியவர்களுக்கு நன்றி சொல்வதற்காக இந்த தருணத்தை பயன்படுத்திக் கொள்வதாகச் சொன்னார். விவசாயியாக இருந்த தன் தந்தை கடுமையான உழைப்பினால் தன்னை அறிவார்ந்த வேலைக்குப் போகச்செய்ததை நினைவுகூர்ந்தார். இலக்கிய அறிமுகம் செய்து ஆளாக்கியவர் பேராசிரியர் ஜேசுதாஸன். இலக்கிய ஆசானாக இருந்தவர்கள் பிரமிள்,சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன் ஆகியோர். ஓர் இலக்கிய ஆளுமையாக அறிமுகமாகி நெருக்கமான முன்னோடியாக வழிநடத்தியவர் ஜெயகாந்தன்.
தினமணி வேலைக்கு உதவியவர்கள் விக்ரமாதித்யன், வண்ணநிலவன்,அசோகமித்திரன் ஆகியோர். இலக்கிய நண்பர்களாக நெடுங்காலம் விளங்கியவர்கள் கட்டைக்காடு ராஜகோபாலன், எம்.வேதசகாயகுமார் ஆகியோர். சென்னை நாகராஜ் மேன்ஷனில் நெடுங்காலம் தங்கிய நாட்களில் அங்கே இலக்கிய விவாதங்களை அனுமதித்தவர் உரிமையாளர் நாகராஜ். ஒரு எழுத்தாளனாக உருவாகி அறியபப்ட்டிருப்பதற்குக் காரணமானவர் பதிப்பாளர் ‘தமிழினி’ வசந்தகுமார் .அனைவரையும் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.
தன்னுடைய குடும்பத்தை குறிப்பிட்ட ராஜமார்த்தாண்டன் தன் குடும்பத்திற்கு உருப்படியாக எதுவுமே செய்யாதவராக தான் ஆகிவிட்டதை வருத்தமான குரலில் சொன்னார். தன் மனைவிக்கு தன் மேல் கடுமையான கோபங்களும் வருத்தங்களும் இருந்தால் அது நியாயமே. ஆனால் அவர் மீது தனக்கு நன்றியே உள்ளது. ஒரு தந்தையாக எதுவுமே செய்யாவிட்டாலும்கூட தன்மேல் அளவற்ற பிரியமும் மரியாதையும் வைத்திருக்கும் பிள்ளைகளும் நன்றிக்குரியவர்களே என்று சொன்னபோது கண்ணீர் மல்கினார்.
எட்டரை மணிக்கு விழா முடிந்தது. விழாவில் குமரிமாவட்டத்தின் சிறப்புப்பானமாகிய சுக்குப்பால் அளிக்கப்பட்டது.
No comments:
Post a Comment