Monday, February 22, 2021
காசியப்பன்
தமிழில் குறிப்பிடத் தக்க எழுத்தாளர்களில் ஒருவரான காசியபன் (சொந்தப் பெயர் - டி.பி.குளத்து), தனது 85ஆவது வயதில் அண்மையில் காலமானார். தத்துவம், வரலாறு ஆகிய பாடங்களைக் கொண்டு பட்டம் பெற்ற அவர், பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் - 53ஆவது வயதிலேயே எழுதத் தொடங்கினார். இதுவரை "அசடு", "கிரகங்கள்", "வீழ்ந்தவர்கள்", "வியூகங்கள்" ஆகிய நாவல்களும் சிறுகதைத் தொகுப்பொன்றும், சிறிய கவிதைத் தொகுப்பொன்றும் நூல் வடிவில் வந்துள்ளன.
அசடு
அசடுகளை தினம் அல்லது ஒரு காலகட்டத்தின் எதாவது சந்தர்ப்பத்தில் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறோம். அவர்களின் சேட்டைகளை ரசிக்கிறோம். அவர்களின் உணர்வுகளை மதிப்பதாக பெருமை பேசி மகிழ்ச்சியடைகிறோம். என்ன காரியங்கள் செய்தாலும் அவர்களுடன் ஒப்பிட்டு பெருமிதம் கொள்கிறோம். ஒருவகையில் அவர்கள் நம் புறஉலகிற்கும், அகஉலகிற்கு தேவையாக இருக்கிறார்கள். அவர்கள் இல்லை என்றால் நாம் நம் வாழ்க்கையை நடத்தகூட முடியாது போலிருக்கிறது. ஆனால் நாம் உணர்வதை அசடுகள் பார்ப்பதில்லை. அவர்கள் தங்கள் உலகில் வாழ்கிறார்கள். வெற்றியோ தோல்வியோ எதுவானாலும் அவர்களுடனேயே அவர்கள் வாழ்கிறார்கள்.
என் ஊரில் ஒரு அசடு இருக்கிறார். அவருக்கு எல்லாமே தோல்விதான். ஒரு நாள் டீக்கடையில் டம்ளர் கழுவுவார், அடுத்த நாள் வேறுஒரு கடையில் தண்ணீர் சுமப்பார். ஊருக்கு போகும்போதெல்லாம் அவரை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறேன். எப்போது மாறாத புன்னகை. வாழ்க்கையின் பொருளாதார தோல்விகுறித்த எந்த கவலையும் அவருக்கு இல்லை. கிடைத்தால் சாப்பிடப்போகிறார் இல்லை என்றால் பசியில் எங்காவது படுத்து தூங்கப்போகிறார். அதற்காக தன்மானம் குறைக்கும் எந்த செயலையும் நாம் செய்துவிடமுடியாது.
காசியப்பன் எழுதிய அசடு என்கிற சின்ன நாவல் அந்த மாதிரியான ஒரு மனிதரைப்பற்றிய கதையை கொண்டுள்ளது. சின்ன நாவல் ஆனால் எல்லா விஷயங்களையும் உள்ளடக்கிய ஒருவரின் பிறப்பிலிருந்து அவரின் இறப்புவரை சொல்லக்கூடிய நாவல். அவரின் வாழ்க்கை குறித்த நோக்கம், தேடல் என்று எதுவும் பேசப்படவில்லை. வெறும் அவரின் செயல்களைக் குறித்து பேசுகிறது. அல்லது கதாசிரிய கதாப்பாத்திரம் அவரைப் பற்றி பேசுகிறது அவ்வளவுதான். நீல.பத்மநாபன் வகை தனக்கு தெரிந்த உலகம் மட்டுமே பேசும் நாவல்.
அசடு எனப்படும் கணேசன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரில் இருக்கிறார். அவருக்கு சொத்துகள் இருந்தும் அவற்றை வேறுஒருவருக்கு விட்டுவிட்டு ஊர் ஊராக செல்கிறார். கொஞ்ச நாள் கிராமத்தில் கடையில் வேலை செய்கிறார். பின் சென்னை சென்று அங்கு ஒரு சாப்பாட்டு கடையில் வேலை செய்கிறார். பின் புனே, பின் ஹைதராபாத் என்று அவருக்கு சொந்தங்கள் இருக்கும் ஊரெல்லாம் சென்று தங்குகிறார். வேலை செய்து வாழ்கிறார்.
எந்தவித பொறுப்பும், திறமையும் அற்ற அவருக்கு சொந்தங்கள் சேர்ந்து திருமணம் செய்கிறார்கள். மனைவி அவர்மேல் எந்த அன்பும் கொள்ளாமல் தாந்தோன்றிதனமாக இருக்கிறார். அவருக்கு தன்மேல் இருக்கும் அக்கறைதவிர பிறர் மேல்கூட இல்லை. அந்த இனிமை கொஞ்சநாள் இருந்ததும் மனைவியை விலகி மீண்டும் எப்போதும்போல ஊர்ஊராக திரிய ஆரம்பித்துவிடுகிறார். எதுவுமே சாதாரணமாக நடந்து முடிந்துவிடுவது அவர் வாழ்க்கையில் நடப்பதுபோல அவர் மரணமும் இளவயதிலேயே மிகச் சாதாரணமாக நடந்து முடிந்துவிடுகிறது.
முன்னும்பின்னுமாக கொஞ்சம் அங்கு கொஞ்சம் இங்கு என்று எந்த செயற்கையும் இல்லாமல் அழகாக சொல்லப்படுகிறது. அதற்கே ஆசிரியரைப் பாராட்டலாம். எழுபத்தெட்டில் எழுதப்பட்டாலும் இன்னும் புதுமையாக இருக்கிறது. நகுலன் போன்ற எழுத்தாளர்கள் இதை கொண்டாடியிருக்கிறார்கள். இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம்.
கணேசனின் உளசிக்கல்களை, அவரின் பார்வைகளை அவர் தன் மேல் சுமத்தப்படும் பட்டங்களை எப்படி பார்க்கிறார் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் இந்த சின்ன உலகை ஆசிரியர் காட்டிமுடித்ததுமே நமக்கு கற்பனையில் நாம் சந்தித்துள்ள அசடுகளைப் பற்றி யோசிக்க ஆரம்பித்து கற்பனையில் நமக்கு பிடித்த அசடுகளின் பார்வைகளை பார்த்துவிடுகிறோம். அதுவே ஆசிரியரின் வெற்றியாக கொள்ளவேண்டும்.
புத்தக அறிமுகம்
நூலாசிரியர்: காசியபன்
நாவல் யாரைப் பற்றியது?
வெற்றிகரமாகவும் சாமர்த்தியமா கவும் சமூகத்தில் கவுரவமாகவும் வாழ்வதுகுறித்துப் பல அறிவுரைகளும் முன்னுதாரணங்களும் எப்போதும் சொல்லப்பட்டுவருபவைதான். பெரும் பாலான மனிதர்கள், சமூகத்தில் நிலவும் பொதுநடை முறைகளுக்கு உட்பட்டு வாழ்ந்துவிட்டுப் போகிறார்கள். வாழ்நாள் முழுக்கத் திட்டமோ உத்தியோ சாமர்த்தியமோ இல்லாமல் விதிக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து வாழ்ந்து மறைபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் வெற்றிபெற்றால் அதிர்ஷ்டசாலி என்றும், தோல்வியடைந்தால் அசடு என்றும் அழைக்கப்படுகின்றனர்.
அப்படிப்பட்ட அசடு எனக் கருதப்படும் கணேசன் என்ற மனிதனின் கதை இது. வாழ்நாள் முழுவதும் ஓட்டல் பரிசாரகனாகவே வேலைபார்த்தவன். ஆனால், சாம்பார் வாளியைக் கூடக் கையாளத் தெரியாமல், சாப்பிட வருபவரிடம் வசை வாங்குபவன். லௌகீக சாமர்த்தியங்களுக்கு வெளியே எத்தனையோ அனுபவங்களையும் யாத்திரைகளையும் மேற்கொண்ட களங்கமற்ற கணேசன் ஒரு ஆலயத்தின் வாசலில் அநாதையாக இறந்துபோகிறான்.
நாவலின் சிறப்பம்சம் என்ன?
1978-ல் வெளிவந்த இப்படைப்பு, தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்றாக எழுத்தாளர்கள் சுந்தர ராமசாமி, நகுலன், வெங்கட் சாமிநாதன் போன்றோரால் பாராட்டப்பட்டது. இதை எழுதிய காசியபன் தனது 53 வயதில் தமிழில் எழுதத் தொடங்கினார். தமிழ் நாவல்களில் மறக்க முடியாத கதாபாத்திரங்களில் ஒன்று கணேசன்.
நாவல் பற்றி
எந்தச் சமூகம் தொடர்ந்து கணேசனை வெளியே தள்ளுகிறதோ அந்தச் சமூகத்தின் மதிப்புக்கும் மதிப்பின்மைக்குமான உரைகல் இந்தப் படைப்பு என்கிறார் நகுலன்.
அசடு, காசியபன்
வெளியீடு: விருட்சம்,
6/5, போஸ்டல் காலனி, முதல் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை- 33.
விலை: ரூ.60/- தொடர்புக்கு: 044- 24710610
காசியபனின் 'அசடு'
காசியபன் ஒரு அபூர்வ மனிதர். அபூர்வம் என்று நான் சொல்வதே நான் இப்போது எழுத வந்த சந்தர்ப்பத்தில் தான். சாதாரணமாக அவர் நம் எல்லோரையும் போலத்தான். ஆங்கிலம் தெரியும், எல்லாப் படித்தவர்களைப் போல. சமஸ்கிருதத்தில் நல்ல பாண்டித்யம். மலையாள தேசத்தில் படித்தாலும், தமிழை இரண்டாம் மொழியாக எடுத்துப் படித்தவர். இதில் எல்லாம் என்ன சிறப்பாக அபூர்வம் என்று எடுத்துச் சொல்ல இருக்கிறது?. ஓ அப்படியா! என்று கேட்டுவிட்டு நகரலாம். பரிச்சயம் ஏற்பட்டால் பவ்யத்தோடும் மரியாதையோடும் பழக அவரது ஆளுமை நம்மை நிர்ப்பந்திக்கும். ஆனால் அவர் தமிழ் எழுத்துலகில் அடி எடுத்து வைத்ததுதான் அபூர்வ மனிதராக அவரைக் காட்டுகிறது. தனது 53-வது வயதில் எழுதத் தொடங்கியவரை, சரஸ்வதியின் அருட் கடாட்சம் பெற்றவராகச் சொல்ல முடியாது. அவரது படிப்புத் தாகமும் பாண்டித்யமும் தான் சரஸ்வதியின் கடாட்சம். தமிழ் எழுத்துலகம் பந்தாக்கள் நிரம்பியது. தனது பதிமூன்றாவது வயதில் எழுதிய அலங்கார அலங்கோல வசனத்தையே தனது எண்பத்து நாலாவது வயதிலும் எழுதும் முத்தமிழ் வித்தகர்கள் கோலோச்சும் உலகம் இது. அந்தக் கோலுக்கு அதிகார பலம் உண்டு. அதிலிருந்து தொடங்கி கோமாளிகள் கட்டளைக்கு வசனம் எழுதி பல லட்சங்கள் பெற்ற பெருமையைக் கொண்டாடும் சுய கௌரவம் அற்றவர்கள் பவனி வரும் உலகம் இது. இடையில் குழுமியிருக்கும் சின்னதுகள் சிறுசுகள் அடிக்கும் கொட்டம் சகித்துக் கொள்ள முடியாது. சமீபத்தில் உலக நாயகனுக்கு ஒரு கவியரங்கம் நடந்தது. கவிகள் நாயகனின் புகழ் பாட, நாயகன் அவற்றை ஏற்றுத் தன் பங்குக்குக் கவிஞர்களின் புகழ் பாட, ஒரே ரகளை. எல்லோருமே அப்துல் ரஹ்மானின், வாலியின் க்ளோன்களாகவே உலாவத் தொடங்கியுள்ளது எப்படி?
எதற்காகச் சொன்னேன் என்றால், பந்தா இல்லாத தமிழ் எழுத்தாளரை மிக அபூர்வமாகத் தான் காணமுடியும் இங்கு. நம்மவர்களுக்கு அலட்டல் அதிகம். என்னென்னமோ இஸம் எல்லாம் இருப்பதாகச் சொல்வார்கள். என்னென்னமோ லத்தீன் அமெரிக்கப் பேர்களையெல்லாம் உதிர்ப்பார்கள். ஒரு காலத்தில் ஃப்ரெஞ்சுப் பெயர்கள் ஃபாஷனில் இருந்தது. இப்போது அந்த இஸமெல்லாம் போன இடம் தெரியவில்லை. நாமாக ஏன் நாம் இருக்கமுடிவதில்லை. நம்மை அறியாமலேயே, நாம் தம்பட்டம் அடிக்காமலேயே ஏன் நம் எழுத்துக்கள் ஏன் நம்மையும் மற்றவர்களையும் ஆச்சரியப்படுத்தவிடக்கூடாது?
காசியபன் அப்படியெல்லாம் ஏதும் தம்மைச் சுற்றி ஒளிவட்டம் சுழன்று ஒளிவீசுவதாக எண்ணிக் கொள்ளவில்லை. அப்படிச் சொல்லிக்கொள்ளும் ஆளுமை அல்ல அவரது. ஏதோ சகவாச தோஷத்தாலும், சமஸ்கிருத, தமிழ் இலக்கிய உலகில் தம் சிந்தை உலவியதாலும், சரி நாமும் நமக்குத் தெரிந்த, சுவாரஸ்யமான மனிதர்களையும் சம்பவங்களையும் சொல்லலாமே என்று எழுதத் தொடங்கியவர். அதுவும் எப்போது? தன் 53 வது வயதில். புகழ் பற்றிய எண்ணங்கள் இல்லை. சம்பாத்தியம் என்பது வெகு சில தமிழ் எழுத்தாளர்கள் ஆசையாகத் தான் இருக்க முடியும். தான் ஏதோ எழுதி விட்டதான கோதாக்களும் இல்லை. தனது எண்பத்து நாலாவதோ ஐந்தாவதோ வயதில் அவர் மறைந்த போது அவர் எழுதியது ஒன்றும் அதிகம் இல்லை. ஒரு சிறு கவிதைத் தொகுப்பும் நூறு நூற்றைம்பது பக்கங்களுக்கும் அடங்கும் நான்கு சிறிய நாவல்கள். இப்படித்தான் இருந்தது அவர் படைப்பு முழுதும்.
ஆனால் அவர் வாழ்ந்த இயங்கிய எழுத்தாளர் கூட்டம் திருவனந்தபுரத்தில் மிகச் சுறுசுறுப்பாக இயங்கிய கூட்டம். அந்த சுறுசுறுப்பு எத்தகையது என்பதை நகுலனின் எழுத்துக்களிலிருந்தும், நீல பத்மனாபனின் தேரோடும் வீதி புத்தகத்திலிருந்தும் தெரிந்து கொள்ளலாம். அந்தக் காற்று காசியபனின் மீது கொஞ்சம் ஆரம்ப காலத்தில் வீசியிருக்கக்கூடும். நிச்சயமாகச் சொல்வதற்கில்லை. ஆனால் அந்தக் கூட்டத்தில் யார் சொல்லி யார் என்ன செய்திருப்பார்கள் என்றும் ஒன்றும் நிச்சயமாகச் சொல்வதற்கில்லை. அப்படிச் சில உதிரிகள் காற்றில் பறந்து வந்தது எனக்குத் தெரியும். ஆனால் காசியபன் பெயரில் பிரசுரமாகியுள்ளவற்றில் எதுவும் அத்தகையது இல்லை.
அசடு நாவல் தாயில்லாப் பிள்ளை கணேசனைப் பற்றியது. கணேசன் தான் அந்த அசடு. ஆனால் அசடு என்று முழுவதுமாகச் சொல்லிவிட முடியாது. தாயை இழந்த குழந்தையை பாட்டி எடுத்து வளர்க்கிறாள். செல்லம் அதிகம். அவன் என்ன விஷமம் செய்தாலும் வசவும் அடியும் படுவது கூட இருக்கும் பிள்ளைகள். தாயில்லாப் பிள்ளையை ஒன்றும் சொல்லிவிடக்கூடாது. பாட்டி மாத்திரம் இல்லை. எல்லோருமே அப்படித்தான் எண்ணுகிறார்கள். படிப்பு எங்கிருந்து வரும்? படிக்கத் தோணுமா என்ன? 'படிப்பு வந்தாத்தானே?" என்று கணேசனே சொல்லும்படி தன்னைப் பற்றி ஒரு அபிப்ராயம் அவனுக்கு இருக்குமானால் அவனை அசடு என்று சொல்ல முடியுமா? இப்படித் தான் அவனது பல குணாதியசங்களும். பாட்டி இறந்து விடுகிறாள். கணேசனை யார் காப்பாற்றுவது என்று சர்ச்சை நடக்கிறது. கடைசியில் அவனது அப்பா கிட்டனிடமே விட்டுவிடுவது என்று தீர்மானமாகிறது. ஊரில் எப்போதும் மீன்பிடித்துக்கொண்டே காட்சி தரும் சம்முகம் கணேசனுக்கு புத்திமதி சொல்கிறான்: "போகிற இடத்தில் எல்லோருடனும் இணைஞ்சு இருக்கணும், தெரியுதா?" என்று. இதற்கிடையில் கிட்டன் இரண்டாவது கல்யாணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகளோடு இருக்கும் ஒரு முரட்டு ஆம்பிளை. கணேசனுக்கு அங்கு யாரிடமும் ஒட்டுதல் இல்லை. சித்தி என்றுமே மூத்தாள் பிள்ளைகளைக் கொடுமைப்படுத்துகிறவளாகத்தானே ஒரு சித்தரிப்பு உலகத்தின் கண்களில். அப்படி இல்லை அவள். இருப்பினும், கோள் சொல்லும் ஒரு அத்தைக்கும், கணேசனுக்கும் அந்த சித்தி அப்படித்தான். ஊர் முழுதும் சித்தியைப் பற்றிய ஒரு சித்திரம் பரவுவதற்கு அந்த அத்தை காரணமாகிறாள். கணேசனுக்கு எந்த ஒரு இடத்திலும் அதிக நாள் நிலை கொள்ளாது.
அவனுக்கும் ஏதோ சம்பாத்தியம் வேணுமே, ஏதாகிலும் தொழில் தெரியணுமே, எங்கெங்கோ கடைகளில் சொல்லி உதவியாளாக இருக்கச் சொன்னால், வேலைக்கு வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் கடை வாடிக்கைக்காரர்களுக்கும் உபத்திரவமாக இருந்தால் யார் வைத்துக்கொள்வார்கள்? எங்கும் நிலையாக இருக்க முடிவதில்லை. கோபம் நிறைய பகவான் அருளியிருக்கிறார். மாமாவும், மாணிக்கச் சித்தப்பாவும், இன்னும் ஆண்டி அய்யரும் சொன்னது போல பக்தி அதிகம். தேவதாவிஸ்வாசம். இது எப்படி நேர்கிறது? ஒரு நேர்மைக் குணம். ஒரு ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு போனால், அது எப்போதாவது இரண்டு ரூபாயாக மணிஆர்டரில் திரும்ப வரும். வருஷங்கள் கழியும். எங்கெங்கோ காசி அது இது என்று வடக்கேயெல்லாம் தீர்த்த யாத்திரை நடக்கிறது. கிழக்குக் கோபுர வாசலில் சிவனே என்று அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தவனிடம் இரக்கம் ஏற்படுகிறது ஆண்டி அய்யருக்கு. தன் ஹோட்டலில் வேலைக்கு வைத்துக் கொள்கிறார். ஒரு கட்டத்துக்கு மேல் "நீ சும்மா இருந்தால் போறும். ஓண்ணும் வேலை செய்யவேண்டாம்" என்று சொல்லும் அளவுக்கு அவருக்கு அவனிடம் அபிமானம். ஆனால் கணேசனா கேட்பான். ஓடி விடுவான். பின் திரும்ப ஆண்டி அய்யரிடம் வருவான். எத்தனையோ வருஷம் கழித்துத் தன்னைப் பார்க்க வந்த தன் அப்பாவைப் பார்த்து, "இங்கே எங்கே வந்தீர் ஓய்?" என்று கேட்கும் பிள்ளை அவன். தன் தம்பியிடம் பாசம். அவனுக்குக் கல்யாணம் செய்து வைப்பது என்று மாணிக்கச் சித்தப்பா தீர்மானிக்கிறார். கணேசனிடம் நிறைந்த அபிமானம் கொண்ட ஆண்டி அய்யரே, " அவனுக்குத் தன்னைக் காப்பாத்திக்கவே தெரியலை. இன்னொரு ஜீவனையும் அவனோடு சேர்த்து கஷ்டப்படுத்தவா?" என்று அபிப்ராயப்படுகிறார். கணேசனுக்கும் கொஞ்சம் ஆசை இருப்பது போலத்தான் தொன்றுகிறது. கடைசியில் அவனுக்கு மாணிக்கச் சித்தப்பாவின் தூரத்து உறவுப் பெண்ணைக் கல்யாணம் செய்து வைக்கிறார்கள். பின்னால் தான் தெரிகிறது, அந்த பெண்ணும் சரி, அவளுடைய அம்மாவும் சரி ஒரு மாதிரி என்று. கணேசனுக்கு இதைப் பொறுத்துக் கொள்ளத் தெரிகிறது. ஏதோ பலகாரம் செய்து தெருத் தெருவாக சுத்தி விற்று மாலையில் வீடு திரும்பும் பிழைப்பு. குழந்தைகள் பிறக்கின்றன. ஒரு நாள் அந்தப் பெண் வேறு யாரோடோ ஓடிப் போய்விடுகிறாள், குழந்தைகளோடு. கணேசனுக்கு இது ஒன்றும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. எப்போதாவது தம்பியைப் பார்க்க வருவான். குழந்தைகளோடு குழந்தையாக விளையாடிக்கொண்டிருப்பான். அவர்களுக்கு பூந்தானை நம்பூதிரியின் 'ஞானப்பானை" பாடல் புத்தகத்திலிருந்து குழந்தைகளோடு சேர்ந்து பக்திப் பரவசத்தோடு பாடுவான். "நான் போன ஜன்மத்திலே நிறைய பாவம் செய்திருக்கிறேன்,. அதனால் தான் கஷ்டப்படுகிறேன்" என்று குழந்தைகளுக்கு உபதேசம் செய்வான். பிறகு ஒரு நாள் "எத்தனை நாள் தான் இங்கே இருக்கிறது?" என்று சொல்லிக்கொண்டு போய்விடுவான். எங்கெங்கோ பார்த்ததாக செய்திகள் வரும். ஒரு நாள் "உனக்குத் தெரியாதா? அவன் போய்ச் சேர்ந்துட்டான்" என்று தகவல் வருகிறது.
கணேசனும் சரி, அவன் தம்பியும் சரி, கிட்டன், பாட்டி, மாணிக்கச் சித்தப்பா, ஆண்டி அய்யர் இப்படி எத்தனையோ பேரை சந்திக்கிறோம். யாரும் விசித்திரமானவர்கள் இல்லை. நாம் அன்றாடம் தோளுரசிச் செல்லக் காண்பவர்கள் தான். இப்படி ஒரு உலகை, மனிதர்களைக் காசியபனால் எழுத்தில் உருவாக்கிக் காட்டி விட முடிகிறது. எண்பது சொச்சம் வருடங்கள் வாழ்ந்தவர், பல மொழிகளில் பரிச்சயமும் பாண்டித்யமும் உள்ளவர், தான் பார்த்த அனுபவித்த உலகை நம் முன் வைக்கிறார். திண்ணையில் உட்கார்ந்து கொண்டு தன் பழங்காலத்தைச் சொல்லும் தாத்தாக்களின் வாய்மொழி மரபு, அல்லது சாயங்காலம் கூடத்தில் கால்நீட்டி பேரப்பிள்ளைகள் சூழக் கதை சொல்லும் பாட்டிகளின் வாய்மொழி மரபு தான் இங்கு காசியபனின் எழுத்தில் தொடர்ந்துள்ளது. சுவாரஸ்யமாகப் படிக்க முடிகிறது. நல்ல எழுத்து. கடைசி வரையில் இலக்கியப் புகழ் வேண்டும், பரிசுகள் வேண்டும் என்ற தமிழ் எழுத்தாள ஆசைகள் அவருக்கு இருந்ததில்லை. 1978-ல் முதலில் பிரசுரமான இந்த நாவலை விருட்சம் இரண்டாம் பதிப்பாக 1994-ல் வெளியிட்டது. இப்போது 2007-08 ல் மறு பதிப்பு கொண்டு வர அழகிய சிங்கருக்கு ஆசை. இது ஏதோ அமர காவியம் என்றோ, அல்லது சுஜாதா, பால குமாரன் போல் மார்க்கெட்டில் இதற்கு டிமாண்ட் இருக்கிறது என்றோ இல்லை. காசியபனிடம் அழகிய சிங்கருக்கு ஒரு ஒட்டுதல். அவர் இல்லை. திரும்ப இதை வெளியிடவேண்டும் என்று அழகிய சிங்கருக்கு ஏதோ காசியபனுக்குத் தாம் கடமைப் பட்டுள்ளது போல் ஒரு எண்ணம். பந்தா இல்லாத படாடோபம் இல்லாத ஒரு எழுத்தை, முப்பது வருடங்களுக்குப் பின்னும் சுவாரஸ்யத்தோடு படிக்க முடிகிறது. அதில் உலவும் மனிதர்களோடு பரிச்சயம் கொள்ள முடிகிறது. அதுவே காசியபனின் எழுத்துக்கு ஒரு வெற்றி. அபூர்வ மனிதர் தான்.
சிதறி வீழ்ந்த நட்சத்திரம்.
காசியபனின் அசடு தமிழ் நாவல்களில் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. இந்த நாவல் 1978ல் வெளியானது. பதினைந்து வருசத்தின் பிறகு இதன் மறுபதிப்பு 1994ம் ஆண்டு விருட்சம் பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்டது இப்பதிப்பிற்கு முன்னுரை எழுதியிருக்கிறார் நகுலன்.
காசியபன் என்ற புனைபெயர் கொண்ட குளத்து 53வது வயதில் தான் எழுத துவங்கினார். அவரது முகமது கதைகள் கணையாழில் வெளியாகி பரந்த வாசகர் கவனத்தைப் பெற்றது. முகமது என்ற ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் பல்வேறு கதைகளில் தோன்றிமறைவது முன்னோடியான இலக்கிய முயற்சி. அவரது முதல் நாவல் அசடு.
காசியபனின் தேர்ந்த எழுத்துமுறை நாவலின் கதை சொல்லலை உன்னதமாக்கியிருக்கிறது. 123 பக்கத்திற்கு இது ஒரு மனிதனின் வாழ்க்கை முழுமையாக விவரிக்கிறது. கணேசன் என்ற அந்த ஹோட்டல் பணியாளன் வாழ்வில் தோற்று போனவன். ஆனால் அது குறித்து அவனிடம் அதிக புகார்கள் இல்லை. அவன் கயிறு அறுபட்ட பட்டம் போல காற்று கொண்டு செல்லும் திசையெல்லாம் அலைந்து திரிகிறான். பிரம்மாண்டமான நாவல்கள் தரும் மனவெழுச்சிக்கு சற்றும் குறைவில்லாதது அசடு. ஒருவகையில் அசடு நாவலில் வரும் கணேசன் காம்யூவின் அந்நியன் நாவலில் வரும் மெர்சோவிற்கு நிகரானவன். இருப்பு தான் இருவரது தடுமாற்றம். தத்தளிப்பு.
காசியபன் அதிகம் கவனம் பெறாமலே போய்விட்ட மிக சிறந்த எழுத்தாளர். திருவனந்தபுரத்தில் வசித்த அவர் தத்துவம் படித்தவர். எல்.ஐ.சியில் பணியாற்றியவர். சில வருசங்கள் மதுரையில் வேலை செய்திருக்கிறார். பிறகு கேரளாவில். ஆரம்ப கல்வியை கேரளாவில் படித்தால் மலையாளம் மிக நன்றாக வரும். அத்துடன் வடமொழி, ஆங்கிலம் இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர். டால்ஸ்டாய், டாஸ்டாயெவ்ஸ்கி துவங்கி பன்னாட்டு இலக்கியங்களை ஆழ்ந்து படித்து தெளிவுற்றவர். தமிழில் அவர் மிகவும் விரும்பி படித்த இருவர் மௌனியும் க.நா.சுவும். பேசாத மரங்கள் என்ற கவிதை தொகுதியும் கிரகங்கள், வீழ்ந்தவர்கள் இவரது பிற நாவல்கள்.
கணேசனைப் பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதாயின் அவன் சாமர்த்தியமற்றவன். அதனால் அசடாக கருதபடுகிறான். சாமர்த்தியம் என்ற சொல்லின் உள்ளே திறமை என்பதையை தாண்டிய தந்திரம் ஒன்று உள்ளது. அதை உருவாக்கிக் கொள்வதன் வழியே வாழ்வில் வெற்றியை அடைவதே பெரும்பான்மையினரின் குறிக்கோள். அதில் பலர் வெற்றி பெறுகிறார்கள். பலர் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கணேசன் சாமர்த்தியத்தை கற்றுக் கொள்ளவேயில்லை. கவனமாக விலக்கிப் போகிறான்.
அவன் வாழ்வைப் பரிகசிக்கிறான். அதனிடமிருந்து எதையும் அவன் யாசிக்கவில்லை. பல நேரங்களில் தெரிந்தே தோற்றுப்போகிறான். அதற்கு நிறைய மனத்துணிச்சல் வேண்டும். மற்றொன்று வாழ்வை கண்டு பயங்கொள்ளாத போராட்ட குணம் வேண்டும். இரண்டும் அவனிடமிருக்கிறது.
அதை அவன் தனது லௌகீக வாழ்க்கைக்கு உரியதாக மாற்றிக் கொள்ளவில்லை. அதற்கான எத்தனிப்பே அவனிடம் இல்லை. அந்த வகையில் அவன் ஒரு துறவி. ஆனால் வாழ்க்கை நெருக்கடிக்களுக்குள்ளாகவே அவன் தன் துறவுத்தன்மையை அடைந்துவிட்டான். அதை ஒரு போதும் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.
கணேசனின் கதையை அவன் மறைவிற்கு பிறகு அவனது ஒன்றுவிட்ட தம்பி சொல்வது போலவே நாவல் துவங்குகிறது. நாவலின் இந்தக் கதை சொல்லும் முறை இடைவெட்டாக கணேசன் வாழ்க்கையையும் கதை சொல்லியின் வாழ்க்கையும் ஒன்று கலக்கிறது. சுயசரிதைத் தன்மை மிக்க கதை போல தெரிந்தாலும் புனைவின் வழியே இந்த சுயசரிதை தன்மை தொடர்ந்து கலைக்கபடுகிறது.
கணேசன் சிறுவயதில் அம்மாவை இழந்தவன். அப்பா மறுமணம் செய்து கொண்டதால் பாட்டி வீட்டிற்கு வந்துவிடுகிறான். பாட்டிக்கு அவன் தாயில்லாத பிள்ளை என்று செல்லம். கணேசனுக்கு படிப்பில் ஆர்வமில்லை. ஆற்றில் குளிப்பதும் மணலில் விளையாடுவதும் தான் விருப்பம். அவன் மீன்பிடிக்கும் சிறுவர்களுடன் நட்பாக பழகுகிறான். அவன் மீது பாட்டிக்கு சொல்லமுடியாத ப்ரியம். அது ஏன் என்று எவருக்குமே புரியவில்லை. அவனது தாத்தா அவனுக்கு பூணூல் கல்யாணம் செய்து அழகு பார்க்கிறார். பாட்டியின் எதிர்பாராத மரணம் அவனை நிர்கதி ஆக்குகிறது. அவன் வேறுவழியில்லாமல் அப்பா வீட்டிற்கு போகிறான்.
அங்கே சித்தி அவனை மிகவும் பாரபட்சமாக நடத்துகிறாள். சித்தி பிள்ளைகள் அவனோடு ஒட்டுவதேயில்லை. ஆனால் அதை ஒரு போதும் கணேசன் குற்றம் சொல்வதேயில்லை. ஒரு நாள் வீட்டை விட்டு ஒடத்துவங்குகிறான். அந்த ஒட்டம் அவன் சாவு வரை நிற்கவேயில்லை. அவனுக்கு தான் என்ன செய்து பிழைப்பது என்று தெரியவில்லை.
காசி துவங்கி கல்கத்தா. ஹைதராபாத், பூனா என்று எங்கெங்கோ அலைந்து ஹோட்டல்களில் வேலை செய்கிறான். சில நாட்கள் ஒரு இரும்பு சாமான் செய்யும் பட்டறையில் வேலை பார்க்கிறான். சில வாரம் ஜவுளிக்கடை வேலை. ஆனால் எதிலும் இருப்பு கொள்ளமுடியவில்லை. அவனது சுபாவம் அப்படி. அவனுக்கு முதுகுவளைந்து வேலை செய்யத் தெரியாது. யாரிடமும் இணக்கமாக பேசவும் தெரியாது. ஹோட்டலுக்கு சாப்பிட வந்தவர்களை இஷ்டமானால் சாப்பிடு இல்லாவிட்டால் எழுந்து போய்விடு என்று கத்துவான்.
ஆனால் அவனை ஹோட்டல் ஊழியர்கள் துவங்கி ரிக்ஷாகாரர்கள், பிச்சைகார்கள், இரவுகாவலாளிகள். சாலையோர கடைவைத்திருப்பவர் என்று பலருக்கும் பிடித்திருக்கிறது. அவன் மீது அன்பாக இருக்கிறார்கள். அவன் கஷ்டமான நேரங்களில் தம்பிக்கு கடிதம் எழுதி பணம் கேட்கிறான். அதை மறக்காமல் உடனே திருப்பியும் அனுப்பிவிடுகிறான். இப்படியாக தோற்றுக்கொண்டே போய் முடிவில் அவன் மதுரைக்கு வந்து சேர்கிறான்
மதுரையின் மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றிய வீதிகள், அழகர் திருவிழா, மதுரையின் சிறிய சந்துகள், உணவகங்கள் என்று நாவல் விவரிக்கும் மதுரையின் சித்திரம் அற்புதமானது. காசியபன் நகரின் சித்திரங்களை கோட்டோவியம் போல உயிருள்ளதாக வரைந்து காட்டுகிறார். நாவலின் மையப்படிமம் போல மதுரை நகரம் வருகிறது. அதிலும் அங்குள்ள சைவ உணவகங்கள் அதை நடத்தும் பாலக்காட்டு ஐயர்கள். அங்கு வேலைக்கு வந்துள்ள மலையாளிகள் என்று மதுரைக்கு பிழைக்க வந்த எளிய மனிதர்களை நாவல் மிக அழகாக சுட்டிக்காட்டுகிறது
பிழைப்பதற்காக கோவலனே மதுரைக்கு வந்து சேர்ந்திருக்கிறான். அந்த வழியில் நானும் வந்துவிட்டேன் என்று சொல்லும் கணேசன், கல்பாத்தி ஆண்டி ஐயர் ஹோட்டலில் வேலைக்கு சேர்த்து கொள்கிறான். அது கூட அவனாக கேட்டு பெறவில்லை. அவனது கோலத்தை கண்ட ஐயர் அவராகவே கடையில் வேலைக்கு சேர்த்து கொள்கிறார். அவனால் அந்த கடை வேலையை ஒழுங்காக செய்ய முடியவில்லை. ஆனாலும் அவன் மேல் உள்ள ப்ரியத்தால் அவனை கடையில் வைத்திருக்கிறார் ஐயர்.
பல வருசத்திற்குப் பிறகு ஒரு நாள் அவனது அப்பா பிச்சைகார கோலத்தில் வந்து சேர்கிறார். தம்பி வீட்டில் இருப்பதை அறிந்து அவரை பார்க்க போகிறான் கணேசன். அப்போது கணேசனும் அவனது அப்பாவும் பேசிக் கொள்ளும் இடம் வருகிறது. தமிழ் நாவல்களில் இவ்வளவு கச்சிதமாக, பரஸ்பர மனவெறுப்பை உமிழும் காட்சி வேறு எதையும் வாசித்தேயில்லை.
பிச்சைகாரன் போல மெலிந்து ஆளே உருக்குலைந்து போய் நிற்கும் அப்பாவிடம் கணேசன் கேட்கும் முதல்கேள்வியே எங்கே வந்தீர் ஒய் என்பதே. அவர் தயக்கத்துடன உன்னையெல்லாம் பாத்துட்டு போகலாம்னு தான் என்கிறார். உடனே கணேசன் என்னை உனக்கு என்ன பார்வை ஒய், உங்க பிள்ளை சுப்புடு தானே என்கிறான். அவர் உடனே நீரும் பிள்ளை தானே .உன்னை பார்க்கபடாதா என்று ஆதங்கபடுகிறார். ஊர்ல போய் என்ன பண்ண போறீர் அங்கே யாரு இருக்கா. எங்கே தங்குவீர் என்று கேட்க அவர் உறவினர்கள தன்னைக் கவனித்து கொள்வார்கள் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார். உடனே பட்டால் தான் பாப்பானுக்கு புத்திவரும். போய் பாரும் என்று எகத்தாளமாக பதில் தருகிறான் கணேசன்.
இருவருமே கடந்தகால கசப்பின் சுவையை மறக்க முடியவில்லை. ஆனால் இவ்வளவு கடுமை கொண்ட கணேசன் அப்பாவை மீனாட்சி தரிசனத்திற்காக கோவிலுக்கு கூட்டிப் போகிறான். திரும்பி வரும் போது அவருக்கு புதுவேஷ்டியும் ஒரு டிரங் பெட்டியும் வாங்கித் தருகிறான். பிறகு தம்பியிடம் ஆதங்கமாக சொல்கிறான்
சினேகமா இருக்க வேண்டிய வயசிலே நானும் சினேகமாக இருக்கிலே அவரும் இருக்கிலே. நான் ஒரு விதமா திண்டாடுறேன். அவர் வேறு ஒரு விதமாக என்று குறிப்பிடுகிறான்.
இந்த வாசகம் போன்ற ஒன்றையே தஸ்தாயெவ்ஸ்கி அவரது அப்பாவைப் பற்றியும் குறிப்பிடுகிறார். கரமசோவ் சகோதர்களில் வரும் தகப்பன் கரசோவ் போலவே இந்த அப்பா கதாபாத்திரம் இருக்கிறது. அல்யோஷா போலவே கணேசன் இருக்கிறான். அவனது அண்ணன் இவானை நினைவுபடுத்துகிறான்.
கணேசன் மணந்து கொள்ளும் பெண்ணான சாவித்ரி கூட குருஷ்கா என்ற பெண் கதாபாத்திரத்தின் சாயலில் தான் இருக்கிறாள். இது ஒப்பீடு அல்ல. மாறாக இந்த கதாபாத்திரங்கள் மனதில் உடனே தஸ்தாயெவ்ஸ்கியின் கதாபாத்திரங்களை நினைவுபடுத்துகிறார்கள். காசியபன் தஸ்தாயெவ்ஸ்கி மீது தீவிரமான ஈடுபாடு கொண்டவர்
அசடு நாவலில் அவரது அப்பா பிச்சைகார கோலத்தில் வந்து நிற்கும் போது ஒரு ஆளின் சிரிப்பை வைத்து அவர் யார் என்று கண்டுபிடித்து விடலாம் என்ற தஸ்தாயெவ்ஸ்கியின் வரி மேற்கோளாக காட்டப்படுகிறது. அல்யோஷாவிற்கு இருப்பது போன்றே கணேசனுக்கும் ஆழமான இறைநம்பிக்கையிருக்கிறது. அது அன்பிலிருந்து உருவாவது. அவன் வாழ்வில் தோற்று நசிந்து போன நிலையில் ஞானப்பானை என்ற வேதாந்த நூலை விருப்பத்துடன் படிக்கிறான்.
கணேசனின் செய்கை பலநேரங்களில் தஸ்தாயெவ்ஸ்கியின் வேறுவேறு கதாநாயகர்களை நினைவுபடுத்துகிறது. தஸ்தாயெவ்ஸ்கியின் நாயகர்கள் தனது வீழ்ச்சிக்கு காரணமாக தன்னையன்றி வேறு ஒருவரையும் ஒருபோதும் நினைப்பதேயில்லை. அது போலவே உலகின் மீதான தன்னுடைய ஈர்ப்பையும் நம்பிக்கையையும் அவர்கள் கைவிடுவதுமில்லை. கணேசன் அது போன்ற ஒரு கதாபாத்திரமே.
அவனுக்கும் தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கைக்கு நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. இருவரும் அப்பாவின் அன்பிற்காக ஏங்குபவர்கள். அப்பாவின் அன்பு கிடைக்காமல் இறந்து போன அம்மாவைப் பற்றி நினைத்து கொள்பவர்கள். சொந்த சகோதர்கள் மீது அன்பு கொள்ள முடியவில்லையே என்று கசிந்து அழுபவர்கள். தன்னைக் காதலிக்கும் பெண் தன்னை ஏமாற்றிய போதும் அவளை விட்டுப் பிரிய முடியாமல் வேதனை கொள்கிறவர்கள். இப்படி நிறைய ஒற்றுமைகள்.
ஆனால் தஸ்தாயெவ்ஸ்கியின் நாயகர்களுக்கு வரும் மனக்கொந்தளிப்பு கணேசனிடம் இல்லை. அவன் தனது இடையுறாத பயணத்தின் வழியே தன் இருப்பு வெறும் நீர்குமிழ்மட்டுமே. அது அழுகு காட்டி அழிந்துவிடக்கூடியது என்பதை அறிந்து கொண்டிருக்கிறான். ஒருவகையில் அவனது இலக்கற்ற பயணம் அவனை ஆறுதல் படுத்துகிறது. முன்அறியாத மனிதர்களை அவன் நேசிக்கிறான். அவர்களும் கணேசனை நேசிக்கிறார்கள். ஆனால் தன்னை எவராவது பராமரிக்க துவங்கும் போது அது கணேசனை அமுக்க துவங்கிவிடுகிறது. அதிலிருந்து தப்பி வெளியேறி ஒடுகிறான்.
நாவலின் துவக்க பகுதியில் சாலையில் செத்து நாறிக் கொண்டிருக்கும் எலியின் சித்திரம் ஒன்று இடம் பெறுகிறது. வாகனங்களைக் கடந்து ஒடிய எலி ஒன்றை காகங்கள் ஒன்று சேர்ந்து கொத்தி கொத்தி உடலை துண்டாக்குகின்றன. முடிவில் எலி தோலும் சதையுமாக பியந்து தெருவில் நாறிக்கிடக்கிறது. கடந்த காலத்தில் எலி தன்னால் ஆன மட்டும் ஆட்டங்களை ஆடியிருக்க கூடும். நிறைய திருட்டுதனங்களைக் செய்திருக்க கூடும். சாவின் முன்னால் அதன் கடந்த காலம் அர்த்தமற்று போய்விடுகிறது என்ற குறிப்பு வருகிறது. அந்த எலி தான் கணேசன். அவன் வாழ்க்கை காகங்கள் துரத்தி கொல்லும் எலியை போன்றதே. ஒரு இடத்தில் கணேசனே அதையும் சொல்கிறான்.
வாழ்க்கையில் நாம் செய்யும் அத்தனை பாவங்களும் ஆட்டபாட்டங்களும் செத்தபிறகு நம்மோடு மறைந்துவிடுகின்றன என்று. அவனது வேதாந்தம் படிப்பில் உருவானதில்லை. மாறாக வாழ்க்கை அவனுக்கு கற்று தருகிறது.
ஒரு இடத்திலும் வேர்விட முடியாத அவனுக்கு திருமணம்பேசி முடிக்கபடுகிறது. கல்யாண நாளிலே பெண்ணின் குடும்பம் மிக மோசமானது என்று எச்சரிக்கிறார் கல்பாத்தி ஆண்டி ஐயர். கணேசன் அதை பெரிதாக எண்ணவில்லை. திருமணமாகி கிராமத்திலே ஹோட்டல் நடத்துகிறான். அவனுக்கு குழந்தை பிறக்கிறது. அதைப்பற்றி கேட்கும் தம்பியிடம் கல்யாணம் பண்ணிகிட்டா எது நடந்தாலும் நடக்காட்டியும் குழந்தை பெறந்துவிடும். அதில் சந்தோஷப்பட என்னயிருக்கிறது என்கிறான். தன் மனைவிக்கு அடுத்த ஆண்களுடன் கள்ளஉறவு இருக்கிறது என்று தெரிந்தும் அவள் மீது பாசம் காட்டுகிறான். காமம் அவனை அவள் முன்பாக மண்டியிட செய்கிறது. அதற்காக அவனே மன வருத்தம் கொள்கிறான்.
பிறகு மனைவியை அழைத்து கொண்டு வந்து மதுரையிலே ஹோட்டல் பணியாளராக வேலை செய்கிறான். அங்கும் மனைவியின் கள்ளஉறவு தொடர்கிறது. அதை சகித்து கொள்ள முடியவில்லை. ஹோட்டல் வேலையை விட்டு வீடு மாற்றுகிறான். மனைவி போட்டு தரும் இட்லி வடை பஜ்ஜிகளை தெரு தெருவாக கூவி விற்கிறான். அந்த வேலையும் நிலைபெறவில்லை.
அவனால் தன்னை சுகமாக வாழ வைக்க முடியாது என்று ஒரு நாள் மனைவி வேறு ஒரு ஆளோடு ஒடிப்போய்விடுகிறாள். இனிமேல் வாழ்வில் என்னபிடிப்பு இருக்கிறது என்று கணேசன் தனியே வாழ ஆரம்பிக்கிறான். சில நாட்களில் திரும்பவும் கல்கத்தாவிற்கு போய்விடுகிறான். அங்கிருந்து காசி பூனா என்று சுற்றியலைகிறான். உடல்நலமற்று வீழ்கிறான். கவனிப்பார் யாருமில்லாத மனத்துயர் அவனைப் பற்றிக் கொள்கிறது.
வயோதிக தோற்றம் போலாகி ஒரு நாள் கொச்சியில் வசிக்கும் தம்பியை தேடி வருகிறான். அந்தக் கோலத்தில் கணேசனை காண தம்பிக்கு மனம் பதறுகிறது. வீட்டிலே தங்க வைக்கிறான். தம்பி பிள்ளைகளுக்கு கணேசனை ரொம்பவும் பிடித்துபோய்விடுகிறது. அவர்கள் வீட்டிலே சில காலம் இருக்கிறான். பிறகு ஒரு நாள் தான் ஊருக்கு போவதாக பணம் வாங்கி கொண்டு உள்ளுரிலே சுற்றியலைகிறான். அவனது மனதை ஒருவரும் புரிந்து கொள்ள முடியவேயில்லை. கடைசியாக மதுரைக்கு வருகிறான். கடைநிலைமனிதர்களுடன் ஒன்று சேர்ந்து அலைகிறான். கிடைத்தை சாப்பிடுகிறான். தன்னை அழித்து கொள்ள துவங்குகிறான்.
ஒரு நாள் நோய் முற்றிய நிலையில் ஆண்டி ஐயர் கடைக்கு போகிறான். அவனை மருத்துவமனைக்கு கொண்டு போய் சிகிட்சை செய்கிறார்கள். குணமாகி வெளிவந்து சில நாட்கள் கல்யாண வீடுகளுக்கு சமையல் வேலை செய்ய போகிறான்.
பின்னொரு நாளிரவு அவன் ஒரு கடையின் வெளியே அரைவேஷ்டியை போர்த்திக் கொண்டு உறங்குவதுபோல செத்துகிடக்கிறான். ஆண்டி ஐயரே அவனை தூக்கி கொண்டு போய் தத்தனேரி மயானத்தில் காரியம் செய்கிறார். கோவலனை போன்ற துர்மரணம் தான் இதுவும். ஆனால் கணேசனுக்காக அழுவதற்கு யாருமேயில்லை.
அவன் வாழ்வின் கசப்பை முழுமையாக குடித்து களிம்பேறியிருந்தான். இந்த மரணம் கூட ஒரு வருசத்தின் பிறகு தற்செயலாக குருவாயூர் கோவிலில் வைத்து கணேசனின் தம்பிக்கு ஆண்டி ஐயரின் மருமகன் வழியாக நினைவு கொள்ள படுகிறது
தன்னுடைய அப்பா இறந்து போனதை நாலைந்து மாதம் கழிந்து சந்தோஷமாக வந்து கணேசன் சொல்வது போன்ற ஒரு காட்சி நாவலில் உள்ளது. அவன் வாழ்வும் அப்படியே முடிந்து போய்விடுகிறது. அவனை நினைவு கொள்ளும் ஆண்டி ஐயரின் மருமகன் பாவம் நல்லவன் என்கிறான். கணேசன் தன் வாழ்நாளில் சம்பாத்தித்து அது மட்டுமே.
நாவலின் இடைவெட்டாக காயங்குளம் என்ற சித்தபிரமை கொண்ட ஒருவன பாடிக் கொண்டேயிருக்கிறான்.அவன் பாடல் வாழ்க்கை வெறும் மாயை என்று திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டேயிருக்கிறது. நாவல் அந்த பாடலை முடிவிலும் நினைவு கொள்ள வைக்கிறது
அசடு நாவலின் தனித்துவத்திற்கு முக்கிய காரணம் அதை சொல்ல வந்த காசியபன் கணேசனை அவனது இயல்பான பலவீனங்களுடன் உருவாக்கியது. மற்றொன்று அவன் எங்கும் எதையும் போதிப்பதில்லை. அவன் தனது பாடுகளை நேரடியாக எதிர்கொள்கிறான். வேதனைபட்டு கடந்து போகிறான். வாசிக்கும் நாம் கணேசனுக்காக கண்ணீர் விடுகிறோம். நாவலை வாசித்து முடிக்கும் போது வாசகன் அடையும் துயரம் ஆழ்ந்த வடு போன்று என்றும் உடனிருக்க கூடியது.
காசியபனின் சிறப்பு அவர் எழுத்தில் உருவாகும் மெல்லிய கேலியான தொனி , அது அற்புதமானது .இதே கேலியை நகுலனிடம் கவனித்திருக்கிறேன். ஆ. மாதவனிடம் கூட இருக்கிறது. காசியபனிடம் அது சற்று தூக்கலாகவே இருக்கிறது. ஒருவேளை அது திருவனந்தபுரத்தின் விசேச இயல்புகளில் ஒன்றாக இக்கேலி இருக்ககூடுமோ என்றும் தோன்றியது. கணேசனை பற்றி விவரிக்கும் போது அவர் தேர்வு செய்யும் சொற்களும் விவரணையும் விசேசமானவை. அதுபோலவே உரையாடல்கள் நாவல் முழுவதும் சிறப்பாக கையாளப்பட்டிருக்கின்றன.
நாவல் மூன்று காலகட்டங்களை விரிவாக விவரிக்கிறது. ஒன்று கணேசனின் பால்யகாலம். அங்கே கணேசன் செல்லபிள்ளை.அவனை சுற்றி நடக்கும் உலகை அவன் புரிந்து கொள்வதேயில்லை. மாறாக அதன் செழுமைக்கு தன்னை ஒப்படைத்து கொள்கிறான். அவனை பார்த்து மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள். விதவிதமான சாப்பிடுகிறான். ஊர் சுற்றுகிறான். எதையும் பயமின்றி செய்து பார்க்கிறான்.
இரண்டாம் நிலை அவனது அலைச்சல்மிக்க வாலிப வயது. எந்த வேலையும் செய்ய லாயக்கிலாதவன் ஹோட்டலில் சர்வராகிவிடுவான் என்று ஒரு இடத்தில் அவனே குறிப்பிடுகிறான். அவன் இந்தியா முழுவதும் சுற்றிவருகிறான். பசித்த மனிதர்களை பார்த்தபடியே இருக்கிறான். பசி மனிதனின் இயல்பை மாற்றிவிடுவதை அவன் கண்கூடாக காண்கிறான். அந்த பாடம் அவனுக்கு வாழ்க்கையின் மீது பற்றற்ற மனநிலையை உருவாக்கிவிடுகிறது. எதற்காக தான் வேலையை விட்டு போகிறேன் என்று அவன் ஒரு போதும் சொல்வதேயில்லை. அவனால் எங்கும் தேங்கிவிட முடியாது என்றே சொல்கிறது.
ஆற்றோடு வளர்ந்தவன் என்பாதல் அந்த குணம் வந்துவிட்டதோ என்றும் தோன்றுகிறது. அவன் ஒடிக் கொண்டேயிருக்கிறான். யாரும் அவனை துரத்தவில்லை. ஆனால்ஒடிக் கொண்டேயிருக்கிறான். அந்த ஒட்டம் அவனை பல இடங்களில் காலைவாறிவிடுகிறது. அவனாக விரும்பி சில இடங்களில் ஒய்வு கொள்கிறான்.
அவனால் மனிதர்களை அவர்களது சகல பலவீனங்களுடன் ரசிக்கவும் புரிந்து கொள்ளவும் முடிகிறது. அதை அவன் மற்றவர்களிடம் இருந்து எதிர்ப்பார்க்கிறான். அங்கே தான் கணேசன் தோற்று போக துவங்குகிறான். உலகின் பார்வையில் சம்பாதிக்கத் தெரியாதவன் அசடே. அவன் நிறைய பொய் பேசவும் தந்திரங்களை கையாளவும் தெரிந்திருக்கவில்லை. சமையலறை பல்லி போல கரிப்புகைக்குள் ஒட்டிக் கொண்டு கிடைத்ததை சாப்பிட்டு வாழ பழகிவிட்டிருக்கிறான்.
அவன் ஆசைப்பட்ட ஒன்றே ஒன்று அவனது திருமணம். அது கூட உடலின் தூண்டுதலால் தான். காமம் அவனை எளிதாக ஜெயித்துவிடுகிறது. பிறகு அவனது மனைவி முறைகேடான உறவுகளில் ஈடுபடுவதை அவனால் தடுக்கமுடியவில்லை. ஆனால் அவளை வெறுக்கவில்லை. மாறாக அவளை எப்படியாவது தன்னைப் புரிந்து கொள்ள வைக்க போராடுகிறான். தம்பி வீட்டில் தன்மனைவியை அழகர் கோவில் திருவிழா பார்க்க அழைத்து வரும் ஒரு நிகழ்வு நாவலில் உள்ளது. அது தான் மதுரையில் நடைபெறும் அழகர்கோவில் விழா பற்றிய மிக முக்கியமான இலக்கியபதிவு.
அந்த இரவு நாவலின் கொந்தளிப்பான இரவு. இரவில் சிதிறி வீழும் நட்சத்திரம் ஒன்றை போல அது விவரிக்கபடுகிறது. மதுரையின் பூர்வீகமான காலத்தின் மிச்சம் பீறிடுகிறதோ என்று கூட தோன்றுகிறது. கணேசன் அத்தனை கொண்டாட்டம் களிப்பு யாவின் இடையிலும் ஆறாத துயர் கொண்டேயிருக்கிறான். மனைவியின் துரோகம் அவனை ஆள்கொல்லி நோய் போல அரிக்க துவங்குகிறது.
மூன்றாவது நிலை மனைவி அவனை பிரிந்துபோய்விட்ட நிலையில் போக்கிடம் புரியாமல் தடுமாறி அலையும் கணேசனின் நோயுற்ற காலம். அது அவன் விரும்பி சிதைவதை காட்சிபடுத்துகிறது. கணேசன் கடவுளின் கருணையை ஒரு போதும் எதிர்பார்க்கவேயில்லை. மாறாக தனது வலி தானே தனக்கு ஏற்படுத்திக் கொண்டது. தன் தகப்பன் அப்படி தான் அழிந்தான். தானும் அவன் வழியே செல்கிறேன் என்று சொல்வது போன்றேயிருக்கிறது
நாவலின் ஊடாக கன்யாகுமரி மாவட்டத்தின் கரமனை கிராமமும் அதன் வளமையான இயற்கை சூழலும், ஆறும் அக்ரஹாரத்து வீடுகளும் அங்கு வாழ்ந்தவர்களின் ஆசைகள், கனவுகளும் துல்லியமாக விவரிக்கபடுகின்றன. தெப்பம் ஒன்றில் மிதந்து செல்வது போல நாவல் முன்பின்னாக நகர்ந்தபடியே இருக்கிறது. சம்பவங்களை கதை சொல்லி வளர்த்து எடுப்பதில்லை. மாறாக ஏதோ ஒரு புள்ளியில் சொல்ல துவங்கி அங்கிருந்து வளர்த்து செல்கிறார். பின்பு இன்னொரு புள்ளியில் துண்டித்துவிடுகிறார். ஆக இந்த நாவல் ஒரே நேரத்தில் கணேசன் கதையை சொல்வது போன்ற அவன் அண்ணன் வாழ்வையும் விவரிக்கிறது.
வெற்றி பெற்றவர்களை மட்டுமே வாழ்க்கை எப்போதும் கொண்டாடுகிறது. தோல்வியுற்றவர்கள் மறக்கடிக்கபட்டு விடுகிறார்கள் என்று கசப்புணர்விலிருந்தே நாவல் துவங்குகிறது. கணேசன் தமிழ் நாவல் உலகின் மறக்க முடியாத கதாபாத்திரம். நாவலின் ஒரு இடத்தில் அப்பா சிறுவயதில் ஏதோ திட்டுவார். ஆனால் என்ன திட்டுவார் என்று மறந்துபோய்விட்டது என்ற வரி இடம்பெறுகிறது.
இது முக்கியமான பதிவு. பால்யத்தில் நடைபெற்ற பலசம்பவங்கள் வெறும்காட்சிகளாகவே மனதில் தங்கிவிடுகின்றன. அப்போது நடைபெற்ற உரையாடல்கள் நம்மிடம் தங்குவதேயில்லை. மனம் அதற்காக எப்போதும் ஏங்கவே செய்கிறது. இன்னொரு விதமாக சொல்வதாயின் அப்பா பேசியதை எழுதுவது போன்றே அவர்பேச மறந்து போனதையும் எழுத வேண்டிய அவசியமிருக்கிறது.
நாவலில் கணேசன் சொல்லாத பலவும் மறைமுகமாக சுட்டிகாட்டபடுகிறது. அதை கணேசன் சொல்ல தயங்குகிறான். மறைத்து கொள்கிறான். மறந்து போக முயற்சிக்கிறான். ஆனால் யாரோ அவன் மறைக்க விரும்பியதை திரும்ப திரும்ப நினைவுபடுத்தியயே இருக்கிறார்கள். காற்றில் புகை கரைவது போல கணேசன் இருப்பு நம் கண்முன்னே கரைந்து போவதை நாம் காணமுடிகிறது. அதுவே நாவலின் மிகப்பெரிய வெற்றி.
2004ம் ஆண்டு தனது எண்பத்தைந்தாவது வயதில் காசியபன் இறந்த செய்தி கணேசனின் மரணம் போலவே வெறும் தகவலாக மட்டுமே தோன்றி மறைந்து போனது தான் தமிழ் சூழலின் தலைவிதி.
அசடு கொண்டாப்பட வேண்டிய மிக முக்கிய நவீனநாவல். நமது கவனிமின்மை அதை கண்டுகொள்ளாமல் ஒதுக்கி வைத்திருக்கிறது. மறுவாசிப்பு வழியே இந்த நாவல் உன்னதமான புத்தெùழுச்சியை அடையும் என்றே நம்புகிறேன். அதை சாத்தியமாக்குவது நம் கையில் தானிருக்கிறது.
**
அர்த்தம் தேடும் அசடு
அசடு என்னும் சொல்லை அதிகமாக பிராமண மக்களிடையே தான் கேட்டிருக்கிறேன். பொதுப்படையில் அசமஞ்சமாக சோம்பேறியாக எதற்கும் உதவாதவனை லூசு, சோம்பேறி, உதவாக்கரை என பல வார்த்தைகளிலும் வேறு சில இடங்களில் கெட்ட வார்த்தைகளிலும் தான் கூப்பிட்டு கேட்டிருக்கிறேன். அப்படி அந்த மனிதர்களை திட்டினாலும் தங்களுடைய சௌகரியத்திற்காக கிண்டலடித்தாலும் அவர்களுக்குள்ளே தாழ்மையுணர்ச்சி தேங்கியே இருக்கிறது. அதை புரிந்து கொள்வதற்கு அவனை விட நாம் மேலானவன் என நம்முள்ளே கொண்டிருக்கும் கர்வத்தை கழற்றி வைக்க வேண்டிவரும். அப்படி செய்யும் பட்சத்தில் அசடு என்னும் பதம் அனர்த்தமாவதற்கு நிறைய வாய்ப்புகள் ஏற்படுகிறது.
இதை சொல்லும் அதே நேரம் அசடாக இருக்கும் மனிதனின் பார்வையில் இந்த உலக விஷயங்களும் வாழ்க்கை சார்ந்த பார்வையும் எப்படி இருக்கிறது என்னும் கேள்வி நம்மை ஆச்சர்யத்தின் பக்கமே கொண்டு செல்கிறது. எல்லோரும் அவனின், ஒரு அசடின் அர்த்தமற்ற செயல்களை கண்டு ஒன்று திட்டுகிறோம் அல்லது கிண்டலடிக்கிறோம். ஆனால் அந்த அசடிடமிருந்து எந்த எதிர்வினையும் வருவதில்லை. இதற்கான காரணமாக இருப்பது ஆரம்பத்திலிருந்தே திட்டுகளுக்கும் கிண்டலுக்கும் ஆளாகும் மனது அதை எதிர்க்கும் திராணியை அவனுக்கு அளிப்பதில்லை.
எல்லோரும் மட்டம் தட்டும் தருணத்தில் உண்மையிலேயே தன் நிலை இவர்கள் சொல்வது போல்தானோ என்னும் முடிவை அவனுக்கு நிரந்தரமாகிவிடுகிறது. அப்படிப்பட்ட ஒரு அசடின் பார்வையை இலக்கியமாக்கியிருக்கிறார் காசியபன். இந்நாவல் எஸ்.ராமகிருஷ்ணனின் சிறந்த நூறு நாவல்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்ததை கண்டே தேடத் தொடங்கினேன். பல இடங்களில் பார்த்தும் என்னால் கண்டுகொள்ள முடியவில்லை. இந்நிலையில் கடந்த சென்னை புத்தக கண்காட்சியில் விருட்சம் வெளியீடாக வந்திருப்பதை அறிந்து வாங்கினேன். அந்த நூல் தான் காசியபன் எழுதிய “அசடு”.
கணேசன் தான் நாவலில் வரும் அசடு. அவனை நம்பி எந்த வேலையையும் யாரும் கொடுப்பதில்லை. படிப்பும் ஏறவில்லை. எந்த முன்முடிவுகளும் இல்லாமல் யாத்ரீகனாக இருக்கிறான். அவனுக்கென நோக்கங்கள் இல்லை. செல்லும் இடங்களில் எல்லாம் சின்ன சின்ன வேலைகள் செய்கிறான். அதையும் சரிவர செய்வதில்லை. அவனை வளர்ப்பது எல்லாம் பாட்டி தான். அவள் இறந்த பின் அப்பாவுடனும் சித்தியுடனும் வாழ ஆரம்பிக்கிறான். சமூகக் கூற்றுகளுடன் இணைந்து வாழ்வை அர்த்தப்படுத்த முயலுகிறான். அங்கிருந்து அவனது வாழ்க்கை முழு அசடு என்னும் நிலைக்கு மாறுகிறது.
அடிப்படை விஷயங்களில் பொதிந்திருக்கும் அர்த்தங்களை தேடுகிறான். அடிப்படை விஷயங்களாக அவனுக்கு அமைவது மணவாழ்க்கை, கண்முன்னே அவன் காணும் மரணங்கள் ஆகியவை தாம். மரணம் காணாமல் போதல் என்னும் நிலையிலேயே அவனுக்கு இருந்துவிடுகிறது. அவனுக்கென இருக்கும் நண்பன் பெரியப்பாவின் மகன். இந்த பாத்திரத்தை சொல்வதன் மூலம் மட்டுமே நாவல் சார்ந்த பார்வை முழுமையடையும் என நினைக்கிறேன்.
அசேதனங்களைப் பார்த்து மெய்மறந்து நிற்கும் குணமாக இருக்கும் கணேசன் முதல் மரணம் சார்ந்து குழம்பிப் போகும் வரையிலான கணேசனை அறிந்தவன் அவன் தான். அந்த பாத்திரத்தை வைத்தே நாவலை காசியபன் தொடங்குகிறார். பெரியப்பா மகன் படித்தவர்க்கம். இலக்கியத்தை அது காட்டும் தரிசனங்களை அறிந்தவன். அவனுடைய மனது கணேசனின் குணங்களை சில ஸ்திர குணங்களுடன் மோதவிட்டு புரிதல் கொள்ளத் துவங்குகிறது. அல்லது கணேசன் சார்ந்து அவன் கொள்ளும் தீர்மானங்களே நமக்கான பாத்திரமாக படைக்கப்படுகிறது. அதுவே அசடாக இருக்கும் கணேசன் உண்மையில் அசடு அல்ல என்று உணர வைக்கிறது. இது பச்சாதாபம் நிறைந்த சொல்லாடலாகவும் உருமாற்றம் கொள்கிறது.
இந்நாவல் ஆழமன விஷயங்களை மிக எளிதாக பேசினாலும் என்னை ஈர்க்கவில்லை. காசியபனின் எழுத்துமுறை பிடித்திருக்கிறது. எங்குமே தொய்வினை தராமல் சரளமாக கணேசனின் கதையை கூறிச் செல்கிறார். சில இடங்களில் வியப்பினை கூட அளிக்கிறார். 1978இல் வெளிவந்த நாவலில் கூட படித்த படிப்பிற்கும் செய்யும் வேலைக்கும் இடையே ஒவ்வாத்தன்மை நிலைகொண்டிருந்ததை வாசிக்கும் போது அதிர்ச்சியே மிஞ்சியது.
நகுலன் மற்றும் வெங்கட் சாமிநாதனின் முன்னுரைகளை வாசிக்கும் போது காசியபனுக்கு இலக்கியத்தின் மேல் உள்ள ஆர்வமும் படைப்பாக்கத்தின் மீதிருக்கும் முனைப்பையும் அறிந்து வியப்பு மேலிடுகிறது. மேலும் பெரியப்பா மகனாக வரும் பாத்திரமே காசியபனின் வாசிப்பாளுமையை லேசாக உணர்த்தி செல்கிறது.
எல்லோரும் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் யாருக்கேனும் அசடுகளாக இருக்கிறோம். அது கடந்து செல்லக்கூடிய விஷயம். அங்கே தோன்றும் அடிப்படை விஷயம் சார்ந்த சந்தேகங்கள் காலத்தின் போக்கில் அனுபவங்கள் மூலம் நிச்சயம் உணர்ந்து கொள்ள முடியும். அதை எல்லோரிடமும் நிரூபணம் செய்யத் தேவையில்லை. அசடு பிறரின் புரிதலில் உள்ளதேயன்றி வாழ்வியலின் அங்கமன்று. அதை உணர்த்தும் நாவல் தான் காசிபயனின் அசடு.
” தத்துவ ஆராய்ச்சிக்காக ரவிவர்மா தங்கப் பதக்கம் பெற்ற காசியபன் 1919 – இல் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். இன்ஸுரன்ஸ் கம்பெனியில் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் தொழிலாளர் சங்கப் பணியில் தீவிரமாக ஈடுபட்டவர். ‘ அசடு ‘ , ‘ கிரகங்கள் ‘ ஆகிய இரு நாவல்களின் ஆசிரியர்.
பயம் , நிச்சயமின்மை , சலிப்பு ஆகியவை இவரது கவிதைகளில் மேல் தூக்கலாகத் தெரியும் உணர்வுகள். மாணவனாக இருந்த போது மார்க்ஸாக உலகத்தைப் பார்த்தவர் 63 வயதில் முட்டாக்கிட்ட சங்கரனாகப் பார்க்கிறார். எல்லாம் பலன் ஒன்றுதான் என்பது இவர் கருத்து. ” என்கிறது அன்னம் வெளியீட்டகம்.
இவரது கவிதைகளில் தொன்மக் குறிப்புகள் காணப்படுகின்றன. சில கவிதைகளில் தத்துவப் பூச்சு , பூடகத்தன்மையுடன் பதிவகியுள்ளது.
‘ கோணலாகப் பார்க்கும் காக்கைக்கு ‘ என்றொரு கவிதை !
கோணலாகப் பார்க்கும் காக்கைக்கு
ஒன்றும் நேராகத் தெரிய முடியாது
மாணவனாக இருந்த காலத்தில்
மார்க்ஸாக உலகத்தைப் பார்த்தேன்
முதுமை அடைந்த இப்போது
முட்டாக்கிட்ட சங்கரனாகப் பார்க்கிறேன்
ஆனால் தோன்றுகிறது , எல்லாம்
பயன் ஒன்றுதான் என்று
—- நாத்திகத்திலிருந்து ஆத்திகத்திற்குத் திரும்பியுள்ளார். பாரதிதாசன் ஆத்திகராக இருந்து நாத்திகரானவர். மன மாற்றம் இயல்பானதுதான்.
‘ சும்மா நீ சொல்லு ‘ என்றொரு கவிதை . சோம்பி இருக்கலாகாது என்ற கருத்தை வலியுறுத்துகிறது.
சும்மா நீ சொல்லு
சொல்லிக் கொண்டே இரு
—- என்று தொடங்குகிறது கவிதை. அடுத்த பத்தி காத்திரமாக அமைந்துள்ளது.
சொல் மூச்சு
மூச்சு உயிர்
சொல்லிலிருந்து
முயற்சி பிறக்கும்
முயற்சி செய்கையாகும்
செய்கை ?
அதைப் பற்றிக்
கவலைப் படாதே
வேணுமானால்
ஆயற் குலத்துதித்த
மாயவனைக் கேள் !
—- இதைத் தொடர்கிறது ஓர் எச்சரிக்கை .
சொல் ஓர் அடையாளம்
அடையாளத்துக்கு
அடிமைப் படாதே
ஏமாந்து போவாய்
—- இயக்கத்தின் பலனை இயக்கமே நமக்கு உணர்த்தும் என்பது உட்கருத்தாக அமைந்துள்ளது.
‘ பேசுகிறோம் நாம் ‘ என்ற கவிதை சமுதாயச் சாடலை முன் வைக்கிறது. மனிதம் விமர்சிக்கப்படுகிறது.
பழைய குடுமியும்
பூணூலும் மலையேற
புதிய குடுமியும்
கயிறும் தண்டும்
ஆட்சி புரிய வந்தன
சர்க்கஸ் பஃபூன் வேஷம்
தினசரியாச்சு.
—- என்கிறார் காசியபன் .
‘ ஜன்னல் வழியாகப் பார் ‘ என்ற கவிதை எளிய மெட்டில் அமைந்த , தனிச் சீர் உள்ள மரபுக் கவிதை .
வாழ்க்கை பற்றிய தத்துவப் பார்வை கொண்டது. சிறுவன் , காதல் ஜோடி , இறந்த பெண் ஆகியோரைப்
பற்றிப் பேசுகிறது. சிறுவன் விளையாடுவதை ரசிக்கிறார் காசியபன் .
இன்னல் கவலையே தேனும் — பிஞ்சு
முகத்தில் தெரியுதா பாரு
— என்பதில் , மீண்டும் பிள்ளைப் பருவம் அவாவும் ஏக்கம் தெரிகிறது.
என்னென்ன கனவுகள் கண்டு — அந்த
காதலர்கள் போகிறார்கள் பாரு
என்னவரும் நாளையென்று — அவர்
நினையாமல் போவதைப் பாரு
— என்று காதலர்களின் எதிர்காலம் பற்றிக் கவலைப்படுகிறார்.
இறந்த பெண் ஒருத்தியின் இறுதி ஊர்வலம் போகிறது.
என்ன மணம் வீசுகின்றன — அவள்
மேலே கிடக்கும் மலர்கள் !
‘ மடியில் ‘ என்ற கவிதை ஒரு குயிலின் தனிமையைப் பற்றிப் பேசுகிறது.
‘ அனுபவங்கள் ஞாபகங்கள் ‘ என்ற கவிதையில் தன் காதலைப் பற்றிப் பேசுகிறார் காசியபன்.
காற்றின் அசைவு வேகங்களில் , மேகச் சுருள்களின் நீலத்தில் தன் காதலை உணர்கிறார்.
நான் அன்று காதலித்த
நயனங்கள் மின்னும்
— என்றவர் ,
பாயாய் விரியும்
சோகத்தின் நிழல் நீள
திறந்த வெளியிலே
மௌனத்தின் சலசலப்பு
என்று முடிக்கிறார் கவிதையை. எளிய கவிதை என்பதால் விளக்கம் சொல்ல ஏதுமில்லை.
‘ ஆசிரமம் ‘ என்ற கவிதையில் தன் மகளைப் பற்றிப் பேசுகிறார். ” பூவைப் பற்றிக் கவிதை
எழுதுவாயா ? ” என்கிறாள் கடைசி மகள் . ” உன்னைப் பாடுவேன் . ” என்கிறார் தந்தை. அந்தப் பெண்
வெளியில் விளையாட ஓடுகிறாள்.
மேசையும் பேனாவும்
காகிதமும் நாற்காலியும்
நானும்
ஆச்சரிய ஆசிரமத்தில்
மூழ்கிப் போனோம்
— என்று கவிதை முடிகிறது.
‘ காற்றடித்த பை ” வாழ்க்கையின் நிலையாமை பற்றிப் பேசுகிறது.
வாழ்க்கை விளையாட்டில்
என் முடிவான தோல்வி கண்டு
நகர தேவதைகள் நகைத்தார்கள்
இப்போது
தைத்தும் கிழிந்தும்
தொங்கி ஊசலாடும்
பழங்கந்தல் உடம்பை
வெறுங்காற்று
உலர்த்துகிறது
— என முதுமை பற்றி விளக்குகிறார் காசியபன்.
1982 – இல் அன்னம் வெளியீடாக வந்துள்ளது இத்தொகுப்பு. உரைநடைப் பாங்கில் சராசரிக் கவிதைகளாகவே இவை அமைந்துள்ளன. உரைநடை எழுதுபவர்கள் எழுதும் கவிதைகளுக்கு ஏற்படும் விபத்துதான் இக்கவிதைகளிலும் தெரிகிறது.
1953 டிசம்பர் ஒன்றாம் தேதி பிறந்தேன். இயற்பெயர்ச ந்திரமௌலி. புனைப் பெயர் அழகியசிங்கர். 1988 ஆம் ஆண்டில் தொடங்கிய நவீன விருட்சம் என்ற இலக்கிய இதழை கடந்த 27 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டு வந்துள்ளேன். தற்போது 102வது இதழைக் கொண்டு வந்துள்ளேன். இதன் மூலம் பல படைப்பாளிகளை அறிமுகப் படுத்தி உள்ளேன். 500க்கும் மேற்பட்ட கவிதைகளை பிரசுரம் செய்துள்ளேன். நூற்றுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புக் கவிதைகளைக் கொண்டு வந்துள்ளேன். தமிழில் வெளிவந்த சிறந்த சிறுகதைகளை விருட்சம் மூலம் கொண்டு வந்துள்ளேன். புத்தக மதிப்புரைகளை வெளியிட்டுள்ளேன். எந்தவித ஆதாயமும் இல்லாமல் தனிப்பட்ட முயற்சியாக நவீன விருட்சம் இதழைக் கொண்டு வந்துள்ளேன். 40க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சிட்டுள்ளேன். இதைத் தவிர நான் ஒரு எழுத்தாளன். 80க்கும் மேற்பட்ட சிறுகதைகள், குறு நாவல்களை எழுதி உள்ளேன். அவற்றைப் புத்தகங்களாகவும் கொண்டு வந்துள்ளேன்.
இதுவரை 4 சிறுகதைத் தொகுதிகள் கொண்டு வந்துள்ளேன்.
• சில கதைகள்
• 406 சதுர அடிகள்
• ராம் காலனி
• ரோஜா நிறச் சட்டை.
மேலும் 250க்கும் மேலாக கவிதைகள் எழுதி உள்ளேன்.
1. அழகியசிங்கர் கவிதைகள்
2. வினோதமான பறவை
என்று 2 தொகுப்புகளில் என் எல்லாக் கவிதைகளும் அடங்கும். தொடர்ந்து இப்போதும் கவிதைகள், கதைகள் எழுதிக் கொண்டு வருகிறேன்.
சமீபத்தில் 2 ஆண்டுகளாக எதையாவது சொல்லட்டுமா என்ற பெயரில் மாதம் ஒவ்வொரு முறையும் அமிர்தா பத்திரிகையில் வெளிவந்துள்ளன. அதைத் தவிர navinavirutcham.in என்னால் எழுத முடிவதை பதிவு செய்து கொண்டு வருகிறேன். ஒரு தேசிய வங்கியில் 35 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளேன். வாழ்க்கையை இனிமேல்தான் புரிந்து கொள்ள முடியும் என்று நமபுகிறேன். நாவல் ஒன்று எழுதவும் முயற்சி செய்து வருகிறேன்.
இப்படிக்கு
அழகியசிங்கர்
Subscribe to:
Post Comments (Atom)
Raagam Thaalam Pallavi - ராகம் தாளம் பல்லவி - Theerppugal Thiruththapadalaam
Raagam Thaalam Pallavi ராகம் தாளம் பல்லவி Theerppugal Thiruththapadalaam Movie - Theerppugal Thiruththapadalaam Music - Shankar Ganesh S...
-
புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ . விருத்தாசலம் ( ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948), மிகச்சிறந்த த...
-
ஞானக்கூத்தன் ஞானக்கூத்தன் ( அக்டோபர் 7, 1938 - சூலை 27, 2016) ஒரு தமிழ்க் கவிஞர் ஆவார் . இவரது இ...
No comments:
Post a Comment