Monday, February 22, 2021
கமலா தாஸ் / கமலா சுராயா / மாதவிக்குட்டி
கமலா தாஸ் (மலையாளம்: കമല ദാസ്) என்ற இயற்பெயரைக் கொண்ட கமலா சுராயா அல்லது மாதவிக்குட்டி, (மார்ச் 31, 1934 - மே 31, 2009) இந்திய எழுத்தாளர். இவர் ஆங்கிலம், மற்றும் மலையாளத்திலும்ஏராளமான சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதியவர். கேரளாவில் இவரது சிறுகதைகள் மற்றும் இவரது தன் வரலாறு (என் கதா) ஆகியவை புகழ் பெற்றவை.
கமலாதாஸ் 1934 இல், கேரள மாநிலத்தில் மலபாரிலுள்ள 'புன்னயூர்க் குளம்' என்ற ஊரில் பிறந்தார். ஆங்கிலத்தில் மட்டும் கவிதைகள் எழுதியவர். 'கல்கத்தாவில் கோடைகாலம்' (1965), 'வம்சத்தவர்' (1967), 'பழைய நாடகக் கொட்டகை மற்றும் கவிதைகள்' (1972) முதலிய தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக, `என் கதா' (My Story) என்ற புத்தகம் பல்வேறு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது.
ஆங்கிலக் கவிதைக்காக சாகித்திய அகாதமி விருதினை 1981இல் பெற்றார். 'மாதவிக்குட்டி' என்ற பெயரில் மலையாளச் சிறுகதைகளையும் எழுதி வந்தவர்.
அவர்கள் வாழ்க்கையின் கடைசி நாட்களில் தீவிரமாக இந்து மதம், இந்து திரும்ப வேண்டும்.
பிறப்பு கமலா சுரயா (பொதுவாக கமலா தாஸ்)
மார்ச்சு 31, 1934
புன்னயூர்க்குளம், மலபார் மாவட்டம், மதராஸ் பிரெசிடென்சி, பிரித்தானிய இந்தியா
இறப்பு மே 31, 2009(அகவை 75)
பூனா, மகாராஷ்டிரா, இந்தியா
புனைப்பெயர் மாதவிக்குட்டி
தொழில் கவிஞர், சிறுகதை எழுத்தாளர்
நாடு இந்தியர்
இலக்கிய வகை கவிதை, சிறுகதை
*கமலாதாஸின் “என் கதை ” – மீனாள் நித்தியானந்தன்
நான் இங்கு பேசுவதற்கு எடுத்திருக்கும் நூல் கமலாதாஸ் எழுதியுள்ள அவரது சுயசரிதை நூலான ‘என் கதை’ என்ற நூலாகும்.இது கமலா தாஸ் அவரது தாய்மொழியான மலையாளத்தில் ‘என்டெ கதா ‘ என்ற தலைப்பில் எழுதியுள்ள நூலின் தமிழ் மொழி பெயர்ப்பாகும் . மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்ட நிர்மால்யாவின் தமிழ் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு வெளியீடாக இந்த நூல் இவ்வாண்டு வெளிவந்திருக்கிறது.
மலையாளத்தில் 1973 ஆம் ஆண்டு வெளியான இந்நூலின் மொழி பெயர்ப்பு 43 ஆண்டுகளுக்குப்பின் இவ்வாண்டுதான் வெளியாகியுள்ளது. இந்த மலையாள நூலில் 27 அத்தியாயங்கள் காணப்படுகின்றன. ஆனால், கமலாதாஸ் இதே சுயசரிதையை ‘My Story’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து 15 ஆண்டுகளுக்குப்பின் 1988 ஆம் ஆண்டு வெளிவந்தபோது அது 50 அத்தியாயங்கள் கொண்ட விரிவான நூலாக வெளியாகியது. . இது மலையாள மொழி பெயர்ப்பு பற்றிய குறிப்புகள்தான்.
கமலா தாஸ் மலையாளம். ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் எழுதும் ஆற்றல் கொண்டவராக இருந்திருக்கிறார்.மாதவிக்குட்டி என்ற புனைபெயரில் அவர் மலையாளத்தில் எழுதிய சிறுகதைகள் ‘மாதவிக்குட்டியுடெ கதகள் ‘ என்ற பெயரில் வெளியாகியுள்ளன.மலையாளத்தின் மிகச்சிறந்த முதல் ஐந்து எழுத்தாளர்களில் கமலாதாஸ் ஒருவராகக் கருத்தப்பட்டதாக மலையாள விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.கமலா தாஸ் என்ற பெயரில் அவர் எழுதிய ஆங்கிலக்கவிதைகள் அவருக்கு இந்திய ஆங்கிலக்கவிஞர்கள் வரிசையில் அவருக்கு தனியிடத்தை தேடிக்கொடுத்திருக்கிறது.நாவல்.சிறுகதை.கவிதை.சுயசரிதை .பத்தி எழுத்துகள் என்று இருபதிற்கும் மேற்பட்ட அவரது நூல்கள் வெளிவந்துள்ளன.மலையாள இலக்கியத்தில் கமலாதாஸ் தனிப்பெரும் ஆளுமையாகத் திகழ்கிறார்.
குடும்பம்
கமலாதாஸ் கேரளத்தின் புன்னையூர்க்குளத்தைச் சேர்ந்த பாரம்பரியம் மிகுந்த நாலப்பாட்டு நாயர் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை V.M.நாயர் மலையாளத்தில் “மாத்ருபூமி “பத்திரிகையை ஸ்தாபித்தவர்.கல்கத்தாவில் ஒரு பிரிட்டிஷ் போக்குவரத்துக் கம்பெனியில் மானேஜராக இருந்திருக்கிறார்.தாய் பாலமணி அம்மா ஒரு கவிஞராவார்.இவரின் பெரிய மாமன் நாராயண மேனன் ஆங்கில இலக்கியத்திலும், சம்ஸ்கிருத இலக்கியத்திலும் புலமைமிக்கவராகத் திகழ்ந்தார்.இந்திய பிரம்மஞான சபையில் முக்கிய அங்கத்தவராக இருந்தார்.மிகச்சிறந்த இலக்கியப்பின்புலத்தை கமலாதாஸ் கொண்டிருந்திருக்கிறார்.
1934 இல் பிறந்த கமலாதாஸ் கேரளத்திலும் ,கல்கத்தாவிலுமாக பெரும்பாலும் வீட்டிலேயே கல்வியைப்பெற்றிருக்கிறார்.அவரது 15 ஆவது வயதில் அவரது உறவுமுறைக்குள் மாதவதாஸ் என்ற Reserve Bank of India அலுவலரைத் திருமணம் செய்கிறார்.மூன்று ஆண் பிள்ளைகள்.1984 இல் லோக் சேவா கட்சியை ஆரம்பித்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
1984 இல் இலக்கியத்தில் நோபல் பரிசுக்காக பரிந்துரை செய்யப்பட்டார்.இலக்கியத்திற்கான அதி உயர் விருதுகளை கேரளாவிலும் அகில இந்திய ரீதியிலும் சர்வதேச அளவிலும் பெற்றிருக்கிறார்.University of Calicut கமலாதாஸின் இலக்கியப்பணியை கௌரவித்து D.Litt பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
அவரது கணவரின் மறைவுக்குப்பின் , சாதிக் அலி என்ற முஸ்லிம் லீக்கை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரை திருமணம் செய்தார். 1999 ம் ஆண்டு அவரது பிற்காலத்தில் கமலா சுரையா என்ற பெயரை ஏற்று இஸ்லாத்தை தழுவினார்.கமலாதாஸ் பற்றிய இந்தப் பின்னணித் தகவல்களுடன் அவரின் ‘என் கதை’ என்ற தன்வரலாற்றை அணுகுவது பொருத்தமாக இருக்கும்.
என் கதை
———–
கமலாதாஸ் தன் சுயசரிதையை ‘மலையாள நாடு’ என்ற மலையாள வார இதழில் எழுத ஆரம்பித்தபோது மலையாள இலக்கிய உலகில் மாத்திரமல்ல மலையாள சமூகத்திலேயே பெரும் புயலைக்கிளப்பியது.கமலாதாஸின் தந்தை அத்தொடரை நிறுத்துமாறு பணித்தார்.ஆனால் கமலாதாஸ் சுயசரிதைத்தொடரை நிறுத்தவில்லை.கமலாதாஸின் ‘என் கதை’ வெளியானபோது அந்த வாரஇதழின் பிரதிகள் 50 ஆயிரத்தால் அதிகரித்தது.1976 இல் ‘என் கதை’ நூலாக வெளியானபோது 11 மாதங்களில் 6 மறுபதிப்புகளைக்கண்டது.36000 பிரதிகள் விற்பனையாகித் தீர்ந்தன. “என் வாழ்க்கையில் நான் பல நூல்களை எழுதியிருக்கிறேன்.ஆனால் My story யை எழுதும்போது நான் அடைந்த மகிழ்ச்சியை வேறு எந்த நூலும் தந்ததில்லை ” என்கிறார் கமலாதாஸ்.மறுபுறம் இந்த நூல் என் சொந்த மண்ணில் வரவேற்கப்படவில்லை.என் நெஞ்சிற்கு நெருக்கமான எத்தனையோ விஷயங்களை நான் இந்த நூலால் இழக்க நேர்ந்தது என்றும் பதிவு செய்கிறார்.
0000000
எதிர்ப்பு
“என் எழுத்தால் என் உறவினர்கள் சங்கடப்பட்டார்கள்.மகிமை நிறைந்த என் குடும்பத்தின் பெயருக்கு களங்கம் கற்பித்துவிட்டதாகக் குற்றம் சாட்டினார்கள்.எனக்குப்பிரியமான அநேக விஷயங்களை நான் இழக்க இந்தப்புத்தகம் காரணமாக இருந்தது.நான் எழுதியது எதற்காகவுமோ, அல்லது நான் எவ்வாறு நடந்துகொண்டேன் என்பதற்காகவோ நான் ஒருபோதும் வருந்தியது கிடையாது.ஆனால்,’என் கதை’ என்ற இந்த நூலுக்கு மிகக் கடுமையான எதிர்ப்பு இருந்தது என்பதை சொல்லித்தானாக வேண்டும்.
எனது நூல் வெளியான பின், நான் திருவனந்தபுரத்திற்கு சென்றிருந்தபோது. நான் தங்கியிருந்த ஹோட்டலைச் சுற்றி ஜனங்கள் திரண்டு நின்று என்னை வேசை என்றும் ‘மாதவிக்குட்டி திரும்பிப்போ ‘ என்றும் உரத்துக் கூச்சலிட்டனர்.ஆனால், அவற்றை எல்லாம் நான் கடந்து வந்துவிட்டேன்.”அக்கினி பர்வதத்தை ஈரத்துவாலையால் மூடமுடியாது” என்று அவர் அதற்கு பதில் சொன்னார். அதே சமயம் கேரளாவின் அதிர்ஷ்டம் மிகுந்த பெண்மணி தான் என்கிறார் கமலாதாஸ்.மலையாளத்தின் மிகச்சிறந்த எழுத்தாளார் நான்.இன்னும் 50 வருஷங்களுக்கு என்னை மேவி எழுதக்கூடியவர்கள் யாரும் இல்லை என்றே சொல்வேன் என்கிறார் இவர். மலையாளத்தில் எழுத்திற்காக அதிகம் பணம் வாங்கும் எழுத்தாளர் நான் என்று கமலா தாஸ் ஒரு முறை கூறியுள்ளார்,
பாராட்டு
கமலா தாஸின் எழுத்துகளைப்பற்றி பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன,உலக இலக்கியத்தில் அவரது கவிதைகளை முன்வைத்துப் பாராட்டும் விமர்சகர்கள் உள்ளனர்.அமெரிக்கப்பெண் கவிஞரான சில்வியா பிளாத்துடன் கமலாதாஸை ஒப்பிட்டு ஆய்வுகள் நடந்துள்ளன,பெண்களின் நுண் உணர்வுகளை இவரைப்போல அநாயாசமாக சித்திரித்த இந்தியக்கவிஞர்கள் யாரும் இல்லை என்றே சில விமர்சகர்கள் கருதுகிறார்கள்.” கமலாதாஸின் ‘என் கதை’யைத்தவிர்த்து, ஒரு பெண்ணின் அகவாழ்க்கையை – அதன் அதன் சோகத்தனிமையுடனும், உண்மை அன்புக்கான அதன் தீராத வேட்கையுடனும், தன்னையே கடக்கும் அதன் விழைவுடனும், அதன் ஒழுங்கீனத்தின் நிறங்களுடனும், அதன் கொந்தளிக்கும் கவிதையுடனும் இந்த அளவு உண்மையுணர்வுடன் முழுமையாக வெளிப்படுத்திய ஒரு இந்திய சுயசரிதையை என்னால் நினைத்துப்பார்க்கவே முடிவதில்லை” என்கிறார் மலையாளக்கவிஞர் சச்சிதானந்தன்.
கமலா தாஸ் தந்தை வழி சமூகஅமைப்பை முற்றுமுழுவதாக நிராகரிக்கிறார் என்கிறார் சச்சிதானந்தன்.தன் அகங்காரத்திலும், அதிகாரத்திற்கான பேராசையிலும் , விஸ்தாரத்திலும் , கதாநாயக வழிபாட்டிலும் , வன்முறையிலும், யுத்தத்திலும் , மனிதரையும் இயற்கையையும் ஈவிரக்கமின்றி சுரண்டுவதிலும் ,அறிவு நுட்பங்களை துஷ்பிரயோகம் செய்வதிலும் மென்னுணர்வுக்கும் அனுபவத்திற்கும் மேலாக தர்க்கத்திற்கும் கோட்பாட்டிற்கும் மேன்மை வழங்குவதிலும் திளைத்துப்போன தந்தைவழி சமூகஅமைப்பை கமலாதாஸ் முற்றாக நிராகரித்ததாக சச்சிதானந்தன் கூறுகிறார்.
தீவிரமான படைப்புகளை வாசக சௌகரியத்துடன் வெளிப்படுத்தியவர் என்பதே மாதவிக்குட்டியை அல்லது கமலாதாஸை இன்றும் வாசிப்பிற்குரிய எழுத்தாளராக நிலைநிறுத்துகிறது.வாசகன் என்ற நிலையில் மட்டுமல்ல, எழுத்தாளன் என்ற நிலையிலும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள இருந்தன.மொழியைக் கச்சிதமாகவும் செறிவாகவும் கையாள்வது எப்படி என்பதை ச்சொல்லிக்கொடுத்த மறைமுக ஆசிரியர்கள் பலரில் அவரும் ஒருவர். மொழிசார்ந்து அவரிடமிருந்து பயின்ற பாடங்கள் இவை.இவற்றைவிடவும் பார்வை சார்ந்து அவருடைய எழுத்தின் மூலம் பெற்ற பாதிப்பையே முதன்மையானதாகக் கருதுகிறேன்.” என்கிறார் இந்த நூலிற்கு முன்னுரை எழுதியிருக்கும் கவிஞர் சுகுமாரன்.
கண்டனம்
இந்தப்புகழுரைகள் ஒருபுறமிருக்க, மறுபுறம் இவர் எழுதியதெல்லாம் குப்பை என்று சொல்பவர்களும் இல்லாமல் இல்லை.இவர் எழுத்து மிகச்சாதாரணமானது என்றும் காமத்தைத்தூண்டும் எழுத்து என்பவர்களும் உண்டு.” இடுப்பிற்கு கீழ் பகுதியைப்பற்றிய படுக்கையறை முணுமுணுப்பு என்று எழுதிய மலையாள விமர்சகர்களும் உண்டு.
ஜெயமோகன்
கமலாதாஸின் மீதான நாகரிகமற்ற – மிகக்கேவலமான குறிப்புகளை எழுதியிருப்பவர் ஜெயமோகன்.அதுவும் கமலாதாஸ் மறைவுக்குப்பின் அவர் எழுதிய அஞ்சலிக்குறிப்பு அது.ஜெயமோகன் எழுதுகிறார்:”கமலாவின் பிரச்சினைகளின் ஊற்றுமுகம் ஒன்றுதான்.அவர் அழகி அல்ல.கறுப்பான , குண்டான கிட்டத்தட்ட அவலட்சணமான பெண்.அழகிகளின் குடும்பத்தில் பிறக்கவும் நேரிட்டது,இந்தத் தாழ்வுணர்ச்சியில் இருந்து உருவான திரிபுபட்ட ஆளுமை அவருடையது.எங்கும் எப்போதும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் முனைப்பும் தணியாத விளம்பர வெறியும் கொண்டவர்.கமலா செய்தித்தாள்கள் தன்னைப்பற்றி எழுதுவதற்காக அவர் எதையும் செய்வார்.ஆபாசமாகப்பேசுவார்.ஒன்றும் தெரியாத மழலையாக நடிப்பார்.உயர்வாகக் கருதப்பட்டவைகளை உடைத்து வீசுவார்.கீழ்மைகளைப் போற்றுவார்.விபரீதமாகவும் தடாலடியாகவும் எதையாவது செய்வார்.ஒரு சிறு சந்திப்பில் கூட அப்படித்தான் நடந்து கொள்வார்.
என்ன வக்கிரம் இருந்தால் இறந்துபோன ஒரு இலக்கியப்பெரும் ஆளுமைக்கு இத்தகைய ஒரு அவமதிப்பான அஞ்சலிக் குறிப்பை ஜெயமோகன் எழுதியிருப்பார்.இத்தகைய ஒரு நபரிடம் கமலாதாஸின் சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பிற்கு முன்னுரை வாங்கிப்போட்டிருப்பது போன்ற அபத்தம் வேறு எதுவுமில்லை.
பழமைவாதிகள்
ஆசாரம் மிகுந்த நாயர் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தியின் மனம் திறந்த- அந்தரங்க வாழ்வு குறித்த எழுத்துகள் பாரம்பரியத்தில் தோய்ந்துபோன பழமைவாதிகளுக்கு எரிச்சலையும் ஆத்திரத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தியிருப்பதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. “மயக்க மாத்திரைகளைச் சாப்பிட்டுவிட்டு, அந்த மயக்க நிலையில் எழுதியவைதான் இவை” என்று அவரது தந்தையே சாட்சியம் கூறநேர்ந்தது. இதெல்லாம் அபத்தம் என்கிறார் கமலாதாஸ்.
“‘என் கதை’ வெளிவந்த காலம் முதல் மரணம் வரை அதீதமான பாராட்டு, கேவலமான தூஷணை” என்ற இரட்டைநிலை தொடர்ந்தது என்கிறார் சுகுமாரன்.இந்திய இலக்கிய உலகில் ஒரு பெண்ணின் ஏக்கங்கள்,பாலியல் சார்ந்த வேட்கைகளை கமலாதாஸைப்போல வெளிப்படையாக- துணிச்சலோடு எழுதியவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம்.
மலையாளத்தில் எழுதினால் என்ன, ஆங்கிலத்தில் எழுதினால் என்ன இம்மாதிரி விஷயங்களை ஏற்றுக்கொள்வதில் இந்திய மனம் ஒன்றாகவே இருக்கிறது என்கிறார் கமலாதாஸ்.
தந்தைவழி சமூக அமைப்பின் மீது – அந்த அமைப்பிற்குள் பெண் மூச்சுவிட முடியாமல் திணறும் அவஸ்தையைப்பற்றி கமலாதாஸ் காரசாரமான வாதங்களை முன்வைத்திருக்கிறார்.அவரது தந்தை, அவரது கணவர்,அவரது நாலப்பட்டு குடும்பத்தின் ஆண் மக்கள் அனைவருமே கொண்டிருந்த ஆணாதிக்கக் கொடுமையை கமலாதாஸ் தன் அனுபவத்திலேயே கண்டிருக்கிறார்.
தந்தை
தனது தந்தையை மிக்க கறாரானவர் என்றும் ஒரு குட்டிச்சர்வாதிகாரி என்றும் கமலாதாஸ் குறிக்கிறார்.ஒரு பிரிட்டிஷ் கார் கம்பெனியின் மானேஜராக பதவி வகித்த அவரது தந்தை கிழித்த கோட்டை யாரும் தாண்டிச்செல்லமுடியாது.மனைவி, குழந்தைகள் எல்லாம் அவருக்கு ஒரு பொருளே கிடையாது.தனது கம்பெனி வேலையைவிட அவர் வேறு எதனையும் கருத்தில் கொண்டதில்லை.
நிறைந்த ஆடைஅலங்காரங்களுடனும் நகைஅணிகளுடனும் வந்த தன் மனைவியை , தாலிக்கொடியைத்தவிர அவளின் சகல நகைகளையும் களைந்து, ஒரு விதவையைப்போல் கதர் ஆடையை அணிய வைத்து கொத்தடிமையாய் நடத்தியிருக்கிறார்.மலையாளத்தின் மிகச்சிறந்த கவிஞராகத்திகழ்ந்த தன் மனைவியை பிள்ளைபெறும் இயந்திரமாகவே பாவித்திருக்கிறார்.
கணவன்
தனது பதினைந்தாவது வயதில் மாதவதாஸ் என்பவரைத் திருமணம் முடிக்கிறார். சிறுபிராயத்திலிருந்தே குடும்ப ரீதியில் நெருக்கமாகத் தெரியுமென்றாலும் தன்னைவிட 20 வயது மூத்த அவருடன் அந்தத்திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்று தெரிவித்திருக்கிறார் கமலாதாஸ்.ஆனால், நாலப்பட்டு நாயர் குடும்பத்தில் ஒரு ஆண்மகனின் கட்டளையை ஒரு அபலைப்பெண் எவ்வாறு நிராகரிக்க முடியும்? திருமணம் முடிந்து, தன் கணவன் தன்னிடம் வெளிப்படுத்திய மூர்க்கமான காமவெறியினைக்கண்டு கமலாதாஸ் திகைத்துப்போகிறார்.தன் உடலைத்தழுவி,கூந்தலைக்கோதி,கைகளைத்தடவி, அன்பு செலுத்தவேண்டும் என்று ஏங்கிய ஒரு இளம் பெண்ணின் ஆசைக்கனவு எடுத்தஎடுப்பிலேயே சிதைந்துபோனது.
மூர்க்கமான காமத்தைத்தவிர தனது முதல் கணவரிடமிருந்து எந்த காதல் உணர்வையும் கமலாதாஸ் அனுபவித்ததில்லை.கமலா தாஸ் தனது சுயசரிதையில் கூறுகிறார்: “ஏற்கனவே என் கணவர் வேறு பெண்களுடன் பாலியல் உறவை வைத்திருந்தார்.அத்தகைய பராக்கிரமச் செயல்களைப்பற்றி என்னிடம் சொன்னார்.இந்த லீலைகளில் கைதேர்ந்த இருபது வயதிற்கு மேற்பட்ட விலைமாதர்களைப்பற்றிப் புகழ்ந்து பேசினார்.நான் சிறுத்துப்போவதாக உணர்ந்தேன்.”வீட்டுவேலைக்காரியுடன் உடலுறவு கொண்டதைப்பற்றி கமலா தாஸிடமே சொல்லியிருக்கிறார்.இதற்கும் மேலே அவரது கணவர் மாதவதாஸ் ஒரு gay ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடுள்ளவர் ஆவார்.
தனது ஆண் காதலர்களுடன் தன் கண்முன்னேயே கொஞ்சிக்குலவி,கதவைத்தாளிட்டு படுக்கை அறைக்குக்கொண்டு செல்லும் கணவரோடு கமலா தாஸ் வாழ்ந்திருக்கிறார். “திருமணத்தின் புனிதத்தில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா என்று கமலாதாஸிடம் கேட்டபோது, இல்லை,காதலின் புனிதத்தில் நம்பிக்கை இருக்கிறது என்று அவர் பதில் கூறினார்.”நான் மிகப்பலரைக்காதலித்தேன்.அதே போல் என்னையும் மிகப்பலர் காதலித்தனர்” என்று கமலா தாஸ் பகிரங்கமாகப் பிரகடனம் செய்தார்.
” சாரியை அணிந்து கொள்.
பெண்ணாக இரு.
மனைவியாக இருந்து கொள்.
தையல் வேலையைக்கற்றுக்கொள்.
சமைத்துப்போடு.
எப்போதும் வேலைகாரனுடன் சண்டை பிடித்துக்கொண்டிரு.
Fit in.
இதற்குள் உன்னைப்பொருத்திக்கொள்.”
என்று ஒரு கவிதையில் பேசுகிறார் கமலா தாஸ்.
இந்த நொந்துபோன வாழ்விற்கு எதிராகப் போர்க்கொடி தூக்குகிறார் கமலா தாஸ்.ஒரு கவிஞரின் கனவுகளுடன் காதல் உலகில் சிறகடித்துப் பறக்க முனைகிறார் கமலா தாஸ்.தன்னை ராதையாகவும் கிருஷ்ணனைக் காதலனாகவும் சிறுவயதிலிருந்தே கற்பிதம் செய்து கொண்டிருக்கிறார்.கிருஷ்ணனை தனது ஆத்மார்த்த காதலனாக உருவகித்து அவர் நிறையவே கவிதைகள் எழுதியிருக்கிறார்.
00000
காதல் உறவு
கேரளத்தில் தன்னுடன் படித்த லெஸ்பியன் மாணவி தன்னை முத்தமிட்டதிலிருந்து , வேலு, கோவிந்த குருப் ஆகியோரிலிருந்து தனக்கு ஓவியம் கற்றுத் தந்தவரிலிருந்து, வீடு கட்டித்தந்த கட்டிடக்கலைஞர்,பேனா நட்பில் உருவான இத்தாலியக்காரரான கார்லோ,பற்சிகிச்சை அளித்த பல்மருத்துவர் என்று எண்ணற்ற ஆண்களுடன் தான் கொண்டிருந்த காதல் உறவுகளை கமலா தாஸ் மிக வெளிப்படையாகவே தன் சுயசரிதையில் விவரிக்கிறார்.இந்தக்காதல் உறவுகள் சில ஒரு நாளிலேயே முடிந்துபோயிருக்கின்றன. சில உறவுகள் ஆண்டுக்கணக்கிலும் நீடித்திருக்கின்றன.
தன் எழுத்தின் மீது பொதுசன அபிப்பிராயம் எத்தகையதாக இருக்கிறது என்பதுபற்றி அவர் ஒருபோதும் அக்கறை கொண்டது கிடையாது.அவரது எழுத்துகளை பார்த்து நாயர் குடும்பங்கள் அஞ்சின.கமலாதாஸ் கட்டுப்பாடுகளும் ஆணாதிக்கமும் பொய்யான போலிமதிப்பீடுகளும் கொண்ட மலையாள சமூகத்தைப்புரட்டிப்போட்டார்.ஆணாதிக்கமுறைக்கு எதிரான கலகக்காரியாகத் திகழ்ந்தார்.
கிழவி
கமலா தாஸ் தன் சுயசரிதையில் பின்வருமாறு எழுதுகிறார்:
“சமுதாயத்தை அருவருக்கத்தக்க தோற்றம் கொண்ட கிழவியாக நான் காண்கிறேன்.பகைமை நிறைந்த மனம் படைத்தவர்களையும் பொய் சொல்பவர்களையும் ஏமாற்றுபவர்களையும் தன்னலவாதிகளையும் ரகசியக்கொலையாளிகளையும் இந்தக்கிழவி ஒரு கம்பளியால் பாசத்தோடு போர்த்துகிறாள்.இந்தக்கம்பளியின் ரகசியத்தை வெறுப்பவர்கள் வெளியில் கிடந்து குளிரால் நடுங்குகிறார்கள்.பொய்களைச் சொல்லியும் நடித்தும் நம்பிக்கைத்துரோகமிழைத்தும் பலரையும் வெறுக்க வைத்தும் இந்த ஒழுக்கப் போர்வைக்கடியில் கதகதப்பும் தன்னலமும் கொண்ட ஓரிடத்தை நான் பெற்றிருக்கலாம்.ஆனால், நானோர் எழுத்தாளராகி இருக்கமாட்டேன்.எனது குரல்வளையை அடைத்துக் கொண்டிருக்கும் உண்மைகள் ஒருபோதும் வெளிச்சம் பெற்றிருக்காது” இது கமலா தாஸின் சுயநிலை விளக்கமாகும்.
தான் எழுத வராமல் போயிருந்தால் தனது வாழ்க்கை என்ன மாதிரி இருந்திருக்கும் என்பது பற்றி கமலாதாஸ் இப்படிக்கூறுகிறார்:”நான் ஒரு மத்தியதர குடும்பத் தலைவியாக இருந்திருப்பேன்.கயிற்றுப்பையை தூக்கிக்கொண்டு , தேய்ந்துபோன செருப்புடன் மரக்கறிக்கடைக்கு போய் வந்து கொண்டிருந்திருப்பேன்.பிள்ளைகளை போட்டு அடித்து வளர்த்திருப்பேன்.என்னுடைய கணவரின் மலிவான கச்சையை கழுவித்தோய்த்து ,ஒரு தேசியக்கொடியைப்போல பால்கனியில் காயப்போட்டிருப்பேன்.”
வேலைக்காரி
நாலப்பாட்டு நாயர் குடும்பத்தில் வேலைக்காரியாக இருந்த ஒரு பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வை கமலாதாஸ் ஒரு கவிதையில் விவரிக்கிறார்:
கர்ப்பிணியான நானி என்ற வேலைக்காரி
ஒரு நாள் மலசலகூடத்தில் தூக்கில் தொங்கினாள்
மூன்று மணி நேரமாக பொலிஸ் வரும்வரை
அவள் உத்தரத்தில் தொங்கினாள்.
ஒன்று அல்லது இரண்டு வருஷம் கழிந்து என் பாட்டியிடம் அந்த வேலைக்காரியைப்பற்றிக்கேட்டேன்.
பாட்டி, நானியை உனக்கு நினைவிருக்கிறதா?
என்னைக் கிணற்றருகே வைத்துக் குளிப்பாட்டிய அந்தக்கறுத்த –
உருண்டு திரண்ட வேலைக்காரியை நினைவிருக்கிறதா?
தனது மூக்குக்கண்ணாடியை சரி செய்து கொண்ட பாட்டி
என்னை உற்றுப்பார்த்துவிட்டுக் கேட்டாள்:
நானி? யாரது?
நாயர் குடும்பங்களில் கர்ப்பிணி ஆக்கப்பட்ட வேலைக்காரிகளின் மரணத்திற்கு ஒரு மரியாதையும் இல்லை.இந்த ஆணாதிக்கக்கொடுமைகளுக்கு எதிரான கிளர்ச்சியின் ஒரு அம்சமாகவே அவரது பாலியல் சார்ந்த எழுத்துகள் அமைகின்றன.
இந்திய சமூக,கலாசார அமைப்பின் அடுக்குகளை அவர் கலைத்துப்போட்டார்.அவரது எழுத்துகளில் ஒடுக்கப்பட்ட பெண்களின் குரல்கள் எதிரொலித்தன.ஒழுக்கத்தின் பெயரால் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்த அம்சங்களை அவர் வெளியில் கொணர்ந்தார்.
பெண்களின் வலிகளை, அவர்களது நிலைப்பாடுகளை, அவர்களின் புரிதல்களை,அவர்களது உலகப்பார்வையை கமலாதாஸ் வெளிப்படுத்தினார்.ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே எழுப்பப்பட்டிருந்த வலிய இரும்பு மதில்களை அவர் உடைத்து நொறுக்கப்பார்த்தார் .பாலியல்தான் அவரது சிந்தனையில் கவிந்து கிடந்தது என்று கூறிவிடமுடியாது.
அவர் ஒரு இலட்சிய ஆணுக்காக ஏங்கினார்.
அவர் ஒரு மனோரதியக்காதலுக்காக ஏங்கினார்.
தன்னில் அக்கறை காட்டும் ஆணுக்காக, தன் கரங்களில் தன்னை அரவணைத்துப்பாதுகாக்கக்கூடிய ஒரு ஆணுக்காக அவர் ஏங்கினார்.
00000
ஏக்கமும் துயரமும்
தனக்கு நிராகரிக்கப்பட்ட அன்பிற்காக காலமெல்லாம் ஏங்கியிருக்கிறார்.
அவர் தன் வாழ்வில் அன்பைத்தவிர வேறு எதனையும் இப்படி யாசித்ததில்லை .தனது எண்ணக்கனவுகளை ,ஆசை எழுச்சிகளை , தன் பலவீனங்களை, தன் கடூரமான முரண்பாடுகளை மிக நேர்மையாக இந்த நூலில் முன்வைக்கிறார்.தன் 40 ஆண்டு கால எல்லையில் ஏற்பட்ட மனப்போராட்டங்களை தயக்கமின்றி எழுத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
உண்மைக்கும் புனைவிற்கும் இடையில், புராணங்களுக்கும் யதார்த்தத்திற்கும் இடையில்,கனவுகளுக்கும் நாளாந்த நடப்புகளுக்கும் இடையில், அவர் மாறி மாறிப்பயணிக்கிறார்.வாழ்வின் அர்த்தத்திற்கும் அர்த்தமின்மைக்கும் இடையில் அவர் குழம்பித்தவிக்கிறார்.தற்கொலையையும் நாடமுனைகிறார்,நீரில் அமிழ்ந்து மரணிக்கும் ஆவல் அவரைப்பின் தொடர்கிறது.
அவருக்கு மிக நெருக்கமாக இருந்த பாட்டியின் மறைவு அவரைப்பெரிதும் துயரில் ஆழ்த்துகிறது.அவரைப்பீடித்த தொடர் நோய்களும் , மகனின் மோசமான உடல்நிலையும் போதிய வருமானம் இல்லாத நிலைமைகளும் அவர் மனதை வாட்டியிருக்கின்றன.அமைதியும் நிம்மதியும் குலைந்த சூழலில் , கொந்தளிக்கும் கடலின் நடுவில் சுழல்வதுபோல் சிக்கி,வாராத துணை நாடி அலை மோதுகிறார்.சூறாவளியில் தெப்பமாக மிதக்கிறார்.
இறை நம்பிக்கையில் அதீத விசுவாசம் கொண்டிருந்திருக்கிறார்.
அவ்வப்போதுள்ள மனநிலைமைகளில் கருத்துகளை உருவாக்குகிறார்.அவை பின்னரோ முன்னரோ முரண்பட்டுக்கொள்வதைப்பற்றி அவருக்கு அக்கறை இல்லை.ஏறுக்குமாறான கருத்துகளை அள்ளித்தெளித்திருக்கிறார்.
அதிரடியான சர்ச்சைகளை அவர் விலை கொடுத்து வாங்கிக்கொண்டிருக்கிறார்,
நீட்ஷே
கமலாதாஸ் இந்த நூலில் எழுதுகிறார்:
மனித மனத்தை முழுமையாகவும் நுட்பமாகவும் கற்றுக்கொள்ள நான் எப்போதும் முயன்றதுண்டு.விதியை எதிர்த்தும் பின்னர் விதியின்மையை எதிர்த்தும் முடியும் ஓர் அற்ப வாழ்க்கையின் கதை இது.தத்துவவாதியான நீட்ஷே ஒருமுறை கூறினார்:ஓர் எழுத்தாளர் தனது ரத்தத்தால் எழுதிய வார்த்தைகளுக்கு மட்டுமே மதிப்பளிப்பேன்.ரத்தம் கலப்படம் அற்றது.அதில் அவனுடைய ஆத்மாவின் சாரம் கரைந்திருக்கிறது.அது ஆத்மார்த்தத்தின் குறியீடாகும்.
எனது மனத்தை உற்று நோக்கியபடி யதார்த்தவாதிகளும் நீதிமான்களும் நலம்விரும்பிகளும் முணுமுணுப்பதைப்பொருட்படுத்தாமல் மிகுந்த நேர்மையுடன் இக்கதையை எழுதுவதற்கான வலிமையையும் தைரியத்தையும் தருமாறு இன்று ஸ்ரீ கிருஷ்ணனை பிரார்த்திக்கிறேன்.மென் உணர்வு மிக்க கவிஞர் என்ற வகையில் உள்மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை நாடிபிடித்து எழுதும் ஆற்றல் அவருக்கு வாய்த்திருக்கிறது.”நான் மூன்று மொழிகளைப்பேசுகிறேன்.இரண்டு மொழிகளில் எழுதுகிறேன். ஒரு மொழியில் கனவு காண்கிறேன் என்கிறார் கமலாதாஸ்.
00000000
இலங்கை
இறுதியாக, கமலாதாஸின் இலங்கை அனுபவத்தோடு இந்த உரையை முடித்துக்கொள்ள விரும்புகிறேன்.Asia Net News தொலைக்காட்சிக்காக கமலாதாஸ் மலையாளத்தில் வழங்கிய பேட்டியை youtube இல் நான் பார்க்கக் கிடைத்தது.
1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற இனக்கலவரத்தின்போது, கமலாதாஸ் தனது கணவருடன் கொழும்பில் இருந்திருக்கிறார்.இரண்டு ஆண்டுகள் அவர் இலங்கையில் இருந்திருக்கிறார்.விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையே நிகழ்ந்த மோதலைப்பற்றியும், தனக்கு அயலிலேயே ஒரு தமிழர் கொல்லப்பட்ட சம்பவத்தை தான் கண்கூடாகப்பார்த்ததாகவும் அந்த மலையாளப்பேட்டியில் கமலாதாஸ் கூறுகிறார்.தனது நிறத்தாலும் தோற்றத்தாலும் கமலாதாஸ் தமிழராக சந்தேகப்பட்டு அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்.தமிழர்கள்மீது சிங்கள இனவாதிகள் நடத்திய கொடூர இனவெறித்தாக்குதலை கமலாதாஸ் தனது ஆங்கிலக்கவிதைகளில் பதிவு செய்திருக்கிறார்.
Fear
The Sea at Galle Face Green
Smoke in Colombo
After July
The New Sinhala Films
ஆகிய கவிதைகள் ஜூலை இனக்கலவரத்தில் தமிழர்கள்மீது நடத்தப்பட்ட வன்முறையைப் பேசுகின்றன.
உன்னத பௌத்த சாரத்திலிருந்துதான் இந்த இனப்பிரச்சினைக்கு முடிவு காணமுடியும் என்று கமலாதாஸ் அந்த மலையாளப் பேட்டியில் கூறுகிறார்.ஆனால், அத்தகைய தீர்வு வெறுங்கனவாய் முடிந்துபோவதை அவர் உணர்ந்திருப்பார்.
2009 இல் புனேயில் தனது 75 ஆவது வயதில் அவர் மரணமுற்றபோது அவர் எப்போதும் பேசிவந்த ஆத்மா வெற்று உபாதைகளிலிருந்து விடுபட்டு, ஓய்ந்து அமைதி பெற்றிருக்கும் என நம்புகிறேன். கமலாதாஸின் “என் கதை” என்ற சுயசரிதை இந்தியப் பெண்களின் சரித்திரத்தில் என்றும் பேசப்படும் நூலாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
0000000
கடந்த 09 ஜூலை 16 இல் , தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம் நடாத்திய , நான்கு பெண்களின் எழுத்துக்களை முன்வைத்து…பெண்களால் நடாத்தப்பட்ட உரையாடல் நிகழ்வில் ஆற்றப்பட்ட உரையின் எழுத்து வடிவம்.
பிரபல மலையாள எழுத்தாளர் கமலாதாஸ் மறைவு!
இந்திய, கேரள மற்றும் ஆங்கில இலக்கியத்துறையில் நன்கறியப்பட்டவர் எழுத்தாளர் கமலாதாஸ். மலையாளத்தில்
மாதவிக்குட்டியாகவும், ஆங்கிலத்தில் கமலாதாஸ் ஆகவும் அறியப்பட்ட படைப்பாளியான கமலாதாஸ் சர்வதேச மற்றும் தேசிய அளவில் விருதுகள் பல பெற்றவர். "என்டகதா" (என்னுடைய கதை) என்ற பெயரில் இவர் எழுதிய சுயசரிதை கேரள இலக்கிய உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆங்கிலத்திலும் 'Ny Story' என்னும் பெயரில் வெளியானது. 1984இல் இலக்கியத்திற்கான நோபல் விருதுக்காக இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 1999இல் இஸ்லாம் மததிற்கு மாறிய இவர் தனது பெயரை கமலா சுரையா என மாற்றிக் கொண்டார். புனேயில் தனது மகளுடன் வசித்து வந்த கமலாதாஸ் கடந்த ஒரு மாதகாலமாக உடல் நலமின்றியிருந்தார். இன்று அதிகாலை (மே31, 2009) அங்குள்ள ஜகாங்கீர் மருத்துவமனையில் காலமானார். இணையத்தில் மீள்பிரசுரம் செய்யப்பட்ட அவரது படைப்புகள், பேட்டி ஆகியவற்றை அவரது நினைவாக இங்கு மீள்பிரசுரம் செய்கின்றோம்.
மீள்பிரசுரம்: கேரளத்தின் புகழ் பெற்ற எழுத்தாளர் மாதவிக்குட்டி. கமலாதாஸ் என்னும் பெயரிலும் கவிதைகள், சிறுகதைகள் எழுதியுள்ளார். தன்னுடைய வெளிப்படையான பேச்சு மற்றும் எழுத்தினால் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தியவர். சமீபத்தில் இசுலாமிய மதத்துக்கு மாறி பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறார். அவரது கவிதை மூலம் தோழியில் பிரவேசிக்கிறார். இக் கவிதைகளைத் தமிழாக்கம் செய்திருப்பவர் எழுத்தாளர் ஆர். சிவக்குமார்.
ஒரு முன்னுரை
அரசியல் எனக்குத் தெரியாது.
ஆனால் அதிகாரத்திலிருப்பவர்களின் பெயர்கள் தெரியும்.
நேருவில் தொடங்கி அவர்களின் பெயர்களை
வாரத்தின் நாட்களைப் போல, மாதங்களின் பெயர்களைப் போல
அடுக்க முடியும் என்னால்.
மலபாரில் பிறந்த பழுப்பு நிற −ந்தியப் பெண் நான்.
மூன்று மொழிகள் பேசுகிறேன்
இரண்டில் எழுதுகிறேன்
ஒன்றில் கனவு காண்கிறேன்.
அவர்கள் சொன்னார்கள்:
ஆங்கிலத்தில் எழுதாதே, அது உன் தாய்மொழி அல்ல.
விமர்சகர்களே, நண்பர்களே,
வீட்டிற்கு வரும் ஒன்றுவிட்ட சகோதர, சகோதரிகளே
என் வாழ்க்கையில் தலையிடாமல் இருக்கக் கூடாதா?
நான் விரும்பும் மொழியில்
நான் ஏன் பேசக் கூடாது?
நான் பேசும் மொழி எனதாகிறது.
அதன் திரிபுகள், அதன் விநோதம்
எல்லாம் என்னுடையவை, என்னுடையவை மட்டுமே.
என் மொழி பாதி ஆங்கில மயம், பாதி இந்திய மயம்.
நகைப்புக்குரியதாகப் படலாம்,
ஆனால் அது நேர்மையானது.
என் அளவுக்கு மனிதத்தன்மையுடையது.
இதெல்லாம் உங்களுக்குப் புரியவில்லையா?
என் இன்பங்களை, என் ஏக்கங்களை,
என் நம்பிக்கைகளை அது பேசுகிறது.
காகங்களுக்குக் கரைதல் எப்படியோ
சிங்கங்களுக்கு கர்ஜனை எப்படியோ
அப்படி அது எனக்கு.
மனிதப் பேச்சு அது.
எங்கோ இல்லாமல் இங்கிருக்கும் மனதின் பேச்சு.
பார்க்கிற, கேட்கிற, விழிப்பு நிலையிலுள்ள மனது அது.
புயலில் மரங்களின் அல்லது பருவ கால மேகங்களின்
அல்லது மழையின் அல்லது சுடர் விடும் ஈமத்தீயின்
தொடர்பற்ற முணுமுணுப்புகளின்
செவிட்டுக் குருட்டுப் பேச்சல்ல அது.
நான் குழந்தையாயிருந்தேன்,
பிறகு அவர்கள் என்னிடம் சொன்னார்கள்
நான் வளர்ந்து விட்டதாக -
நான் உயரமானதால், கைகால்கள் பருத்ததால்,
ஓரிரண்டு இடங்கள் ரோமம் துளிர்த்ததால்.
நான் காதலைக் கேட்டேன், வேறெதுவும் கேட்கத் தெரியாததால்.
பதினாறு வயது இளமையை அவன்
படுக்கையறைக்குள் இழுத்துச் சென்று மூடினான் கதவை.
அவன் என்னை அடிக்கவில்லை
ஆனால் சோகமான என் பெண்ணுடன் அடிபட்டதாய் உணர்ந்தது.
என் மார்பகங்களின், கருப்பையின் பாரம்
என்னை நசுக்கியது.
பரிதாபமாக சுருங்கினேன் நான்.
பிறகு.... ஒரு சட்டையையும்
என் சகோதரனின் கால்சட்டையையும் அணிந்தேன்,
என் தலைமுடியைக் கத்தரித்துக் கொண்டேன்,
என் பெண்மையை நிராகரித்தேன்.
அவர்கள் சொன்னார்கள்:
சேலை உடுத்து, பெண்ணாயிரு, மனைவியாகு.
பூத்தையல் வேலை செய், சமையல்காரியாகு,
வேலைக்காரிகளோடு சண்டையிடு.
பொருந்து, சமூகத்தோடு இணைந்து கொள்
என மனிதர்களை வகைப்படுத்துபவர்கள் கத்தினார்கள்.
சுவர்களின் மீது உட்காராதே.
திரைச்சீலையிட்ட ஜன்னல்களின் ஊடே நோட்டமிடாதே,
ஆமியாக அல்லது கமலாவாக இரு.
மாதவிக்குட்டியாக இருப்பது இன்னும் நல்லது.
ஒரு பெயரை, ஒரு வாழ்க்கைப் பங்கைத்
தேர்ந்தெடுக்க வேண்டிய நேரமிது.
பாசாங்கு விளையாட்டுகளில் ஈடுபடாதே.
மனநோயாளி மாதிரி நடந்துகொள்ளாதே,
காமம் நிரம்பியவளாக −ருக்காதே.
காதலில் மோசம் போகும்போது
சங்கடம் தரும்படி அழாதே.
நான் ஒருவனைச் சந்தித்தேன், காதலித்தேன்.
எந்தப் பெயர் சொல்லியும் அவனைக் கூப்பிட வேண்டாம்.
ஒரு பெண்ணை நாடும் எல்லா ஆண்களையும் போன்றவன்தான் அவன்,
காதலைத் தேடும் எல்லாப் பெண்களையும் போல நான் உள்ளது போல.
அவனில்..... நதிகளின் பசி வேகம்
என்னில்..... கடலின் சோர்வில்லாக் காத்திருத்தல்
நான் ஒவ்வொருவரையும் கேட்கிறேன், ''நீ யார்?''
''நான்தான் அது'' பதில்
''நான்'' என்று அழைத்துக் கொள்பவனையே
எப்போதும் எங்கும் பார்க்கிறேன்
உறையில் வாளைப் போல
உலகில் தன்னை இறுகப் பொருத்திக் கொண்டவன் அவன்.
அந்நிய நகரங்களின் உணவு விடுதிகளில்
நடுநிசியில் தனியாக பானங்களைக் குடிப்பவள் நான்தான்,
சிரிப்பவள் நான்தான்,
காதலித்து பின் அவமானப்படுபவள் நான்தான்,
தொண்டையில் பிதற்றலுடன் இறந்து கொண்டிருப்பவள் நான்தான்.
நான் பாவி
நான் புனிதமானவள்
அன்பிற்குரியவள் நான்
வஞ்சிக்கப்பட்டவள் நான்
உங்களுக்கில்லாத இன்பங்கள் எனக்கில்லை
உங்களுக்கில்லாத துன்பங்கள் எனக்கில்லை
நானும் என்னை ''நான்'' என்றே அழைத்துக் கொள்கிறேன்.
http://archives.aaraamthinai.com/women/oct2000/oct03a.asp
'பெட்டை' வலைப்பதிவிலிருந்து...
கமலா தாஸ்
முன்அனுமானங்கள், பரிந்துரைப்புகள் எதுவுமின்றி -ஒரு வெகுஜன இதழில்- படித்த சிறுகதையொன்றை எழுதியவராகவே கமலா தாஸ் (Kamala Das)அறிமுகமானார்.
அதுவரையில், கதையென்பதைத் தவிர சிறு சலனம், பதில்வினை எனவொரு அருட்டலையும் தந்திராத எத்தனையோ படைப்புகளை கடந்து சென்றதேயுண்டு; தனது கதைகளூடாக, துரோகத்தை அதன் கொடூரத்தை தயவுதாட்சண்யமே இல்லாத அதன் இருப்பை, கமலா தாஸ் போல அடித்தவர்கள் யாரும் தெரியாது.
பொய்கள் என்கிற அந்தக் கதையில் வந்த கதாபாத்திரங்கள் குடும்பம், காதல், உறவு இவை தொடர்பாக வெளியுலகம் புனைந்தவற்றிற்கு எதிரானதாக இருந்தது. பிள்ளையை தகப்பனுடன் விட்டுவிட்டு வேலைக்குப்போகிற தாய். தாய் சென்ற பிறகு, வருகிற அப்பாவின் காதலி(கள்?);, அவர்கள்
அப்பாவோடு இருப்பதை –அம்மா வருகிற நேரத்திற்குமுன் போய்விடுவதை- பார்க்கும் பிள்ளை; அந்தக் காதலிகள் பிள்ளையை அணைத்தும் கொஞ்சியும் இனிப்புகள் தந்து செல்வார்கள். பிள்ளையின் பார்வை மட்டும்தான் அங்கிருக்கும். இதை பிள்ளை தாயிடம் `தன்னுடைய மொழியில்` இனிப்புகளின்/அவர்கள் அணிந்து வந்த ஆடைகளின் வாசனையைக் குறிப்பிட்டுச் சொல்லும்போதெல்லாம்,
‘பொய்’ சொல்வதாக வரவர அவன் பொய்கள் கூடுவதாக தகப்பன் சொல்லுவார், பொய் கூடக்கூட அடிப்பாரோ என்னவோ! தாய்
அமைதியாக அவனிடம் அவன் சொல்லுகிற கதைகளைக் கேட்டபடி, ஏதேனும் கனவு கண்டடினியோடா என தடவிக் கொடுப்பாள். ‘உண்மையாத்தான்’ என அழுவான், கதையின் முடிவு வரை!
புரட்சிகரமான கண்ணோட்டத்தில் தென்பட்ட உலகிலே, ஒருபக்கம் அந்தக் கணவனை ‘ஆம்பிளை’ என நாலு வசனம் பேசி, இரண்டு சாத்து சாத்தி ஒரு புறமா தூக்கித் தொங்கவிட்டும், இன்னொரு பக்கம், அவனது ‘கள்ளக்காதலிற்கான’ சாப/பாப/பழி வார்த்தைகளை கதைபூரா இறைத்தும் வாசக (என்!) மனத்தைச் சாந்திப்படுத்தாமல், வாழ்வின் இயல்பாய், வலு சாந்தமாய், ஒரு கதையை அத்தகைய கருவில் படித்தது அதுதான் -போதாக்குறைக்கு- முதல் முறை. நெடுநாள் ‘அந்தப் புள்ள எப்ப தாயிட்ட சொல்லீ… தாய் நம்பீ… (பிறகாவது என் மனச்சாந்திப்படும் ‘உலுக்கல்கள்’ நடக்காதா?)’ எண்டு அருட்டிக்கொண்டே இருந்தது அது. கதையைப் புரிந்துகொள்வது, தனியே தகப்பனோட பொய்கள்/களவு என்பதாக அல்ல; அந்தச் சிறுவன் வளர்ந்து, விபரம் புரிந்து, ‘உண்மை’யைச் சொல்கையில் (காலம் தாமதமாகிவிடும்) அந்த உண்மை’க்கு பெறுமதி இருக்கப்போவதில்லை என்பதும், அப்படியானபோது, அதன்மேல் சாபங்களோ ‘ஒழுங்காக்கும் தேவையோ’ இல்லை என்பதும். அப்போ, குடும்பம், உறவுகள் இவைகளுPடாக
உலகம் காவுற உண்மை என்ன அது எவ்வளவு போலியானது?
இந்தக் கேள்விகளாக, `உண்மை`யை/`உண்மை`யான எழுத்தைப் பற்றியதான உரையாடலில் கமலா தாஸ் வருகிறார். அம்பையின்
கட்டுரைகள் மற்றும் சில படைப்புகள் எவ்வளவு கவர்ந்தனவோ, ஒப்பிடவியலா அளவில் மிகவாய்ப் பிடித்தது கமலா தாஸை, ‘மலபாரில் பிறந்த பழுப்பு நிற இந்தியப் பெண்’ என்று தன்னை அறிமுகப்படுத்திய கிறுக்குத்தனங்கள் நிறைந்த அவர், இயல்பு மிகுந்த மனிதர்களை நேசிக்கிற எல்லோருக்கும் பிடிக்கக்கூடியவராகவே இருப்பார். அதிலும் தம்முடைய கிறுக்குத்தனங்களை சமூகத்தின் பாசாங்குகளோடு
ஒத்திசைந்து மறைக்க முனையாமல் வெளிப்படுத்துகிறபோது அது அந்த எழுத்தாளர்களை சுவாரசியமானவர்களாக நம்மை ஒத்தவர்களாக உணர வைக்கிறது. -விபரம் தெரியாத வயதுகளில் குளியலறை சொற்களை சொல்லி ‘பெரியவர்களை’ குழந்தைகள் அதிர்ச்சி ஊட்டுமாப்போல- பாசாங்கான உலகத்தின் மீது, தமது கிறுக்குத்தனங்களால் அதிர்ச்சி தருகிறார் இவர். பலவந்தமாய் தமக்கு ஒவ்வாத கருத்துகளுக்குள் தம்மை அடைத்து வைத்துக்கொண்டு தமக்கென ஒரு பிம்பத்தை உருவாக்குகிற எழுத்தாளர்கள் போரடிக்கக்கூடியவர்கள், தன்னை (சரியோ தவறோ) அத்தகைய அதிர்ச்சியூட்டல்களூடாக வெளிக்காட்டி வருபவர், தன் அறிமுகத்தில் இவ்வாறு எழுதுகிறார் (கவிதை: ஒரு முன்னுரை):
… நான் குழந்தையாயிருந்தேன்,
பிறகு அவர்கள் என்னிடம் சொன்னார்கள்
நான் வளர்ந்து விட்டதாக –
நான் உயரமானதால், கைகால்கள் பருத்ததால்,
ஓரிரண்டு இடங்கள் ரோமம் துளிர்த்ததால்.நான் காதலைக் கேட்டேன், வேறெதுவும் கேட்கத் தெரியாததால்.
பதினாறு வயது இளமையை அவன்
படுக்கையறைக்குள் இழுத்துச் சென்று மூடினான் கதவை.
அவன் என்னை அடிக்கவில்லை
ஆனால் சோகமான என் பெண்ணுடல் அடிபட்டதாய் உணர்ந்தது.
என் மார்பகங்களின், கருப்பையின் பாரம்
என்னை நசுக்கியது.
பரிதாபமாக சுருங்கினேன் நான்.
பிறகு… ஒரு சட்டையும்
என் சகோதரனின் கால்சட்டையையும் அணிந்தேன்,
என் தலைமுடியைக் கத்தரித்துக் கொண்டேன்,
என் பெண்மையை நிராகரித்தேன்.
அவர்கள் சொன்னார்கள்:
சேலை உடுத்து, பெண்ணாயிரு, மனைவியாகு.
பூத்தையல் வேலை செய், சமையல்காரியாகு,
வேலைக்காரிகளோடு சண்டையிடு.
பொருந்து, சமூகத்தோடு இணைந்துகொள்
என மனிதர்களை வகைப்படுத்துபவர்கள் கத்தினார்கள்:
”சுவர்களின் மீது உட்காராதே
திரைச்சீலையிட்ட ஜன்னல்களின் ஊடே நோட்டமிடாதே,
ஆமியாக அல்லது கமலாவாக இரு.
*மாதவிக்குட்டியாக இருப்பது இன்னும் நல்லது.
ஒரு பெயரை, ஒரு வாழ்க்கைப் பங்கைத்
தோந்தெடுக்கவேண்டிய நேரமிது.
பாசாங்கு விளையாட்டுகளில் ஈடுபடாதே.
மனநோயாளி மாதிரி நடந்துகொள்ளாதே,
காமம் நிரம்பியவளாக இருக்காதே.
காதலில் மோசம் போகும்போது
சங்கடம் தரும்படி அழாதே. “
…
விமர்சகர்களே, நண்பர்களே,
வீட்டிற்கு வரும் ஒன்றுவிட்ட சகோதர, சகோதரிகளே
என் வாழ்க்கையில் தலையிடாமல் இருக்கக் கூடாதா?
…
நான் பாவி
நான் புனிதமானவள்
அன்பிற்குரியவள் நான்
வஞ்சிக்கப்பட்டவள் நான்
உங்களுக்கில்லாத இன்பங்கள் எனக்கில்லை
உங்களுக்கில்லாத துன்பங்கள் எனக்கில்லை
…
-0-
நீங்கள் தவறான பால்த்தன்மையுடன் பிறந்துவிட்டதாகக் கூறினார்கள். ஆணாக இருந்திருந்தால் எழுத்தாளராக இருப்பது எளிதாக இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா?
ஆமாம், நிச்சயமாக. எனது மாமா நாலப்பாட் நாராயண மேனன் எல்லோரும் அறிந்த ஓர் எழுத்தாளராக இருந்தார். காலையிலிருந்து இரவு முடிய அவர் எழுதிக்கொண்டிருப்பதைக் கவனித்திருக்கிறேன். எழுதுவதைத் தவிர வேறெதையும் அவர் செய்யவேண்டியதில்லை. அது ஓர் ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கை என்று நினைக்கிறேன். (பக். 31, பனிக்குடம், ஜீலை-ஆகஸ்ட் 2003)
பனிக்குடம், 1996 இல் Rediff இணையத்தளத்தில் ஷோபா வாரியர் (Shobha Warrier) கமலா தாஸைக் கண்ட நேர்காணலின் சில பகுதிகளது மொ-பெயர்ப்பைப் போட்டிருக்கிறது (இதழில் நேர்காணப்பட்ட ஆண்டு 1996 என்பது போடப்படவில்லை).
படைப்புகளில் மனசிலறையும் வலியை உண்டுபண்ணுபவர், நேர்காணல்களில் சிரிப்பையும் உண்டுபண்ணுவார். அம்பையிலும்விட, இந்த மனுசியிடமிருக்கிற நிறைய கிறுக்குத்தனங்கள் அவ்வாறு சிரிப்பைத் தூண்டும், கணவர், தன்னை ‘கவிதை எழுதுவதைப் பற்றி யோசிப்பதை நிறுத்தச் சொன்னது’ பற்றி…… இயல்பெனவே இவர் சொல்லுகிறவை ‘…என்னுள் கவிதை செத்துவிட்டது. ஏனெனில் நான் நேரத்தை வீணடிக்கிறேன் என்ற குற்றவுணர்வின்றியும் அது என்னுடைய கணவருக்கு உதவப்போவதில்லை என்ற உணர்வோடும் என்னால் சிந்திக்க முடியாது’ என்றும், ‘காதலன் கிடைத்தால் அவனிடமே போய்விடுவேன்’ என்கிற, ‘உன்னை நான் காணும்வரை/கவிதை
எழுதினேன், ஓவியம் தீட்டினேன்;/தோழிகளுடன்/உலவி வந்தேன்./இப்போது, நான் உன்னைக் காதலிக்கிறேன்./என்வாழ்க்கை ஒரு நாயைப்போல/ஒடுங்கிச் சுருண்டு கிடக்கிறது/உன்னில் மனநிறைவைக் கண்டு’ என கவிதை எழுதிற, கமலாவைப் படிக்கையில் -வரட்டுத்தனம் அற்ற- அங்கதத்திற்கு இடமிருக்கும், அவருடைய வாசகமான “ஆண்கள் தந்திரசாலிகளாகவும் சந்தர்ப்பவாதிகளாகவும் இருக்கின்றனர்; பெண்களோ திறந்த புத்தகங்களாக இருக்கின்றனர்“ (அதை நான் நம்பவில்லையென்ற போதும்!) போல ‘அவர்’ இருப்பதாய்ப் படும்; அத்தகைய பண்புகளாலேயே, அவரது, எனது கதை என்கிற சுயசரிதம் வந்தபோது ஒழுக்கமற்றவராகவும் nymphomaniac ஆயும் பார்க்க/விமர்சிக்கப்பட்டிருக்கிறார்.
எமது இடங்களில் Womanizer என்கிறபதம்கூட ஆண்களை நோக்கி சொல்லப்படுவதில்லை. இங்கே, ஆண்கள், பெண்டாளுதலும் பல
உறவுகள் ‘வைத்திருப்பதும்’ அவனுடைய பண்பாக ‘ஏற்கப்பட்டும்’, பெண்கள் உறவுகளில் ‘வீழ்வதையும்’ அவ் உறவுகளை முன்வைத்து ‘துரோகத்தை’ப் பற்றி பேசுவது சலன மூட்டக்கூடியதாய் இருப்பதும், ஆச்சரியமானதல்ல. இங்கே பெண்கள் விடயத்தில் ஆண் கொஞ்சம் பலவீனனாகவும், பெண்ணோ காம நோய் பிடித்தவளாயும் நிறுவப்படுகிறாள்.
இவற்றில் பொருட்டின்றி, கமலா தாஸ், காதல், கருணை, துரோகம், சரணடைதல், பழகுதல் என மனிதப் பொதுக் குணங்களின் முன்னால் தன்னை மறைப்பின்றி முன்வைக்கிறார். அந்த முன்வைப்பு, அதன் நேர்மை, எதிர்கொள்ள முடியாததாய் இருக்கிறது, ஏனென்றால் எல்லோருமே பாதுகாப்பான வளையங்களில் வளைய வந்துகொண்டிருக்கவே விரும்புகிறார்கள்/றோம். உண்மையை நெருங்குதல் முன்வைத்தல் என்பதானது பாதுகாப்பான வளையங்களை அகற்றுவது என்றாகிறது; அவற்றை என்ன காரணங்களுக்காக (”புகழுக்காக”
“பணத்துக்காக”) இவர்கள் அகற்றினாலும், அதில் பிறக்கிற இலக்கியப் பிரதிகள் முக்கியமானவை.
இந்த இரண்டு சுவாரசியமான பெண்களுக்குமிடையேயான இன்னொரு பொது ஒற்றுமை: இவர்கள் இருவருமே ஆதிக்க ஜாதிப் பின்னணியை உடையவர்கள் என்பது. பொருளாதாரரீதியாக கீழ் மட்டங்களில் ஒடுக்கப்படுகிற ஜாதிப் பின்னணியில் இருந்தெழுதுகிற பெண்களால் இவர்களது காலத்தில் -இவர்களை விமர்சனங்களுடனும் வாழ விட்ட இச் சமூகத்திலையே- இவர்கள் பேசிய விடயங்களை பேசியிருந்திக்க முடியுமா என்கிற கேள்வியும் உண்டு.
இவை தவிர்ந்து, அம்பையின் நேர்காணல் படித்துவிட்டு அம்பையைப் பார்க்க மும்பாய் செல்ல நினைத்திருந்திருந்திருக்கிறேன்; தத்துவங்கள் எல்லாவற்றையும் கோஷமாகவே சுருக்கிய நபர்களுள் அதை வாழ்வின் பிரிக்க முடியாத பகுதியாக தன்னுடன் இணைந்ததாக அவர் பேசியதாக உணர்ந்ததால்.
கமலா தாஸின் சிறுகதைகளின் ஈரத்தில் கேரளத்தில் அந்த அவரது வீட்டுப் படலையைத் திறந்து –hope fully- காவல் நாய்கள்
இல்லாததான அவரது வீடு நோக்கி சென்று கொண்டிருந்திருக்கிறேன், பாலசந்திரன் சுள்ளிக்காடின் சிதம்பர நினைவுகள் (மொ-பெ: கே.வி.ஷைலஜா, காவ்யா பதிப்பகம்) நூலில் அவர் எழுதிய, ”..அவளுடைய கதைகள் எனக்கு துர்சொப்பனங்களாக இருந்தன. அவை உலகத்தினுடையதும், வாழ்க்கையினுடையதுமான சூட்சுமமான அந்தரங்கத்தை எனக்கு அறிமுகப்படுத்தியது. மின்விசிறியில் அடிபட்டு துடிக்கும், அந்த சிட்டுக் குருவியின் ரத்தம் தெரிந்த கறை இப்போதும் என் இதயத்துள் ஒட்டிக் கிடக்கிறது” என்கிற அதே, அதே
எண்ணத்தோடு.
இன்றைக்கு அவ்வாறான சந்திப்புகளில் ஆர்வம் போய்விட்டது; அப் பாதிப்புகளிலே நெடுநாள் தங்க முடிந்ததுமில்லை (தங்கித்தான் என்ன செய்வது?!). ஆனால் இப்போது சந்திக்கையிலும், விமர்சனங்களுக்கு அப்பால், இந்தப் பெண்கள் வியப்பிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்துகிறார்கள். தம்முடன் இயல்பென இவர்கள் கொண்டிருக்கிற அவைதான் அவர்களுடைய ஆளுமையை நிலைநாட்டிக்கொண்டிருக்கிறது என்றும் தோன்றுகிறது.
நீங்கள் என் கதை எழுதியபோது ஏன் மக்கள்
அதிர்ச்சியடைந்தார்கள்?
இல்லை, அவர்கள் அதிர்ச்சியடையவில்லை. அதிர்ச்சியடைந்ததைப்போல் பாசாங்கு செய்தார்கள். மற்றவர்களிடம் தாங்கள் அறியாமை நிறைந்தவர்கள் என்றும் புனிதமான திருமணத்தின்பின் கட்டுப்பாடுகளை ஒருபோழுதும் மீறியதில்லை என்றும் நிரூபிப்பதற்குத்தான். எவருமே அதிர்ச்சியடையவில்லை. இம்மாதிரியான விஷயங்கள் வருடவருடங்களாக நடந்துகொண்டேயிருந்திருக்கின்றன. நான்
நிலப்பண்ணை உரிமை சார்ந்த ஒரு பின்புலத்திலிருந்து வந்தவள். இரவில் ஆண்கள் எப்படித் திரிவார்கள். ஏழைகளின் வீட்டிற்கள்
நுழைந்து அவர்களது பெண்களை எப்படிப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவார்கள் என்றும் நன்கு அறிவேன். அவர்கள் கர்ப்பமுற்றால் மூழ்கடிக்கப்படுவார்கள் இவையெல்லாம் நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன. இவற்றை நாங்கள் அறிந்தவர்களாயிருந்தோம் ஆனால் இது இரவில் மட்டும்தான் நிகழும். நான் எப்பொழுதுமே அன்பொன்றையே விரும்பினேன். உங்களது வீட்டில் அன்பு கிடைக்கவில்லையென்றால்
கொஞ்சம் கவனிப்பாரற்ற குழந்தையாக வெளியே திரிவீர்கள்.
(பக். 34, பனிக்குடம்)
*கமலா தாஸின் புனைபெயர்
கமலாதாஸ் சந்திப்பு மொழியாக்கம்: மாலினி
கவிதை தமிழாக்கம் எழுத்தாளர் ஆர். சிவக்குமார் (ஒழுங்கு மாற்றிப் போடப்பட்டுள்ளது)•
காதல், கவிதை பனிக்குடம், பக்.21, கமலா தாஸ், மொ-பெ:வேணுமாதவன்
தடிப்பெழுத்து என்னோடது
கமலா தாஸ் என்ற மாதவிக்குட்டியை நான் ஒரே ஒருமுறை நேரில் சந்திருத்திருக்கிறேன். கேரள சாகித்ய அக்காதமி அலுவலகத்துக்கு அவர் வந்திருந்தார். நித்ய சைதன்ய யதியின் மாணவரான ஒருவர் என்னை அறிமுகம் செய்து வைத்தார். ”ஆ, எனக்குத்தெரியும்…நித்யா என்னுடைய காதலன்!” என்றார். எனக்கு கமலா தாஸ் எப்படிப்பட்டவர் என்று தெரியும் என்பதனால் ஆச்சரியம் அடையவில்லை. அப்போது கமலா தாஸ் விசித்திரமான கோலத்தில் இருந்தார். எப்படியும் முந்நூறு பவுன் எடையுள்ள நகைகள் அணிந்திருப்பார். இமைகளில் ஜிகினா. உதட்டுச்சாயம். ரூஜ். பளபளக்கும் ‘ஸீ த்ரூ’ சேலை. காதுகளில் அவர் அணிந்திருந்த தொங்கட்டான் மிகமிக விபரீதமாக இருந்தது. அதை சாண்ட்லியரின் குழந்தை எனலாம்.
என்னை அவர் பொருட்படுத்தவில்லை. எவரையுமே பொருட்படுத்தவில்லை. அவரே பேசிக்கொண்டிருந்தார். மிகையான நாடகத்தனம். செயற்கையான உடலசைவுகள். கொஞ்சலான மொழி. அவர் சொல்லிக்கொண்டிருந்த விஷயம் வேடிக்கையானது. அவருக்கு குருவாயூர் கிருஷ்ணனுடன் காதல். காதல் மட்டுமல்ல காமமும் கூட. கிருஷ்ணனை பார்க்கச் சென்றிருந்தார். அவனுடன் பேசிக்கொண்டிருந்தபோது சண்டை வந்துவிட்டது. ”இனி ஆ கள்ளனோடு மிண்டில்ல…”என்றார் நாணத்துடன். ”பக்ஷே அவன் என்னை தேடி வரும்..அவனு ஞான் இல்லாதே ஜீவிக்கான் கழியில்ல” அருகே நின்ற ஒரு ஆசாமி உண்மையான பக்திப்பரவசத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்.
விசித்திரங்களும் கிறுக்குத்தனங்களும் நிறைந்த வாழ்க்கை கமலா தாசுடையது. கேரள வரலாற்றில் ஆழமான தடம் பதித்த நாலப்பாட்டு நாயர் ‘தறவாட்டி’ல் பிறந்தார். தாத்தா கெ.பி.கேசவமேனன் சுதந்திரப் போராட்ட தியாகி. மாத்ருபூமி நாளிதழை நிறுவியவர். இன்னொரு தாத்தா நாலப்பாட்டு நாராயண மேனன் கேரளத்தின் முக்கியமான கவிஞர். அப்பா வி.எம்.நாயர் மாத்ருப்பூமி நிர்வாக ஆசிரியர். அம்மா நாலப்பாட்டு பாலாமணி அம்மா கேரளத்தின் முக்கியமான பெண் கவிஞர்.
சிறந்த கல்விக்கூடங்களில் கற்ற கமலா தாஸ் ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தார். முதலில் கவிதைகள். அவை கவனிக்கப்படவில்லை. பின்னர் எழுதிய சுயசரிதை ‘My story’ பெரும் புகழ்பெற்றது. அதில் தன்னுடைய பாலியல் பரிசோதனைகளை கிளர்ச்சியூட்டும்படி எழுதியிருந்தார். இளவயது ‘தோழனின்’ விந்துவின் வாசனையைப்பற்றிய வருணனைகள் அவரை புகழ்பெறச்செய்தன. பின்னாளில் அந்த நூலில் சொன்னவை எல்லாமே பொய்கள் என்றும், பணம் கிடைப்பதற்காக கணவரின் ஆலோசனைப்படி எழுதியவை என்றும் சொன்னார் கமலா.
மாதவிக்குட்டி என்ற பேரில் மலையாளத்தில் எழுத ஆரம்பித்தார். அவருடைய செயற்கையான ஆங்கில எழுத்துக்களுடன் ஒப்பிடும்போது மலையாளத்தில் அவர் எழுதியவை முக்கியமான படைப்புகள். மலையாளச் சிறுகதையை கவிதைக்கு அருகே கொண்டு வந்தார். நடுக்கேரளத்தின் பேச்சு நடையை அழகாக புனைவாக்கினார். காமத்தை மென்மையாக எழுதுவதில் ஒரு சாதனையாளர் அவர். கேரள நவீன புனைகதை இலக்கியத்தின் முதல் பத்து சாதனையாளர்களில் அவரை நிச்சயமாகச் சேர்க்க முடியும்.
ஆனால் அவர் நாலப்பாட்டு குடும்பம் என்பதனாலேயே, அவரது மகன் எம்.டி.நாலப்பாடு மாத்ருபூமி ஆசிரியராக இருந்தமையாலேயே, அவர் மிகையாகப் புகழப்பட்டார். கொண்டாடப்பட்டார். அவரை பற்றி கட்டுரைகள் எழுதிக்குவிக்கப்பட்டன. அந்த வரிகள் வழியாக நாம் அவரை அணுகினால் ஏமாற்றமே ஏற்படும்.
கமலாவின் பிரச்சினைகளின் ஊற்றுமுகம் ஒன்றுதான். அவர் அழகி அல்ல. கறுப்பான குண்டான கிட்டத்தட்ட அவலட்சணமான பெண். அழகிகளின் குடும்பத்தில் பிறக்கவும் நேரிட்டது. இந்த தாழ்வுணர்ச்சியில் இருந்து உருவான திரிபு பட்ட ஆளுமை அவருடையது. எங்கும் எப்போதும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் முனைப்பும் தணியாத விளம்பர வெறியும் கொண்டவர் கமலா. செய்தித்தாள்கள் தன்னைப்பற்றி எழுதுவதற்காக அவர் எதையும் செய்வார். ஆபாசமாகப் பேசுவார். ஒன்றுமே தெரியாத மழலையாக நடிப்பார். உயர்வாகக் கருதப்பட்டவைகளை உடைத்து வீசுவார். கீழ்மைகளைப் போற்றுவார். விபரீதமாகவும் தடாலடியாகவும் எதையாவது செய்வார். ஒரு சிறு சந்திப்பில் கூட அப்படித்தான் நடந்துகொள்வார்.
கமலாவின் அதிரடிகள் பல. சுயேச்சையாக தேர்தலில் நின்றார். அரசியல் கட்சி தொடங்கினார் — ஆம், தேசியக்கட்சி! ஓவியங்களை வரைந்து கண்காட்சி வைத்து உண்மையான ஓவியர்களை கதறி ஓடச்செய்தார். பயங்கரமாகப் பாட்டு பாடினார்.
அந்த தாழ்வுனர்ச்சியினால் விளைந்த அணையாத காம இச்சை கொண்டிருந்தார் என அவரது சுயசரிதை மற்றும் குறிப்புகள் காட்டுகின்றன. தோற்றம் காரணமாக புறக்கணிக்கப்படும் பெண்ணின் ஏமாற்றப்பட்ட காமம் அது. அந்த இச்சையையே அவர் விதவிதமாக வெளிப்படுத்தினார். அல்லது அது ஒருவகை வன்மம்.
நிர்மால்யா மொழியாக்கத்தில் கமலாதாஸ் கதைகள் என்னும் ஒரு தொகுப்பு வெளிவந்தது. கவிதா பதிப்பக வெளியீடு. அதற்கு நான் எழுதிய முன்னுரையில் [கமலாவின் காதல்கள்] கமலாதாசின் இந்த கிறுக்குத்தனத்தைச் சுட்டிக்காட்டியிருந்தேன். அவர் கடுமையாக எதிர்வினையாற்றியதாக என்னிடம் நடுவே உள்ள சில இதழியல் நண்பர்கள் சொன்னார்கள். நான் அவரை கூப்பிடவில்லை. ஆகவே ஆறுமாதம் கழித்து என்னை •போனில் கூப்பிட்டு வசைபாடினார். கமலாவைப் பொறுத்தவரை அந்த எதிர்வினையேகூட ஒரு விளம்பர உத்தியாக இருக்கலாம் என்பதனால் நான் எதிர்வினையாற்றவில்லை
அதற்கு ஆறுமாதம் கழித்து கமலா தாஸ் மதம் மாறி கமலா சுரையா ஆக ஆனார். அவரை அவரது 65 வயதில்! ஒரு புகழ்பெற்ற இஸ்லாமிய பேச்சாளர் அவரை திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி மதம் மாற்றியதாகச் சொல்லப்பட்டது. கமலாவே ‘பாதுகாப்பான துணை தேடி’ மதம் மாறியதாக ஊடகங்களிடம் சொன்னார். ஆனால் நினைத்தது போல திருமணம் நடக்கவில்லை. ஆகவே கடுமையான அதிருப்தியை வெளிக்காட்டினார். மீண்டும் குருவாயூரப்பனின் பக்தையாக ஆகிவிட்டதாகவும் ஒரு இந்துவாக வாழ்வதாகவும் சொன்னார். ஆனால் இம்முறை ரகசியமாக மிரட்டலுக்கு ஆளானதனால் மீண்டும் மதம் மாறும் உத்தேசத்தைக் கைவிட்டார். ஏன், மதம் பற்றிய பேச்சையே கைவிட்டார்.
கடைசிக்காலத்தில் கமலா தாஸ் மிக மிகச் சோர்வடைந்திருந்தார். இனிமேல் கேரளத்துக்கே வரமாட்டேன் என்று சொல்லி பூனாவுக்குச் சென்றார். அங்கே சென்ற மே 31 மாலை மருத்துவமனையில் மரணமடைந்தார்.
தன் கட்டற்ற இச்சைகளினால் அடித்துச்செல்லபப்ட்ட அலைக்கழிந்த ஓர் ஆத்மா. இதோ அது தன் இயல்பான அமைதியைக் கண்டுகொண்டிருக்கிறது. கவித்துவத்தைத் தொட்ட ஒரு பத்து சிறுகதைகள், பாலியகார நினைவுகள் என்னும் தலைப்பிலான ஆரம்பகால கட்டுரைகள் வழியாக கமலா இலக்கியத்தில் இருந்துகொண்டிருப்பார்.
மரணம் ஞாபகங்களின் ஊற்றுக்கண்ணைத் திறக்கிறது. எஞ்சியிருப்பவர்களினிடையே, நிச்சயமற்ற இருப்பினைக் குறித்த எச்சரிக்கையினைத் தூவுகிறது. மேலும் உயிரோடு இருப்பவர்கள், இறந்தவர்களை ஏதாவதொரு சிமிழுக்குள், சட்டகத்தினுள் அடைத்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தினுள் தள்ளப்பட்டவர்களைப் போல பேச ஆரம்பித்துவிடுகிறார்கள். இறந்தவர் பிரபலமான எழுத்தாளராக இருப்பாரேயாகில், அவர் புனைந்த கதைகளிலும் பார்க்க அவரைப் பற்றிப் புனையப்படும் கதைகள் அதிகமாக இருக்கவும் வாய்ப்புண்டு. அதிலும், சமூக அளவுகோல்கள், மதிப்பீடுகளை மறுத்தோடவும் கேள்வி கேட்கவும் விழைந்த கமலாதாஸைப் போன்ற எழுத்தாளர், இறப்பின் பின்னும் பலவிதமான விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடுவது இயல்பானதே.
1934ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி, கேரளத்தின் திருச்சூர் அருகிலுள்ள நாலாப்பட்டு தறவாட்டில், மாத்ருபூமி நாளேட்டின் நிர்வாக ஆசிரியரான வி.எம்.நாயர் என்பவருக்கும், கவிஞர் பாலாமணியம்மாவிற்கும் மகளாகப் பிறந்தவர் ஆமி என்று சிறுவயதில் அழைக்கப்பட்ட மாதவிக்குட்டி. மலையாளத்தில் மாதவிக்குட்டியாகவும் ஆங்கிலத்தில் கமலாதாஸ் ஆகவும் அறியப்பட்ட இவருடைய ‘என் கதை’என்ற தன்வரலாற்று நூல் இந்தியாவிலேயே மிக அதிகமாக விற்பனையானதாகக் கூறப்படுகிறது. அந்நூல் பலவிதமான சர்ச்சைகளுக்கு உள்ளானது. கற்பு, கலாச்சாரம் இன்னபிறவற்றினால் இயக்கப்படும் நமது ஆச்சாரப்பசுக்கள் அந்நூல் மிகையான பாலியலைப் பேசியதாகக் கண்டனம் தெரிவித்தனர். குமுதத்திலும் அந்நூல் தொடராக வந்தது. “‘என் கதை’யைப் படித்து பலரும் அதிர்ந்துபோனதாகச் சொல்லப்படுகிறதே…” என்று ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியபோது, “அதிர்ந்துபோனதுபோல பாசாங்கு செய்தனர்”என்று பதிலளித்தார் கமலாதாஸ். ஆன்மாவின் அடியாழத்திலிருந்து புறப்பட்டு வந்த பதிலாக அது அமைந்திருந்தது. ‘நாம் புனிதமானவர்கள், கண்ணுக்குத் தெரியாத வரையறைகளுக்குக் கட்டுப்பட விதிக்கப்பட்டவர்கள்’ போன்ற பொய்மைகளைத் துகிலுரிந்து காட்டியது அந்தத் துணிச்சலான பதில்.
அவர் சொல்கிறார்:
“என் வாழ்வின் இரகசியங்கள் எல்லாவற்றையும் எழுதி என்னைக் காலி உடம்பாக ஆக்கிவிடவேண்டும் என்பதற்காகவே எழுதுகிறேன்” என்று.
குழப்பவாதியாகவும், உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்படுபவராகவும், கனவு காண்பவராகவும், தத்தளிக்கும் மனோநிலையுடையவராகவும் கமலாதாஸ் சித்தரிக்கப்பட்டார். பெண் என்பவள் வார்க்கப்பட்ட வெண்கலச் சிலைபோல இருக்கவேண்டும்; நெகிழ்வு கூடாது என்ற புனிதத் தத்துவங்களில் ஒன்றாகவே மேற்கண்ட விமர்சனத்தையும் பார்க்கவேண்டியிருக்கிறது. அதிலும், காலாகாலமாகப் பின்பற்றப்பட்ட, அச்சில் ஊற்றி எடுக்கப்பட்ட மரபுகளுக்கு எதிர்நிலையில் நின்று பெண்ணானவள் பேசுவதும் நடந்துகொள்வதும் படுபாதகமாகவே கருதப்படுகிறது. ஆணாதிக்க சமூகத்தின் ஆணிவேராகிய மதம் தொடர்பாகவும் அந்த எதிர்நிலை அமைந்துவிடுமாயின் சொல்ல வேண்டியதில்லை. ‘ஐயோ! கைமீறிப் போகிறாளே’என்ற பதட்டம் அவர்களைத் தொற்றிக்கொள்கிறது. கமலாதாஸ் எழுத்திலும் வாழ்விலும் கலகக்காரியாக அறியப்பட்டவர். மரணத்தின் பிறகும் அவர்மீதான ஆதிக்கம் விமர்சன வடிவில் தொடர்வது வேதனைக்குரியது.
அண்மைக்காலமாக இணையத்தளங்கள் அச்சு ஊடகங்களுக்கு சமாந்தரமாக இயங்க முற்பட்டுவருகின்றன அன்றேல் நெருங்கிவந்துகொண்டிருக்கின்றன என்று சொல்லலாம். இன்றைக்குத் தமிழிலே பிரபலமாகப் பேசப்படும் பல எழுத்தாளர்கள் இணையத்திலே எழுதவாரம்பித்திருக்கிறார்கள். கடந்த மே மாதம் 31ஆம் திகதி தனது எழுபத்தைந்தாவது வயதில் புனேயில் கமலாதாஸ் மரணமடைந்ததையொட்டி எழுத்தாளர் ஜெயமோகன் பதிவொன்றினைத் தனது இணையத்தளத்திலே இட்டிருந்தார். வழக்கம்போல தனது நியாயத் தராசிலே கமலாதாஸையும் நிறுத்தி எடைபோட்டபின் அவரால் மொழியப்பட்ட வாசகங்கள் இவைதாம்:
“கமலாவின் பிரச்சனைகளின் ஊற்றுக்கண் ஒன்றுதான். அவர் அழகி அல்ல. கறுப்பான, குண்டான கிட்டத்தட்ட அவலட்சணமான பெண். அழகிகளின் குடும்பத்தில் பிறக்கவும் நேரிட்டது. இந்தத் தாழ்வுணர்ச்சியில் இருந்து உருவான திரிபுபட்ட ஆளுமை அவருடையது.”
ஜெயமோகன் மேலும் சொல்கிறார்…
“தாழ்வுணர்ச்சியால் விளைந்த அணையாத காம இச்சை கொண்டிருந்தார் என அவரது சுயசரிதை மற்றும் குறிப்புகள் காட்டுகின்றன. தோற்றம் காரணமாகப் புறக்கணிக்கப்படும் பெண்ணின் ஏமாற்றப்பட்ட காமம் அது. அந்த இச்சையையே அவர் விதவிதமாக வெளிப்படுத்தினார். அல்லது அது ஒருவகை வன்மம்.”
இதை வாசித்து முடிந்ததும் எனக்குள் சில கேள்விகள் எழுந்தன. கறுப்பான, குண்டான பெண்கள் அழகற்றவர்கள் என்ற பொதுப்புத்தியை, அறியப்பட்ட எழுத்தாளரான ஒருவரால் எந்தவித தயக்கமின்றி எப்படிப் பொதுவெளியில் பேசமுடிகிறது? ஒருவருடைய அழகு அவருடைய எழுத்தில் பொருட்படுத்தத்தக்க பாதிப்பினை உண்டுபண்ணுகிறதா? அழகிகளாயிருக்கும்-அழகன்களாயிருக்கும் எழுத்தாளர்களின் படைப்புகளில் காமம் அளந்து பரிமாறப்படுகிறதா? தனது படைப்பாற்றல் வழியாகச் சிந்தனைத் தளத்தினுள் வாசகர்களைச் செலுத்துவதில் பெரும் பங்காற்றிய கமலாதாசுடைய எழுத்தின் பின்னணியில் இயங்கும் உளவியலை ஆராய்வதன் மூலம் தனது பிதாமகத்தன்மையை ஜெயமோகன் நிறுவ முயல்கிறாரா? காமம் என்பது பாவமே போன்ற தொனி மேற்கண்ட வாசகங்கள் ஊடாக வெளிப்படுவதிலுள்ள அபத்தத்தை ஜெயமோகன் உணரவில்லையா? ஒருவர் இறந்தபின்னால் அவரது இருண்ட பக்கங்களைப் பற்றிப் பேசக்கூடாது என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆனாலும், மேற்கண்ட வாசகங்கள் வாயிலாக கமலாதாஸின் ஆளுமை பற்றிய மதிப்பீட்டைச் சரிக்கவே ஜெயமோகன் முயல்கிறார் என்று தோன்றுகிறது. அதிலும் அதீத காமத்தோடு நடந்துகொள்வது அன்றேல் அப்படிப் பேசுவது மற்றும் எழுதுவது, சமூகத்தினால் ஏலவே கட்டமைக்கப்பட்டிருக்கிற பெண் பிம்பத்தைச் சிதைக்கிற செயல் என்ற பதட்டத்தை மேற்கண்ட வார்த்தைகளில் என்னால் இனங்காணமுடிகிறது. பழமைச் சேற்றில் ஊறிய பொச்சுமட்டைகளால் எத்தனை காலத்திற்குத்தான் அரிக்கும் தங்கள் முதுகுகளைச் சொறிந்துகொள்ளப்போகிறார்களோ என்று அச்சமாக இருக்கிறது.
ஜெயமோகன் மட்டுமென்றில்லை; மதவாதமும் ஆண்வாதமும் இந்தச் சமூகத்தினைச் சீரழிக்கும் நோய்க்கூறுகளாகத் தொடர்ந்திருக்கின்றன. கமலாதாஸ் என்ற புனைபெயரை ஏற்றுக்கொண்ட மாதவிக்குட்டி தனது 65ஆவது வயதில் இஸ்லாம் மதத்திற்கு மாறி கமலா சுரையாவாகிறார். புகழ்பெற்ற இஸ்லாமியப் பேச்சாளர் ஒருவரை மணந்துகொள்ளும்பொருட்டு மதம் மாறியதாகக் கூறும் அவரை, அந்தப் பேச்சாளர் பிறகு ஏமாற்றிவிட்டதாக கமலாதாஸே ஒரு கூட்டத்தில் பேசும்போது குறிப்பிட்டிருக்கிறார். தனிமையின் துயர் தாளாமல் துணையை அடைய வேண்டி மதம் மாறியது அவருடைய சொந்தப் பிரச்சனை. “நீ எப்படி மதம் மாறலாம்?”என்று கேட்டு இந்துத்துவா அடிப்படைவாதிகள் அவருக்குக் கொலைமிரட்டல் விடுக்கிறார்கள். கொலை முயற்சிகளிலும் ஈடுபடுகிறார்கள். எப்போதும் உயிராபத்து நிறைந்த சூழலிலேயே அவர் வாழவேண்டியேற்பட்டது. பத்திரிகைகள் அவர் மதம் மாறியதைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதுகின்றன. தான் ஆமியாக சிறுபெண்ணாய் பால்யத்தில் வாழ்ந்த பழைய வீட்டிற்கு கமலாதாஸ் சென்று வந்தபிறகு, அந்த வீட்டை அங்குள்ளவர்கள் தண்ணீர் விட்டுக் கழுவுகிறார்கள். ஏனென்றால், ஒரு முஸ்லிம் பெண்ணின் பாதங்களால் அந்த வீடு தீட்டுப்பட்டுவிட்டதாம். மதமாற்றத்தின் காரணமாக எழுந்த சர்ச்சைகளால், விமர்சனங்களால் புண்பட்ட கமலாதாஸ் தனது தாய்பூமியான கேரளத்தைவிட்டு வெளியேறி, வயோதிபத்தில் புனேயில் வசிக்கவும் அங்கேயே இறக்கவும் நேரிடுகிறது. இந்தியா பல மதங்கள், மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட புண்ணிய பூமி என்று போற்றப்படுகிறது. அந்தப் புண்ணிய பூமியில் எழுத்தாளராகக் கொண்டாடப்படும் ஒரு பெண், மதம் மாறுவதென்பது அவளது சொந்தப் பிரச்சனையாக அல்லாது சமூகத்தின் பிரச்சனையாக இருப்பதென்பது அபத்தத்திலும் அபத்தமானதாகத் தோன்றுகிறது. மதம் என்பதை ஒரு விடயமாகக் கருதியதில், பொருட்படுத்தியதில் கமலாதாஸ் என்ற ஆளுமையுடைய பெண் தோற்றுவிட்டாள்தான். என்றாலும், தான் யாராக வாழவிரும்புகிறாளோ அதை அவளுடைய தெரிவுக்கு விட்டுவிடுவதன்றோ நியாயம்?
பால்யகால ஸ்மரணங்கள், பூதகாலம், பஷியுடைய மரணம், யா அல்லாஹ் ஆகிய பேசப்பட்ட நாவல்களையும் சிறந்த பல சிறுகதைகளையும் எழுதிய- கேரள சாகித்திய அகாதமி விருது, வயலார் விருது, எழுத்தச்சன் விருது ஆகிய பெருமைகளைப் பெற்ற கமலாதாஸின் மறைவு கேரளத்தின் துக்கமாயிருந்தது சில தினங்கள். அவருடைய உடல் எடுத்துச் செல்லப்பட்ட வழியெல்லாம் கேரள மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர். மிக அண்மையில் கவிஞரும் பல எழுத்தாளர்களின் நண்பரும் நல்லிதயம் கொண்ட மனிதருமாகிய ராஜமார்த்தாண்டனைத் தமிழிலக்கிய உலகம் விபத்தொன்றில் இழந்தது. சில சஞ்சிகைகள், இணையத்தளங்களைத் தவிர மற்றெல்லாம் மகாமௌனம் காத்தன. இழப்பின் துயரத்தைக் காட்டிலும் மாபெரிய துயரம், ஒரு கவிஞனின் மரணத்தைக்கூடத் தமிழ்கூறும் இந்தப் பொய்யுலகம் பெரியளவில் கண்டுகொள்ளாமலிருந்ததுதான்.
ஜூன் 13ஆம் திகதியன்று வால்பாறையில் தமிழ்க் கவிஞர்கள் இயக்கத்தினால் நடத்தப்பட்ட இலக்கியக் கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை.
-----
கமலாதாஸின் கவிதை
மொழியாக்கம்: எஸ்.வி.வி.வேணுகோபாலன்
அரசியல் தெரியாது எனக்கு
ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்களின்
பெயர்கள் தெரியும் எனக்கு.
நேருவில் துவங்கி
வரிசையாக ஒப்புவிக்கவும்முடியும் என்னால்
கிழமைகளை, மாதங்களைச்சொல்வதுபோல.
நான் ஓர் இந்தியர்
நிறம் மிகவும் பழுப்பு
மலபாரில் பிறந்தவள்
பேசுகிறேன் மூன்று மொழிகளில்
எழுதுகிறேன் இரண்டில்
கனவில் ஆழ்கிறேன் ஒன்றில்.
அவர்கள் சொன்னார்கள்
'ஆங்கிலத்தில் எழுதாதே
ஆங்கிலம் உனது தாய்மொழியன்று.'
என்னை ஏன் தனிமையில் விடக்கூடாது?
விமர்சகர்களே, நண்பர்களே, சந்திக்கவரும் சொந்தங்களே
உங்கள் ஒவ்வொருவரையும்தான் கேட்கிறேன்.
எனக்குப் பிடித்தமான எந்தவொரு மொழியிலும்
என்னைப் பேசவிடுங்களேன்.
நான் பேசுகிற மொழி எனதாகிறது.
அதன் பிறழ்வுகள், அசாதாரணப் பிரயோகங்கள் எல்லாம்
என்னுடையவை
என்னுடையவை மட்டுமே.
அது அரை ஆங்கிலம்
அரை இந்தியம்
ஒருவேளை நகைப்பிற்குரியதும்கூட.
ஆனாலும் அது நேர்மையானது
.உங்களால் பார்க்கமுடியவில்லையா?
நான் எவ்வளவு மனுஷத்தனம் கொண்டவளோ
அவ்வளவு மனிதத்தன்மை அதற்குமிருக்கிறது.
அது பேசுகிறது
எனது குதூகலங்களை, எனது விழைவுகளை, எனது நம்பிக்கைகளை.
அது எனக்குப் பயன்படுகிறது
காகத்திற்கு அதன் கரைதலைப் போல
சிங்கத்திற்கு அதன் கர்ஜனையைப் போல
அது மனிதப் பேச்சு
இங்கிருக்கிற, அங்கு இல்லாத மனத்தின் பேச்சு.
பார்க்கிற, கேட்கிற எல்லாம் அறிகிற ஒரு மனத்தின் பேச்சு.
செவியற்ற விழிகளற்ற பேச்சல்ல
புயலில் சிக்கிய மரங்களின்-
பருவமழையைச் சுமக்கும் மேகங்களின் -
மழையின்-
தொடர்பற்ற முணுமுணுப்புகளைச் செய்தவாறு
கொழுந்துவிட்டெரியும் சிதை நெருப்பின் பேச்சு அது.
நான் குழந்தையாக இருந்தேன்
பிறிதொருநாள் அவர்கள் சொன்னார்கள்
நான் வளர்ந்துவிட்டேனென்று
ஏனெனில் நான் உயரமாகிவிட்டேன்
எனது உடல் பெரிதாகிவிட்டது
ஒன்றிரண்டு இடங்களில் முடி வளரத்துவங்கிவிட்டது.
நான் காதலைக் கேட்டபோது
அவன் ஒரு பதினாறு வயது யௌவனத்தை
எனது படுக்கையறைக்குள் தள்ளிவிட்டுக் கதவைச் சாத்தினான்.
அவன் என்னை அடிக்கவில்லை
ஆனால் வருத்தமுற்ற என் பெண் மேனி
அடிவாங்கியதாக உணர்ந்தது.
எனது மார்பகங்களின் பளுவும், கருப்பையும்
அழுத்திய அழுத்தத்தில்
பரிதாபகரமாக நான் சுருங்கிப்போனேன்.
பிறகு ஒரு சட்டையையும்
எனது சகோதரனின் கால்சட்டையையும் அணிந்தேன்.
தலைமுடியைக் குட்டையாகக் கத்தரித்துக்கொண்டேன்.
எனது பெண்மையைப் புறக்கணித்தேன்.
அவர்கள் சொன்னார்கள்
சேலைகளை அணி
பெண்ணாய் இலட்சணமாய் இரு
மனைவியாய் இரு
தையல் வேலையைச் செய்துகொண்டிரு
சமையல்காரியாய் இரு
சண்டை போட்டுக்கொண்டிரு
வேலையாட்களுடன் பொருந்தி இரு
ஒட்டிக்கொண்டிரு
என்றனர் வகைப்படுத்துநர்கள்.
சுவரின் மீது உட்காராதே
மெல்லிய திரைச்சீலைகள் தொங்கும்
எங்கள் சன்னல்கள் வழியாகப் பார்க்காதே
ஆமியாய் இரு கமலாவாய் இரு
மாதவிக்குட்டியாய் இருந்தால் இன்னும் நல்லது.
இதுவே சரியான தருணம்
ஒரு பெயரைத் தேர்வுசெய்துகொள்ள.
கண்ணாமூச்சி விளையாட்டுக்கள் வேண்டாம்
மனநோயாளியோடு விளையாடாதே
திருப்தியுறாத ஆளாயிராதே
காதல் முறிவின்போது சங்கடப்படுத்தும்படி
ஓவென்று இரையாதே….
ஒரு மனிதனைச் சந்தித்தேன்
காதல்வயப்பட்டேன்
எந்தப் பெயரிட்டும் அழைக்கவேண்டாம் அவனை
ஒரு பெண்ணை நாடும் எவனோ ஒரு ஆண்தான் அவனும்.
காதலை நாடும் எவளோ ஒரு பெண்ணாகிய என்னைப்போலவே
அவனுள்…. நதிகளைப் போலவே ஒரு பசியின் வேகம்
என்னுள்…சமுத்திரங்களின் களைப்பில்லாத காத்திருத்தல்.
உங்கள் ஒவ்வொருவரையும் கேட்கிறேன்“யார் நீ?”
“அது நானே”என்பதே விடை.
எங்கும் எல்லா இடங்களிலும் காண்கிறேன்
தன்னை நான் என்று அழைத்துக்கொள்பவரை.
உறைக்குள் செருகப்பட்டிருக்கும் வாளைப்போல்
இறுக்கமாக அவன் திணிக்கப்பட்டிருக்கிறான்
இந்த உலகத்தினுள்.
தனிமையில் குடிப்பது நான்தான்
புதிய நகரங்களின் விடுதிகளில்
நடுநிசி பன்னிரண்டு மணிக்குக் குடிப்பவள் நான்தான்.
பிறகு வெட்கத்திலாழ்ந்து செத்துக் கிடக்கிறேன்
தொண்டை விக்கி.
நான் ஒரு பாவி
நான் ஒரு ரிஷி
நேசிக்கப்படுபவள் நான்
வஞ்சிக்கப்படுபவளும் நான்தான்.
உங்களுக்கில்லாத குதூகலங்கள் எதுவும் எனக்குமில்லை
நானும் அழைத்துக்கொள்கிறேன் என்னை
நான் என்று.
நண்பர் மாதவராஜின் ‘தீராத பக்கங்கள்’இல் மேற்கண்ட கவிதை வெளியாகியிருந்தது. அவருக்கு என் நன்றிகள்.
நன்றி தமிழ்நதி
மறைந்த மாதவிக்குட்டி(எ)கமலாதாஸ்(எ)கமலா(எ)சுரையா
சமீபத்தில் காலமான கேரளத்தின் எழுத்தாளர் கமலாதாஸ் (எனக்குத் தெரிந்த அத்தனை பெயர்களையும் எழுதிவிட்டேன்) குறித்து இவ்வார திண்ணையில் வஹ்ஹாபி கிழிகிழியென்று கிழித்துக்குதறியிருக்கிறா.
கமலாதாஸ் குறித்து பல்வேறு ஆதாங்களுடனான கட்டுரைகள் இதே திண்ணையில் கடந்த காலங்களில் எழுதப்பட்டிருக்கின்றன.
வாசகர்களுக்கு மறந்துபோயிருக்கும் என்ற எண்ணத்தினாலோ என்னவோ, மறுபடி தவறான விபரங்களுடன் வம்புக்கு இழுக்கும் நோக்கில் எழுதப்பட்டு வெளியாகியிருக்கிறது இவ்வார திண்ணைக்கட்டுரை.
கொஞ்ஞம் தேடியதில் கிடைத்த விபரங்கள் கீழே...
************* (1) *************
Thursday August 24, 2006
நேச குமார்
.......
தைரியமுள்ள பெண்மணி என்றவுடன் எனக்கு, சுரையாவாக மதம்மாறி பின்பு ஒரு இஸ்லாமியனின் காதல்வார்த்தைகளால் ஏமாறினேன் என்று இஸ்லாத்துக்கு எதிராக கருதக்கூடிய கருத்துக்களை வெளியிட்டு தாம் பழையபடி மாதவிக்குட்டியாகவே ஆகிவிட்டேன் என்று அறிவித்த கமலாதாஸ் நினைவுக்கு வந்தார்.அவர் தாம் மாதவிக்குட்டி என்பதை நிரூபிக்க நினைத்தாரோ என்னவோ, தஸ்லிமா நஸ்ரீனை தலையில் போட்டிருந்த வெள்ளை தலையங்கியுடன் தம்வீட்டில் வரவேற்றிருந்தார் - அதை பத்திரிகைகள் புகைப்படம் சொல்லும் செய்தியாக பிரசுரித்திருந்தன. மாதவி சுரையா என்று நான் மனதில் நினைத்துக் கொண்டேன். அல்லாஹ்வாக உருவெடுக்கும் கிருஷ்ணனின் குல்லாவுக்குள் மயிலிறகு இருக்கும் - அதுவே இந்திய மண்ணின் மகிமை.
Copywrite(c) Thinnai.com
************** (2) ************
Thursday January 20, 2005
மதம் அலுத்துப் போனது - மாதவிக்குட்டியின் கட்டுரை
தமிழில் : இரா முருகன்
(கடந்த வாரம் மாத்ருபூமி ஞாயிறு மலரில், மலையாள எழுத்தாளர் மாதவிக் குட்டி - சுரையா - கமலாதாஸ் எழுதிய ஒரு கட்டுரை முழுப் பக்கத்துக்கு வந்துள்ளது.
'மதம் மடுத்து ' (மதம் அலுத்துப் போனது) என்ற தலைப்பில் முழுக்க பேச்சு மலையாளத்தில் அமைந்த அந்தக் கட்டுரையின் சுருக்கம். இரா.மு)
----
நான் கொஞ்ச நாள் நானாகவே இருந்தேன். அப்போ கொஞ்சம் போல காதல் எல்லாம் வந்தது. கொஞ்ச நாள் விதவையா வாழறேன்.
அப்படி இருக்கறபோது, நேசம் தரேன்னு ஒருத்தன் சொன்னான். நானும் ஒரு பெண்ணில்லையா ? அவனெ நம்பினேன். பெண்ணுக்கு எப்பவும் ஒரு பாதுகாப்பாளன் வேணும். அவன் என்னை மதம் மாறச் சொன்னான். நானும் மாறினேன். காதலுக்காக எதையும் துறக்க நாம் தயார் ஆச்சே. ஆனா, அவன் ஒரு கோழையாக இருந்தான். என்னோட துணிச்சல் அவனுக்கு இல்லாமப் போனது. என் மாதிரி ஒரு துணிச்சலான பெண்ணுக்கு ஒரு கோழையைக் காதலிக்க முடியுமோ ? நான் புலி. அவன் ஒரு செம்மறியாடு. அவன் கோழை அப்படின்னு தெரிஞ்ச அப்புறம் காதலாவது ஒண்ணாவது. நான் அவனைக் (கல்யாண பந்தத்திலிருந்து ) விடுதலையாக்கி விட்டேன். எனக்கும் வ்ிடுதலைதான். காதல் எல்லாம் கரைஞ்சு போச்சு. இப்போ இந்த வேஷம் (தலையில் முக்காடாக வந்து, முகம் மறைக்காத பர்தா) தான் பாக்கி. இது மோசமில்லைன்னு தோணுது. என் முடியெல்லாம் நரைச்சுப் போனது வெளியிலே தெரியாதில்லையா ?
மதமெல்லாம் எனக்கு அலுத்துப் போச்சு. இப்ப எந்த மதத்திலும் எனக்கு நம்பிக்கை இல்லை. அன்பு வைக்க சுதந்திரம் இல்லாத எந்த மதமும் எனக்கு வேணாம். மதத்தை எல்லாம் விட்டுட்டு, இப்போ கடவுள் மேலே முழு நம்பிக்கை வந்திருக்கு. இந்த உலகத்திலே ஆட்டை, மாட்டை, மனுஷனை, நிலாவை, பாம்பை எல்லாம் பிறப்பித்துவிட்ட ஒரே ஒரு தெய்வத்தோடு தான் என் நம்பிக்கை. எது எப்படி இருந்தாலும், மதத்திலே இருந்து, பாவப்பட்டமுஸ்லீம்களை எதுக்காக நான் இன்னும் வேதனைப்படுத்தணும் ? சுரையாம்மா, எங்களை விட்டுடுன்னு அவங்க எல்லாம் சொல்றாங்களே. ஐயோ, பாவம் இல்லியா அவங்க.
மதம்னு சொல்றது மதகுருமார் ஜீவிக்க ஏற்படுத்தப்பட்ட வழி. தெய்வத்தை நெருங்கிப் பழகினதுக்கு அப்புறம் மதம் எதுக்கு ? ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப்னு எல்லாம் சொல்றாங்களே. மதமும் அதுபோலத்தான். எல்லாருமாக் கூடி மதத்தோட பேரில் தெய்வத்தைச் சிறுத்துப்போக வைக்கறாங்க.
ஜாதி, மதம் இதுங்களோட வலிமை கூடறபோது தெய்வத்தோட சக்தி குறைஞ்சு குறைஞ்சு போய் .. இதோ, என்னை மாதிரி எழுந்து நிக்க முடியாத தளர்ச்சி. கோவில்களிலும், பள்ளிவாசல், சர்ச்சிலே எல்லாம் மதச் சொற்பொழிவு நடக்குது. கடவுள் எங்கேன்னு கேட்டுப் பாருங்க. அங்கே எங்கியும் தெய்வத்தைப் பார்க்க முடியாது. பாவம், கடவுள்.
மசூதிக்கும், கோவிலுக்கும் போயிட்டு வரவங்க முகத்தைப் பார்த்தா எனக்குப் பயமா இருக்கு. எல்லாம் சுயநலம். தன்னோட காரியம் மட்டும் நிறைவேற பிரார்த்தனை. மத்தவங்க எல்லாம் அழியணும் அப்படின்னு இவங்களுக்கு மனசிலே நினைப்பு. அதுக்கா பத்தாயிரம் ரூபாய்க்கு வழிபாடு. கேளுங்க, இங்கே பக்கத்துலே சாப்பாட்டுக்கே வழியில்லாத ஏழைகளோட ஒரு குடியிருப்பு இருக்கு. அவங்க எல்லோருக்கும் நூறு ரூபாய்க்காவது அரிசி வாங்கித் தருவாங்களா இவங்க ? அப்படின்னா, தெய்வத்துக்கு அதுதான் ரொம்பப் பிடிச்ச காரியம்.
முப்பது வருஷமா நான் கோவிலுக்குப் போய்வந்தேன். இப்போ குனிஞ்சு நமஸ்கரிக்க முடியலே. உடம்பை அசைக்கறதுலே பயன் இல்லே. மனசு அசையணும். அதான் முக்கியம்.
இது ஆபாசம் அப்படான்னு தெய்வத்துக்குத் தோணாதது எல்லாம் நான் எழுதுவேன். புரணி பேசறது, அடுத்தவங்களைக் கேலி செய்யறது, அப்பாவிகளைப் பரிகசிக்கறது இந்த மாதிரி ஒண்ணும் நான் எழுதினதில்லே. நான் எழுதறதெல்லாம் ஆபாசம் அப்படின்னா வேறே என்னத்த எழுத ? காதலிக்கிறவங்களுக்கு சிற்றின்பத்தில் இச்சை வராதா என்ன ? கண்ணனும் ராதையும் போகத்திலே ஈடுபட்டு இருக்கறதைச் சொல்றதுதானே கீத கோவிந்தம் ? எவ்வளவு அழகான புத்தகம் அது. அது வெறும் காமம்னு சொல்லிப் புத்தகத்தைக் கொளுத்திப் போடணுமா ?
தெய்வத்தின் முன், காதலுக்கு முன் நாம் நம்முடைய ஜீவிதத்தை சமர்ப்பிக்கணும். எனக்குன்னு இந்த உலகத்திலே எதுவும் இல்லை. நாம இருக்கும்போது நான், என்னுதுன்னு நினைப்போம். இந்த 'நான் ' என்பதுக்கு அம்மாவும் அப்பாவும் கொடுத்த பெயரைச் சொல்லிக் கூப்பிடப்படுவோம். முகக் கண்ணாடியில் பார்த்து நம்மை நாமே பிரியப்படுவோம். ஆனா அதெல்லாம் எத்தனை காலம் ? எழுபது வருஷம் அப்படான்னு சொல்றது ஏழு நொடியிலே கடந்து போயிடறது நமக்குத் தெரியாது. எதைக் கொடுத்தாலும் கூடவே அன்பையும் கொடுங்க.
கொடுப்பதற்குக் கற்றுத் தரணும் குழந்தைகளுக்கு. இப்போ எல்லோருக்கும் எடுக்க மட்டும்தான் தெரியும். கையில் ஏதுமில்லாவிட்டாலும் அன்பைக் கொடுக்கவாவது நாம் கற்றுக் கொள்ளணும். அப்போதான் தெய்வத்தை நமக்கு அடையாளம் தெரியும்.
யாரும் யாரையும் சதியில் தள்ளமுடியும். அதுவும் காதல்னு சொல்லி. ராத்திரி பன்னிரெண்டு மணிக்கு எழுப்பி, ஃபோனில் கவிதையோ பாட்டோ பாடிக் கொடுத்தால், எந்தப் பெண்ணும் காதலிப்பாள்.
காதலிக்காமல் எப்படிக் கல்யாணம் செய்துக்கறது ? சட்டுனு பார்த்த ஒருத்தனோடு கட்டிப் பிடிச்சுக் கிடக்க என்னாலே முடியாது.
என் கதைகளிலே வர ஜானுவைத் தெரியும்தானே ? என் கூடத்தான் இருக்கா. என்னை விட கொஞ்சம் வயசு அதிகம். அவளுக்கு சின்ன வயசா ஒரு காதலன் இருக்கான். அதுனாலே வயசு தெரியலை.
இப்பவும் எனக்குக் கிருஷ்ண பகவானை ரொம்பப் பிடிக்கும். ஒரு காதலானாக. கணவனாக. தெய்வமாக இல்லை. 'உன்னிகிருஷ்ணன், உன்னிகிருஷ்ணன் ' அப்படான்னு தேவநாமம் கேட்டு வளர்ந்தவளாச்சே நான். முஸ்லீம் ஆனபோது, நாயர் பெண்களிலிருந்து எனக்கு சுதந்திரம் கிடைச்சது. அவங்க சரியான குசும்பு பிடிச்சவங்க. விதவையானா, பாகவதம் படிச்சு வீட்டுலே கிடக்கணுமாம். எனக்கு அதெல்லாம் முடியாது.
நான் இப்பவும் சைவம்தான். முஸ்லீம் ஆனபோது பலபேர் கேட்டாங்க - மாமிசம் எல்லாம் இனி சாப்பிட வேண்டி வருமே அப்படான்னு. நான் ஒரு கொசுவைக் கூடக் கொன்னது இல்லே. அது கடிச்சா ஒரு துளி ரத்தம் போகும். போகட்டுமே. அதுக்கும் உயிர் வாழறதுக்கும் ஒரு துளி ரத்தம் குடிக்கறதுக்கும் உரிமை இருக்கு.
வயசாச்சு. என் அழகு எல்லாம் போயாச்சு. நான் எதுக்கு இனியும் பவுடர் எல்லாம் பூசிக்கணும் ? ஃபோட்டோ எடுக்க பவுடர் போடணுமாம். சுகுமார் அழிக்கோடு சாருக்கு பவுடர் பூசித்தான் ஃபோட்டோ பிடிப்பீங்களா ? (சுகுமார் அழிக்கோடு - மூத்த இலக்கிய விமர்சகர்).
இந்த எழுதும் அறை, படுக்கை அறை இது ரெண்டும் தான் என் உலகம் இப்போ. தள்ளாமை. எங்கேயும் போக முடியலை.
ஜெயில்லே இருந்து விடுதலையானவங்க, சித்தப் பிரமை உள்ளவங்க, குழந்தைகள் இப்படி எத்தனையோ பேர் என்னைத் தேடி வராங்க. என் கையில் அன்பும் பாசமும் உண்டு. அதுனாலே தான். அதை நான் அவங்களுக்குத் தரும்போது எனக்குக் கடவுளை அறிய முடிகிறது. ஒரு ஷாக் போல், கைவிரல் நுனியில் தெய்வத்தின் இருப்பு எனக்குத் தெரியுது.
டி.வி சீரியலில் எப்பவும் அழுதபடி வரும் பெண்களைக் குற்றம் சொல்லிட்டு இருந்த நானும் இப்போ அழ ஆரம்பிச்சுட்டேன். துன்பம் தாங்கலை. இதை என்னால் பார்க்க முடியாது. பெண்ணு, பிள்ளைன்னு இருக்கறது நல்லதுதான். ஆனால் புது வருட வாழ்த்து சொல்லக்கூட அவங்க வராட்ட துக்கம்தான்.
கொஞ்ச நாள் முன் எட்டு தினம் பரோலில் வெளியே வந்த ஒரு கொலைக் குற்றவாளி என்னைப் பார்க்க வந்தான். அவன் என்னை ஏதாவது செய்திடுவான்னு இங்கே இருக்கப்பட்டவங்க பயந்து போனாங்க. உங்க மடியிலே தலை வைச்சுக்கட்டுமா அம்மான்னு அவன் கேட்டான்.
குளிக்காமல், தலையெல்லாம் பரட்டையாக இருந்த அவனுக்கு அதுதான் ஆறுதல் தரும் அப்படான்னா, சரிதான்னு சொன்னேன். அவன் தலையை வருடினேன். எப்படிக் கொலை செய்தான்னு கேட்டேன். வயிற்றிலே குத்தி குடலை உருவியெடுத்தானாம். அது கஞ்சி கொதிக்கறது போல சூடாக இருந்ததாம். ஏன் கொலை செய்தேன்னு கேட்டேன். பதில் சொல்லலே. வீட்டில் யாரெல்லாம் உண்டுன்னு கேட்டேன். யாரும் இல்லேன்னான். ஜெயில்லே என் புத்தகம் எல்லாம் படிச்சானாம். பரோல்லே வந்ததும் நேரே என்னைப் பார்க்க வந்திருக்கான். கல்யாணம் ஆச்சான்னு கேட்டேன். இல்லேன்னான். ஏதாவது எனக்குச் சொல்லுங்கன்னான். எனக்கு என்ன சொல்லத் தெரியும் ?
சொன்னேன் - 'நான் இப்படி ஜெயில்லே இருந்து எட்டு நாள் பரோல் கிடைச்சா, யார் மேலாவது அன்பு வைப்பேன். பாசத்தோட அவங்க கூட இருப்பேன் '.
கொஞ்ச நாள் கழிச்சு மாத்ருபூமியிலே அவன் பரோல்லே இருக்கும்போதே கல்யாணம் செஞ்சுக்கிட்டான்னு படிச்சேன். மகிழ்ச்சியா இருந்தது. எனக்கு இப்படித்தான் சொல்ல முடியும். அன்போடு இரு. உயிரோடு இருக்கற வரை அன்போடு இரு.
எல்லா வருஷமும் அமீரக வானொலிக்காக நான் புத்தாண்டு வாழ்த்துச் சொல்வது வழக்கம். இந்த ஆண்டும் அவங்க என்னைக் கூப்பிட்டாங்க. நான் அழுதேன். எல்லாரும் செத்துப்போய் மண்மறைஞ்சு போயாச்சே. அழாமல் எப்படி முடியும் ?
நான் இப்போ ஒரு நாவல் எழுதிட்டு இருக்கேன். அது ஒரு முஸ்லீம் பெண் எழுதக்கூடியதில்லை. அதனால் ஒருவேளை என்னை மதத்தை விட்டு விலக்கலாம். இந்த நாவலை எழுதும்போது நான் பழைய மாதவிக்குட்டிதான். நாலப்பாட்டு மாதவிக்குட்டிக்குத்தான் அதை எழுத முடியும். சில உண்மைகளை இன்னும் நான் உலகத்துக்குச் சொல்ல வேண்டி இருக்கு. எல்லாம் சொல்லிய பிறகு நான் போய்ச் சேர்ந்திடுவேன்.
(நன்றி மாத்ருபூமி)
----
eramurukan@yahoo.com
Copyright:Thinnai.com
*******************(3) **************
Friday October 6, 2006
கருத்துக்கள் குறித்து சில கருத்துக்கள் - ரசூல், பாபுஜி,விஸ்வாமித்ரா,ரூமி, வெ.சா
நேசகுமார்
.........
காரத்தைத் தவிர்த்துப் பார்த்தால், விஸ்வாமித்ரா அவர்களின் கடிதம் மிகவும் சிறப்பான முறையில் நாகூர் ரூமி அவர்களின் படைப்பை விமர்சித்திருந்தது. கமலா சுரைய்யா விஷயத்தில் அவர் சொல்லியுள்ள இந்த கருத்தோடு அப்படியே உடன்படுகிறேன்:
'எழுத்துச் சுதந்திரமும் பேச்சுச் சுதந்திரமும் பரிபூரணமாய் நிலவும் நெதர்லாண்டிலேயே ஒரு தியோ வான்கோ பட்டப் பகலில் கழுத்தை அறுத்துப் பயங்கரமாகக் கொல்லப் படுகிறார் என்றால், ஒரு படித்த டாக்டர் பட்டம் பெற்ற ரூமியே ஒரு ருஷ்டியை கல்லை விட்டு எறிந்து கொல்லப் பட வேண்டும் என்று பரிந்துரைக்கிறார் என்றால், எவ்விதப் பாதுகாப்பும் இல்லாத ஒரு மாதவிக் குட்டி கமலா தாஸ் எங்கனம் தன் மனதில் தோன்றிய கருத்தைச் சுதந்திரமாகச் சொல்ல முடியும் ? சர்வ வல்லமையுள்ள போப் பெனடிக்டே இன்று வெளியே தலை காட்ட இயலாத அளவுக்கு வன்முறை பரவுகிறது என்றால் ஒரு அய்யோ பாவம் கமலா தாஸ் என்ன செய்வார் ? இஸ்லாத்தை ஆதரித்து அறிக்கை வெளியிடுவதை விட ? அவர் சொல்ல வேண்டிய செய்திகளைத் தெளீவாகவே சொல்லி விட்டார். இனிமேல் தன் உயிரைக் காத்துக்கொள்ள வேண்டி, ஒரு வயதான பெண்மணி செய்யும் தற்காப்பு முயற்சிகளே கமலாதாசின் பேட்டிகள் என்றுதான் உண்மையை உணர்ந்தவர்கள் எடுத்துக் கொள்வார்கள். ஒரு தீவீரவாத, வன்முறை மதத்தின் முன்னால் ஒரு வயதான எழுத்தாளர் அதுவும் இந்தியா போன்ற தனி மனித பாதுகாப்பு இல்லாத ஒரு நாட்டில் உள்ள ஒரு முதிர்ந்த பெண்மணி விடும் அறிக்கைகளில் ஏதும் வியப்பு இல்லை.'
நான் எனது முதலாக்கத்திலேயே இதைத்தான் சொல்லியிருந்தேன். வெளிப்படையாக தமது ஈமானிழப்பை காட்டிக் கொள்ள இயலாத நிலையில் இருக்கும் கமலாதாஸ் (எ) மாதவிக்குட்டி(எ) கமலா சுரையா, இஸ்லாத்தை விஷப்பாம்பு என்று வெளிப்படையாக அறிவித்து தீவிரமாக அதை விமர்சிக்கும் தஸ்லிமா நஸ்ரீனை வரவேற்று அவரிடம் தாம் இஸ்லாத்தைத் தழுவியது குறித்து வருந்துகிறேன் என்று உணர்த்தியதையும், தஸ்லிமாவே தனது பேட்டியில் இதைக் குறித்து சொன்னதையும் சுட்டியோடு எழுதியிருந்தேன். பரவாயில்லை இஸ்லாமிஸ்ட் பூனைகள் கண்ணை மூடிக்கொண்டு உலகமே ஜஹிலியா இருட்டில் ஆழ்ந்திருப்பதாக கற்பனை செய்து கொள்ளட்டும், அதில் எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை.
......
Copyright:Thinnai.com
********************** (4) **************
Thursday September 7, 2006
கடிதம் - மதம் மடுத்த சுரையா
நேசகுமார்
பாபுஜி என்பவர் 1செப்டம்பர்,2006 திண்ணையில் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் எனது எண்ணச்சிதறல்களில் வந்துள்ள இரு தகவல்கள் பிழையானது என்று தெரிவித்துள்ளார்.
அவர் சுட்டிக் காட்டியுள்ள இரண்டாவது பிழையைப் பற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் காலச்சுவடு மற்றும் டெஹல்காவில் வந்துள்ள தலையங்கம் மற்றும் கட்டுரைகள்(முறையே) பற்றிய எனது மதிப்பீடுகளை ' பிடிவாதமான புரிதல்' என்று விமர்சிக்க அவருக்கு சுதந்திரம், உரிமை உண்டு. அதை எதிர்கொள்ள வேண்டும் என்கிற நிர்ப்பந்தமும் எனக்கில்லை. கருத்துப் பரிமாற்றங்களின் அடிப்படையே இந்த மாறுபட்ட கருத்துக்கள், புரிதல்கள்தாம்.
ஆனால், முதல் குற்றச்சாட்டாக அவர் முன்வைத்திருப்பது, நான் தவறான தகவலை வாசகர்களுக்கு முன்வைப்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்துவதால் அதை மட்டும் விளக்க, ஆதாரங்களை முன்வைக்க முயற்சிக்கிறேன்.
முதலாவதாக, கமலா சுரையாவாக மதம் மாறிய மாதவிக்குட்டி(எ)கமலாதாஸ் தமக்கு மதம் அலுத்துப் போனது (மதம் மடுத்து) என்கிற தலைப்பில் எழுதியிருந்த நீண்ட, அழகிய கட்டுரையின் தமிழ் மொழியாக்கம் இதே திண்ணையில் ஜனவரி 20, 2005 அன்று வெளியாகியிருந்தது. மொழியாக்கம் செய்தவர், தமிழிலக்கிய உலகம் நன்கு அறிந்த திரு.இரா.முருகன். அக்கட்டுரையை இங்கே காணலாம்( http://www.thinnai.com/?module=displaystory&story_id=60501205&format=html).
நான் குறிப்பிட்டிருந்த அனைத்து விஷயங்களையும் மாதவிக்குட்டி(எ)எக்ஸ்-சுரையா(எ)கமலாதாஸ்(எ) கமலா சுரையா அவர்கள் விளக்கமாக அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்:
"நான் கொஞ்ச நாள் நானாகவே இருந்தேன். அப்போ கொஞ்சம் போல காதல் எல்லாம் வந்தது. கொஞ்ச நாள் விதவையா வாழறேன். அப்படி இருக்கறபோது, நேசம் தரேன்னு ஒருத்தன் சொன்னான். நானும் ஒரு பெண்ணில்லையா ? அவனெ நம்பினேன். பெண்ணுக்கு எப்பவும் ஒரு பாதுகாப்பாளன் வேணும். அவன் என்னை மதம் மாறச் சொன்னான். நானும் மாறினேன். காதலுக்காக எதையும் துறக்க நாம் தயார் ஆச்சே."
மேலே கண்ட வரிகளில் கமலாதாஸ் தெளிவாகக் குறிப்பிடுகிறார், தாம் மதம் மாறியது தன்னை காதலிப்பதாக சொன்ன ஒருவனின் நிர்ப்பந்தத்தால்தான் என்று. காதலினால் மதம் மாறினேன் என்று கமலாதாஸே ஒப்புக் கொண்டபின் இதை ஒப்புக் கொள்வதில் யாருக்கும் எவ்வித பிரச்சினையும் இருக்காது என்றே கருதுகிறேன்.
மேலும் எழுதுகிறார் கமலாதாஸ்:
"இப்போ இந்த வேஷம் (தலையில் முக்காடாக வந்து, முகம் மறைக்காத பர்தா) தான் பாக்கி. இது மோசமில்லைன்னு தோணுது. என் முடியெல்லாம் நரைச்சுப் போனது வெளியிலே தெரியாதில்லையா ?...."
தாம் பர்தா அணிந்திருப்பது மதநம்பிக்கையால் அல்ல, தலையில் உள்ள நரைமுடிகள் வெளியில் தெரியாமலிருக்கத்தான் என்று.
தாம் எந்த மதத்திலும் தற்போது நம்பிக்கை வைக்கவில்லை என்று இன்னொரு வரியில் குறிப்பிடுகிறார்:
"மதமெல்லாம் எனக்கு அலுத்துப் போச்சு. இப்ப எந்த மதத்திலும் எனக்கு நம்பிக்கை இல்லை."
மதத்தில் நம்பிக்கை போய்விட்டது என்று சொல்கிறவர் இன்னமும் இஸ்லாத்தில் இருக்கிறார் என்று நம்பிக்கொண்டிருக்க யாருக்கும் உரிமை உண்டு, ஆனால் அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வண்ணம் கடைசிப் பாராவில் மீண்டும் தெளிவாக இப்படி அறிவிக்கிறார்:
"நான் இப்போ ஒரு நாவல் எழுதிட்டு இருக்கேன். அது ஒரு முஸ்லீம் பெண் எழுதக்கூடியதில்லை. அதனால் ஒருவேளை என்னை மதத்தை விட்டு விலக்கலாம். இந்த நாவலை எழுதும்போது நான் பழைய மாதவிக்குட்டிதான். நாலப்பாட்டு மாதவிக்குட்டிக்குத்தான் அதை எழுத முடியும். சில உண்மைகளை இன்னும் நான் உலகத்துக்குச் சொல்ல வேண்டி இருக்கு. எல்லாம் சொல்லிய பிறகு நான் போய்ச் சேர்ந்திடுவேன்."
பழைய மாதவிக்குட்டிதாம் தான் என்று ஜனவரி, 2005ல் எழுதிய கமலாதாஸ், இஸ்லாம் இன்றைய உலகிற்கு தேவையில்லை என்று சொல்லும், எழுதும் தஸ்லிமா நஸ்ரீனை தம் வீட்டில் வரவேற்று பேசும்போது இஸ்லாத்துக்கு மதம் மாறியது குறித்து வருந்தியிருக்கிறார். இது பற்றிய பிடிஐ செய்தி:
"On Kamala Surayya's decision to embrace Islam, Nasreen said: "I asked her why did you do that. She was silent. I asked whether she regretted it. She said "yes," Nasreen revealed at a meet-the-press programme here.
Nasreen said Kamala Surayya was now in a cage and she should have the freedom to come back and "live the life she likes."
http://www.outlookindia.com/pti_news.asp?id=408787
மற்ற பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது இது. பார்க்க:
"Controversial Bangladeshi writer Taslima Nasreen said here on Tuesday that Anglo-Indian poet and novelist Kamala Surayya (also known as Kamala Das) had told her that she regretted converting to Islam.Talking to mediapersons at the Press Club, Ms Nasreen said that she had met Surayya the other day and had asked her whether she regretted becoming a Muslim. "She replied yes," said Ms Nasreen. "She has understood that Islam does not provide equality," she added. Kamala Das had made a much-publicised conversion to Islam some years ago. Ms Nasreen said that Islam was not compatible with the ethos of the 21 st century. "Islam and its scriptures are out of place in the modern world," she said. "It still follows the laws of the seventh century.""
http://news.sulekha.com/newsitemdisplay.aspx?cid=140749
***
இஸ்லாம் என்பது இரண்டு நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. ஒன்று, அல்லாஹ்வே கடவுள் என்பது. இரண்டாவது முகமதுவே கடவுளின் தூதர்(கடைசித் தூதர் என்று இன்று அர்த்தப்படுத்தப்படுகிறது). இந்த இரண்டிலும் நம்பிக்கை வைக்காத சுரையா இன்னமும் இஸ்லாத்தில் தான் இருக்கிறார் என்றால் அது வெறும் நம்பிக்கைதான் - நிதர்சனம் அல்ல. வஹாபிசத்தைப் பற்றி விலாவாரியாக எழுதும் பாபுஜிக்கு இது நிச்சயம் தெரிந்திருக்கும்.
எந்தவொரு விதத்திலும், அல்லாஹ்வின் மீதோ முகமதுவின் நபித்துவத்தின் மீதோ அவநம்பிக்கையை வெளிப்படுத்துவது, ஒருவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்டார் என்று அறிவிப்பதற்கொப்பாகும் என்றே இஸ்லாமிய அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
இதெல்லாம் சரி, அவர் ஏன் வெளிப்படையாக தான் இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து வெளியேறிவிட்டேன் என்று அறிவிக்கவில்லை என்ற அறிவுஜீவித்தனமான கேள்வி அடுத்து எழலாம்.
இஸ்லாத்திலிருந்து வெளியேறுபவர்களுக்கு மரண தண்டனை என்று மதம் போதிக்கும்போது, அப்படிப்பட்ட போதனைகள் கடவுளால் சொல்லப்பட்டது என்று ஒரு பெரும் கூட்டம் நம்பும்போது, வெளியேறுபவர்களுக்கு - வெளிப்படையாகப் பேசுபவர்களுக்கு தகுந்த பாதுகாப்பை சிவில் சமூகம் வழங்காமல் இருக்கும்போது கமலா சுரையாதான் என்ன செய்வார்? வயோதிக காலத்தில் ஒரு இஸ்லாமியனின் ஆசை வார்த்தைகளால் வன்கோட்பாட்டொன்றில் சென்று அகப்பட்டுக்கொண்டு வெளியேறினால் எதோ ஒரு அடிப்படைவாதியினால் கழுத்தறுபட்டு சாக அவருக்கு நிச்சயமாக விருப்பம் இருக்காது.
எனவே காலம்காலமாக இஸ்லாத்தில் மாட்டிக்கொண்டவர்கள் செய்யும் அதே விஷயத்தை அவரும் செய்துள்ளார். அதாவது symbolic ஆக தமது எதிர்ப்பை, தமது அவநம்பிக்கையை தெரிவிப்பது. அதன் எதிரொலியே "இஸ்லாம் என்பது விஷப்பாம்பு" என்று வெளிப்படையாக எழுதும், பேசும் தஸ்லிமா நஸ்ரீனை(பார்க்க அவரின் அயான் ஹிர்ஸி அலியின் The Caged Virgin
நூல் விமர்சனம் - Outlookindia 28th August 2006 Issue -
http://www.outlookindia.com/full.asp?fodname=20060828&fname=Booksa&sid=1- பதிவு செய்தால் தான் அவுட்லுக்கைப் படிக்க முடியும். இல்லையேல் இங்கே பார்க்கலாம்: ttp://64.233.183.104/search?q=cache:kZn4QClz4m0J: www.outlookindia.com/full.asp%3Fsid%3D1%26fodname%3D20060828%26fname%3DBooksa+I+Say,+Three+Cheers+For+Ayaan&hl=en&gl=in&ct=clnk&cd=1 ) வீட்டுக்கு அழைத்து தமது ஆதரவைத் தெரிவிப்பதன் மூலம் இந்த செய்தியை உலகிற்கு வழங்கியிருக்கிறார்.
***
இப்படி எதிர்ப்பை தெரிவிக்கும் முறை இஸ்லாத்தில் வன்முறை மூலம் விமர்சனங்களை, முகமது மீதான அவநம்பிக்கையை அடக்க முற்பட்ட காலம்தொட்டே தொடங்கிவிட்டது.
இதன் நல்ல உதாரணமாக முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீ•ப் அவர்களின் சகோதரரின் மனைவி தெஹ்மினா துர்ராணி எழுதிய Blasphemyயைக் குறிப்பிடலாம். சல்மான் ருஷ்டி வெளிப்படையாக முகமதுவை விமர்சித்த சாத்தானின் கவிதைகள் இஸ்லாமியர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அதே விஷயத்தை மிகவும் சாதுர்யமாக முகமதுவை புகழ்ந்துகொண்டே ஆனால் பூடகமாக எழுதிய தெஹ்மினாவின் புத்தகம் Blasphemy, எங்கும் விற்பனையில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது - சென்னையிலும் பிரபல புத்தகக் கடைகளில் கிடைக்கின்றது.
***
வேறெதும் 'அபாண்டங்கள்' எனது கட்டுரைகளில் எங்கேனும் தென்பட்டால் சகோதரர் பாபுஜி அவர்கள் அவற்றையும் தெரிவிக்கலாம். விளக்கத்தயாராகவுள்ளேன்.
அன்புடன்,
நேசகுமார்
nesakumar@gmail.comCopyright:thinnai.com
******************************************
வஹ்ஹாபியின் கட்டுரையும், ஜெயமோகன் அவர்களது கட்டுரையும்
__________________
Thursday June 4, 2009
செத்தும் கிழித்த கமலா சுரையா
வஹ்ஹாபி
'கமலாதாஸ்' என்ற பெயரில் ஆங்கிலத்தில் கவிதைகளும் 'மாதவிக்குட்டி' என்ற பெயரில் மலையாள மொழியில் சிறுகதைகளும் சுயசரிதமும் எழுதிய 75 வயதான கமலா சுரையா, கடந்த 31.06.2009 அதிகாலை 2 மணியளவில் புனேயிலுள்ள ஜஹாங்கீர் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மலையாள இதழ்களும் தொலைக்கட்சிகளும் அவரைப் பற்றிய செய்திகளைப் பதிவு செய்தன. தன் மண்ணின் மகளுக்கு மலையாள உலகம் மரியாதை செய்வது வியப்பொன்றுமில்லை. அவருக்குத் தமிழ் இணைய உலகிலும் அஞ்சலிகள் செலுத்தப் படுவதைக் காணும்போது அவரது எழுத்தின் வலிமையை, பரவலை உணர முடிகிறது.
"கேரளத்தில் தூக்குத்தண்டனை பெற்ற ஒரு கைதி, சிறையில் இவருடைய எழுத்தை வாசித்தார். பிறகு தண்டனைக்குறைவு பெற்று விடுதலையாகி மாதவிக்குட்டியின் வீட்டுக்கு வந்து, 'அம்மயுட மடியில் தலைவைத்துக் கிடக்கணும்' எனக் கோரினார்; அது நிறைவேறியது"
என்று 'மாதவிக்குட்டிக்கு அஞ்சலி' என்ற பதிவில் நாகார்ஜுனன் குறிப்பிடுகிறார் [சுட்டி-1]. மேலும் மாதவிக்குட்டியைத் தான் சந்திக்க நேர்ந்த நிகழ்வைப் பற்றிச் சொல்லும்போது,
"டைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலகத்துக்கு அகஸ்மாத்தாக நான் சென்றபோது அங்கே காரில் இவர் ஏறிக்கொண்டிருந்தார். உளவுத்துறை விசாரணை பற்றிய யோசனையிலேயே நான் சென்றதால் என் மோட்டார் சைக்கிள் இவர் காரை உரசிவிட்டது. ஓட்டுநர் என்னை ஏதும் சொல்வதற்குள் 'எந்தா மோனே..' என்று வந்து என் தோளைத் தட்டிச் சிரித்தார். நிறைய நகை அணிந்திருந்தார். கைவளை ஒலி காதுவரை சென்று மீண்டும் சிலிர்த்தேன். அப்போதுதான் தொட்டது மாதவிக்குட்டி என உணர்ந்தேன்.
"ஓ, என் தப்புதான்.. ஸாரி.... உங்கள் கதைகளை வாசித்திருக்கிறேன்..."
"எந்தினா ஸாரி மோனே, என் கதைகளை வாசித்ததற்காகவா.." என் கன்னத்தில் லேசாகத் தட்டிவிட்டு சட்டென்று காரில் ஏறிச் சென்றார்"
என்று குறிப்பிட்டு விட்டு, மாதவிக்குட்டியின் நினைவாக அவரது "நெய்ப்பாயாசம்" கதையைத் தமிழாக்கித் தந்திருக்கிறார் நாகார்ஜுனன். ஏற்கனவே கீற்று இதழில் குருமூர்த்தியும் நெய்ப்பாயாசத்தை, மெருகேற்றிய தமிழில் பதித்திருக்கிறார் [சுட்டி-2]. அச்சிறுகதையின் இறுதிப் பகுதியான, "அவர்கள் சாப்பிடட்டும்.... அவளுடைய கைப்பட்ட சமையல் இனிமேல் அவர்களுக்கு கிடைக்கப் போவதில்லையல்லவா" என்று முடிவதைப் படித்தபோது இனிமேல் கமலா சுரையா எழுதப் போவதில்லை என்ற உண்மையின் ஒலியும் நமக்குள் அங்குப் பேசாமல் பேசுகிறது.
"பொதுவாக, ஏறத்தாழ எல்லா இலக்கியவாதிகளுமே தங்களது குழந்தைப் பருவத்தைப் பற்றி எழுதும்போது, அது வறுமை நிறைந்த சூழலுடன் இருந்திருந்தாலும் தாங்கள் அனுபவித்த குழந்தைப் பருவத்தை ஒரு கனாக் காலமாகவே எழுதுவர். ஆனால், கமலாதாஸ் தனது குழந்தைப் பருவத்தைப் பற்றி, 'Punishment in kindergarten' என்ற கவிதையில் எழுதும் அம்சம் முற்றிலும் மாறுபட்டது"
என்று 'அஞ்சலியும் ஆசையும்' எனத் தலைப்பிட்டு 'குளோபன்' எழுதுகிறார் [சுட்டி-3] அந்தக் கவிதையில் கமலாதாஸின் உணர்ச்சிகள் ஆங்கிலப் புலமையோடு இரண்டறக் கலந்திருப்பதைக் காண முடிகிறது!.
மலையாளத்தில் அவர் எழுதிய சுயசரிதையான 'எண்ட கதா' (என் கதை) குமுதத்தில் தமிழில் தொடராக வெளிவந்தபோது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை அது கிளப்பியது.
"என் கதை"யை நீங்கள் எழுதியபோது மக்கள் அதிர்ந்து போயினரே? என்ற ரீடிஃப் ஷோபா வாரியர் விடுத்த கேள்விக்கு, "அதெல்லாமில்லை; அதிர்ந்ததுபோல் பாசாங்குதான் செய்தனர்" என்று தனது வெளிப்படையான எழுத்தை நியாயப் படுத்தினார் கமலா [சுட்டி-4].
"தனது கதைகளூடாக, துரோகத்தை அதன் கொடூரத்தை தயவுதாட்சண்யமே இல்லாத அதன் இருப்பை, கமலாதாஸ் போல அடித்தவர்கள் யாரும் கிடையாது"
என்று அவர் எழுதிய 'பொய்கள்' என்ற கதையை மேற்கோள் [சுட்டி-5] காட்டுகிறார் இலங்கைத் தமிழ் எழுத்தாளர் 'பொடிச்சி':
பிள்ளையைத் தகப்பனுடன் விட்டுவிட்டு வேலைக்குப்போகிற தாய். தாய் சென்ற பிறகு, வருகிற அப்பாவின் காதலி(கள்?). அவர்கள் அப்பாவோடு இருப்பதை –அம்மா வருகிற நேரத்திற்குமுன் போய்விடுவதை- பார்க்கும் பிள்ளை. அந்தக் காதலிகள் பிள்ளையை அணைத்தும் கொஞ்சியும் இனிப்புகள் தந்து செல்வார்கள். பிள்ளையின் பார்வை மட்டும்தான் அங்கிருக்கும். இதைத் தன் தாயிடம் தன்னுடைய மொழியில் இனிப்புகளின்/அவர்கள் அணிந்து வந்த ஆடைகளின் வாசனையைக் குறிப்பிட்டுப் பிள்ளை சொல்லும்போதெல்லாம், பிள்ளை 'பொய்' சொல்வதாகவும் வரவர அவன் பொய்கள் கூடுவதாகவும் தகப்பன் சொல்லுவார். பொய் கூடக்கூட அடிப்பாரோ என்னவோ! தாய் அமைதியாக அவனிடம் அவன் சொல்லுகிற கதைகளைக் கேட்டபடி, "ஏதேனும் கனவு கண்டியோடா?" எனத் தடவிக் கொடுப்பாள். "உண்மையாத்தான்" என அழுவான் - கதையின் முடிவு வரை!
"அரசியல் கட்சிகளை அளவுகடந்து நேசிக்கும் மனிதர்களைப் பார்க்கிறேன்; மதத்தை அளவுகடந்து நேசிக்கும் மனிதர்களைப் பார்க்கிறேன்; ஆனால் மனிதத்தை நேசிக்கும் மனிதர்களைப் பார்ப்பது அபூர்வமாகி விட்டது!" "நான் தேடிய அன்பு இஸ்லாத்தில் கிடைத்தது. அதனை ஒரு போதும் இழக்க விரும்பவில்லை." "எனக்கு இஸ்லாம் பிடித்திருக்கிறது. அது சொல்கிற வாழ்க்கை எனக்குத் திருப்தியாக இருக்கிறது." "நான் முஸ்லிமாக வாழ்கிறேன். என் மூத்த மகன் புத்த மதத்தைத் தழுவியிருக்கிறான். என் இளைய மகன், 'நீதான் எனக்கு மதம், கடவுள் எல்லாமே!' என்று தாய்மையைக் கொண்டாடுகிறான். எல்லோரும் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் யாரும் யாரையும் தொந்தரவு செய்வதில்லை. யாரும் யாரையும் தாழ்வாகக் கருதுவதில்லை. என் வீட்டுக்குள் சாத்தியமான இந்த நிலை, என் நாட்டுக்குள்ளும் இருந்தால், இந்த கமலாதாஸ் வேறு ஏதாவது எழுதிக்கொண்டு இருக்கலாம்" என்ற கமலா சுரையாவின் ஆசையை, தம் அஞ்சலிப் பதிவாக்கி இருக்கிறார் மரைக்காயர் என்ற முஸ்லிம் பதிவர்
[சுட்டி-6].
இதுவரைக்கும் எல்லாம் சரிதான்.
சுவையான 'நெய்ப்பாயாச'த்தில் கிடக்கும் பொடிக்கல்லைப்போன்ற ஒரு பதிவையும் படிக்க நேர்ந்தது. அது ஜெயமோகனின் பதிவு:
கேரள சாகித்ய அகடாமி அலுவலகத்தில் கமலாதாஸைச் சந்தித்ததாக தொடங்கும் ஜெயமோனின் 'அஞ்சலி: கமலா சுரையா' என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள பதிவைப் படிப்பவர்களுக்கு [சுட்டி-7] அவர் கமலாதாஸைத்தான் சந்தித்தாரா அல்லது வேறு யாரையோவா என்ற ஐயத்தை ஏற்படுத்தும் வண்ணம் அவர் எழுதுகிறார்:
"கமலாவின் பிரச்சினைகளின் ஊற்றுமுகம் ஒன்றுதான். அவர் அழகி அல்ல. கறுப்பான குண்டான கிட்டத்தட்ட அவலட்சணமான பெண். அழகிகளின் குடும்பத்தில் பிறக்கவும் நேரிட்டது. இந்த தாழ்வுணர்ச்சியில் இருந்து உருவான திரிபு பட்ட ஆளுமை அவருடையது"
இதழ்கள், தொலைக்காட்சிகள் நமக்குக் காட்டுகின்ற இப்போதைய கிழவி கமலாவே ஜெயமோகன் குறிப்பிடும்படி 'அவலட்சணமாக' இல்லை என்பதால் அவரது அப்போதைய 'சந்திப்பு' நிகழ்வு என்பதே கற்பனையோ என்று எண்ணத் தோன்றுகிறது. இங்குக் கமலா சுரையாவின் படமும் இணைத்திருக்கிறேன். வாசகர்கள் முடிவு செய்யட்டும்.
இராக் அதிபர் சத்தாம் ஹுஸைன் கைது செய்யப் பட்டபோதுமின்றி, அவரைத் தூக்கிலிட்டுக் கொன்ற பிறகும் "அவர் சத்தாம் அல்ல; அவரைப்போல் உருவம் கொண்ட டூப்ளிகேட்" என்று சொன்ன முஸ்லிம்களையும் அண்மையில் சிங்கள இராணுவத்தால் கொல்லப் பட்ட விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் "மாவீரர் தினத்தன்று தோன்றுவார்" என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கும் புலி ஆதரவாளர்களையும் காணும்போது, உண்மைகளை ஏற்றுக் கொள்ளப் பிடிவாதமாக மறுக்கும் மனப்பான்மை அவர்களிடம் குடிகொண்டிருப்பதை உணர்கிறோம். அதேபோன்ற தன் உள்ளக்கிடக்கையில் ஒளிந்து கொண்டிருக்கும் 'அல்ப ஆசை'களை ஜெயமோகன் தனது எழுத்துகளில் வெளிப்படுத்துகிறார்:
"... அதற்கு ஆறுமாதம் கழித்து கமலா தாஸ் மதம் மாறி கமலா சுரையா ஆக ஆனார். அவரை அவரது 65 வயதில்! ஒரு புகழ்பெற்ற இஸ்லாமிய பேச்சாளர் அவரை திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி மதம் மாற்றியதாகச் சொல்லப்பட்டது. கமலாவே 'பாதுகாப்பான துணை தேடி' மதம் மாறியதாக ஊடகங்களிடம் சொன்னார். ஆனால் நினைத்தது போல திருமணம் நடக்கவில்லை. ஆகவே கடுமையான அதிருப்தியை வெளிக்காட்டினார். மீண்டும் குருவாயூரப்பனின் பக்தையாக ஆகிவிட்டதாகவும் ஒரு இந்துவாக வாழ்வதாகவும் சொன்னார். ஆனால் இம்முறை ரகசியமாக மிரட்டலுக்கு ஆளானதனால் மீண்டும் மதம் மாறும் உத்தேசத்தைக் கைவிட்டார்"
செத்துப் போனவர் திரும்ப வந்து மறுக்கப் போவதில்லை என்ற தைரியத்தில், நாலாந்தர எழுத்தாளனைப்போல் ஜெயமோகன் எழுதியிருப்பதைப் படிப்பதற்கே அருவருப்பாக இருக்கிறது!
இவ்வாக்கத்தின் தலைப்பை ஒருமுறை படித்துக் கொள்வோம்.
'செத்தும் கொடை கொடுத்த சீதக்காதி வள்ளல்' என்று சொல்வதுபோல் செத்த பிறகும் ஜெயமோகன் என்ற எழுத்தாளனின் முகமூடியைக் கிழித்தார் கமலா சுரையா. 'செத்த பிறகும்' என்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறேன்.
"என்னைப் பற்றி அவதூறுகள் பரப்புபவர்களையும் தவறாக எழுதுபவர்களையும் பலவேளைகளிலும் சபிக்க வேண்டும் என்று தோன்றும். அந்த அளவுக்கு அவர்கள் என்னைத் துன்பப்படுத்துகின்றனர். என் மீது இந்த அளவிற்கு அவர்களுக்கு வெறுப்பு வர நான் அவர்களுக்கு என்ன தீமை செய்தேன்?. அன்பு அல்லாமல், யார் மீதும் நான் வெறுப்பு காட்டியதே இல்லை. என்னைக் குறித்துத் தவறான கதைகள் எழுதியதைக் கேள்விப்படும்போது 'நாசமாப் போக' என்று சபிக்கத் தோன்றும். இந்துவாக இருந்திருந்தால் அதைச் செய்திருப்பேன். ஆனால், இப்போது என்னால் முடியாது! துன்பம் இழைப்பவர்களுக்கும் இஸ்லாம் நன்மை செய்யுமாறு கூறுகிறதே! அவர்கள் நன்றாக எழுதட்டும். என்னால் அவர்களைச் சபிக்க இயலாது!"
மேற்காண்பவை, புனாவிலுள்ள கமலா சுரையாவின் மகன் ஜெயசூர்யாவுடைய வீட்டில் வைத்து (சென்ற மாதம்) கைரளி தொலைக்கட்சிக்குக் கமலா சுரையா அளித்த பேட்டியின்போது அவர் கூறியவையாகும். கடந்த 02.06.2009 இரவு கைரளி மக்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பியபோது அவர் கூறியதாக மளையாள நண்பர் ஒருவர் எனக்குத் தமிழாக்கித் தந்தவை. எழுதி இரண்டு நாட்களுக்குள் ஜெயமோகனின் முகமூடி கிழிபட்டது இப்படித்தான்.
மேலும்,
"பூனாவில் சொந்தமாக வீடு வாங்கும் அளவுக்குக் கையில் போதிய பணம் ஏதும் இல்லை. அந்த அளவுக்குச் சேமிக்கவில்லை. எழுதிக் கொண்டிருந்த காலத்தில் கணவருக்கும் தனியாக நல்ல வருமானம் கிடைத்துக் கொண்டிருந்ததால், எனக்கு எழுத்தின் மூலம் கிடைத்த வருமானத்தைப் பிறருக்குக் கொடுப்பதில் மகிழ்ச்சியடைந்தேன்! அதற்கு என் கணவரும் எவ்வித எதிர்ப்பும் சொல்லவில்லை. மற்றவர்களுக்கு உதவுவது என்பதே தனி ஒரு மகிழ்ச்சிதானே?. கிடைப்பதை எல்லாம் நமக்கே என்று சேர்த்து வைத்து நாம் எதைக் கொண்டு போகப் போகிறோம்? மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும். அதிகமதிகம் கொடுக்க வேண்டும். ஒருவேளை நான் இஸ்லாத்திற்கு மாறியதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். மற்றவர்களுக்குக் கொடுப்பதைச் சட்டமாக, கடமையாகவே ஆக்கி வைத்திருக்கும் மார்க்கம் அது. எவ்வளவு அழகான மார்க்கம்! வருமானத்தில் 2.5 சதவீதத்தைக் கட்டாயமாக சக்காத்தாக பிறருக்குக் கொடுக்க இஸ்லாம் கட்டாயப்படுத்துகிறது. முன்னரும் நான் கொடுத்துக் கொண்டிருந்தேன். இப்போது இன்னும் இன்னும் அதிகமதிகம் கொடுக்கிறேன். 2.5% அல்ல, என்னிடமுள்ளதில் பாதியைக் கொடுக்கிறேன்; இன்னும் காலம் செல்ல முக்கால் பாகம், ஏன் முழுவதையுமே நான் கொடுப்பேன். பிறருக்குக் கொடுப்பதில் கிடைக்கும் சந்தோசம், அது ஒரு தனி ரகம். அனுபவித்தவர்களுக்கே அது புரியும்!"
என்று மூச்சுக்கு மூச்சு, தான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை நெறியான இஸ்லாம் குறித்துப் பெருமை பொங்கப் பேசும் கமலா சுரையாவை, "மீண்டும் குருவாயூரப்பன் பக்தை"யாக்கிப் பார்ப்பதற்கு ஜெயமோகனுக்கு அற்ப ஆசை!
கமலா சுரையாவுக்குக் கொலை மிரட்டல்கள்/கொலை முயற்சிகள் இருந்தன என்பது உண்மைதான். அவை எங்கிருந்து வந்தன என்பதை அவரே கூறுகிறார்:
"கொலை மிரட்டல்கள் ... அது ஏராளம். இஸ்லாத்திற்கு மாறிய நாளிலிருந்து ஆரம்பித்தது அது [சுட்டி-8]. இதனால் யாருக்கு என்ன நஷ்டம்?. அவ்வபோது காவல்துறையினர் வந்து ஆலோசனைகள் கூறிச் செல்வர். இப்போதும் சில நாட்களுக்கு முன்னர், இங்குத் தொலைபேசியை மாற்றி வைத்து, நேரடியாக காவல்துறை கண்ட்ரோல் அறையுடன் இணைத்துள்ளனர். அழைப்பவர்களின் எண்ணும் தெரிவது போல் காலர் ஐடி மிசின் வைத்துள்ளனர்."
"எழுத்தச்சன் விருது வழங்க, என்னை அழைத்தனர். நான் வீட்டை விட்டு இனி எங்கும் போவதில்லை எனக் கூறி விட்டேன். முக்கியமாக பப்ளிக் மீட்டிங்குகளுக்கு நான் வருவதில்லை என அனைத்தையும் ரத்து செய்து விட்டேன். என்னைக் கொல்ல நினைப்பவர்கள், அந்த இடத்தில் ஒரு குண்டைக் கொண்டு வந்து போட்டு விட்டால் போதும் தானே? நான் இந்த வயசுக்குப் பிறகு இறப்பதால் எனக்கொரு இழப்பும் இல்லை. ஆனால், வாழ வேண்டிய இன்னும் ஒரு நூறு பேர் எனக்காக இறப்பதை நான் விரும்பவில்லை"
"கொச்சியில் இருக்கும் போதும் அப்படித்தான். ஆனால், அங்குக் காவல்துறைக்கும் மேலாக எனக்கு 8 கமாண்டோக்கள் பாதுகாப்பாக இருந்தனர். அப்படித்தான் சொல்வேன். கமாண்டோக்கள்தான். 8 பிள்ளைகள். என்னை உம்மா என்று தான் அழைப்பார்கள். என்.டி.எஃபைச் சேர்ந்தப் பிள்ளைகள். யாராவது உணவு தந்தால்கூட வாங்கிச் சாப்பிடக் கூடாது என்று கண்டிப்பாக சொல்லி என்னைக் கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வந்தனர். அதிலும் குறிப்பாகப் பெண்களிடம்தான் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர். சில வேளைகளில் சில பெண்கள் வலுக்கட்டாயமாக என் வாயில் மிட்டாய்களைத் திணிப்பர். அவர்களின் அன்புக்குக் கட்டுப்பட்டு அவர்களை எதிர்ப்பதில்லை. வாயில் வாங்கிக் கொண்டு அவர்களைக் காணாமல், குளியலறைச் சென்று துப்பி விடுவேன். அந்தப் பிள்ளைகள் கண்டால் கொதித்து விடுவார்கள். பின்னர் அவர்கள் சாப்பிட்டுப் பார்த்தப் பின்னரே என்னைச் சாப்பிட அனுமதிப்பர். ஒரு முறை அப்படித்தான், ஒரு பெண் கொண்டு வந்த மிட்டாயை உடனே சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும் என்று அடம் பிடித்தாள். சமது அதை வாங்கி முதலில் சாப்பிட்டுப் பார்த்தான். அதில் என்னைக் கொல்ல விஷம் வைக்கப்பட்டிருந்தது. மூன்று மணி நேரம், பல மருத்துவர்கள் போராடி சமதைக் காப்பாற்றினர். இப்போதும் என்னால் அதை மறக்க முடியாது. மற்றொரு முறை, ஒரு பெண் பிரியாணி செய்து கொண்டு வந்திருந்தாள். அதையும் முதலில் சாப்பிட்ட சமது மீண்டும் ஒருமுறை அதே போன்று மரணத்தின் விளிம்பு வரைச் சென்று தப்பினான். என்னைக் கொல்வதற்கு அப்படி என்ன நான் அவர்களுக்குத் துரோகம் செய்தேன் என்று தெரியவில்லை. எனக்கும் இந்து மதம் தெரியும் தானே? அதில் அப்படி ஒன்றும் இல்லை."
Kamala Das' son M D Nalapat, who has came to Kochi from Delhi, said that they had received a number of threatening telephone calls. The calls appeared to be from Hindu extremists, he added. One caller threatened that he would kill Kamala Das within 24 hours. Nalapat said that his mother had shown extraordinary courage in embracing Islam [சுட்டி-8].
***
'செத்த பிறகும்' என்பதை நினைவில் கொள்ள வேண்டியிருந்தேன்.
உயிரோடு இருந்தபோது கமலா சுரையா யாருடைய முகமூடியைக் கிழித்தார் என்று சொல்ல வேண்டுமல்லவா?
'முகமூடி கிழித்துக் கொண்ட வெ.சா' என்று தலைப்பிட்டு நாகூர் ரூமி திண்ணை 29.09.2006 இதழில் [சுட்டி-9] எழுதியது:
"நான் கூறாத பலவற்றையும் அவர்கள் செய்தியாக்குகின்றனர். எனக்கு இஸ்லாம் மதம் மடுத்து என்றெல்லாம் பிரச்சாரம் செய்கின்றனர். எதற்காக, யாருக்காக இதெல்லாம் செய்கின்றனர் என்று எனக்குத் தெரியாது. சில பத்திரிக்கையாளர்கள் இங்கு வந்து என் வீட்டின் சமையல்காரிகளிடம் பேசி விட்டுப் போவர். பின்னர் அவற்றையெல்லாம் நான் கூறியதாகக் கூறி செய்தியாக்குகின்றனர். பத்திரிக்கையாளர்கள் இத்தனை சதிகாரர்களாக மாறி விட்டனரே?"
"எனக்கு வாழ்வில் தேடலின் தீர்வை அளித்த என் சமுதாயத்திற்கு நான் என்றைக்கும் துரோகம் செய்ய மாட்டேன். எனக்கு மதம் மடுத்து என்று நான் கூறாததை பரப்பியது போல் ஒவ்வொருவரும் என்னைப்பற்றி நாளுக்கொரு பொய்யை புனைந்து பரப்பிக் கொண்டிருக்கின்றனர். ஒரு எறும்பைக் கூட வேதனைப்படுத்த நினைக்காத என்னை எதற்காக இவர்கள் இப்படி துன்புறுத்துகின்றனர்? எனக்குத் தெரியவில்லை".
"இஸ்லாத்தை மதமாக ஏற்றுப் பின்னர் அதனை எனது வாழ்க்கையாக மாற்றிக் கொண்டேன். ஒரு மதத்தில் இருந்து தேடலின் தீர்வாக மற்றொன்றை ஏற்றுக்கொண்ட நான் இந்த சமுதாயத்திற்கும் இஸ்லாத்திற்கும் ஒரு போதும் துரோகம் இழைக்க மாட்டேன்"
"எனது எல்லாக் கேள்விகளுக்கும் கடைசியில் கிடைத்த ஒரே பதில் தான் இஸ்லாம். ஏளனப்படுத்துபவர் ஏளனப்படுத்தட்டும். பிரபஞ்சத்தின் நாயனாகிய அல்லாஹ்வை நான் விசுவசிக்கின்றேன். எல்லாவற்றையும் அவன் நிச்சயிக்கட்டும்."
(மொழிபெயர்ப்பு அபூ சுமையா, திண்ணை, 7 செப்டம்பர், 2006) [சுட்டி-10].
"எனக்கு இஸ்லாம் பிடித்திருக்கிறது. அது சொல்கிற வாழ்க்கை எனக்குத் திருப்தியாக இருக்கிறது." என்று 02-07-06 தேதியிட்ட ஆனந்த விகடனிலும் அவர் பேட்டி கொடுத்திருந்தார்.
நேசகுமார்களைப்போல பொய் பேசும், வெறுப்புமிழும் குழுவில் இப்போது வெ.சா.
***
கடந்த 28.05.2009 திண்ணை இதழில் குர்ஆன் வசனம் 023:006க்கான விளக்கத்தை நாகூர் ரூமியிடம் வெ.சா கேட்டிருந்தார். நாகூர் ரூமி இவ்விதழில் விளக்கம் தராவிடில் அடுத்த வாரம் நிச்சயம் நான் தருவேன் என்று வெ.சாவுக்கு உறுதி தருகிறேன்.
நன்றி!
ஃஃஃ
to.wahhabi@gmail.co
http://wahhabipage.blogspot.com
சுட்டிகள்:
1 - http://nagarjunan.blogspot.com/2009/05/blog-post_31.html
2 - http://www.keetru.com/literature/short_stories/m_gurumoorthi_12.php
3 - http://globen.wordpress.com/2009/05/31/kamaladas/
4 - http://search.rediff.com/news/1996/3107edas.htm
5 - http://peddai.blogspot.com/2005_05_01_archive.html
6 - http://www.maraicoir.com/2009/05/blog-post_31.html
7 - http://jeyamohan.in/?p=2819
8 - http://www.rediff.com/news/1999/dec/13kamala.htm
9 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=20609221&format=html
10 - http://www.thinnai.com/?module=displaystory&story_id=20609081&edition_id=20060908&format=html
இணைப்பு:
KamalaSuraya.jpg
Copyright:thinnai.com
“”””””””””””””””””” (7) “”””””””””””””””””
ஜெயமோகன்
அஞ்சலி:கமலா சுரையாJune 1, 2009 – 1:32 pm
கமலா தாஸ் என்ற மாதவிக்குட்டியை நான் ஒரே ஒருமுறை நேரில் சந்திருத்திருக்கிறேன். கேரள சாகித்ய அக்காதமி அலுவலகத்துக்கு அவர் வந்திருந்தார். நித்ய சைதன்ய யதியின் மாணவரான ஒருவர் என்னை அறிமுகம் செய்து வைத்தார். ”ஆ, எனக்குத்தெரியும்…நித்யா என்னுடைய காதலன்!” என்றார். எனக்கு கமலா தாஸ் எப்படிப்பட்டவர் என்று தெரியும் என்பதனால் ஆச்சரியம் அடையவில்லை. அப்போது கமலா தாஸ் விசித்திரமான கோலத்தில் இருந்தார். எப்படியும் முந்நூறு பவுன் எடையுள்ள நகைகள் அணிந்திருப்பார். இமைகளில் ஜிகினா. உதட்டுச்சாயம். ரூஜ். பளபளக்கும் ‘ஸீ த்ரூ’ சேலை. காதுகளில் அவர் அணிந்திருந்த தொங்கட்டான் மிகமிக விபரீதமாக இருந்தது. அதை சாண்ட்லியரின் குழந்தை எனலாம்.
என்னை அவர் பொருட்படுத்தவில்லை. எவரையுமே பொருட்படுத்தவில்லை. அவரே பேசிக்கொண்டிருந்தார். மிகையான நாடகத்தனம். செயற்கையான உடலசைவுகள். கொஞ்சலான மொழி. அவர் சொல்லிக்கொண்டிருந்த விஷயம் வேடிக்கையானது. அவருக்கு குருவாயூர் கிருஷ்ணனுடன் காதல். காதல் மட்டுமல்ல காமமும் கூட. கிருஷ்ணனை பார்க்கச் சென்றிருந்தார். அவனுடன் பேசிக்கொண்டிருந்தபோது சண்டை வந்துவிட்டது. ”இனி ஆ கள்ளனோடு மிண்டில்ல…”என்றார் நாணத்துடன். ”பக்ஷே அவன் என்னை தேடி வரும்..அவனு ஞான் இல்லாதே ஜீவிக்கான் கழியில்ல” அருகே நின்ற ஒரு ஆசாமி உண்மையான பக்திப்பரவசத்துடன் கேட்டுக்கொண்டிருந்தார்.
விசித்திரங்களும் கிறுக்குத்தனங்களும் நிறைந்த வாழ்க்கை கமலா தாசுடையது. கேரள வரலாற்றில் ஆழமான தடம் பதித்த நாலப்பாட்டு நாயர் ‘தறவாட்டி’ல் பிறந்தார். தாத்தா கெ.பி.கேசவமேனன் சுதந்திரப் போராட்ட தியாகி. மாத்ருபூமி நாளிதழை நிறுவியவர். இன்னொரு தாத்தா நாலப்பாட்டு நாராயண மேனன் கேரளத்தின் முக்கியமான கவிஞர். அப்பா வி.எம்.நாயர் மாத்ருப்பூமி நிர்வாக ஆசிரியர். அம்மா நாலப்பாட்டு பாலாமணி அம்மா கேரளத்தின் முக்கியமான பெண் கவிஞர்.
சிறந்த கல்விக்கூடங்களில் கற்ற கமலா தாஸ் ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்தார். முதலில் கவிதைகள். அவை கவனிக்கப்படவில்லை. பின்னர் எழுதிய சுயசரிதை ‘My story’ பெரும் புகழ்பெற்றது. அதில் தன்னுடைய பாலியல் பரிசோதனைகளை கிளர்ச்சியூட்டும்படி எழுதியிருந்தார். இளவயது ‘தோழனின்’ விந்துவின் வாசனையைப்பற்றிய வருணனைகள் அவரை புகழ்பெறச்செய்தன. பின்னாளில் அந்த நூலில் சொன்னவை எல்லாமே பொய்கள் என்றும், பணம் கிடைப்பதற்காக கணவரின் ஆலோசனைப்படி எழுதியவை என்றும் சொன்னார் கமலா.
மாதவிக்குட்டி என்ற பேரில் மலையாளத்தில் எழுத ஆரம்பித்தார். அவருடைய செயற்கையான ஆங்கில எழுத்துக்களுடன் ஒப்பிடும்போது மலையாளத்தில் அவர் எழுதியவை முக்கியமான படைப்புகள். மலையாளச் சிறுகதையை கவிதைக்கு அருகே கொண்டு வந்தார். நடுக்கேரளத்தின் பேச்சு நடையை அழகாக புனைவாக்கினார். காமத்தை மென்மையாக எழுதுவதில் ஒரு சாதனையாளர் அவர். கேரள நவீன புனைகதை இலக்கியத்தின் முதல் பத்து சாதனையாளர்களில் அவரை நிச்சயமாகச் சேர்க்க முடியும்.
ஆனால் அவர் நாலப்பாட்டு குடும்பம் என்பதனாலேயே, அவரது மகன் எம்.டி.நாலப்பாடு மாத்ருபூமி ஆசிரியராக இருந்தமையாலேயே, அவர் மிகையாகப் புகழப்பட்டார். கொண்டாடப்பட்டார். அவரை பற்றி கட்டுரைகள் எழுதிக்குவிக்கப்பட்டன. அந்த வரிகள் வழியாக நாம் அவரை அணுகினால் ஏமாற்றமே ஏற்படும்.
கமலாவின் பிரச்சினைகளின் ஊற்றுமுகம் ஒன்றுதான். அவர் அழகி அல்ல. கறுப்பான குண்டான கிட்டத்தட்ட அவலட்சணமான பெண். அழகிகளின் குடும்பத்தில் பிறக்கவும் நேரிட்டது. இந்த தாழ்வுணர்ச்சியில் இருந்து உருவான திரிபு பட்ட ஆளுமை அவருடையது. எங்கும் எப்போதும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் முனைப்பும் தணியாத விளம்பர வெறியும் கொண்டவர் கமலா. செய்தித்தாள்கள் தன்னைப்பற்றி எழுதுவதற்காக அவர் எதையும் செய்வார். ஆபாசமாகப் பேசுவார். ஒன்றுமே தெரியாத மழலையாக நடிப்பார். உயர்வாகக் கருதப்பட்டவைகளை உடைத்து வீசுவார். கீழ்மைகளைப் போற்றுவார். விபரீதமாகவும் தடாலடியாகவும் எதையாவது செய்வார். ஒரு சிறு சந்திப்பில் கூட அப்படித்தான் நடந்துகொள்வார்.
கமலாவின் அதிரடிகள் பல. சுயேச்சையாக தேர்தலில் நின்றார். அரசியல் கட்சி தொடங்கினார் — ஆம், தேசியக்கட்சி! ஓவியங்களை வரைந்து கண்காட்சி வைத்து உண்மையான ஓவியர்களை கதறி ஓடச்செய்தார். பயங்கரமாகப் பாட்டு பாடினார்.
அந்த தாழ்வுனர்ச்சியினால் விளைந்த அணையாத காம இச்சை கொண்டிருந்தார் என அவரது சுயசரிதை மற்றும் குறிப்புகள் காட்டுகின்றன. தோற்றம் காரணமாக புறக்கணிக்கப்படும் பெண்ணின் ஏமாற்றப்பட்ட காமம் அது. அந்த இச்சையையே அவர் விதவிதமாக வெளிப்படுத்தினார். அல்லது அது ஒருவகை வன்மம்.
நிர்மால்யா மொழியாக்கத்தில் கமலாதாஸ் கதைகள் என்னும் ஒரு தொகுப்பு வெளிவந்தது. கவிதா பதிப்பக வெளியீடு. அதற்கு நான் எழுதிய முன்னுரையில் [கமலாவின் காதல்கள்] கமலாதாசின் இந்த கிறுக்குத்தனத்தைச் சுட்டிக்காட்டியிருந்தேன். அவர் கடுமையாக எதிர்வினையாற்றியதாக என்னிடம் நடுவே உள்ள சில இதழியல் நண்பர்கள் சொன்னார்கள். நான் அவரை கூப்பிடவில்லை. ஆகவே ஆறுமாதம் கழித்து என்னை •போனில் கூப்பிட்டு வசைபாடினார். கமலாவைப் பொறுத்தவரை அந்த எதிர்வினையேகூட ஒரு விளம்பர உத்தியாக இருக்கலாம் என்பதனால் நான் எதிர்வினையாற்றவில்லை
அதற்கு ஆறுமாதம் கழித்து கமலா தாஸ் மதம் மாறி கமலா சுரையா ஆக ஆனார். அவரை அவரது 65 வயதில்! ஒரு புகழ்பெற்ற இஸ்லாமிய பேச்சாளர் அவரை திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி மதம் மாற்றியதாகச் சொல்லப்பட்டது. கமலாவே ‘பாதுகாப்பான துணை தேடி’ மதம் மாறியதாக ஊடகங்களிடம் சொன்னார். ஆனால் நினைத்தது போல திருமணம் நடக்கவில்லை. ஆகவே கடுமையான அதிருப்தியை வெளிக்காட்டினார். மீண்டும் குருவாயூரப்பனின் பக்தையாக ஆகிவிட்டதாகவும் ஒரு இந்துவாக வாழ்வதாகவும் சொன்னார். ஆனால் இம்முறை ரகசியமாக மிரட்டலுக்கு ஆளானதனால் மீண்டும் மதம் மாறும் உத்தேசத்தைக் கைவிட்டார். ஏன், மதம் பற்றிய பேச்சையே கைவிட்டார்.
கடைசிக்காலத்தில் கமலா தாஸ் மிக மிகச் சோர்வடைந்திருந்தார். இனிமேல்
கேரளத்துக்கே வரமாட்டேன் என்று சொல்லி பூனாவுக்குச் சென்றார். அங்கே சென்ற மே 31 மாலை மருத்துவமனையில் மரணமடைந்தார்.
தன் கட்டற்ற இச்சைகளினால் அடித்துச்செல்லபப்ட்ட அலைக்கழிந்த ஓர் ஆத்மா. இதோ அது தன் இயல்பான அமைதியைக் கண்டுகொண்டிருக்கிறது. கவித்துவத்தைத் தொட்ட ஒரு பத்து சிறுகதைகள், பாலியகார நினைவுகள் என்னும் தலைப்பிலான ஆரம்பகால கட்டுரைகள் வழியாக கமலா இலக்கியத்தில் இருந்துகொண்டிருப்பார்.
கவியாளுமைகள் - “கமலாதாஸ்” என்னும் எழுத்து
செந்தமிழ்மாரி
நன்றி: www.thoomai.wordpress.com
ஆணுலகைச் சார்ந்து செயல்படும் சமூக பிற்போக்குகளை எதிர்த்தும் பெண் குறித்த கருத்தாக்கங்களைக் கேள்விக்குட்படுத்தியும் எழுதும் அவரது படைப்புகளை இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. ஆண்களால் கட்டமைக்கப்பட்ட பெண் சார்ந்த மரபுகளை எதிர்த்துப் பேசுவதும், எழுதுவதும், நடந்துகொள்வதும் என்றிருந்த அவர் ஒரு கலக்ககாரியாக அறியப்பட்டார். இதனால் தாம் பிறந்த மண்ணைவிட்டு வெளியேறும் நிலைக்கும்கூடத் தள்ளப்பட்டார்.
கவிதைகள் எழுதுவது என்பது ஒரு தவத்தைப் போன்றது. ஒரு அறிஞர் சொல்கிறார் குழந்தைகளுக்கும் கவிஞர்களுக்கும்தான் வாழ்வு இனிமையாக இருக்கிறது என்று. அதைப்போல காண முடியாத அல்லது எண்ண முடியாத பாதையைக் கண்டடைந்து அதில் ஊறித் திளைக்கும் கவிஞர்களுக்கு வாழ்வு பெரும் அர்த்தத்துடன்தான் விளங்குகிறது. அன்று முதல் இன்றுவரை கவிதையைக் கண்டடைந்தவர்கள் ஏராளம் பேர்.பெரிதும் அறியப்பட்டவர்கள் ஆண்பாற் புலவர்களே. தொடக்க காலம் முதலே பெண் கவிஞர்கள் உருவாவதை இருட்டடிப்பு செய்துள்ளனர் என்பதை நாம் அறியும் சங்ககாலக் கவிதை தொடங்கி அறிந்துகொள்ள முடிகிறது. அதையும் மீறி மிகுந்த சிரமங்களுக்கிடையில் சங்ககால பெண் கவிஞர்களான காரைக்காலம்மையார், வெள்ளிவீதியார், ஒளவையார், ஆண்டாள் போன்ற ஒரு சிலர் மட்டுமே அறியப்பட்டு கொண்டாடப்பட்டுள்ளனர்.
இருபதாம் நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் பெண்களின் எழுத்தையே அதிகமாகக் காண முடிந்தது. அதிலும் 1990க்குப் பிறகான காலத்தில்தான் பெண் கவிஞர்களின் வரவு அதிகரித்ததன என்று கூறலாம். அப்படி வந்த கவிஞர்களும் அவர்களுக்குள்ள கட்டுப்பாடுகளோடு இறைவனையும், அழகையும் வர்ணித்தே கவிதையெழுதினர். புதுமைக் கவிஞர்களுக்கு பிறகு பின் நவீனத்துவ காலக் கவிஞர்கள் 1990களின் கடைசியில் வந்து, இன்றைக்கு ஆண் கவிஞர்களின் எண்ணிக்கையோடு மட்டுமல்ல கவிதைத் திறனோடும் போட்டி போடும் அளவுக்கு அவர்களின் நிலை வளர்ந்துள்ளது. ஒரு பெண் கல்வி பெற்றால் அந்தக் குடும்பமே கல்வியில் சிறந்து விளங்கும் என்பதைப் போல்தான் பெண் கவிஞர்களின் வரவு எதிர்கால சந்ததியினருக்கும் சமூகத்துக்கும் உதவும் வகையில் அவர்களின் ஆளுமைத்திறனும் சுதந்திரங்களை அடையும் குணங்களும் வித்திடுகிறது.
எனவே இது வரவேற்கத்தக்க ஒரு நிகழ்வு. இன்று அவர்கள் பல பொருள்களில் தனிமனித சுதந்திரம், அவர்களுக்கு வரையறுக்கப்பட்ட சமூகக் கட்டமைப்புகள், பெண் உடலின் மீது செலுத்தும் ஆதிக்கம், மனதிலேற்படுத்தும் ஆதிக்கங்கள் போன்றவற்றைத் தகர்த்து கவிதை புனைந்து வருகின்றனர். இருந்தாலும் ஆண் கவிஞர்களின் உடல் சார்ந்த கருத்துக்களை ஏற்றுக்கொண்டு இச்சையூறும் இச்சமூகம் பெண்களின் உணர்வுகளை, உள்ளக் குமுறல்களைக் கவிதையாக்கிக் கொணரும்போது மறுக்கும் நிலைதான் நீடிக்கிறது. இது இச்சமூகம் வளர்வதற்கான சூழல்தானா என்ற கேள்வியை எழுப்பத் தவறியதில்லை. இருப்பினும் இவற்றையெல்லாம் எதிர்கொண்டு பெண்கள் தங்கள் கருத்துக்களை ஆணித்தரமாகக் கவிதை மூலம் செயல்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
எத்தகைய அடக்குதல்கள் வந்தாலும் பெண்கவிகள் அவர்களுக்கான பங்களிப்பை கவிதைகளால் மட்டுமல்ல பெண் சுதந்திரம், பெண்களின் தனித்த வளர்ச்சி, தனித்த ஆளுமை இன்னும் பிறவற்றால் இந்தச் சமூகத்தில் தங்களாலான மாற்றங்களை நிகழ்த்திக்கொண்டுதானிருக்கிறார்கள். அத்தகைய பெண் கவிஞர்களைப் பற்றிய ஒரு கண்ணோட்டம்தான் இந்த‘கவியாளுமைகள் ‘
கமலாதாஸ் என்னும் எழுத்து
கமலாதாஸ் இன்று மரணமடைந்துவிட்டாலும் அவர் எழுதிய எழுத்துக்கள், கவிதைகள் அனைத்தும் சமூக அளவீடுகள், மதிப்பீடுகளை மறுத்தும் கேள்வி கேட்கவும் செய்யும் காத்திரமான படைப்புக்களாகவே இருந்துவருகின்றன. இவர் வாழும் காலத்திலேயே பலவிதமான விமர்சனங்களால் அலைக்கழிக்கப்பட்டும், இறப்புக்குப் பின்னரும் பலவிதமான விமர்சனங்களுக்கும் ஆட்பட்டார். இருந்தும் அவர் வாழும்வரை இழக்கமுடியாத எழுத்தாகவே வாழ்ந்தார் என்பதுதான் உண்மை.
1934ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் நாள், கேரளத்திலுள்ள திருச்சூர் அருகிலுள்ள நாலாப்பட்டு தறவாட்டில், மலையாள பத்திரிகையான மாத்ருபூமி நாளேட்டின் நிர்வாக ஆசிரியரான வி.எம்.நாயர் என்பவருக்கும், உலகெங்கும் கவிதையால் அறியப்பட்ட கவிஞர்
பாலாமணியம்மாவிற்கும் மகளாகப் பிறந்தவர். கருவிலேயே கவிதையைக் கண்டடைந்தவர். அதனால்தான் கவிதையில் இவ்வளவு ஜொலிக்க முடிந்ததோ? சிறுவயதில் ஆமி என்ற பெயரால் அழைக்கப்பட்ட கமலாதாஸ் மலையாளத்தில் மாதவிக்குட்டியாகவும் ஆங்கிலத்தில் கமலாதாஸாகவும் பெரிதும் அவருடைய எழுத்துக்களால் அறியப்பட்டவர்.
தன்னுடைய 14ஆம் வயதில் மாதவ தாஸுக்கும் இவருக்கும் திருமணம் நடந்தது. எழுத ஆரம்பித்தபோது அவரது கணவர் அதற்கு பெரும் உதவியாக இருந்தார் என்பதை அவரே குறிப்பிட்டுள்ளார். முதல் கவிதைத் தொகுப்பான ‘சம்மர் இன் கல்கத்தா’ (Summer in Calcutta) என்ற ஆங்கில நூல் ஆசியாவுக்கான கவிதைப் பரிசினை பெற்றதே அவருடைய எழுத்தின் வீர்யத்துக்கு உதாரணம். அந்தப் பரிசு வழங்கப்பட்டபோது அவருக்கு வயது 31 (1965ஆம் ஆண்டு).
1976ஆம் ஆண்டு வெளியான இவருடைய ‘என் கதை’ என்ற தன்வரலாற்று நூல் இந்தியாவிலேயே மிக அதிகமாக விற்பனையானது. இந்தப் புத்தகம் கற்பு, கலாச்சாரம் போன்றவற்றைப் பற்றி அதிகமாகப் பேசுவதாகவும் நமது ஆச்சாரவாதிகளால் மிகையான பாலியலைப் பேசியதாகவும் கண்டனம் எழுப்பப்பட்டாலும் வெகுசன வாசகர்களால் வாசிக்கப்படும் குமுதம் வார இதழில் தொடராக வந்து வரவேற்பைப் பெற்றதே அந்த நூலின் மதிப்பைக் கூட்டுகிறது.
ஆச்சாரவாதிகளால் அந்நூலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டபோது அவரிடம் ‘என் கதையைப் படித்து பலரும் அதிர்ந்துபோனதாகச் சொல்லப்படுகிறதே…’ என்று ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியபோது, ‘அதிர்ந்து போனதுபோல பாசாங்கு செய்தனர்’ என்று துணிச்சலாகக் கூறி அனைவரையும் திணறடித்தார். அந்த பதில் அவரது ஆன்மாவின் அடியாழத்திலிருந்து வந்த பதிலாகவே அமைந்திருந்தது என்றே கூறலாம். இதிலிருந்து ‘நாம் புனிதமானவர்கள், கண்ணுக்குத் தெரியாத வரையறைகளுக்குக் கட்டுப்பட விதிக்கப் பட்டவர்கள்’ போன்ற பொய்மைகளைத் துகிலுரிந்து காட்டினார்.
எழுதுவதைப் பற்றிப் பேசும்போது “என் வாழ்வின் இரகசியங்கள் எல்லாவற்றையும் எழுதி என்னைக் காலி உடம்பாக ஆக்கிவிடவேண்டும் என்பதற்காகவே எழுதுகிறேன்” என்றார். இதிலிருந்துதான் அவரது கவிமனம் எதைக் காண அல்லது எவற்றை அடைய கவிதையையும் எழுத்தையும் தேடுகிறது என்பது புரிகிறது. உடலாகட்டும் இன்னபிறவாகட்டும் எதுவாக இருந்தாலும் தான் எழுத நினைத்த யாதொரு கருத்தையும் எழுதி முடிக்கவே அவரது உள்ளம் நாடுவதாக இருந்தது. இதனால் கமலாதாஸ் அன்று முதல் அவரது இறுதிக் காலம்வரை குழப்பவாதியாகவும், தத்தளிக்கும் மனோநிலையுடையவராகவுமே சித்தரிக்கப்பட்டார்.
• ஆணுலகைச் சார்ந்து செயல்படும் சமூக பிற்போக்குகளை எதிர்த்தும் பெண் குறித்த கருத்தாக்கங்களைக் கேள்விக்குட்படுத்தியும் எழுதும் அவரது படைப்புகளை இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. ஆண்களால் கட்டமைக்கப்பட்ட பெண் சார்ந்த மரபுகளை எதிர்த்துப் பேசுவதும், எழுதுவதும், நடந்துகொள்வதும் என்றிருந்த அவர் ஒரு கலக்ககாரியாக அறியப்பட்டார். இதனால் தாம் பிறந்த மண்ணைவிட்டு வெளியேறும் நிலைக்கும்கூடத் தள்ளப்பட்டார்.
• 1999ஆம் ஆண்டு இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறினார். அவர் தனிமையில் வெகுகாலம் இருந்தபோது அன்பைத் தேடி சந்தித்த நபரின் அன்பைத் தேடியே மதம் மாறியதாகக் கூறினார். அந்த நபர் தன்னளவுக்கு துணிச்சலற்றவராக இருந்தது தெரிந்தும் அந்த மதத்திலேயே கடைசிவரையிலும் நீடித்தார். அன்பில்லாத மதங்களின் தன்மைகள் சலித்துப்போய் ‘கிருஷ்ணராக இருக்கட்டும், இஸ்லாத் ஆக இருக்கட்டும் எல்லாக் கடவுளும் ஒன்றே’, ‘மனித அன்பு ஒன்றே சிறந்தது‘ என்றும் உணர்ந்து அறிவித்தார்.
1984ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கான பட்டியலில் டோரிஸ் லெஸ்ஸிங் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களோடு இவரது பெயரும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை ஆசியாவுக்கான கவிதைப் பரிசு, கென்ட் அவார்டு, அசான் உலகப் பரிசு, எழுத்தச்சன் புரஸ்கரம் விருது, சாகித்ய அகாடமி விருது மற்றும் கேரள சாகித்ய அகாடமி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை இவரது எழுத்துக்கள் பெற்றிருக்கிறது.
கமலாதாஸ் என்னும் அந்த எழுத்து ஒரு கவிஞராக, எழுத்தாளராக மட்டுமல்லமல் ஒரு தேர்ந்த ஓவியருமாகயிருந்தார். அவர் வரைந்த ஓவியங்கள் அனைத்தும் பெண்ணின் அடுத்தகட்ட அல்லது தன்னுணர்வை நோக்கிப் பயணிப்பதை தெள்ளன விளக்குவதாகவும் மிகுந்த அழகியலோடும் அறியப்பட்டது. அதேபோல் ஆண்சார்ந்த ஓவியங்களையும் தீட்டியுமுள்ளார்.
அதில் ஓர் ஓவியத்துடன் அவர்,
எழுதியுள்ள படைப்புக்கள்
English
1964: The Sirens (Asian Poetry Prize winner)
1965: Summer in Calcutta (poetry; Kent’s Award winner)
1967: The Descendants (poetry)
1973: The Old Playhouse and Other Poems (poetry)
1976: My Story (autobiography)
1977: Alphabet of Lust (novel)
1985: The Anamalai Poems (poetry)
1992: Padmavati the Harlot and Other Stories (collection of short stories)
1996: Only the Soul Knows How to Sing (poetry)
2001: Yaa Allah (collection of poems)
Malayalam
1964: Pakshiyude Manam (short stories)
1966: Naricheerukal Parakkumbol (short stories)
1968: Thanuppu (short story, Sahitya Academi award)
1987: Balyakala Smaranakal (Childhood Memories)
1989: Varshangalkku Mumbu (Years Before)
1990: Palayan (novel)
1991: Neypayasam (short story)
1992: Dayarikkurippukal (novel)
1994: Neermathalam Pootha Kalam (novel, Vayalar Award)
1996: Chekkerunna Pakshikal (short stories)
1998: Nashtapetta Neelambari (short stories)
2005: Chandana Marangal (Novel)
2005: Madhavikkuttiyude Unmakkadhakal (short stories)2x
2005: Vandikkalakal (novel)
தொடர்ந்து இயங்கி வந்த அவரது எழுத்தாளுமை கடந்த மே மாதம் 31ஆம் தேதி, எழுபத்தைந்தாவது வயதில் புனே மருத்துவமனையில் ஓய்ந்தது. இலக்கிய உலகத்துக்கே ஓர் இழக்கக் கூடாத இழப்பு. அவர் மறைந்தாலும் அவரது எழுத்துக்கள் என்றென்றும் நம்மோடு பேசிக்கொண்டுதான் இருக்கும்.
கமலாதாஸ் கவிதை
மொழியாக்கம்: எஸ்.வி.வி.வேணுகோபாலன்
அரசியல் தெரியாது எனக்கு
ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்களின்
பெயர்கள் தெரியும் எனக்கு.
நேருவில் துவங்கி
வரிசையாக ஒப்புவிக்கவும்முடியும் என்னால்
கிழமைகளை, மாதங்களைச் சொல்வதுபோல.
நான் ஓர் இந்தியர்
நிறம் மிகவும் பழுப்பு
மலபாரில் பிறந்தவள்
பேசுகிறேன் மூன்று மொழிகளில்
எழுதுகிறேன் இரண்டில்
கனவில் ஆழ்கிறேன் ஒன்றில்.
அவர்கள் சொன்னார்கள்
‘ஆங்கிலத்தில் எழுதாதே
ஆங்கிலம் உனது தாய்மொழியன்று.’
என்னை ஏன் தனிமையில் விடக்கூடாது?
விமர்சகர்களே, நண்பர்களே, சந்திக்கவரும்சொந்தங்களே
உங்கள் ஒவ்வொருவரையும்தான் கேட்கிறேன்.
எனக்குப் பிடித்தமான எந்தவொரு மொழியிலும்
என்னைப் பேசவிடுங்களேன்.
நான் பேசுகிற மொழி எனதாகிறது.
அதன் பிறழ்வுகள், அசாதாரணப் பிரயோகங்கள் எல்லாம்
என்னுடையவை
என்னுடையவை மட்டுமே.
அது அரை ஆங்கிலம்
அரை இந்தியம்
ஒருவேளை நகைப்பிற்குரியதும்கூட.
ஆனாலும் அது நேர்மையானது
உங்களால் பார்க்கமுடியவில்லையா?
நான் எவ்வளவு மனுஷத்தனம் கொண்டவளோ
அவ்வளவு மனிதத்தன்மை அதற்குமிருக்கிறது.
அது பேசுகிறது
எனது குதூகலங்களை, எனது விழைவுகளை, எனதுநம்பிக்கைகளை.
அது எனக்குப் பயன்படுகிறது
காகத்திற்கு அதன் கரைதலைப் போல
சிங்கத்திற்கு அதன் கர்ஜனையைப் போல
அது மனிதப் பேச்சு
இங்கிருக்கிற, அங்கு இல்லாத மனத்தின் பேச்சு.
பார்க்கிற, கேட்கிற எல்லாம் அறிகிற ஒரு மனத்தின்பேச்சு.
செவியற்ற விழிகளற்ற பேச்சல்ல
புயலில் சிக்கிய மரங்களின் -
பருவமழையைச் சுமக்கும் மேகங்களின் -
மழையின் -
தொடர்பற்ற முணுமுணுப்புகளைச் செய்தவாறு
கொழுந்துவிட்டெரியும் சிதை நெருப்பின் பேச்சு அது.
நான் குழந்தையாக இருந்தேன்
பிறிதொருநாள் அவர்கள் சொன்னார்கள்
நான் வளர்ந்துவிட்டேனென்று
ஏனெனில் நான் உயரமாகிவிட்டேன்
எனது உடல் பெரிதாகிவிட்டது
ஒன்றிரண்டு இடங்களில் முடிவளரத்துவங்கிவிட்டது.
நான் காதலைக் கேட்டபோது
அவன் ஒரு பதினாறு வயது யௌவனத்தை
எனது படுக்கையறைக்குள் தள்ளிவிட்டுக் கதவைச்சாத்தினான்.
அவன் என்னை அடிக்கவில்லை
ஆனால் வருத்தமுற்ற என் பெண் மேனி
அடிவாங்கியதாக உணர்ந்தது.
எனது மார்பகங்களின் பளுவும், கருப்பையும்
அழுத்திய அழுத்தத்தில்
பரிதாபகரமாக நான் சுருங்கிப்போனேன்.
பிறகு ஒரு சட்டையையும்
எனது சகோதரனின் கால்சட்டையையும் அணிந்தேன்.
தலைமுடியைக் குட்டையாகக்கத்தரித்துக்கொண்டேன்.
எனது பெண்மையைப் புறக்கணித்தேன்.
அவர்கள் சொன்னார்கள்
சேலைகளை அணி
பெண்ணாய் இலட்சணமாய் இரு
மனைவியாய் இரு
தையல் வேலையைச் செய்துகொண்டிரு
சமையல்காரியாய் இரு
சண்டை போட்டுக்கொண்டிரு
வேலையாட்களுடன் பொருந்தி இரு
ஒட்டிக்கொண்டிரு
என்றனர் வகைப்படுத்துநர்கள்.
சுவரின் மீது உட்காராதே
மெல்லிய திரைச்சீலைகள் தொங்கும்
எங்கள் சன்னல்கள் வழியாகப் பார்க்காதே
ஆமியாய் இரு கமலாவாய் இரு
மாதவிக்குட்டியாய் இருந்தால் இன்னும் நல்லது.
இதுவே சரியான தருணம்
ஒரு பெயரைத் தேர்வுசெய்துகொள்ள.
கண்ணாமூச்சி விளையாட்டுக்கள் வேண்டாம்
மனநோயாளியோடு விளையாடாதே
திருப்தியுறாத ஆளாயிராதே
காதல் முறிவின்போது சங்கடப்படுத்தும்படி
ஓவென்று இரையாதே….
ஒரு மனிதனைச் சந்தித்தேன்
காதல்வயப்பட்டேன்
எந்தப் பெயரிட்டும் அழைக்கவேண்டாம் அவனை
ஒரு பெண்ணை நாடும் எவனோ ஒரு ஆண்தான் அவனும்.
காதலை நாடும் எவளோ ஒரு பெண்ணாகிய என்னைப்போலவே
அவனுள்…. நதிகளைப் போலவே ஒரு பசியின் வேகம்
என்னுள்…சமுத்திரங்களின் களைப்பில்லாதகாத்திருத்தல்.
உங்கள் ஒவ்வொருவரையும் கேட்கிறேன் “யார் நீ?”
“அது நானே”என்பதே விடை.
எங்கும் எல்லா இடங்களிலும் காண்கிறேன்
தன்னை நான் என்று அழைத்துக்கொள்பவரை.
உறைக்குள் செருகப்பட்டிருக்கும் வாளைப்போல்
இறுக்கமாக அவன் திணிக்கப்பட்டிருக்கிறான்
இந்த உலகத்தினுள்.
தனிமையில் குடிப்பது நான்தான்
புதிய நகரங்களின் விடுதிகளில்
நடுநிசி பன்னிரண்டு மணிக்குக் குடிப்பவள்நான்தான்.
பிறகு வெட்கத்திலாழ்ந்து செத்துக் கிடக்கிறேன்
தொண்டை விக்கி.
நான் ஒரு பாவி
நான் ஒரு ரிஷி
நேசிக்கப்படுபவள் நான்
வஞ்சிக்கப்படுபவளும் நான்தான்.
உங்களுக்கில்லாத குதூகலங்கள் எதுவும்எனக்குமில்லை
நானும் அழைத்துக்கொள்கிறேன் என்னை
நான் என்று.
Subscribe to:
Post Comments (Atom)
Raagam Thaalam Pallavi - ராகம் தாளம் பல்லவி - Theerppugal Thiruththapadalaam
Raagam Thaalam Pallavi ராகம் தாளம் பல்லவி Theerppugal Thiruththapadalaam Movie - Theerppugal Thiruththapadalaam Music - Shankar Ganesh S...
-
புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ . விருத்தாசலம் ( ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948), மிகச்சிறந்த த...
-
ஞானக்கூத்தன் ஞானக்கூத்தன் ( அக்டோபர் 7, 1938 - சூலை 27, 2016) ஒரு தமிழ்க் கவிஞர் ஆவார் . இவரது இ...
No comments:
Post a Comment