Thursday, August 16, 2018

ஞானக்கூத்தன்

ஞானக்கூத்தன்














ஞானக்கூத்தன் (அக்டோபர் 7, 1938 - சூலை 27, 2016) ஒரு தமிழ்க் கவிஞர் ஆவார். இவரது இயற்பெயர் அரங்கநாதன். இவர் பிறந்த ஊர் நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை அருகே உள்ள திருஇந்தளூர் ஆகும். “திருமந்திரம்நூல் ஏற்படுத்திய தாக்கத்தால் தனது புனைபெயராக ஞானக்கூத்தன் என்ற பெயரை ஏற்றார்.
இராமகிருஷ்ணன், சா. கந்தசாமி, . கிருஷ்ணமூர்த்தி ஆகியோரோடு இணைந்து ஞானக்கூத்தன் துவங்கிய இதழ் 'கசடதபற'. 'கவனம்' என்ற சிற்றிதழைத் தொடங்கினார். '' இதழின் ஆசிரியர்களில் ஒருவராக இருந்தார்.
பொருளடக்கம்
             1இயற்றிய நூல்கள்
             2மறைவு
             3மேற்கோள்கள்
             4வெளி இணைப்புகள்
இயற்றிய நூல்கள்[தொகு]
கவிதை நூல்கள்
             அன்று வேறு கிழமை
             சூரியனுக்குப் பின்பக்கம்
             கடற்கரையில் சில மரங்கள்
             மீண்டும் அவர்கள்
             பென்சில் படங்கள்
             ஞானக்கூத்தன் கவிதைகள்
             என் உளம் நிற்றி நீ
கட்டுரை நூல்கள்
             கவிதைக்காக
             கவிதைகளுடன் ஒரு சம்வாதம்
பிற படைப்புகள்
             கனவு பல காட்டல்
             நம்மை அது தப்பாதோ?
             சொன்னதை கேட்ட ஜன்னல் கதவு
             அலைகள் இழுத்த பூமாலை
விருதுகள்
             சாரல் விருது (2009)
             விளக்கு விருது (2004)
மறைவு[தொகு]
கவிஞர் ஞானக்கூத்தன் 2016 சூலை 27 புதன்கிழமை இரவு தனது 77வது அகவையில் சென்னையில் காலமானார்.[1]

ஞானக்கூத்தன்: சில நினைவுகள்!

புதுக்கவிதை முயற்சிகளை .நா.சு., சி.சு. செல்லப்பா போன்றவர்கள் 1950-களி லிருந்து முன்னெடுத்துக்கொண்டிருந்தார்கள். 60-களின் இறுதியில் ஞானக்கூத்தன் கவிதை எழுத வருகிறார். ஆனால், ஏதோ ஒரு காரணத்தால் ஞானக்கூத்தனின் கவிதைகள் சி.சு.செல்லப்பாவை ஈர்க்கவில்லை. அந்த நேரத்தில் ஞானக்கூத்தனின் அசலான குரலையும் அசலான போக்கையும் இனம்கண்டவர் சி. மணி. அவர் நடத்தியநடைசிற்றிதழில்தான் ஞானக்கூத்தனின் கவிதைகள் முதலில் வெளியாயின.
ஞானக்கூத்தனுக்குச் சரியான களத்தையும் பாதையையும் அமைத்துக் கொடுத்ததில்நடை’, ‘கசடதபறஇதழ்களுக்கும் சி.மணிக்கும் முக்கியப் பங்கு உண்டு. ‘கசடதபறஎன்ற பெயரையே, அதாவதுகசடதபற - ஒரு வல்லின மாத இதழ்என்ற பெயரை வைத்ததே ஞானக்கூத்தன்தான். 1970-களின் தொடக்கத்தில் கிருஷ்ணமூர்த்தி, நான், சா.கந்தசாமி, ஞானக்கூத்தன், ஐராவதம் (சாமிநாதன்) எல்லோரும் தினமும் சந்தித்துப் பேசும்போது ஒரு இலக்கிய இதழைத் தொடங்கலாம் என்ற பேச்சு வந்தது. ‘கசடதபறஎன்ற இயக்கம், அந்த இதழ் என்று எல்லாமே ஞானக்கூத்தனின் அறையில்தான் நடைபெற்றன. திருவல்லிக்கேணியில் 14, தோப்பு வெங்கடாசலம் தெருவில்தான் ஞானக்கூத்தன் இருந்தார்.
ரொம்பவும் அழகான அறை அவருடையது. அந்த மேன்சனின் மொட்டை மாடியின் கோடியில் ஒரு அறை. அந்த அறையில் தெற்கு பார்த்த வாசல், கிழக்கு பார்த்த ஜன்னல், நன்றாகக் காற்று வரும். அதுதான் ஞானக்கூத்தனின் அறை. அங்கேதான் தினமும் சந்திப்பதை நாங்கள் ஒரு சடங்காகவே வைத்திருந்தோம். ஒரு ஆண்டில் நாங்கள் சந்திக்காத நாட்கள் என்று பார்த்தால் மிகவும் குறைவாகவே இருக்கும்.
அசலான குரல்
அறுபதுகள், எழுபதுகளில் புதுக் கவிதை எழுதிக்கொண்டிருந்த கவிஞர் களின் உணர்ச் சிகளை அடையா ளப்படுத்தும்ஐகானிக்வரிகளைப் பெரும்பாலும் ஞானக்கூத்தன்தான் எழுதினார். ‘எனக்கும் தமிழ்தான் மூச்சு/ ஆனால்/ பிறர்மேல் அதை விட மாட்டேன்போன்ற கவிதைகள் அந்தக் காலத்தில் பெரிய எதிர்ப்புக் குரல். கவிதை என்றால் யாப்பு சார்ந்ததாகத்தான் அப்போதும் இருந்தது. பொதுமக்களிடையே புதுக்கவிதை என்பது இன்னும் தன்னை நிறுவிக்கொள்ளாத காலம் அது. அந்த நேரத்தில் ஞானக்கூத்தன் குரல் மிகவும் அசலானது, நுட்பமானது. ரொம்பவும் நுணுக்கமான சில அவதானங்களைச் சொல்வதில் மிகவும் தேர்ந்தவர் அவர்.
அப்போதைய எங்கள் நட்பு வட்டத்தின் இலக்கியவாதிகளுக்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் ஒரு கல்லூரிப் படிப்பு கொடுக்காத கல்வியைக் கொடுத்தவர் ஞானக்கூத்தன்தான். பழந்தமிழ் இலக்கியங்களின் செறிவு, முக்கியத்துவம் போன்றவற்றை அவர்தான் எங்களுக்கு உணர்த்தினார். கம்பராமாயணத்தைப் பற்றி போகிற போக்கில் நிறைய விஷயங்களைச் சொல்வார். ‘அட, இவ்வளவு நாட்களாக இந்த விஷயங்களையெல்லாம் நமக்கு யாரும் சொல்லவில்லையேஎன்ற பிரமிப்பும் ஆச்சர்யமும் ஏற்பட்டது. எல்லாம் அவருடனான மாலை சந்திப்புகள் மூலம் எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள். ஒருவகையில் அந்த அனுபவங்களெல்லாம் எனக்கு முதலீடு மாதிரியும், சொத்து மாதிரியும் என்றுகூட சொல்லலாம்.
அன்று வேறு கிழமை
அவருடைய முதல் தொகுப்பானஅன்று வேறு கிழமைக்கு சுவாரசியமான பின்னணி இருக்கிறது. 1973 வாக்கில் அவருக்குத் திருமணப் பரிசாக என்ன கொடுக்கலாம் என்று நண்பர்கள் யோசித்தபோது, ‘அவருக்கு ஒரு கவிதைத் தொகுப்பு கொண்டுவரலாம்என்று நான் யோசனை கூறினேன். அந்தப் புத்தகத்தின் வடிவம், வடிவமைப்பு குறித்த யோசனைகளையும் நான் கூறினேன். தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதிப்புகளுள் ஒன்றாக அது உருவானது. சதுரமாக, பெரிய அளவில், கனமான தாளில் அச்சிடப்பட்டது அது. அந்தப் புத்தக உருவாக்கத்தில் எனக்கு மிகவும் உதவியாக இருந்தவர்கசடதபறஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி. பக்க அமைப்பு கே.எம்.ஆதிமூலம். பாஸ்கரன், சிதம்பர கிருஷ்ணன், வரதராஜன், தட்சிணாமூர்த்தி, பி. கிருஷ்ணமுர்த்தி என்று பலருடைய ஓவியங்களைத் தாங்கி வெளிவந்தது அந்தத் தொகுப்பு. அட்டைப் படம் ஆதிமூலத்துடையது. அழகான லித்தோகிராஃப். ‘அன்று வேறு கிழமைதொகுப்பின் வெளியீட்டு விழா தேவநேயப்பாவாணர் நூலகத்தில் நடந்தது. முன்னணி ஓவியர்கள் கைப்பட வரைந்து உருவாக்கிய சுவரொட்டிகளை அந்த அரங்கில் காட்சிக்கு வைத்து அந்தப் புத்தகத்தை வெளியிட்டோம். ‘இலக்கியச் சங்கம்சார்பாக வெளியிடப்பட்ட அந்தத் தொகுப்பு தமிழ்ப் பதிப்புத் துறையைப் பொறுத்தவரையில் ஒரு பெரிய பாய்ச்சல். 1973, ஆகஸ்ட் மாதம் நடந்தது அது.
மரபும் புதுமையும்
சி. மணி போலவே ஞானக்கூத்தனுக்கும் மரபுக் கவிதையில் நல்ல ஞானம் இருந்ததால்தான் சரியான தொனியும் சொற்தேர்வும் சொல்வளமும் அவருக்குச் சாத்தியமானது என்று நினைக்கிறேன். அதே நேரத்தில் கவிதைகளில் புறந்தள்ளப்பட்ட பேச்சு வழக்கையும் தன் கவிதைகளில் அவர் திறமையாகப் பயன்படுத்தினார். மரபுக் கவிதைகளிலுமே இந்த நெகிழ்வுத்தன்மை இருந்தது என்பதை சி. மணி தனதுயாப்பும் கவிதையும்புத்தகத்தில் நிறுவியிருக்கிறார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆக, சி. மணியும் ஞானக்கூத்தனும் கிட்டத்தட்ட ஒரே இலக்கியப் போக்கைச் சேர்ந்தவர்கள் என்று கூறலாம். மரபறிவைப் பயன்படுத்தி முற்றிலும் புதிய ஒரு போக்கை உருவாக்கியது என்ற வகையில் அது ஒரு பெரிய வளர்ச்சி. ‘ஞாயிறு தோறும் தலைமறைவாகும்/ வேலை என்னும் ஒரு பூதம்/ திங்கள் விடிந்தால் காதைத் திருகி/ இழுத்துக் கொண்டு போகிறதுஎன்ற வரிகளைச் சொல்லிப் பாருங்கள்அதிலும் அழகான ஒரு சந்தம் இருக்கிறது. ஆனால், பாடுபொருளோ நவீன மானது.
ஞானக்கூத்தனால் உத்வேகம் பெற்ற ஒரு இளைய தலைமுறையும் இருக்கிறது. முக்கியமாக ஆத்மாநாமைச் சொல்ல வேண்டும். ஞானக்கூத்தனின் ஊக்குவிப்பின்பேரில் பாலகுமாரன் ஆரம்ப காலத்தில் சில நல்ல கவிதைகளை எழுதினார். ஆர். ராஜகோபாலன், ஆனந்த் என்று இன்னும் நிறைய பேர். இவை எல்லாமே ஞானக்கூத்தனின் தாக்கம்.
புதுக்கவிதைக்குக் காத்திரத்தையும் நெகிழ்வுத் தன்மையையும் ஞானக்கூத்தன் ஒருங்கே அளித்தார் என்பது மிகையான கூற்று அல்ல. தமிழ்க் கவிதையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்த செழுமையான ஒரு காலத்தின் அடையாளம் ஞானக்கூத்தன்.
கவிதை போன்றதொரு வாழ்க்கையை கடந்து சென்றுவிட்ட ஞானக்கூத்தன்

தமிழ் நவீனக் கவிதையின் மிக முக்கியமான கவிஞரான ஞானக்கூத்தன் மறைந்துவிட்டார். அவரது கவிதைப் பயணம் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் கடந்த 50 வருடங்களாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாறிவரும் சமூக மாற்றங்களின் போக்குகளை எவருக்கும் வளையாமல் எதற்கும் இசைந்து கொடுக்காமல் மிக நாசுக்காக நகைச்சுவையாக எள்ளலோடு கவிதைகளைப் படைத்தவர் அவர். நவீன கவிதைக்கு வேராகத் திகழ்ந்த ஞானரதம், , கசடதபற, கவனம் ஆகிய சிற்றிதழ்களின் ஆசிரியர் குழுக்களில் தனது தீவிர பங்களிப்பை செலுத்தியவர்.
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாரதியைத் தொடர்ந்து தமிழ்க் கவிதை மரபை பெரும்வீச்சோடு முன்னெடுத்தவர் பாரதிதாசன் என்றாலும் தமிழ் கவிதைக்கு சமகால நவீன மொழியை வழங்கியவர் .பிச்சமூர்த்தி.
மாறிவரும் உலக இலக்கியப் போக்கின் கண்ணியை அதன் வேகத்தோடு தமிழ் தன்னை இணைந்துகொண்டதற்கு தமிழிடமுள்ள வரலாறு ஒரு காரணம் என்றால் தக்க நேரத்தில் அதை முன்னெடுத்த அற்புதமான தமிழ் கவிஞர்களும் ஒரு காரணம் என்றுதான் சொல்லவேண்டும்.
.பிச்சமூர்த்தி, .நா.சு, நகுலன், பிரமிள், ஆத்மாநாம், ஞானக்கூத்தன், பசுவய்யா, சி.மணி, எஸ்.வைத்தீஸ்வரன், விக்கிரமாதித்யன், .ஜெயபாஸ்கரன், கலாப்ரியா, கல்யாண்ஜி, தேவதேவன், தேவதச்சன் என்று செல்லும் இந்த வரிசை மொழியை வளம் சேர்ப்பதோடு சிந்தனையை செதுக்கவும் துணைநின்றது.
இவர்களில் பலரும் தத்துவம், தனிமை, ஆற்றாமை, காலம், இடம் என தேடலின் தீவிரத்தில் இயங்கியவர்கள்... இவர்களிலிருந்து நிறைய வேறுபட்டு நிற்கிறார் ஞானக்கூத்தன்.
''அப்பா மாதிரி ஒருத்தன் உதவினான் மைதானத்தில் சுற்றிச் சுற்றி எங்கள் ஊர்க் கமலம் சைக்கிள் பழகினாள்.. என்று தொடங்கும் அவரது கவிதை ஒன்று, .....எங்கள் ஊர்க்கமலம் சைக்கிள் விடுகிறாள் என்மேல் ஒருமுறை விட்டாள் மற்றப் படிக்குத் தெருவில் விட்டாள் என்று முடியும் போது வாய்விட்டு சிரிக்கவைக்கக்கூடியது.
''மோசீகீரா உன்மேல் அளவிறந்த அன்பு தோன்றிற்று இன்றெனக்கு அரசாங்கத்துக் கட்டிடத்தில் தூக்கம் போட்ட முதல்மனிதன் நீதான் என்னும் காரணத்தால்'' என்று அமையும் 'தோழர் மோசீகீரனார்' எனும் கவிதையில் உள்ள நகைச்சுவை அளப்பரியது.
நீண்டதூரம் நடந்துவந்த களைப்பினால் முரசு கட்டிலில் மீதேறி துயில் கொண்டுவிட்ட புலவர் மோசிகீரனார். இவர் புலவராயிற்றே அடடா என அவருக்கு அருகே நின்று தூக்கம் கலைந்துவிடாமல் கவரி வீசிய மன்னரின் பெருந்தன்மையைப் பற்றி ஏதாவது சொல்லப்போகிறாரோ என்று தேடினால் அதற்கு மேல் அவர் எழுதவில்லை. ஞானக்கூத்தன் பாடவந்தது, மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறையைப் பற்றியோ, புலவர் மோசிகீரனாரைப் பற்றியோ அல்ல என்பது நம் அரசு அலுவலக லட்சணங்களை நன்கு உணர்ந்தவர்களுக்குத் தெரியும்.
70களின் அரசியல் மேடைகளை கிண்டலடித்து இவர் எழுதிய பல கவிதைகள் பிரசித்தம். அவை பலமான எதிர்ப்புகளை இவருக்குப் பெற்றுத் தந்தன. அதேநேரத்தில் எதையும் எவருக்காகவும் தனது விமர்சனப் போக்கை மாற்றிக்கொள்ளாதவர் என்ற தெளிவையும் உலகுக்கு உணர்த்தின. கல்லூரி தமிழ் இலக்கிய வகுப்புகளில் பேராசிரியர்களின் கோபத்திற்கு அதிகம் ஆளானவர்களில் இக்கவிஞருக்கு முக்கிய பங்குண்டு.
அதற்கு காரணம் அவரது இந்தக் கவிதை. ''எனக்கும் தமிழ்தான் மூச்சு... ஆனால் அதை பிறர்மேல் விடமாட்டேன்'' என்ற இக்கவிதை வரிகள் தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! வரிப்புலியே, இளந்தமிழா எழுந்திருநீ, என்றெல்லாம் கேட்டுப் பழகிய தமிழ் வாசகனுக்கு ஞானக்கூத்தனின் கவிதைகள் அதிர்ச்சியைத் தந்திருப்பதில் வியப்பில்லை. ஆனால் எழுபதுகளில் களைகட்டிய அரசியல் இயக்கங்களின் வெற்றுக்கோஷங்களையும் அதைவைத்துமட்டுமே அரசியல் நடத்திக் கொண்டிருப்பதையுமே அவரது ''எனக்கும் தமிழ்தான் மூச்சு'' கவிதை பகடி செய்தது என்பதை புரிந்துகொண்டால் குழப்பம் தெளியும்...
மேலோட்டமான உணர்ச்சிப்பெருக்கில் தன்னை கவிஞர்களாக நிலைநிறுத்திக்கொண்டவர்கள் மத்தியில் ஆழ்ந்த சங்க இலக்கியப் பயிற்சியோடு தனது படைப்புகளை வடிவரீதியாகவும் முன்னிறுத்தியவர். தமிழ்தமிழ் என்று சொல்லிவந்த அரசியல்வாதிகளின் போக்குகளை கடுமையாக விமர்சனம் செய்பவர் என்றாலும் இடஒதுக்கீடு, ஈழத்தமிழர் ஆதரவு போன்றவற்றில் முக்கிய பற்று கொண்டவர் என்பதை நாம் மறந்துவிடமுடியாது. இவரது முக்கியமான கவிதைத் தொகுப்புகள் அன்று வேறு கிழமை, கடற்கரையில் சில மரங்கள், பென்சில் படங்கள் போன்றவை.
இளங்கவிஞர்களை வாஞ்சையோடு அழைத்துப் பேசி அவர்களைப் பாராட்டி வழிநடத்தத் தவறியதில்லை. விமர்சனம் என்று வரும்போது எவ்வகை அதிகார பீடத்தையும் துணிச்சலாக எதிர்க்கவும் தயங்கியதில்லை. அதிகார மட்டத்திலிருந்து கிடைக்கும் விருதுகளுக்கு எதிரான இலக்கிய வாழ்க்கைப் பயணம் என்ற அவரது குணம் அனைத்தும் அவரது கவிதையைப் போன்றதே.
தனிப் பெரும் கவிஞன்

அது 1968-69-ம் கல்வியாண்டு. பாபநாசம் வள்ளுவர் செந்தமிழ் கல்லூரியில் புகுமுக வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்; எங்கள் பேராசிரியர் .. அறவாணனுக்குநடைசிற்றிதழ் வந்துகொண்டிருக்கும்; அவர், அப்போது ஆய்வுப் பணியில் இருந்ததால், நண்பர் சுப்பு. அரங்கநாதனும் நானும் அதை எடுத்துக்கொண்டு வந்துவிடுவோம்; அதில்தான், முதன்முதலாக ஞானக்கூத்தன் கவிதைகளைப் பார்க்கிறோம்; படித்ததும், முற்றிலும் புதியனவாக இருக்கின்றனவே என்று பேசிக்கொண்டோம். ‘திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்/ தலையை எங்கே வைப்பதாம் என்று/ எவனோ ஒருவன் சொன்னான்/ களவு போகாமல் கையருகே வை’ (பிரச்னை).
குறிப்பாக, தமிழ் மரபு சார்ந்து அந்தக் கவிதைகள் இருந்தது எங்களைப் பெரிதும் ஈர்த்தது. அவர் கவிதைகளின் ஓசை நயம், சொற்றொடர் அமைப்பு, நிலப்பரப்பு, தமிழ் வாழ்வு, தமிழ் மாந்தர் என விரியும் கவிதை உலகு வெகுவாகவே வசீகரித்துக்கொண்டது. தொடர்ந்து, பின், கஸ்தூரிரங்கன் ஆசிரியராக இருந்தகணையாழி’, ஜெயகாந்தன் ஆசிரியராக இருந்தஞானரதம்’ (அதன் ஆசிரியர் குழுவில் அவரும் இருந்தார் என்று நினைவு), நா. பார்த்தசாரதியின்தீபம்’, பின்னாட்களில் பரந்தாமனின்அஃக்’, வனமாலிகையின்சதங்கைஎன அன்றைய சிற்றிதழ்கள் எல்லாம் ஞானக்கூத்தனின் கவிதை இல்லாமல் இருக்காது. தொடக்கத்தின் புதுமையை அவரது கவிதைகள் ஒருபோதும் இழந்துபோய்விடவில்லை. எழுபதுகளின் தொடக்கத்தில்ஒரு வல்லின இதழ்என்ற பிரகடனத்துடன்கசடதபறமுழு வீச்சுடன் வெளிவந்தது. அந்த இதழில் ஞானக்கூத்தனின் பங்களிப்பு கணிசம்.
எழுபதுகளின் தொடக்கத்தில் நான் சென்னையில் இருந்தபோது, ஞானக்கூத்தனின் முதல் தொகுப்பு, ‘அன்று வேறு கிழமைவந்தது. மாவட்ட மைய நூலகக் கட்டிட அரங்கில், வெளியீட்டு விழாவில் நான் பார்வையாளனாக இருந்து பார்த்திருக்கிறேன்; நல்ல கூட்டம்; பின்னால், கவிஞர் மீரா தமது அன்னம் பதிப்பகம் வாயிலாக அதை வெளியிட்டதில் வெகுவான வாசகர்களையும் சென்றடைந்தது; நூலகங்களிலும் இடம்பெற்றது; அந்நாளில், அந்த நூலுக்குக் கிடைத்த வரவேற்பு நினைத்துப் பார்க்க முடியாதது.
நான் அன்றும் இன்றும் ஞானக்கூத்தனின் வாசகன். என்னுடைய முன்னோடிக் கவிஞர்களில் இன்றியமையாத ஒருவர் அவர். ஞானக்கூத்தன், என் கவிதையில் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தியவரும்கூட; சிறப்பாக, தமிழ் வாழ்வைத்தான் எழுத வேண்டும் என்ற எண்ணத்தை உண்டுபண்ணியவர் - தன் கவிதைகளின் வாயிலாக அவருடைய கவிதைகளிலிருந்து நிறையவே கற்றுக்கொண்டிருக்கிறேன். எடுத்துக்காட்டுக்கு, நிலப்பரப்பைச் சித்தரித்தது, சூழல் அவதானிப்பு, திட்டமான வடிவில் கவிதையைக் கட்டமைப்பது போன்றவற்றைச் சொல்லலாம். நவீன கவிதையின் நுணுக்கங்களைச் சொல்லித்தருவன ஞானக்கூத்தன் கவிதைகள்.
பிற்பாடுதான், தமிழின் மகத்தான இலக்கியச் சிற்றிதழ், ‘எழுத்துகாணக் கிடைத்தது. மார்ச் 5, 1970-ல் வண்ணதாசன் வீட்டுக்குப் போயிருந்த சமயத்தில்தான், கண்ணாடி பதித்த மர பீரோவில் இருந்தஎழுத்துஇதழ் பைண்ட் வால்யூம்களைக் கண்டேன். தி..சியின் உடைமைகள் அவை. வண்ணதாசனிடம் நட்பு உண்டான பிறகு, படிப்பதற்குக் கேட்டேன்; அப்படியே எடுத்துக் கொடுத்தார். ‘எழுத்துகவிதைகள் புதுக்கவிதைகளின் ஆரம்பம்தான். அதனாலேயே அவை சகல பலவீனங்களையும் கொண்டவை. அதற்குள் அயர்ச்சி வந்துவிடும் அநேகருக்கு; எனக்கும் அப்படித்தான்; பிரமிள், நகுலன், சி.மணி, பசுவய்யா, தி.சோ.வேணுகோபாலன், எஸ். வைதீஸ்வரன் போன்றவர்களின் கவிதைகள் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் இருக்கும்.
ஞானக்கூத்தன் கவிதைகள், புதுக்கவிதையின் திசைவழியையே மாற்றியவை. என்னைப் போன்ற கவிஞர்கள் உருவாக வழி உண்டுபண்ணியவை. படிமம், வேண்டாத இறுக்கம், தத்துவச் சுமையின்றி எளிமையாகவும் நேரடியாகவும் கவிதை எழுதலாம் என்ற தைரியத்தை அளித்தவை அவரது கவிதைகள். இந்த வகையில் ஞானக்கூத்தன், நவீன கவிதையின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர்.
ஞானக்கூத்தனின்அம்மாவின் பொய்கள்’, ‘தோழர் மோசிகீரனார்’, ‘பரிசில் வாழ்க்கை’, விட்டுப்போன நரி’, ‘காலவழுவமைதி’, ‘உதை வாங்கி அழும் குழந்தைக்குமுதலான தொடக்க காலக் கவிதைகள் என்றும் கொண்டாடப்படத் தக்கவை. சாதாரண மக்களின் மனவுலகத்துக்கும் அடையாளம் காணக்கூடிய கவிதைகள் அவை. இவ்விதமாகத்தான் ஞானக்கூத்தன், வாசகர் இதயத்தில் இடம்பிடித்தார்.
ஞானக்கூத்தனின் நையாண்டி, தனித்தன்மையுடையது. இப்படியொரு பகடி, புதுக்கவிதையிலேயே விசேஷமானது. அது அவர் கையை விட்டுக் கடைசிவரையில் போகவில்லை; ‘பரிசில் வாழ்க்கைஆரம்ப காலம் எனில்மேம்பாலங்கள்பிற்காலம். அவர், இளமையில் தமிழரசுக் கழகத்தில் இருந்தவர். அய்யா .பொ.சி பற்றியும் அவர் கவிதை எழுதியிருக்கிறார். திருத்தணி மீட்புப் போராட்டத்தில் கலந்துகொண்டவர். இந்தப் பின்னணியிலேயேபரிசில் வாழ்க்கை’, ‘காலவழுவமைதிபோன்றவற்றை இனம் காண வேண்டும்.
பிரமிள், நகுலனுடன் பழகிய அளவுக்கு, நான் ஞானக்கூத்தனிடம் நேரடியாகப் பழகியிருக்கவில்லை. ஞானக்கூத்தன் கவிதையம்சங்கள் பலவற்றையும் ரொம்பவும் பிந்தியே உணர்ந்தேன். இதனால் தனிப்பட்ட முறையில் இன்னும் கூடுதலான மதிப்பு; எனதுகவிதை ரசனைநூலில் ஞானக்கூத்தன் கவிதைகள் பற்றி கட்டுரை எழுதியிருக்கிறேன். அவர் பிறந்த திருஇந்தளூருக்கு மனைவியுடன் போயிருக்கிறேன் - சந்திர ஸ்தலம் என்பதனால். அந்தத் தெருக்களில் நடந்திருக்கிறேன். கவிஞர் கனிமொழியின்சிகரங்களில் உறைகிறது காலம்கவிதை நூல் வெளியீட்டு விழாவுக்கு மனைவியுடன் அவர் வந்து திரும்புகிற வேளையில் அவர் பாதங்கள் தொட்டுக் கும்பிட்டேன்.
அரங்கநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட அவர், தெரிவுசெய்து கொண்ட புனைபெயர்தான்ஞானக்கூத்தன்’, திருமூல நாயனாரின் திருமந்திரத்தில் சிவனைச் சுட்டுகின்ற பெயர்; இந்த மாயம் என்னை எப்போதுமே தொந்தரவு செய்வது; இந்தப் பெயர் எனக்கு ரொம்பவும் பிடித்தமானது.
அஞ்சலி | ஞானக்கூத்தனின் ரசிகை!
ஞானக்கூத்தனின் மனைவி சரோஜா ரங்கநாதன் தொண்டைப் புற்றுநோயால் காலமானார். 1941-ல் கும்பகோணத்தில் பிறந்த சரோஜா, சென்னையில் பொதுப்பணித் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்தார். தீவிர வாசகர். தி. ஜானகிராமன், அசோகமித்திரன், அம்பை ஆகியோரின் புனைவுகள், பொன்னியின் செல்வன் ஆகியவற்றை அவர் விரும்பிப் பல முறை படித்தார். ராஜம் கிருஷ்ணனும் லக்ஷ்மியும்கூட அவருக்குப் பிடித்த எழுத்தாளர்கள். அரிதாகச் சிறுகதைகள் எழுதுவார். ஞானக்கூத்தன் அவரை எழுதச் சொல்வார். அவர் எழுதிய ஒரு குறுநாவல், கலைமகள் பத்திரிகை நடத்திய குறுநாவல் போட்டி ஒன்றில் பரிசு பெற்றது. ஆனால், எழுதுவதைவிட வாசிப்பதிலேயே அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது.
ஞானக்கூத்தனின் பெரும்பாலான கவிதைகளுக்கு அவர்தான் தமது அழகிய கையெழுத்தால் 'fair copy' தயாரித்தார். சரோஜா புனைவுகளையே விரும்பினார் என்றாலும், வாசிப்பில் இருந்த ஆர்வத்தாலும் அன்பின் வெளிப்பாடாகவும் தம் கணவரின் கவிதைகளைத் தவறாமல் வாசித்தார். கடந்த பல ஆண்டுகளில் ஞானக்கூத்தனின் கையெழுத்தைப் புரிந்துகொண்ட மிகச் சிலரில் ஒருவர் என்றும் சொல்ல வேண்டும்.
கடந்த ஓராண்டு காலமாக சென்னையில் மூத்த மகன் வீட்டில் இருந்தார். சென்ற ஆண்டின் இறுதியில் அவருக்குத் தீவிரமான நுரையீரல் தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மீண்டும் அதே இடத்தில் புற்றுநோய் ஏற்பட்டுக் குணப்படுத்த முடியாத நிலையில் மருத்துவக் கவனிப்பைப் பெற்றுவந்தார். கடந்த இரு மாதங்களாக அவர் மருத்துவமனையில்தான் இருந்தார். நோய்களின் விளைவுகள் கடுமையடைந்து மரணமடைந்தார்.
கும்பகோணத்தில் கீழ் நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்து, நிறைய உடன்பிறப்புகளுடன் வளர்ந்தது முதல் வேலை, மூத்த மகள் என்ற முறையில் பொறுப்புகள், மண வாழ்க்கை, அலுவலகப் பணிகளுக்கிடையில் மகன்களை வளர்த்தது, நீண்டகால அரசுப் பணி, நோய், கணவரின் மரணம் என்று பலவித அனுபவங்களோடு அசாதாரணமான, விரிவாக எழுதத்தக்க வாழ்க்கையை வாழ்ந்தார்.
அம்மாவின் பொய்கள்
பெண்ணுடன் சினேகம் கொண்டால்
காதறுந்து போகும் என்றாய்
தவறுகள் செய்தால் சாமி
கண்களைக் குத்தும் என்றாய்
தின்பதற் கேதும் கேட்டால்
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்
ஒருமுறை தவிட்டுக்காக
வாங்கினேன் உன்னை என்றாய்
எத்தனைப் பொய்கள் முன்பு
என்னிடம் சொன்னாய் அம்மா
அத்தனைப் பொய்கள் முன்பு
சொன்ன நீ எதனாலின்று
பொய்களை நிறுத்திக் கொண்டாய்
தவறு மேல் தவறு செய்யும்
ஆற்றல் போய் விட்டதென்றா?
எனக்கினி பொய்கள் தேவை
இல்லையென் றெண்ணினாயா?
அல்லது வயதானோர்க்குத்
தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்
பொறுப்பினி அரசாங்கத்தைச்
சார்ந்ததாய்க் கருதினாயா?
தாய்ப்பாலை நிறுத்தல் போலத்
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா
உன்பிள்ளை உன்னை விட்டால்
வேறெங்கு பெறுவான் பொய்கள்?
••••
காலவழுவமைதி
தலைவரார்களேங்
தமிழ்ப்பெருமாக்களேங்வணக்கொம்.
தொண்ணூறாம் வாட்டத்தில் பாசும் வாய்ப்பய்த்
தாந்தமைக்கு மகிழ்கின்றேன். இன்றய்த் தீனம்
கண்ணீரில் பசித்தொய்ரில் மாக்களெல்லாம்
காலங்கும் காட்சியினெய்க் காண்கின்றோங் நாம்
வண்ணாரப் பேட்டகிள சார்பில் மாலெ
வளமான தாமிழர்கள் வாட லாமா?
கண்ணாளா போருக்குப் போய்வா யேன்ற
பொற நான்ற்றுத் தாயெய் நாம் மறந்திட்டோமா?
தாமிழர்கள் சொகவாழ்வாய்த் திட்டாமிட்டுக்
கெடுப்பவர்கள் பிணாக்குவ்யல் காண்போ மின்றே
நாமெல்லாம் வரிப்பொலிகள் பகைவர் பூனெய்
நாரிமதி படைத்தோரை ஒழிப்போம் வாரீர்
தலைவரார்களேங்
பொதுமாக்களேங் நானின்னும்
யிருகூட்டம் பேசயிருப்பதால்
வொடய் பெறுகறேன் வணக்கொம்
இன்னுமிருவர்பேச இருக்கிறார்கள்
அமைதிஅமைதி
•••
மஹ்ஹான் காந்தி மஹ்ஹான்
எழுந்ததும் கனைத்தார்; மெல்ல
சொற்பொழி வாற்றலானார்:
வழுக்கையைச் சொறிந்தவாறு
வாழ்க நீ எம்மான்என்றார்;
மேசையின் விரிப்பைச் சுண்டி
வையத்து நாட்டில்என்றார்;
வேட்டியை இறுக்கிக் கொண்டு
விடுதலை தவறிஎன்றார்;
பெண்களை நோட்டம் விட்டு
பாழ்பட்டு நின்றஎன்றார்;
புறப்பட்டு நான் போகச்சே
பாரத தேசம்என்றார்;
வாழ்விக்க வந்தஎன்னும்
எஞ்சிய பாட்டைத் தூக்கி
ஜன்னலின் வழியாய்ப் போட்டார்
தெருவிலே பொறுக்கிக் கொள்ள
•••
பரிசில் வாழ்க்கை
வாரத்தில் ஒன்றிரண்டு வெளியூர்க் கூட்டம்
வரப்பார்க்கும் மணியார்டர் மாலை துண்டு
காரத்தில் பேசத்துப் பாக்கிச் சூடு
கல் பிறந்த காலத்தில் பிறந்தோர் தம்மை
நேரத்தில் களிப்பூட்ட அகநானூறு
நெய்யாற்றில் பாலாற்றில் பேசிப் பார்த்த
தீரத்தில் தெரிந்தெடுத்த நகைத்துணுக்கு
தமிழர்க்கு வேறென்ன கொடுக்க வேண்டும்
புகையூதி ரயில் வண்டி எழும்பூர் நீங்கும்
பேச்சாளர் மனதில் கையொலிகள் கேட்கும்
பேச்சாளர் வாய் திறக்க வாய் திறந்து
பழங்குடிகள் கேட்டார் தம் எளிய மூக்கின்
மூச்சுக்கு வயதுமூவா யிரமாம் என்று
முதல் முதலாய்க் கேட்டதனால் திணறிப் போனார்
வாய்ச்சிருக்கும் இந்நாளின் வாழ்வை நொந்தார்
வளம் திரும்ப வேண்டுமெனில் இவருக்கான
பேய்ச் சுரைக்காய் சின்னத்தை மறவோம் என்றார்
பெரியதொரு மாலையிட்டு வணக்கம் போட்டார்
புகையூதி ரயில் வண்டி எழும்பூர் நீங்கும்
பேச்சாளர் மனம் புதிய பேச்சைத் தீட்டும்
ஆத்தூரில் மறு கூட்டம். தலைமை யேற்ற
அதிகப்படி தமிழர் ஒரு சுருதி சேர்த்தார்
காத்தோட்டம் இல்லாத கூட்டத்துக்குப்
பேச்சாளர் சூடேற்றிப் பேசும் போதில்
ஆத்தாடி என்றொருவன் கூச்சலிட்டான்.
அடிதடிகள் பரிமாறிக் கொண்ட பின்பு
நீத்தாலும் உயிர் தொடர்வேன் என்றார். நண்பர்
விடிவதற்குள் நாளிதழில் தலைவரானார்
கும்மியடி தமிழ் நாடு முழுவதும்
குளிர்ந்திடக் கைகொட்டிக் கும்மியடி
காணிக்கை கொண்டு வாருங்கடிகு
லோத்துங்க சோழனைப் பாருங்கடி
நாளை அமைச்சரைப் பாருங்கடிமவ
ராசனைப் பார்த்துக் கும்மியடி
சென்மம் எடுத்தது தீருதடிஇந்த
சித்திரச் சாமிக்குக் கும்மியடி
•••
தோழர் மோசிகீரனார்
மோசிகீரா
மகிழ்ச்சியினால்
மரியாதையை நான்
குறைத்ததற்கு
மன்னித்தருள வேண்டும் நீ
சொந்தமாக உனக்கிருக்கும்
சங்கக்கவிதை யாதொன்றும்
படித்ததில்லை நான் இன்னும்
ஆனால் உன்மேல் அளவிறந்த
அன்பு தோன்றிற்று
இன்றெனக்கு
அரசாங்கத்துக் கட்டிடத்தில்
தூக்கம் போட்ட முதல்மனிதன்
நீதான் என்னும் காரணத்தால்
**
உயர்திரு பாரதியார்
சிறுவயதில் நான் பார்த்த நடனம் ஒன்றில்
பாடினார் இளம் பெண்கள் இருவரேதோ
பாட்டுக்கு. எவரெழுதித் தந்தா ரந்தப்
பாட்டென்று நான் கேட்டேன் உம்மைச் சொன்னார்
சிறுவயதில் நான் சென்ற பொதுக் கூட்டத்தில்
சூடுள்ள சிலவரிகள் ஒருவன் சொன்னான்
எவரெழுதித் தந்தவரி என்றேன். வேர்த்த
முகம்துடைத்துக் கொண்டபடி உம்மைச் சொன்னான்
மணியறியாப் பள்ளிகளில் தண்டவாளத்
துண்டொன்று மணியாகத் தொங்கல் போலக்
கவிஞரிலாத் தமிழகத்தில் எவரெல்லாமோ
கவிஞரெனத் தெரிந்தார்கள் உமக்கு முன்பு
அணைக்காத ஒலிபெருக்கி மூலம் கேட்கும்
கலைகின்ற கூட்டத்தின் சப்தம் போலப்
பிறகவிஞர் குரல் மயங்கிக் கேட்குமின்னும்
நீர் மறைந்தீர் உம் பேச்சை முடித்துக் கொண்டு
**
வகுப்புக்கு வரும் எலும்புக்கூடு
மாணவர்காள் மனிதர்களின் எலும்புக் கூட்டைப்
பார்த்திருக்க மாட்டீர்கள்
மன்னார்சாமி
ஆணியிலே அதைப் பொருத்து. பயப்படாமல்
ஒருவர்பின் னொருவராகப் பார்க்க வேண்டும்
ஏணியைப் போல் இருந்திருப்பான். ஆறடிக்குக்
குறைவில்லை
இது கபாலம்
மார்புக்கூடு
போணிசெய்த பெருங்கைகள்
கைகால் மூட்டு
பூரான்போல் முதுகெலும்புசிரிக்கும் பற்கள்
சுழித்துவிடும் கோபாலன் ஆண்டு தோறும்
புதுசு புதுசாய்ப் பார்ப்பான் இல்லையாடா?’
மாணவர்கள் சிரித்தார்கள் விலாவெடிக்க
ஒட்டிவைத்தாற் போலிருக்கும் சிரிப்பைக் காட்டி
அறைநடுவில் நின்றதந்த எலும்புக்கூடு
**
சைக்கிள் கமலம்
அப்பா மாதிரி ஒருத்தன் உதவினான்
மைதானத்தில் சுற்றிச் சுற்றி
எங்கள் ஊர்க் கமலம் சைக்கிள் பழகினாள்
தம்பியைக் கொண்டு போய்ப்
பள்ளியில் சேர்ப்பாள்
திரும்பும் பொழுது கடைக்குப் போவாள்
கடுகுக்காக ஒரு தரம்
மிளகுக்காக மறு தரம்
கூடுதல் விலைக்குச் சண்டை பிடிக்க
மீண்டும் ஒரு தரம் காற்றாய்ப் பறப்பாள்
வழியில் மாடுகள் எதிர்ப்பட்டாலும்
வழியில் குழந்தைகள் எதிர்ப்பட்டாலும்
இறங்கிக் கொள்வாள் உடனடியாக
குழந்தையும் மாடும் எதிர்ப்படா வழிகள்
எனக்குத் தெரிந்து ஊரிலே இல்லை
எங்கள் ஊர்க்கமலம் சைக்கிள் விடுகிறாள்
என்மேல் ஒருமுறை விட்டாள்
மற்றப் படிக்குத் தெருவில் விட்டாள்
**
விடுமுறை தரும் பூதம்
ஞாயிறு தோறும் தலைமறை வாகும்
வேலை என்னும் ஒரு பூதம்
திங்கள் விடிந்தால் காதைத் திருகி
இழுத்துக் கொண்டு போகிறது
ஒருநாள் நீங்கள் போகலை என்றால்
ஆளை அனுப்பிக் கொல்கிறது
மறுநாள் போனால் தீக்கனலாகக்
கண்ணை உருட்டிப் பார்க்கிறது
வயிற்றுப் போக்கு தலைவலி காய்ச்சல்
வீட்டில் ஒருவர் நலமில்லை
என்னும் பற்பல காரணம் சொன்னால்
ஏற்றுக் கொள்ள மறுக்கிறது
வாரம் முழுதும் பூதத்துடனே
பழகிப் போன சிலபேர்கள்
தாமும் குட்டிப் பூதங்களாகிப்
பயங்கள் காட்டி மகிழ்கின்றார்
தட்டுப் பொறியின் மந்திரகீதம்
கேட்டுக் கேட்டு வெறியேறி
மனிதர் பேச்சை ஒருபொருட் டாக
மதியாதிந்தப் பெரும்பூதம்
உறைந்து போன இரத்தம் போன்ற
அரக்கை ஒட்டி உறை அனுப்பும்
வயிற்றில் உன்னை அடிப்பேனென்னும்
இந்தப் பேச்சை அது கேட்டால்
நன்றி : ஞானக்கூத்தன் படைப்புகள்

சொல்
எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல்
வெளியில் சொல்லும் பழக்கம் எனக்கு
நண்பன் ஒருவனோ நேரெதிர் இதற்கு
ஒன்றையும் சொல்ல மாட்டான் எதற்கும்
மௌனமாய் இருப்பதே அவன் வழியாகும்
பலரும் சொன்னோம்
சொல்லப்படுதலே என்றும் சிறந்தது
அதற்குப் பிறகும் அவன் சொல்லவில்லை.
நாங்கள் வியந்தோம்.
இறக்கும் பொழுதும் சொல்ல மாட்டானா
ஒருநாள் அவனும் இறந்தான்
கட்டைப் புகையிலை போல அவன்
எரிந்ததைப் பார்த்துத்
திரும்பும் பொழுது தெருவில் வெயிலில்
சேவல் கூவிற்று ஒருமுறை விறைத்து.
வழக்கம் போல நான் சொன்னேன்.
புலர்ந்தற் கப்புறமும் கோழிகள் கூவும்
________________________________________
என்ன மாதிரி
என்னை நோக்கி ஒருவர் வந்தார்
எதையோ கேட்கப் போவது போல
கடையா? வீடா? கூடமா? கோயிலா?
என்ன கேட்கப் போகிறாரென்று
எண்ணிக் கொண்டு நான் நின்றிருக்கையில்
அனேகமாய் வாயைத் திறந்தவர் என்னிடம்
ஒன்றும் கேளாமல் சென்றார்.
என்ன மாதிரி உலகம் பார் இது.
________________________________________
காட்சி
வரப்பு
காக்கிப் பயிர்
கம்பி குத்தி
நெட்டைக் கம்பம்
கேடயம்
வாள்
குறுக்கில் விரையும் பறவை
உதைக்கும் சப்தம்
சப்தத்தில் பூமி
ஒரு மீசை
பூசப்பட்ட வானம்
நகராத புரவி
நகர்ந்து போன பகை
நெல்லுப்பயிர்
கள்ளு குடி
குளத்துப்படிக்
கட்டில் வெட்டுப்
புண்ணில் சொட்டு
ஸ்வஸ்தி ஸ்ரீ
ராஜாதி ராஜர்க்கு
யாண்டு
யாண்டு?
அல்லிப் பூவில்
ரத்தக கறை
சூரியனின்
சேப்புத் தலை
தோப்பு
தெம்மாங்கு
தலை முழுகிய
தண்ணீர்
அலை இடி
அலை இடி
அலை
தலை
அலை
தலை
அலை
தலை
அலை
பொம்மைக் குதிரை
ஆசைப்பட்டுக் கனைச்சு
வர்ணம் உதிர்ந்து போச்சு
________________________________________
திணை உலகம்
 (1)
எருமைகள் சாணம்போட
குருவிகள் எச்சம்போட
உருப்பெரிய எலிகள் முன்பே
விருந்துண்டு இல்லம் ஏக
முழங்குறைத் தளக்கும் கையாள்
முல்லைப் பூ கூவக் கேட்டுக்
கிருதயுகம் எழுந்ததம்மா
என் கனவைக் கீறிக்கொண்டு.
(2)
உலகத்தோடொட்டி
யொழுகியொழுகிப்
பலபெற்றோம் இன்னும் உள.
(3)
இன்னும் சிலநாள் அப்புறம் பலநாள்
ஆயினும்
வரத்தான் போகிறது அந்நாள்
விண்குதித்த
சின்னப் பறவைகளின்
பறக்குங்கால் எடுக்குங்கால்
பூளைப் பூகிழியும் நாள்.
________________________________________
உள்ளும் புறமும்
உள்ளும் புறமும்
ஒருங்கே தெரிய
ஒன்றிருப்பது அழகுதான்.
மற்றவை யெல்லாம்
உள்ளும் புறமும்
தனியே தெரிய இருக்கும் பொழுது.
எந்தப் பொருளின்
முடிப்பாகமோ
அடிப்பாகமோ
உள்ளும் புறமும்
ஒருங்கே தெரிய
இருக்கும் இப்பொருள்?
ஒன்றையும் காணாமல்
உள்ளும் புறமும்
தெரிய பொருளின் ஊடு
உலகைப் பார்த்தேன்
உலகம் கோமாளி ஒருவனின் மீசையாய்
நகர்கிறது பக்கவாட்டில்.
________________________________________
தெரு
எல்லாத் தெருக்களையும் போலவே எனதும்
இரண்டு வரிசை வீடுகளுக் கிடையில் அமைந்தது
பிள்ளைப் பருவத்திலிருந்து இன்று வரைக்கும்
அதன் மேல் நடக்காத நாளொன்று கிடையாது
தெருவில் அதிக மாற்றமும் இல்லை
இரண்டு தென்னைகள் அகற்றப்பட்டன
பச்சைப் புல்லின் புதர்கள் இப்போது
இடம்மாறித் தெருவில் வளர்ந்து வருகின்றன
தெருவை நான்காய்ப் பிரித்தால் முதலாம் பகுதியில்
அமைந்ததென் வீடு பழசு ஓடு சரிந்தது
எடுப்பிலேயே வீடிருந்ததால்
தெருவை முழுக்க வயதான பிறகு
ஒருமுறைகூட நடந்து பார்க்கவில்லை.
ஒன்றிலிருந்து திரும்பிய பிறகே
எல்லாத் தெருக்களும் அடைவதாய் இருக்கும்
எனது தெருக்குள் நுழையும் முன்பு
ஒரு கணம் நிற்பேன். தெருவைப் பார்ப்பேன்
தொலைவில் விளையாடும் எனது பிள்ளைகள்
என்னைக் கண்டதும் ஓடி வராதிருந்தால்
வீட்டின் வாசலில் மனைவி காத்திருக்கா திருந்தால்
வீட்டுக் கெதிரில் அந்நியர் ஒருவரும்
வெறுமனே நின்று கொண்டில்லாமல் இருந்தால்
நடையில் வேகம் கூட்டிச் செல்கிறேன்
பிள்ளைகளை வீட்டுக்கு வருமாறு பணிக்கிறேன்
உள்ளே யுகாந்திரமாகப் பழகிய இருளை
அமைதியாகத் தீண்டிக் கொண்டே
அவளைப் பெயர் சொல்லி அழைக்கிறேன்
வெள்ளைப் பல்லியை நகரச் செய்து
விளக்குத் திரியைச் சற்றுப் பெரிதாக்குகிறேன்
முற்றத்துக்கு வந்து நின்று கொண்டு
வாசல் படிக்கப்பால் தெரியும் தெருவை
என்னுடன் மனைவியும் பார்க்கப் பார்க்கிறேன்
சின்னதாய்த் தெரிகிறது தெரு.
________________________________________
பாலை
வெளுக்கத் துவைத்து முதல் நாள் வெயிலில்
உலர்த்தி எடுத்த வண்ணச் சீருடை
அனைத்தும் கொண்டு கந்தலை நீக்கி
பூசைப்பசு கோயிலுள் நுழையுமுன் விழித்துக்
காலை குடிக்கும் பால்கொணர்ந்து வைத்து
விடியற் பறவைகள் ஒருசில கூவ
வந்தேன் என்றாள் வராது சென்றாள்
யாருடன் சென்றாள் அவரை ஊரார்
பலரும் அறியத் தானறியா மடச்சி
உருக்கி ஊற்றும் சாலைக் கரும்பிசின்
எஞ்சின் உருளைக் கலன்கள் சிதறி
நடப்பார்க் கெளிதாய் வெண் மணல் தூவி
மதியச்சோறு நெடுங்கிளைப் புளியின்
நிழலில் உண்போர் அவரைக் கேட்கவோ
கரையிற் செல்வோர் நிழல் கண்டஞ்சி
சேற்றில் ஒளியும் மீன்நீர்க் குளங்கள்
போகப் போகக் குறையும்
ஆகாச் சிறுவழி அது எது என்றே.
________________________________________
போராட்டம்
கைவசமிருந்த காதற்
கடிதங்கள் எரித்தேன் வாசல்க்
கதவுமுன் குவித்துப் போட்டு
காகிதம் எரிந்து கூந்தல்
சுருளெனக் காற்றில் ஏறி
அறைக்குள்ளே மீளப் பார்க்கக்
கதவினைத் தாழ்ப்பாளிட்டேன்
வெளிப்புறத் தாழ்ப்பாள் முன்னே
கரிச்சுருள் கூட்டம் போட்டுக்
குதித்தது அறைக்குள் போக
காகிதம் கரியானாலும்
வெறுமனே விடுமா காதல்.
________________________________________
இக்கரைப் பச்சை
பொக்கைவாய் அய்யர்ப் பெரிய கண்ணாலத்தில்
வக்குமாப் பிள்ளைக்கு மட்டுமோ?
நிற்கின்ற
வாழைக்கும் தோரணத்துக்கும்
சூழ்மனிதருக்கும் சேர்த்து அயலூரே!
________________________________________
பரிசில் வாழ்க்கை
வாரத்தில் ஒன்றிரண்டு வெளியூர்க் கூட்டம்
வரப்பார்க்கும் மணியார்டர் மாலை துண்டு
காரத்தில் பேசத்துப் பாக்கிச் சூடு
கல் பிறந்த காலத்தில் பிறந்தோர் தம்மை
நேரத்தில் களிப்பூட்ட அகநானூறு
நெய்யாற்றில் பாலாற்றில் பேசிப் பார்த்த
தீரத்தில் தெரிந்தெடுத்த நகைத்துணுக்கு
தமிழர்க்கு வேறென்ன கொடுக்க வேண்டும்
புகையூதி ரயில் வண்டி எழும்பூர் நீங்கும்
பேச்சாளர் மனதில் கையொலிகள் கேட்கும்
பேச்சாளர் வாய் திறக்க வாய் திறந்து
பழங்குடிகள் கேட்டார் தம் எளிய மூக்கின்
மூச்சுக்கு வயதுமூவா யிரமாம் என்று
முதல் முதலாய்க் கேட்டதனால் திணறிப் போனார்
வாய்ச்சிருக்கும் இந்நாளின் வாழ்வை நொந்தார்
வளம் திரும்ப வேண்டுமெனில் இவருக்கான
பேய்ச் சுரைக்காய் சின்னத்தை மறவோம் என்றார்
பெரியதொரு மாலையிட்டு வணக்கம் போட்டார்
புகையூதி ரயில் வண்டி எழும்பூர் நீங்கும்
பேச்சாளர் மனம் புதிய பேச்சைத் தீட்டும்
ஆத்தூரில் மறு கூட்டம். தலைமை யேற்ற
அதிகப்படி தமிழர் ஒரு சுருதி சேர்த்தார்
காத்தோட்டம் இல்லாத கூட்டத்துக்குப்
பேச்சாளர் சூடேற்றிப் பேசும் போதில்
ஆத்தாடி என்றொருவன் கூச்சலிட்டான்.
அடிதடிகள் பரிமாறிக் கொண்ட பின்பு
நீத்தாலும் உயிர் தொடர்வேன் என்றார். நண்பர்
விடிவதற்குள் நாளிதழில் தலைவரானார்
கும்மியடி தமிழ் நாடு முழுவதும்
குளிர்ந்திடக் கைகொட்டிக் கும்மியடி
காணிக்கை கொண்டு வாருங்கடிகு
லோத்துங்க சோழனைப் பாருங்கடி
நாளை அமைச்சரைப் பாருங்கடிமவ
ராசனைப் பார்த்துக் கும்மியடி
சென்மம் எடுத்தது தீருதடிஇந்த
சித்திரச் சாமிக்குக் கும்மியடி
________________________________________
நாயகம்
மனிதர் போற்றும் சாமிகளில்
ஒற்றைக் கொம்பு கணபதியை
எனக்கு பிடிக்கும்.  ஏனெனில் வே
றெந்த தெய்வம் வணங்கியபின்
ஒப்புக் கொள்ளும் நாம் உடைக்க?
________________________________________
பிரச்னை
திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்
தலையை எங்கே வைப்பதாம் என்று
எவனோ ஒருவன் சொன்னான்
களவு போகாமல் கையருகே வை.
________________________________________

No comments:

Post a Comment