Thursday, March 7, 2019

நடுகல்

வணக்கம் ,

நடுகல் இதழில் எனது 
சிறுகதை பிரசுரமாகி உள்ளது ,
வாய்ப்பிருக்கும் நண்பர்கள் வாசித்து 
கருத்துக்களை பகிரவும்.
நடுகல் சென்னையில் டிஸ்கவரி புக் பேலஸ், பொள்ளாச்சியில் எதிர் வெளியீடு, ஈரோட்டில் பாரதி புத்தகாலயம் விற்பனையகங்களில் வாசிப்பாளர்களுக்கு கிடைக்கும்!

நன்றி /தோழமையுடன்.




--------------------------------------------------------------------------------------------------------------------------------

                                                 அபாந்திர பயம்

 

உடல் பருமனான  தலைமை அதிகாரி சமீபத்தில்   மது அருந்துவதையும்,புகைபிடிப்பதையும் நிறுத்தி தனது உடலை பாதுகாத்துக்கொள்ள ஆரம்பித்தார் . விசேஷ காரணங்களுக்காக தினசரி செய்தித் தாள்களை படிப்பதை மட்டும் விடாமல் செய்து வந்தார்.தனது உடல் நலனை பாதுகாத்துக் கொள்வதற்காகவே செய்தித் தாள்களை படிப்பதாகவும் சொல்லிக் கொண்டார் .

தமிழகத்தின் தலைநகரில் அமைந்துள்ள அவரது புகழ் பெற்ற அலுவலகம் பல பத்திரிக்கைகளுக்குச் சந்தா செலுத்தி இருந்தது .ஒவ்வொரு நாள் காலையிலும் அலுவலகம் வந்த முதல் வேலையாக ஒரு கோப்பை தேநீர் அருந்தியதும் பத்திரிக்கைகள் படிப்பதில் மூழ்கி விடுவார் .ஒவ்வொரு கட்டுரையாகப் படித்து அவை அவரது உடல் நிலை பற்றி என்ன சொல்கிறது என்று தெரிந்துக்  கொள்வார் . தனது வயதுடையவர்களுக்கு வரும் வியாதிகள் பற்றி படிக்கும் போதெல்லாம் குறிப்பாக அதில் அதிக கவனம் எடுத்துக் கொள்வார் .

அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்கிறவர்களுடைய மலக்குடலின் நரம்பு மண்டலம் வீங்குவதால் அவர்களுக்கு மூலநோய் ஏற்பட்டு கடுமையான வலி உண்டாகி அமைதியின்மையால் அவதிப்படுவார்கள் என்பதாக ஒரு கட்டுரையில் படித்தார் .

செய்தித்தாளை கீழே வைத்துவிட்டு திடீரென பரபரப்படைந்து கவலைக்குள்ளானார் .நாள் முழுவதும் தான் உட்கார்ந்தே இருப்பதால் தனக்கு இந்த வியாதி இருக்குமோ என்ற சந்தேகம் தொற்றிக் கொண்டது. மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ள விரும்பினார் ஆனால் வெட்கப்பட்டுப் போகாமலே இருந்து விட்டார்  .அவரது முகத்தில் பயமும் விசனமும் ஒட்டிக் கொண்டது .

மற்றொரு செய்தித்தாளில் பிரசுரமான ஒரு கட்டுரை 'உடலில் ஏற்படும் கட்டிகளை அறுவை சிகிச்சை மூலம் தான் அகற்றியாக வேண்டும் 'என்று குறிப்பிட்டது .கட்டுரையை படித்து முடித்ததும் அவரது முதுகில் தினவு எடுப்பதாக உணர்ந்து ,சொறிந்து கொண்டபோது விரல்களால் எதோ கடினமாக தென்பட்டது .அது கட்டியாகத்தான் இருக்கும் என்று விசாரமடைந்தார் .கட்டியை அகற்றும் போது உண்டாகும் வலியை நினைத்து அதை தொடாமல் விட்டுவிடலாம் என்று முடிவு செய்து கொண்டார் .ஆனால் அவர் முகம் சஞ்சலத்தால் வாடிப் போனது .

சில நாட்கள் சென்றதும் நத்தை ஜுரம் பற்றி ஒரு கட்டுரை வெளிவந்தது .அதில் அமைதியின்மை ,பசியின்மை ,கால்களில் பலவீனம் இவைதான் நத்தை ஜுரத்திற்கு அறிகுறிகள் என்றிருந்தது ,ஜுரம் மேலும் கடுமையாகும்  போது நோயாளியின் அடிவயிறு  முன்னுக்குத் தள்ளி வந்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றிருந்தது .

இக்கட்டுரையைப்  படித்து முடிப்பதற்கு முன்னரே அவரது நிலைமை கட்டுரையில் விளக்கி இருப்பதை போன்று தான் இருப்பதாக முடிவுக்கு வந்துவிட்டார் .பத்து வருடங்களுக்கு முன் நடவு வேலையில் விவசாயிகளுக்கு உதவி செய்யக் கிராமங்களுக்கு சென்றிருந்த போது அங்கு தன் இரத்தத்தில் நுண்கிருமிகள் நுழைந்து விட்டதாக உறுதியாக நம்பனார் .குனிந்து  தன்னை பார்த்துக்கொண்ட போது  தனக்கு நத்தை   ஜுரம் பிடித்து கடுமையாகி விட்டதன் அறிகுறியாக அவரது பானை வயிறு முன் தள்ளி இருப்பதாகக் கருதி அச்சம் கொண்டார் .இனியும் தாமதிக்கக்கூடாது உடனே மருத்துவரிடம் செல்ல முடிவெடுத்தார் .ஆனால் அலுவலக கார் பழுதாகி இருப்பதால் மருத்துவரிடம் செல்வது தாமதப்பட்டது.

சரி இன்று அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லிவிட்டு தாமாக வெளியில் சென்று சக மக்களுடன் கலந்து அவர்களின் எண்ண ஓட்டங்களை தன அளவுகோலால் தீர்மானிக்க எண்ணினார் .இன்னும் இருபது வருடங்களுக்கு பிறகு உடல் நோய் தீர்க்கும் மருத்துவமனை ஒன்று கூட இருக்காது ,உளவியல் சார்ந்த நிபுணர்களுக்கு மட்டுமே மருத்துவம் தாரை வார்க்கப்படும் எனவே நட்பு பகிர்தல் ,அன்பு பாராட்டுதல் ,உறவுகளை மேம்படுத்துதல் அவசியம் என்று என்றோ படித்த கட்டுரை வேறு நினைவுக்கு வந்தது .

காலை சாப்பிட ஹோட்டலுக்குச்  சென்றார் ,அந்த ஹோட்டலில் கூடைப்பந்து  விளையாடுவதற்குத் தேவையான பலகை நட்டு வைக்கவில்லை .

அலுவலகத்தில் தினசரி போடப்படாத ஏதேனும் ஒரு செய்தி பத்திரிகை வாங்க போனார் ,பத்திரிகை  விற்பனை செய்யும் பையனின் கண் இமைகளில் ரோமமே இல்லை .

123456789எண் பேருந்திற்காக இரண்டு மணி நேரம் காத்திருந்தார் ,பேருந்து வரவே இல்லை .

ஒருவர் அவரிடம் 'இந்த முகவரிக்கு எப்படி போக வேண்டும் 'என்றார் ,அனால் அவர் ஒலிம்பிக்கில் உயரம் தாண்டும் போட்டியில் பங்கு பெற்ற பழைய விளையாட்டு வீரன் இல்லை .

 

எதிரில் பொழுதுபோக்கிற்காக பொதுமக்கள் மீன்பிடித்து மீண்டும் குளத்திலேயே விடும் குளம் ஒன்று அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்தது. அங்கு சென்று செருப்புகளை கழற்றி வைத்துவிட்டு மீன் பிடிப்பதில் கவனம் செலுத்தினார் .சில மணி நேரத்தில் ஒரு மீனுடன் கரைக்கு வந்தார் . என்ன ஆச்சர்யம் ! அவர் செருப்பு கிடந்த இடத்தில ஒரு பெரிய கூட்டம் திரண்டிருந்தது. ஏதோ நடந்திருக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் வேகமாக நடந்து வந்தார் .

' பாவம் அந்த மனிதன் பரிதாபத்திற்குறிய அவனுக்கு முப்பது வயது இருக்கலாம்' என்றது ஒரு குரல் .

இல்லை நீ சொல்வது உண்மையாக இருக்காது .யாரோ ஒரு பெண் தான் ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறாள் என்றது மற்றொரு குரல் .

நிச்சயம் அப்படி இருக்க முடியாது ,கடுமையாக உழைக்கும் ஒருவன்தான் வேலைப்பளு,மன உளைச்சல் காரணமாகத் தான் கடைசியாக இந்த புகலிடம் வந்து சேர்ந்தான் என்றது ஒருவர்  குரல் .பாவம் அவருடைய செருப்பு தான் இது என்றார் தீர்க்கமாக .

கூட்டத்தின் நடுவே அவர் நுழைந்த போது ஒரே குழப்பம் ,அங்கு எந்த பிரேதமும் இல்லை . செருப்பை காலில் மாட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார். ஆச்சர்யம்  ! உடனே கூட்டம் கலைந்து சென்றது .மக்கள் அவரவர் பணிகளை தொடர்ந்தனர் ,சிலர் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு கிளம்பினர் .

வரிசையாக வரும் தொந்தரவுகளால் கழிந்து போகும் ஒவ்வொரு நாளும் அவரது எடை குறைந்து கொண்டே வந்தது .

இறுதியாக தலைமை அதிகாரி மருத்துவமனை சென்றார் .பரிசோதனைகளை முடித்த பின் மருத்துவர் குறிப்பேட்டில் பின்வருமாறு எழுதி இருந்தார் ." வியாதி ஒன்றும் இல்லை ,மனப்பிறள்வு ,உடலில் சோர்வும் தளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது, மனதை லேசாக வைத்துக் கொண்டு வியர்க்கும் வரை நடை பயிற்சி செய்யவும்  " என்றிருந்தது.

அவர் மனம் இந்த கோட்பாட்டில் உடன்படவில்லை , வேறு ஒரு மருத்துவரை அனுகினார் ,பின் ஒரு பெண் மருத்துவரை சந்தித்தார் ,அனைவரின் வெளிப்பாடும் , மருந்தும் ஒன்றாகவே இருந்தது .

சிறிது காலம் கழித்து தனது நெருங்கிய நண்பருக்கு நடந்தவற்றையெல்லாம் விவரித்து ஒரு கடிதம் எழுதினார் .

நான் இந்த உலகில் வாழ்வது சிரமம் ,இயலாத காரியம் என்று நினைக்கிறன். நான் திருப்தியோடு வாழும்படியாக இவ்வுலகில் ஏதுமில்லை ,ஆகவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன் .

 

பின்குறிப்பு : இந்தக் கடிதத்தை  உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் தபால்காரர் குறைந்த பட்சம் ஆறு அடி உயரம் இல்லாதவராக இருப்பின் நீங்களும் தற்கொலை செய்து கொள்ளுங்கள் .

 

                                                -----------------------

 

நடுகல்

நடுகல் 4 , மார்ச் 2019 இதழில் , எனது கவிதைகள் தேர்வாகிருக்கிறது. நன்றி