Thursday, August 9, 2018

ஆத்மாநாம்

ஆத்மாநாம்












(18. 1. 1951 - 6. 7. 1984)
ஆத்மாநாமின் இயற்பெயர் S. K. மதுசூதன். 1951 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் தேதி பிறந்தார். சென்னையிலேயே வளர்க்கப்பட்டார். தாய்மொழி கன்னடமாக இருந்தபோதிலும் ஆத்மாநாமுக்குத் தமிழில் இருந்த ஈடுபாடு அதிகம். அம்பத்தூரில் சர் ராமசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பெற்று பிறகு வைஷ்ணவா கல்லூரிக்குச் சென்றார். ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பட்டப்படிப்பை (B. Com) அதே கல்லூரியில் மாலை வகுப்புகளில் சேர்ந்து படித்தார். 1967ஆம் ஆண்டு சதர்ன் சுவிட்ச்கியர்ஸ் என்ற  கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். 1968ஆம் ஆண்டு வேலையை விட்டுவிட்டுக் கணக்குத்துறை சேர்ந்த விஷயங்களைக் கற்க ஆடிட்டர் அலுவலகம் ஒன்றுக்குச் சென்றார். இந்தப் பின்னணி அவருக்கு கோரமண்டல் கார்மெண்ட்ஸ் என்ற கம்பெனியில் வேலை கிடைக்க ஏதுவாக இருந்தது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு 1971இல் தயார் உடைகள் தயாரிக்கும் நிறுவனமான ரெங்கா அப்பாரெல்ஸ்க்கு மாறினார். இங்கிருந்துதான் ஆத்மாநாமின் சிக்கலான வருடங்கள் ஆரம்பிக்கின்றன. 1978ஆம் ஆண்டு அய்யப்பன் என்பவருடன் சேர்ந்து டாப்டென் என்ற தயார் உடைகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தை உருவாக்கினார். இதே சமயத்தில்தான் ழ இதழையும் தொடங்கினார். தன்னுடைய நிறுவனத்தைக் கட்டி எழுப்ப இரவுகளிலும் வேலைசெய்ய வேண்டிவந்தது. இரண்டு மூன்று ஈடுபாடுகளில் ஒரே நேரத்தில் தீவிரமாய் இயங்கியபோது Affective Disorder என்ற மனநலத் தாக்குதல் ஏற்பட்டு 1979 புரசைவாக்கத்திலிருக்கும் தனியார் மருத்துவமனையில் ஒரு மாதம் சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்குப் பிறகு இன்டர் கிராப்ட் என்ற கம்பெனியில் பணிபுரிந்தார். ஆனால் அவருக்கு ஓய்வு முக்கியம் என்று மருத்துவர் கருதியதால் தொடர்ந்து பணிக்குச் செல்ல முடியாத சிக்கல் ஏற்பட்டது. மூளையின் அதி தீவிர இயக்கத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க ஆத்மாநாம், Lithium, Hyportrym, Largatyl, Fenargon போன்ற மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட வேண்டியிருந்தது. 1983 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பாகத் தனக்கு சிகிச்சைக்காகத் தரப்பட்ட மருந்துகளையே அளவுக்கு அதிகமாக உட்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றார். காப்பாற்றப்பட்டார்.
இந்தச் சமயத்தில் அவர் இடைவிடாது படித்துக்கொண்டிருந்த நூல் A. K. ராமானுஜனின் The Speaking of Shiva. 1983ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் Affective Disorderன் இரண்டாவது தாக்குதல் ஆத்மாநாமுக்கு ஏற்பட்டது. 1984 ஜனவரி இறுதிவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்கை அளிக்கப்பட்டது. 1984ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முழுவதும் அவர் பெங்களூரில் அவரது சகோதரர் ரகுநந்தனின் வீட்டில் இருந்தார். மார்ச் 9ஆம் தேதி (1984) தனக்குத் தரப்பட்ட மருந்துகளை உட்கொண்டு இரண்டாவது முறையாகத் தற்கொலை செய்ய முயன்றார். பின்னர் National Institute of Mental Health and Neurological Sciences மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 1984ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் தேதியிலிருந்து 20 வரை NIMHANSல் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். வீடு திரும்பிய பின்னர் தனது சகோதரர் வீட்டில் எவரிடமும் எதுவும் பேசாமல் இருந்திருக்கிறார். ஏறத்தாழ உயிரற்ற மனித உடம்பாகஆத்மாநாம் வீடு திரும்பியதாக அவரது சகோதரர் ரகுநந்தன் குறிப்பிட்டார். மார்ச் 1984லிருந்து தனது இறுதி மறைவு வரை (ஜு லை 1984) ஆத்மாநாம் தனக்கு வந்த கடிதங்களையோ, பத்திரிகைகளையோ, அழைப்பிதழ்களையோ படிக்கவில்லை. பிரித்துக்கூடப் பார்க்கவில்லை. பெங்களூரில் தன்னுடைய சாவை முன்கூட்டித் தீர்மானித்ததுபோல ஏறத்தாழ 120 தபால் கார்டுகளை வாங்கி வைக்கிருந்திருக்கிறார். நண்பர்களின் முகவரிகள் முதலிலிருந்து கடைசி வரை திருத்தம் செய்து வைக்கப்பட்டிருந்தன.
------------------

சொன்னால் மறக்கிறார்கள் 
எழுதினால் நிராகரிக்கிறார்கள்
தாக்கினால் தாங்குகிறார்கள் 
சும்மா இருந்தால் தாக்குகிறார்கள்
அற்புத உலகம் / அற்புத மாக்கள்.




ஒரு புளியமரம்
ஒரு புளியமரம் சமீபத்தில் என் நண்பனாயிற்று
தற்செயலாய் அப்புறம் நான் சென்றபோது
நிழலிலிருந்து ஒரு குரல் என்னைத் தெரிகிறதா
திடுக்கிட்டேன் அப்புளியமரம் கண்டு
நினைவிருக்கிறதா அன்றொரு நாள்
நீ புளியம்பழங்கள் பொறுக்க வந்தபோது
என் தமக்கையின் மடியின் அயர்ந்துபோனாய்
அப்போது குளிர்ந்த காற்றை வீசினேனே
உன் முகத்தில் உடலில் எங்கும்
வா எப்படியும் என் மடிக்கு.
அந்தப் புளியமரத்தை
நேற்றிலிருந்து            
அந்தப் புளியமரத்தை
வீழ்த்திக்கொண்டிருக்கிறார்கள்
முதலில்
புளியமரத்தின் உச்சியை அடைந்தார்கள்
சிறிய சிறிய கிளைகளை
முறித்துக்கொண்டார்கள்
இலைகள் மலர்கள்
உதிர உதிர சிறிய
கிளைகள் பூமியைத் தழுவின
சிறிய கிளைகள் இழந்த மரம்
அருவ உருவில்
வானத்தை
உறிஞ்சிக்கொண்டிருந்தது
மரத்திலிருந்து இறங்கியவர்கள்
ஒரு மாபெரும்
மரமறுக்கும் ரம்பத்தைக்
கொண்டுவந்தார்கள்
புளியமரத்தின்
அடியைக் குறிபார்த்து
கீறிக்கொண்டிருந்தார்கள்
பொடித்துகள்கள்
இருபுறமும் கசிய
நெடுமரத்தைச் சாய்த்தார்கள்
மீதம் உள்ள கிளைகளையெல்லாம்
வெட்டிவெட்டி அடுக்கினார்கள்
கட்டை வண்டியில் ஏற்றிப்
புறப்பட்டார்கள்
இலை தழைகளுக்கிடையே
ஒரு புளியஞ்செடி
தன்னைப் பார்த்துக்கொண்டது.

2083 ஆகஸ்ட் 11
என் கவிதை ஒன்று
இரண்டாயிரத்து எண்பத்தி மூன்றில்
கிடைத்தது
கடற்கரையில்
நானும் ஞானக்கூத்தனும்
பேசிக்கொண்டிருந்தோம்
சுண்டல் வாங்கிப் பிரித்தால்
காகிதத்தில் ஒரு கோடு
ஆத்மாநாம் எனும் வாசகங்கள்
கவிதை ஆரம்பம்
ஆச்சர்யத்துடன்
ஞானக்கூத்தனைக் கேட்டேன்
இன்னும் இங்கேவா இருக்கிறோம்
அவர்
சூளைச் செங்கல் குவியலிலே
தனிக்கல் ஒன்று சரிகிறது
என்றார்
என்ன இது வினோதம்
இருந்த இடத்திலேயே இருப்பது
என்றேன்
இருப்பதை உணர்வதே வாழ்க்கை
என்றார்
நகுலன் எங்கே என்றேன்
நவீனன் இறந்த மறுநாளே இறந்துவிட்டார்
என்றார்
உங்கள் சமீபத்திய கவிதை என்றேன்
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள
என்றார்
நன்றி என்றேன்
அப்பொழுதுதான்
ஒரு அணுகுண்டு வெடித்த
சப்தம் கேட்டது
இருவரும்
அகதிகள் முகாமிற்குத் திரும்பினோம்.





























No comments:

Post a Comment