சி. ருத்ரைய்யா
சி.ருத்ரைய்யா (C. Rudhraiya,
1947 - நவம்பர் 18,
2014) 1978ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் மாறுபட்ட ஒரு இயக்குனராக நுழைந்தவர்.இவரின் சொந்த ஊர் சேலம் அருகிலுள்ள ஆத்தூர். திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் படித்தவர்.சென்னை தரமணியில் உள்ள திரைப்படக் கல்லூரியில் திரைக்கதை எழுத்து மற்றும் இயக்கம் படித்தார்.[1] இவரது முதல் படமான "அவள் அப்படித்தான்", முன்னணி நட்சத்திரங்களான கமலஹாசன், ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீபிரியா ஆகியோர் நடித்திருந்தபோதும்[2][3], அவர்களிடமிருந்து வழமையாக ரசிகர்கள் எதிர்பார்க்கும் அம்சங்களைக் கொண்டிராது, வேறுபட்ட, உளவியல் தொடர்பான கதையைமைப்பைக் கொண்டிருந்ததால் தோல்வியுற்றது. இருப்பினும், இன்றளவும், தமிழில் வெளிவந்த சிறந்த படங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது.
புதுமுகங்களை
வைத்து 1980 ஆம் ஆண்டு சி.ருத்ரைய்யா இயக்கிய
"கிராமத்து அத்தியாயம்" என்னும் திரைப்படமும் தோல்வியுற்றது. இதன் பிறகு அவரது படம் எதுவும் வெளிவரவில்லை. சில முயற்சிகள் துவக்கத்திலேயே தோல்வியுற்று விட்டன.
2014 ஆம் ஆண்டு
நவம்பர் 18 ஆம் நாளன்று தனது 67வது அகவையில் சென்னையில் காலமானார்.
தமிழ்
திரைப்படத்துறையின் பழம் பெரும் இயக்குநர் சி.ருத்ரய்யா (67), சென்னை தனியார்
மருத்துவமனையில் நேற்று காலமானார்.
உடல்நலக்
குறைவு காரணமாக சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சி.ருத்ரய்யாவின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் 1978-ம் ஆண்டு வெளியான
“அவள் அப்படித்தான்” என்ற திரைப்படம் தமிழ் திரையுலகின் மைல்கல்லாக போற்றப்படுகிறது. ரஜினிகாந்த், கமலஹாசன், பிரியா உள்ளிட்ட பிரபலங்கள் நடித்த அந்த படம், இந்தியாவில் வெளியான மிகச்சிறந்த 100 படங்களில் ஒன்றாக மதிப்பிடப்படுகிறது.
தஞ்சை
மாவட்டத்தை பூர்வீக மாகக் கொண்ட ருத்ரய்யா, மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்ற அவருக்கு ஒரு மகள் உண்டு. அவர் வெளிநாட்டில் வசிக்கிறார். தனது இறுதிக் காலத்தை சென்னை லாயிட்ஸ் காலனியில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்தார்.
திரைப்படக்கல்லூரியில்
பயின்றுவிட்டு, பாலச்சந்தரின் உதவியாளராகவும் இருந்த ருத்ரையா இயக்கிய முதல் படம் 'அவள் அப்படித்தான்'.
கமல்ஹாசனின்
சிவப்பு ரோஜாக்கள் வெளியான அதே நாளில் 'அவள் அப்படித்தான்' படமும் வெளியானது. சிவப்பு ரோஜாக்களின் மெகா ஹிட் 'அவள் அப்படித்தான்' படத்தை ரசிகர்கள் கண்களில் இருந்து மறைத்துவிட்டது.
அந்த
பரபரப்பு அடங்கிய பின்னர் 'அவள் அப்படித்தான்' படம் ரசிகர்கள் கண்களில் பட அமோக வரவேற்பை
பெற்று 100 நாட்களை கடந்தது.
ருத்ரையா
தமிழ் திரையுலகிற்கு தந்த மற்றொரு படம் கிராமத்து அத்தியாயம், ஆனால் அந்தப் படம் வெற்றி பெறவில்லை. ஆத்து மேட்டுல என்ற பாடல் மட்டும் பிரபலமடைந்தது.
தமிழ்
திரைப்பட ரசிகர்கள் ருத்ரையாவை என்றும் நினைவுகூர அவள் அப்படித்தான் என்ற ஒரு படம் மட்டுமே போதுமானது.
சென்னை
தரமணி திரைப்படக் கல்லூரி யில் எனக்கு சீனியராக இருந்தவர் ருத்ரய்யா. 1974-75-ல் அவரை நான்
சந்தித்தேன். இடதுசாரி சிந்தனைகளும், சர்வதேச சினிமாக்கள் மீதான பிரியமும் எங்களை இணைத்தன. அந்தக் காலகட்டத்து சினிமா மாணவர்கள் எல்லோரையும் பிரெஞ்சு புதிய அலை சினிமா ஈர்த்திருந்தது. திரைப்படக் கல்லூரி என்பது வெறுமனே வணிகப் படங்களை உருவாக்குபவர்களுக்கான இடம் அல்ல. அது மாற்று சினிமாவுக்கான உத்வேகத்தைக் கொடுக்கும் தளம் என்ற அபிப்ராயம் எங்கள் இரண்டு பேருக்கும் இருந்தது.
ருத்ரய்யாவுக்கு
அதற்கான வாய்ப்புகளும் அமைந்தன. இயக்குநர் அனந்து அவருக்குப் பக்கபலமாக இருந்தார். வணிக சினிமாவில் பணியாற்றினாலும், அனந்து சினிமா களஞ்சியமாக இருந்தார். திரைப்பட விழாக்களுக்குச் சென்று ஆர்வத்தோடு படங்களைப் பார்த்துவந்தவர் அவர். வெறுமனே ஒரு திரைக்கதையை விவாதிப்பதோடு மட்டுமல்லாமல், அதற்கும் மேலான நிறைய உதவிகளைச் செய்பவராக இருந்தார். அதனால்தான், ‘அவள் அப்படித்தான்’ படத்தையே ருத்ரய்யா அனந்துவுக்குச் சமர்ப்பணம் செய்தார்.
ருத்ரய்யாவுக்கு
முதலில் கதைகள் அமையவில்லை. நான் ஆவணப்பட, விளம்பரப்பட உலகில் இருந்தேன். அதன் பின்னணியிலிருந்து ‘அவள் அப்படித்தான்’கதைச் சுருக்கத்தை இரண்டு பக்கத்தில் எழுதிக்கொடுத்தேன். அனந்துவுக்கு எனது கதைச்சுருக்கம் பிடித்திருந்தது. ரஜினி என்ற நட்சத்திர பலத்துக்காகச் சில மாற்றங்களைச் செய்தார் அனந்து. கதாநாயகியின் ஃப்ளாஷ்பேக்கை வண்ணநிலவன் எழுதினார். ‘அவள் அப்படித்தான்’ டைட்டிலையும் அனந்துதான் வைத்தார்.
தி.
ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ நாவலைத் தான் ருத்ரய்யா முதலில் படமாக எடுக்கத் தீர்மானித்திருந்தார். கமல்ஹாசனும் அந்தக் கதையில் நடிப்பதற்கு மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார். முதலில் ஒரு கமர்ஷியல் படத்தை எடுத்துவிட்டு, இரண்டாவதாக ‘அம்மா வந்தாள்’ படம் என்று முடிவுசெய்தோம். ‘அவள் அப்படித்தான்’அறிவிப்புடன் சேர்ந்தே ‘அம்மா வந்தாள்’ படத்துக்கும் அறிவிப்பு கொடுத்தோம்.
‘அவள்
அப்படித்தான்’ படத்தில் நடிகராக மட்டும் அல்ல, தொழில்நுட்பக் கலைஞராகவும் கமல் எல்லாவிதமாகவும் ஒத்துழைப்பு கொடுத்தார். காஸ்டியூம் வரை கவனித்துக்கொண்டார். ரஜினியும் மிகவும் குறைந்த சம்பளம் வாங்கிக்கொண்டு நடித் தார். வித்தியாசமான ஒரு அணி படம் எடுப்பதற்காக வந்திருக்கிறார்கள்; அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எல்லோரும் ஒத்துழைத்தார்கள். நல்லுசாமி-ஞானசேகரன் ஒளிப்பதிவும் மிகவும் துணிச்சலானது. நிழலுருவக் காட்சிகளை (சில்ஹவுட்) குறைவான வெளிச்சத்தில் நிறையப் பரிட்சார்த்தம் செய்து எடுத்திருப்பார்கள். அந்த வருடத்தில் வெளியான படங்களில் பெரும்பாலானவை வண்ணப் படங்களே. பொருளாதாரச் சிக்கனத்துக்காகவே கருப்பு-வெள்ளையில் படம்பிடித்தோம். ஆனால், அதுவே அப்படத்தின் சிறப்பம்சமாக இப்போது உணரப்படுகிறது.
படத்தின்
வசனங்களையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். யதார்த்தத்துக்கும் நாடகத் தன்மைக்கும் இடையில் தர்க்கவாதம்போல வசனங்கள் கூர்மையாக இருக்கும். அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. பட வெளியீட்டின்போது மிகப் பெரிய
சோதனையை ‘அவள் அப்படித்தான்’ சந்தித்தது. வெளியான ஒரு வாரத்தில் அனைத்துத் திரையரங்குகளிலிருந்தும் படப் பிரதி திரும்பி வந்துவிட்டது. ஆறு மாதம் கழித்து அந்தப் படத்தை சென்னை சஃபையரில் காலைக் காட்சியாக மட்டும் நான் வெளியிட்டேன். மிருணாள் சென் அந்தப் படத்தைப் பாராட்டியிருந்தார். தமிழில் இப்படியான படம் வந்தது ஆச்சரியம் என்று சொல்லியிருந்தார். பாரதிராஜாவும் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். “எந்த மாதிரியான வேட்கைகளுடன் தேடலுடன் நான் சினிமாவுக்கு வந்தேனோ அதைத் திரும்பிப் பார்க்க வைத்தது ‘அவள் அப்படித்தான்’ ” என்றார் அவர். பாரதிராஜா, மிருணாள் சென் இருவரது பேச்சையும் விளம்பரப்படுத்திப் படத்தை வெளியிட்டோம். நிறையப் பேர் வரத் தொடங்கினார்கள்.
உடலைச்
சுட்ட படைப்பு
இந்தப்
படத்தை எடுத்ததில் ருத்ரய்யா பொருளாதார விஷயத்தில் நிறையப் பாதிக்கப்பட்டார். ஒரு பத்திரிகை நேர்காணலில் அவரிடம் ‘‘ ‘அவள் அப்படித்தான்’ படத்தின் மூலம் கையைச் சுட்டுக் கொண்டீர்களா?” என்ற கேள்விக்கு, “உடலையே சுட்டுக்கொண்டேன்” என்று பதில் சொல்லியிருப்பார். ஆனாலும், ‘அவள் அப்படித்தான்’ படம் மூலம் அவருக்குத் திரையுலகில் ஆதரவுகளும் குவிந்தன. ஒரு படைப்பு உடனடியாக மக்களைக் கவரா விட்டாலும், பொருளாதாரரீதியாகப் படைப்பாளிக்கு லாபத்தைத் தராவிட்டாலும், அது நல்ல படைப்பாக இருந்தால், காலம் கடந்து ஏற்றுக்கொள்ளப்படும் என்பதற்கு உதாரணம் ‘அவள் அப்படித்தான்’.
சுஜாதாவின்
‘24 ரூபாய் தீவு’ கதையில் நடிக்க கமல்ஹாசன் உடனடியாக கால்ஷீட் கொடுத்தார். ஒரு பாட்டுடன் நின்றுபோனது. அடுத்து ‘ராஜா என்னை மன்னித்துவிடு’. அதற்கும் நாயகன் கமல்ஹாசன்தான். அறிவிப்போடு நின்றுவிட்டது. அதற்குப் பிறகுதான் ‘கிராமத்து அத்தியாயம்’. இளையராஜா, பஞ்சு அருணாச்சலம் போன்றோரின் முழு ஒத்துழைப்பு இருந்தாலும், ருத்ரய்யாவிடம் எதிர்பார்க்கப்பட்ட தரத்தில் அந்தப் படம் வரவில்லை.
அதற்குப்
பிறகு கொஞ்ச நாட்கள் கழித்து 1983-84-ல் திரும்பவும் படம்
செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு, ரஜினியைக் கதாநாயகனாக மனதில் கொண்டு, கடலோரக் கிராமத்தை மையமாக வைத்து ஒரு கதையை எழுதினேன். ருத்ரய்யா நினைத்ததுபோல நட்சத்திரங்கள் கிடைக்கவில்லை. அந்தக் கதைதான் பின்னர் பாரதிராஜா இயக்கத்தில் ‘கடலோரக் கவிதைகள்’ படமாக வந்தது.
சிவாஜி
கணேசனை பீஷ்மர் கதாபாத்திரமாக்கி 3-டி தொழில்நுட்பத்தில் மகாபாரதக் கதையை
எடுக்க விரும்பினார். அதுவும் சாத்தியமாகவில்லை. ரகுவரனை வைத்து ‘டிஎஸ்பி 7’, சுஜாதா கதை - திரைக்கதை. அதுவும் பூஜையோடு நின்றுவிட்டது.
தோல்வி
அடைந்த முயற்சிகள்
நீண்ட
இடைவெளிக்குப்பின், ஷேக்ஸ்பியரின் ரோமியோ-ஜூலியட் கதையைத் தற்காலச் சூழலில் மியூஸிக்கலான ஒரு திரைப்படமாக எடுக்கலாம் என்று முடிவுசெய்தோம். ஏ.ஆர். ரஹ்மான்தான்
இசை என்று முடிவுசெய்தோம். வைரமுத்துவிடமும் பேசினோம். ஒளிப்பதிவாளராக பி.சி. ஸ்ரீராமை
முடிவுசெய்து, அவரைத் தொடர்புகொண்டோம். அவர் 6 மாதம் கழித்துச் செய்யலாம் என்றார். நாங்கள் ஒப்புக்கொண்டோம். ஆனால், வணிகரீதியில் சிலரைச் சந்திக்க வேண்டியிருந்தது. அதை ருத்ரய்யா விரும்பவில்லை. அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. சினிமாவின் வணிகரீதியான நடைமுறைகளில் அவர் தொடர்ந்து முரண்பாடுடையவராக இருந்தார். அதனாலேயே நிறைய வாய்ப்புகளைத் தவறவிட்டார். ஒரு இடதுசாரி சினிமாக்காரராக சினிமாவை ஆயுதம் என்று நம்பியவர் அவர். அபூர்வமான மனிதர். தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டிய, நிறைய நல்ல படைப்புகளைத் தந்திருக்க வேண்டிய இயக்குநர் ருத்ரய்யா. அந்த வாய்ப்பைத் தமிழ் சினிமாவும் இழந்துவிட்டது; அவரும் இழந்துவிட்டார்.
- கே.
ராஜேஸ்வர், ‘அவள் அப்படித்தான்’, ‘பன்னீர்புஷ்பங்கள்’, ‘கடலோரக் கவிதைகள்’ போன்ற படங்களின் கதாசிரியர்; ‘அமரன்’, ‘கோவில்பட்டி வீரலட்சுமி’உள்ளிட்ட படங்களின் இயக்குநர்.
இயக்குநர்
ருத்ரய்யாவின் முதல் படத்தில் நடித்ததோடு, அப்படம் உருவாக உறுதுணையாக இருந்த நடிகர் கமல்ஹாசன், 'அவள் அப்படித்தான்' குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்.
"சினிமாவில்
எனது வழிகாட்டிகளில் ஒருவரான அனந்து தான் முதன்முதலில் ருத்ரய்யா குறித்து என்னிடம் பேசியது. 'திரைப்படக் கல்லூரியிலிருந்து புத்திசாலி மாணவர்' என குறிப்பிட்டார். ருத்ரய்யாவின் இயற்பெயர்
ஆறுமுகம். அவரை அப்படித்தான் நாங்கள் முதலில் அறிந்திருந்தோம்.
சென்னை
திரைப்படக் கல்லூரியில் தங்கப் பதக்கம் பெற்ற துடிப்புள்ள இளைஞர். அங்கு மாணவர்கள் யூனியனுக்குத் தலைவராக இருந்து தீவிரமாக செயல்படும் போராளியாகவே பெயர் பெற்றிருந்தார். தமிழ் சினிமாவை உருமாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருந்த நான், ஆர்.சி. சக்தி, அனந்து ஆகியோர் அடங்கிய எங்கள் குழுவிற்கு சீக்கிரத்திலேயே நெருக்கமானார்.
நாங்கள்
சந்தித்தால் மணிக்கணக்கில் எங்கள் பேச்சு நீளும் என்பதால் எங்களது சந்திப்பு குறித்து அச்சப்பட்டவர்களும் இருந்தனர். அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் பிரசன்னா என்ற பாத்திரத்தில் ஒன்றி நடிப்பதற்கு ருத்ரய்யா எனக்கு உதவினார். அந்தப் பாத்திரத்தைப் போலவே ருத்ரய்யாவும் இடதுசாரி கொள்கை உடையவர் என்பதால், அவரால் எனக்கு சிறப்பாக வழிகாட்ட முடிந்தது. முதன்முதலில் ஆறுமுகத்துடன் எனது நினைவுகள் இதுவே.
எங்களது
உரையாடல்கள் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. கோடார்ட், போலன்ஸ்கி, ரோஸெலினி, பிரெஸ்ஸான் ஆகிய இயக்குநர்களது படங்கள் எங்கள் பேச்சில் அடிக்கடி வந்து போகும். சென்னை திரைப்படக் கல்லூரியில் அவருக்கு இருந்த செல்வாக்கை வைத்து, வெளிநாட்டுத் திரைப்படங்களை வரவழைத்து, பார்த்து, அதை ஒரு நாள் தாமதமாக பூனே திரைப்படக் கல்லூரிக்கு அனுப்புவோம். எல்டாம்ஸ் சாலையில் ஒரு சிறிய திரைப்பட விழாவைப் போலவே இருக்கும்.
நாங்கள்
பெருமைபட்டுக் கொள்ளுமாறு, தமிழ் சினிமாவை அடுத்தத் தளத்திற்கு எடுத்துச் செல்லுமாறு ஒரு திரைப்படத்தை எடுக்க நினைத்தோம். அதன் விளைவே 'அவள் அப்படித்தான்'.
கோபத்தால்
உந்தப்பட்ட ஆளாக ஆறுமுகம் எனக்குத் தோன்றினார். ஒருவேளை அதனால்தான் தன் பெயரை ருத்ரய்யா என்று மாற்றிக் கொண்டார் என நினைக்கிறேன். அவரது
முதல் படம் எங்கள் குழுவின் செல்லப் படமாக இருந்தது. அதனால் வெறும் பேச்சு மட்டுமல்ல, செய்தும் காட்டுவோம் என மற்றவர்களிடமிருந்து நாங்கள் வித்தியாசப்பட்டு
நின்றோம். ஒரு வருடத்திற்கு 20 படங்கள் வரை நான் நடித்த காலகட்டம் அது. எனவே, என் ஓய்வு நேரத்தில்தான் படப்பிடிப்பு நடந்தது. அப்படி இருந்தும் படத்திற்கு எங்களால் சிறப்பான வடிவத்தைத் தர முடிந்தது.
அவள்
அப்படித்தான் படத்தின் முதல் காட்சியில், நான் கேமராவைப் பார்த்து "கொஞ்சம் லெஃப்ட்ல உட்காருங்க" என்று கூறுவது, இடதுசாரி சிந்தனையை ரசிகர்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும் என ஊக்குவிக்கும் குறியீடுதான்.
அப்போதைய தமிழ் சினிமாவின் மீது இருந்த கோபத்தின் விளைவாகவே அவள் அப்படித்தான் துவங்கப்பட்டது. சலிப்பை ஏற்படுத்தும் படமாக அது மாற வாய்ப்பிருந்தது ஆனால் அப்படி ஆகவில்லை.
பணத்
தட்டுப்பாடு இருந்ததால் தொழில்நுட்ப ரீதியில் படத்துக்கு சிறப்பு சேர்க்க முடியாமல் போனது. அப்போது, இளையராஜா பிஸியாக இருந்தார். ஆனாலும் எங்களுக்காக அவரை வலுக்கட்டயமாக இசையமைக்க வைக்க முடிந்தது.
கையில்
கிடைத்த கேமராவைக் கொண்டு, எங்களை வைத்து ருத்ரய்யா நடத்திய படப்பிடிப்பு ஆச்சரியமானதாக இருந்தது. எங்கள் நோக்கம் ஒழுங்காக இருந்ததால், சிறிய பட்ஜெட்டாக இருந்தாலும் அனந்து, ரஜினி, ஸ்ரீப்ரியா போன்றோர் படத்தில் இணைய ஒப்புக் கொண்டனர். பெண் விடுதலையைப் பற்றி அனந்து அப்போதே எழுதினார்.
படப்பிடிப்பு
சமயத்திலும் நாங்கள் வெளிநாட்டுத் திரைப்படங்கள் குறித்து நிறையப் பேசுவோம். ஒவ்வொரு காட்சிக்கு முன்பும், இதை கோடார்ட் எடுத்தால் எப்படி எடுப்பார், கேமராவின் கோணம் எப்படி இருக்கும் என பேசிக் கொண்டிருப்போம்.
ஐந்து மாதங்கள், இரண்டு இரண்டு மணி நேரங்களாக எங்கள் படப்பிடிப்பு நடந்தது. படத்தைப் பார்த்தபோது வியப்பாக இருந்தது.
'ராஜா
என்னை மன்னித்துவிடு' என்ற ருத்ரய்யாவின் இரண்டாவது படத்திலும் நான் நடிப்பதாக இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்தப் படத்தை எங்களால் தொடங்க முடியவில்லை. அந்தப் படத்தின் கதை சிறப்பாக இருந்தது. ஆனால் 'சகலகலா வல்லவன்' போன்ற படங்களின் வெற்றி, எங்கள் கூட்டணியை தடுத்தது. தமிழ் சினிமாவில் ராஜபார்வைக்குப் பிறகு என் மீதான நம்பிக்கை மிகுந்தது. அதே வேளையில், 'சகலகலா வல்லவன்' திரைப்படத்தில் நான் நடித்தது ருத்ரய்யாவுக்கு பிடிக்கவில்லை.
வணிகரீதியிலான
படங்களில் நடிப்பதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டுதான் நாம் நினைக்கும் சிறந்த படங்களை எடுக்க முடியும் என்று அவரை சமாதனப்படுத்தியது என் நினைவில் உள்ளது. அப்போது அவர் 'கிராமத்து அத்தியாயம்' திரைப்படம் எடுத்தார். அதில் எங்களுக்குள் சில கருத்து வேறுபாடு நிலவியது. அந்தக் கரு எனக்குப் பிடித்திந்ருதாலும், அவள் அப்படித்தானில் இருந்த அடர்த்தி அதில் இல்லை.
ருத்ரய்யா
வித்தியாசமான மனிதர். சிறந்த விமர்சனங்களைவிட, வணிகரீதியிலான வெற்றியையே நாம் நினைவில் வைத்துக் கொண்டாடுவது பரிதாபகரமானது. ருத்ரய்யாவிடம் பல படங்களுக்கான கதைகள்
இருந்தன. ஆனால், அவரால் இரண்டு படங்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இப்படிப்பட்ட கலைஞர்கள் விரக்தியடைக் கூடாது என்றுதான் மேற்கத்திய நாடுகளில் 'சன்டான்ஸ்' போன்ற திரைப்பட விழாக்கள் நடத்தப்படுகின்றன. அவள் அப்படித்தான் படத்தை நினைவுகூர்வதன் மூலம் மாற்று சினிமாவுக்கான தளத்தை அமைக்க சிலர் முயற்சிக்கலாம்.
தனது
படைப்பின் மீது அதீதமான பெருமை கொண்டவராக ருத்ரய்யா இருந்தார். வேறு யாரிடமும் பணியாற்ற அவர் விரும்பவில்லை. சினிமாவைப் பற்றி நிறைய தெரிந்துவைத்திருந்ததால், தன்னை யாரும் கட்டுப்படுத்துவதை அவர் விரும்பவில்லை. தான் கட்டுப்படுத்துவதையே அவர் விரும்பினார். அவள் அப்படித்தான் திரைப்பட தயாரிப்பில் இருந்த தோழமை, மற்ற படங்களிலும் இருக்கும் என்று அவர் நினைத்தார். ஆனால் அது நடக்கவில்லை.
ஒரு
வருடத்திற்கு முன்னால் அவரை சந்தித்தேன். அப்போதும்கூட, அடுத்த படம் எடுப்பதற்கான நம்பிக்கையை அவர் விட்டுவிடவில்லை. உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். படம் எடுப்பது போதையைப் போல. சிலர் விலகினாலும், சிலர் தொடர்ந்து முயற்ச்சித்திக் கொண்டே இருப்பார்கள். ருத்ரய்யா இரண்டாம் வகையைச் சேர்ந்தவர். அதற்காக அவரை நான் மதிக்கிறேன். துறையிலிருந்து அவருக்கும் இன்னும் உதவிகள் செய்யப்பட்டிருக்கலாம். பாரதியின் கவிதைகளுக்காக அவரை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வது போல, ருத்ரய்யாவும் அவர் எடுத்த ஆகச் சிறந்த படத்திற்காக நினைவில் நிற்பார்.
தமிழ்
சினிமாவின் அடித்தளத்தையே உலுக்கிய 'அவள் அப்படித்தான்' எடுத்ததற்காக இந்த உலகம் அவரை என்றும் நினைவுகூரும். இன்றும் கல்லூரி மாணவர்கள் பலர், படத்தைப் பார்த்து, இது எப்படி இவர்களால் சாத்தியமானது என்று யோசிக்கின்றனர். சினிமாவின் மீது காதல் கொண்ட ஒருவராக ருத்ரய்யா என் நினைவில் நிற்கிறார். ஒரு காட்சி சிறப்பாக வரவேண்டும் என்றால், தெர்மகோலை தூக்கிப் பிடிக்கும் வேலை செய்யவும் தயங்கமாட்டார் ருத்ரய்யா.
தமிழில்:
கார்த்திக் கிருஷ்ணா
ஆறுமுகம்
ருத்ரய்யா | நிறைவேறாத கனவு
தமிழ்
சினிமா வரலாற்றில் இன்றளவிலும் பேசப்படக்கூடிய படமாகவே இருக்கிறது 1978-ல் வெளியான ருத்ரய்யாவின்
‘அவள் அப்படித்தான்’. தமிழ் சினிமா கடந்த நூற்றாண்டில் கடந்துவந்த பாதையைப் பதிவுசெய்தவர்கள் அனைவரும் பாரதிராஜாவின் 16 வயதினிலே (1977), மகேந்திரனின் முள்ளும் மலரும் (1978), உதிரிப் பூக்கள் (1979) ஆகியவற்றைத் தமிழ் திரைப்படத்தின் தடத்தை மாற்றிய படங்கள் என்று குறிப்பிடுவதைப் பார்க்கலாம்.
பாரதிராஜா,
ஸ்டூடியோக்களில் இருந்து பி.எஸ். நிவாஸின்
உதவியோடு வெளிப்புறங்களுக்குத் தமிழ் சினிமாவைப் பெயர்த்தார் என்றால், பாலு மகேந்திரா, அசோக் குமார் ஆகியோரின் துணையுடன் மகேந்திரன் அதன் உள்வெளிகளுக்குள் ஊடுருவ முயன்றார். ஆயினும் ஆறுமுகம் ருத்ரய்யாவின் பெயரை அந்தப் பட்டியலில் வைத்து அலசும்போது பெருவாரியான சினிமா பத்திரிகையாளர்கள்/ஆய்வாளர்கள் பெருமூச்செறிவதை நாம் உணர முடியும்.
‘அவள்
அப்படித்தான்’ என்ற படம் அளித்த நம்பிக்கைக் கீற்று அவர்களின் மனதை வருடிச் செல்வதை நுகர முடியும். எரிக் வோன் ஸ்றோஹைம் 1924-ல் இயக்கிய க்ரீட்
என்ற தனது படத்துக்காக இன்றளவிலும் ஹாலிவுட்டின் சாத்தியப்படாத கனவுகளின் நினைவுக்குறியாக உறைந்திருப்பதைப் போல, ருத்ரய்யாவும் அவள் அப்படித்தானுடன் தமிழ் சினிமாவின் சாத்தியப்படாத சின்னமாகியிருப்பதை அனுமானிக்க முடிகிறது. ருத்ரய்யா ‘அவள் அப்படித்தான்’ தவிர ‘ஒரு கிராமத்து அத்தியாய’த்தையும் (1980) இயக்கியுள்ளார்.
‘அவள்
அப்படித்தான்’ படத்திலுள்ள மூன்று பாடல்களின் படமாக்கமே அதன் மாற்று அழகியலை நமக்குச் சொல்கிறது. மிகச் சுருக்கமாக, இரண்டு மாதங்களில் தோராயமாக இருபதே கால்ஷீட்டில், ஆர்ரி 2 B என்னும் மூன்று லென்ஸ் டர்ரெட்டைக் கொண்ட கேமராவை வைத்துக்கொண்டு தனது சென்னை திரைப்பள்ளி சகாக்களான நல்லுசாமி மற்றும் ஞானசேகரன் உதவியுடன் ருத்ரய்யா இப்படத்தை உருவாக்கினார். கிட்டத்தட்ட 27 (1000 அடி) ஆர்வோ கறுப்பு வெள்ளை ரோல்களிலிருந்து 14 ரீல்களில் தொகுக்கப்பட்டு வெளிவந்த ‘அவள் அப்படித்தான்’ திரைப் பள்ளியிலிருந்து வெளிவந்து நல்ல சினிமாவின் உந்துதலில் மைய நீரோட்ட சினிமாவில் செய்த இடையீடு. இன்று தமிழ் சினிமா வரலாற்றின் ஒரு இனிய கனவாக இது இருக்கிறது.
அந்தக்
கனவைச் சாத்தியப்படுத்திய ருத்ரய்யாவின் மேதமை என்னவென்றால் தனது கனவின் மீது அவர் கொண்ட நம்பிக்கைதான். அவர் செதுக்கிய வெளியில் சோமசுந்தரேஸ்வரர், அமரர் அனந்து மற்றும் வண்ணநிலவன் நினைவில் நிற்கும் உரையாடல்களை எழுத, கண்ணதாசன் மற்றும் கங்கை அமரனின் பாடல்களும் மிளிர்ந்தன. இன்றைய சூழலில் மிக சுருக்கமான முதலீட்டைக் கொண்டு ஓரளவு காலூன்றிய மூன்று நட்சத்திரங்களை வைத்து அப்படி ஒரு படத்தை எடுக்க முடியுமா என்று தெரியவில்லை.
‘அவள்
அப்படித்தான்’-ல் பல காட்சிகள்
லாங் டேக் என்று சொல்லப்படுகிற கால அளவில் நீளமான ஷாட்டுகளில் படமாக்கப்பட்டிருக்கும். அது மட்டுமல்ல, நல்லுசாமியும் ஞானசேகரனும் கேமராவைக் கையில் வைத்துக் கொண்டே நிகழ்வுகள் அரங்கேறும் அறைகளின் குறுகிய வெளிகளின் யதார்த்தத்தை அருமையாகப் பதிவுசெய்திருப்பார்கள். உதாரணத்திற்கு, ப்ரியா உணர்ச்சிவசப்பட்டு ஹிஸ்டீரியா வந்ததுபோல மயங்கிவிழும் காட்சி -ஹாலிலிருந்து பெட்ரூமிற்கு கேமரா கையிலேந்தியபடி அத்தகைய ஒரு ட்ராமெடிக்கான தருணத்தில் செல்வது- அன்றைய தமிழ் சினிமாவுக்குப் புதிது. ப்ரியாவின் தனித்துவத்திற்கும் ஆற்றலுக்கும் ‘அவள் அப்படித்தான்’ ஓர் எடுத்துக்காட்டு.
எழுத்தாளர்
அம்பை, அவள் அப்படித்தானில் ப்ரியாவை வெட்ட வெளியில் இறக்கிவிட்டு கார் விரைவதைச் சுட்டிக்காட்டி, அத்தகைய புதுமைப் பெண்ணின் இடம் நடுத்தெருவில்தான் என்று சொல்லுமளவில் படம் புதுமையாக எதுவும் செய்துவிடவில்லை என்று வாதிட்டிருக்கிறார். அது நியாயமான விமர்சனமே. ஆயினும், ஸ்ரீப்ரியா தன்னிச்சையாகத்தான் காரிலிருந்து வெளியேறுகிறார். ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் தனது கவிமொழியில் பெருமிதம் மிகுந்த வில்லின் நாணிலிருந்து வெளியேறும் அம்பு வில்லின் காதில் கிசுகிசுப்பாக, “உனது விடுதலையே எனதும்!” என்று கூறும் படிமம் நினைவுக்கு வருகிறது.
தன்னைக்
‘கொம்பன்’ என்று அறிவித்த, ஆனால் மென்மையான கனவுகள் நிறைந்த, கலைஞன் ருத்ரய்யாவிற்குத் தமிழ் சினிமாவுடனிருந்த முரண் நிறைந்த உறவின்மேல் தாகூரின் படிமம் ஒளிபாய்ச்சுகிறது-லாங் டேக்கில்.
கட்டுரையாளர்
சொர்ணவேல், அமெரிக்காவின் மிஷிகன் பல்கலைக்கழகத்தில் சினிமா பேராசிரியராகப் பணியாற்றி வருபவர்.