Friday, August 10, 2018

சி.மணி


சி.மணி (1936 - 2009)






·           இயற்பெயர் = எஸ்.பழனிசாமி
·           புனைபெயர் = சி.மணிவே.மாலி
·           இவர் ஆங்கிலப் பேராசிரியர்
·           இருமுறை தமிழ்ப்பல்கலைக்கழகப் பரிசு பெற்றவர்
·           ஆசான் கவிதை விருதுகவிஞர் சிற்பி விருது, “விளக்குஇலக்கிய விருது பற்றுள்ளார்
கவிதை:
·           வரும் போகும்
·           ஒளிச் சேர்க்கை
·           இதுவரை
·           நகரம்
·           பச்சையின்நிலவுப் பெண்
·           நாட்டியக்காளை
·           உயர்குடி
·           அலைவு
·           குகை
·           தீர்வு
·           முகமூடி
·           பழக்கம்
·           பாரி
விமர்சனம்:
·           யாப்பும்கவிதையும்


கவிதை மீதொரு உரையாடல்: சி.மணி - யார் அந்த மனிதன்?

அறிவைப் புறம் தள்ளிய தேடல். கற்றவற்றுக்கு வெளியேயும் பயணிக்கிற மனம். லாவோட்ஸு மீது மோகம். முடிவிலாத பெருவெளியில் அலையும் மன உடல். கற்பிதங்களை ஒதுக்கிய ஞானவெளி இருப்பு. ஜென் துறவியோ என்று எண்ணத் தோன்றும் உரையாடல். ஆழ்மனத் தீண்டலிலிருந்து கவிதையை உருவாக்குதல். மொழியை வசீகரமாகவும் புதிதாகவும் பயன்படுத்துதல். வார்த்தைகள், வரிகள் எல்லாவற்றிலும் புதிய பிறப்பின் ஈரம். தமிழ்க் கவிதையில் புதுவெளி. வாழ்ந்த காலத்தில் அதிகம் அறியப்படாத பொக்கிஷம். இப்படி சி.மணியைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
சி.மணியின் படைப்புஎன்ற தலைப்பில் உள்ள கவிதை படைப்பின் ரகசிய வெளியைத் திறந்து காட்டுகிறது.
அருங்கல்லொன்று கிடைத்தபோது / அகத்திலூறிச் சுழல்கின்ற / நிழலைச் / செதுக்க வந்தேன்என்கிறார். இந்த வார்த்தைகளுக்குப் பொருள் சொல்வது கவிதையைச் சிதைத்துவிடும். நிழலைச் செதுக்க வந்தேன் என்ற வரிகளை வாசிக்கிற யாரும் விரிகிற மனவெளியில் தொலைந்துபோவார்கள். அரூபமும் ரூபமும் ஓடிப்பிடித்து விளையாடுகிற அற்புத இடம் இது. அதே கவிதையின் இறுதி வரிகள் சி மணியைப் பிரபஞ்ச மனிதனாய் அதிரவிடுகின்றன.
சாத்திரக் கோட்பாடுகளை / நெஞ்சில் கரையவிட்டு /
குறித்தபடி கோவில் / எழுப்பவரவில்லை /
நிறைந்த அனலாவியை / விழைந்த கோலமாக்கும் /
விரிந்த பாழ்வெளியில் / பால்வெளியாய்ப் / படைக்க வந்தேன் என்கிறார். ஒவ்வொரு சொல்லும் பெருவெடிப்பாய் உள்ளே இறங்குவதைத் தாங்காத மனம் விளிம்புடையும்.
இன்னொரு கவிதை யார் அது?’
வளர்ந்தாலும் தேய்ந்தாலும்
நிலவு நிலவே. அது போல
மனிதன் மனிதனே.
போட்டாய் ஒரு போடு, மாலி.
அது சரி,
யார் அந்த மனிதன்?
மாலி என்ற பெயரிலும் சி.மணி எழுதுவார். இந்தக் கேள்வி அவர் தன்னிடமே கேட்டுக்கொள்கிற கேள்வி என்பதே இதன் அழகியல்.
சி.மணியின் பல கவிதைகள் வார்த்தைகளால் ஆனவையல்ல. வார்த்தைகள் கூட்டிப் போகிற கண்படாத இடமும் வாசக அக்கறையும் இணைந்து பெறுகிற மனவெளியே இவரது கவிதைகள்.
பழக்கம்என்னும் தலைப்பில் உள்ள கவிதை...
பழக்கத்திற்கு இவனொரு அடிமை.
பழக்கமற்ற எதையும் இதுவரை / செய்ததில்லை - இனிமேல்
செய்யப்போவதில் பழக்கமற்றது / சாவது ஒன்றுதான்.
சாவதும் / பழக்கமானதோ என்னவோ,
அதுவும் நாள்தோறும்.
வாசித்து முடிக்கும்போது முதல் வரியும் இறுதி வரியும் இணைந்து கவிதைமீது அறியாத வெளியின் வினை வெளிச்சம் படிகிறது. இந்த அனுபவத்தை அவரது எந்தக் கவிதையிலும் காணலாம்.
நவீன வாழ்தலின் சிக்கல்களைச் சந்திக்க வல்ல புதிய பார்வையைத் தேடிக் கவிஞர்கள் அலைந்தபோது கண்படாத மனிதனைக் காட்டி வியக்கவைத்தவர் சி. மணி. நவீன அன்றாடத்தையும் (வரும் போகும்) ஆன்ம வாழ்வையும் (முக்கோணம்) கவிதையில் கொண்டாடியவர். மரபையும் நவீனத்துவத்தையும் ஒரு புள்ளியில் சந்திக்கவைத்து முன் அறிந்திராத கவிதையைக் காட்டி வியக்க வைத்தவர். வரும் போகும்கவிதை மொழி அத்தகையது. காதடைக்கும் இரைச்சலுடன் / டவுன் பஸ்கள் வரும் போகும்... என்று தொடங்கும் கவிதை நவீன அன்றாடத்தில் தொடங்கி மனித வெளியின் அன்றாடத்தில் கலக்கும் அற்புதக் கவிதை.
இதுவரைகவிதைத் தொகுப்பில் முதல் கவிதை முக்கோணம்’. பழைய இலக்கியங்களின் வரிகளை டி.எஸ்.எலியட் போலத் தமது கவிதையில் இவரும் பயன்படுத்துகிறார். சில விளைவுகளுக்காக அப்படிச் செய்வதாக அவரே குறிப்பிடுகிறார்.
முக்காலம் தொடர்பில்லா முக்கூடுஎன்பவரும்
போனது வராது, வருவது தெரியாது,
நடப்பதைக் கவனிஎன்பவரும் அறிவிலிகள்:
நினைவும் நம்பிக்கையும் உள்ள மட்டும்
போவது எதுவுமில்லை, வருவது ஒன்றுமில்லை,
எல்லாம் இருப்பதுவே, நடப்பதுவே.
இந்தக் கவிதை நமது மனதிலிருக்கும் அறிவை, கற்பிதங்களைத் துடைத்து எறிந்துவிடுகிறது. அறிந்திராத வெளியை நிறைக்கின்றன வினைபடுகிற வார்த்தைகள். சரி இது எப்படிக் கவிதையாகிறது? மொழியைப் பொருள் கொள்வதிலிருந்து விடுவித்து உணர்தல் தளத்துக்கு வாசகனை நகர்த்துவதால் கவிதையாகிறது. அறிந்த உலகிலிருந்து அறியாத வெளியில் மனதைச் சற்றே நிறுத்துகிற மாயம்தான் கவிதையை நிகழ்த்துகிறது. கவிதையின் மற்ற வரிகளை வாசித்தால் சி.மணியின் மன உடல் நமக்கும் வசப்படலாம்.
முற்றிய வித்து / பழமையின் திரட்டு; புதுமையின் பிறப்பிடம்.
மின்னும் விண்மீன் / சென்றதன் தன்னொளி; வருவதன் சின்னம்.
பிறந்த குழந்தை / முன்னோரின் வாரிசு; புது மனிதனின் மூலம்.
முக்கால வினையை ஒரு புள்ளியில் நிறுத்தி முன்னும் பின்னும் அசைத்து கலாபூர்வமானதொரு கூத்தை நிகழ்த்துவது இங்கே கவிதையாகிறது. பழமையின் திரட்டு என்று முற்றிய விதையைச் சொல்லும் அழகு புது வண்ணம். முந்தைய வார்த்தையின் ஓசை அடங்குவதற்குள் சொல்கிறார் புதுமையின் பிறப்பிடம் என்று. மற்றுமான வரிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக ருசிக்கிறது மனம். ஒரு விண்மீனை, பிறந்த குழந்தையை இவரால்தான் இப்படிப் பார்க்க முடியும்.
முக்காலம் மூன்றல்ல / ஒன்று - ஒரே முக்கோணம்;
மனித இனத்தைச் சுற்றி வளைத்திருக்கும் / முக்கோணம்.
இறுதி வரியில் காலத்தை முக்கோணம் ஆக்கி மனித இனத்தைச் சுற்றி வளைக்கும் பார்வை முன் எழுதாத கவிதையை எழுதி முடிக்கிறது. நிகழ் உலகின் காலவினையை முடக்கிவிடுகிறது. கவிதைக்குள் பிறக்கிறது புதிய வெளி. இந்தக் கவிதை 1959-ல் எழுதப்பட்டது. புதிய எழுத்து, புதிய கவிதை என்று கவிஞர்கள் அன்று கொண்டாடிய கவிஞர் சி மணி.
சி.மணி (1936 - 2009)

தமிழ்ப் புதுக்கவிதை இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர் சி.மணி.யாப்பிலிருந்து கவிதை உரைநடை நோக்கி நகர்ந்த காலப் பகுதியில் அதிகம் எழுதியவர். புதுவடிவத்தை நிலைநிறுத்தும் வகையில்  கோட்பாட்டுப் பின்னணியை உருவாக்க விரும்பிய பிச்சமூர்த்தி, க.நா.சுப்ரமணியம்,செல்லப்பா ஆகியோருடன் கவிதையியல் பற்றி விவாதித்தவரும் அவர்தான்.'யாப்பும் கவிதையும்' என்ற மணியின் நூல்தான் புதுக்கவிதை பற்றிய முதலாவது ஆய்வு நூல்.யாப்பிலிருந்து விடுப்பட்டதுதான் புதுக்கவிதை என்று நிறுவினாலும் அதில் மரபின் தொடர்ச்சியைக் காணமுடியும் என்று ருசுப்படுத்தியவரும் அவர்தான்.அதை வெறும் கருத்தாக்கமாக மட்டுமல்லாமல் படைப்பின் ஆதாரத்துடனும் முன்வைத்தார். அவரைத் தவிர்த்த முன்னோடிகள் பலரும் உரைநடை சார்ந்த மொழியைக் கவிதைக்குப் பயன்படுத்தியபோது செய்யுளின் நடையை மறுவார்ப்புச் செய்தவர் சி.மணி. இத்தனைக்கும் மேற்கத்திய நவீன கவிதையின் பாதிப்பு அவரிடம் அதிகம்.

டி.எஸ்.இலியட்டின் 'பாழ் நிலம்' கவிதையின் நேரடித் தாக்கம் தெரிகிற 'நகரம்' என்ற சி.மணியின் கவிதையில் கூட மரபார்ந்த சொற்றொடர்களும் உவமைகளும் பயின்றிருந்தன. அவருடைய சமகாலக் கவிஞர்களான சுந்தர ராமசாமி, எஸ்.வைதீஸ்வரன் போன்றவர்கள் கவிதைக்குப் புதிய மொழியைக் கையாண்டபோது மரபை அங்கதத்துக்கு உட்படுத்தும் மொழியைப் பயன்படுத்தினார் சி.மணி.'காதடைக்கும் இரைச்சலுடன் டவுன்பஸ்கள் வரும் போகும்' என்று சமகாலத்திய மொழியில் தொடங்கும் கவிதை அதன் நீட்சியில் 'சூடகத் தளிர்க்கை மாதரொடு சிகரெட் பிடிகை மாந்தரும்' என்று நிறம் மாறும். இந்த வரி புதுசா? பழசா? என்று இப்போதும் யோசிக்கத் தோன்றுகிறது. இந்த மரபுத் திரிபு சி.மணியின் கவிதைகளுக்கு ஓர் அங்கதத் தொனியைக் கொடுத்தது.தமிழ்ப் புதுக் கவிதையில் அங்கதத்துக்கும் இடமுண்டு என்று காட்டியவர் அவராக இருக்கலாம்.

சி.மணியின் கவிதைகளை வெவ்வேறு கட்டங்களில் வாசித்திருக்கிறேன். ஒவ்வொருமுறையும் அவை ஒவ்வொரு விதமாகப் பொருள்பட்டிருக்கின்றன. சில சமயம் அவை காலத்தால் பழசாகி விட்டவையாகத் தோன்றியிருக்கின்றன. சில சமயம் சமகாலத்துக்குப் பொருந்தக் கூடியவையாகத் தென்பட்டிருக்கின்றன. மணியின் கவிதைகள் பற்றிய கட்டுரையில் சுந்தர ராமசாமி ஒரு படிமத்தை
முன்வைத்திருப்பார். சி.மணியின் கவிதைகள் தரும் மனவுணவர்வு ஏதோ கோவில் பிரகாரத்தில் காலத்தின் களிம்பும் பிசுக்கும் படிய நிற்கும் சிற்பங்கள் ஏற்படுத்தும் பழமையான உணர்வைத் தருகின்றன என்று குறிப்பிட்டிருந்தார். சி.மணியின் கவிதைகளை எப்போது படிக்க நேர்ந்தாலும் இந்தப் படிமம் குறுக்கிடுவதைத் தடுக்க முடிந்ததில்லை.மணியின் கவிதை மொழிதான் அதற்குக் காரணம் என்று இப்போது இனங்காண முடிகிறது. கவிதையின் மொழிதான் விரைவான மாற்றங்களுக்கு ஆட்படுகிறது. பத்தாண்டுகளுக்கு ஒரு முறையாவது அதன் போக்கிலும் கூறுமுறையிலும் மாற்றம் நிகழ்கிறது.புதிய கவிதையியல் பழைய கவிதை மொழியை பின்னுக்குத் தள்ளிவிடுகிறது. சி.மணி இன்று வாசிக்கப்படும் கவிஞராக இல்லாமல் முன்னோடியாக மட்டும் கருதப் படுவது இதனால்தான்.இவ்வளவுக்கும் அவர் அன்று கையாண்ட கவிதைப் பொருள்கள் பலவும் இன்றும் பொருத்தப்பாடு உடையவை.

பண்டிதன் எழுதுவ துதமிழ் இல்லை.அ
பண்டிதன் கணக்குப்படி;
பண்டிதன் எழுதுவ துதமிழ் இல்லை;
பண்டிதன் கணக்குப்படி. ஆ
க மொத்தம்
தமிழர் நமக்குத் தெரியவில்லை
தமிழ் எ ழு த.

சி.மணியின் 'மனக்கணக்கு' என்ற இந்தக் கவிதையில் பொதிந்திருக்கும் அங்கதம் இன்றும் பொருத்தமானது. ஆனால் கவிதை தரக் கூடிய புத்துணர்வுக்குப் பதிலாக பழைய சோர்வையும்
வடிவரீதியிலான சமத்காரத்தையும் மட்டுமே இன்று பெற முடிகிறது.

புதுக் கவிதையில் சர்ரியலிசக் கூறுகளைக் கொண்ட கவிதைகளையும் எழுதியிருக்கிறார். அவரைத் தொடர்ந்து வந்த ஞானக்கூத்தன் அவருக்கு அழுத்தமான வடிவத்தையும் பொருளையும்
கூட்டினார் என்று கருதலாம்.

திண்னை இருட்டில் எவரோ கேட்டார்
தலையை எங்கே வைப்பதாம் என்று
களவுபோகாமல் கையருகே வை

என்ற ஞானக்கூத்தனின் கவிதையுடன் சி.மணியின் 'தீர்வு' கவிதையை ஒப்பிட்டுப் பார்ப்பது சுவாரசியமான இலக்கிய விளையாட்டாக இருக்கும்.

என்ன செய்வதிந்தக் கையை
என்றேன் என்ன செய்வதென்றால்
என்றான் பெரியசாமி.கைக்கு வேலை
என்றிருந்தால் பிரச்னையில்லை;
மற்ற நேரம் நடக்கும்போதும்
நிற்கும்போதும் இந்தக் கைகள்
வெறும் தோள்முனைத் தொங்கல்; தாங்காத
உறுத்தல் வடிவம் தொல்லை என்றேன்.
கையக் காலாக்கென்றான்.

இரண்டிலும் உள்ள அங்கதமும் சர்ரியலிசக் கூறுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். இரண்டு வெவ்வேறு கவிதைகள்தாம் எனினும் புதிய ஒரு கவிதைமொழியின் தொடக்கத்தைக் குறிப்பவை.
இந்தப் பரிசோதனைக் கட்டத்தை அல்லது அறிமுகக் கட்டத்தைத் தாண்டிய கவிதைகளை சி.மணியிடம் பின்னர் காணமுடியவில்லை.ஆத்மாநாம் பற்றி அவர் எழுதிய ஒரு கவிதை கவிதைக்கான
எந்த எழுச்சியையும் கொள்ளாமலிருந்தது என்பது இப்போது நினைவுக்கு வருகிறது.

என்னை பாதித்து சொந்தக் கவிதையை எழுதத் தூண்டிய சி.மணி கவிதை ஒன்றிருக்கிறது.'சுவர்கள்' என்ற அந்தக் கவிதையை 'பூமியை வாசிக்கும் சிறுமி' தொகுப்பில் வாசிக்கலாம். இங்கே
மணியின் கவிதை. 'அறைவெளி'

தப்பிவிட்டேன் என்று விழித்தேன்
சுற்றும் முற்றும் பார்த்தேன் மேலே
வானம்;
நான்கு பக்கமும் கூரிருள்.
கூரை சுவர்கள் எதுவுமில்லை
எல்லாப் பக்கமும் வழிகள் தெரிந்தன.

வெட்டவெளிதான் இது அரையல்ல
என்று சில கணம் துள்ளியது என் மனம்.

மேற்கே நடந்தேன் இடித்தது ஒரு சுவர்
தெற்கே நடந்தேன் இடித்தது ஒரு சுவர்
வடக்கே நடந்தேன் இடித்தது ஒரு சுவர்
கிழக்கே நடந்தேன் இடித்தது ஒரு சுவர்
எம்பிக் குதித்தேன் இடித்தது கூரை.
சி.மணி என்ற பெயரில் 'எழுத்து' சிற்றேட்டின் மூலம் புதுக்கவிதையின் சோதனையாளராக அறிமுகமானவர் ஆங்கிலப் பேராசிரியர் பழனிச்சாமி.'வரும்போகும்', 'ஒளிச்சேர்க்கை'  'இதுவரை'ஆகியவை அவருடைய கவிதைத் தொகுப்புகள்.இவை தவிர மொழிபெயர்ப்புகளிலும் ஈடுபட்டிருக்கிறார். மைதிலி மொழிக் கவிஞரான உதய் நாராயண் சிங்கின் கவிதைகளின் மொழியாக்கம் அண்மையில் வெளியாகியிருக்கிறது.இலக்கியம் தவிர பிற துறைகள் சார்ந்த நூல்களையும் எழுதியுள்ளார். கடந்த ஆறாம் தேதி சி.மணி காலமானார்.

அமரர் டாக்டர்.அய்யப்ப பணிக்கர் மலையாளக் கவிதையில் சில சோதனைகளைச் செய்தவர். ஒற்றை வார்த்தையை வெட்டி எழுதுவது, சொற்க¨ளை அபத்தமான தொனி வரும்படி பிரித்துப் போடுவது, கார்ட்டூன்தன்மையுள்ள வரிகளை உருவாக்குவது என்று விளையாடிப் பார்த்தவர். ஒருமுறை கவிதை பற்றிய விவாதத்தில் கேட்டார்.' தமிழில் ஒரு கவிஞர் இலக்கியத்துக்கு விளக்கம் சொல்வதுபோல ஒரு கவிதை எழுதியிருப்பாரே? ஒரு இங்கிலீஷ் வாத்தியார்.அந்தக் கவிதை உனக்கு ஞாபகம் இருக்கிறதா?'

'இருக்கிறது. இலக்கியம் என்றால் என்னவென்றேன்?/புலவர் ஒருவர் இதுகூடத் தெரியாதா/ இலக்கு + இயம்தான் என்றார்.' இந்த மூன்று வரிதான் கவிதை'

'இந்தக் கவிதைக்குள் என்னமோ இருக்கிறது இல்லையா?' என்றார் பணிக்கர் சார்.
அதில் வார்த்தைச் சாதுரியம் தவிர வேறு இல்லை என்ற எண்ணம் எனக்கு. அதில் என்னதான் இருக்கு என்று அப்போதே கேட்டிருக்கலாம். கேட்கவில்லை.அய்யப்பப் பணிக்கர் மறைந்துவிட்டார். சி.மணியைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தால் அவரைக் கேட்கலாம் என்று சமாதானம் செய்து கொண்டேன்.சி.மணியும் மறைந்து விட்டார். அந்தக் கவிதைக்குள் ஒன்றுமில்லை என்றாலும் ஞாபகத்தில் உறைந்து விட்டது.

சி.மணி ஒரு மேதை

ந.முத்துசாமி மிகவும் மதித்துப்போற்றும் படைப்பாளிகள் மௌனி, சி.மணி ஆகிய இருவர் தான். ஒரு தற்செயல் ஒற்றுமை மௌனியின் இயற்பெயர் கூட மணி!
இலக்கிய உலகில் முத்துசாமியின் உற்ற நண்பர் கவிஞர் சி.மணி தான்.
இளமைக் காலத்தில் பார்த்து பழகியவுடன் சி.மணி உலக அளவில் பிரபலமாகி நிச்சயம் நோபல் பரிசு வாங்குவார் என்ற நம்பிக்கை தனக்கு ஏற்பட்டதாக இன்றும் கூறுவார். அவருக்கு தகுதிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கவேயில்லையே. 
சி.மணி ஒரு கவிதையில் அடக்கமாக எழுதினார்- நானொரு மினி மேதை.
“ A great man is always willing to be little.” மணி ஒரு முழுமையான மகத்தான மேதை.
அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இண்டர் மீடியட் படிக்க சேர்ந்த போது மாணவ நண்பர் தாமோதரன் புருவத்தை உயர்த்தி சொல்லியிருக்கிறார்.மூன்று பைத்தியங்கள் இங்கே வந்திருக்கின்றன.
அந்த மூவர் சி.மணி, வி.து.சீனிவாசன், வெங்கடேசன்.
அன்று துவங்கிய நட்பு முத்துசாமி வாழ்நாளில் மறக்கமுடியாதபடி ஆகியிருக்கிறது.

சி.சு.செல்லப்பாவுக்கு சி.மணியின் நெடுங்கவிதைகள் பிடிக்கவேயில்லை.
க.நா.சு அப்போது சி.மணியின் கவிதைகளைப் பார்த்து உதட்டைப்பிதுக்கி விட்டார்.
உன்னத கவிஞன் எப்படியெல்லாம் புறக்கணிக்கப்பட்டிருக்கிறான்.
1969ல் நடைபத்திரிக்கை முதல் இதழில் சி.மணி சிறிய கவிதைகள் வே.மாலி என்ற புனைபெயரில் எழுதினார். ந.முத்துசாமியின் காலம் காலமாகநாடகம், ஞானக்கூத்தனின் ஐந்து கவிதைகள் பிரசுரமாகியது.
நடை இதழ்களில் வே.மாலியாக சி.மணி கவிதை எழுதிய போது ஒரு வேடிக்கை. சி.மணியின் கவிதைகளை அலட்சியப்படுத்திய க.நா.சு வுக்கு வே.மாலியின் கவிதைகள் மிகவும் பிடித்துப்போய் விட்டது. யார்யா இந்த வே.மாலி. யார் இவன்? ரொம்ப நன்னா எழுதுறானே!என்று விசாரித்திருக்கிறார்.
வெங்கட் சாமினாதன் அப்போது நண்பர்களிடம் அறிவுறுத்தியிருக்கிறார்: சி.மணி தான் வே.மாலி என்கிற விஷயம் க.நா.சுவுக்குத் தெரிந்து விடக்கூடாது. தெரிந்தால் மாலியின் கவிதைகள் விஷயத்தில் பல்டி அடித்து விடுவார்!

நான் 1983ம் ஆண்டு மார்ச் 27ந்தேதி க்ரியாவில் சி.மணியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அன்று அங்கு அவருடன் எஸ்.வி.ராஜதுரையையும், க்ரியா ராமகிருஷ்ணனையும் சந்தித்தேன். புதையல் போல அங்கே இருந்த பழைய நடை’, ’கசடதபற’ ’பிரக்ஞைஇதழ்களை வாங்கினேன். சி.மணியின் வரும் போகும்கவிதைத் தொகுப்பு வாங்கிய போது சி.மணி அதில் கைழுத்திட்டு தந்தார்.
சி.மணி இன்று இல்லை. ஆனால் அவருடைய முக்கிய மொழிபெயர்ப்பு ஒன்று பற்றி சொல்ல வேண்டும்
சுய மேம்பாடு பற்றிய தத்துவ விளக்கங்களை “ Fourth way” என விவரித்து குர்ஜீஃப்  (George Gurdjief) அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
 இந்த நான்காம் வழியை தன் பிரசங்கங்களிலும், எழுத்திலும் குர்ஜீஃப் சீடர் உஸ்பென்ஸ்கி ( P.D.Ouspensky) மேலெடுத்துச் சென்றார்.
உஸ்பென்ஸ்கி மறைந்து பத்தாண்டுக்குப் பின் அவருடைய மாணவர்கள் 1957ம் ஆண்டு புத்தகமாக பிரசுரித்தார்கள்.
இந்த “Fourth Way” நூலை பிரமாதமாக மொழிபெயர்த்திருக்கிறார் சி.மணி.
சேலத்தில் அவருடைய மனைவியிடம் இந்த மொழி பெயர்ப்பு இருக்கிறது. ஒரு லட்சம் ரூபாய் ராயல்டி தொகை எதிர்பார்க்கிறார்.
இது உடனே தமிழில் புத்தகமாக வெளி வரவேண்டிய முக்கிய நூல். அந்த நூல் வெளியிடப்படுவது சி.மணிக்கு மிகச்சிறந்த அஞ்சலியாக இருக்கும்.
சி.மணியின் உயிர்த்தெழுதலாக அந்த மொழிபெயர்ப்பு அமையும்.
இப்படி ஒரு பயணம் சி.மணி – (1936-2009)   – 17.4.09
சி.மணி மறைந்து விட்டார் நேற்று, என்று நண்பரும் விருட்சம் என்னும் சிறுபத்திரிகாசிரியருமான அழகிய சிங்கர் தொலை பேசியில் சொன்னார். கொஞ்ச காலமாக அவர் உடல் நிலை சரியில்லாது இருக்கிறார் என்று க்ரியா ராம க்ரிஷ்ணனும் எனக்குச் சில மாதங்கள் முன் தொலைபேசியில் சொல்லியிருந்தார். ஐந்தாறு வருடங்களுக்கு முன் சேலத்தில் காலச் சுவடு நடத்திய சி.சு.செல்லப்பா கு.ப.ராஜகோபாலன் பற்றிய கருத்தரங்கின் போது தானே நடக்க சக்தியில்லாத ஒரு தளர்ந்த முதியவரை இரவர் கைத்தாங்கலாக ஹாலுக்குள் அழைத்து வந்து ஓர் இருக்கையில் அமர்த்தினர். பக்கத்தில் இருந்தவரிடம் (அனேகமாக சச்சிதானந்தமாக இருக்கவேண்டும்), "யார் அவர்?" என்று விசாரித்தேன். "யோவ், சி.மணிய்யா அது!" என்று என் அறியாமையை இடித்துப் பேசும் குரலில் அதிர்ந்து போனேன். உடனே அவரிடம் விரைந்து சென்று, என்னை அறிமுகப் படுத்திக்கொண்டேன். அவரது தளர்ந்த நிலை, என் அறியாமை, அதிர்ச்சி, என்னை அவருக்கு நான் அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டி வந்த நிலை எல்லாம் எல்லாம் ஒரு விதத்தில் சொல்லப் போனால், தமிழ் உலகம் தன்னை அறிமுகப் படுத்திக்கொள்ள வேண்டிய இன்றைய நிலையின் அன்றைய முன் அறிவிப்பு போன்ற உருவகக் காட்சியோ என்று தோன்றுகிறது. உருவகத்தின் ஒரே ஒரு விவரம் தான் மாறுகிறது. நான் என்னை அறிமுகப் படுத்திக்கொள்ள விரைந்தேன். இன்று தமிழ் நாடு அப்படியெல்லாம் செய்யவேண்டிய அவசியம் கொண்டதல்ல. சி. மணிதான் தன்னை இன்றைய தமிழ்க் கவிதையின் ஒரு புது அத்தியாயத் தொடக்கத்தில் பங்கு கொண்ட கவிஞர் என்று தன்னை தமிழுக்கு நினைவுபடுத்தவேண்டும். தமிழ் இலக்கிய உலகம் கேட்குமோ கேட்காதோ எனக்கு நிச்சயமாகச் சொல்லத் தெரியவில்லை.
நான் என்னை அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம், அவர் யார் என்று எனக்குச் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் என் நினைவில் சுமார் முப்பது முப்பதைந்து வருடங்களுக்கு இடையில் நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாத காரணம் தான். எழுபதுகளின் ஆரம்ப வருடங்களில் ஒரு நாள் நான் சென்னையில் விடுமுறையில் வந்திருந்த போது ந.முத்து சாமி தான் கடற்கரைக்கு என்னை அழைத்துச் சென்று அங்கு சி.மணி, வி.து.ஸ்ரீனிவாசன், இன்னும் ஒரு சேலத்துக் காரர், பெயர் மறந்து விட்டது, எல்லோரையும் அறிமுகப்படுத்தி வைத்தார். அவர்கள் எல்லோரும் சென்னையில் கல்லூரித் தோழர்கள் என்றே நினைக்கிறேன். அப்படித்தான் ஒரு சின்ன நண்பர்கள் கூட்டம் எழுத்துக்கு ஒருமுகமாக அறிமுகமானது. அவர்கள் எல்லோரிலும் சி.மணி தான் ஒரு ராஜ தோரணையும், நெடிய உருவமும் கொண்டு தனித்துத் தெரிந்தார். அன்று astral bodies பற்றி முதன் முறையாக அவர் பேசக் கேட்டேன். இலக்கியம் பற்றியோ, கவிதை பற்றியோ பேசவில்லை. வி.,து. ஸ்ரீனிவாசனும் நிறையப் படித்தவராகத் தோன்றியது. ஸ்ரீனிவாசன் தத்துவ உலகில் சஞ்சாரம் செய்தார்.
சி.மணியைப் பார்த்த போது அவரை நான் எழுத்து பத்திfரிகையில் அவர் எழுதியிருந்த நீண்ட நரகம் கவிதையில்
கால் பட்ட மணலிலும்
கண்பட்ட மனதிலும்
பல சுவடு பதித்து,
பதித்த நிலை தெரியாது
குதித்தோடும் ஒரு கும்பல்;
அதைத்தொடரும் மற்றொன்று
இன்னல் தனித்தே வராதா?
என்று எழுதக்கூடும் ஒருவரைப் பார்த்தேனே ஒழிய
கலைந்த மழையுள, மறைந்த பூவுள
தாங்கிய செங்கை தலைக்கண் மேலுள
ஒலித்த வளையுள, ஓய்ந்த விரலுள
சரிந்த தலைப்பால் தெரிந்த மலருள,
என்று எழுதியிருந்த, அதை சாத்தியமாக்கும் ஆழ்ந்த, பரந்த தமிழ்ப் பாண்டித்யமும் அதை நினைத்த கணத்தில் எடுத்தாளும் திறனும் கொண்ட ஒரு தமிழ் பண்டிதத் தோற்றத்தை நான் காணவில்லை.
மிகுந்த தோழமையோடும் பழகினார். ஒரு சில மணிநேரங்கள் தான். பின் அவரை நேரில் பார்க்கவில்லை. நடை பத்திரிகையில் எங்கள் நெருக்கம் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் அவர் தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்த கலிங்கத்துப் பரணியில் ஒரு பகுதிப் பாடல்களை (கடைதிறப்பு மிக சுவாஸ்ய்மான பகுதி) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்ததைப் பார்த்தேன். கைப் பிரதியில் தான். எனக்குத் தெரிந்து அவை எங்கும் பிரசுரமாகவில்லை.
சி.மணி ஆங்கில இலக்கியத்தில் தான் பட்டம் பெற்றவர் என்று நினைக்கிறேன். ஒரு வேளை தமிழிலும் பட்டம் பெற்றிருக்கலாம். ஆனால் அவர் எழுத்து பத்திரிகையில் அதன் தொடக்க வருடத்திலிருந்தே எழுதிய கவிதைகள், மரபும், மரபு மீறலும், அம்மீறலில் தனக்கென ஒரு தனித் தடமும், கொண்டவராக, அதிலும் இவை கவிதை, தமிழ், யாப்பு என்ற வட்டத்துக்குள் சிறைப்பட்டு விடாது, ஒரு பரந்த உலகையும், பல துறைகளையும் ஒன்றிணைத்த பார்வையை, எள்ளலும், சமூக விமர்சனமும், ஒரு இளைஞனின் தான் அன்னியப்பட்டுவிட்ட நிலையில் தந்திருப்பது ஒரு புதிய வருகையை, தமிழுக்கு வந்துள்ள வளத்தைக் கொண்டாடுவது தான். பல விஷயங்களில் பழமைப் பிடிப்பும் பிடிவாதமும் கொண்ட செல்லப்ப அந்த நாடகளில் சி.மணியின் புதிய பார்வையையும் குரலையும் இனங்கண்டு கொண்டாடி ஆர்ப்பரித்தது அப்போது மட்டுமல்ல, இப்போதும் நினத்துப் பார்க்கும் போது சந்தோஷமாகத்தான் இருக்கிறது. சி.மணியின் பார்வையும் எழுத்தும் கஷ்டப்பட்டு யோசித்து வலிந்து பெற்ற ஒன்றல்ல. அது தாமாக சட்டென வெளிப்படுவது. சென்னை பஸ் நிறுத்தத்தில் பஸ் வந்ததும், கூடியிருக்கும் கூட்டம் பஸ்ஸில் இடம் பிடிக்க முண்டியடிக்கும் காட்சியைக் கண்டு இதை எதற்கு ஒப்பிடலாம், பழம் இலக்கியத்தில் தான் பண்டிதன் என்று காட்டிக்கொள்ள எந்த வரியை எடுத்தாளலாம் என்று யோசிக்கும் காரியமில்லை. "யோவ் பொம்பிளைங்கள ஏறவிடுய்யா முதல்லே" என்று ஆரம்பித்துத் தொடரும் கூச்சலையும் முண்டியடித்து ஏறும் காட்சியையும் பார்த்த உடனேயே சி.மணி உதட்டில் நகையேற,
சேவலே முன்னென்போரும், இல்லை
பெடையே முன்னென்போரும், இல்லை,
வரிசையே நன்றென்போரும், ஏறுவோரும்
தேர்ந்ததே தேரினல்லால், யாவரே
தெரியக்கண்டார்.
என்று மனதுக்குள் வரிகள் ஓடிக்கொண்டிருக்கும்.
நரகம், வரும் போகும் போன்ற நீண்ட கவிதைகளில் வரும் இன்றைய நடப்புலக நகரக் காட்சிகள், பழந்தமிழ் இலக்கியத்தில் பரிச்சமுள்ளவர்களுக்கு உடனே நினைவுக்கு வருவது மதுரைக் காஞ்சியில் வரும் நகரக் காட்சிகள். அதிலும் ஆடவர்கள் கவனத்தைக் கவர கணிகையர் தம்மை வண்ணக் கோலங்களில் அலங்கரித்து வரும் இரவு நகரக் காட்சியும் அடக்கம். ரோமானினர்களும், கிரேக்கர்களும் தம் நாட்டு உடைகளில் உலாவருகிறார்கள். நகரம் என்றால் எல்லாம் தான் அதில் அடக்கம்.
பழந்தமிழ் பா வரிகளை அப்படியே கையாண்டுள்ளதை நான் பாரதி தாசனில் பார்த்திருக்கிறேன். அவர் ஒரு தமிழாசிரியர் தானே. ஆனால் அவர் அந்த வரிகள் வசதியாகச் சேர்ந்தவை. அதற்கு மேல் அதற்கு மாறிய, வேறுபட்ட பயனோ, அர்த்தமோ இருந்ததில்லை. ஆனால் சி.மணி அந்த வரிகளை அப்படியே கையாள்வதில்லை. பழம் இலக்கிய வரிகள என்ற அடையாளத்தைத் தக்க வைத்துக்கொண்டு அதை மாற்றி, இன்றைய சமூகத்தின் நடப்புகளைக் கிண்டலோடு விமரிசிக்கும் பொருளில் கையாள்கிறார். அது வெறும் கிண்டல் இல்லை. சமூக விமர்சன்மும் பொதிந்தது. ஒரு ஜென் ஞானியின் பார்வையும், திருமூலரின் எளிமைத் தோற்றம் கொண்ட ஆழமும், முரணே போன்ற உண்மையும், கொண்ட தத்துவ விசாரமும் அடங்கியிருக்கும். முதல் கவிதையே
முற்றிய வித்து
பழமையின் திரட்டு; புதுமையின் பிறப்பிடம்(1959).
தோற்ற முரண் கொண்ட உண்மை.
இந்த விசாரம் கடைசி வரை தொடர்கிறது.
சிந்திப்பதற்கு மிகச் சிறந்த முறை எது என்றால்
சிந்திகாமல் இருந்து விடுவது தான். (1994)
இரண்டு மே ஏதோ ஒரு epigram மாதிரித் தோன்றினாலும் முன்னது இரண்டு வரிகளிலேயே கவிதையாகியுள்ளது. பின்னது ஒரு கவிதையின் தொடக்க வரியாகக் கொள்ளாமல், இரண்டு வரிகளினுடனேயே நின்று விட்டால் epigram- ஆக நின்று விடுகிறது.
எழுத்துக்கு இப்படி ஒரு கவிதைக் குரல் கிடைத்ததில் செல்லப்பாவுக்கு சந்தோஷமே. அதைக் கொண்டாடவும் செய்தார். சி.மணிக்கு தன் கவித்வ வெளிப்பாட்டிற்கு ஒரு மேடை கிடைத்தது பற்றி சந்தோஷமே. ஆனால் எழுத்து பத்திரிகையின் புதுக்கவிதையின் பிரயாணம் அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. மரபை வரித்துக்கொண்டோரிடமிருந்து எதிர்ப்பு. தாம் புரட்சிக்காரர்களாக்கும் என்று கோஷமிடுவோரிடமிருந்தும் எதிர்ப்பு. அத்தோடு இவ்விரு சாராரையும் சேராத, செல்லப்பா போல புதுமை இலக்கியக்காரர்களிடமிருந்தும் எதிர்ப்பு. எல்லா எதிர்ப்பும் கிண்டலோடுதான். அதெல்லாம் பழைய கதை. இப்போது ஜஸ்டீஸ் பார்ட்டிக்காரர்களும், செஞ்சட்டை வீரர்களும், திராவிட கழகங்களும் அவர்களுக்கு அன்று வெறும் காந்தியாக இருந்தவரை, அண்ணல் காந்தியாக்கி அவர் சிலைக்கு மாலை அணிவிப்பது போல, இப்போது எல்லோரும் புதுக்கவிதைக் காரர்கள் தாம். ஆனால், சி.மணி எழுதிக்கொண்டிருந்த காலத்தில் அவருக்குக் கிடைத்த எதிர் வினை தான் தமிழ் இலக்கிய உலகத்தின் குணங்களில் குறிப்பிடத்தக்க விசேஷமான ஒன்று.
க.நா.சு. செல்லப்பாவின் எழுத்து பத்திரிகையில் வந்த எதையும் அங்கீகரிக்கத் தயாராயில்லை. "ட்.எஸ். இலியட் செய்ததைத் திரும்பச் செயவதில் என்ன இருக்கு?" என்றார். காரணம் எழுத்து பத்திரிகையின் மீதும் செல்லப்பா மீதும் இருந்த பகைமை உணர்ச்சி. எழுத்து கடை மூடிய பிறகு வெகு காலம் கழிந்த பின்னர் அவர் எழுத்து வையும் செல்லப்பாவையும் பாராட்டி எழுதியவர் தான். க.நா.சுவுக்கு என ஒரு தனி சிஷ்ய கோடிகள் இருந்தார்கள். அவர்களும் அவர் வழியொட்டி சி.மணியைக் கண்டு கொள்ளவில்லை. ஷண்முக சுப்பையாவைக் கொண்டாடியவர்கள் சி.மணியைக் கண்டு கொள்ளாத வேடிக்கை எங்கு நடக்கும்? தமிழ் நாட்டில். மெத்தப் படித்தவர்களுக்கு டி.எஸ் இலியட்டின் Waste land-ஐ பிரதி செய்ததாகச் சொல்வது தம்மை உயர்த்திக்கொண்டதாகவும் இருக்கும், தாம் காணச் சகிக்காத சி.மணியை மட்டம் தட்டியதாகவும் இருக்கும் என்ற எண்ணம். அவர்கள் மெத்தப் படித்தவர்கள் மட்டுமே. அவர்களுக்கு வெறும் உத்தியையும் ஒரு உத்தி தந்த சிருஷ்டியையும் குழ்ப்பிக்கொள்பவர்கள். தம்மில் குழ்ப்பம் இல்லாவிட்டாலும் குழ்ப்பம் இருப்பதாகச் சொல்லி மகிழ்ந்தவர்கள். இந்திய மொழிகள் பலவற்றில் waste land-ன் பாதிப்பைக் காணலாம் என்று பார்தீய சாஹிக்தயவின் ஆசிரியர் என்னிடம் சொன்னார். எனக்குத் தெரிந்து மலையாளத்தில் அய்யப் பணிக்கர் இருக்கவே இருக்கிறார். இதில்லாம் தெரியாதென்று இல்லை. வேண்டுமென்றே புரளி செய்பவர்களை என்ன செய்யமுடியும்?. சி.மணியின் நரகம் சொல்வதை டி.எஸ் இலியட்டும் சொல்லவில்லை. அய்யப்ப பணிக்கரும் சொல்லவில்லை.
எழுத்து பத்திரிகை தன் கவிதையை நிராகரித்தது என்ற காரணத்தால், சி.மணி மட்டுமல்ல, தர்மூ சிவராமூ, சுந்தர ராமசாமி என்று சகட்டு மேனிக்கு எல்லோரையுமே நிராகரித்தவர்களும் உண்டு. சி.மணி நடை பத்திரிகையில் வே.மாலி என்று இன்னொரு புனை பெயரில் எழுதிய கவிதைகளைக் கண்டு ஆர்ப்பரிப்பதில் க.நா.சு.வுக்கு தயக்கமிருக்கவில்லை. வே.மாலி என்று எழுதுவது சுந்தர ராமசாமி என்று அவர் நினைத்தார். நான் அவரிடம் இது அவர் நிராகரிக்கும் சி.மணி என்று சொல்லவில்லை. அவருக்கு விஷயம் தெரியாது என்றில்லை. செல்லப்பாவை வெளிப்படையாக அங்கீகரிகக் கூடாது என்ற ஒரு தீர்மானம். அதில் இரையானது சி.மணி. 1964-65-ல் தில்லியில் என்னுடனான நேர்பேச்சில் அவர் சொன்னது, "எழுத்து மூலம் செல்லப்பா வெளிக்கொணர்ந்த இரண்டு முக்கிய பெயர்கள்: ஒன்று தருமூ சிவராமூ, இரண்டு வெ. சாமிநாதன்:" மற்றொரு சமயம், "செல்லப்பா எதைப் பற்றி எழுதினாலும், அதை நான் கட்டாயம் பார்த்தாகணும். நான் அவரிடமிருந்து அதில் புதிதாகத் தெரிந்து கொள்ள ஏதும் இருக்கும்" ஆனால் இதையெல்லாம் அவர் எழுதியதில்லை. க.நா.சு போலத்தான் அன்று சி.மணியெல்லாம் ஒரு கவிஞரா என்று எழுதியவர்களும். எழுபதுகளில் பிரக்ஞை, தாமரை போன்ற இதழ்களில் ஒரு campaign- என்றே அதைச் சொல்ல வேண்டும். அப்படி ஒரு காட்டமான தொடர்ந்த எதிர்ப்புப் பிரசாரம் நடந்தது.
·ப்ராய்டிய மனப் பிறழ்ச்சி, அந்நியமாதல், எக்ஸிஸ்டன்ஸியலிஸம்,, இதெல்லாம் முதலாளித்வ சமூகத்தின் சீ£ர் கேடுகள்" என்று சோவியத் துண்டுப் பிரசுர பொது உடமைத் தத்துவ நோக்கில் நா.வானமாமலை எழுதலானார். இது முன் தீர்மானிக்கப்பட்ட கட்சிப் பார்வை. நா.வானமாமலை ரொமப விஸ்வாசமான கட்சிக் காரர். மற்றக் கட்சிக்காரர்கள் போல இலக்கியம் இன்னும் மற்ற சமாச்சாரங்கள் பற்றி ஏதும் தானே அறிந்து கொள்ளாதவர். மேலும் சி.மணியின் கவிதைகளில் பாலியல் ரொமபவும் பச்சையாகப் பேசப்படுகிறது என்று வேறு குற்றம் சாட்டியிருந்தார். வேறு எதற்கும் யாருக்கும் பதில் சொல்லாத சி.மணி பழம் இலக்கியங்களில் பேசப்பட்டிருக்கிறதே ஐயா, நான் அவ்வளவு தூரம் போகவில்லையே என்று பதில் சொல்லியிருந்தார். நா. வானமாமலை, இலக்கியத்தில் கொள்ளப்பட வேண்டுவதும், கொள்ள வேண்டாததும் எல்லாம் தான் இருக்கும். கூளப்ப நாயக்கன் காதலும் இருக்கிறது. விறலி விடு தூதும் இருக்கிறது. அதையெல்லாம் ஒதுக்க வேண்டும்". என்றார்., ஆண்டாளும் கம்பனும், குறுந்தொகை இன்னும் மற்ற அகப் பாடல்களும் இருக்கின்றனவே, அவற்றையும் ஒதுக்கிவிடலாமா? என்று சி.மணி கேட்டிருக்கலாம். அவர் கேட்கவில்லை என்று தான் நினைக்கிறேன். அவருக்கு இந்த வாதங்கள் புரிவதில் நம்பிக்கை இல்லை. நீ எழுதுவதெல்லாம் கவிதையா என்று கேட்டவர்களுக்கே பதில் எழுதவில்லை. க.நாசு.வுக்கு அவர் பதில் சொன்னதில்லை.
அவரது இயல்பு அது. ஆனால், எழுத்திலும் நடையிலும் மற்ற இலக்கியச் சிறுபத்திரிகைகளிலும் தன் காலத்தில் எழுதிய மற்ற புதுக்கவிஞர்கள் ஆரவார வரவேற்பு பெற்ற இடங்களில் கூட சி.மணிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. Personal rivalry என்ற தளத்தில் மற்ற கவிஞர்களிடமிருந்தும், கண்டு கொள்ளாமல் ஒதுக்குவது என்ற வகையில் இலக்கிய கர்த்தாக்களிடமிருந்து வரும் எதிர்ப்பு இலக்கிய தளத்தில் புரிந்து கொள்ளத்தக்கதாக இல்லை. இது அந்த ஆரம்ப கால நோய்க்கூறுகளில் ஒன்று என்று தோன்றுகிறது. அந்தக் காலத்தில் மிகவும் பேசப்பட்ட, அவர்கள் தமக்குள் தாம் தான் பெரியவன் என்ற மிதப்பில் மிதந்தவர்கள் ஒருவரை ஒருவர் நிராகரித்துக் கொண்டார்கள். அது போல் தானே சி.மணிக்கும் நேர்ந்தது என்று கேட்டால், இவர்கள் அனைவரும் ஒன்று போல சி.மணியை நிராகரித்தார்கள் என்பதுதான் வேடிக்கை. பின்னர் அந்த ஆரம்பக் கால காட்டம் எல்லாம் மறைந்த பிறகு அன்று எதிர்த்தவர்களே சி.மணியைப் பாராட்டவும் செய்தார்கள். தம் மனதுக்குள் தம் அந்நாளைய எதிர்ப்பை எண்ணி வருந்திய்மிருப்பார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில், எனக்குத் தெரிந்து வேறு சில எதிர்ப்புக்களுக்கு அவர்கள் வருந்தியது எனக்குத் தெரியும்.
தமிழ் இலக்கியம் அறிந்த எந்த யாப்பின் வகைப்பட்டதும் அல்ல இது என்ற பண்டித கண்டனத்திற்கு மாத்திரம் அவர் விரிவாக செல்வம்என்ற பெயரில் பதில் தந்தார். அது அவசியமா என்ன? அதை அவர்கள் எதிர்கொள்ளவும் இல்லை. அதன் காரண்மாக இதென்ன யாப்பு வகை? என்ற கேள்வியையும அவர்கள் அன்று நிறுத்தவும் இல்லை. காலவோட்டத்தில் அந்த்க் கேள்வி தானாகவே மறைந்தும் விட்டது. ·ப்ராய்டிஸ் மனப் பிறழ்ச்சி, முதலாளித்வத்தின் சீரழிவு போன்ற கண்டனக் குரல்களும் மறைந்து விட்டன.
ஆனால் நம் இருப்பின் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தால் தான் தமிழ் உலகம் நாமும் இருக்கிறோம் என்று ஒப்புக்கொள்ளும். நாம் அமைதியாக இருந்துவிட்டால், நாம் ஒரு காலத்தில் இருந்த தடையமும் மறைந்து விடும். சத்தமிட்டுக் கேட்கும் குரல்களின் குணம் என்ன தரம் என்ன என்ற கேள்விகளை தமிழ் உலகம் கேட்பதில்லை. சத்தமே தரம், ச்த்தமே குணம் அதற்கு. இப்படித் தான் சார்வாகன் என்ற கவிஞரும் மறக்கப்பட்டு விட்டார். எழுதிக்கொண்டே இருக்கவேண்டும். நான் இருக்கிறேன் என்ற சத்தம் அவர்களுக்குக் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.
தமிழ் இலக்கிய உலகம் சி.மணியை அங்கீகரிக்கவில்லை. அவரைக் கண்டுகொண்டது அமெரிக்கா வாழ் தமிழ்ர்கள் அளித்த விளக்கு விருது. தமிழ் நாடு எல்லை தாண்டி கேரளம் தந்த குமரன் ஆசான் பரிசு. இது ஏன் இப்படி நிகழ்கிறது என்று நாம் சற்று யோசித்தால் நல்லது.
எழுத்து நின்றபிறகு, சி.மணி அதிகம் எழுதியவரில்லை. கணையாழி பத்திரிகையில் அவ்வப்போது சிறு கவிதைகள் எழுதி வந்திருக்கிறார். ஆனால் அறுபதுகளின் மணி அல்ல அவர். எழுபதுக்களுக்குப் பின் அதுவும் மெல்ல மெல்ல மங்கத் தொடங்கிவிட்டது.
ஆனால், ஆரம்பத்திலிருந்து அவருக்கு இருந்த கார்லோஸ் காஸ்டனாடா, குர்ஜீ·ப், ஜென், ஈடுபாடுகளில் அவர் மன்ம் முழுதுமாகத் தோய்ந்து விட்டது என்று தான் சொல்லவேண்டும். சில வருஷங்களுக்கு முன் வெளிவந்த தாவோ தே ஜிங் மொழிபெயர்ப்பு புத்தகம் அவரிடமிருந்து நமக்குக் கிடைத்துள்ள மிக முக்கியமான கொடை. மொழிபெயர்ப்புத் தான். சீன மொழியிலிருந்து ஒரு சீனரே ஆங்கிலத்தில் தந்துள்ள பிரதியிலிருந்து பெற்ற தமிழ் மொழி பெயர்ப்பு இது. சி.மணிக்கு இமாதிரியான விசாரணகளில் உள்ள ஈடுபாடு, கவித்வ மனம், மொழி வல்லமை எல்லாம் இம்மொழிபெயர்ப்பில் சாட்சியம் பெறுகின்றன.
வாசலைத் தாண்டிப் போகாமலே
உலகம் அனைத்தையும்
ஒரு மனிதன் தெரிந்து கொள்ள முடியும்
ஜன்னல் வழியே எட்டிப் பார்க்காமலே
வானத்துத் தாவோவை
ஒரு மனிதன் பார்க்க முடியும்
அதிகம் பயணிக்கும் ஒருவன்
மிகவும் குறைவாகவே தெரிந்து கொள்கிறான்.
ஆரம்பத்தில், 1959 வெளிவந்த அவர் முதல் எழுத்திலிருந்தே இத்தகைய விசாரணைகளோடு தான் அவர் பயணம் தொடங்கியதை திரும்ப நினைவுக்குக் கொள்ளலாம். பயணத்தின் முடிவிலும் அதே முரண்பட்ட உண்மைகளை அடந்திருப்பது பயணத்தின் தொடக்கமா, முடிவா, பயணம் தானா என்று சிலருக்குக் கேள்விகள் எழும். இன்னொரு கவிதை சி.மணியினது
ஒரு உண்மை தேடி நச்சரித்தான்:
ஓ குருவே
இறப்புக்குப் பிறகு என்ன?
குரு சொன்னார், பார்வையில் குறும்புடன்,
ஓ அதுவா,
பிறப்புக்குப் பிறகு என்ன?
70-க்களிலிருந்து அவர் அறுபதுக்களில் தெரியவந்த சி.மணியாக இல்லையே என்று எனக்கு வருத்தம் ஒரு பக்கம். அவரது கவித்திறனின் முழு வியாபகத்தை அவரது நீண்ட கவிதைகளில் தான் காண்கிறோம். புதுக்கவிதை தோற்றத்திற்குப் பிறகு நீண்ட கவிதைகளை யாரும் எழுதுவதில்லை. வெற்றிகரமாக அதைச் சாதித்தவர் சி.மணி தான். அவரது கவித்வ வாழ்வு கடைசி வரை ஏதோ வகையில் தொடர்ந்தது தான். தாவோ தேஜிங் சாட்சியப்படுத்துவது போல். ஆனால் அறுபதுகளில் அவரது கவித்வம் கண்ட வீச்சு காணப்படவில்லை. இதற்கு காரணம் சி.மணியின் ஆளுமை இயல்பா அல்லது தமிழ் இலக்கிய உலகின் குணவிசேஷங்களா? எனக்கு என்னவோ வருத்தமாகத்தான் இருக்கிறது. ஒரு கவிஞனை மூச்சடைக்கச் செய்துவிட்டோமோ என்று. இயல்பான பயணம் அல்ல இது. தடைக்கற்களை பாதை எங்கும் கொட்டி விட்ட பயணம்.
இலக்கிய பயணத்தில் மாத்திரம் இல்லை. தொடக்கத்தில் நெருங்கியிருந்த நண்பர்கள் கூட கால கதியில் ஒவ்வொருவராக விலகி தூரச் சென்று விட்டார்கள் என்று தான் சொல்லவேண்டும். இனி சி.மணியால் என்ன பயன் என்றோ என்னவோ? சி.மணியின் முதல் கவிதைத் தொகுப்பை (அவரது மூன்று நீண்ட கவிதைகளையும் கொண்ட வரும் போகும்) எழுபதுகளில் வெளியிட்ட க்ரியா ராமகிருஷ்ணன் தான் சி.மணியின் முமுக் கவிதைத் தொகுப்பையும் (இது வரை) பின் தாவோ ஜிங் மொழிபெயர்ப்பையும் வெளியிட்டு இன்னும் பல தளங்களில் அவரது ஒத்துழைப்பை வேண்டிக்கொண்டவர். அவருக்கு ஆரம்பத்திலிருந்து நட்பும் ஆதரவும் தந்தவர் எனக்குத் தெரிந்து ராமகிருஷ்ணன் மாத்திரம் தான். தனித்து விடப்பட்டிருந்த சி.மணிக்கு இந்த நட்பு இதம் தந்திருக்கும்.
*********

சி.மணி கவிதைகள்
அர்ப்பணம்
குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கவனித்துக்கொண்டு
என்னைச் சுதந்திரமாய்
அந்நியனாக இருக்கவிட்ட
ஜகதாவுக்கு
*
கோணம்
நீ கவிதை எழுதுவதும்
அவன் மலம் எடுப்பதும்
மதிப்பீட்டில் வேறானாலும்
வகையில் ஒன்றுதான்
ஒரு கோணத்தில் பார்த்தால் பார்த்தால்
அவனது
உனதைவிடச் சிறந்தது.
மேலும்
அலைவுகளை விட்டுச் செல்வதைவிட
சுவடற்று மறைவது மேல்.
*
பிரிவு - சி.மணி கவிதை
வேதனை, விழிக்கு  விளிம்பு கட்ட
நீர்காணா ஏரிபோல் நெஞ்சு பிளக்க
தூறலிடைக் காடாக மாநிலம் மங்க
குளவியின் துளையொலி செவியில் சுழல
விழுந்த பிணமணம் நாசியில் ஏற
கசக்கும் நாக்கு மண்ணைச் சுவைக்க
அனலும்  பனியும் மேனிக்கு ஒன்றாக
சாக்காட்டு உலகில் என்னை விட்டு
கூடுவிட்ட பறவையென
ஓடி மறைந்தாய்
மயக்கம் - சி. மணி

சாய்வு நாற்காலியில்
வளைந்து கொடுத்து,
கதவு விளிம்பில்
காலை உதைத்து,
நீரில் தூண்டிலெனக்
கதையில் ஆழ்ந்திருக்க,
விழுந்தது விழியோரம்
எட்டிப் பார்த்த முகம்
என்றுநான் விழிதூக்க
சிமிட்டியது கால் விரல் நகம்.
எரிகல் வீழ்ச்சியென்று
பார்க்க முயன்று
சிரிக்கும் விண்மீன்
பார்த்த மயக்கம்.
தலையசைத்துத் திரும்பவும்
கவிதையில் ஆழந்தேன்
இடையீடு
1. சொல்ல விரும்பிய தெல்லாம்
சொல்லில் வருவதில்லை
2. எத்தனையோ மாற்றங்கள்
குறிதவறிய ஏமாற்றங்கள்
மனம்புழுங்க பலவுண்டு
குதிரை வரைய குதிரையே
வராது; கழுதையும் வரலாம்.
இரண்டும் கலக்கலாம்.
எலிக்குப் பொறிவைத்தால்
விரலும் விழுவதுண்டு.
நீர்தேடி அலையும்போது
இளநீரும் கிடைக்கும்.
3. என்றோ ஒருமுறை
வானுக்கு விளக்கடிக்கும்
வால் மீனாக
சொல்ல வந்தது சொல்லில்
வந்தாலும், கேட்பதில் சிக்கல்.
கனியின் இனிமை
கனியில் மட்டுமில்லை,
சுவைப்போன் பசியை,
சுவைமுடிச்சைச் சார்ந்தது.
4. எண்ணம்
வெளியீடு
கேட்டல்
இம்மூன்றும் எப்போதும்
ஒன்றல்ல ஒன்றென்றால்
மூன்றான காலம்போல் ஒன்று
மினியுகம்
சனி த்துவிட்டது
மினி யுகம்; ஒழிந்தது
நனி பெரும்மனிதர் கொற்றம்.
இனி
மினி மக்கள் காலம்
மனி தனைவிட்டு
மினி தனைப்பாடு போற்று
குனி என்பேச்சைக் கேள்,
னெனி லெனக்குத் தெரியும் நானொரு
மினி மேதை
இலக்கியம்
"இலக்கியம் என்றால் என்ன என்றேன்
 புலவர் ஒருவர், இது கூடத் தெரியாதா
இலக்கு கூட்டல் இயந்தான் என்றார்"

ஜப்பானிய ஹைக்கூ கவிதைகள்
தமிழில் சி. மணி
படகுக்கு மேலே,
காட்டு வாத்துகளின்
வயிறுகள்.
- பாஷோ
அந்தமாதி ஒரு நிலவு.
சற்று நிற்கிறான் திருடன்,
பாட
- பாஷோ

மறுப்பு
தேன்நிலா சீழ்வடியும்
தொழுநோய்க் கூனனாக
வடிந்தசீழ் உருண்டோடி
மஞ்சள்மீன் கட்டியாக,
உலகத்துப் பசுமையெல்லாம்
விழியுறுத்தும் பழுப்பாக,
கூட்டுக்குள் மூச்சு
குமிழுக்குள் காற்றாய்
ஏகும் வழி தேட,
ஒரே கணத்தில் விரக்தி
வடிவாகி நரைக்க
ஓ நான் கேட்டதும்
நீ
தனி ஊசல் போல்
இடவலமாய்த் தலையசைத்தாய்
-
 காற்றுக்கு
 கயிறிட் டிழுத்து வந்து
 முளையடித்து
முடியிட்டுக் கட்டிவிட்டார் *

இருப்பதை நினை வூட்ட அசைவு தேவை.
விழி யசைவில் காதல்
இடையசைவில் கூடல்
மூச்சசைவில் வாழ்வு *
காதடைக்கும் இரைச்சலுடன்
 டவுன்பஸ்கள் வரும்போகும் *
அணைப்பு
 என்னை
 நீரா யணைத்து யணைத்து
 விட்டதும் கரியானேன் ஆனதும்
 இருவிழிப் பொறியால் தீமூட்டித்
 திரும்ப நெருப்பாக்கி.
                                             -   எழுத்து ஆகஸ்டு 1965
சொல்கிறார்கள்
எழுத்திலே கூடாதாம் ;
பாலுணர்ச்சி கூடினால்
பச்சையாம்
வாலை இளநீரை வாய்விழியால்
வாரிப் பருகும் இவர்கள்
இளமை கொடுக்கும் துணிவில்
இடித்துக் களிக்கும் இவர்கள்
வயது வழங்கிய வாய்ப்பில்
அமர்ந்து சிலிர்க்கும் இவர்கள்
இருவரைக் கட்டிலேற்ற ஊதி
முழக்கியூர் கூட்டும் இவர்கள்
இருளில் ரகசியமாய் வெட்கி
மருவி மயங்கும் இவர்கள்
பிறகு தவழவிட்டு ஊரெல்லாம்
பெருமை உரைக்கும் இவர்கள்
எல்லாம் இவர்கள்தான் - வேறு யார்
சொல்வார்கள்? கூடாதாம்; பச்சையாம்
எழுத்திலே பச்சை எழுத்தாளன்
மனத்திலே பச்சையென்றாகுமா?
 நாடகத்தில்
பாத்திரங்கள் பேச்செல்லாம்
 ஆசிரியர்
பேச்சா?
 நரகம் எனது நரகமா?
நரகத்
தலைவன் நரகமா?”
பலவகை ஆறுகள்
 எனக்குள் இருக்கும் கடலில்
கலக்கும்;
 எழுபவை கடல்முகில்
இறப்பு

சிறிதா பெரிதா
திலகமாய்த் திரண்டதா
பாழ்நுதலாய்ப் பரந்ததா
மாலியவள்
விழியாய்க் குறுகியதா
வாள்நோக்காய் நீண்டதா
அவள்
சடைபோல் ஒன்றா
சடையுண்ட குழல்போல பலவா
வண்டியாய்ச் செல்லுமா
பாலமாய் இருக்குமா
மணமடுத்த மஞ்சமா
மஞ்சமடுத்த துயிலா, உயிரா
கூண்டு தப்பிய கிளியா
கூண்டேகும் கிளியா
கூடேகும் புள்ளா
கூடு தப்பிய புள்ளா
வலைப்பட்ட புறாவா
சூடப் பறித்த மலரா
வாட எறிந்த பூவா
கிழியக் கழித்த உடையா
துவைக்கப் போட்ட துணியா
திரியெரிந்த விளக்கா
காற்றணைந்த சுடரா
செய்வினையா
செயப்பாட்டு வினையா
தொடர்கதையின் ஒரு பிரிவா
சிறுகதையின் முடிவா
கால்புள்ளியா
முற்றுப்புள்ளியா
?
சிக்கல்
பூஎன் றூதித் தள்ளக்
கூடி யதையும் கூந்தல் பிய்த்துக்
கொள்ளும் சிக்க லாக்கிக்
கொண்டும் விடும்புதுப் பழக்கம் நம்மைத்
தொத்திக் கொண்டுவிட் டது.தொடக்
கத்தில் பொழுது போகும் நேர்த்தி
கண்டும், மூளைக் கூர்மை
எண்ணத் திலும்பு தைந்து போனோம்.
அண்மை யில்யா வும்சாக்
கென்றும், இதுநம் மேதா விலாச
மேன்மைக் காக என்றும்
தோன்றி யது.இனி மீட்சிச் சிக்கல்

சிந்தித்தல் 
சிந்திப்பதற்கு மிகச்சிறந்த முறைஎது என்றால்
சிந்திக்காமல் இருந்து விடுவதுதான்.
சந்தேகமா?
சரி, ஒரு தொடக்கமாக, நீசிந்திக்க முயன்று
பார்க்கலாம், மொழியைப் பயன்படுத்தாமல்.
மேலும், மொழியைப் பயன்படுத்த வேண்டுமானால்
உனக்குத் தெரியாத மொழியை
உபயோகி.
புத்தர் கைகொடுக்கிறார்
 வெறுமையும் உருவமும்
வேறுபட வில்லை:
வெறுமைதான் உருவம்.
உருவந்தான் வெறுமை

என்று புத்தர் சொல்லிப்
புண்ணியம் கட்டிக் கொண்டார்.
 நல்ல வேளை,
இல்லை யென்றால்
இன்றைய இலக்கி யத்தில் உருவம்
இருக்கிற தென்பதை நிறுவும் வழியேது?

கிளை தள்ளும் ஆலம்
வளைந்தள்ளும் வானவில்
அலைந்தள்ளும் கார்குழல்
இறக்க வேற்றம் துள்ளும்
கயல் புரளும் கண்ணி

குரலென்னும் பனி வெளியில்
சல்லென்று சறுக்கியேறி
இறங்கியாட வரும் பாடல்;
சீர் விரல் சதிராடத்
தோல் அதிர்ந்தெழும் தாளம்.

 விழியசைவில் காதல்
இடையசைவில் கூடல்
மூச்சசைவில் வாழ்வு


செவ்விசைக்கருவி

ஷெனாய் இசைக்கும் சோகம், ஆஹா
செவிமடுக்காத செவியென்ன செவியோ
செவிமமடுத்துக் கரையாத மனமென்ன மனமோ
என்கிறான் மணி. என்ன செய்ய?
ஒருமுறையேனும் மாலி
முழுவீச்சுத் தொனி
பூரண
சாரங்கி இழைப்பில், ஒற்றைச் சோகக்
கீற்றை, ஆஹா
மடுக்கச் சொல் செவியால்
                             
பண்டிதன் எழுதுவ துதமிழ் இல்லை.அ
பண்டிதன் கணக்குப்படி;
பண்டிதன் எழுதுவ துதமிழ் இல்லை;
பண்டிதன் கணக்குப்படி. ஆ
க மொத்தம்
தமிழர் நமக்குத் தெரியவில்லை
தமிழ் எ ழு த.



 'அறைவெளி'

தப்பிவிட்டேன் என்று விழித்தேன்
சுற்றும் முற்றும் பார்த்தேன் மேலே
வானம்;
நான்கு பக்கமும் கூரிருள்.
கூரை சுவர்கள் எதுவுமில்லை
எல்லாப் பக்கமும் வழிகள் தெரிந்தன.

வெட்டவெளிதான் இது அரையல்ல
என்று சில கணம் துள்ளியது என் மனம்.

மேற்கே நடந்தேன் இடித்தது ஒரு சுவர்
தெற்கே நடந்தேன் இடித்தது ஒரு சுவர்
வடக்கே நடந்தேன் இடித்தது ஒரு சுவர்
கிழக்கே நடந்தேன் இடித்தது ஒரு சுவர்
எம்பிக் குதித்தேன் இடித்தது கூரை.

காதல்

காதல் காதல் என்ப; காதல்
வெறியும் நோயும் அன்றே; நினைப்பின்,
இறக்கம் நோக்கிப் பாயும் நீராம்;
சாதல் கவிந்த வாழ்வில்
வானம் தந்த வாம நீராம்

நடை

நீரியல் பூஞ்சதை தளும்பியாலக்
கெஞ்சிடும் மென்னடை பயின்றபாவை
வீதியில் இட்டது தளும்புநடை;
நெஞ்சினில் இட்டது தழும்புநடை.

பின்னல்

சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு
நடக்க முடியாமல் நடந்த போது
அடக்க முடியாமல் அசைந்தவென் நெஞ்சாய்
நிலைக்க முடியாமல் அசைந்ததுன் பின்னல்

- எழுத்து அக். 1968


பிரிவு - சி.மணி கவிதை

வேதனை, விழிக்கு  விளிம்பு கட்ட
நீர்காணா ஏரிபோல் நெஞ்சு பிளக்க
தூறலிடைக் காடாக மாநிலம் மங்க
குளவியின் துளையொலி செவியில் சுழல
விழுந்த பிணமணம் நாசியில் ஏற
கசக்கும் நாக்கு மண்ணைச் சுவைக்க
அனலும்  பனியும் மேனிக்கு ஒன்றாக
சாக்காட்டு உலகில் என்னை விட்டு
கூடுவிட்ட பறவையென
ஓடி மறைந்தாய்

- எழுத்து டிசம்பர், 1960
பேதை

"முன்புறம் முகிழ்த்த இனமலர் இரண்டைக்
கண்கரம் விரித்துப் பறிப்பதை விலக்கப்
பின்புறம் அசையும் பின்னல் ஒன்றை
முன்புறம் கிடத்தினாள் சாட்டை என்று."

மொழி பெயர்த்த தாவோ தே ஜிங்
.
நன்றாக மூடத் தெரிந்தவனுக்குச்
சட்டம், தாழ்பாள் எதுவும் தேவைப்படுவதில்லை
என்றாலும் அவன் மூடிய பிறகு
அந்தக் கதவைத் திறப்பது சாத்தியமில்லை
மொழி பெயர்த்த சீன ஜென் கவிதை

வரும்போது போகும்போது விட்டுச்
செல்வதில்லை காட்டு நீர்பறவை
ஒரு சுவடு
தேவையும் இல்லை அதற்கு
ஒரு வழிகாட்டி.
தரத்தைக் கூற

துணியின் தரத்தைக் கூற
 உறுதியான வழி வேண்டுமா?
துணியின் மீது மரபு / முத்திரை இருக்கிறதா
 பாருங்கள், அப்படி இருந்தால் உங்களுக்கு எவ்விதக் கவலையுமில்லை
அவருக்குத் தெரியும்
 வெற்றியின் இரகசியம்
ஐயமென்ன
 யாப்பின்
 தூயபருத்தி ஆடைகளே
  நீங்கள் எப்படித் தோற்றமளிக்க
  வேண்டும் என்பதறிந்த
மரபுக்குழுத் தயாரிப்பு.

இவருக்குக் கவலையில்லை
வருக்குக் கிடைத்துவிட்டன
 புதுமை
 தரும் பாவின் உலகின் பிரபலமான துணிகள்.

சி. மணியின் கவியரங்கம்’.

யாப்பிட்ட பனுவலெனும் விரகஞ் சேர்க்கும்
காப்பிட்ட வனப்புமுலைக் குமரி பார்த்தும்
யாப்பற்ற வெறுங்கவிதை யதனை யெப்படிக்
கைப்பற்றத் துணிந்தாரைம் புலனு மொப்பியே
அன்று மணிக்கதவை
 / தாயர் அடைக்கவும் மகளிர் திறக்கவும்
 / செய்தார் மாறிமாறி என்றும்
 / புலவர் அடைப்ப / கவிஞர் திறப்பார்.
ஞானம்

நீ நினைக்கிறாய்
 அதுவும் தவறாக நினைக்கிறாய்
ஞானம்
 அறியாமை மறுப்பு என்று
 எனென்றால்
நீ இப்போதெல்லாம் தெளிவாகப் பார்க்கிறாய்
 அது
அறிவு மறுப்பு என்று
 அதுசரி, அது எப்போது
 வேறு
எதுவாக இருந்தது?”


பௌத்த
சந்நியாசிகளுக்கு ஒருநாள் சுபுத்தி
தந்த பதிலை இவருக்கும் தரலாம்
புரிவதற்கு
ஒன்றும் இல்லை
 புரிவதற்கு ஒன்றும் இல்லை”54

வெறுமையும் உருவமும்
 வேறுபட வில்லை
வெறுமைதான் உருவம்
 உருவுந்தான் வெறுமை
என்று புத்தர் சொல்லிப்
புண்ணியங் கட்டிக்
கொண்டார்
நல்லவேளை
 இல்லை
யென்றால்
இன்றைய இலக்கியத்தில் உருவம்
இருக்கிற தென்பதை நிறுவும் வழியேது?”55

சொல்ல விரும்பிய தெல்லாம்
/ சொல்லில்வருவதில்லை
சொல்ல வந்தது சொல்லில்
 / வந்தாலும் கேட்பதில் சிக்கல்
 / கனியின் இனிமை
 / கனியில் மட்டுமில்லை
 / சுவைப்போன் பசியை,
 / சுவைமுடிச்சைச் சார்ந்தது, எண்ணம்
/ வெளியீடு
/ கேட்டல்
/ இம்மூன்றும் ஒன்றல்ல
 / ஒன்றென்றால் /
 மூன்றான காலம் போல் ஒன்று
”36
தேனீ காண்பது மலர்வனம்
 / ஆநிரை காண்பது பசுந்தரை
/ காண்பது நோக்கைச் சார்ந்தது”37
 படைப்பு

வீடுவிட்டுப் புறப்பட்டு
நேரேயென் அலுவலகம்
ஓட வரவில்லை;
பள்ளி செல்லும் வழியெல்லாம்
நின்றுநின்று மறந்து
பிடிக்காததை பிடித்ததை
போவதை வருவதை
இருப்பதை
பையனாய் வேடிக்கை
பார்க்க வந்தேன்

நீலத்தாள் படத்திற்குக்
கயிறுநீட்டிச் சரிபார்த்துக்
கலவை கொட்டிக் கல்லடுக்கிக்
கலவை கொட்டி வீடு
கட்ட வரவில்லை;
அருங்கல்லொன்று கிடைத்தபோது
அகத்திலூறிச் சுழல்கின்ற
 நிழலைச்
செதுக்க வந்தேன்

பல்லாண்டு படித்துப்
பழகிப் பழகிப்
 பாடும் பாட்டிற்கும்
போடும் தாளத்திற்கும்
ஆட வரவில்லை;
புதுப்புது மெட்டுக்கு
மயங்கி நினைவிழந்து
உடலாட்டித் தாளமிடும்
மக்கள்நடம்
ஆடவந்தேன்.

வாயில்முன் வழக்கம் போல்
புள்ளியிட்டுக் கோட்டைப்
போட வரவில்லை;
ஒற்றைக்கண் நிலவு
ஒற்றையடித்து வெள்ளை பூசி
ஒளியாக்கிய வானில்
வலிந்தோ மெலிந்தோ
எழுகின்ற காற்றில்
தானாய் இசைந்தரும்பும்
முகிற்கோலம்
போடவந்தேன்.

சாத்திரக் கோட்பாடுகளை
நெஞ்சில் கரையவிட்டு
குறித்தபடிக் கோயில்
எழுப்ப வரவில்லை;
நிறைந்த அனலாவியை
விழைந்த கோளமாக்கும்
விரிந்த பாழ்வெளியில்
பால்வெளியாய்ப்
படைக்க வந்தேன்

- எழுத்து மார்ச் 1963

பழக்கம்

பழக்கத்திற்கு இவனொரு அடிமை
பழக்கமற்ற எதையும் இதுவரை
செய்ததில்லை- இனிமேல்
செய்யப்போவதில் பழக்கமற்றது
சாவதும்
பழக்கமானதோ என்னவோ,
அதுவும் நாள்தோறும்.

தீர்வு

என்ன செய்வ
திந்தக் கையை
என்றேன். என்ன செய்வ தென்றால்
என்றான் சாமி. கைக்கு வேலை
என்றிருந்தால் பிரச்னை இல்லை;
மற்ற நேரம், நடக்கும் போதும்
நிற்கும்போதும் இந்தக் கைகள்
 வெறுந்தோள் முனைத்தொங்கல், தாங்காத
உறுத்தல் வடிவத் தொல்லை
என்றேன். கையைக் காலாக் கென்றான்.
நிலவுப்பெண்

 ஊடாத பெண்ணொருத்தி உண்டென்றால்,
ஊடிப் புலந்து வெண்முகம் திரும்பி
கருங்குழல் புரளும் புறம் காட்டாது
கலைமுகக் காட்சி தந்தே கூடல்
தீ வளர்க்கும் பெண்ணொருத்தி உண்டென்றால்
நீயல்லவோ அப்பெண்!

ஈகை

 பட்டமரம் போலச் சாய்ந்த சாலை
இருபுறத்திலும் நடைபாதை
நெடுகிலும் மனிதர்
மறைந்து வாழ
பயன்படும் வளைகள்
ஒன்றில் சாக்குத்திரை;
அதில் நீளும் கிழிசல்
வழியே அசைந்த
 கல்பட்டுக் கீறலுற்ற
ரசம் போன கண்ணாடி
முகக்கொடிக்கு
ஒரு கணத் தயக்கத்தேர்
ஈந்து சென்றான்
இன்றைய பாரி.
 
சாதனை
 
வேதனை வண்ணான் இன்னொரு
சாதனை செய்தான்
வெளுத்து வாங்கி விட்டான்
கறுத்த மயிரை
      1  பார்த்தேன் வெள்ளைப் பூவேலை
வார்த்த சோளி முதுகை
தெரிந்தது முகமே.
         2  கம்பி என்று காலிரண்டும்
எம்பி வீழ்த்தவும் இளித்தது
கம்பி யதன் நிழல்.
         3 மிரண்ட குதிரைத் தடதடப்பா
முரட்டுத் தரையதில் காற்றின்
சருகுக் குளம்பொலி.

     கொலைகாரர்கள்

     1. புகழாசை பிடித்தாட்ட போர் மீது சென்று எண்ணற்றோரைக் கொன்று வெற்றி
வீரன் எனப் பெயர் பெற்ற கொலைகாரன்.

     2. மதம், கடவுள் என்று பேசி நாலாயிரம் பேர்களைக் கழுவேற்றினவர்கள்.

   3. மூன்றாவதாக நாகரிக ரகம்.
கள்ளிலே போதையில்லை.
சதையெழில் தளும்பித் தளும்பி
வழியும் கன்னியில் போதையில்லை;
கண்முன் தெரியாமல் காற்றாகக்
காரை ஓட்டுவதில் தான் என்ன போதை!
மரம் வீடு வண்டி பாய்ந்தோட
கையை ஹாரனில் அழுத்தி,


கண்ணைப் பாதையில் வைத்து,
பல்லை உதட்டில் தைத்து
60, 70, 80, 95-ஐயோ!
வண்டி நின்றது
மனிதப் பிணம் நிறுத்த.

4. கள்ள நோட்டுக்களை நல்ல நோட்டுக்கள் என்று தள்ளி விடுவோர்.
5. உண்மையும் போலியும் ஒன்று தான்
வாங்குவது என்னவென்று தெரியாமல்
வாங்கும்போது எல்லாமே ஒன்றுதான்;
கிடைத்தால் போதுமென்று தவிக்கிறார்கள்.
பழியேற்க உண்டு கடவுளும் டாக்டரும்,
நமக்கோ உண்டு லாபம்.
ஒன்றுக்கு நூறு. போ,
மருந்தைக் கடைக்கு அனுப்பு.
     6. கு.ப.ராவின் ஆற்றாமைகதாநாயகி சாவித்ரி மாதிரி; தான் அனுபவிக்கக் கிட்டாத
இன்பத்தை மற்றவர்கள் அனுபவிப்பதைப் பொறுக்காமல் குறுக்கிட்டு ஊறு செய்து திருப்தி
காண்கிறவர்கள்.
 
கொலைகாரனின் தத்துவம்!-
இதுக்கென்ன பெரிய வாதம்?
நான் கொலைகாரன் தான்.
பல கொலைகளைச் செய்தவன்தான்
அப்போது, கழுத்தை அறுத்த போது
வெள்ளரிப் பழத்தை அறுப்பது போல் அறுத்தபோது
நான் கடவுளாக இருந்தேன்
நான் நினைத்தால் உயிர்
கொடுக்கலாம், போக்கலாம்,
நீங்கள் யாரும் கொலைகாரன் ஆனதில்லை;
அதனால் நீங்கள் யாரும் கடவுள் ஆனதில்லை!
காதடைக்கும் இரைச்சலுடன்
டவுன் பஸ்கள் வரும் போகும்

 பணி புரிந்து மிகக் களைத்து
மனைக்கே வழிதேடி
வேர்வைத் துளி பல்லிளிக்க
சோர்வோடு உடல் வளைத்து
சுற்றி நிற்கும் ஒரு கும்பல்;
பூத்துவிட்ட விழி குறுக்கி
அத்திப்பூ டவுன் பஸ்ஸை
அலுத்து நோக்கும் பிறிதொன்று;
பழைய நட்பு பேச்சிலாளும்;
புதிய நட்பு வலைவீசும்
நட்பில்லா மனிதர்களோ
செவி தீட்டி நெருங்கி நிற்பர்;
செவிக்குணவு மட்டுமின்றி
விழிக்குணவும் இருக்குமெங்கும்

     பலர் வாழ்வு பூராவும் உழைத்துப் பெறுகின்ற வருவாயை ஒரு மூச்சில் விழுங்கிய
கார்’ ‘நடுத்தரக் கார்டாக்ஸி ஆட்டோ அத்தனையும் வரும் போகும், ‘மனம்நீங்கி
உருப்பெற்று உலவுகின்ற ஆசைகளாய்.

     இளைஞர், வஞ்சியர் அலங்காரத் தோற்றங்கள் பல ரகம். இவர்களிடையே நடக்கும்
உணர்ச்சி நாடகங்கள்தான் எப்பேர்ப்பட்டவை?

   கோடிவரை யோட்டிக் கள்ள விழி சுழற்றி
நோக்கி நேர்நோக்கி யெதிர் நோக்கி
நோக்கிப் பயனில்லை யெனத் தெளிந்து
தீட்டிய இதழ் விரித் தோச்சி
என்ன என்ன வாய்ச் சொற்கள்
வண்ண வண்ணச் சிரிப்பொலிகள்;
இளமை போயிங்உணர்ச்சி வானில்
பறக்கும் வேளையில் கிளம்புமொலிகள்,
அவ்வேளையிலே வஞ்சியிடம்
எத்தனை மலர்ச்சி துள்ளல் துவளல்
எத்தனை உணர்ச்சியின் வானவில் திரட்சி
எத்தனை அருகில் வா எட்டி நில்;
வஞ்சி நோக்கி வெடிப்போரிடம்
  எத்தனை கவர்ச்சி துள்ளல் ஆட்டம்
எத்தனை தலைமுறை வேட்டையின் வளர்ச்சி
எத்தனை சிக்கியதா தப்பிவிட்டதா

     மலட்டு ஒத்திகையின் மலட்டு முன்னோட்டம்ஆன இது இளமையின்
இனிமைக்கூத்தாய் சுவைக்கிறது. வந்து போகும் டவுன் பஸ்கள் பொய்த்துப் பொய்த்து
மேஜை மேல் பைலெனக் குவிக்கிறது கும்பலை!இடம் பிடிக்கும் வலிமையும் கயமையும்
இளமையும் இல்லாமல் நிற்கின்ற கவிதை நாயகன் வெளியிலே உருப்பெற்ற ஆசைஉலா
கண்டு பொழுது போக்க வேண்டியதாகிறது.

      இவன் மனம் குறுகுறுக்கிறது--

   யார் சொன்னார் இந்தியா
பிற்பட்ட நாடென்று?
முத்தர வகுப்பென்று?
பிற்போக்கு நைலான் உடுத்துமா?
கடை நடுத்தரம் கார் வலம் வருமா?
இங்கே இப்போது
தெரிவதெல்லாம் மேல்தரம்,
வறுமை யேது, இங்கே
இருப்பதெல்லாம் பெருமைதான்
இன்பந் தான்; சிலோன் சீனா
பாக்கிஸ்தான் எதுவுமில்லை;
இருப்பவை
மவுன்ட்ரோடு வாய்ப்பேச்சு விழிவாள் வீச்சு
பற்சர மின்னல் நகை ஜலதரங்கம் தேர்வு
இழப்பு இளிப்பு இளமையின் இயல்பு.

     இரைச்சலோடு டவுன் பஸ்கள் வரும்போகும் இடத்தில், காலம் ஓட கால்வலிக்கக்
காத்துநிற்கும் வசதியற்றவனின் மனம் பெரிய இடங்களின் யுவர்களும் யுவதிகளும் பயில்கிற
நடுத்தெரு நாகரிகத்தை மேலும் மேலும் கண்டுசிலிர்க்கிறது. எப்பவோ குடித்த ஒரு கப்
காபி வயிற்றில் கரைந்து போன உணர்வு. கண்முன்னாலோ--

   பசிக்காமல் உண்ண முடியாமல்
திணித்து முடித்து விட்டு
நீட்டிய தட்டில் எறிந்தபடி-
பிளேயர்ஸ் ஓன் பாக்கட்-ஓ
கீப் தி சேன்ஜ் வெயிட்டர்-
ஓயிலாக சிகரெட் பற்றவைத்து
சுருள் சுருளாய் புகை கிளப்பி,
தவளைக்கும் பாம்பின் வாய் விரிப்பாய்
அவள் வியப்பின் விழிவிப்பை
கடைக் கண்ணில் களித்து-
டிரைவர். நீ போ.
பட் பீ ரெடி அட் டென்,  சற்றே
மிகச் சற்றே தயங்கிப் பின் தங்கி
இட்ட அடிக்கும் எடுத்த அடிக்கும்
இசைந்தே ஆடும் சடையழகை
நெளிந்தே குலையும் பின்னழகை
வெறித்து நோக்கி விருந்துண்டு,

     கிறங்கிடும் மனம் அவள் தோளில் கைபோட்டு நடந்து, தொட்ட சுகம் மயக்க
இடித்தும் இணைந்தும் சென்று, கடற்கரையில் தனிமை இடம் தேடி இன்பம் சுவைத்து
வியக்கிறது.

      நின்ற இடத்திலேயே நிற்கும் அவனுள் ஆசை மலர்கள் விரிகின்றன.

      பஸ் வரும். போகும். ஒரு கப் காபி கரைந்து போயிற்றே என்ற தவிப்பு
தலைதூக்குகிறது.

     அவனது சிவப்புச் சேலை அழகிசிறிது நின்று போக மாட்டாளா என்ற ஏக்கம்.
பயன்தான் இல்லை.

   செல்வம் இளமை யின்மை
நடைபாதையில் காக்க வைக்கும்
கூட்டம் குறையும் வரை.
பொறுமை தீரும் வரை
மயக்கம் தள்ளும் நேரம்
சிவப்பழகி சற்று நிற்க
புத்துணர்ச்சி துளிர்க்க..

     இவனுக்கு இடம் கிடைத்து விடுகிறது. காசம் பிடித்து உலுக்குவதுபோல், துடிக்கின்ற
பழுதுடல்பஸ் சூடேறிய காற்றோடு, டீசலின் பெரு நாற்றத்தோடு நகர்கிறது. அந்தச்
சூழலிலும்,

   பக்கத்து மங்கையின் உரசல்
பல்லற்ற வாய்க்குக் கரும்பு:
ஆசைக்கு அழிவேது?
செல்வம் மங்கை பெருமை இளமை
இவைகளுக்கு அழிவேது?
ஆயினும் இவன் நிலைமையோ?
முதுமை.
வறுமை,
சிறுமை.
நாய் வால் முதுகு.
சீவாத தலையாகக் கலைந்து
சிதறிக் கிடக்கும் தாள்கள்,-
இப்பிறவியில் விடிவில்லை.
 வாலை இளநீரை வாய்விழியால்
வாரிப் பருகும் இவர்கள்
இளமை கொடுக்கும் துணிவில்
இடித்துக் களிக்கும் இவர்கள்
வயது வழங்கிய வாய்ப்பில்
அமர்ந்து சிலிர்க்கும் இவர்கள்
இருவரைக் கட்டிலேற்ற ஊதி
முழக்கி ஊர் கூட்டும் இவர்கள்
இருளில் ரகசியமாய் வெட்கி
மருவி மயங்கும் இவர்கள்
பிறகு தவழ விட்டு ஊரெல்லாம்
பெருமை உரைக்கும் இவர்கள்
எல்லாம் இவர்கள்தான் - வேறு யார்
சொல்வார்கள்? கூடாதாம்; பச்சையம்!

     எழுத்திலே பச்சை என்றால், எழுத்தாளன் மனசிலே பச்சை என்றாகுமா? நாடகத்தில்
பாத்திரங்கள் பேச்செல்லாம் ஆசிரியர் பேச்சா? ‘நரகம் எனது நரகமா. நரகத் தலைவன்
நரகமா என்றெல்லாம் கேட்டுவிட்டு, கவி சொல்கிறார்.

   பலவகை ஆறுகள்
எனக்குள் இருக்கும் கடலில்
கலக்கும்; எழுபவை கடல் முகில்,
அருவிக்கு வெறுப்பில்லை
வருவோரைக் குளிப்பாட்டும்.
காற்றுக்குத் தடுப்பில்லை
காற்றெங்கும் புகுந்து விடும்,
நீயிழுத்த காற்றணுக்கள்,
நானிழுத்த காற்றணுக்கள்;
கதிரொளிக்கும் மறைப்பில்லை;
கதிரொளியில் பச்சையில்லை;
படைக்கின்றேன் பச்சையத்தால்.


  பற்பசையில் முத்துச்சரம்
எண்ணெயில் தாழ்கூந்தல்
செருப்பில் மலரடி
உடையில் சிலையுரு
பௌடரில் பட்டழகு
சோப்பினில் நட்சத்திரம்
விற்றிடுவாள் விளம்பரத்தால்
முலைக்கோண வலைக்குமரி.

     இப்படிப் பல நிகழ்ச்சிகள் சுவையாகச் சித்திரிக்கப்படுகின்றன. இலக்கியத்திலிருந்து
பற்பல வரிகள் நினைவு கூரப்படுகின்றன. இவ்வாறு இச்சைக்கு வழிபாடுஎங்கும்
எப்போதும் நடை பெறுவது சுட்டிக்காட்டப்படுகிறது. உடலில் உப்பு மாதிரி கவர்ச்சிக்
கலப்புநிறைந்து காணப்படுகிறதே!

   ஆற்றல் இழந்த கடவுளர்
சாலையில் காட்சிப் பொருளாகிப்
பெற்றனர் அழகியல் போற்றல்
பக்தி மலருக்குப் பதிலாய்.
அறிவியல் இக்கையில் பறித்துப்
பறித்ததை நீக்கி மகிழக்
குவித்தது அக்கையில் பல பொருள்;
முன்னேற்றம், நைலக்ஸ், சினிமா
இறைவனை விட்டபின், மற்றது
பிறப்பு மர்மம் ஆண் பெண்
பிணைப்பு மர்மம் ஒன்றுதான்,
நாயக நாயகி
பக்தி போனதும்
தலைவன் தலைவி
சித்தி வந்தது.
கோவில் போனதும்
கொட்டகை வந்தது;
கடவுள் போனதும்
நட்சத்திரம் வந்தது.
டும் டும் டும்.

  படிப்பும் பணியும்
கதவைத் திறக்கவும்
ஆடினர் பாவையர்
பாம்புக்குப் பால் வார்த்து
துலங்கல் மறந்து
தூண்டுதல் ஓம்பி,
வினையில் எதிர்வினை,
அறுவடை செய்கிறார்.

     இந்தக் குழப்பம் எல்லாம் ஒருசில தலைமுறை நீடிக்கும். பிணியற்ற இனிப்பார்வை,
குலமற்ற மனப்பார்வை அதற்குள் கிட்டிவிடும். என்னதான் சொன்னாலும், உயிரியல்
தேவையிது.

   கவிஞனும் நடிகன் தான், கவிஞன்
எழுத்தில் நடிப்பான்; எழுதிய
வரிக்கு நடிகன் குதிப்பான்
கனிந்த நடிகனே என்றாலும்
நடிப்ப தெல்லாம் நடிப்பா,
கலப்பிலா நடிப்பா? சற்றும்
இமைப்பிலா நடிப்பா? சற்றும்
இமைபப்பில்லா விழிப்புடன் நடிகன்
நடிக்கட்டுமே, ஒருமுறை கூடவா
உணர்வுடன் புணர்ந்து தன்னை
மறக்க மாட்டான்? மறந்து
கலக்கமாட்டான். நடிப்பு
மறந்து சொந்தம் கலப்பது
அறிவது அருமை கலப்பது
அரிதல்ல. புறவயப் பார்வை
அழிப்பதல்ல அகத்தை; தட்டி
பிழைப்பதில்லை கவிஞன் தன்நிழல்.


No comments:

Post a Comment