Monday, February 22, 2021

ச. பொன்னுத்துரை

ச. பொன்னுத்துரை ச. பொன்னுத்துரை பிறப்பு சண்முகம் பொன்னுத்துரை சூன் 4, 1932 நல்லூர், யாழ்ப்பாணம் இறப்பு நவம்பர் 26, 2014(அகவை 82) சிட்னி, ஆத்திரேலியா தேசியம் அவுஸ்திரேலியா மற்ற பெயர்கள் இலங்கைத் தமிழர் அறியப்படுவது ஆசிரியர், எழுத்தாளர் எஸ்பொ என அறியப்படும் ச. பொன்னுத்துரை (சூன் 4, 1932 - நவம்பர் 26, 2014) ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, அரசியல் என பல பரிமாணங்களிலும் எழுதியவர். 40 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1989 முதல் புலம் பெயர்ந்து ஆத்திரேலியாவின் சிட்னி நகரில் வாழ்ந்து வந்தார். சென்னையில் மித்ர என்ற பதிப்பகத்தை நிறுவி அதன் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டிருந்தார். பொருளடக்கம் [மறை] 1வாழ்க்கைச் சுருக்கம் 2எழுத்துலகில் 3விருதுகள் 4படைப்புகள் 5மறைவு 6மேற்கோள்கள் 7வெளி இணைப்புகள் வாழ்க்கைச் சுருக்கம்[தொகு] யாழ்ப்பாணம், நல்லூரில் சண்முகம் என்பவருக்குப் பிறந்த இவர் சென்னை கிறித்துவக் கல்லூரியிலும்தமிழ்நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் உயர்கல்வி பயின்றார். ஆசிரியராகப் பணியில் சேர்ந்து 1956 இல் மட்டக்களப்புக்கு இடம் பெயர்ந்தார். நைஜீரியாவிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். எழுத்துலகில்[தொகு] தனது 13வது அகவையில் எழுத ஆரம்பித்தார். 1940 இல் இவரது மூத்த சகோதரர் தம்பையா ஞானோதயம் என்ற கையெழுத்து இதழை நடத்திய பொழுது அதில் எழுத ஆரம்பித்தார். பொன்னுத்துரை எழுதிய முதலாவது கவிதை வீரகேசரியில் வெளியானது. பொன்னுத்துரையின் முதலாவது சிறுகதை 1948 ஆம் ஆண்டில் சுதந்திரன்பத்திரிகையில் வெளியானது. தமிழக இதழ்களான காதல், பிரசண்ட விகடன், ஆனந்தபோதினி ஆகிய சஞ்சிகைகளிலும் எழுதினார்.[1] இவர் எழுதிய முதலாவது புதினம் தீ ஈழத்து இலக்கியத்தில் ஒரு திருப்புமுனையை தோற்றுவித்ததுடன் பல சர்ச்சைகளையும் உருவாக்கியது. தமிழகத்தில் சரஸ்வதி என்ற இதழை நடத்திய வ. விஜயபாஸ்கரனின் முயற்சியால் இந்நூல் வெளியானது. இதனால், பொன்னுத்துரையும் தமிழ் இலக்கிய உலகில் ஒரு சர்ச்சைக்குரிய மனிதராக இருந்து வந்தார்.[1] புரட்சிப்பித்தன், பழமைதாசன் போன்ற பல புனை பெயர்களில் இவர் எழுதினார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் கருத்து ரீதியாக முற்போக்கு எழுத்தாளர்களுடன் முரண்பட்டு 1960களில் அதிலிருந்து விலகி நற்போக்கு அணியைத் தொடக்கினார். அவருடன் இளம்பிறை ரஹ்மான், வ. அ. இராசரத்தினம் போன்ற சிலரும் வெளியேறினர்.[1] சடங்கு, தீ, ஆண்மை, வீ, நனைவிடைதோய்தல், இனி ஒரு விதி செய்வோம் எனப் பல புதினங்களை எழுதிப் புகழ் பெற்றார். பொன்னுத்துரையின் சில நாடகங்கள் இலங்கை, இந்தியா, ஆத்திரேலியா முதலான நாடுகளில் மேடையேறியுள்ளன. தமிழ்நாட்டில் சில தொலைக்காட்சிகளிலும் சில தொடர் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்.[1] ஆத்திரேலியாவில் சிறிது காலம் வெளிவந்த "அக்கினிக்குஞ்சு" என்ற பன்னாட்டு இதழின் கௌரவ ஆசிரியராக இருந்தார். செம்பென் ஒஸ்மான என்ற செனகல் நாட்டு எழுத்தாளர் எழுதிய ஹால என்ற நாவலை மொழிபெயர்த்துள்ளார். மற்றும் நுகுகி வா தியங்கோ என்ற கென்யா நாட்டு இலக்கிய எழுத்தாளரின் "Weep Not Child" என்ற நாவலை தமிழில் "தேம்பி அழாதே பாப்பா" என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். கொழும்பிலிருந்து வெளிவரும் ஞானம் இதழில் அதன் ஆசிரியரின் கேள்விகளுக்கு எஸ்.பொ தெரிவிக்கும் நீண்ட பதில்களைக் கொண்ட தொடர் நேர்காணல் பல மாதங்களாக வெளியானது. பின்னர் இத்தொடர் தீதும் நன்றும் பிறர்தர வரா என்ற தலைப்பில் 2007 இல் நூலாக வெளியானது. இவரது நேர்காணல்கள், கட்டுரைகள் அடங்கிய இனி ஒரு விதி செய்வோம் என்ற நூலும் வெளிவந்துள்ளது. 1924 பக்கங்களில் வரலாற்றில் வாழ்தல்என்ற தமது சுய வரலாற்று நூலையும் எழுதியுள்ளார். சென்னையில் 'மித்ர' பதிப்பகத்தின் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டார். விருதுகள்[தொகு] இவருக்கு தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2010 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் இயல் விருது வழங்கப்பட்டது. படைப்புகள்[தொகு] வீ (சிறுகதைகள்) ஆண்மை (சிறுகதைத் தொகுதி) தீ (நாவல்) சடங்கு (நாவல்) அப்பையா எஸ்.பொ கதைகள் கீதை நிழலில் அப்பாவும் மகனும் வலை + முள் பூ தேடல் முறுவல் இஸ்லாமும் தமிழும் பெருங்காப்பியம் பத்து (தொகுப்பாசிரியர்) மத்தாப்பு + சதுரங்கம் ? நனவிடை தோய்தல் நீலாவணன் நினைவுகள் இனி ஒரு விதி செய்வோம் வரலாற்றில் வாழ்தல் (சுயசரிதை) ஈடு (நாடகம்)(அ.சந்திரஹாசனுடன் சேர்ந்து எழுதியது) மாயினி மணிமகுடம் தீதும் நன்றும் காந்தீயக் கதைகள் காந்தி தரிசனம் மகாவம்ச (மொழிபெயர்ப்பு) மறைவு[தொகு] எஸ். பொன்னுத்துரை 2014 நவம்பர் 26 அன்று சிட்னி கொன்கோர்ட் மருத்துவமனையில் காலமானார்[2]. இவரது ஒரு மகன் ஈழப்போரின் போது 1986 கடற்சமரில் இறந்த ஒரு மூத்த விடுதலைப் புலிப் போராளி ஆவார். போய் வா அப்பா!-எஸ்.பொ வைக் கண்ணீருடன் வழியனுப்பும் இதழாளர் எஸ்.பொ என்று அனைவராலும் அறியப்பட்ட ச.பொன்னுதுரை. 1932 சூன் 4 ஆம் தேதி பிறந்தவர். யாழ் பரமேஸ்வராக் கல்லூரியிலும் தமிழ்நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், சென்னை கிறித்தவக் கல்லூரியிலும் உயர்கல்வி பயின்றார். இலங்கைப் பாட விதான சபை, திரைப்படக் கூட்டுத் தாபனம் ஆகியவற்றிலும் சில காலம் பணியாற்றினார். பின்னர் இலங்கையில் ஆசிரியராகவும் நைஜீரியாவில் ஆசிரியப் பயிற்சி கலாசாலையில் ஆங்கில இலக்கிய வரலாற்றுத்துறை விரிவுரையாளராகவும் வரலாற்றுத்துறைத் தலைவராகவும் பணிபுரிந்தார். சென்னையில் ‘மித்ர’ பதிப்பகத்தின் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டு வந்தார். அவுஸ்திரேலியாவில் இருந்து வெளிவந்த ‘அக்கினிக்குஞ்சு’ என்ற சர்வதேச இதழின் கௌரவ ஆசிரியராகவும் விளங்கினார்.தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் சாதனைக்கான ‘இயல் விருது’ 2010ஆம் ஆண்டு எஸ்.பொ.வுக்கு வழங்கப்பட்டது 1990 முதல் அவுஸ்திரேலியக் குடியுரிமை பெற்று அங்கேயும் இந்தியாவிலுமாக மாறிமாறி வாழ்ந்து வந்த எஸ்.பொ. ஆஸ்திரேலிய சிட்னி நகரில் 26-11-14 அன்று காலமானார். தமிழ் இந்து நாளேட்டில் பணியாற்றி வருகிற ஆர்.சி. ஜெயந்தன் அவர் பற்றி எழுதியுள்ள வழியனுப்புக் குறிப்பு…. ஈழ இலக்கியத்தின் மையங்களில் ஒருவராக இயங்கி, படைப்பூக்கம் மிகுந்த பல கலகப் புனைவுகளைத் தந்து, நவீனத் தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்திய ‘அப்பா எஸ்பொ’ என்று எங்களால் வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட எஸ்.பொன்னுதுரை நேற்று ஆஸ்த்ரேலியாவில் மறைந்தார் என்ற செய்தி என்னை இடியாகத் தாக்கியது. இன்னும் லட்சக்கணக்கான அவர் பெறாத என்னைப்போன்ற தமிழ்ப் பிள்ளைகளை அவரது மறைவுச் செய்தி கலங்க வைக்கும். அது 2003 -ம் ஆண்டு. கல்கியில் செய்தியாளராகப் பணி. தம்பி யுகபாரதியிடமிருந்து எனக்குத் தொலைபேசி அழைப்பு. “ அண்ணா இன்னும் கொஞ்ச நேரத்தில் எஸ்பொ என்றொருவர் பேசுவார். கோடம்பாக்கம் காவல்நிலையத்தில் அவரை அழைத்திருக்கிறார்கள். அவரது ஆஸ்த்ரேலிய கடவுச் சீட்டு ஓவர் ஸ்டே ஆகிவிட்டது. கொஞ்சம் உதவமுடியுமா?” என்றார். எனக்கோ சிரிப்புதான் வந்தது. நான் செல்வாக்குடன் திகழ பொலிட்டிகல் பீட் செய்தியாளன் கிடையாது. என்றாலும் எனக்கு கல்கியில் வேலை வாங்கிக் கொடுத்த யுகபாரதியின் பேச்சை எப்படித் தட்டுவது? “ சரி ” என்று சொல்லிவிட்டு “ யார் இந்த எஸ்பொ?” என்று கேட்டுவிட்டேன். “ நல்ல வேளை இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டீர்கள். தாத்தாவிடம் கேட்டுவிடாதீர்கள். அவரது மித்ர பதிப்பகத்துக்கு அழைத்துப்போகிறேன். அப்போது உங்களுக்கே விளங்கும்” என்றார். கொஞ்ச நேரத்தில் “ ஜெயந்தன் இருக்காரா? நான் எஸ்பொ கதைக்கிறேன்” என்று ஈழத்தமிழில் பேசிய குரல் கரகரப்பாக பிசிறு தட்டினாலும் கம்பீரமாக இருந்தது. அந்தக்குரலில் என் அப்பாவின் சாயலும் கலந்திருந்தது. “ எனக்காக எனது பதிப்பகத்துக்கு வரமுடியுமா?” என்றார். கோடம்பாக்கம் மேம்பாலத்தின் கீழ் இருக்கும் மசூதிக்குச் சொந்தமான வணிக வளாகத்தில்தான் எஸ்பொவின் ‘ மித்ர பதிப்பகத்தின் அலுவலகம் இயங்கி வந்தது. அங்கே சென்றதும் மிக எளிமையாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் பேசியது எதுவுமே என் காதில் விழவில்லை. காரணம் அவர் பார்ப்பதற்கு என் அப்பாவைப் போலவே இருந்தார். ஓவர் ஸ்டே பிரச்சினையைச் சொன்னார். மென்மை மனமும் சொல்வன்மையும் மிக்க ரவி.ஆறுமுகம் ஐபிஎஸ் என் நினைவுக்கு வர அவருக்கு போன் செய்து விவரத்தைச் சொன்னேன். அவ்வளவுதான். “ என்ன எஸ்போ சென்னையில்தான் வசிக்கிறாரா?! அவருக்கு என் விசாரிப்புகளைச் சொல்லுங்கள். நான் மதிக்கும் மிக உயர்ந்த முற்போக்கு எழுத்தாளர். உடனே நீங்கள் கமிஷனர் அலுவலகம் சென்று கூடுதல் கமிஷனர் பாலச்சந்திரனைப் பாருங்கள். நான் அவருக்கு இப்போதே போன் செய்து சொல்கிறேன்” என்றவர் எஸ்போவுடன் சிலவார்த்தைகள் பேசமுடியுமா என்று கேட்டு, அரைமணிநேரம் அவரோடு பேசிக்கொண்டிருந்தார். அவர்களது உரையாடலில் வந்து விழுந்தது ‘ தீ’ என்ற சொல். பிறகு கட்டாயப்படுத்தி என்னை அவருடன் மதிய உணவு உண்ண வைத்த எஸ்போ “ எனது எழுத்துக்களில் எதையும் படித்திருக்கிறீர்களா செயந்தன்?” என்றார். நான் ஒருதுண்டு இஞ்சியை விழுங்கியவனைப் போல விழித்தேன். “இயக்கியம் வாசிப்பீர்கள்தானே?” என்றபடி உள்ளே எழுந்து சென்றவர். தீ, சடங்கு ஆகிய நாவல்களை என்னிடம் கொண்டு வந்து தந்தார். இரண்டுமே பழைய பதிப்புகள். பிறகு அங்கிருந்து காரில் கமிஷனர் அலுவலகம் சென்று பாலச்சந்திரனைச் சந்தித்து கூடுதல் அவகாசம் கிடைக்க கோரிக்கை வைத்தோம். அவர் அங்கிருந்து கோடம்பாக்கம் காவல் நிலையத்துக்கு கூப்பிட்டுச் சொல்ல, நாங்கள் காவல் நிலையும் சென்று பிரச்சினை இல்லாமல் திரும்பினோம். ஒரு எழுத்தாளனாகவும் கல்வியாளனாகவும் இருந்ததால் அவருக்கு நீட்டிப்புக் கிடைத்தது. அன்று மாலை வீடு திரும்பியதும் இரவு தீ நாவலைப் புரட்ட ஆரம்பித்தேன். காய்ந்த புற்களை மேய்வதைப்போல் புகைந்துகொண்டிருந்த எனது நவீன வாசிப்புக்கு உண்மையாகவே தீ மூட்டியது எஸ்போவின் தீ. சடங்கு, தீ போன்ற படைப்புகளின் ஊடாக, பாலியலைப் பேசக் கூடாத ஒன்றாக கருதும் மனப்பாங்கை உடைத்து நிரவியிருந்தார் எஸ்பொ. அதன்பிறகு அவரை நான் அப்பா என்றே அழைக்க ஆரம்பித்தேன். அவரது புலம்பெயர் சோகத்தின் பின்னணியில் இருந்த ஈடுசெய்ய முடியாத இழப்புகளைத் தெரிந்து கொண்டேன். அவரது ஆஸ்த்ரேலிய, நைஜீரிய பேராசியப்பணி அனுபவங்களை தெரிந்து கொண்டேன். அவர் வழியாக ஈழ இனவிடுதலைப்போரின் அரசியலை புரிந்திருக்கிறேன். அவர் திரும்பவும் ஆஸ்த்ரேலியா திரும்பவும்வரை அவரது கொச்சையான வசவுகளையும், இலக்கியப் பகிர்தலையும் கலவையாய் ரசித்திருக்கிறேன். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, எஸ்போ எனும் தனி மனிதனின் பாசத்தை நுகர்ந்திருக்கிறேன். ஆஸ்த்ரேலியாவில் எழுதத் தொடங்கிய தனது 1500 பக்க சுயசரிதையான ‘ வரலாற்றில் வாழ்தல்’ நூலை அவர் சென்னையில்தான் நிறைவு செய்து அச்சிட்டார். அது எஸ்போவின் வாழ்க்கை வழியே ஈழத்தின் அரசியல் வரலாற்ரையும் ஈழ இலக்கியப் போக்குகளையும் பதிவு செய்திருக்கும் மாபெரும் ஆவணம். அவரது சுயசரிதையை முன்வைத்து கல்கிக்காக அவரை நேர் கண்டு எழுதியதையும் மறக்கமுடியாது. அப்பா எஸ்போ .. நிம்மதியாய்ப் போய்வா… உன் கலகத் தடங்களில் எங்கள் எழுத்துக்கள் தொடரும்… இந்த பூமியெங்கும் அவை பற்றிப் படரும்.. நவம்பர் 26 - எஸ்.பொ. நினைவு நாள்: ஈழ இலக்கிய உலகின் பெருங்கலைஞன் - எஸ்.பொ. ‘தற்போதைய தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு நோபல் பரிசு அளிக்கப்படுவதாக இருந்தால், யாரை முன்மொழிவீர்கள்?’ என்று கோவை ஞானியிடம் ஒருமுறை கேட்கப்பட்டது. அவர் தயங்காமல் முன்மொழிந்த பெயர் ‘எஸ்.பொ.’ தன் வாழ்நாள் முழுவதும் எழுதிக்கொண்டிருந்த எஸ்.பொ. என்கிறஎஸ்.பொன்னுத்துரைக்கு கனடா இலக்கியத் தோட்ட விருதைத் தவிர குறிப்பிடத்தக்க வேறு விருதுகள் அளிக்கப்படவில்லை என்பது வேறு விஷயம். இலக்கிய விருதுகளை அவர் பெரிதாகக் கருதவும் இல்லை. “இலக்கியம் என் ஊழியம்; தமிழ் என் தவம்; அழகு என் ஆராதனை; மனித விடுதலை என் மோட்சம்; சுதந்திரம் என் இயல்பு; மார்க்ஸியம் என் வேதம்” என்று பிரகடனப்படுத்தி, அதை வாழ்நாளெல்லாம் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தவர் எஸ்.பொ. 1932 மே 24-ம் நாள் நல்லூரில் பிறந்த அவரது வாழ்க்கை, போராட்டங்களும் சுவாரசியங்களும் நிறைந்தது. தனது சுயசரிதையை ‘வரலாற்றில் வாழ்தல்’ (2 பாகங்கள் அடங்கியது) எனும் நூலில் அவர் விரிவாக எழுதியுள்ளார். 2 ஆயிரம் பக்கங்களுக்கு விரிந்து செல்லும் அந்த நூல், 5 கண்டங்களில் வாழ நேர்ந்த எஸ்.பொ.வின் தனிப்பட்ட வரலாற்றை மட்டுமே சொல்லவில்லை; இலங்கை மற்றும் தமிழ்நாட்டின் சமூக,பொருளாதார, அரசியல் வாழ்க்கையும் அதில் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து இலக்கியவாதிகள், கலைஞர்களுடனான உறவை அந்த நூலில் பதிவு செய்துள்ளார். எஸ்.பொ. என்றவுடன், தீவிர இலக்கியவாதிகள்கூட நினைவுகூரும் நாவல் கள் ‘தீ’, ‘சடங்கு’ ஆகியன. முற்போக்கு என்பதற்குப் பதிலாக ‘நற்போக்கை’ வலியுறுத்திய இலக்கிய வாதி என்பதுதான் எஸ்.பொ. மீதான முத்திரை. உண்மையில் அவரது பரிமாணங்கள் பன்மடங்கு பெரிது. சிறுகதை, நாடக ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், விமர்சகர், பதிப்பாளர் என்று பல்வேறு அடையாளங்கள் அவருக்கு உண்டு. ஈழ விடுதலைப் போராட்டத்தில், கடல் போரில் இறந்த தன் மகன்‘மித்ர’வின் நினைவாக ‘மித்ர’ பதிப்பகத்தை சென்னையில் நிறுவினார். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை அதன்மூலம் கொண்டுவந்தார். தன் மகன் ஒரு போராளி என்பது, மித்ர இறக்கும் வரை அவருக்குத் தெரியாது. மித்ர பதிப்பகம் மூலமாக வெளிவரும் நூல்களை, தன் மகனுக்குச் செய்யும் அஞ்சலியாகவே கருதினார். அ.முத்துலிங்கம், பழமலய், தமிழச்சி தங்கபாண்டியன், பீர் முகம்மது, ரெ.கார்த்திகேசு, ஜீவகுமாரன், இந்திரன், இயக்குநர் மகேந்திரன் போன்ற எண்ணற்ற எழுத்தாளர்களின் நூல்களைக் கொண்டு வந்தார். இந்திரா பார்த்தசாரதியுடன் இணைந்து அவர் தொகுத்த ‘பனியும் பனையும்’ என்ற நூல்தான் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகள் அடங்கிய முதல் முழுத்தொகுப்பு. தன்னை ஒரு சிறந்த பதிப்பாசிரியராக இலக்கிய உலகம் அங்கீகரிக்கவில்லையே என்ற வருத்தம்எஸ்.பொ.வுக்கு இறுதிவரை இருந்தது. புதுமைப்பித்தன், ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி வரிசையில் தயக்கமின்றி எஸ்.பொ.வைச் சேர்க்கலாம். இவர்கள் யாரிடமும் இல்லாத ஒரு சிறப்பம்சமும் எஸ்.பொ.வுக்கு உண்டு. வாழ்நாளின் இறுதியில், 10 ஆப்பிரிக்க நாவல்களை மொழிபெயர்த்தார். சிங்கள வரலாற்றைச் சொல்லும் ‘மகாவம்ச’ என்னும் நூலை மொழிபெயர்த்ததை அவர் தனது உச்சபட்ச சாதனையாகக் கருதினார். அவரது சிறுகதைகளில் குறிப்பிடத்தக்கதாக ‘பசி’,‘தேர்’,‘கடவுள் அடிமையானார்’, ‘பலிபீடம்’ ஆகிய கதைகளைச் சொல்வேன். ‘நனவிடைதோய் தல்’ என்னும் நூல்தான் அன்றைய யாழ்ப்பாணத்தைக் கண்முன் நிறுத்தும் வரலாற்று ஆவணம். 60 ஆண்டுகளுக்கு முற்பட்ட யாழ்ப்பாணத்தின் அழகையும், அதன் மண்வாசனையையும் தந்த பிறிதொரு நூல் தமிழில் இல்லை. எஸ்.பொ.வை ஈழத்து ஜெயகாந்தன் என்று கூறியபோது அதை மறுத்து, ஜெயகாந்தனை வேண்டுமானால், ‘தமிழ்நாட்டின் எஸ்.பொ’என்று அழையுங்கள் என்றார். ‘எழுத்துப் போராளி’, ‘இலக்கியச் சண்டியர்’ என்ற அடைமொழிகளைச் சுமப்பதை அவர் பெருமையாகவே கருதினார். ‘பாலியல் வக்கிரங்களை எழுதியவர்’, ‘ஆபாச எழுத்தாளர்’ என்றெல்லாம் முத்திரை குத்தப்பட்டதில் துளியும் உண்மை இல்லை என்றே கருதுகிறேன். ‘?’, ‘மாயினி’, ‘இனி’, ‘தீதும் நன்றும்’, ‘கீதையின் நிழலில்’ போன்ற நூல்களை வாசித்தால் மட்டுமே அவரை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். இலங்கையின் சமகால அரசியல் வரலாற்றைச் சொல்லும் மிக முக்கியமான நாவல் ‘மாயினி’. உலக இலக்கியங்களின் மீதும் அவருக்கு ஆழ்ந்த பரிச்சயம் இருந்தது. எழுத்தாளர்களுக்கென்று தனித்த அடையாளங்கள், சுயமரியாதை வேண்டும். கூலிக்கு மாரடிக்கிறவர்களாக இன்றைய எழுத்தாளர்கள், கலைஞர்கள் இருக்கிறார்கள் என்பதைத் தன் கட்டுரைகளில் பதிவுசெய்துள்ளார். ஒருமுறை இயக்குநர் பாலுமகேந்திரா கூறினார்: “நான் எத்தனையோ ஹீரோக்களை உருவாக்கியுள்ளேன். ஆனால், எனக்கு ஹீரோ எஸ்.பொ. தான்”. எஸ்.பொ. என்றுமே பம்மாத்துகளை, வார்த்தை ஜாலங்களை நம்பியதில்லை. கோட்பாடுகள் மட்டுமே இலக்கியங்களைத் தோற்றுவிக்காது. இலக்கியம் என்பது கோட்பாடுகளை அல்ல; மனித வாழ்க்கையையும், உணர்வுகளையும் சார்ந்து இருக்கிறது என்று நம்பிச் செயல்பட்டவர். அதனால்தான், எந்த ஒரு கோட்பாட்டுக்குள்ளும் புகுந்துகொண்டு வேஷம் தரித்த போலிகளை மூர்க்கமாகச் சாடினார். தன் வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை எழுத்துச் சமரனாகவே வாழ்ந்தார் எஸ்.பொ. மரித்த பின்பும், வரலாற்றில் வாழ்பவனன்றோ பெருங்கலைஞன்!

No comments:

Post a Comment

Raagam Thaalam Pallavi - ராகம் தாளம் பல்லவி - Theerppugal Thiruththapadalaam

 Raagam Thaalam Pallavi  ராகம் தாளம் பல்லவி  Theerppugal Thiruththapadalaam Movie - Theerppugal Thiruththapadalaam Music - Shankar Ganesh S...