பார் உரு ஆய பிறப்பு அற வேண்டும் பத்திமையும் பெற வேண்டும்
சீர் உரு ஆய சிவபெருமானே செம் கமல மலர் போல
ஆர் உரு ஆய என் ஆர் அமுதே உன் அடியவர் தொகை நடுவே
ஓர் உரு ஆய நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண்டருளே
பத்து இலன் ஏனும் பணிந்திலன் ஏனும் உன் உயர்ந்த பைம் கழல் காணப்
பித்து இலன் ஏனும் பிதற்றிலன் ஏனும் பிறப்பு அறுப்பாய் எம்பெருமானே
முத்து அனையானே மணி அனையானே முதல்வனே முறையோ என்று
எத்தனையானும் யான் தொடர்ந்து உன்னை இனிப் பிரிந்து ஆற்றேனே
-
பார் உரு ஆய பிறப்பு அற வேண்டும் – உலகத்தில் தோன்றுகின்ற உருவங்களைக் கொண்டு வாழும் இந்தப் பிறப்பு விட்டுப் போகவேண்டும்
பத்திமையும் பெற வேண்டும் – (பிறப்பற்றுப் போவதற்காக) உன் மீது நீங்காத அன்பும் நான் பெற வேண்டும்
சீர் உரு ஆய சிவபெருமானே – (உலகத்தின்) சிறப்பான உருவமாகிய சிவபெருமானே
செம் கமல மலர் போல ஆர் உரு ஆய என் ஆர் அமுதே – செந்தாமரை மலர் போன்று அரிய உருவத்தை உருடைய என்னுடைய சிறந்த அமுதே
உன் அடியவர் தொகை நடுவே ஓர் உரு ஆய – உன்னுடைய அடியவர்கள் கூட்டத்தின் நடுவில் என்னையும் ஒருவனாக மாற்ற
நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண்டருளே – உன்னுடைய திருவருளைக் காட்டி என்னையும் உய்வித்து அருள்க!
பத்து இலன் ஏனும் பணிந்திலன் ஏனும் – நான் பக்தி இல்லாதவன் ஆனாலும் பணிவு இல்லாதவன் ஆனாலும்
உன் உயர்ந்த பைம் கழல் காணப் பித்து இலன் ஏனும் – உன்னுடைய உயர்ந்த பைங்கழகளைக் காண்பதற்கு ஆசை இல்லாதவன் ஆனாலும்
பிதற்றிலன் ஏனும் பிறப்பு அறுப்பாய் எம்பெருமானே – உன்னுடைய பெயரைச் சொல்லிப் பிதற்றாதவன் ஆனாலும் (என்னுடைய) பிறப்பை அறுப்பாய் எம்பெருமானே!
முத்து அனையானே மணி அனையானே முதல்வனே – நல்முத்தைப் போன்றவனே! சுடர்மணியைப் போன்றவனே! முழுமுதல்வனே!
முறையோ என்று – இந்தப் பிறப்பில் நான் உழன்று தவிப்பது முறையோ!
எத்தனையானும் யான் தொடர்ந்து – எப்படியாவது நான் உன்னைத் தொடர்ந்து வந்து திருவடி அடைய வேண்டும்.
உன்னை இனிப் பிரிந்து ஆற்றேனே – இனியும் உன்னைப் பிரிந்து நான் தவிக்க வேண்டாம் ஐயனே! எம்பெருமானே!
https://www.youtube.com/watch?v=B_ERNYpQdd0
No comments:
Post a Comment