Thursday, August 16, 2018

கி. ராஜநாராயணன்

கி. ராஜநாராயணன்



















கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் (பிறப்பு: 1922), கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.
கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர். நல்ல இசை ஞானம் கொண்டவர்.
கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது[1] உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்ற, தொண்ணூறு வயதான கி.ரா. தற்போது புதுச்சேரியில் வாழ்ந்து வருகிறார்.
பொருளடக்கம்

             1படைப்புகள்
o             1.1அகராதிகள்
o             1.2சிறுகதைகள்
o             1.3குறுநாவல்
o             1.4நாவல்
o             1.5கட்டுரை
o             1.6தொகுதி
o             1.7திரைப்படமாக்கப்பட்ட இவர் எழுத்துக்கள்
             2மேற்கோள்கள்
             3வெளி இணைப்புகள்
படைப்புகள்[தொகு]
அகராதிகள்[தொகு]
             கரிசல் வட்டார வழக்கு அகராதி
சிறுகதைகள்[தொகு]
             கோமதி
             நிலை நிறுத்தல்
             கதவு
             பேதை
             ஜீவன்
             நெருப்பு (புதினம்)
             விளைவு
             பாரதமாதா
             கண்ணீர்
             வேட்டி
             கரிசல்கதைகள்
             கி.ரா-பக்கங்கள்
             கிராமிய விளையாட்டுகள்
             கிராமியக்கதைகள்
             குழந்தைப்பருவக்கதைகள்
             கொத்தைபருத்தி
             புதுவை வட்டார நாட்டுப்புறக்கதைகள்
             பெண்கதைகள்
             பெண்மணம்
             வயது வந்தவர்களுக்கு மட்டும்
குறுநாவல்[தொகு]
             கிடை
             பிஞ்சுகள்
நாவல்[தொகு]
             கோபல்ல கிராமம்
             கோபல்லபுரத்து மக்கள் (சாகித்திய அகாடமி விருது பெற்றது)
             அந்தமான் நாயக்கர்
கட்டுரை[தொகு]
             ருஷ்ய மண்ணின் நிறம் என்ன?
             புதுமைப்பித்தன்
             மாமலை ஜீவா
             இசை மகா சமுத்திரம்
             அழிந்து போன நந்தவனங்கள்
             கரிசல் காட்டுக் கடுதாசி
தொகுதி[தொகு]
             நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்
திரைப்படமாக்கப்பட்ட இவர் எழுத்துக்கள்[தொகு]
             ஒருத்தி (கிடை என்ற கதையினை அடிப்படையாகக் கொண்டு அம்ஷன் குமார் இயக்கிய திரைப்படம்)
             =========================================================
             தமிழ் எழுத்தாளர், நாவலாசிரியர்
             என அன்போடு அழைக்கப்படுபவரும், ‘கரிசல் இலக்கியத்தின் தந்தைஎனப் போற்றப்படுபவருமான கி.ராஜநாராயணன் (Ki.Rajanarayanan) பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 16). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
             *தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்த இடைச்செவல் கிராமத்தில் வசதியான குடும்பத்தில் (1922) பிறந்தவர். ராயங்கல ஸ்ரீ கிருஷ்ணராஜ நாராயண பெருமாள் ராமானுஜம் என்பது முழுப்பெயர். இதைச் சுருக்கி, கி.ராஜநாராயணன் என்று வைத்துக் கொண்டார். தந்தை விவசாயி.
             *ஏழாம் வகுப்பு வரை மட்டுமே பயின்றார். பிறகு, விவசாயம் பார்த்து வந்தார். 40 வயதுக்கு மேல் எழுதத் தொடங்கினார். ‘மாயமான்என்ற முதல் சிறுகதை 1958-ல்சரஸ்வதிஇதழில் வெளியானது. வாசகர்களிடம் அது பெரும் வரவேற்பைப் பெற்றதால், தொடர்ந்து பல சிறுகதைகள் எழுதினார்.
             *கரிசல் பூமி மக்களின் வாழ்க்கை, துன்பங்கள், நம்பிக்கைகள், ஏமாற்றங்களை இவரது எழுத்துகள் விவரித்தன. சிறுகதை, குறுநாவல், நாவல், கிராமியக் கதை, கடிதம் என்று தமிழ் இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் முத்திரை பதித்தார்.
             *வாய்மொழிக் கதை சொல்லும் மரபின் கூறுகளை தனது படைப்பின் அடிப்படை அம்சங்களாகக் கொண்டிருந்தார். வட்டார வாய்மொழி மரபு, செவ்விலக்கியக் கூறுகள், நேரடியான இதழியல் நடை ஆகிய மூன்று கூறுகளையும் கலந்து, தனக்கென தனி நடையை உருவாக்கிக்கொண்டவர்.
             *பிரபல இதழ்களில் இவரது கதைகள் தொடர்ந்து வெளிவந்தன. 2007-ல் இவை அனைத்தும் தொகுக்கப்பட்டு 944 பக்கங்கள் கொண்டநாட்டுப்புறக்கதைக் களஞ்சியம்என்ற படைப்பாக வெளியானது. 2009-ல் மட்டும் இவரது 30 புத்தகங்கள் வெளி வந்தன. இவரது சில கதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.
             * சிறுகதைத் தொகுப்புகள், 2 குறுநாவல்கள், 6 கட்டுரைத் தொகுதிகள், 3 நாவல்கள் எழுதியுள்ளார். ‘கோமதி’, ‘கண்ணீர்’, ‘கரிசல் கதைகள்’, ‘கி.ரா.பக்கங்கள்’, ‘கிராமியக் கதைகள்’, ‘கொத்தைபருத்தி’, ‘புதுவை வட்டார நாட்டுப்புறக் கதைகள்’, ‘கோபல்ல கிராமம்’, ‘புதுமைப் பித்தன்’, ‘மாமலை ஜீவாஆகியவை குறிப்பிடத்தக்கவை.
             *‘கிடைஎன்ற இவரது குறுநாவல்ஒருத்திஎன்ற திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. ‘‘ஒரே மூச்சில் ஒரு கதையை எழுதி முடிக்கும் வழக்கம் எனக்கு கிடையாது. எழுதியதைப் படித்து, மீண்டும் மீண்டும் அடித்துத் திருத்தி எழுதும் பழக்கம் உள்ளவன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
             *பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்பு பேராசிரியராகப் பணியாற்றினார். நல்ல இசைஞானம் கொண்டவர். நண்பர்களுக்கு நீண்ட கடிதங்கள் எழுதுவார். அவர்கள் எழுதும் பதில் கடிதங்களையும் பாதுகாப்பாக வைத்திருப்பார்.
             *கரிசல் வட்டார அகராதியை உருவாக்கி, வட்டார மொழிக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி என்ற பெருமை பெற்றார். ‘கோபல்லபுரத்து மக்கள்நாவலுக்காக இவருக்கு 1991-ல் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இலக்கியச் சிந்தனை விருது, தமிழக அரசு விருது, கனடா இலக்கியத் தோட்டம் வழங்கிய தமிழ் இலக்கியச் சாதனை-2016 சிறப்பு விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
             *வட்டார இலக்கியத்தின்முன்னத்தி ஏர்’, ‘தமிழ் எழுத்துலகின் பீஷ்மர்’, ‘தலைசிறந்த கதைசொல்லிஎன்றெல்லாம் போற்றப்படும் கி.ராஜநாராயணன் இன்று 94-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். தற்போது பாண்டிச்சேரியில் வசிக்கும் இவர், தள்ளாத வயதிலும் சோர்வின்றி எழுதி வருகிறார்.
             ====================================================
             செப்டம்பர் 16 கி.ராஜநாராயணன் பிறந்த நாள்
             ராயங்கல் ஸ்ரீகிருஷ்ண ராஜநாராயணப் பெருமாள் ராமானுஜன்என்கிற கி.ரா. இன்று 93 வயதை நிறைவுசெய்கிறார். 1,126 பிறைகளைப் பார்த்துவிட்ட பெருவாழ்வு அவருடையது. 24 வயதில் காசநோயால் தாக்கப்பட்டுப் பிழைப்பது அரிதென்று யாரும் பெண் கொடுக்கவே தயங்கிய ஒரு சூழலில், தனது தெருவிலேயே நான்கைந்து வீடு தள்ளியிருந்த கணவதி அம்மாளை மணந்துகொண்டவர். இன்றும் நாவலும் பத்தியும் எழுதிக்கொண்டு தமிழை மணக்கவைத்துக்கொண்டு இருக்கிறார். வாழ்வு யாரை என்ன செய்யும், எங்கே வைக்கும் என்று யாருக்குத் தெரியும்?
             சிறுகதையாளர், நாவலாசிரியர், கட்டுரையாளர், நாட்டுப்புறவியலாளர், கரிசல் காட்டு அகராதித் தொகுப்பாளர், கடித இலக்கியப் படைப்பாளி, பேராசிரியர் என எல்லா முகங்களையும் தாண்டி, இவர் 20-ம் நூற்றாண்டு தமிழ்ச் சமூகத்தின் தலைசிறந்த கதைசொல்லி. சுற்றி நடக்கும் அனைத்தையும்கதைகளாகக் கண்டுகொண்டவர் கி.ரா.
             தீண்டாமை பேசும் கதைகள்
             தமிழ் வாழ்வின் பல விதமான கோலங்களையும் சலனங்களையும் கி.ரா.வின் கதைகளில் காணலாம். இன்றைக்கு விவசாயிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவர்களது வாழ்வாதாரமான விளைநிலங்களைப் பெருநிறுவனங்கள் கையகப்படுத்திக்கொள்வது சட்டபூர்வமாகியுள்ளது. இத்தகைய அரசியலை கி.ரா. அன்றே படம்பிடித்துக் காட்டினார். கரண்டு, மாயமான், ஒரு வெண்மைப் புரட்சி முதலிய கதைகள் சிதிலம் அடைந்துகொண்டிருக்கும் விவசாயிகளின் தனிப்பட்ட வாழ்வையும் சமூக வாழ்வையும் கதைசொல்லிகளுக்கே உரிய நக்கலோடும் துக்கங்களோடும் சித்தரிப்பவை. பேதை கதை இன்றைக்கும் பெரிய பிரச்சினையாக உள்ள பாலியல் வன்முறையின் கோர முகத்தைக் கலை நயத்தோடு மாய யதார்த்தப் பாணியில் கையாள்கிறது.
             சாதி, தீண்டாமை, விளிம்பு நிலை மனிதர்களின் வேதனை ஆகியவை குறித்தும் கிடை, நெருப்பு, கதவு, குருபூசை, ஜீவன் முதலிய கதைகள் அழுத்தமாகவும் கலாபூர்வமாகவும் பேசியுள்ளன.
             மொழியின் சாவி
             மொழியின் கதவைத் திறக்கத் தெரிந்த அலிபாபா கி.ரா. நாட்டுப்புற மக்களின் பேச்சு மொழியிலுள்ள உயிரம்சத்தை உணர்ந்து சொல்லப்பட்டது போலவே அவர்களின் கதைசொல்லும் மரபையும் வித்தாரமாகக் கையாண்டுள்ளார். தமிழ் மரபுப்படி முதற்பொருளான நிலமும் பொழுதும் கருப்பொருட்களான உணவு, விலங்கு, தாவரம், பறவை, பூ, நீர்நிலை, தொழில், இசைக் கருவிகள், பாறை முதலிய பலவும் அவர் படைப்பில் ஆவணம்போலப் பதிவாகிக் கிடக்கின்றன.
             நான் ஒரு தடவை கி.ரா.விடம், “உங்கள் தாய்மொழியான தெலுங்கில்தான் நீங்கள் வீட்டில் உரையாடுகிறீர்கள்; உங்கள் படைப்பில் வரும் கதைமாந்தர்கள் பலரும் தெலுங்கில் பேசிக்கொள்ளும் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால், அவர்கள் உங்கள் எழுத்தில் தமிழில் பேசுகிறவர்கள்போலப் படைத்துள்ளீர்களே, அது எப்படி?” என்று கேட்டேன். “எனக்கு தெலுங்கில் பேசத் தெரியுமே தவிர, எழுதுவதற்குத் தெரியாது. தெரிந்திருந்தால் தெலுங்கில்தான் எழுதியிருப்பேன். என்ன செய்வது.. வழியில்லைஎன்பதுபோலப் பதில் சொன்னார்.
             மரபின் விளைச்சல்
             அவரது தாய்மொழிதான் தெலுங்கே தவிர, அவரது நனவிலி மனதில் பதிந்திருப்பவை தமிழ் மொழியும், தமிழ் இலக்கிய மரபுகளும்தான். அதனால்தான் கரிசல் மண் சார்ந்த மொழி வளமும் நிலக் காட்சிகளும் கருப்பொருளின் தமிழ்ப் பெயர்களும் அவர் படைப்பில் சரளமாக வந்து அமர்ந்துள்ளன. அதனால் அவர், இரண்டாயிரம் ஆண்டுத் தமிழிலக்கிய மரபின் விளைச்சல்தான் என்பதை அவரது ஒவ்வொரு படைப்பும் வாய் திறந்து உரக்கச் சொல்லிக் கொண்டிருக் கின்றன.
            
             சென்னை
21_5_45
என் அன்புமிக்க ஆருயிர் நண்பன் ராஜநாராயணனுக்கு,
             உன் 19_ம் தேதி கடிதம் கிடைத்தது.
             நீ சங்கீதத்தை முறைப்படி படித்துவரும் விபரம் அறிந்தேன். அந்தத் தெய்வீகமான கலையில் ஒவ்வொருவனும் நல்ல பயிற்சி பெற்றிருக்கவேண்டும். தமிழனுக்குக் கிடைத்த ஒரு தனிச்செல்வம் கர்நாடக சங்கீதம். இதற்கு இணை உலகில் வேறு எந்த சங்கீதமும் இருக்குமா என்று தெரியவில்லை. இந்தத் தனிப்பெரும் செல்வத்தை சம்பாதிக்காமல் இருந்தால் அது ..... அந்த துர்ப்பாக்கியத்தை என்னவென்று சொல்லுவது?
             கோடை விடுமுறை கழிந்ததும் நானும் இங்கே இசையை முறைப்படி படிக்கத் தீர்மானித்திருக்கிறேன். நல்ல வசதி இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக இரவும் பகலும் மனம் இசைப்பித்தில் ஊறிப் போயிருக்கிறது.
             எந்தக் கலையை எடுத்துக் கொண்டாலும் உலகில் எல்லோரும் (பாஷை, தேசம் முதலிய வேறுபாடுகளால் பாதிக்கப் பெறாதபடி) ரசிக்கக் கூடியதாக இருக்கிறது. இத்தாலி தேசத்தான் ஒருவன் தீட்டிய சித்திரத்தைத் தமிழன் ரசிக்க முடியும். தமிழன் எழுதிய ஒரு காவியத்தை மொழிபெயர்த்தால் கூடிய மட்டும் அதை ஒரு ஆங்கிலேயன் அனுபவித்து விடுவான். இப்படி எந்தக் கலையை எடுத்துக் கொண்டாலும் அது உலகத்தாரின் ரசனைக்குப் பொதுவாகத்தான் இருக்கிறது. ஆனால், சங்கீதம் அப்படி இல்லை. நம்முடைய அருமையான தோடி, ஆனந்த பைரவி போன்ற ராகங்கள் அந்நிய நாட்டானுக்குப் பிடிப்பதில்லை. அந்நிய நாட்டான் இசை நம் காதில் விழுவதைவிட ரயில் எஞ்ஜின் சத்தம் நமக்கு சற்று எரிச்சல் கொடாமல் இருக்கும். சங்கீதம் தேசம்வாரியாக வேறுபட்ட அமைப்புகளில் அமைந்த ஒரு விசித்திரமான கலை. ஆனால் நம் விளாத்திகுளம் சுவாமியவர்கள் ஆங்கிலப் பண்களை நம் கர்நாடக ராகங்கள் சிலவற்றில் பொருத்திப் பாடினார்கள். சங்கீதத்தில் ஒரு நாட்டுக்கும் மற்றொரு நாட்டுக்கும் உறவு தேடிக் கொடுத்த பெருமை நம் சுவாமியவர்களையே சேரும். அன்று முதல் ; இங்கு உயர்ந்த ஆங்கிலச் சங்கீதம் நிரம்பிய பல படங்களைப் பார்த்தேன். நம் உள்ளத்தை அமுக்கிப் பிடித்துக் கொண்டுதான் ரசிக்க வேண்டும். அவர்கள் ஆலாபனம் செய்யும் போது அதி துரிதமாக ரவைகள் புரளுகின்றன. அது ஒன்றேதான் அதிலுள்ள சிறப்பு.
             இந்துஸ்தானி சங்கீதத்தில் குரலினிமையை நெளித்து நெளித்துக் காட்டுகிறார்கள். தேன்பாகுபோல் சாரீரம் இருந்தாலும் இசையைக் கேட்க முடிவதில்லை. ஆனால், நம் கர்நாடகராகம் ஒன்றை முரட்டுத் தொண்டையில் ஒருவன் பாடினாலும் அதில் என்ன ‘‘ஜீவு’’ இருக்கிறது, தெரியுமா?
             ‘‘’’... என்ற ஒரு ஓசையில் எத்தனையோ கோடிக் கணக்கான ஒலி அணுக்கள் இருக்கின்றன. மனிதனுடைய குரல் பேதங்களில் லக்ஷம் விதமான அணுக்களும் இருக்கின்றன. ஒலியின் ஏற்றமும் இறக்கமும் இஷ்டப்படியெல்லாம்தான் சஞ்சரிக்கின்றன. ஆனால், மனிதனுடைய குரலையே ஏழு பிரிவுகளுக்குள்ளே அடக்கி வைத்த நம் முன்னோர்களின் பெருமைதான் என்ன! ஏழே ஏழு ஸ்வரங்கள். ஒரு எழுத்தை மாற்றி மற்றொரு எழுத்தைப் போட்டு ஏதோ ஒரு வரிசைக் கிரமமான அமைப்பை உண்டாக்கி விட்டால் அதில் ஒரு தெய்வநாதம் கிளம்பி விடுகிறது. அந்த நாத இழையின் நெளிவு ராகமாக உருப்பெற்று மணிக் கணக்காக சஞ்சரிக்கிறது. அதற்கு ஆதியும் அந்தமுமே இல்லை. இவ்வளவுதான் என்று வரையறுக்க முடியாத ஒரு உருவில் ரீங்காரம் செய்கிறது ராகம். ஆனால், காலத்தின் எல்லைக்கோட்டுக்குள் அடங்கின மனிதன் எல்லையற்ற அகண்டத்தில் ஒரு பரிபூரணத்துவத்தைக் கண்டது போல ஒரு ராகத்தை முடிக்கிறான். இப்படி எத்தனை ஆயிரம் ராகங்கள்! சாதாரணமாக கூவும் ஒரு குரலை இத்தனை பகுதிகளில் ஒழுங்கு படுத்திய தமிழனுடைய இசை ஞானத்தை இனி உலகம் என்றாவது மறக்குமா?
             கவிக்கு சிறப்புக் கொடுப்பதும் இசைதான். இசையில்லாத சொற்கள் மனித உணர்ச்சியைப் புலப்படுத்தாது. இசை சேரும்போதுதான் உணர்ச்சி வெளிப்படுகிறது. வசனத்தினால் ஒரு விஷயத்தைத் தெரிவிக்கலாம். ஆனால், அந்த விஷயத்தை மனசுக்குள்ளிருந்து தள்ளும் உணர்ச்சியை வசனத்தில் எப்படி எழுதுவது? அங்கே இசைதான் வந்து உதவ வேண்டியிருக்கிறது. அடுத்தவன் உணர்ச்சியை நம்மனசில் குடியேற்றுவது இசைதான். இசையில்லாத சொற்களல்ல ; அவை வெறும் எழுத்துக்கள்.
             சீன தேசத்தில் கிறிஸ்து பிறக்க 500 வருஷத்துக்கு முன்னால் கன்பூஷியஸ் என்ற அறிஞர் இருந்தார். அவர் சொல்லுவதாவது :
             ‘‘நாம் வாயால் தெரிவிக்கும் விஷயத்தை நம் எழுத்துக்கள் பரிபூரணமாகத் தெரிவிக்காது. நாம் நினைக்கக் கூடிய விஷயங்களைப் பரிபூரணமாக நம் பேச்சிலே தெரிவித்து விட முடியாது’’.
             இது எவ்வளவு உண்மையான விஷயம்!....
             நம் ராகம் ஒன்றை எடுத்துக் கொள்ளுவோம். சில ஸ்வரங்கள் வரிசைக்கிரமமாக அமைந்துவிட்டன. அவற்றின் ஐக்கியத்தில், அவை ஒன்றோடொன்று கட்டித் தழுவியாடும் ‘‘அலகிலா விளையாட்’’டில் நெஞ்சை உருக்கும் தீங்கானம் பிறக்கிறது. அந்த இசையைக் கேட்டு இது நல்ல ஒலியா அழகான ஒலியா என்று தீர்மானிப்பது நம் மாமிச அவயவங்களல்ல. நமக்குள் ஒரு நல்ல ரசிகன் உட்கார்ந்து கொண்டிருக்கிறான். அவன் இசையின் ஸ்பரிசத்தில் தன்னை மறந்து கண்களை பரவசத்தில் மூடி அனுபவிக்கிறான். அவன் அருவருத்து விட்டால் அது கெட்ட இசை என்று முத்திரை வைத்துவிடலாம். நல்ல இசையில் அவன் பாம்பாகக் கட்டுண்டு சுருளுவான். இங்கே ஒரு அறிஞர் சொல்லுவதை நீ கவனிக்க வேண்டும் :
             ‘‘கெட்ட இசை மனிதனைத் தாக்கினால் அவனுள் ஒரு கெட்ட உணர்ச்சி பிறந்து அந்த இசையோடு சேர்ந்து கொள்ளுகிறது. கெட்ட உணர்ச்சி கிளம்பியதும் அந்த இசையை மோசமானது என்று நீக்கி விடலாம். இனியதாகிய ஒரு உயர்ந்த இசையைக் கேட்டால் ஒரு உயர்ந்த பண்பு உதயமாகி அது தன் குணங்களை மனிதன் கண்முன் பரப்புகிறது. உயர்ந்த இசை அப்பேற்பட்டது.’’
             இப்படிப்பட்ட இசைக்கு உள்ள சக்தியை வரையறுக்க முடியாது. எல்லா நாட்டினரும் இதை ஒப்புக்கொள்ளுகின்றனர். இங்கேயும் கூட சில அந்நிய நாட்டறிஞர்களின் அபிப்பிராயங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். (உனக்கு அலுப்பாக இருக்குமோ என்னவோ!)
             இன்பானுபவத்துக்கு கன்பூஷியஸ், கலைகளை நாடினாராம். அதிலும் இசையைப் பற்றி அவர் சொல்லுவதைப் பார் :
             ‘‘மனித சமுதாயத்துக்குப் பொருந்திய நற்குணங்களில்லாத மனிதனுக்குத்தான் சங்கீதம் பயன்படாமல் போகும்.’’
             ஷேக்ஸ்பியரோ, ‘‘சங்கீதத்துக்கு உருகாதவன் சண்டாளன்’’ என்கிறார்.
             சீனாவில் 2400 வருஷத்துக்குமுன் ‘‘லி_கி’’ என்ற ஒரு புத்தகம் இயற்றப்பட்டது. அதில் கீழ்வருமாறு காணப்படுகிறது :
             ‘‘ரிஷிகள் இசையில் இன்பத்தை அனுபவித்தார்கள். மனிதர்களை நல்வழிப்படுத்த அதுபயன்படும் என்று கண்டார்கள். மனிதனை இசை ஆட்கொண்டு, அவன் பழக்க வழக்கங்களை மாற்றி விடுவதால் பழையகாலத்து அரசர்கள் சங்கீதத்தின் மூலமாக பல சாஸ்திரங்களைப் போதிக்கச் செய்தார்கள்’’
             இந்தியர்களாகிய நாமோ சங்கீதம், ஜீவாத்மாவை பரமாத்மாவோடு ஒட்டச் செய்யும் சக்தி வாய்ந்தது என்று நம்புகிறோம்.
             அதோடு வேத காலத்திலிருந்த ஒரு இந்தியதத்துவ ஞானி ‘‘எவனொருவன் வீணை வாசித்துக்கொண்டு இனிமையாகப் பாடுவானோ அவன் விடுதலைப் பாதையில் இலேசாக அடி எடுத்து வைத்து விடுகிறான்’’ என்கிறார். பார்க்கப்போனால் இந்தியர்கள் தான் இசையை தெய்வமாகப் போற்றியிருக்கிறார்கள்.
             இவ்வளவு சீர்பெற்றுப் பெருகி நிறைந்த இசை வெள்ளத்தில் ஒரு துளியாவது நாம் அருந்த வேண்டாமா? இந்த அமுத ஓடை ஓடும்போது பார்த்துக் கொண்டே இருந்தால் நம் கலைப்பசி தீருமா? ஒவ்வொருவருமே அந்த அமுதவெள்ளத்தில் திளைத்து விட வேண்டும்.
             எப்படியோ இசைக்கலையில் மனம் பற்றிப் படிக்கத் தொடங்கியிருக்கிறீர்கள். சந்தர்ப்பவசமாக முயற்சியில் இறங்கினோம் ; அதை வெற்றிகரமாக முடிப்பதில் தானே பெருமை!
             அங்கே பக்கத்தில் இசையில் வரம்பற்ற மேதாவிலாசம் படைத்த பலர் இருக்கிறார்கள். விளாத்திகுளம் சுவாமியவர்களின் இசையைப்போல நம் எதிர்காலத்தில் கேட்கப்போகிறோமா? இது நல்ல சந்தர்ப்பம். விடாமுயற்சிதான் துணை செய்யும்.
             இந்தக் கடிதத்தில் நான் எழுத நினைத்த விஷயங்கள் வேறு. ஆனால் சங்கீதம் வந்து இடத்தை அடைத்துக் கொண்டபின், அவற்றை எங்கே எழுதுவது? பின்னால் பார்க்கலாம். கடிதம் நீண்டதற்கு மன்னிக்கவும்.
உன்
கு. அழகிரிசாமி



No comments:

Post a Comment

Ulagam Ippo Engo poguthu * Azhagar Malai -Ilaiyaraaja

https://www.youtube.com/watch?v=cs3zLu6eccg