Monday, February 22, 2021

ஏ.ஜி. கஸ்தூரிரங்கன்

அஞ்சலி: ஏ.ஜி. கஸ்தூரிரங்கன் (1932 - 2016) “அந்தப் பட்டியலில் மொத்தம் 11 பேர்கள். அதில் உள்ள பத்து பேர் பற்றிப் பேசுங்கள். 11வது ஆள் ஏ.ஜி.கேயைப் பற்றி மட்டும் பேசாதீர்கள். அவர்மேல் இந்த ஒரு வழக்கு மட்டுமல்ல, 200 வழக்குகள் இருக்கின்றன. ஏ.ஜி.கேவுக்காக பேசிக்கொண்டு இங்கே என்னிடத்தில் யாரும் வராதீர்கள்” என்று ஏ.ஜி.கேவின் சகோதரரும் மலைக்கண்ணன் என்ற பெயரில் திமுகவின் பேச்சாளரும் தென்னக இரயில்வே - திருச்சி பிரிவின் திமுக தொழிற்சங்கத்தின் காரியதரிசியுமான ஏ.ஜி. வெங்கடகிருஷ்ணனை வைத்துக் கொண்டு சொன்னது மட்டுமல்லாமல், தூக்குத் தண்டனைக் குறைப்புக் கோப்பில், “Very dangerous communist minded person” என்று அன்றைய முதல்வர் மு. கருணாநிதியால் குறிப்பெழுதி அனுப்பப்படுகின்றது! யார் அந்த ஏ.ஜி.கே? “நாகை தாலுக்கா கமிட்டி ஒரு Extremist committeeயாக - தமிழ்நாட்டுக்குள் ஒரு மேற்கு வங்காளம்போல Sectarian போக்கில் உள்ளது” என்று உயர்மட்டக் குழுவில் தோழர் பி.ஆர். அவர்களை எது பேச வைத்தது? அல்லது யாரால் அப்படி பேசும்படி ஆனது? விவசாயத் தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக அரசிடம் பேசுவதற்கு தோழர் கே.ஆர்.ஜி. தலைமையில் ஒரு குழு சென்றபோது, அன்றைய முதல்வர் சி.என். அண்ணாதுரை “நாகை தாலுக்காவில் உங்க ஏ.ஜி.கே.வைக் கட்டுப்படுத்திவிட்டீர்கள் என்றால் பிரச்சனையே இல்லை” என்று சொன்னதாக ஒரு தகவல் உண்டு. யார் அந்த ஏ.ஜி.கே.? பலரால் அன்போடும் சிலரால் அச்சத்தோடும் ஏ.ஜி.கே என்று அழைக்கப்பட்டவர் தோழர் ஏ.ஜி. கஸ்தூரிரெங்கன். நான் அவரை அறிந்திருந்தேன், முழுமையாக அல்ல. அவருடனான அறிமுகமோ, நேரடியான தொடர்போ இல்லை. ஆனால் அவரிடமிருந்து எனக்குச் செய்திகள் தேவைப்பட்டன. அப்போது நான் வெண்மணி நிகழ்வுபற்றிய - அதன் தொடர்ச்சியான பண்ணையார் இருஞ்சியூர் கோபாலகிருஷ்ண நாயுடுவின் அழித்தொழிப்பு வரைக்குமான அதில் விமர்சிக்கப்படுகின்ற திராவிடர்கழக மற்றும் பெரியாரின் நிலைப்பாடுகள், செயல்பாடுகள் பற்றிய செய்திகளைச் சேகரிக்க களஆய்வு மேற்கொண்டிருந்தேன். இருஞ்சியூர் கோபாலகிருஷ்ண நாயுடு கொலையின் தொடர்ச்சியாக முதலில் கைதுசெய்யப்பட்டு சுமார் ஓராண்டுகாலம் சிறைப்படுத்தப்பட்ட 12 பேர்களில் ஒன்பது பேர் திராவிடர் கழகத்தைச் சார்ந்த தோழர்கள் (ஒன்பது பேர்களில் ஒருவர் அந்த வழக்கில் அப்ரூவர்). அப்போது திராவிடர் கழகம், தங்களுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை என்று அறிவித்துவிட்ட நிலையில், தனியொரு மனிதனாக அவர்களுக்காக வழக்கு நடத்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடி ஆகும்வரை எல்லாவகையிலும் துணை நின்றவர், அண்மையில் மறைந்த தோழர் குடந்தை ஆர்.பி.எஸ். ஸ்டாலின் ஆவார். (அவர் அப்போது தஞ்சை மாவட்ட திகவின் மாணவர், இளைஞரணிப் பிரிவுச் செயலாளர்) நான் வெண்மணிகுறித்த தகவல்களை அதற்குப் பின்னால் உள்ள மறைக்கப்பட்ட உண்மைகளைத் தேடுகிற வேலையில் இருந்தபோதுதான் தோழர் ஆர்.பி.எஸ். என்னிடம், “ஏ.ஜி.கே வை சந்தித்துப் பேசு. அவர்தான் இன்றைக்கு வாழ்ந்துகொண்டிருக்கின்ற ஒரே சாட்சி” என்று சொல்லி 1985களில் தோழர் ஏ.ஜி.கே சிறையிலிருந்து வெளிவந்ததற்குப் பின்னால் அவருக்குத் துணையாக இருந்துவந்த, நான் எப்போதும் மூத்தவராக மதிக்கின்ற சாக்கோட்டை இளங்கோவன் வழி, ஏ.ஜி.கே.வைச் சந்தித்துப் பேசுமாறு பணிக்கின்றார். 28.08.2009, திருவாரூர் பேரூந்து நிலையத்திற்குத் தெற்கே குடந்தை செல்கின்ற சாலையின் வலதுபுறத்தில், அழகிரிநகர். அங்கே இருக்கின்ற தமிழர் தன்மானப் பேரவையின் அலுவலகத்தில், அந்த மனிதனை முதன் முதலில் எந்த பிரமாண்டமும் இல்லாமல் சாதாரண மாகச் சந்தித்தேன். வெள்ளை வேட்டி, கறுப்புச்சட்டையில் மெல்லிய தேகம்; கூர்ந்த ஊடுருவும் கண்கள்; உருவத்திற்குத் தொடர்பில்லாத சற்றேறக்குறைய நடிகவேள் ராதாவைப் போன்ற கரகரத்த கணீரென்ற குரல். சாக்கோட்டை இளங்கோவன் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, ‘தி.க, தஞ்சாவூர் பசுபதி அண்ணே பையன்’ என்று அறிமுகப்படுத்தினார். அவரிடம், என்னுடைய தொகுப்பு நூல்களைக் கொடுத்தேன். காலையில் 11 மணிக்குத் தொடங்கிய எங்கள் உரை யாடல் மதிய உணவுக்குப்பின் 4 மணியளவில் முடிவுற்றது. அப்போதுதான் அவர் அந்தணப்பேட்டைக்கு, 4.30க்கு வரும் தொடர்வண்டியைப் பிடித்துப் போகமுடியும். அவ்வளவு நேரமும் நான்தான் பேசிக்கொண்டிருந்தேன். அவர், தேவையான நேரத்தில் சின்னச்சின்ன வார்த்தைகளில் தீர்க்கமாய்ப் பேசினார். கடைசியாக அன்றைக்கு அவரிடம், “பெரியாரிடமே முரண்பட்டு திகவைவிட்டு வெளியேறிய நீங்கள் பிறகு எப்படி மீண்டும்?” என்று கேட்டதற்குச் சிரித்துக்கொண்டே, “வாங்க, நாம நிறைய பேசலாம்” என்றார். இந்த ஏழு ஆண்டுகளில் நாங்கள் நிறைய பேசிக்கொண்டோம். நான் நிறைய கற்றுக்கொண்டேன். இந்த ஆண்டுகளில் எனக்குக் கூடுதலான உரிமையையும் நட்பையும் வழங்கினார். பெரும்பாலும் எல்லா சந்திப்புகளிலும் அண்ணன் இளங்கோவனும், பல சந்திப்புகளில் தி.வி.க தலைவர் தோழர் கொளத்தூர் மணியும் இருப்பார்கள். அந்த முதல் சந்திப்பின் முடிவில் அவரது எல்லா தோழர்களையும் வைத்துக்கொண்டே கேட்டேன், “இவ்வளவு பெரிய ஆளுமையைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகின்றீர்கள்? என்ன செய்தீர்கள்?” நாகை தாலுக்கா, அந்தனப்பேட்டையில் கோபாலசாமி என்ற, கிருஷ்ண குலக்கிரகம் எனப் பெயர்பெற்ற பட்டை நாமப் பரம்பரையில் அவிபக்த குடும்பத்தலைவரின் மகனாக, 1932 நவம்பர் 05 பிறந்த கஸ்தூரிரெங்கன், குருகுலக் கல்வியின்போது ஒரு சின்னப் பண்ணையாராக இருந்த ஜஸ்டிஸ் பார்ட்டியின் ஆதரவாளர் பெரியார்மீது பற்றுகொண்டவரான தன் தந்தையாருக்கு அன்றாடம் குடிஅரசு, விடுதலை பத்திரிகைகளைப் படித்துக் காட்டியதன் வழியே பெரியாரின் சுயமரியாதைச் சிந்தனைகளை உள்வாங்கியதன் விளைவாக பின்னாளில், தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டத்தின் கீழ்ப் பகுதியைப் பார்த்துத் திகைக்கவைத்த ஆளுமை அவர். அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், பட்டமளிப்பு நிகழ்வில் இந்தியாவின் முதல் ஜனாதிபதி டாக்டர் பாபு ராஜேந்திரபிரசாத் முன்னிலையில், பல்கலைக்கழகத் துணைவேந்தர் சர்.சி.பி. இராமசாமி அய்யரை 12 பேர் குழுவாகச் சென்று செருப்பாலடித்த சம்பவத்திற்குப்பின் பல்கலைக் கழகத்தை விட்டு வெளியேற்றப்பட்ட ஏ.ஜி.கே. பின்னாளில் முழுநேரப் பெரியாரியக்க திராவிடர் கழக - திராவிடர் விவசாயத் தொழிலாளர் சங்கத்தை மிகப் பெரிய சக்தியாகக் கட்டமைத்தவர். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் முழுமையும் வயல்களால் சூழப்பட்ட பகுதி. குறிப்பாகக் கீழைத்தஞ்சை மாவட்ட விளைநிலங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கோயில்கள், மடங்கள், ட்ரஸ்ட் என்று சொல்லப்படுகின்ற தனி நிறுவனங்களுக்குச் சொந்தமானவை. இவைகள் பெரும்பகுதி பார்ப்பன, வேளாள, முதலியார்களின் ஆதிக்கச் சாதிகளின்கீழ் இருந்தன. இவைகளின்றி அவர்களுக்கென்றும் சொந்தமாக ஆயிரம், நூறு ஏக்கர் என்ற அளவிலும் இருந்தன. இந்தப் பண்ணையார்கள் எல்லோரும் ‘தேசபக்த’ காங்கிரசுக்காரர்கள். அந்த நிலங்களில் வேலை செய்யும் விவசாயிகள் - ‘கூலித் தொழிலாளிகள்.’ அவர்கள் அனை வரும் தாழ்த்தப்பட்டவர்கள். மிகப் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களும் மிகப் பெருவாரியாக ‘கூலித் தொழிலாளிகளாக’ இருந்தார்கள். இவர்களுக்கு இவர்களே உடைமை இல்லை. இவர்கள் யாவரும் - யாதும் பண்ணையார்களின் உடைமைகள். இவர்களுக்கு, இவர்கள் யார் என்பதை அடையாளப்படுத்தாமல் தன்னை, கூலி உயர்வு பெற்றுத்தரும் அமைப்பாக மட்டுமே சுருக்கிக்கொண்டாலும் தஞ்சை மாவட்ட விவசாயிகள் மத்தியில் 1940களில் தொடங்கி 43 வரையிலும் செங்கொடி விவசாயிகள் சங்கம் தோழர் சீனிவாசராவின் தலைமையில் பண்ணையார்களின் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க துவக்கப்புள்ளியினை இட்டது கம்யூனிஸ்ட் இயக்கம். ஆனாலும் செங்கொடி சங்கத் தோழர்கள் கொடுமையான அடக்குமுறைக்கு ஆளானார்கள். அதுமட்டுமல்ல களப்பால் குப்பு, ஆம்பலாபட்டு ஆறுமுகம், வாட்டாக்குடி இரண்யன், பட்டுக்கோட்டை சிவராமன், சேலம் சிறையில் 27 தோழர்கள் என்று போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது மட்டுமல்லாது சாணிப்பாலுக்கும் சவுக்கடிக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. இயல்பாகவே இந்த நிலையில் தஞ்சை மாவட்ட விவசாயத் தொழிலாளர்கள் நில உடைமை, சாதிய - தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்டும் இயக்கம் தேவை என்ற ஏக்கத்தோடு இருந்தபோது, தந்தை பெரியார் தென்பகுதி இரயில்வே மென் யூனியன் என்ற திராவிடர் தொழிலாளர் சங்கத்தையும் திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கத்தையும் தொடங்கினார். கூலி உயர்வைப் பற்றி மட்டுமே பேசாமல் உரிமைகளைப் பற்றிப் பேசவும் யோசிக்கவும் இயக்கமாகப் போராடவுமான ஒரு அறிவிப்பை வெளியிட, மானமும் அறிவும் பெற - சமூக இழிவு ஒழிய தாழ்த்தப்பட்டோரும் பிற்படுத்தப்பட்டோருமாக இணைந்து திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கத்தில் இணைகின்றனர். செங்கொடி இயக்கத்தில் இருப்போரும் இணைந்தது மட்டுமல்ல, இசைவுடனே இயங்கியது. தந்தை பெரியாரின் மானமீட்புப் போராட்ட அரசியலும் ஏ.ஜி.கேயின் களப்பணியும் இணைந்தபோது பண்ணை ராஜ்யங்கள் தங்கள்முகங்களை இழக்கத் தொடங்கின. போராட்ட வடிவமும் போராடும் முறையும் ஆண்டைகளை உளவியல்ரீதியாகத் தாக்கின. பெண்கள் போராட்டக் களத்தில் முன்வரிசையில் நின்றார்கள். இந்த அணுகுமுறை 1960களில் செங்கொடி அமைப்பினர் என்றோ, திராவிடர் விவசாயத் தொழிலாளர்கள் என்றோ வேறுபடுத்திப் பார்க்க முடியாமல் ஒத்திசைவோடு போராட்டக்களத்தில் இணைகோடுகளாய்ப் பயணித்தன. காங்கிரசு அரசின் ஆசீர்வாதத்துடன் பண்ணையார்கள், இரு இயக்கத் தோழர்கள்மீதும் அராஜகத்தினை அவிழ்த்துவிட்டார்கள். அதில் அதிகம் பாதிக்கப்பட்டது திராவிட விவசாயத் தொழிலாளர்கள்தான். பண்ணையார்கள் எல்லோரும் காங்கிரசுக்காரர்கள். தலைவர் பெரியார் காங்கிரசை காமராஜர் ஆதரவு என்ற நிலைப் பாட்டில் ஆதரிக்கின்றார். இந்த நிலைப்பாடு கீழைத் தஞ்சைப் பண்ணையார்களுக்குச் சாதகமாக அவர்களது ஆதிக்கத்திற்கு உதவிகரமாக மாற்றப்படுகின்றது. 7.4.1961, விடுதலை தலையங்கத்தில், “தமிழர்களுடைய நன்மைக்காகப் பாடுபடும் வரையில்தான் காங்கிரசைத் தமிழர்கள் ஆதரிக்க வேண்டும். மாறாகப் போய்விடுமாயின் அதனை ஒழித்துக் கட்ட முற்பட வேண்டும்,” என்று குறிப்பிடுகின்றார். இதனைத் தொடர்ந்து ஏ.ஜி.கே., பெரியாருக்கு ‘ஸ்தல நிலைமை’களை விளக்கிக் கடிதம் எழுதுகின்றார். காங்கிரசு ஆதரவு என்பது ஒட்டுமொத்தத் தமிழ்ச்சமூக நலனுக்கு உகந்ததாக இருப்பினும், கீழைத்தஞ்சையைப் பொறுத்தமட்டில் அது பண்ணையார்களுக்கான ஆதரவாகத்தான் முடியும் என்ற முரண்பாட்டு நிலையைக் களைய முனைகின்றார். 1962 பொதுத்தேர்தல் வருகின்றது. திராவிடர் கழகத்தின் காமராஜர் - காங்கிரசு ஆதரவு நிலைப்பாடு. அதனைத் தொடர்ந்து பெரியாரைச் சந்திக்க முடியாத சூழ்நிலை - தன்னை நம்பி, தனக்குப் பின்னால் திரண்டு நிற்கும் விவசாயத் தொழிலாளர்களைக் கருத்தில்கொண்டு, பெரியாரியத்தைச் சுமந்துகொண்டு 1963இன் துவக்கத்தில் தன்னுடைய தோழர்களோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - மார்க்ஸிஸ்ட்டில் இணைகின்றார். இணைந்த பின் ஏ.ஜி.கே. சிவப்புச் சட்டையைப் போட்டுவிட்டாரே தவிர இன்னும் ‘கறுப்புச் சட்டையைக் கழற்றவில்லை’ என்பதுதான் அவரைப்பற்றிய மதிப்பீடாக இருந்தது. அதன் வெளிப்பாடாகத்தான், கூலி உயர்வு, ஆனால் அது வெறும் பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல, அது என் உரிமையோடும் சுயமரியாதையோடும் சம்பந்தப்பட்டது என்ற கருத்தாக்கம் உருவாக்கப்பட்டது. இந்த சுயத்தைத்தான் - மானத்தைத்தான் அறிவு கொண்டு மீட்டெடுக்க ஏ.ஜி.கே. முன்நின்றார். அதற்காகத் தான் கீழைத்தஞ்சையின் பரந்த வயல்வரப்புகளில் மார்க்ஸையும் பெரியாரையும் இணைத்து நடக்க வைத்தார். 2013 ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் ஒருநாள், ஏ.ஜி.கே. மிகமோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்டுத் தஞ்சையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வருகின்றது. போய்ப் பார்த்தேன். சுயநினைவின்றி இருந்தார். மறுநாள் நினைவு திரும்பியது. “புத்தகம் என்னவாயிற்று, நான் சாவதற்குள் வந்துவிடுமா?” என்றார். அந்த ஆண்டு வெண்மணி தினத்தில்தான் ‘ஏ.ஜி. கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்’ நூலினை அவர் முன்னிலையில், அவர் இல்லத்தில், அவரின் மகள் ஏ.ஜி.கே. கல்பனாவைக் கொண்டு வெளியிட்டேன். ஏ.ஜி.கே.விற்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு, நீண்ட போராட்டத்திற்குப்பின் ஆயுள் தண்டனையாக மாற்றி 1985களில் விடுதலையாகி வெளிவரக் காரணமான ‘முக்கொலை வழக்கு’ பற்றிய விபரங்கள் அடங்கிய தட்டச்சு செய்யப்பட்ட ஆவணத்தை என்னிடம் கொடுக்கச் சொல்லி அதையும் நூலாகக் கொண்டு வாருங்கள் என்று கேட்டுக்கொண்டார். 09.07.2016 நள்ளிரவு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டார். மறுநாள் என்னைப் பார்த்ததும் அவரால் பேச முடியவில்லை. ஆனால் கைகளால் சைகையில் புத்தகம் என்னவாயிற்று என்று கேட்டார். அவர் மறைவுற்ற 10.08.2016 அன்று காலையில்கூட என்னைக் குறிப்பிட்டுப் புத்தகம்பற்றி சைகையில் அய்யா கேட்டார் என்று அவரது மகள் வழக்கறிஞர் கல்பனா சொன்னபோது நான் கையறுநிலையில் இருந்தேன். அந்த நூலும் விரைவில் வரும். அப்போது அதில் தீக்கதிருக்கும், நாகை முன்னாள் எம்.எல்.ஏ. மாலிக்கும் பதில் இருக்கும். 1925களில் பொதுஉடைமை இயக்கமும், திராவிடர் இயக்கத்தின் தோற்றுவாயான சுயமரியாதை இயக்கமும் தொடக்கப்படுகின்றது. இந்த இரண்டு இயக்கங்களின் வரலாற்றினை நேர்மையாக, நாணயமாகப் பதிவு செய்தால் அதில் ஏ.ஜி.கே. என்ற ஆளுமையின் வகிபாத்திரத்திற்குச் சில பக்கங்கள் இருக்கும். ஆனால் திராவிடர் இயக்கமும் பொது உடைமை இயக்கமும் ஏனோ மிகக் கவனமாக அவரை இருட்டடிப்புச் செய்தன, செய்கின்றன. ஏ.ஜி.கே.வின் மறைவுக்குப் பின்னும் அது தொடர்கிறது. அது ஏன் தோழர்களே, உங்களுக்குத் தெரியுமா? மின்னஞ்சல்: gowthamanpasu@gmail.com ஏ.ஜி.கே: மார்க்சியத்தையும் பெரியாரியத்தையும் இணைத்தவர் தன் வாழ்நாள் முழுவதும் மக்கள் தலைவராக வாழ்ந்த அந்தணப்பேட்டை கோபாலசாமி கஸ்தூரிரங்கன் புதன்கிழமை (10.8.2016) மாலை காலமானார். தோழர் ஏ.ஜி.கே. என்று மக்களாலும் தோழர்களாலும் அழைக்கப்பட்டவர். தோழர் தியாகு தனது சிறை சுயசரிதையில் அவரைப் பற்றி இப்படிக் குறிப்பிடுவார்: “ஒருவர் நம்மோடு பத்தாண்டுகள் இருந்தும் நம்மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாதவராக இருக்கலாம், வேறு சிலரோ நம்மோடு மிகக் குறைந்த காலமே இருந்திருப்பர். அவர்கள் நம்மீது ஏற்படுத்தும் தாக்கம் வாழ்நாள் முழுமைக்குமானது. ஏ.ஜி.கே. எனக்கு அப்படித்தான். நான் அவரோடு ஒன்றாக இருந்தது சிறை மருத்துவமனையில் 10 நாட்கள் மாத்திரமே. வாழ்நாள் முழுமைக்குமான தாக்கத்தை ஏற்படுத்தினார் ஏ.ஜி.கே. என்றால், அதுதான் ஏ.ஜி.கே.” 60-களில் இன்றைய நாகப்பட்டினமான அன்றைய கீழத் தஞ்சையில் ஏ.ஜி.கே. அசலான மக்கள் தலைவராக இருந்தார். முதலில் திராவிடர் கழகம், பின்பு இடதுசாரி இயக்கம் என இரண்டின் சாரத்தையும் தன்னுள் ஏந்திய அவர், வெற்றிகரமான மக்கள் திரள் போராட்டத்தை முன்னெடுத்தார். செய்யாத குற்றமும் தண்டனையும் அன்றைய கீழத் தஞ்சை முதலாளிகளுக்கு, நிலவுடைமையாளர்களுக்கு அவர் ஒரு துர்சொப்பனம். ஒடுக்கப்பட்ட மக்களின் கூலி உயர்வுக்காகவும், சுயமரியாதைக்காகவும் அவர் நடத்திய போராட்டங்கள் நிறைய. ஒரு முறை, ஏ.ஜி.கே. தாக்கப்பட்டார் என்ற செய்தி அறிந்து மக்கள் கொந்தளித்தனர். அவரைத் தாக்கியதாகச் சொல்லப்பட்ட முதலாளியின் வீட்டுக்குள் புகுந்து வீட்டை உடைத்து நொறுக்கினர். அந்த வீட்டிலிருந்த மூன்று ஆண்கள் கொல்லப்பட்டனர். வீட்டில் இருந்த குழந்தைகளுக்கும் பெண் களுக்கும் பாதிப்பு இல்லை. சம்பவம் நிகழ்ந்தபோது, ஏ.ஜி.கே. மருத்துவமனையில் இருந்தார். காயமடைந்திருந்த அவர் சாகட் டும் என போலீஸார் காத்திருக்க, அதற்குள் அந்தணப்பேட்டை யில் அந்தக் கொலைச் சம்பவம் நடந்திருந்தது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக ஏ.ஜி.கே. சேர்க்கப்பட்டார். அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. சீர்காழி கிளை நீதிமன்றத்தில் அவர் சரணடைந்த சம்பவம், புனைகதைகளை மிஞ்சக்கூடிய பரபரப்பு மிக்கது. கிளைச் சிறைக்கு அவரை அழைத்துச் சென்ற போலீஸார் அவரை அவமானப்படுத்த வேண்டும் என்றே காலிலும் கையிலும் விலங்கு மாட்டித் தெருவில் நடத்திச் சென்றனர். இதையும் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொண்ட அவர், வழியெங்கும் நின்ற மக்களிடம் பேசத் தொடங்கினார். மதியம் ஒரு மணிக்குக் கிளம்பிய ‘ஊர்வலம்’ மாலை 4.30-க்கு கிளைச் சிறையை அடைந்தது. இத்தனைக்கும் நீதிமன்றத்துக்கும் கிளைச் சிறைக்கும் இடையிலான தூரம் வெறும் ஒன்றேகால் கி.மீ. மாத்திரமே. ரகசிய சங்கம் சிறையின் இரும்புக் கம்பிகளால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. தமிழகச் சிறை வரலாற்றிலேயே சுதந்திர இந்தியாவில் சிறைப்பட்டோர் நலஉரிமைச் சங்கம் என்ற ரகசிய அமைப்பை நிறுவிய அவர், தியாகு, லெனின் போன்றோரின் துணையுடன் கட்டுக்கோப்பு மிக்க சிறைப் போராட்டத்தை திருச்சி மத்திய சிறையில் தொடங்கினார். தமிழகச் சிறை வரலாற்றில் அதற்கு முன்னும் பின்னும் அப்படி யான ஒரு சிறைப் போராட்டம் இல்லை என தியாகு குறிப்பிடு வார். அந்தப் போராட்டத்தையே 1983-ல் மற்ற சிறைகளுக்கு தியாகு போன்றோர் விரிவாக எடுத்துச் சென்றனர். ஏ.ஜி.கே.வை எப்படியாவது தூக்குமரத்தில் ஏற்றிவிட வேண்டும் என்று ஆட்சியாளர்கள் மிக ஆர்வமாக இருக்க, 1973-ன் இறுதிவாக்கில் அப்போதைய குடியரசுத் தலைவர் வி.வி.கிரி, அவரது தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தார். அவரது தண்டனைக் குறைப்புக்காக பெரியார், ஈ.வி.கே.சம்பத் போன்றவர்கள் குரல் கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. எளிய வாழ்க்கை 1984-ல் முழு ஆயுள் தண்டனையும் கழிந்து விடுதலையானார் ஏ.ஜி.கே. 52 வயதுக்குப் பின்புதான் திருமணம், குழந்தைகள் என்று எளிய சந்தோஷங்கள் நிகழ்ந்தன. பெரியாரியத்தையும் மார்க்ஸியத்தையும் மிகச் சரியான புள்ளியில் இணைத்தவர் அவர். சமரசமற்ற எளிய வாழ்க்கை அவருடையது. இது போன்ற அரிதான மனிதர்களின் வாழ்வை ஆவணப்படுத்தும் எந்த ஏற்பாடும் நம்மிடம் கிடையாது. அவரைப் பற்றி நம்மிடமிருக்கும் சிறந்த சித்திரங்கள் தியாகுவின் எழுத்து வழி உருவாகும் சித்திரமும், ப.சு.கவுதமன் அவரிடமே உரையாடித் தொகுத்த ‘ஏ.ஜி.கஸ்தூரி ரங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்’ எனும் புத்தகமும்தான். அவரது எதிரிகளால்கூடப் பறிக்க முடியாத உயிரை, அவரது 84-வது வயதில் இயற்கை பறித்துக்கொண்டது. http://thozharagk.blogspot.in/ 20. கட்சியின் கள அணுகுமுறையும் மேல்மட்டத்தின் போக்கும் வேறு வேறாக இருந்தது எதனால்? போராட்ட வடிவங்கள், உத்திகள்லயே இந்த முரண் வருது. பேச்சு வார்த்தைக்கு ஒத்து வராத பண்ணைகள்ட்ட பாடை கட்டி ஊர்வலமா போறதப் பத்திச் சொன்னேன். அது அமைதியான போராட்டமா? இந்த போராட்டம் நாகரிகமா இல்லையான்னு விவாதமெல்லாம் வந்தது. சில வி¬யங்கள்ல நீங்க என்ன சொன்னாலும் கேட்க மாட்டீங்க. எப்படியாவது பண்ணுங்கன்னு மாட்டத் தலைமைகள் கசப்பா சொல்லிட்டு விட்டுடுவாங்க. நாங்க நடைமுறையில சங்கடப்பட்டு அனுபவிச்ச எதிர்விளைவுகள ஏத்துக்க வேண்டியிருந்துச்சு. எந்த செயலுக்குமான விளைவுகளை எதிர்கொள்ளவும், படிப்பினைகளின் அடிப்படையில் எதிர்வினை செய்யவுமான தேவை இருந்தது. அந்தப்படி எங்களோட போராட்டத்த மாவட்டம் பூராவும் நாடு பூராவும் விரிவுபடுத்திக்கனங்கிறது நாகை தாலுக்கா கமிட்டியோட, எங்களோட ஆழமான கோரிக்கை. இது நாகை தாலுக்கா அளவுல உள்ள செக்டேரியன் போக்கு என்பது மேல உள்ளவங்க நிலைப்பாடு. இதுதான் வெண்மணிக்கான எதிர் நடவடிக்கை என்பதிலும் எதிரொலித்தது. 21. வெண்மணி நினைவு தினம் குறித்து... வெண்மணி தினம் இப்ப கொண்டாடுவது மாதிரி ஏதோ ஒரு குறிப்பிட்ட தியாகிகள் தினம் மாதிரியோ ஒரு பண்டிகை மாதிரியோ கொண்டாடக் கூடாது. அது அன்றைய நாகை தாலுக்காவின் (இன்றைய நாகை,திருவாரூர் மாவட்டங்கள்) விவசாயத் தொழிலாளர்களுடைய எழுச்சியின் சின்னம். அப்படியான உணர்வு தொனிக்கிற வகையில் நடத்தணும். அதற்கான பெயர் சூட்டணும். நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தையும், சாதி வெறியினுடைய ஆதிக்கத்தையும் எதிர்த்து நடந்த அந்த நிகழ்ச்சிக்குப் பின்னால் அந்த இரண்டும் தகர்க்கப்பட்டுருச்சு. அப்படிப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் எழுச்சிக்கோ, அந்த எழுச்சியின் சின்னமான நிகழ்ச்சிக்கோ சரியான வரலாற்குப் பதிவுகள் இல்லை. இலக்கிய நடையிலேயும், கதை நடையிலேயும் விபரங்கள் அடிப்படையிலேயும் சில புத்தகங்கள் வந்திருக்கு. எதுவாயிருந்தாலும் உண்மையான வரலாற்றுப் பதிவாக இல்லாதிருந்தால் அது வெண்மணி நிகழ்ச்சியோட, விவசாயிகள் எழுச்சியேட சின்னத்தைக் கொச்சைப்படுத்துவதாகத் தான் அமையும். அன்னைக்கு நடந்த நிகழ்ச்சி எல்லாம் வட விவசாயத் தொழிலாளர்களோட அரைப்புள்ளி தானே தவிர முற்றுப்புள்ளி இல்ல. ஆனா எதார்த்த நிலை என்னன்னா அதனோட தொடர்ச்சியே இல்லாம முற்றுப்புள்ளி வைச்ச மாதிரி விவசாயிகள் எழுச்சி நின்னு போச்சு. 22. சிறைக்குள்ளும் இயக்கம் நடத்துவது என்பது சர்வதேசப் பொதுவுடைமையாளர்களிடம் காணப்படுகிற புகழ் பெற்ற ஒரு அணுகுமுறை. இதை தாங்களும் வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறீர்கள். அது பற்றித் தங்களோடு...? என் சிறை வாழ்க்கை என்பது ஏறத்தாழ 24 ஆண்டுகள். அப்போ சிறைச் சூழ்நிலையும் கைதிகள் நடத்தப்பட்ட விதமும் மோசமாயிருந்தது. ஒருத்தன் சிறைப்பட்ட உடனேயே அவனது வாக்குரிமையும் பறிக்கப்பட்டு விடுகிறது. பின் அவன் இந்த நாட்டின் குடி மகனா? இல்லையா? குற்றம் நிருபணமான பிறகு தான் குற்றவாளி. அதுவரை குற்றம் சாட்டப்பட்டவன்தானே? அடிப்படையில சிறைவாசிகள்ன்னும், சிறையை இல்லம்ங்கிறதுமே தப்பு. சிறைவாசிகள் அல்ல சிறைப்படுத்தப்பட்டோர் ; இல்லம் அல்ல. அடைப்பான் என்பதே சரி. வெள்ளையன் வெளியேறிய பிறகும் அவன் விட்டுப்போன 1881 ஆம் ஆண்டின் சிறைச் சட்டங்கள் அடங்கிய சிறைக் கையேடு தான் பின்பற்றப்பட்டது. இதில் சிறைப்படுத்தப்பட்டோர் தொடர்பா அரசு வெளியிடகிற ஆணைகள் , உத்தரவுகள் எதுவுமே அவர்களுக்குத் தெரியாது. சிறை உணவு, சிறைப்பட்டோர் நடத்தப்படும் விதம் மிக மோசமாயிருந்தது. இதை எதிர்த்துப் போராட வேண்டும் என்று தீர்மானித்தோம். அதன் முதற் கட்டமாக திருச்சி மத்தியச் சிறையில் 1973 இல் சிறைப்படுத்தப்பட்டோர் நல உரிமைச் சங்கம் துவங்கப்பட்டது. அதன் ஒருங்கிணைப்புக்காகவும் போராட்ட ஆயுதமாகவும் உரிமைக்குரல் கைப்பிரதியேடு துவங்கப்பட்டது. சங்கம் தலைமறைவு சங்கமாகவே கட்டப்பட்டது. மொத்தமுள்ள 1100 பேரில் ஆயிரம் பேருக்கு மேல் உறுப்பினராயினர். காவலர்க்கும் நிறைய நிர்வாகக் கொடுமைகள். பகல்ல 3 மணி நேர டூட்டி பார்த்தால் வெளியே போய்த் திரும்பி அடுத்த டூட்டிக்கு வர இடை நேரம் கிடைக்கும். இரவுப் பண என்றால் சாயந்திரம் 6 மணிக்கு உள்ளே வந்தா அதோட மறுநாள் காலை 6 மணிக்குத்தான் வெளியே போக முடியும். இரவு கேட் பூட்டப்பட்டு சாவிய சிறைக் கண்காணிப்பாளர் கையில எடுத்துட்டுப் போயிடுவார். இதற்கிடையில் வர்ற நல்ல செய்தி, கெட்ட செய்தி, குடும்பப் பிரச்சனை எதுவானானும் அடுத்த நாள்தான் தெரியும். வெளியவும் போக முடியாது. ரொம்ப அடக்குமுறை. அவங்க குடும்ப நிலைமைகளும் சிறைக்குள்ள வந்து ஏதாச்சும் ஓசியில வாங்கிச் சாப்பிடணும்கிற மாதிரிதான். அவர்களுள் சிலர் ஒன்று பட்டு தங்களை நெறிப்படுத்திக் கொண்டு நிர்வாக அடக்குமுறைக்கு எதிராகச் சங்கமாகத் திரள்வதில் துணை நின்றோம். சிறைக் காவலர் நலன் வளர்ச்சிக் கழகம் துவங்கப்பட்டது. அவர்களுக்குத் தரப்படுகிற மெமோவுக்கு பதில் எழுதித் தருவது, மேல் முறையீட்டு விளக்கங்கள் எழுதுவது இப்படி அவர்களோடு ஏற்கனவே நமக்கு நல்ல உறவு இருந்தது. ஆக வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது. ஒரு துண்டுச் சீட்டு கூட வெளியே கொண்டு போக முடியாது. கடுமையன சோதனைகள் இருந்தன. அப்ப ஒர்க்ஷாப் சிஸ்டம் இருந்தது. தையல், தச்சு, பைண்டிங்குன்னு ஒர்க்ஷாப்ல சிறைபட்டோருக்கு வேலை ஒதுக்கீடுகள் இருக்கும். தச்சுப்பட்டறையில் தயாராகிற லத்திகள்ல கூடாக்கி, பூண் மட்டும் போட்டு அனுப்புவோம். அதுல எத்தனை கடிதம், மனுக்கள் ஆனாலும் காவலர் மூலமாகவே வெளியே அனுப்பிடுவோம். இப்படி சகல வழிகளிலும் யுத்திகள் பண்ண வேண்டியிருந்தது. 26 கோரிக்கைகளை முன் வைத்து, மே 1, 1974 இல் (மே நாள்) போராட்டம் சிறைக்குள் துவங்கப்பட்டது. போராட்டத் துவக்க நாளிலேயே எல்லா தலைவர்கள், மத்திய, மாநில அரசுகள், அதிகாரிகள், அப்போ எதிர்க்கட்சித் தலைவர்கள் வாஜ்பேய், பிரதமர் இந்திராகாந்தி, இப்படி வெளியில 1000 பேருக்குக் கிடைக்கிற வகையில் கோரிக்கை மனுவும் போராட்டத் தகவலும் அனுப்பப்பட்டன. போராட்டத்தின் இன்னொரு வடிவமாக, சட்டபூர்வ போராட்டமாக, சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்க தொடரப்பட்டது. போராட்டத்தை ஒடுக்குவதற்கு சகல ஆயுதங்களையும் பிரயோகித்தார்கள். முக்கியமானவர்கள் சேலம், கோவை, மதுரை என்ற சிறை மாற்றம் செய்யப்பட்டனர். எங்கே சென்றாலும் அங்கங்கே போராட்டத்தைத் தொடருங்கள் , போராட்டத்தை விரிவாக நடத்த கிடைத்த வாய்ப்பு என்று பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றோம். என்னைப் பாளையங்கோட்டைக்கு மாற்றினார்கள். அங்கே செவ்வொளி என்ற கைப்பிரதி தொடங்கி நடத்தினோம். இறுதியில் போராட்டம் வெற்றியுடன் முடிவுற்றது. சிறைத்துறை வரலாற்றில் முதன் முறையாகச் சீர்திருத்தங்கள் துவங்கின. பாதிப்புன்னு பார்த்தா சில காவலர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டார்கள். அதற்கும் பொறுப்பேற்றுக் கொண்டு நம்முடைய ரெயில்வே தொழிற்சங்கத் தோழர்கள் மூலமாக அவர்களுக்கு ரெயில்வே துறையில் வேலை ஏற்பாடு செய்து கொடுத்தோம். ஒரு காவலர் மட்டும் வேலை வேண்டாம் என்று சொல்லி விட்டார். ஒரு இளைஞர் படிக்க விரும்புவதாகச் சொன்னார். நம்முடைய ஏற்பாட்டிலேயே அவரைப் படிக்க அனுப்பி வைத்தோம். இப்படி சிறை அனுபவங்களை, போராட்டங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். சிறையா, வெளியிலா என்பதல்ல பிரச்சனை. போராட்டம்ன்னா என்ன? சூழலைப் புரிந்து கொண்டு அதில் நம்மைப் பொருத்திக் கொண்டு மாற்ற உழைப்பது தான் போராட்டம். அது சிறையிலென்றாலும் சமூகத்திலானாலும் இதுதான் யதார்த்தம். உண்மை. Posted by கவி at 1:15 AM No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest தோழர் ஏ.ஜி.கே.வுடன் ஒரு நேர்காணல்-7 18.வெண்மணிச் சம்பவத்தைப் பற்றி... வெண்மணிச் சம்பவத்துக்கு ஒரு வாரம் முன்பு எர்ணாகுளத்தில் கட்சி மாநாடு. நாங்க 3, 4 பேர் தவிர எல்லோரும் அங்க போயிருந்தாங்க. என் மேல வழக்கு. நாகப்பட்டினத்த விட்ட வெளியே போகக் கூடாது. தினமும் போலீஸ் ஸ்டே¬ன்ல கையயழுத்துப் போடனும். அதனால நான் மாநாட்டுக்குப் போகல. மாநாட்டு கடைசி நாள் நிகழ்ச்சிக்கு இங்கிருந்து அனுப்ப 5 பஸ் ஏற்பாடு பண்ணனும். ஒரு பஸ் தேவூரிலிருந்து புறப்பட ஏற்பாடு. இப்படி ஒவ்வொரு பஸ்ஸையும் ஏற்பாடு பண்ணி அனுப்ப டாக்கிசியில் ராத்திரி 9 மணிக்கு மேல போறோம். தேவூருக்குப் போய் சேரும் போது இரவு 11 மணிக்கு மேல ஆயிட்டு. அங்க கோபால்னு நம்ம தலைவர். அவர் தான் பின்னால் நடந்த இரிஞ்சூர் கொலை வழக்கில் ஏ1. அவர் வீடு தேவூர் பாரதி தெரு கடைசி. அங்கிருந்து பார்த்தா வெண்மணி தெரியும். அங்க ஒரே கூட்டம். நான், தோழர்கள் ஜி.பி. கணேசன் எல்லோரும் போறோம். அங்க இறங்கி என்னன்ன கேட்டா அப்பத்தான் ஒரே நெருப்பு பிழம்பா வெண்மணி எரிஞ்சி தணலா அமுங்கிற நேரம். அங்க நிக்கிற போதே போலீஸ் வேன் போச்சு. முன்னாலேயே 2வேன் போயிருக்கன்னாங்க. இதுக்குப் பிறகு இங்க நிக்க வேணாம். நீங்க போயி மற்ற வேலைகளைப் பாருங்க. நான் என்னன்ன தெரிஞ்சுகிட்டு வர்றேன் அப்படின்னு நான் மட்டும் இறங்கிக்கிட்டு அவங்களை அனுப்பிட்டேன். வெண்மணியிலிருந்து அடிப்பட்டவங்க 8,10 பேர் வந்தாங்க. எல்லோரையும் பார வண்டியில் ஏத்தி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிட்டு, ஜனங்கள பார்த்தா ஒரே கொந்தளிப்பா இருக்காங்க. விபரம் கேட்டா எல்லாரும் தப்பிச்சக்கிட்டு ஓடிட்டாங்க என்பது தான் அப்போதைய தகவல். போலீசும் நிறைய போயிருக்கு. இப்ப ஒன்னும் வேணாம். விடிஞ்சி பார்த்துக்கலாம்னு சொல்லி அவுங்கள அமைதிப்படுத்திட்டு நான் ஆஸ்பத்திரிக்குப் போயிட்டேன். மறுநாள் காலையில் 9 மணிக்குத் தான் எங்களுக்கு முழு விபரமும் தெரியும். நடந்த சம்பவம் என்னன்னா, வெண்மணியில முத்துசாமிங்கிறவர் நம்ம தலைவர். டீக்கடை வச்சிருந்தார். 4 பேர் அவரு கடைக்கு வந்து சாதியச் சொல்லித் திட்டுறான். போயிடுறான். திரும்பவும் இன்னும் கொஞ்சம் ஆட்களோட வந்து டீ கிளாசையயல்லாம் உடைக்கிறான். நம்ம ஆட்கள் அதிகமில்லை. வெளியில் வேலைக்குப் போயிட்டாங்க. மறுபடியும் வந்த கும்பல் முத்துசாமிய அடிச்சத் தூக்கிட்டுப் போய் மேல வெண்மணியில ஒரு வீட்டில் அடைச்ச வச்சிட்டாங்க. இதெல்லாம் பகல்ல நடக்குது. சாயந்திரம் ஆறு , ஆறரை மணிக்கு ஊருக்குத் திரும்புன நம்ம ஆட்களுக்குச் சேதி தெரிஞ்சு, கொதிச்சுப் போய் திரண்டு கம்பு, கத்தி கையிலே கெடச்ச ஆயுதங்களோட போறாங்க. கும்பலப் பார்த்த உடனே எல்லாரும் சிதறி ஓடிர்றான். வீட்டில இருந்த பெண்கள் பயத்தில பின் பக்கக் கதவைத் திறந்து விட முத்துசாமிய வெளியே கொண்டு வந்திட்டாங்க. இது வி¬யம் தெரிஞ்ச பக்கத்து ஊர்கள்லேருந்தும் தோழர்கள் பதட்டத்தோடு வர்றாங்க. சூழ்நிலையை யோசிச்சு நம்ம ஆளக் கடத்திப் பிரச்சனைப் பண்ணினவன் அவன். நாமளும் திரண்டு பேய் மீட்டுக்கிட்டு வந்திட்டோம். இப்போதைக்கு பிரச்சனை இதோட இருக்கட்டும். எச்சரிக்கையா மட்டும் இருங்க. மேற்கொண்டு நாம மேலேயும் சொல்லி முடிவு பண்ணிக்கலாம். அப்படின்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க. ராத்திரி ஏழரை மணி வாக்கிலே இருக்கை ராமுப்பிள்ளை தன்னோட அடியாட்களோட வெண்மணி தெருவுக்குள்ளே பூந்திருக்கான். எப்பவுமே கிராமங்கள்ல ஆயத்தமா இருந்தா யாரும் உள்ளே நுழைஞ்சி ஒன்னும் பண்ணிட முடியாது. அதானல் தான் போலீசே ஊர் அடங்கின பிறகு ராத்திரி 11 மணிக்கு மேல கிராமத்த சுத்தி வளைச்சு நின்னுகிட்டு, ஒவ்வொரு வீடா ஆள்களைக் கிளப்பிக்கிட்டு வந்து அடிச்சு அங்கேயே வச்சிகிட்டு மறுபடி ஒவ்வொரு வீடா தட்டிக் கிளப்பிக்கிட்டு வருவான். உஷார்படுத்தறதுக்கோ, ஒன்னு கூடவோ விட மாட்டான். நம்ம மேலே நடந்த தாக்குதல்கள் எல்லாம் இப்படித்தான். இங்க நாமளும் உஷார இருந்ததால் உடனே ஒன்னா கூடிட்டாங்க. ஆனா அவன் நுழைஞ்ச உடனேயே நாட்டுத் துப்பாக்கியால சுட ஆரம்பிச்சுட்டான். நம்ம பல பேரு உடம்புல குண்டு துளைச்சிருச்சு. இவங்க எதிர்த்து கல்லால அடிச்சிருக்காங்க. எதிர்ப்பு பலமா இருந்ததால திரும்பப் போயிட்டான். இப்படி ஒரு ஆள் செத்துப் போனத முதல்ல இரு தரப்புக்கமே தெரியாது. இது நடந்து அரை மணி நேரம் கழிச்சி கோபாலகிருஷ்ண நாயுடு பெரும் கும்பலோட வந்து நுழைஞ்சு சுட ஆரம்பிச்சுட்டாரு. பெரும் கும்பல். கடுமையான தாக்குதல் எதிர்த்து நிக்க முடியாம எல்லோரும் சுத்துப்பட்ட கிராமங்கள நோக்கி ஓடிர்றாங்க. தப்பிச்ச ஓட முடியாம ராமையாங்கிறவர் வீட்டுக்குள்ள பல பேரு ஓடி உள்ள நுழைஞ்சத பார்த்த அவங்க ஆள் ஒருத்தன் வெளித்தாழ்ப்பாள் போட்டுட்டு வீட்டைக் கொளுத்திர்றானுங்க. ஒரு ஆள் மட்டும் மேல் கூரையைப் பிச்சிக்கிட்டு தப்பிக்க முயற்சி பண்ணும் போது அவரையும் கம்பால அடிச்சு நெருப்புக்குள்ள போட்டுர்றானுவ. இதுதான் நாடு முழுவதையும் அதிர வைச்ச வெண்மணிச் சம்பவம். 19. இந்தச் சம்பவத்தைக் கட்சி எப்படி எதிர்கொண்டது? முதல்ல வெண்மணி பகுதியில தொழிலாளர் மேல ஒரு மோசமான தாக்குதலுக்கு ஆயத்தம் இருக்குன்னு அரசுக்கு 6 மனுக்கள் அனுப்பியிருக்கோம். கடைசியா அனுப்புனது சம்பவம் நடக்க ஒர வாரம் முன்னாடி. அப்போ அண்ணாதுரை முதல்வர். அன்னைக்கி விவசாயத் தொழிலாளர் போராட்டங்கள நசுக்கறதுல எல்லாக கட்சிகளும், கட்சிகளின் லோக்கல் தலைவர்களும் , நிலப்பிரபுக்கு ஆதரவா, ஒன்னா நின்னாங்க. அரசு நாங்க அனுப்பின பெட்டி¬ன் மேல ஒரு நடவடிக்கையும் எடுக்கல. களத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே தனியா நின்னது. வெண்மணி சம்பவத்துக்கு பின்னாடி எல்லாக் கட்சிகளின் கோரிக்கையும் நீதி விசாரணை வேண்டும் என்பதுதான். சி.பி.எம். மேல் மட்டத்திலேயும் இதையே தான் சொன்னாங்க. நகை தாலுக்கா கமிட்டி மட்டும் குற்றவாளி யாருன்னு தெரியாம இருக்கும் போது தான் நீதி விசாரணை கோரணும். பகிரங்கமா இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு அடியாட்களோடு வந்து நேரடியா நடத்தின கொலை வெறித் தாக்குதல். அதனால குற்றவாளிகளைக் குறிப்பிட்டு வழக்கு போடணும். இதுதான் நாகை தாலுக்கா கமிட்டி சொன்னது. இதைச் சொன்னவுடனே தோழர் பி.ஆர். ஏத்துக்கிட்டாரு. அப்புறம்தான் வழக்க பதிவானது. இதுக்கு எதிர் நடவடிக்கை நிச்சயம் வேணுங்கிறது பரவலான கருத்து. சம்பவம் 68 டிசம்பர்ல நடந்தது. 69-ல இதுக்கான பதில் நடவடிக்கை என்னங்கிறத பத்தி தாலுகா கமிட்டி முடிவு எடுத்திடுச்சு. வி¬யம் விவாதத்தில இருந்தது. திடமான முடிவு எடுத்தாச்சு என்பதெல்லாம் மேல் மட்டத்துக்குத் தெரியும். அந்த நேரத்தில் நான் முக்கொலை வழக்கில் உள்ள போயிடுறேன். இந்த சந்தர்ப்பத்தில் தான் கட்சியின் மேல் மட்டம் எதிர் நடவடிக்கைக்கு ஆயத்தமானவர்களை எல்லாம் கட்சியிலிருந்து நீக்கிடுச்சு. தாலுக்கா கமிட்டி செகரட்டரி மீனாட்சிசுந்தரம் உட்பட தீவிரமான கட்சித் தோழர்களைக் கட்சி வெளியேத்திருச்ச. Posted by கவி at 1:14 AM No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest தோழர் ஏ.ஜி.கே.வுடன் ஒரு நேர்காணல்-6 14. கட்சியின் அன்றைய நிர்வாக நடைமுறைகள் எப்படியிருந்தன? அப்ப கட்சி ஒழுங்கு தீவிரமா கடைபிடிக்கப்பட்டது. 12 1/2 ரூபா செலவுக் கணக்க சரியா சொல்லலைங்கிறதுக்காக ஒரு தாலுக்கா கமிட்டி செயலரையே கட்சி நீக்கியது. அப்படியயல்லாம் கறாரா இருந்த நேரம். அதே போல கட்சி அலுவலகங்கிறது வேலைகள் கலந்தக்கிறதுக்காக, திட்டமிடலுக்காக, வருகிற இடமா மட்டுந்தான் இருந்தது. மற்ற நேரமெல்லாம் ஜனங்க மத்தியில் வேலை செய்யறதுதான். ஆபீஸ்ல எல்லாம் தங்கி அரசியல் நடத்தாதீங்க. எதுவானாலும் இருந்த இடத்திலேயே ஸ்தலத்தில தான் வேலை செய்யனும்னு கறாரா சொல்வாங்க. அதே போல கலெக்டர், போலீஸ் இப்படி எந்த அதிகாரிகள் கிட்டேயும் நேர்ல போய் பேசுங்க. அப்பதான் உங்க முகத்தைப் பார்த்துப் பேசுவாங்க. போன்லயயல்லாம் பேசுனா மத்தவங்க கிட்ட கண் சாடை காட்டி கேலியா கூடப் பேசுவான் அப்படிம்பாங்க. எதையும் ஒரு சீரியஸா, உணர்வுப் பூர்வமாக அணுகனுங்கறது அன்றைய நடைமுறை. அப்போ ஜனங்க மத்தியிலே பேசுறது, மேடையில் பேசறதுங்கறத வேலைகளைப் பத்தின அறிக்கையாத்தான் இருக்கும். பேசுறது நடைமுறையினுடைய விரிவாகத்தான் இருந்தது. மேடைப் பேச்சே, பேச்சு வழக்காத்தான் இருந்துச்சு. பின்னால வந்த முதலாளித்துவ அரசியல்ல தான் பேச்சுங்கிறது ஒரு தொழிலாயும் சாதியாவும் மாறிப் போச்சு. 15. அந்தப் போராட்டச் சூழலில், நினைவில் எட்டுகிற சில சம்பவங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா? நாகைத் தோழர்கள்னாலே கட்சியல் விசே¬மான மரியாதை உண்டு. மாநாடுகள் நடக்கும் போது, குறிப்பாக, மேற்கு வங்கத்தச் சேர்ந்தவங்க நாகைத் தோழர்களைத் தேடி வந்து வாழ்த்து சொல்வாங்க. நம்முடைய தோழர்களைத் தங்கள் தோள்களில் தூக்கிக் கொண்டு கோ¬ம் போட்டதும், ஆடியதும் கூட உண்டு. நமக்குத் தீவிரமான போராட்டக்காரர்கள் என்கிற ஒரு மரியாதை இருந்தது. பண்ணைக்கள்ல போராட்டம் நடந்த போது எந்த பேச்சுவார்த்தைக்கும் அடங்காம ரொம்ப வீம்பா இருந்தவனும் உண்டு. மாங்குடி கிருஷ்ணமூர்த்தி அய்யர்னு ஒரு மிராசுதார். ரொம்ப கிராதகமான அய்யர். நம்ம போராட்டத்தை மீறி அவங்களே அறுவடை பண்றதுன்னு முடிவு பண்ணி வெளியூர் ஆட்கள், அடியாட்களோட ஊர்வலமா போறாங்க. முன்னாலே தலைமை தாங்கி இந்த கிருஷ்ணமூர்த்தி அய்யரே தப்படிச்சுக்கிட்டுப் போறாரு. அத நம்ம தோழர்கள் தடுத்த போது (அவங்க அறுவடை செய்யக் கூடாதுன்னு) நடந்த போராட்டத்தில் தான் பூந்தாழங்குடி பக்கிரிசாமி போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். தலையாமழை ஏ.எம்.பி. செட்டியார் பண்ணையில ஆலமழை சின்னத்தம்பின்னு ஒரு காரியக் காரர். எப்பவும் அரிவாளும் கையுமா இருப்பார். அசந்த நேரமே கிடையாது. ஆளுகள அச்சுறுத்தி வேலை வாங்கிறவர். நம்ம தோழர்கள் திட்டம் போட்டு ஒரு நாள் அவர் தூங்குற போது அரிவாள மட்டும் எடுத்துட்டு வந்துட்டாங்க. தன் அரிவாள ஒருத்தன் பறிச்சிட்ட பிறகு தன் வீரமே பறி போயிட்டதா நினைச்ச, அதோட பண்ணைய வேலையை விட்டுட்டார். பிறகு கட்சிக்கும் வந்துட்டார். அதோட கடைசி வரை சிவப்புச் சட்டையில் தான் இருந்தார். அப்படித்தான் வடவூர் பண்ணையில காரியக்காரர் மச்சான் கைவெட்டுப்பட்ட ராஜமாணிக்கத்தைப் பத்திச் சொன்னேன் அல்லவா? பிற்காலத்தில் அவரும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்திட்டாரு. யாருகிட்ட கையாளா இருந்தாரோ, யாரு அவரக் காப்பாத்துவாங்கன்னு நினைச்சாரோ அவங்கெல்லாம் கைவிட்ட பிறகு, தான் செஞ்ச தவறுக்குப் பரிகாரமா இங்கேயே வந்திட்டாரு. இப்படிப் பல சம்பவங்கள். 16. வெண்மணிச் சம்பவத்திற்கு முந்தைய சூழல், வெண்மணியின் விவசாயத் தொழிலாளர் போராட்டம் பற்றி...? முதல்ல வெண்மணிச் சம்பவத்த ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சியா பார்ப்பதோ, அத அப்படி குறுக்கி விடுவதோ தவற. 63 க்குப் பின்னாடி நாகைப் பகுதியிலே வளர்ந்து வந்த போராட்டச் சூழலின் ஒரு உச்சக்கட்டமாகத்தான் அது நடந்தது. அந்தச் சூழல் இல்லாமல் இந்தச் சம்பவம் இல்ல. இப்படியான பார்வை பொதுவுடைமை கட்சியிலேயே குறைவாகத்தான் இருக்கு. அப்போதைய போராட்டச் சூழல் என்பது நிலப்பிரபுக்களின் திட்டமிட்ட தாக்கதல்களும், நம்முடைய தற்காப்புக்கான தாக்குதலும் அதிகமாகிப் பதட்டமான சூழ்நிலை. அதன் ஒரு கட்டமாக நம்முடைய பல தலைவர்களைப் பலி கொண்டார்கள். ஆய்மழை தங்கவேல், சிக்கல் பக்கிரிசாமி, இரிஞ்சூர் சின்னப்பிள்ளை, கேக்கரை இராமச்சந்திரம் இப்படிப் பலரும் கொலை செய்யப்பட்டார்கள். குடிசைகள், வீடுகள் கொளுத்தப்பட்டன. விவசாயத் தொழிலாளர் மீது நிலப்பிரபுக்கள் கட்டவிழ்த்து விட்ட காலித்தனங்களும், கொடுமையும், அதை எதிர்த்து வாழ்வா? சாவா? என்ற நமது ஜீவ மரணப் போராட்டங்களும் நடந்து கொண்டிருந்தன. நெல் உற்பத்தியாளர் சங்கம் துவங்கிய ஆய்மழை மைனர், எங்க எதிர்ப்பைச் சமாளிக்க முடியாம எதிரடி வாங்கின பிறகு இப்போ அதன் தலைவரா இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு வர்றார். நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறைகளை நன்றாகக் கற்றுத் தேர்ந்த கொடுங்கோலன். திருமணமாகாதவர். ஜாதிக்கட்டு உள்ளவர்ங்கிற கூடுதல் பலத்தோடு வர்றார். எங்கெங்கே விவசாயத் தொழிலாளர் போராட்டம் நடக்கிறதோ அங்க 3 டிராக்டர்ல அடியாட்களோடு இவரும் துப்பாக்கியோடு ஜீப்பில் வருவார். இப்படிப் பல இடங்கள்ல நேரடியாகவே தாக்குதல் நடத்தினார். அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டும், வேலை தராம விவசாயிகளை வெளியேத்தாதே! என்றும் நரியங்குடியில ஒரு போராட்டம். இவருடன் வந்த அடியாட்கள் தாக்க இவர் துப்பாக்கியால சுடுறார். போலீஸ் கண்ணீர் புகை வீசுது. இப்படி எல்லோரையும் அச்சப்படுத்தி நமது போராட்ட வலுவை ஒழித்துக் கட்ட நினைக்கிறார். அவர் எந்த ஊர்கள அடக்குமுறையில வச்சுகிட்டு மத்த இடங்கள்ல சுதந்திரமாக ரவுடித்தனம் பண்றாரோ, அந்த அவரோட இடத்திலேயே அவரக் கிளம்ப முடியாம பண்ணனும். அங்கேயே நம்முடைய கட்சிய வலுவாக்கவும், போராட்டத்தைக் கடுமையாக்கவும் செஞ்சோம். அதனால் அந்தப் பகுதிகள்ல நம்ம கட்சி கடுமையான எதிர்ப்புக் கிடையில வேலை செய்ய வேண்டியிருந்துச்சி. இந்தப் போராட்டச் சூழல்ல தான் வெண்மணிப் போராட்டம் நடந்தது. 17. கூலி உயர்வு கோரிய போராட்டந்தானே வெண்மணிப் போராட்டம்? கூலி உயர்வு கோரிக்கை மட்டுமல்ல ; விவசாயத் தொழிலாளர் மரியாதையும் ; உரிமையும் பெறுவதற்காக நடத்திய போராட்டந்தான் அது. 5 படி நெல் கூலியை 6படியாக உயர்த்திக் கொடுக்கணும். அறுவடை செஞ்ச நெல் அனைத்துக்கும் கூலி தரணும்னு இரண்டு கோரிக்கைகள். நெல் அறுவடை முடிந்து களத்தில் நெல் குவிக்கப்படும். ஏறத்தாழ பாதிக்க மேல் மூட்டை போட்ட பிறகு வண்ணான், பரியாரி, கோவிலுக்கு, கிராமத்துக்குன்னு பண்ணையார் அளந்து போடச் சொல்வார். இந்த வரு¬ சம்பளத்தின் மூலமும், பராமரிப்பின் மூலமுந்தான் கிராம சாதிப் படிநிலை, சேç செய்கிற சாதி முறைகள் நில உடைமை முறையை உயிரூட்டி வச்சிக்கிட்டாங்க. இந்த முறையில நெல் விநியோகிச்ச பிறகு, அறுவடையான மிச்ச நெல்லுக்குத் தான் கூலி கணக்கிடுவார்கள். இப்படிக் கூலி போடும் போது, முதல்ல அளந்து கட்டுன பாதிக்குத் தான் கூலி கிடைக்கும். மீது களத்தில் செலவாகும் நெல்லுக்குக் கூலி கிடைக்காது. களத்திலே செலவாகும் நெல்லும் கூலிக்கு அறுத்ததுதானே! அதோட களத்தில் செலவெல்லாம் முடிஞ்சு ஒவ்வொரு குவியல்லேயும் ஒன்றரை களம், 2 களம் நெல்லு கிடைக்கும். அத அடிப்பொலின்னு சொல்லி அதையும் கூலி கொடுக்காம அள்ளிக் போட்டுக்குவான். என்னன்ன கேட்டா அது பட்டறைக் காய்ச்சலுக்குன்னு சொல்லிடுவான். நமது கோரிக்கை என்னன்னா அறுவடை செய்த அனைத்து நெல்லையும் மூட்டை போட்டு அத்தனை மூட்டைக்கும் கூலி போட வேண்டும் என்பதுதான். ரெண்டு கோரிக்கைகள்ல கூலியை உயர்த்திக் கொடுக்க சம்மதித்த பண்ணைகள் அறுவடை செஞ்ச நெல் அனைத்துக்கும் கூலி என்பதை மறுத்து விட்டனர். இதுவரை இருந்த பாரம்பரிய முறையை மாற்றுவது தங்கள் கெளரவத்தைப் பாதிப்பதாகக் கருதி மறுத்தனர். செய்த வேலை முழுமைக்கும் கூலி பெறுவது தங்களின் மரியாதைக்கும் உரிமைக்கும் கிடைக்கும் அங்கீகாரமாகத் தொழிலாளர்கள் முடிவு செய்தனர். இதுதான் வெண்மணிப் போராட்டத்தின் அடிப்படை. Posted by கவி at 1:13 AM No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest தோழர் ஏ.ஜி.கே.வுடன் ஒரு நேர்காணல்-5 11. கீழத்தஞ்சையின் போராட்ட வரலாறு என்பது அங்குள்ள சூழ்நிலை, வழக்கங்கள், மரபுகளையயாட்டியும் சில புதிய யுக்திகளை மேற்கொண்டது பற்றி.... உரிமை, மரியாதைக்கான போராட்டங்கள் பரவலாக நடந்தது. வலிவலம் தேசிகர் பண்ணை முதல் கடைக்கோடிப் பண்ணை வரை போராட்டம் நடந்தது. இடங்களுக் கேற்றபடி போராட்டத்தின் தன்மைகள் மாறிக் கொண்டிருந்தன. சில இடங்களில் சண்டை போட வேண்டியிருந்தது. சில இடங்களில் அமைதியாக இருந்து உள்ளே போக வேண்டியிருந்தது. போராட்டம்னா ஒழுங்குபடுத்தப்பட்ட, வரையறுக்கப்பட்ட, திட்டமிடப்பட்ட எதிர்ப்பு. இதில் எதிரிகளுக்கு நிர்பந்தம் தரக்கூடிய, மன உளைச்சல் தரக்கூடிய போராட்டங்களும் அடங்கும். எந்த பிரச்சனைன்னாலும் முதல்ல மிராசுதாரர்கிட்ட பேசணும் சொல்வோம். சில முதலாளி பேச முடியாதுன்னு ஏஜண்ட்கிட்ட பேசச் சொல்லுவாங்க. தேசிகர் பண்ணைன்னா அவரு பேச மாட்டார். ராமசுப்பையர்னு ஏஜன்ட் (அல்லது) யூனியன் சேர்மன் சண்முகசுந்தரம்ன அவர்தான் பேசுவார். பேசுவோம். பேச்சுவார்த்தை முடியாது. இல்லைன்னா, ஒரு அமைதியான போரட்டம் மேற்கொள்வோம். பண்ணைய வீட்டுல சாவு விழுந்தா ஒருமுறை உண்டு. ஆளுக ஆணும் பெண்ணும்மா அடுகெடையா திரண்டு தப்படிச்சுக்கிட்டு பச்ச மட்டை, குறுத்தோலை, எளனி இதெல்லாம் கொண்ட போறது பழக்கம். கோவில்லேருந்து கும்ப கலச மரியாதை வரும். இது அவங்க தரப்பு முறை. குறிப்பிட்ட பண்ணைக்கு எதிராகப் போராடுகிற போது இப்படி ஆண்களும் பெண்களுமா திரண்டு இந்த பொருள்களோடு பாடையும் சேர்த்து கட்டிக்கிட்டுப் போயிடுவோம். வாசல்ல வச்சிக்கிட்டுத் தப்படிச்சுக்கிட்டு ஒப்பாரி வைப்போம். எப்படி நம்மள எழவெடுக்கிற மாதிரி கொடுமைகள் நடக்குதோ அதே வழியிலேயே அவனுக்குப் புத்தி கொடுக்கிற மாதிரியான போராட்டம். அவர்கள் பெண்களுக்கு அதிர்ச்சி வரும். என்னங்க இது ‡ நம்ம வீட்டு வாசல்ல இப்படி? என்ன இது எழவா? காடா? இப்படிப் பார்த்துக்கிட்டிருக்கீங்களே! என்னன்ன கேட்டு தீர்த்து விட மாட்டீங்களான்னு பிரசர் வரும். மூடிய கதவைத் திறந்துகிட்டு பண்ணையார் வருவார். பிறகு பேச்சுவார்த்தை அங்கேயே நடக்கும். இப்படிப் பல பண்ணைகளிலே பேசி முடிச்சிருக்கோம். அவங்க குடும்பத்தைச் சேர்ந்தவங்களம் புரிஞ்சிக்க இதை ஒரு வாய்ப்பாகவும் செய்தோம். 12. சிற்றூர்களில் வலுவான அமைப்பாக்கப்பட்டிருந்த சாதி அமைப்பைக் கீழத் தஞ்சையில் கட்சி கையாண்ட விதம் பற்றி.... நிலப்பிரபுவ எதிர்க்கிற வர்க்கப் போராட்டத்தில் சாதி ஆதிக்க எதிர்ப்பும் மிக மையமான ஒரு வி¬யமாகத்தான் இருந்தது. இத இரண்டு விதமா பார்க்க முடியும். ஒன்று வலுவான அமைப்பிலிருந்த ஆதிக்க சாதிகள். மற்றது ஒடுக்கப்பட்டோரிடமிருந்த, தற்காப்புக் கானதாயிருந்தாலும் வலுவாகவே கட்டப்பட்டிருநத சாதிப் பஞ்சாயத்துகள். தொடக்கத்துல கம்யூனிஸ்ட் கட்சி நிலப்பிரபுவை எதிர்க்கிற போராட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்களிட்ட இருந்த சாதியக் கட்டுப்பாட்டை அப்படியே பயன்படுத்திக் கொண்டது. அந்த நாட்டாமை, பஞ்சாயத்து அமைப்பை அப்படியே பயன்படுத்திக் கொண்டோம். நாட்டாமைன்னா அவர் வீட்டுல அடுப்பு பத்த வைச்ச பின்னாடி, மத்த வீட்டுப் பெண்கள் அங்கிருந்துதான் நெருப்பு கொண்டு போவாங்க அவுங்க வீட்டுக்க. நீர், நெருப்பு உட்பட எல்லாத்துக்கும் நாட்டாமை அவர்தான். அந்த அளவுக்கு நிலைமைகள் இருந்த காலம். அப்ப தலைவர்கள் கிராமங்களுக்குப் போவாங்க. போனா கட்சி சம்பந்தமான தகவல்கள், சந்தா இப்படிப் பேசின பிறகு நாட்டாமை கேட்பார் ; அய்யா வந்த வேலைகள் (கட்சி வேலைகள்) முடிஞ்சிருச்சாம்மபார். முடிஞ்சிருச்சுன்னு சொன்னா, அப்ப நீங்க போயிட்டு வாங்க. நாங்க ஊர் வேலைகளைப் பார்க்கிறோம்பார. ஊர் வேலைன்னா வழக்கமா நடக்கிற அவங்களோட கிராமப் பஞ்சாயத்து, உள்ளூர் சம்பந்தப்பட்ட வேலைகள். சாதி முறைகள் வேற, கட்சிகள் வேற அப்படிங்கிற நிலைமை 64 இல் ஏற்பட்ட வீச்சில்தான் மாறிச்சி. ஒரு நிலையில கம்யூனிட் கட்சி நாட்டாமைகளைக் கட்சித் தலைவராக்கிச்சி. மத்தவங்களை செயலாளர் இன்னும் மத்த மத்த பொறுப்புக்கு வச்சாங்க. சாதி உணர்வுங்கிற எடுத்துகிட்டு கொள்கை உணர்வுங்கிறத போதிச்சதங்கிறது 64 க்குப் பின்னர்தான் நடந்தது. அந்த எழுச்சி அவர்களிட்ட இருந்த சாதிக் கட்டுப்பாட்டைக் கட்சிக் கட்டுப்பாடா நாகைத் தாலுக்காவுல மாத்திச்சு. பழைய கட்டுப்பாட்டில உதவிக்க நின்னவுங்க இப்ப ஓரணியில் திரண்டாங்க. இது சாதியக் கட்டுப்பாட்டைத் தளர்த்தி, கொள்கைக் கட்டுப்பாடுங்கிற மட்டத்துக்கு அவர்களை உயர்த்துச்சு. அந்த முன்னோக்கிய சூழல்ல அவர்கள்டேயிருந்து பல நல்ல ஊழியர்களும், தலைவர்களும் உருவானாங்க. 13. பொதுவுடைமைக் கட்சிக்கு எதிராக சாதி என்கிற ஆயுதத்தை மிராசுதாரர்களும் பிரயோகித்திருப்பார்கள் தானே? ஆமா. அத பெரிய ஆயுதமாகத்தான் கையிலெடுத்தாங்க. நாம சாதிப் போராட்டத்த சேர்த்துத்தான் வர்க்கப் போராட்டத்த முன்னெடுத்தோம். சாதி ஆதிக்கம், வர்க்க ஆதிக்கம் ரெண்டா இருந்தாலும், ரெண்டுமே ஒன்றுக்குள் ஒன்றான ஒரே எதிரிங்கிற தெளிவான பார்வை நமக்கு இருந்திச்சி. விவசாயத் தொழிலாளர் பெரும்பாலும் தாழ்த்தப் பட்டத் தொழிலாளர் கட்டுப்பாடா ஒன்றிணைஞ்சு நின்னது நம்முடைய வெற்றி. அதுக்கு எதிரா எல்லா சாதி இந்துக்களையும் ஒன்னா திரட்டணும்ன நிலப்பிரபுக்கள் பெருமுயற்சி எடுத்தாங்க. ஆனா பொருளாதார நிர்ப்பந்தம் காரணமா மத்திய தர வகுப்பு ஆண்களும் பெண்களும் விவசாய வேலைக்கு வர வேண்டியதாயிருந்துச்சு. நடவுக்கு வரும்போது ரெண்டு தரப்பு பெண்களும் ஒன்னா நிக்க வேண்டிய நிலைமை. ஆக அதே வேலை, ஒன்னா நிக்க ¼ண்டிய நிர்ப்பந்தம். அதே கூலி. இந்த சூழல்ல அவங்கள சாதிய மட்டும் சொல்லிப் பிரிக்க முடியாத நிலைமை யதார்த்தமானதாயிருந்துச்சு. சாதி வெறிங்கிறது நிலப்பிரபு தூண்டிவிட்ட உணர்ச்சி என்பத தவிர வாழ்க்கை நடைமுறையும் தரமும் இவங்களுக்கென்னவோ அதே தான் அவங்களுக்குமிருந்தது. அது மட்டுமில்லாம நில பிரவுவோட வலையில விழுந்துடாம அவங்கள அமைப்பாக்குறதலயும், வழிகாட்டுவதிலேயும் கம்யூனிஸ்ட் கட்சி முனைப்பா நின்னு வெற்றி கண்டது. Posted by கவி at 1:12 AM No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest தோழர் ஏ.ஜி.கே.வுடன் ஒரு நேர்காணல்-4 9. ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படி யானவைகள் என்னென்ன? முதல் கட்ட போராட்டங்களில் வேலைப் பளுவைக் குறைக்கணும். 8 மணி நேரம் வேலை நேரம் நிர்ணயிக்கணும் என்பதுவும் ஒன்று. காலையில் ஐந்தரை , ஆறுக்க வேலையத் துவங்கினா இருட்டின பிறகுதான் கரையேற முடியும். உடனேயே கூலியும் பெற முடியாது. ஆட்கள் வேலை முடிந்த பிறகுதான் அன்றைய வேலையை மிராசதார் ஆழமா சர்வே பண்ணுவார். அடுத்த நாள் வேலை விவரமெல்லாம் காரியக்காரர் கிட்ட சொல்லி முடிச்சு அவரு வீட்டுக்கு வர ஏழு, ஏழரை ஆகும். அதுக்கு மேல பத்தாயத்த தொறந்து கூலி போட எட்டரை மணியாகிவிடும். பிறக அதைக் குத்தி அரிசியாக்கிச் சமைச்சுச் சாப்பிபட்டுப் படுக்க பதினொன்று, பன்னெண்டு ஆகிவிடும். அடுத்த நாள் வேலைக்க எழுந்து ஓடணும்.இப்படிச் சங்கடமான நிலைமை. அப்ப இதுக்காகப் போராட வேண்டியிருந்துச்சு. போராடி ஜெயிச்சாச்சு. அதாவது காலையில் 8 மணி முதல் மதியம் 1 மணி வரையும் பிறக 2 மணி முதல் 5மணி வரையும் வேலை. 5 மணிக்கு வேலை முடியணும். அடுத்த கட்டம் என்னன்னா, உரிமைக்காகப் போராடுகிறது, ஜெயிக்கிறது பெரிசில்ல. அதை நடைமுறைக்குக் கொண்ட வர பெரிய போராட்டம் செய்ய வேண்டியிருந்தது. சாயந்தரமானா இன்னும் 5 மணி ஆகலைன்னு இருட்டுற வரைக்கும் வேலை வாங்கிறது. உடனே அதுக்கும் ஒரு முடிவு பண்ணினோம். வேலை துவங்கிற நேரம், சாப்பாட்டு நேரம், வேலை முடியற நேரத்தில் நம்ம விவசாய சங்கத்து ஆள் மரத்து மேல ஏறி தம்பட்டம் அடிப்பான். சில இடங்கள்ல தப்பு. சில ஊர்கள்ல கொம்பு ஊதுவான். அது ஒன்று, ஒன்ரை மைல் வரை கேட்கும். இப்படி அத நிலை நாட்டினோம். 10. எல்லா ஒடுக்குமுறைகளிலும் முதல் இலக்கு பெண்கள் தான். இங்கே அவர்களின் நிலை எப்படி இருந்தது? பொதுவாக வேலைகள் காரியக்கார், அடியாட்கள், பந்தோபஸ்து இந்த கட்டுப்பாட்டுக்குள்தான் நடக்கும். இதுல ஆண், பெண், குழந்தைகள்னு வித்தியாசமில்லாம ஒடுக்குமுறைக்கு ஆளாக வேண்டியிருந்தது. ஆட்கள், நடவாள்கள் வேலை செய்வாங்க. கைக்குழந்தைகளைக் கூட கருவ மரத்திலேயே தொட்டி கட்டிப் போட்டிருப்பாங்க. பெண்கள் நட ஆரம்பிச்சா குனிஞ்சபடியேதான் நடணும். நிமிரவுட மாட்டானுங்க. நடவு நடக்கும் போது பின்னாலேயே நிலப் பிரபுவோ, காரியக்காரனோ வருவான். கரையேறவும் முடியாது. தப்பித் தவறி ஒன்னுக்குப் போகனும்னா கூட வயல்லயே தான். அதுக்கும் இவன் பின்னாடியே நின்னா எப்படி? பின்னாடி நிக்காத ; முன்னால போ என்பதற்கே போராட வேண்டியிருந்தது. பெண்களுக்கு எதிரான கொடுமைகள். அவர்களை இழிவு படுத்துறது, மான ஈனப்படுத்துறது என்பதெல்லாம் ரொம்ப சாதாரணமா நடக்கம். நிலப்பிரபு மட்டுமல்ல ; அவனோட காரியக்காரன், அடியாட்கள் அத்துமீறலும் நடக்கும். திடீர்னு தெருவுக்குள்ள நுழைஞ்சு ஒரு பெண்ணைப் பிடிச்சு இழுத்துக்கிட்டுப் போவான். யாரும் கேட்க முடியாது ‡ கேட்க மாட்டார்கள். திரும்ப அவனா விடும்போது தான் வர முடியும். இதற்கெல்லாம் ஒரு மரண அடி கொடுத்தோன். மிராசுதாரர்களிடம் சொல்லியாச்சு. இனிமே இது மாதிரி எதுவும் நடக்கக் கூடாது. மீறி நடந்தால் எதிர் நடவடிக்கை இருக்கும்னு சொன்ன பின்னாலும் கேக்கல. நாங்களும் அப்படி நடந்தா அவன் எந்த கையாலும் இனி தொடக்கூடாதுங்கிற ஒரு கடுமையான முடிவு எடுக்க வேண்டியிருந்தது. நம்ம மக்கள் கிட்டயும் சொல்லியாச்சு. வாழறது மானத்தோட வாழனும். மானம் மானம்னு நான் சொல்றது உரிமையும், மரியாதையும் , நிலப்பிரபு சில நேரங்களில் உரிமையக் கூடத் தருவான் ; ஆனா தனக்குச் சமமான மரியாதை தர மாட்டான். அவன்என்னவோ அதையே தான் போலீசும் செய்யும். வடவூர் ஏ.எம்.பி. பண்ணையில் காரியக்காரர் சாம்பசிவம் சேர்வையின் மச்சான் ராஜமாணிக்கம். அது ஆய்மழை மைனர் ஏரியா. வடவூர்ல மதுரை, இராமநாதபுரம் பகுதிகள்லேர்ந்து ஆட்களைக் கொண்டு வந்து குடியாகவே வச்சிருந்தாங்க. பக்கத்திலேயே செட்டிச்சேரின்னு 10,15 வீடுகள் உள்ள நம்ம ஆளுக. மிராசுதார் பயம் காரணமா ரொம்ப நாள் நம்ப கட்சிக்கு வராம இருந்தவங்க. அந்த ராஜமாணிக்கம் ஒரு நாள் மத்தியானத்துல வந்தான். வெள்ளையம்மான்னு ஒரு பொண்ணு. அத கைய புடிச்சிருக்கான். உடனே நம்ப ஆட்கள் அவனைக் கும்பலா கூடி அடிச்சு அவன் பிரக்கினை இல்லாம போனதும் பயந்து ஓடிட்டாங்க. நம்ம ஆள் ஒருத்தன் மட்டும் ஓடலை. அவன் ஓட முடியாதபடி நோயாளி. சோவை. ஒரு 25 வயசு ஆள்னானம் ஒன்னும் முடியாத ஆள். அவன் யோசிச்சுருக்கான். எப்படியும் செய்தி தெரிஞ்சு ஆள் திரண்டு வந்தா நாம மாட்டிக்குவோம். கொன்னுடுவாங்க. சாகப் போறது நிச்சயம். இவனுக்கு ஒரு பாடம் குடுத்துட்டுச் சாவோம்னு ஒரு முடிவுக்கு வந்திருக்கான். மெதுவா வீட்டுக்குள்ள போயி, அருவாள எடுத்து வந்து, அடிப்பட்டுக் கிடந்த ராஜமாணிக்கத்தோடு ஒரு கையை மட்டும் வெட்டித் தூக்கிப் போட்டுட்டான். அவனுங்க வந்த பாத்தாங்க. ஆள் யாரும் இல்ல. இவன் மட்டும் நிக்கிறான். அடிச்சா செத்திருவான்டான்ன சொல்லி எத்திவிட்டுட்டு ராஜமாணிக்கத்தை தூக்கிக்கிட்டு போயிட்டானுங்க. எதுக்குச் சொல்லேன்னா. ஒன்னுமில்லாதவனுக்குக் கூட இப்படி உணர்வு வரும். அதைக் கட்சி சரியா செஞ்சது. அதற்குப் பிறகு இந்த மாதிரி அத்து மீறல்களும், அயோக்கியத்தனங்களும் ஒரு முடிவுக்கு வந்துச்சு. Posted by கவி at 1:11 AM No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest தோழர் ஏ.ஜி.கே.வுடன் ஒரு நேர்காணல்-3 5. பொதுவுடமைக் கட்சிக்கு வந்த போது எப்படி உணர்ந்தீர்கள்? இங்கிருந்த நிலைமை என்ன? 1962 கடைசியில் நான் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்தேன். ஒரு நெருக்கடியிலிருந்து வந்த எனக்கு இங்கும் ஒரு நெருக்கடி காத்திருந்தது. 47 இல் துவங்கிய தத்துவார்த்த சண்டைகள் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் மிகத் தீவிரமாகியிருந்த நேரம். அதன் காரணமாகக் கட்சியில் அதிகாரம் செலுத்திய, பொறுப்புகளில் இருந்தவர்களுக்கும், கட்சியின் உள் அணிகளுக்கமான முரணாகவுமிருந்தது. அவரவர் நிலைப்பாட்டை உறுதிப்படுத்திக் கொள்ள அரசியல் வகுப்புகள் நிறைய நடைபெற்றன. அப்போது நடைபெற்ற தத்துவார்த்த சண்டைதான் மார்க்சியத்தைப் பற்றி அதிகம் தெரிந்த கொள்ள வாய்ப்பாக அமைந்தது. முதலில் நான் தி.க. வில் இருந்தபோது மார்க்கியத்தை விமர்சிப்பதற்காகப் படித்தது போக, இப்போது சித்தாந்த்தைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பாக இது அமைந்தது. கட்சிப் பிளவின் போது கீழத் தஞ்சையின் நிலைமை என்பது ‡ கட்சிப் பொறுப்பிலிருந்தவர்கள் சி.பி.ஐ. கட்சி அணிகள் சி.பி.எம். நாங்கள் (சி.பி.எம்) புதிதாகக் கிளைகள், அமைப்புகள் கட்ட வேண்டிய சூழல். சி.பி.எம். கட்சித் திட்டம்1964 மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. அடிப்படையான வர்க்க நிர்ணயிப்பு செய்யப்பட்டது. அரசைத் தேசிய முதலாளிகளின் அரச என்றது சி.பி.ஐ. பெருமுதலாளிய,நிலப் பிரபுத்துவ அரசு என்பது எங்களது நிர்ணயிப்பு. மொத்தத்தில் போராட்டத்தில் இயக்கத்தைக் கட்டுவதும் இயக்கத்தின் மூலமாகப் போராட்டத்தை நடத்துவதும் என்பதில் தீவிரமாகச் செயல்பட்ட நேரமாக இருந்தது. 6. குறிப்பாக அறுபதுகளில் கீழத்தஞ்சையின் நிலவரம் எப்படி இருந்தது? கீழத் தஞ்சை மாவட்டத்தில் நிலப் பிரபுக்கள் ஆதிக்கம் அதிகமாயிருந்தது. பெரிய ஆட்கள், மிட்டா மிராசுகளுக்கு இங்கு மைனர் பட்டம். ஆய்மழை மைனர், ஆவராணி மைனர், கருங்கண்ணி மைனர், கீழப்பிடாகை மைனர் இப்படி ஊரின் பெயரில் இரண்டு மூன்று ஊர்களுக்கு ஒரு மைனர் இருப்பார். அதே மாதிரி பெரும் பெரும் பண்ணைகள் ஆதிக்கம். ஐவநல்லூர், செல்லூரில் சிக்கல் கோவில் பண்ணை, பெருங்கடம்பனரில் சூரியமூர்த்தி செட்டியார், மஞ்சக்கொல்லையில் ஆர்.எம்.சம்மந்தமூர்த்தி முதலியார், ராஜகோபால் முதலியார், திருநாவுக்கரசு முதலியார், பாப்பாகோவிலில் கோவிந்தராஜ் பிள்ளை, ஆய்மழையில் எஸ்.எஸ்.ஆர். இராமநாதத் தேவர், வடுவூர் தலையாமழையில் ஏ.எம்.பி. செட்டியார் பண்ணை, இப்படி பண்ணைகள். அதே நேரத்தில் நிலப்பிரபுவினுடைய கொடுமைகள். விவசாயத் தொழிலாளர்க்குக் கொடுக்கப்பட்ட நெருக்கடிகள். தாக்குதல்களிலிருந்து தப்பிக்க அமைப்பு தேவை என்ற தொழிலாளர்கள் உணர்ந்து ஒன்று திரண்ட நிலைமை. நாகை மாவட்டத்தில் ஏறத்தாழ எல்லா பகுதிகளிலும் கம்யூனிஸ்ட் கட்சி வலுவான இயக்கமாகப் பரவியது. விவசாயத் தொழிலாளர் மேல் தாக்குதல் நடத்தி, பழைய அமைப்பை அப்படியே தொடர்ந்து கொண்டு போக வேண்டும் என்று நிலப்பிரபுக்களும் ஒன்று திரண்டார்கள். அதற்கொரு அமைப்பாகவே நெல் உற்பத்தியாளர்கள் சங்கம் தொடங்கினார்கள். ஆய்மழை மைனர் எஸ்.எஸ்.ஆர்.இராமநாதத்தேவர் அதன் தலைவர். அதன் தொடக்கவிழாவுக்கு நடிகர் சிவாஜி கணேசனை அழைத்து அவர் கையால் ஆய்மழை மைனருக்கு ஜீப் ஒன்று வழங்கினார்கள். அவர்களின் முழு முதல் திட்டம் கம்யூனிஸ்ட் கட்சியையும், அமைப்பாகத் திரண்டிருக்கிற விவசாயத் தொழிலாளர்களையும் ஒடுக்குவதுதான். ஆய்மழை என்பது ஒரு குட்டி சாம்ராஜ்யம். மேலப்பிடாகை, கருங்கண்ணிக்க வடக்கே, பாப்பா கோவிலுக்குத் தெற்கே, வேளாங்கண்ணிக்கு மேற்கே, இந்தப் பகுதி கிராமங்கள் பூராவும் அவரது ஆதிக்கம்தான். போலீஸ் கூட அவரைக் கேட்காம உள்ளே நுழைய முடியாது. அவர் வச்சதுதான் சட்டம். அவர் தலைமையில் தான் சங்கம் துவங்கினார்கள். நம்முடைய இயக்கமும் மிகவேகமாக விரிவடைந்து பலமாக எழந்து நின்றது. ஆய்மழை மைனர் வீட்டிற்குச் சற்று தூரத்தில் இருந்த தலித் பகுதி உள்பட எல்லா ஊர்களிலும் கம்யூனிஸ்ட் கட்சி பலமானதாக இருந்தது. அவர்களுடைய முதல் தாக்குதலாக வேலை கொடுப்பதில்லை என்று முடிவெடுத்தார்கள். அரிசிப் பிடி ஆட்கள் என்ற பெயரில் மதுரை, இராமநாத புரம் பகுதியில் இருந்தவர்களை வேலை செய்ய அழைத்து வந்தார்கள். அவர்கள் தங்குவதற்குப் பெரிய கொட்டகை போட்டு, சாப்பாடு உள்பட எல்லாம் ஆள் வைத்துச் செய்தார்கள். பாதுகாப்புக்குப் பயிற்சி பெற்ற அடியாட்களையும் அழைத்து வந்தார்கள். 7. இதைப் பொதுவுடைமைக் கட்சி எப்படி எதிர்கொண்டது? இப்படி தருவிக்கப்பட்ட வெளியாட்கள், அரிசிப்பிடி ஆட்களை வெளியேற்றுவதும், எங்களுக்கு வேலை வேண்டும் வேலை கொடு என்பதும் நம்முடைய போராட்டமாயிருந்தது. அடியாட்களோடு அவர்கள் தாக்குதல் செய்யும் போது தற்காப்புக்காக நாமும் பல இடங்களில் கைகலப்பு செய்ய மோதல் நிலை ஏற்பட்டது. நிறைய வழக்குகள் போட்டார்கள். ஒவ்வொரு இடத்திலும் 30,40 பேர் மேல் வழக்குப் போடுவார்கள். எங்கேயும் 30 பேருக்குக் குறைஞ்ச வழக்கேயில்லை. ஒரு நேரத்தில் குறைந்த பட்சம் 100 வழக்குகள் இருந்துகிட்டே இருக்கும். அப்போ சனிக்கிழமையும் கோர்ட் உண்டு. எனக்கெல்லாம் ஞாயிற்றுக் கிழமையைத் தவிர மற்ற நாளெல்லாம் கோர்ட். 8. இதில் காவல்துறையின் தலையீட எப்படி இருந்தது? லோக்கல் போலீஸ் மட்டுமல்ல ; கிசான் போலீஸ் என்ற அதன் தனிப்படைப் போலீசான மலபார் போலீஸ் எல்லா இடங்களிலும் கொண்டு வந்த இறக்கினார்கள். எல்லாப் பண்ணைகளிலும் அரிசிப்பிடி ஆட்கள் தங்கியிருந்தது போல கிசான் போலீஸ் கூடாரம் ஒன்றும் இருக்கம். போலீஸ், கோர்ட், அடியாட்கள், பண்ணைகள், வழக்க, வேலை செய்ய வந்த வெளியாட்கள் இப்படி எல்லாவற்றையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. வழக்குப் போட்டான்னா ஆஜராகவே ஒரு வாரம் தலைமறைவாக இருக்கணும். ஆஜராகி சப்‡ஜெயிலில் ஒரு வாரம் கிடக்கணும். அப்புறம் வழக்கு நடக்கும். எங்களுக்குக் கட்சிக் கூட்டம் நடத்தக் கூட முடியாது. வாரம் முழுக்கக் கோர்ட்டிலே இருந்தா எப்படி? அதனால் கோர்ட் வெளியிலேயே தான் கட்சிக் கூட்டம், கமிட்டிக் கூட்டம், சென்டர் கூட்டம் எல்லாமும். நாம தொடர்ந்து வேலை செய்ய அது அவசியமாக இருந்தது. Posted by கவி at 1:11 AM No comments: Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest தோழர் ஏ.ஜி.கே.வுடன் ஒரு நேர்காணல் - 2 1. உங்களது அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்து இந்த நேர்காணலைத் துவங்குவது சரியாக இருக்குமென்று கருதுகின்றேன்... நான் மாணவனாக இருந்த 1952 முதலே, திராவிடர் கழக ஈடுபாடும் தொடர்புகளும் உண்டு. எனத கள வேலைகளையும் அப்போது துவங்கி விட்டேன். கிராமங்களில் விவசாயத் தொழிலாளர் சங்கங்களைக் கட்டி அமைப்பாக்குகிற வேலை, பரவலாக அறியப்படுகிற வாய்ப்பு என்பது ,1957‡இல் நான் திராவிடர் கழகப் பேச்சாளராகக் கிளம்பிய பிறகு தான், பெரியார் பெருந்தொண்டர் நாகை எ ஸ். எஸ். பாட்சா அவர்களும் நானும் அப்போது பேசப் போனோம். மதுரை, சேலம் வரையுள்ள ஊர்கள், எங்கள் கால்படாத இடமில்லை என்கிற அளவிற்கு பிரச்சாரக் கூட்டங்கள் நிறைய இடங்களில் நடக்கும். 2. பிரச்சாரம், களவேலை எதைப் பிரதானமாகக் கொண்டிருந்தீர்கள்? பிரச்சாரம் என்பது மக்கள் மத்தியில் பரவலாக அறியப்படுகிற வாய்ப்பு என்பதற்காகச் சொன்னது. ஆனால் அடிப்படை வேலை திராவிட விவசாய சங்க வேலைகள். பின்னாளில் பொதுவுடமை இயக்கத்தில் என்ன செய்தேனோ அதை அப்போதே துவங்கி விட்டேன். திருவாரூர், கீவளூர் வட்டத்தில் பெரும்பகுதியான கிராமங்களில் அமைப்பு இருந்தது. ஏறத்தாழ 50,000 பேர் திராவிட விவசாய சங்கத்தில் இருந்தார்கள். பாவா நவநீதக் கிருஷ்ணன் என்கிற அர்ப்பணிப்புள்ள தலைவர், அந்த தோழருடன் சேர்ந்து வேலைகள் செய்து கொண்டிருந்தோம். திராவிட விவசாய சங்க வேலைகளில் தீவிரமாக இருந்த அந்த காலகட்டத்தில் தேர்தலில் காமராசரை ஆதரிக்கக் கட்சி முடிவெடுத்தது. மிராசுதாரர்கள் பெரும்பாலும் காங்கிரஸ்காரர்கள். கிராமங்களில் மிராசுதாரர்களை, அவர்களுடைய ஆதிக்கத்தை எதிர்த்துக் கடுமையாக வேலை செய்து கொண்டிருந்த நேரும். அதே வேளையில் அய்யா சொன்னபடி பச்சைத் தமிழர் காமராசரை ஆதரித்துக் கூட்டத்தில் பேச வேண்டிய நிலைமை. பல இடங்களில் மிராசுகள் கூட்டங்களுக்கு வர மாட்டார்கள். ஏ.ஜி.கே. வந்தா நான் வரமாட்டேம்பாங்க. நமக்க ஒன்னுமில்லை. அவங்க வந்தாலும் வராவிட்டாலும் நாம அதத்தான பேசப்போறோம். காமராசரை ஆதரிக்கிற விசயம் தானே. ஆனா ஸ்தல வேலைகள் என்ற நிலைமையல் அவங்களோடு நமக்கப் பிரச்சனை இருந்தது. பல இடங்களில் நம்ம மேல தாக்கதல் தொடுத்தாங்க. இதன் உச்ச கட்டமாக அந்தணப்பேட்டை, பாப்பாகோவில் இங்கெல்லாம் நம்ம வீடுகளையயல்லாம் கொளுத்தினாங்க. அப்போ அய்யா நாகப்பட்டினம் வர்றார். 3. கட்சியின் தலைமை இநதப் பிரச்சினைகளை அணுகியது? அதைப் பற்றித்தான் சொல்ல வர்றேன். நாகை அவுரித் திடலில் கூட்டம். ராதாகிருஷ்ண நாயுடுன்னு ஒரு டாக்டர். அவரு மிராசதார் சார்பா அய்யாவிடம் என்னைப் பற்றிக் கடுமையாக குறைபட்டிருக்கிறார். ஏ.ஜி.கே. எப்பவும் எங்களோடு தகராறு பண்ணிக்கிட்டிருக்கிறார். எல்லா ஊர்கள்லேயும் சண்டை. எங்களைப் பயப்படுத்திக் கிட்டே இருக்கார் அப்படின்னு குற்றச்சாட்டு. இதற்கிடையில் கூட்டத்திற்கு வருபவர்களை மிராசுதார்கள் வழியில் தாக்கப் போவதாகத் தகவல் வருகிறது. பெரியாரிடம் செய்தி போன போது ஏ.ஜி.கே. யைக் கூப்பிடுன்னார். நீயும் , பாவாவும் போய் ஊர்வலத்தைப் பத்திரமா அழைச்சுக்கிட்டு வாங்கன்னார். தாசில்தார் ஜீப்பிலேயே போனோம். சிக்கல் பக்கதில் மூணிவாய்க்காங் கரைங்கிற இடத்தில் வாய்க்காலுக்குள்ள இரண்டு பக்கமும் ஆயுதங்களோட ஆட்கள் இருக்காங்க. வண்டியோட லைட் வெளிச்சத்தில தெரியுது. சரின்று போயிட்டோம். ஒரு பர்லாங் முன்னாடியே ஊர்வலத்த நிறுத்திகிட்டோம். ஊர்வலத்துல சுருளு, சிலம்பாட்டம் இப்படி வந்த ஆளுங்களை முன்னாடி போக ஏற்பாடு பண்ணினோம். ஏன்னா, அவங்க பயிற்சி பெற்ற ஆளுங்க. அடுத்ததா ஆண்கள், மேளதாளம் , ஆட்டக் காரர்கள், கடைசியா பெண்கள். முன்னாடி வர்ற ஆட்களுக்கு வேலை என்னான்னா அந்த குறிப்பிட்ட இடம் வந்த உடனே தாமதமில்லாம ஆயுதங்களோடு இரண்டு பக்கமும் குதிச்சி அவங்கள விரட்ட வேண்டியது. எப்பவும் ஊர்வலத்த பாதியில் புகுந்து தாக்குவது மாமூல் பழக்கம். அப்பதான் கூட்டம் கலைஞ்சி ஓடும். குழப்பம் வரும். அதற்கு வாய்ப்பு தராமல் இந்த எதிர்பாராத திடீர்த் தாக்குதல் நடத்தி பிரச்சனையில்லாம ஊர்வலத்தைக் கொண்டு வந்திட்டோம். அப்போ அந்தக் கூட்டத்திலேயே பெரியார் அறிவிக்கிறாரு. ஏ.ஜி. இருக்கிறாரே, கஸ்தூரிரங்கன். அவருக்கும் மிராசுதாரர்க்கும் நடக்கிற சண்டையிலே நம்ம கழகத்துக்கு எந்த சம்பந்தமுமில்லை அப்படின்னு அறிவிச்சுடறாரு. 4. உங்களிடம் பெரியார் எதுவுமே விசாரிக்காமலே அறிவிச்சிட்டாரா? ஆமாம். என்னைக் கூப்பிட்டு எதுவுமே கேக்கல. அடுத்த 10 நாள்ல நிரவியில் கூட்டம். நிரவி வந்தா திரு. ரத்னவேலு வீட்டிலேதான் தங்குவார். அங்க போய் இப்படி அறிவிச்சிட்டீங்களே. என்ன ஏதுன்னு கேட்டீங்களான்னு கேட்பதற்காகவே பாபாவும் நானும் போனோம். வரச்சொல்லாத ‡வேணாம் அவன் அப்படின்னு சொல்லிட்டார். பிறகு மாலையில் கூட்டம் நடந்துச்சு. மேடைக்கு வந்தார் பெரியார். கூட்டத்தில் நாங்களும் இருந்தோம். அப்ப திடீர்னு ஏ.ஜி.யைப் பேசச் சொல்லுன்னாரு. எஸ்.எஸ்.பாட்சா மைக்கில் சொன்னார். நான் போகலை. இரண்டாவது தடவையா ஆளனுப்பிப் பேசக் கூப்பிட்டாங்க. வர முடியாது போன்று சொல்லிட்டு அதோடு திரும்பிட்டோம். பெரியார் சம்பந்தமில்லைன்னு பேசிய பிறகு மிராசுதாரர்களின் தாக்குதல் அதிகமாயிருச்சி. நாங்க பெரிய பின்னணி, அமைப்பு எதுவுமில்லாம எதிர்கொள்ள வேண்டிய நிலை. இந்த நிலைமையில் அவர்களின் பலமான தாக்குதலிலிருந்து தொழிலாளரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு. பிறகு கம்யூனிஸ்ட் கட்சியிடம் பேசினோம். திராவிட விவசாய சங்கம் முழுவதுமாக நாங்கள் 1962 கடைசியில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தோம். ஒரு களப் போராளியின் வரலாற்றுப் பக்கங்களிலிருந்து... தூக்குத் தண்டனைக்குள்ளாகி ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு முழு ஆயுள் சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலையானவர் தோழர் ஏ.ஜி. கஸ்தூரிரங்கன். பெரியார் இலட்சியங்களில் ஊன்றி நின்று, திராவிடர் விவசாய சங்கத்தை அப்பகுதியில் வழி நடத்தி, பிறகு மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, தன் மீது திணிக்கப்பட்ட ‘முக்கொலை’ பொய் வழக்கில் அரசு அதிகாரத்தால் தண்டிக்கப்பட்டு விடுதலையாகி மீண்டும் திராவிடர்கழகத்தில் இணைந்து விவசாய சங்கத்தை வழி நடத்தி, இறுதியில் தமிழர் தன்மானப் பேரவையைத் தொடங்கி, 84ஆம் அகவையில் முடிவெய்தினார், தோழர் ஏ.ஜி.கே.! தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளாதவர்கள் இத்தகைய களப்போராளிகள். ஏ.ஜி.கே.வை சமூகப் போராளி யாக்கிய இளம்பருவ அனுபவங்களை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறது. பசு. கவுதமன், சாக்கோட்டை இளங்கோவன் முயற்சி - உழைப்பால் வெளி வந்திருக்கும் ‘ஏ.ஜி. கஸ்தூரிரங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்’ நூலிலிருந்து சில பகுதிகள்: நாகையை அடுத்த அந்தணப்பேட்டை வயல்களால் சூழப்பட்ட இருண்ட கிராமம். சேறு, சகதியாகிக் காயக்கூடிய மண்பாதை. சில ஒற்றையடிப் பாதைகள். இருட்டு ஆரம்பித்தால் ஊரே அரவமின்றி அடங்கிவிடும். ஊர் மக்கள் அனைவரும் ஏழை எளியவர்கள்; உழைப்பாளிகள். ஊருக்கு மேற்கே சேரி; நாலாபுறமும் வயல்களால் சூழப்பட்ட குறுந் திடல். காய்ந்தால் கட்டியும் முட்டியும் - நனைந்தால் வழுக்கலும், சறுக்கலுமான வரப்பு வழிப் பாதை. சாதாரண வீடுகளில் அகல் விளக்கு, பலரிடம் சிம்னி விளக்கு, கொஞ்சம் வசதியானவர்களிடம் குத்து விளக்கு, கூடுதல் வசதியுடையவர்களிடம் அரிக்கன் விளக்கு, பண்ணை வீடுகளில் மண்ணெண்ணெய் விளக்கு, சேரி வீடுகளில் இருட்டு வாசம்தான். உண்ணாமுலை சமேத அண்ணாமலை நாதர் ஆலயம்; அவதியிலா வாழ்வு பெற்ற அக்கிரகாரம்; கர்ப்பகிரக உள்வெளிப் பிரகாரங்களுக்கு அப்பால் நான்கு வீதிகள்; அதன் கிளைகளாய்த் தெருக்கள்; பெரிய கோவில் குளம்; பல சிறிய குட்டைகள்; எல்லாமே குடிசைகள்; ஒரு சில ஓட்டு வீடுகள்; பண்ணையார் வீடு என்றால் பல கட்டு வீடும், பரந்த கொல்லையுமாக இருக்கும். இன்றைய நிலையோடு கொஞ்சமும் ஒத்திட்டுப் பார்க்க முடியாது; அன்றைய அந்தணப்பேட்டை. இதுதான் ஏறத்தாழ நாகை தாலுக்கா (வட்டம்) முழுவதுமான கிராமங்களின் நிலைமை; இதில் கொஞ்சம் கூடக் குறைய இருக்கலாம். இரவு நேரத்தில் நடமாட்டம் இருக்காது. தப்பித் தவறிப் பெண்கள் இருட்டு நேரத்தில் வீட்டுக்கு வெளியே தலை நீட்டினால் தாலி பறிபோகும். ஊருக்கு வெளியே போய் உழைத்து விட்டுத் திரும்புவோரும், இரவு நேரத்தில் குளம், குட்டைக்குச் சென்று வருகின்ற முதியவராக இருந்தாலும் இளையோராயினும் அவர்கள் ஒரு பிரச்சினையில் சிக்கிக் கொள்வார்கள். அது என்னவென்றால் தொம்ப வாய்க்கால் முனி வழி மறைத்தது; ஆத்தோர அய்யனார் அடித்துவிட்டது; பனைமரத்து முனி பயமுறுத்தி விட்டது; அசகண்ட வீரன் அரட்டி விட்டது; முதலியார் கட்டை மோகினி சலங்கை கட்டி ஆட்டம் போட்டது; சுடுகாட்டில் இருந்து கொள்ளிவாய்ப் பிசாசு கூச்சலிட்டது என்பதுதான் அது. விளைவு ஜூரம், வயிற்றுப் போக்கு, நெஞ்சு வலி, ஆவேசம் வந்து ஆடுதல் இப்படியாகப் பல. இதற்குப் பரிகாரம் மீசை முனியாண்டி குறி; கண்ணு பூசாரி உடுக்கையடி; அங்காளம்மன் அர்ச்சனை; அறுப்பு அப்பா கருப்பு விரட்ட, கழிப்பு கழித்தல் இதுதான் நாகை தாலுக்காவிலுள் அனைத்துப் பெரிய, சிறிய கிராமம் நிலைமை. இதில் இடங்களுக் கேற்ப பெயர் முறை மாற்றங்கள் வேண்டுமானால் இருக்கலாம். இத்தகைய அந்தணப்பேட்டையில் நான்கு சகோதரர்கள், இரண்டு சகோதரிகளைக் கொண்ட ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்ந்த அவிபக்த குடும்பத்தில் நான்காவது சகோதரர் கோபாலசாமி; அவருக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் என்ற உறவில் நடுகனாய் 1932 நவம்பர் 5இல் பிறந்தேன். கிருஷ்ண குலக்கிரகம் எனப் பெயர் பெற்ற பட்டை நாமப் பரம்பரையில், அவிபக்த குடும்பத்தின் தலைவர், முருகையன் எனப் பெயர் சூட்ட, என் தகப்பனார் என்னைக் கஸ்தூரிரெங்கன் எனப் பதிவு செய்தார். ................ நான் பிறந்து; அய்ந்து வயதில் சுவடி தூக்கி ஆரம்பப் பள்ளி வாழ்க்கை; அது ஒரு குருகுலப் பள்ளி; அதற்கு உரிமையாளர் பெருமைக்குரிய பொன்னுசாமிப் பிள்ளை. எனக்கு நான்கு வயதாயிருக்கும்போதே என்னைச் சுற்றி நடந்தவைகள், நடப்பவைகளைப் பின் தொடர்ந்து அறிந்து கொள்ள ஓர் அலாதி ஆர்வம்; படிப்பு மட்டும் ஏறவில்லை; எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் பின்புற வீட்டை பாய் வீடு அல்லது பங்களா எனச் சொல்வார்கள். அங்கேதான் ஏவலர் - காவலர்கள் - காரியஸ்தர் - கங்காணிகள்; வண்டிக்காரர் - வாயில் காப்போர்; புரோகிதர்கள் - பூசாரிகள்; நண்பர்கள் - தூதுவர்கள் எனப் பல தரப்பினரும் கூடிப் பேசிக் கலகலப்பாக்கிக் கொண்டிருப்பார்கள். நான் பொழுது விடிந்து பொழுது போனால் அங்கே ஆஜராகியிருப்பேன். அவர்கள் பேசுவதைக் கேட்பேன். உற்றுக் கவனிப்பேன்; அதில் எனக்கோர் ஈர்ப்பு. ஒன்றும் புரியாது; ஆனாலும், சில புரிவது போலத் தெரியும், சில பதியும். நான் பிறந்த நேரம் என் தாய்க்குப் பால் சுரக்கவில்லை; புட்டிப்பால் கொடுக்க என் தந்தைக்கு விருப்பமில்லை. எங்கள் பண்ணையாட்களிலே ஒருவர் பேரிஞ்சி. அவரது மனைவி கண்ணம்மாள். அந்த நேரம் அவருக்கும் பிள்ளை பிறந்திருந்தது. அவரை மூன்று வேளையும் குளித்து மூழ்கி எனக்குப் பாலூட்ட ஏற்பாடு செய்தார். பால் குறையாமலிருக்க அவருக்குப் போஷாக்குப் பராமரிப்புகள். தன் மகனுக்குப் பாலூட்டிற்றோ என்னவோ அய்ந்தாண்டுகள் வரை அவரிடம் நான் பால் குடித்தது மனதில் பசுமையாக உள்ளது. பால் கொடுத்த தாய் அது என்றாலும், கவனித்துக் கொண்ட வளர்ப்புத் தாய் செண்பகவள்ளி. செல்லமாக எனது பாப்பம்மாள். இது என் அத்தை மகள். தன் தாய் மாமனை மணந்து கொண்டதால் பெரியம்மாள். சிறு வயதிலேயே விதவை. இறுதி வரை எங்கள் குடும்பத்தோடு ஒன்றி வாழ்ந்த ஜீவன். எனது தொடக்கப் பள்ளி வாழ்க்கையிலேயே வயதுக்கு மிஞ்சிய உள்ளக் கிளர்ச்சிகளும் மனப் போராட்டங்களும் தொடங்கிவிட்டது. பள்ளியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களைத் தரையில் உட்கார வைப்பார்கள். எங்களையெல்லாம் பெஞ்சில் உட்கார வைப்பார்கள். நாங்கள் தாழ்த்தப்பட்ட மாணவர்களைத் தொடக் கூடாது. அவர்களோடு நெருங்கிப் பேச, பழகக் கூடாது. மீறினால் பிரம்படி. ஆனால், ஒரே பிரம்புதான் எல்லா மாணவர் களையும் தொடும். அப்போதே விரும்பியதைச் செய்வதில் அழுத்தம் தொடங்கிவிட்டது. அவர்களோடு நெருங்கி உறவாடுவதை நிறுத்தவில்லை. ஆசிரியர் கெடுபிடி; பிரம்படி; தோப்புக்கரணம். ஆனாலும், பள்ளி முடிந்த பின் சேரிப் பையன்களோடு கைகோர்த்துக் கொண்டு வாத்தியார் பார்க்கும்படி ஊர்க் கோடி வரை செல்வோம். இதை எனது வீட்டில் வந்து அவர் சொல்ல, அதன் பிறகு பள்ளியிலிருந்து திரும்பியதும் வீட்டுத் திண்ணையில் உடுப்புகளைக் கழட்டி வைத்து அதன் மீது கட்டையைத் தூக்கி வைத்துவிட்டு, என் வளர்ப்புத் தாய் தலையிலே ஊற்றும் சொம்பு நீரில் நனைத்துக் கொண்டு வீட்டிற்குள் போக வேண்டும். ஆனால், நான் கொண்டு வரும் புத்தக மூட்டையை மட்டும் நீர் விட்டு நனைக்க மாட்டார்கள். நான் அப்பள்ளியின் மானிட்டர் ஆனேன். பள்ளியில் பலரும் சேர்ந்து ஒரே குழுவாக அமைந்தோம். யார் யார்? நான், காளியப்ப தேவர் மகன் சிங்காரவேலு, வி.பி.ஜி. மகன் சம்பந்தம், என் தகப்பனார் தரப்பினரின் பிள்ளைகள் சிங்கு, பால குஞ்சிதம், காளியப்ப தேவர் தரப்பினரின் பிள்ளைகள் நாராயணன், இராமலிங்கம், பக்கிரிசாமி, வி.பி.ஜி. தரப்பினரின் பிள்ளைகள் காளியப்பன், சோமு, சிங்காரவேலு, சேரியைச் சேர்ந்தவர்கள் முருகையன், சின்னத்தம்பி, கிருஷ்ணன் ஆக 12 பேர். ஊரில் எதிரும் புதிருமான பெரும் புள்ளிகள். அவரவர்களுக்கு ஒரே கோஷ்டி அடியாள் கும்பல்கள். இந்த நிலையில் எல்லா தரப்பும் இணைந்து நெருக்கம் கொண்ட ஓர் இசைவான குழு. இதை யார்தான் தாங்கிக் கொள்வார்கள்? ஊர், தெரு, சேரி வித்தியாசமின்றி தோளில் கை போட்டுச் சுற்றுவோம். மற்ற மாணவர்களும் வியப்போடு பார்த்தனர். எங்களோடு இணைந்தனர். இதைத் திட்டமிட்டு, புரிந்துதான் செய்தோமா? தெரியாது. ஊருக்குத் தெரிந்தது; வீடுகளுக்குத் தெரிந்தது; அந்தந்த வீடுகளிலும் அடி உதை. விடிந்த பின் ரோட்டிலே எங்கள் குழுவின் பவனி. அடி வாங்கினாலும் எங்களால் சந்திக்காமல் இருக்க முடியவில்லை. அது என்ன உறவு? எவ்வளவு பகையாயிருப்பினும் எங்களது விடாப்பிடியான ‘சேர்மானத்தை’ மனமார ஆதரித்தது காளியப்பத் தேவர் மட்டுமே. ஒரு கட்டத்தில் அடித்துப் புண்ணாக்கிவிட்டுத் ‘தொலையட்டும்’ என்று விட்டார்கள். பாப்பம்மாள் எனது வளர்ப்புத் தாய் மட்டுமல்ல; எனக்கு ஆரம்ப ஆசிரியையும்கூட. நான் தொடக்கப் பள்ளியில் சேர்வதற்கு முன்பே தொடங்கி, தொடக்கப் பள்ளி முடித்து உயர்நிலைப் பள்ளி காலத்திலும் நான் விடாது படித்தது, விடுமுறையின்றி ஆஜரானது எனது அத்தை வீட்டுத் திண்ணைப் பள்ளியில்தான். இரவு ஏழு மணியாகிவிட்டால் ஏழெட்டுப் பெண்கள் அத்தை வீட்டுத் திண்ணையிலே கூடி விடுவார்கள். நானும் ஆஜராகி விடுவேன். அது பள்ளியா - கல்லூரியா - பல்கலைக்கழகமா - மாநாடா - விவாத மேடையா - பட்டிமன்றமா தெரியாது. ஆனால், வீட்டுக் கதை, ஊர் கதை, பக்தி கதை, உலகக் கதை என நேரில் காண்பதுபோல் காட்சிகள் சித்தரிக்கப்படும். நிறைய செய்திகள் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு. அவையெல்லாம் என் மனதில் எனக்கே புரியாத ஒரு வகை கிளர்ச்சிகளைத் தூண்டிவிட்டதை உணர்ந்தேன். அந்த வயதில் நான் கண்ட காட்சிகளில் சில என் உள்ளத்தில் ஊன்றி விட்டன. ஆழப் பதிந்து ஆணியாக இறுகி விட்டன. ஒரு நாள் பகல் 12.00 மணி. மாட்டுக் கொட்டிலில் கட்டிக் கிடந்த காளை மாடு கட்டறுத்துக் கொண்டு காட்டாற்றுப் பாய்ச்சலில் புறப்பட்டது. தறிகெட்டு வெறிக் கொண்டு தெருக்களில் ஓட, ஊரே நடுங்கிற்று. தங்கள் பிள்ளை குட்டிகளை வீட்டிற்குள் இழுத்துப் போட்டுக் கதவுகளைத் தாழிட்டனர். யாருக்கும் அடங்காது; பிடியும் படாது; எதிர்பட்டவர்களை எத்தித் தள்ளும்; சிக்கிக் கொண்டால் குத்திக் கிழிக்கும். சில ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி நடக்கும். ஆனாலும், ஆப்பக்குச்சி அஞ்சானுக்கு மட்டுமே அந்தக் காளை அடங்கும்; தடித்த உருவங்களை எல்லாம் விரட்டியடிக்கும் அந்தக் காளை அந்தக் குச்சி உடம்பனின் குரலுக்கு மட்டும் கட்டுக்கடங்கி நிற்கும். அவர்தான் காளையின் காவலர். அவரும் ஒரு பண்ணையாள்தான். அவருக்கு ஆள் போயிற்று; வந்தார்; ஒரு கோடியில் நின்று ஓங்கிக் குரல் கொடுத்தார். ஓடிக் கொண்டிருந்த காளை அடங்கி ஒடுங்கி நின்றது. அதைப் பிடித்து இழுத்து வந்து கட்டிப் போட்டார். காளையைக் கட்டிவிட்டு வந்த அவரை, ஒரு காரியக்காரன் பிடித்து மரத்தில் கட்டிப் போட்டான். மற்றொருவன் ஒரு இரும்புக் கம்பியை கொடுத்தான். ஆண்டையோ அதைக் கையில் வாங்கி விளாசினார். கம்பி வளைந்தது; அஞ்சான் கதறினான். காளையைக் கட்டிப் போடுவதில் கவன மில்லையாம்; தெருவாசிகளின் எரிச்சலைத் திசை மாற்ற அவருக்குத் தண்டனையாம்; இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை, மனிதாபிமானமற்ற செயலைக் கண்டு, கூட்டம் சுற்றி நின்று வேடிக்கைதான் பார்த்தது. நானும் ஒண்டிப் பதுங்கி நின்று வேடிக்கைதான் பார்த்தேன். என் இதயத்தில் இடி விழுந்த உணர்வு. இந்த இடி அந்த ஆண்டையின் தலையில் விழக் கூடாதா? என்ற தவிப்பு. வேறென்ன செய்ய முடியும் என்னால் இந்த ஆண்டைக்கு நான் மகனா? இதுதான் நான் கண்ட முதல் காட்சி என்றாலும் இப்படிப் பல நிகழ்ச்சிகளை பின்னாளில் நிறைய கண்டேன். ...............என் தகப்பனார் நீதிக் கட்சியை நேசித்தவர். பெரியார் மீது பற்றுக் கொண்டவர். அவரது பேச்சுகள், எழுத்துகள் மீது ஈர்ப்பு கொண்டவர். திராவிடர் கழகக் கூட்டங்களை நடத்துவதற்குப் பின்னிருந்து உதவிகள் பல செய்தவர். நான் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டு இருந்த போதே அன்றாடம் தவறாமல் தனக்கு ஓய்ந்த நேரத்தில் என்னை அழைத்துக் குடி அரசு, விடுதலை பத்திரிகையைப் படிக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருப்பார் என் தந்தையார். அதைப் படித்துச் சொல்வதில் எனக்கும் ஓர் ஆர்வம். ஆசிரியர் குத்தூசி குருசாமி அவர்கள் எழுதும் பலசரக்கு மூட்டை - புரியாத பாடங்களையும் எனக்குப் புரிய வைத்தது. எனது சிந்தனையைப் பற்ற வைத்து, என்னைத் தூண்டிவிட்டுக் கொளுத்தியதில் குத்தூசிக்கு ஒரு பங்கு உண்டு. அந்தத் தீ தான் என் கல்லூரி வாழ்க்கையில் காட்டு ஜூவாலை ஆகிவிட்டது. அப்போது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தரானார் சர். சி.பி. ராமசாமி அய்யர். பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பிரச்சினை நிர்வாகத்தின் எல்லா மட்டங்களிலும் தலை விரித்தாடக் காரணமானார். அதில் மாணவர்களும் இழுக்கப்பட்டனர். அப்போது நடந்த, எப்போதும் மறக்க முடியாத, ஒரு நிகழ்ச்சிதான் என்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து வீட்டிற்கனுப்பக் காரணமாயிருந்தது. நான் மட்டுமல்ல, என்னோடு பதினான்கு பேர்கள். ஊர் வந்த சில மாதங்களில் என் தகப்பனார் நோயுற்று படுக்கையிலானார். அவருக்குப் பணிவிடை முற்று முழுதும் நானேயானேன். அதே வேளை அவருக்குத் தெரியாமல், என் காரியத்தைத் தொடங்கினேன். என்னையொத்த இளைஞர்களைக் கூட்டிக் குழுவாகி செயலிறங்கினோம். ஊர்ப் பகுதியிலிருந்த ஆதிக்கக்காரர்களையும், கோவில் பெருச்சாளிகளையும் குறிப்பிட்டுச் சொல்லி அம்பலப்படுத்த ‘தியாக உள்ளம்’ என்ற ஒரு நாடகம் உருவாயிற்று. அதிலிருந்து தொடங்கினோம். கதை-வசனம்-டைரக்ஷன்-நடிப்பு எல்லாம் நாங்களே; - நோட்டீசைப் பார்த்தவர்கள், ‘பெரும் புள்ளிகளை எதிர்த்தா?’ என்றனர். நாடகம் முடிந்தது; சிலர் மேடை ஏறிப் பாராட்டினர். பலருக்கு வெளியே சொல்ல முடியாவிட்டாலும் உள்ளத்தில் பூரிப்பு. ஊக்கம் தந்தனர். ஆனாலும் ஓர் அச்சம். தொடர்ந்து ‘தீர்ப்பும் திருமணமும்’ - ‘ஏழையின் கண்ணீர்’ - ‘அய்யய்யோ! அய்யய்யோ’ ஆகிய நாடகங்கள் மேடையேற்றப் பட்டன. பெரும்புள்ளிகளின் விரோதம் வேகம் பெற்றது. பகை பச்சையாகத் தெரிந்தது. ஊரின் உற்சாகமும், பயமும், கவலையும் கூட வெளிப்பட்டது. எங்கள் குடும்பத்தினரோ எங்களைப் பாராட்டவும் இல்லை, எங்களைத் தடுக்கவுமில்லை. நான் உருப்படுவேனா என எண்ணிய என் தகப்பனார் நான் உருப்பட்டேனா என்று சொல்லாமலேயே உயிர் நீத்தார். அவரது மறைவுக்குப் பின் எனது மூத்த சகோதரர் குடும்பப் பொறுப்பேற்றார். அவரது வழிகாட்டலில், குடும்ப மற்றும் விவசாயப் பொறுப்புகளை நான் ஏற்றேன். எனது மூத்த சகோதரர் திரு. ஏ.ஜி. வெங்கிட கிருஷ்ணன் இரயில்வேயில் பணியாற்றிய தி.மு.க.காரர்; சிறந்த தொழிற்சங்கவாதி. மலைக் கண்ணன் என்ற புனை பெயரில் மேடைப் பேச்சாளர். அவரது தலைமையில் அந்தணப் பேட்டை கிராம நலச் சங்கம் உருவாக்கப்பட்டு அதில் எனக்கு ஒரு பொறுப்பும் வழங்கப்பட்டது. கிராம நலச் சங்கம் ஊரார் மதிப்பைப் பெற்று சுற்றுப் பகுதியிலிருந்த ஊர்களுக்கெல்லாம் அது ஒரு ‘மாதிரி’ ஆயிற்று. எந்தவொரு அமைப்பிலும் அங்கம் கொண்டு செயலாற்றும் பாத்திரம் வகிப்போருக்குத் தனித் தன்மை உண்டு. அது அவ்வமைப்பின் பொதுத் தன்மையோடு பிரிக்க முடியாத பகுதி என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், புரியாதோர் அல்லது புரிந்தும் புரியாததுபோல இருப்பவர்கள் அப்பாத்திரத்தின் தனித் தன்மையைத் தனிப்பட்ட பகையாகக் கொள்ள முனைவார்கள். அத்தகைய பலர் அமைப்பின் அகமும், புறமும் இருப்பார்கள். அகப் பிரச்சினைக்கு விமர்சனம் - சுய விமர்சனத்தை ஆயுதமாகக் கொண்டே அமைப்பில் தீர்வு காணப்படும். அவ்வாயுதத்தை ஏந்தாத அமைப்பு கோஷ்டிகளின் கூடாரமாய் இருக்கும். (ஏ.ஜி.கே. நினைவுகளின் ஒரு பகுதி) 18 அ. போராளி ஏஜிகே நினைவுகளில் கீழத்தஞ்சை வரலாறு: சில குறிப்புகள் (முதல் பகுதி) (இந்நூல் என் வாசிப்பில்… புதிய தொடர்) மு.சிவகுருநாதன் (மூத்த போராளி ஏ.ஜி.கே. என்கிற தோழர் ஏ.ஜி.கஸ்தூரிரெங்கன் அவர்கள் தனது போராட்ட வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளும், ‘ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்…’, என்ற நூல் ‘ரிவோல்ட்’ பதிப்பகத்தால் டிசம்பர் 2013 இல் வெளியிடப்பட்டுள்ளது. தொகுப்பும் பதிவும்: பசு.கவுதமன். மற்றொரு குறுநூல் ‘வெண்மணிச்சூழல்’ ஏஜிகே நேர்காணல், நேர்கண்டவர்: பாவெல் சூரியன். இவற்றைப் பற்றிய ஓர் அறிமுகப் பதிவு இது.) “முதல் குற்றவாளியான நாகப்பட்டினம் தாலுகா நெல் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவருக்கும் இடது கம்யூனிஸ்ட் கிசான்களுக்கும் இடையே கசப்புணர்வு இருந்ததை நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். தனது உயிருக்கு ஆபத்து இருப்பதான சந்தேகத்தையும் இடது கம்யூனிஸ்ட்கள் தம்மை குற்ற வழக்குகளில் வேண்டுமென்றே சிக்க வைக்க முயற்சிப்பதையும் குறிப்பிட்டு இந்த சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னால் முதலாவது குற்றவாளி சென்னை மாகாண முதலமைச்சருக்கு மனு அனுப்பியிருந்ததையும் கூட நாம் ஏற்கனவே குறிப்பிட்டோம். இவ்வாறு பரஸ்பரம் சந்தேகமும் பகைமையும் கொண்ட மனநிலையில், இந்த வழக்கில் முதல் குற்றவாளியை சிக்கவைக்கும் எண்ணத்திற்குத் தடைபோடுவதும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 42 அப்பாவிகளின் சோகமான கொலைப்பழியையும் அதேபோல் துப்பாக்கிக் குண்டுகள், அரிவாள்கள், சுளுக்கிகள், தடிக்கம்புகள் ஆகியவற்றால் மற்ற பலர் காயப்படுத்தப்பட்ட குற்றத்தையும் அவர் மீது சுமத்தாமல் இருப்பதும் கிசான்களுக்கு சிரமமாக இருந்திருக்க வேண்டும்.” (பக். 429) “மேலும் இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ள அனைத்து 23 குற்றவாளிகளும் மிராசுதாரர்களாக இருப்பதும் திகைக்க வைக்கும் விஷயமாக உள்ளது. இவர்களில் பெரும்பாலோர் பெருமளவு நிலத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ள பணக்காரர்கள். முதலாவது குற்றவாளி கார் ஒன்றை சொந்தமாக வைத்திருக்கிறார் என்பது தெளிவு. இத்தகைய மிராசுதாரர்களா இடது கம்யூனிஸ்ட் விவசாயிகளைப் பழிவாங்கும் அளவுக்கு பலவீனமான எண்ணம் கொண்டிருப்பார்கள்? இவர்கள் தாங்களே சம்பவ இடத்திற்கு நடந்துவந்து பணியாளர்கள் உதவி ஏதும் இல்லாமல் வீடுகளுக்குத் தீவைத்திருப்பார்கள் என்பதை நம்புவது சிரமமாக உள்ளது.” (பக். 435) (மேற்கண்ட இரண்டு மேற்கோள்களும் மயிலை பாலு மொழிபெயர்த்த ‘நின்று கெடுத்த நீதி – வெண்மணி வழக்கு: பதிவுகளும் தீர்ப்புகளும்’ என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டவை. ஏப்ரல் 06, 1973 சென்னை உயர்நீதிமன்ற வெண்மணிக் கொலையாளிகளை விடுதலை செய்த மேல்முறையீட்டு வழக்குத் தீர்ப்பிலுள்ள சில வரிகள். பலியான உயிர்கள் 44; 42 என்பது அரசுக்கணக்கு. வெளியீடு: அலைகள் வெளியீட்டகம்) 44 பேர் படுகொலை ஆளும், அதிகார வர்க்கத்தின் மனச்சாட்சியை உலுக்கியிருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை. ஆண்டுதோறும் டிசம்பர், 25 தோழர் ஏஜிகே குறிப்பிடுவதுபோல தியாகிகள் தினம், அஞ்சலி செலுத்துல் என்பதாக முடக்கப்பட்டிருக்கிறது ஒடுக்கப்பட்ட, விவசாயத் தொழிலாளர்களின் எழுச்சி. இது தொடர்ச்சி இல்லாமல் முற்றுப்புள்ளியானது எவ்வளவு பெரிய இழப்பு? அதிகார வர்க்கங்களுக்கு இசைவாக இயக்கங்களும் அதைப் பின்பற்றுபவர்களும் மாறிப்போனதன் அவலம் என்று மட்டும் சொல்லிவிடமுடியுமா? வரலாறு / வருங்காலம் நம்மை மன்னிக்குமா? டிசம்பர் 14, 1980 இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு கொன்றழிக்கப்பட்ட நிகழ்வை கவித்துவமாக, “வடவூரில் தொடங்கப்பட்டு ஆய்மழையில் வளர்க்கப்பட்ட நெல் உற்பத்தியாளர்கள் சங்கம் இரிஞ்சூரில் புதைக்கப்பட்டது”, என்று தோழர் ஏஜிகே சொல்கிறார். டிசம்பர் 25, 1968 இல் 44 பேரின் படுகொலையோடு ஒடுக்கப்பட்டோர் மற்றும் விவசாயிகள் எழுச்சியும் முடங்கிப் போனதும் பெருந்துயரமல்லவா! கீழ வெண்மணிப் படுகொலைக்குப் பிறகு அன்றிலிருந்து இன்று வரை நிறைய இலக்கியங்கள் படைக்கப்பட்டன. இந்திரா பார்த்தசாரதி ‘குருதிப்புனல்’ என்னும் நாவல் எழுதினார். இந்தப் பார்வையை மறுத்து சோலை சுந்தரபெருமாள் ‘செந்நெல்’ நாவலைக் கொண்டு வந்தார். அதன்பிறகு பாட்டாளி ‘கீழைத்தீ’யை மூட்டினார். ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டு இன்னும் வெளியாகவில்லை. இந்நிகழ்வு குறித்து எழுதப்பட்ட கவிதைகள் மற்றும் பாடல்களுக்கு அளவில்லை. ‘மனுசங்கடா’ என்ற இன்குலாப் கவிதைப் பாடல் நினைவிருக்கலாம். பாரதி கிருஷ்ணகுமாரின் ‘ராமய்யாவின் குடிசை’ ஆவணப்படம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு வெண்மணி என்று பெயர் சூட்டல்கள் அநேகம் நிகழ்ந்தது. வெண்மணி குறித்து ஞானக்கூத்தன் எழுதிய கவிதையின் தன்மை பற்றி இம்மாத உயிர்மை (டிசம்பர், 2015) இதழில் கூட நஞ்சுண்டனின் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. வெண்மணி சம்பவத்திற்கு முன்னும் பின்னுமான கீழத்தஞ்சையின் வரலாறு ஏதாவது கிடைக்கிறதா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஆங்காங்கே தனிப்பட்ட நபர்களின் பதிவுகளிலிருந்துதான் நாம் வரலாற்றைத் தொகுக்கவேண்டியுள்ளது. பி.சீனிவாசராவ் – அடிமை விலங்கொடிக்க ஆர்த்தெழுந்த வீரன்! என்ற என்.ராமகிருஷ்ணனின் குறுநூல் (வெளியீடு: பாரதி புத்தகாலயம்), மணலி சி.கந்தசாமி – கு.வெ.பழனிதுரை (விற்பனை உரிமை: பாரதி புத்தகாலயம்), செங்கொடியின் பாதையில் நீண்ட பயணம் – கோ.வீரய்யன் (வெளியீடு: பாரதி புத்தகாலயம்), மேலும் இவரது விவசாயிகள் சங்க வரலாறு, விவசாயத் தொழிலாளர்கள் சங்க வரலாறு ஆகிய இரண்டு நூற்கள், நின்று கெடுத்த நீதி – வெண்மணி வழக்கு: பதிவுகளும் தீர்ப்புகளும் (அலைகள் வெளியீட்டகம்), தியாகுவின் நூல் என ஒன்றிரண்டு நமது பார்வையில் படுகின்றன. அப்பணசாமியின் தென்பரை முதல் வெண்மணி வரை, சோலை சுந்தரபெருமாள் தொகுத்த 21 பேரில் வாய்மொழி வரலாறு வெண்மணியிலிருந்து… ஆகியவற்றைத் தவிர பிற வாய்மொழி வரலாற்றுப் பதிவுகள் பெரும்பாலும் இல்லை என்கிற நிலைதான். கவிஞர் வாய்மைநாதன், பேரா.தி நடராஜன் (கீழத்தஞ்சை மக்கள் பாடல்கள் - பாரதி புத்தகாலயம் ) ஆகியோர் தொகுத்த பாடல்கள் கொஞ்சம் இருக்கின்றன. வெண்மணி நிகழ்வு, அக்காலப் போராட்டங்கள், பி.எஸ்.ஆர், மணலி கந்தசாமி, ஏ.ஜி.கே. போன்ற தலைவர்களைப் பற்றிய வாய்மொழிப்பதிவுகள் வரலாறுகள் ஏன் தொகுக்கப்படவில்லை? ராமய்யாவின் குடிசையின் சுவர் மீதியை ஓவியமாக வரைந்து வைக்காமல் விட்டு விட்டோம் என்று தோழர் கோ.வீரய்யன் வருத்தத்தைப் பதிவு செய்கிறார். (இந்தப் பட்டியல் முழுமையானதல்ல. எனது பார்வைக்கு பட்டவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன். விடுபடுதல்கள் இருக்கலாம். இருந்தால் தெரிவிக்கவும்.) இவையனைத்திலும் இயக்கம் அல்லது தனிநபர் சார்ந்த பார்வைகளே பதிவாகியுள்ளன. சமகால கீழத்தஞ்சை வரலாற்றை நடுநிலையுடன் அணுகும் பிரதியை இனிதான் யாரேனும் உருவாக்க வேண்டும். நடுநிலை என்பதெல்லாம் எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை இந்நேரத்தில் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது. இம்மாதிரியான தனித்தனி வரலாற்றுப் பதிவுகள் பிற்காலத்தில் முழு வரலாற்றை எழுத உதவலாம். அந்த வகையில் மூத்த போராளி ஏ.ஜி.கே. அவர்களின் நூல் முக்கியத்துவம் ஒன்றாக உள்ளது. பி.எஸ்.ஆர், மணலி கந்தசாமி, ஏ.ஜி.கே. ஆகியோர் கீழத்தஞ்சை விவசாய எழுச்சியை முன்னெடுத்த முக்கியமான ஆளுமைகள். முதலிருவர்கள் பற்றிய சுயபதிவுகள் இல்லாத போது ஏஜிகே உடைய இந்நூலின் முக்கியத்துவம் விளங்கும். வெண்மணி குறித்தப் பதிவுகளே முறையாக இல்லாத போது, அதற்கு முன்னும் பின்னுமான வரலாற்றை எங்கே தேடுவது? தமிழர்களுக்கு வரலாற்று உணர்வில்லை என்று அடிக்கடி சொல்வதைப் போல தப்பித்துக் கொள்ளமுடியுமா? இருண்ட காலம் என்று சொல்லி அழித்தொழிக்கப்பட்ட களப்பிரர் வரலாற்றை இலங்கை பவுத்த நூற்களான மகாவம்சம், தீபவம்சம் ஆகியவற்றையும் பிற ஆய்வுகளையும் கொண்டு மயிலை சீனி.வேங்கடசாமி போன்றோர் வரலாற்றைத் திருத்தி எழுதினர். இங்கு சமகால வரலாற்றைத் தவறவிட்டோமே என்று ஏக்கமும் ஒடுக்கப்பட்டோர் எழுச்சி சரியான பாதையில் பயணிக்கவில்லை என்ற தவிப்பும் உண்டாவது தவிர்க்க முடியாதது. தோழர் சேர்த்து வைத்திருந்த குறிப்புகள், ஆவணங்கள், தேதிவாரியான விபரங்கள், நடந்த விவாதச் சான்றுகள் எல்லாம் 1969 இல் போலீஸாரின் அராஜகச் சூறையாடலில் அழிக்கப்பட்டன என்பதைப் படிக்கும்போது, காவல்துறை, ராணுவம், போர் மூலம் இத்தகைய அழிப்பு வேலைகளைச் செய்வதுதானே கடமையாக வைத்திருக்கின்றன. இங்கு சமண, பவுத்த சின்னங்கள், இடங்கள், யாழ் நூலகம், ஆப்கன் பவுத்த சின்னங்கள் ஆகியவை இவ்வாறுதான் அழிக்கப்பட்டன. கீழத்தஞ்சையின் ஒரு பகுதி வரலாறு அழிந்த வருத்தம் ஒருபுறமிருக்க, தனது அபார நினைவாற்றல் மூலமாக அதில் பெருமளவு ஈடு செய்த மகிழ்ச்சியும் இருக்கிறது. சான்றாதாரங்கள், ஆவணங்கள் தான் இல்லை. சில பெயர்கள் விடுபட்டிருக்கல்லாம். ஆனால் நிகழ்வுகள் கோர்வையாக அடுக்கி 200 பக்கங்களுக்கு மேல் விவரிக்கும் நினைவாற்றல் அபாரமானது. இதை என்னுடைய சுயசரிதை என்று கருதிட வேண்டாம் என்கிறார் ஏஜிகே. அப்படி சுய சரிதையாக இருந்தாலும் தவறொன்றுமில்லை. போராட்டமே வாழ்வு என்றான பிறகு, ஒரு போராளிக்கென்று தனிப்பட்ட வாழ்வு இல்லை. சித்தாந்தம், போராட்டம் என்பதான வாழ்வு முறையுடன் வாழ்க்கையை இணைப்பதில் என்ன தவறிருக்க முடியும்? போராளிகளின் சுயசரிதைகள் அவர்களது அகவாழ்வை மட்டும் பேசுவதாக இருந்ததில்லை. முக்கொலை வழக்கில் தூக்குத்தண்டனைக் கைதியாக தூக்குமேடை வரை சென்று திரும்பிய தோழர் ஏஜிகே, 24 ஆண்டுகள் சிறை வாழ்க்கை, விவசாயத் தொழிலாளர் போராட்டங்களுக்கு ஈடாக சிறைப்பட்டோருக்கான போராட்டங்கள் என அவரிடம் சொல்வதற்கும் எழுதுவதற்கும் நிறைய இருக்கிறது. அந்த வரலாறுகள் பதிவு செய்யப்படாமல் அழிந்துகொண்டிருக்கின்றன. இப்போது வெளிவந்திருப்பது ஓர் துளிதான் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்நூலில் தனது தந்தையைப் பற்றிச் சொல்லும்போது பர்வதராஜ குலம் (உடையார்) என்பதைச் சொல்லுகிறார். இதை யாரவது வித்தியாசமாக பார்க்கக்கூடும். அதற்காக ஓர் உதாரணத்தைக் கூற விரும்பிகிறேன். எல்ஜிஎஸ் என்று அழைக்கப்பட்ட இல.கோவிந்தசாமி என்ற ஓர் இடதுசாரி இயக்கத் தோழரை ‘சஞ்சாரம்’ இரண்டாவது இதழுக்காக நேர்காணல் (2008) செய்தேன். அதில் அவரிடம் கேட்ட முதல் கேள்விக்கே தந்தை, தாய் வர்க்கம், சாதி, மதம், மொழி ஆகியவற்றை சொல்லித்தான் பேசத் தொடங்கினார். அவர் ‘இந்திய மக்களாட்சி இயக்கம்’ என்றொரு அமைப்பைக் கட்ட முனைந்தார். அதன் உறுப்பினர்களுக்கு மேலே சொன்னவற்றை முன் நிபந்தனையாக்குவதாகவும் கூறினார். சாதியொழிப்பை முன்னெடுக்கிற இடதுசாரிக் கொள்கையுடையோர் சாதி, வர்க்கத்தைப் பதிவு செய்வதும் சாதியவாதிகளின் செயல்பாடுகளும் ஒன்றாகாது. (2009 இறுதியில் அவர் மரணமடைந்தார். இதழும் அந்த நேர்காணலும் இதுவரையில் வெளியாகவில்லை.) கிராம நலச்சங்கம், திராவிடர் கழகம்., திராவிடர் விவசாயத் தொழிலாளர் சங்கம், ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), மீண்டும் தி.க., 2000 லிருந்து தமிழர் தன்மானப் பேரவை என்ற தனி அமைப்பு என்கிற மாற்றங்கள் ஏஜிகே வின் பொது வாழ்வில் நிகழ்ந்துள்ளது. பெரியாரியம், மார்க்சியம் என்ற அடிப்படைக் கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை. ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான சாத்தியப்பாடுகளில் ஒன்றாகவே இதை நாம் அணுகவேண்டியுள்ளது. இறுதியாக அவர் வந்தடைந்த தமிழ் தேசிய அடையாளம், இங்கு பலரால் கட்டமைக்கப்படும் இனவாத அரசியலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்றே கூறலாம். பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சியாகவும் சில மார்க்சியர்கள் (உ.ம். கோவை ஞானி) வலியுறுத்தும் மார்க்சிய தமிழ் தேசியத் தொடர்ச்சியை இதில் காணமுடியும். இந்திய வரலாற்றில் ஓர் எடுத்துக்காட்டைச் சொல்லமுடியும். அவர்தான் அண்ணல் அம்பேத்கர். பஹிஷ்கரித் ஹிதஹரிணி சபா (ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்) மூலம் தலித் உரிமைப் போராட்டங்கள், பிறகு சுதந்திரத் தொழிலாளர் கட்சி தொடங்கி இடதுசாரிகளுடன் இணைந்து செயல்படுதல், பட்டியல் சாதி கூட்டமைப்பை உருவாக்கி தேர்தலில் பங்கேற்றல், அரசியல் சட்ட வரைவுக்குழுவில் இடம்பெற்று தனித்துவமான பங்களித்தல், நேரு அமைச்சரவையில் பங்கேற்பு, அதிலிருந்து விலகி குடியரசுக் கட்சியை தொடங்குதல், இறுதியாக இந்து மதத்திலிருந்து வெளியேறி பவுத்தம் தழுவுதல் என்கிற பல்வேறு நிலைப்பாடுகளை எடுக்கக் காரணம் தலித் மீட்சி – விடுதலை ஒரே நோக்கமே. பவுத்தம் தழுவியதும் இம்மாதிரியான ஓர் அரசியல் நடவடிக்கையே. இம்மாதிரியான தன்மைகள் ஏஜிகே வின் பொதுவாழ்விலும் நிகழ்ந்திருக்கிறது. நூற்களுக்குள் இரண்டாம் பகுதியில் பயணிப்போம். இறுதியாக ஒன்று. நூலாக்கம், அச்சு, எழுத்துரு அளவு, மாதிரி போன்றவற்றில் இன்றுள்ள எவ்வளவோ நவீன வசதிகளைப் பயன்படுத்தியிருக்கலாம். தேவையற்ற இடைவெளிகளைக் குறைத்தால் பக்கங்கள் மேலும் குறையும். எனவே விலையும் குறையும். மக்கள் போராட்டத்திற்காக வாழ்வைத் தொலைத்த போராளி ஏஜிகே யை அனைவரும் வாசிக்க வாய்ப்பு ஏற்படும். அடுத்த பதிப்பில் இது சரி செய்யப்படும் என்று நம்புவோம். (தொடரும்… இரண்டாம் பகுதியில்...) 01.ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்… (நாகை தாலுக்கா விவசாயத் தொழிலாளர்களின் வீரெழுச்சி) தொகுப்பும், பதிவும்: பசு.கவுதமன் பேச: 9884991001 வெளியீடு: இளங்கோவன் பேச: 9786540367 ரிவோல்ட் பதிப்பகம், சாக்கோட்டை, கும்பகோணம். முதல் பதிப்பு: டிசம்பர் 2013 பக்கங்கள்: 217 நன்கொடை: ரூ. 185 02.வெண்மணிச் சூழல் தோழர் அ.கோ.க. (ஏஜிகே) நேர்காணல் நேர்கண்டவர்: பாவெல் சூரியன் மூன்றாம் பதிப்பு: கி.பி. 2015 வெளியீடு: பாவாணர் பதிப்பகம், வேலங்குடி – 610109, கீழப்படுகை – அஞ்சல், திருவாரூர் – வட்டம். பேச: 9842011244 18 ஆ. அடக்குமுறைகளும் போராட்ட வடிவங்களும் (இரண்டாம் பகுதி) (இந்நூல் என் வாசிப்பில்… புதிய தொடர்) மு.சிவகுருநாதன் நாகப்பட்டினம் தாலுகா என்பது இன்றைய நாகப்பட்டினம், திருவாரூர், திருக்குவளை, கீழ் வேளூர் ஆகிய வட்டங்களடங்கியது. நாகை விவசாயத் தொழிலாளர்கள் வீரெழுச்சி என்பது 1962 – 1975 காலகட்டத்தில் நிகழ்ந்த போராட்டங்களைக் குறிக்கும். இந்த எழுச்சி பிற வட்டங்களுக்கும் பரவி கீழத்தஞ்சை மாவட்டத்தின் எழுச்சியாக பரிமாணம் அடைந்தது என்று தொடக்கத்தில் ஏஜிகே வரையறை செய்துகொள்கிறார். இந்த எழுச்சிக்குத் தலைமை தாங்கியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை தாலுகா கமிட்டி. அதன் தலைமை கூட்டுணர்வு, கூட்டு முடிவு, கூட்டுச் செயல்பாட்டில் தனிநபர் பொறுப்பு, விமர்சனம் – சுய விமர்சனம் போன்ற இயக்கக் கோட்பாடுகளை அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் கடைபிடித்ததை ஏஜிகே தெளிவுபடுத்துகிறார். (பக். 5) ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட் கட்சியிம் மாநிலக் குழுச் செயலாளர் தோழர் மணலி கந்தசாமி, “ஒரு குலைக் காய்களாக நிற்கின்றீர்களே… உருப்படாத பயல்களே…”, நாகை தாலுகா கமிட்டிச் செயலாளர் தோழர் முருகையனிடம் கூறியதை எடுத்துக்காட்டுகிறார். மேலும் தோழர் பி.ராமமூர்த்தி கூட நாகை தாலுகா பகுதி கட்சியானது ‘செக்டேரியன்’ (sectarian) போக்கில் சென்றுகொண்டிருப்பதை கண்டித்திருக்கிறார். (பக். 144) “எல்லாமே அமைப்பின் முடிவு. எல்லாமே அமைப்பின் செயல். எல்லாரும் அமைப்பைக் காத்தனர். எல்லோரையும் அமைப்பு காக்க வேண்டுமென விரும்பினோம்”, (பக். 139) என்று தனி நபரை முன்னிலைப்படுத்தாத, கொள்கை வழிப்பட்ட இயக்கக் கட்டமைப்பு செயல்பட்ட விதம் வெற்றியை நோக்கிப் போராட்டத்தை உந்தித் தள்ள காரணமாக இருந்திருக்கிறது. கட்சிக்கு வெளியே உள்ளவர்கள் அமைப்பின் பொறுப்பாளர்களை தனிநபராக பார்த்ததில் தவறில்லை. அமைப்பில் இருந்தவர்கள் தன்னை அவ்வாறு பார்த்த தருணங்களில் தோழர் மீனாட்சிசுந்தரம் (மீயன்னா) “மாற்றுக் கருத்திருந்தால் கமிட்டியில் விமர்சனம் செய்யலாம். வெளியே செய்வது கட்சி விரோத நடவடிக்கை”, (பக்.122) என்று வலியுறுத்திப் பேசியது பெரும் நம்பிக்கையூட்டியதாகக் குறிப்பிடுகிறார். ‘பச்சைத் தமிழர்’ காமராஜை ஆதரிக்கும் பெரியாரின் முடிவு, உள்ளூர் கள நிலவரம் அவருக்கு சரியாக உணர்த்தப்படாமை, பெரியாரின் ‘சம்மந்தமில்லை’ என்கிற வெளிப்படையான அறிவிப்பு போன்றவற்றால் பெரியாருக்கு நீண்ட கடிதம் எழுதுகிறார். அக்கடிதத்திலுள்ள காட்டமான வாசகங்களை மாற்றாமல் அப்படியே அனுப்பியதை, “எனது அனுபவ அணுகுமுறை போதாமையோ அல்லது அல்லது சூழ்நிலை நிர்ப்பந்தமோ அப்படியே கடிதத்தை பெரியாருக்கு அனுப்பியதும், (பக்.42) கொலை முயற்சியிலிருந்து துணிச்சலாக சென்று மீண்டதை, “நாங்கள் செய்தது புத்திசாலித்தனமான செயல் அல்ல. அசட்டுத்தனம், வாலிபத்திமிர் அவ்வளவே”, (பக்.44) என்றும் சுயவிமர்சனம் செய்துகொள்ள முடிகிறது. பெரியாரிய, மார்க்சிய இயக்கங்கள் இரண்டிலும் பணியாற்றக் கூடிய ஒரு நல்வாய்ப்பு தோழர் ஏஜிகே விற்கு கிடைத்தது. அதனால் இவை இரண்டிற்குமான ஒருங்கிணைவை நடைமுறையில் பயன்படுத்த முடிந்தது. இவர்களது போராட்ட வடிவங்களைப் பார்த்து அதிர்ந்து “இதெல்லாம் ரொம்ப அதிகம்”, என்று சொன்னவர்களிடம் “செழுமைப்படுத்தப்பட்ட மார்க்சியமே பெரியாரியம்”, (பக்.102) என்று சொல்ல முடிந்திருக்கிறது. வயல்வெளிகளில், களத்து மேடுகளில் பெரியாரும் மார்க்சும் கைகோர்க்க முடிந்ததது. (பக்.84) உலகில் காரல் மார்க்சை விமர்சிக்காத ஒரே தலைவர் பெரியார்தான் என்று கூறமுடிகிறது. (பக்.157) பொதுவாக கருத்து மாறுபாட்டால் பிரிந்து செல்பவர்கள் செய்யும் தனிநபர் அவதூறுகள், வசைபாடல்களுக்கு ஏஜிகே யிடம் இடமில்லை. பெரியார், கார்ல் மார்க்ஸ் செய்த தனி மனிதத் தவறுகளைக் கொண்டு அவர்களுடைய சித்தாந்தங்களை நிராகரிக்க முடியாது என்பது இவரது திடமான எண்ணமாக உள்ளது. தனிநபர் வாதத்தை முன்வைத்து அமைப்பைக் காலி செய்கின்ற பிறரும் தோழர் ஏஜிகே யும் வேறுபடும் புள்ளி இதுவே. மலபார் போலீஸ், உள்ளூர் போலீஸ், பண்ணையார்கள், காரியக்காரர்கள், அடியாட்கள் ஆகிய பல தரப்பு வன்கொடுமைகள் சொல்லில் வடிக்க இயலாதவை. ‘சாணிப்பால் சவுக்கடி’ என்று பொதுவாக சொல்லிவிட்டுப் போகாமல் பண்ணையார்களின் வன்செயல்களை விலாவாரியாகவும் அதற்குத் துணை நின்ற அரசு எந்திரம், ஒடுக்கப்பட்ட மக்கள் திரள் போராட்டங்கள் என எல்லாவற்றையும் தோழர் விளக்குகிறார். “போலீஸ் லத்திக்கு மட்டும் பிள்ளைக் கொடுக்கும் சக்தியிருந்தால் நான் பல குழந்தைகளுக்கு தாயாகியிருப்பேன்”, (பக்.77) என்று கெளரியம்மா சொன்னதுதான் சிதம்பரம் அண்ணாமலை நகர் பத்மினிக்கும் நடந்தது. இவர்களின் ‘ஆழம் பார்க்கும்’ வன்கொடுமை அன்றிலிருந்து இன்று வரை மாறவேயில்லை. இதைப் புதிதாகக் கேள்விப்படும் இளைஞர்களுக்கு ஆச்சரியமாகவோ, மிகையாகவோ தோன்றலாம். ஆனால் இதுதான் உண்மை. தலைமறைவுத் தோழர்களுக்கு ‘கொரியராக’ செயல்பட்ட தலைஞாயிறு வடிவேலுவைத் தேடி அவரது குடிசைக்குச் சென்ற போலீஸ் நிறைமாத கர்ப்பிணி மனைவியை சித்ரவதை செய்து சிசுவைக் கொன்ற (பக்.82) நிகழ்வு, குஜராத்தில் நடந்த இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரத்தின் முன்னோட்டம் போல இருக்கிறது. ஆதிக்க சக்திகள், அதிகார வர்க்கம் எப்போதும் ஒரே மாதிரியாகவே தனது கொடுமைகளை அரங்கேற்றுகிறது. கர்ப்பிணிப் பெண்கள் அரை மணி நேரம் வரையில் வயலில் நடவு நட்டுவிட்டுக் கரையேறி மறைவில் துணிவிரித்துப் போட்டு பிள்ளை பெற்ற சம்பவங்களும் உண்டு. பிள்ளை பெற்ற மூன்றாம் நாளே வேலைக்கும் திரும்பவேண்டும். (பக்.71) பண்ணையாளின் குழந்தைகள் பள்ளிக்குப் போகாமல், பண்ணை வீட்டுக்குச் சேவகம் செய்யவேண்டும். பண்ணையார் தாலி வாங்கிக் கொடுத்து திருமணம் செய்து வைப்பார். முதலிரவு அவருடன்தான். (பக்.71) எவ்வளவு பெரிய கொடுமை! இதற்கு எதிர்வினை எப்படி இருக்கவேண்டும்? அதைதான் இவர்கள் சரியாக செய்திருக்கிறார்கள். சேரிப்பெண்கள் பண்ணையார், பண்ணையாரின் காரியக்காரன், கையாட்கள் கைகளில் சிக்காமல் வாழ்வது அரிது. தொட்டால் தீட்டு என்ற பார்ப்பன ஜாலம் காட்டும் இவர்களுக்கு, வீட்டு வாசல்படி வரை இவர்கள் தொட்டுத் தூக்கிவரும் நெல் மூட்டைகளும், இவர்களின் பாலியல் வக்கிரத்திற்கு ஆளாகும் பெண்களும் தீட்டாவதில்லை. (பக். 70,72) உயிர்ப்பலிகள், உடல் ஊனம், குடிசை அழிப்பு, கூரைகள் எரிப்பு, சேரிகள் சூறையாடல், பெண்களை மானபங்கப்படுத்துதல், பாலியல் வன்கொடுமை, போலீஸ் சித்ரவதைகள், பொய் வழக்குகள் எனப் பல்வேறு அடக்குமுறைகள் அன்றாட நிகழ்வாக (பக்.85) எதிர்கொள்ளவேண்டிய கட்டாயம் களப்பணியாளர்களுக்கு இருப்பதை கட்சியின் மேல்மட்டம் பல சமயங்களில் உணர்வதில்லை. சில போராட்ட வடிவங்கள் பண்ணையார்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும் பரம்பரை எதிரிகளை ஒழிக்கவரும் மன்னர்களின் குணத்தை ஒத்திருப்பார்கள், எனவே அவர்களது வல்லாதிக்கத்தை எதிர்க்க, உளவியல் பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு போராட்ட வடிவங்களை இவர்கள் கைக்கொண்டதாக தோழர் ஏஜிகே விளக்குகிறார். குலக் கல்வித்திட்ட எதிர்ப்பு, விநாயகர் சிலை உடைப்பு, கத்தி வைத்துக் கொள்ளுங்கள் என்ற அறைகூவல், கோர்ட் அவமதிப்புக் குற்றச்சாட்டில் கோர்ட் படியேறி கோர்ட்டை அவமதித்த தீரம், ராமன் பட எரிப்பு, சாதியொழிப்பிற்காக சட்ட எரிப்பு, தமிழ்நாடு நீங்கலாக இந்திய தேசப்பட எரிப்பு (பக். 21) போன்ற வித்தியாசமான போராட்டங்களை நடத்திய பெரியார் 1925 இல் சுயமரியாதை இயக்கம் தொடங்கி இறக்கும் (1973) வரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது கிடையாது என்பது இங்கு மனங் கொள்ளத்தக்கது. அந்த வகையில் அடித்தட்டு மக்களின் பங்கேற்பில் இவர்கள் நடத்திய சில போராட்ட வடிவங்கள் வித்தியாசமானது மட்டுமல்ல, ஆதிக்கத்தின் ஆணிவேரை அசைக்ககூடியவை. இத்தகைய ‘புதிய போராட்டங்கள்’ அனைத்தும் பெண்களைக் கொண்டு நடத்தப்பட்டவை. மேலும் நாகை நகர சுத்தித் தொழிலாளர்களின் பங்கும் இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது. இப்போராட்டங்களில் பெண்கள் ஆண்களுக்கு நிகராகவும், சில சமயங்களில் ஆண்களுக்கு மேலாக அற்புதமான ஆலோசனைகளையும் வழங்கியதை ஏஜிகே நன்றியுடன் நினைவு கூர்கிறார். (பக்.154) அடித்தட்டு மக்களின் போராட்டம் வேறெப்படி இருக்கமுடியும்? அம்பேத்கர் சிலைகளுக்கு செருப்பு மாலை போட்ட நிகழ்வு நடந்தபோது, செருப்பு நமது பெருமையின் அடையாளம் என்று சொல்லி அனைத்து சிலைகளுக்கும் செருப்பு மாலையை அணிவிக்கும் போராட்டம் நடத்தவேண்டும் என ஒரு எழுத்தாளர் சொன்னது நினைவிற்கு வருகிறது. ஒப்பாரிப் போராட்டம் கூலிப் பிரச்சினையில், பச்சைக் கீற்று மட்டைகளை முடைந்து பாடை கட்டி, தாரை தப்பட்டை முழங்க, பெண்கள் தலையில் முக்காடு போட்டு பண்ணை வீட்டின் முன்பு ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. பறையைத் தன் தோளில் மாட்டி, வயல்வரப்பில் நின்று பறை அடித்துக்கொண்டே ஆட்களை ஏவி வேலை வாங்கக்கூடிய துணிச்சலான நபரான மாங்குடி கிருஷ்ணமூர்த்தி அய்யர் பண்ணைவீட்டில் தினமும் ஒப்பாரிப் போராட்டம் நடக்க, அய்யர் அலறியடித்து புலம்ப, அவரது மனைவி வேண்டுகோளின்படி அரைப்படி கூலி உயர்வுடன் போராட்டம் நிறைவு பெற்றது. (பக்.120) மலப்பொட்டல வீச்சு ஆர்.எம்.சம்மந்தமூர்த்தி முதலியார் பண்ணையில் நெல் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடுவின் நேரடி மேற்பார்வையில் வெளியூர் ஆட்களைக் கொண்டு அறுவடை செய்ய முயலும்போது, பெண்கள் மலப்பொட்டலங்களை வீசியெறியும் போராட்டம் நடந்தது. ஆல இலையை பொட்டலத்திற்கு உகந்தது என்கிறார் ஏஜிகே. (பக்.160) கோபாலகிருஷ்ண நாயுடுவிற்கு நேரடியாக நிகழ்ந்த முதல் பின்னடைவு இது. “ஏதால வேணுன்னாலும் அடிச்சிருக்கலாம். ‘அதை’ப் பெண்களைக் கொண்டு அடித்ததுதான் கொடுமை”, என்றார்களாம். (பக்.154) இதுதான் கொடுங்கோலர்களுக்கான உளவியல் சிகிச்சை. பின்பு ஓர் முறை இழிவாகப் பேசிய மாவட்ட நீதிபதிக்கும் இதே நிலைமைதான். (பக்.160) மலக்கரைசல் உடைப்பு நாகை வணிகர் ஏ.டி.ஜெகவீரபான்டிய நாடார் (கல்வி நிறுவன முதலாளி) நகர சுத்தித் தொழிலாளர்களையும் பெண்களையும் இழிவாகப் பேசியதைக் கண்டித்து வெளிப்படையாகக் காலிக்குடங்களுடன் நடந்த போராட்டத்தில் திட்டமிட்டபடி மூன்று ‘தண்டனைக்கலம்’ (மலக்கரைசல்) கொண்டுவரப்பட்டு அவரது வீட்டு முன்கூடத்தில் உடைக்கப்பட்டது. (பக்.160) கரைசல் தயாரிப்பு முறை பற்றி ஏஜிகே அளிக்கும் குறிப்பு இதோ. “திரவமாகவும் கெட்டியாகவும் இல்லாமல் ஒரு பசைபோல குழம்பாகத் தயார் செய்த கரைசலில், புளிய இலையை உருவிப்போட்டு நன்றாகக் கலந்துவிடவும். பிறகு பத்துக் கோழி முட்டைகளை உடைத்து அக்கரைசலில் ஊற்றி நன்றாகக் கலக்கவும். இப்போது சேற்றுக் குட்டைகளில் நீந்திக் கொண்டிருக்கும் பச்சைத் தவளைகளை (உயிருடன் பிடித்து) பத்து அல்லது பதினைந்து எண்ணிக்கைக்குக் குறையாமல், கரைசல் இருக்கும் பானைக்குள் லாவகமாகப் போட்டுவிட்டு, பானையின் வாய்ப்பகுதியை துணியால் மூடிக் கட்டவும்.” (பக்.166,167) டி.அருணாசலச் செட்டியாரின் பண்ணைவீட்டில் அவரது காமக்களியாட்டங்களுக்கு வரும் பெண்களுக்குப் பணிவிடை செய்ய, பண்ணையில் வேலை செய்யும் பெண்களுக்கு இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு உத்தரவிட, ஒரு நாள் தாரை தப்பட்டை முழங்க பெண்கள் கூட்டமாக பண்ணைவீட்டுக்குச் செல்ல, ‘’கூலி உயர்வு பற்றி இப்போது பேசமுடியாது”, என அவர் மறுக்க, “இல்லைங்க. மரியாதை உயர்வு”, என்று சொல்லி பெண்கள் நடுவீட்டில் ‘கரைசல்’ பானைகளைப் போட்டு உடைத்து எச்சரித்தனர். டி.அருணாசலச் செட்டியாரும் இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடுவும் அதன்பிறகு அவ்விடத்தில் அடியெடுத்து வைக்கவில்லை. (பக். 165,166) வீட்டு வாசலில் சாணிக்கரைசல் தெளிக்கும் போராட்டம் மஞ்சக்கொல்லை கண்ணையா முதலியார் வெளியூர் ஆட்களை வைத்து அறுவடை செய்வதை எதிர்த்து, அவர்கள் வீட்டு வாசலில் சாணிக்கரைசல் தெளித்து வாயில் வந்தபடி திட்டுதல் அரங்கேறியது. செய்தி போனதும், ஆயுதங்களுடன் டிராக்டரில் ஆட்களை அழைத்து வந்த இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு வீடு திரும்பினார். சிக்கல் சுமூகமாகத் தீர்க்கப்பட்டது. (பக்.168,169) கற்கள் வீச்சு திருவாரூர் சிவவடிவேல் உடையார் வியாபார நோக்கில் நாகை அந்தணப்பேட்டை மில்லை விலைக்கு வாங்குகிறார். இவர் தலைமையில் தஞ்சை மாவட்ட மிராசுதார் சங்கம் இயங்கியது. அங்கு செயல்பட்ட வணிக வைசியர் சங்கத்திற்கு இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு தொல்லைகொடுக்க, சிவவடிவேல் உடையார் மில்லுக்கு அடிக்கடி வரும் இரிஞ்சூர் கோபாலகுஷ்ண நாயுடுவை கற்கள் வீசி விரட்டியடித்த நிகழ்வை சுவைபட விவரிக்கிறார். மில் விற்கப்பட, தொல்லை நீங்கியது. (பக்.174, 175) இரட்டைக் குவளைப் போராட்டம் தேநீர்க்கடைகளில் இரட்டைக் குவளை முறை வழக்கிலிருந்தது. சாதி இந்துக்கள் நடத்தும் கடைகளில் டீ கேட்கும்போது அவர்கள் கொல்லைப்புறம் சென்றுவிட, நாங்களே டீ போட்டுக் குடித்துவிட்டு, குவளையை அப்படியே வைத்துவிட்டு, டீக்கான காசை மேசையில் வைத்துவிடுவோம். (பக். 170) செருப்பாலடித்தல் நெல் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஆய்மழை மைனர் வருகையை கோயில் மணியடித்து அறிவிக்கும் பழக்கத்தை தொடங்கியதற்காக பெரிய பண்ணை முத்தையா பிள்ளை செருப்பால் அடிக்கப்பட்டார். (பக்.130) சர்.சி.பி.ராமசாமி அய்யர் அண்ணாமலைப் பல்கலைக் கழக துணைவேந்தராக இருந்தபோது பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதோர் பிரிவினைக்காக ஜனாதிபதி பாபு ராஜேந்திர பிரசாத் வருகை தந்த பட்டமளிப்பு விழாவில் துணைவேந்தரை ஏஜிகே தலைமையில் ஓர் மாணவர்கள் குழு செருப்பாலடித்ததையும் அதனால் படிப்பைப் பாதியில் விட்டதும் பின்னுரையில் பசு.கவுதமனால் விரிவாகச் சொல்லப்படுகிறது. (பக்.198) கொடும்பாவி போராட்டம் ஜெகதாபுரம் பண்ணை பழனியாண்டி மழவராயர் கூலிப்பிரச்சினையில் முரண்டு பிடிக்க, கொடும்பாவி போராட்டம் நடத்தப்பட்டது. இந்த அதிர்ச்சியில் அவருக்கு மூளை பிசகிவிட, ஏ.எம்.திருநாவுக்கரசு முதலியார், சூரிய மூர்த்தி செட்டியார் ஆகியோர் இப்போராட்டத்திற்கு பயந்து இணங்கி வந்தனர். ஆய்மழை மைனர் தூதுவிட, அவர் மீதிருந்த நம்பிக்கை தகர்ந்ததால் பதவி விலக, இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு நெல் உற்பத்தியாளர் சங்கத் தலைவரானார். (பக்.132,133) இவர் ஆய்மழை மைனர் எஸ்.எஸ்.ராமநாத தேவர் போல் சாதியைப் பார்க்காமல் செங்கொடி இயக்கத்தை அழிக்க, தாழ்த்தப்பட்டோரையும் சங்கத்தில் சேர்க்க முடிவு செய்கிறார். வெளியூர்களில் தமக்கு எதிர்ப்பும் அவமானமும் மிஞ்ச, அருகிலுள்ள கிள்ளுக்குடி, சாட்டியக்குடி, தேவூர், இருக்கை, மேல வெண்மணி, கீழ வெண்மணி, இரிஞ்சூர் ஆகிய பகுதியிலாவது விவசாயத் தொழிலாளர் சங்கம் இருக்கக் கூடாது என்பதே அவரது வெறி. இதுதான் வெண்மணிப் படுகொலைகளுக்கு காரணமே தவிர, கூலி உயர்வுப் பிரச்சினை அல்ல. பிற தாலுகாக்களைவிட நாகை தாலுகா அதிக கூலி பெற்றதுதான் உண்மை என்று ஏஜிகே மிக விளக்கமாக விவரிக்கிறார். (பக். 185) மேலே கூறப்பட்ட போராட்ட வடிவங்கள், நிகழ்வுகளைப் பார்க்கும்போது யாருக்கும் பண்ணையார்கள் மீது இரக்கம் தோன்றிட நியாயமில்லை. ஏனெனில் அவர்களது அடக்குமுறைகள் கொடிதிலும் கொடிது. வழக்கமாக சொல்லப்படும் சவுக்கடி, சாணிப்பால் பற்றி தெரியுமா? பண்ணையார் வீட்டு முகப்பில் எப்போதும் தொங்கிகொண்டிருக்கும் திருக்கை வால் சவுக்கால் மயங்கும் வரை அடிப்பார்கள். உடம்பில் வழியும் ரத்தத்துடன் மூங்கில் குழாயில் நிரப்பிய சாணிப்பாலை குடிக்க வைப்பார்கள். சாணிப்பால் தயாரிப்பது எப்படி? சாணியை குடத்திலிட்டு நன்றாகக் கரைத்த பின்னர் துணியால் வடிகட்டினால் சாணிப்பால் தயார். (தமிழகத்தில் அடிமை முறை – ஆ.சிவசுப்பிரமணியன் நூலிலுள்ள மேற்கோள்) இன்னும் சில தண்டனைகள் • காலில் கிட்டி போட்டு ரத்த நாளங்கள் தெறிக்க மரம்போல் கீழே சாயவிட்டு ரசித்தல். (கிட்டி போடுதல்) • சுடுமணலில் ஒற்றைக் காலில் நிற்க வைத்தல். (கொக்குப் பிடித்தல்) • மரத்தில் தொங்கச் செய்து கீழே கற்றாழை முள்ளைப் பரப்பி வலியால் கீழே விழும்போது முள்ளால் குத்தப்படுதல். • கடுமையாக அடித்து, மயங்கி, தண்ணீர் கேட்கும்போது பெண்களின் சிறு நீரைக் குடிக்க வைத்தல். • சூட்டுகோலால் பண்ணையாரின் முதலெழுத்தை சூடு வைத்தல். • பெண்களை நிர்வாணமாக்கி தலைமுடியை அறுத்து மானபங்கப்படுத்துதல், பாலியல் வன்கொடுமைக்குள்ளாகுதல். • பெண்களை நிர்வாணமாக்கி முருங்கை, பூவரசு மரங்களில் உள்ள மொசுக்கட்டைப் புழுக்களை கட்டியணைக்கச் செய்தல். • ஆண்களை முட்டுக்காலிடச் செய்து பெண்களைக் கழுதை போல் சுமக்க செய்து அடித்து ஓட்டுதல். இதையெல்லாம் பார்க்கும் போது விவசாயக் கூலிகள் நடத்திய போராட்டங்கள் மிகவும் நாகரிகமானது என்பது விளங்கும். இறுதியாக, தோழர் ஏஜிகே வை திராவிடர் கழகமும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையோ என்று நினைக்கத் தோன்றுகிறது. அமைப்பு பலமுள்ள இடதுசாரி இயக்கங்களில் கூட மேலிருந்து கருத்துத் திணிப்பு மேற்கொள்ளப்படுவது இயக்கத்தின் அடிப்படையை ஆட்டங்காணச் செய்யும் என்பதை ஏனோ இவர்கள் உணர்வதில்லை. தோழர் ஏஜிகே வின் அனுபவப் பகிர்விலிருந்து கட்சியும் நாமும் பாடம் கற்க வேண்டியுள்ளது. தோழர் ஏஜிகே யின் நேர்காணலில் வெண்மணி நிகழ்வு பற்றிய பதிவுகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், சிறையனுபவங்கள் மிக முக்கியமானதாகப் படுகிறது. சிறைப்பட்டோர் உரிமைகளுக்கான போராட்டம், சிறைப்பட்டோர் நல உரிமைச் சங்கம் (1973) கட்டியது, உரிமைக் குரல் கைப்பிரதியேடு, 1100 பேரில் ஆயிரம் பேர் உறுப்பினரானது, சிறையில் பணியாற்றும் காவலர்களுக்காகவும் இணைந்து போராடியது ஏஜிகே போன்ற போராளிகளுக்கு மட்டுமே சாத்தியப்படும். திருச்சி மத்திய சிறைக்கு மாற்றம். அங்கே செவ்வொளி கைப்பிரதி; இறுதியில் போராட்டங்கள் வெற்றி; முதன்முறையாக சிறைத்துறைச் சீர்திருத்தங்கள் தொடங்கின. சில காவலர்கள் வேலை நீக்கம்; அவர்களுக்கு ரயில்வேயில் வேலைக்கு ஏற்பாடு. “சிறையா, வெளியிலா என்பதல்ல பிரச்சினை. போராட்டம்னா என்ன? சூழலைப் புரிந்துகொண்டு அதில் நம்மைப் பொருத்திக் கொண்டு மாற்ற உழைப்பதுதான் போராட்டம். அது சிறையிலென்றாலும், சமூகத்தினாலும் இதுதான் யதார்த்தம்; உண்மை”. என்ற இறுதிவரிகள் எவ்வளவு பொருத்தமானது. இதன் பின்னால் இருக்கும் பெரியாரியம், மார்க்சியம் என்கிற மிகப்பெரிய தத்துவ வீச்சை உணரமுடிகிறது. (முற்றும்) 01.ஏ.ஜி.கஸ்தூரிரெங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்… (நாகை தாலுக்கா விவசாயத் தொழிலாளர்களின் வீரெழுச்சி) தொகுப்பும், பதிவும்: பசு.கவுதமன் பேச: 9884991001 வெளியீடு: இளங்கோவன் பேச: 9786540367 ரிவோல்ட் பதிப்பகம், சாக்கோட்டை, கும்பகோணம். முதல் பதிப்பு: டிசம்பர் 2013 பக்கங்கள்: 217 நன்கொடை: ரூ. 185 02.வெண்மணிச் சூழல் தோழர் அ.கோ.க. (ஏஜிகே) நேர்காணல் நேர்கண்டவர்: பாவெல் சூரியன் மூன்றாம் பதிப்பு: கி.பி. 2015 விலை: ரூ. 12 வெளியீடு: பாவாணர் பதிப்பகம், வேலங்குடி – 610109, கீழப்படுகை – அஞ்சல், திருவாரூர் – வட்டம். பேச: 9842011244

No comments:

Post a Comment

Raagam Thaalam Pallavi - ராகம் தாளம் பல்லவி - Theerppugal Thiruththapadalaam

 Raagam Thaalam Pallavi  ராகம் தாளம் பல்லவி  Theerppugal Thiruththapadalaam Movie - Theerppugal Thiruththapadalaam Music - Shankar Ganesh S...