Thursday, May 6, 2021

கோபோ அபேயின் “மணற் குன்றுகளில் பெண்”: ஜப்பானிய நாவல் மற்றும் திரைப்படம்

கோபோ அபேயின் “மணற் குன்றுகளில் பெண்”: ஜப்பானிய நாவல் மற்றும் திரைப்படம் ஜப்பானிய எழுத்தாளரான கோபோ அபேயின் (Kobo Abe) “மணற்குன்றுகளில் பெண்” (The woman in the dunes) எனக்கு மிகவும் பிடித்தமான நாவல்களுள் ஒன்று. 

1962 இல் வெளிவந்த இந்த நாவல் 1964 இல் ஹிரோஷி டெஷிகாராவினால் இயக்கப்பட்டு திரைப்படமாக வெளிவந்து மிகவும் புகழ்பெற்றது. 1964 இல் கான் திரைப்படவிழாவில் ஸ்பெஷல் ஜூரி விருது பெற்றது. ‘மணற் குன்றுகளில் பெண்’ திரைப்டத்தை பார்க்கவேண்டும் என்று பல வருடங்களாக நினைத்துக்கொண்டிருந்தேன். 




 இணைப்பில் தரவிறக்கிக்கொள்ளலாம். திரைப்படத்தை பார்த்த உத்வேகத்தில் இந்தப் பதிவை எழுதுகிறேன். கோபோ அபே (1927-1993) ஜப்பானிய இலக்கியத்தில் காஃப்கா, பெக்கெட், ஐயனஸ்கோ ஆகிய எழுத்தாளர்களோடு ஒப்பிடப்பட்டு விவாதிக்கப்படுபவர். வினோதமான கதைக்களன்களின் வழி மனித இருப்பைப் பற்றிய நுட்பமான பார்வைகளை முன் வைக்கக்கூடிய கோபோ அபேயின் ‘மணற்குன்றுகளில் பெண்’ காலத்தால் பிந்தியவரான மிஷெல் ஃபூக்கோவின் சிந்தனைகளுக்கு ஏற்றபடி அமைந்திருந்தது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. மேலும் இந்திய சூழலுக்கு இந்தப் படம் எவ்வளவு பொருத்தமானதாக இருக்கிறது என்றும் தோன்றியது. 

 முதலில் நாவல் மற்றும் திரைப்படத்தின் கதை. பள்ளிக்கூட ஆசிரியரும் பூச்சியியலாளருமான நிக்கி ஜம்பெய் கடற்கரையோர மணல் குன்றுகளால் பாலைவனம் போல் நிரம்பிய கிராமம் ஒன்றிற்கு பூச்சிகள் சேகரிப்பதற்காக வருகிறான். டோக்கியோவுக்கு திரும்பிச் செல்லும் கடைசி பஸ்ஸைத் தவறவிடும் நிக்கிக்கு கிராமவாசிகள் அங்கேயிருக்கும் ஒரு இளம் விதவையின் வீட்டில் அவனைத் தங்கிச் செல்லுமாறு சொல்லுகின்றனர். அந்த இளம் விதவையின் வீடு மனல் குன்றுகளிடையே ஆழமான பள்ளத்தில் இருக்கிறது. அந்த பள்ளத்தில் நிக்கியை கயிற்று ஏணி மூலம் கிராமவாசிகள் கீழே இறக்கிவிடுகிறார்கள். அந்தப் பெண் நிக்கியை ஆர்வமாக வரவேற்கிறாள் அவனுக்கு இரவு உணவு வழங்குகிறாள். 

மணல் பள்ளத்தில் புதைந்திருக்கும் அந்த வீட்டில் மரக்கூரையின் இடுக்குகள் வழியாகாவும் காற்று மூலமாகவும் மணல் சதா விழுந்துகொண்டே யிருக்கிறது. சாப்பிடுவதற்கு அவன் தொடங்கும்போது அவள் அவனுக்கு வீட்டிற்குள் விழும் மணலிலிருந்து குடையை விரித்து வைக்கிறாள். நிக்கி சாப்பிட்டுவிட்டு குடையை லேசாக சரிக்கும்போது பொலபொலவென்று மணல் விழுகிறது. எங்கும் மணல் எப்போதும் மணல். தமிழ்நாட்டின் வெயில் போல மணல் தன்னிருப்பை மனித உடல்களில் அறிவித்துக்கொண்டேயிருக்கிறது. 

அந்தப் பெண் தன் கணவனும் அவள் மகளும் மணற்புயல் ஒன்றில் சிக்கி புதையுண்டு வீட்டினருகிலேயே மடிந்துவிட்டதை சொல்கிறாள். நிக்கி அந்த வீட்டிலேயே காலங்காலமாய் இருக்கப்போவது போல அவள் பேச்சு இருக்க அவன் தான் மறுநாளே புறப்பட்டு போகப்போவதை அவளுக்கு சொல்லியவண்ணம் இருக்கிறான். அவள் இரவு முழுவதும் ஈரப்பதம் நிறைந்த மணலை பெரிய மண்வாரி கரண்டியினால் அள்ளி அள்ளி பெட்டிகளில் நிறைக்கிறாள். நிக்கி அவளுக்கு உதவ முன் வருகையில் அவள் முதல் நாளே உதவவேண்டாமே என்று தடுக்கிறாள். அவள் மண்வாரிக் கரண்டியினால் சேகரிக்கும் மணலை மேலிருந்து சகடத்தின் வழி பெட்டி இறக்கி மேலே சேர்ந்து கொள்கிறார்கள். அவள் செய்வது இரவு முழுவதுக்குமான கூலி வேலை. மறு நாள் மணல் பள்ள வீட்டிலிருந்து நிக்கி கிளம்ப யத்தனிக்கையில் அவளிடம் சொல்லிக்கொள்ளலாம் என்று போகும்போது அவள் முழு நிர்வாணமாய் தூங்கிக்கொண்டிருப்பதை பார்த்து துணுக்குறுகிறான். அவள் உடலை மெல்லிய படலமாக மணல் மூடியிருக்கிறது. 

அவளை தொந்திரவு செய்யாமல் அவன் வெளியே வந்து பார்க்கும்போது அந்த கயிற்று ஏணி காணாமல் போயிருக்கிறது. ஏணியில்லாமல் நிக்கி வெளியேற முயற்சி செய்து பலமுறை நெகிழும் மணல் சரிவில் ஏற முயன்று தோல்வியுறுகிறான். அவனுக்குக் கொஞ்சம் கொஞ்சமாய் அந்தப் பெண்ணும் கிராமவாசிகளுமாய் சேர்ந்து அவனை இளம் விதவைக்கு துணையாகவும் மண் அள்ளும் கூலியாளாகவும் சிறைபிடித்திருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. முதலில் நிக்கி ஆங்காரமடைகிறான், கருவுகிறான், தன்னை நகரத்தில் காணாமல் அரசாங்கம் ஆளனுப்பித் தேடி தன்னை விடுவிக்கும் என்று நம்புகிறான். அந்தப் பென்ணின் கை கால்களைக் கட்டி வாயில் துணி பொதிந்து அவளை அவன் துன்புறுத்தாமல் இருக்கவேண்டும் என்றால் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று மேல் நோக்கி பள்ளத்திலிருந்து அறைகூவல் விடுக்கிறான். கிராமவாசிகள் எதற்கும் மசிவதாயில்லை. 

அந்தப் பெண்ணோ நிக்கியின் கொடுமைகளை பரிதாபமான அப்பாவித்தனத்துடன் தாங்கிக்கொள்கிறாள். உணவும், தண்ணீரும்,சிகரெட்டும், மதுவும், செய்தித்தாளும் அவனுக்கு மேலிருந்து அளவு உணவுப்பங்கீட்டு முறையின்படியே வந்து சேரவேண்டும். அவன் மணல் வாரும் கூலியாக வேலை செய்யவிட்டாலோ முரண்டுபிடித்தாலோ தண்ணீரும் உணவும் இல்லாமல் அவன் சாகவேண்டியதுதான் என்று அவனுக்கு சீக்கிரமே தெரிந்து விடுகிறது. அவன் கொஞ்சம் கொஞ்சமாக சூழ்நிலைக்குக் கீழ்ப்படிந்து வேலை செய்ய ஆரம்பிக்கிறான். இதற்கிடையில் நிக்கிக்கும் அந்த இளம் விதவைக்குமிடையில் உடலுறவு ஏற்படுகிறது. உடையணிந்து தூங்கினால் உடலில் மணலினால் தோல் அரிப்பு ஏற்படும் என்பதினால் அவர்கள் நிர்வாணமாய் உறங்குகிறார்கள். 

அவள் நிக்கியின் உடலில் படியும் மணலை அங்குலம் அங்குலமாக சுத்தம் செய்ய அவர்களுக்குள் உடலுறவு தீவிரப்படுகிறது. அவள் மூலம் அவர்கள் அள்ளும் மண் சட்டவிரோதமாக நகர கட்டுமானங்களுக்கு விற்கப்படுகிறது என நிக்கி அறிகிறான். அதே சமயம் அவர்கள் மண்ணை அள்ளாமல் விட்டால் மணல்சரிவு ஏற்பட்டு மொத்தகிராமமும் அழிந்துவிடும் என்றும் அறிகிறான். தான் செய்யும் வேலையை ஒரு குரங்கு கூட செய்யும் என்றெல்லாம் சதா மனம் புழுங்கும் நிக்கி தன்னை ஏமாற்றி சிக்க வைத்துவிட்டதற்காகவும் மனம் வெம்புகிறான். தன் தப்பிப்பு முயற்சிகளில் தளராது ஈடுபடும் நிக்கி கத்திரிக்கோலினால் கொழுகொம்பு அமைத்து கயிற்றில் கட்டி மேல்நோக்கி எறிந்து -அவள் நன்றாகத் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுதொன்றில்- மணல் பள்ளத்திலிருந்து மேலேறிவிடுகிறான். கிராமவாசிகளிடம் கண்களில் படாமல், நாய்கள் துரத்த தப்பி ஓடும் நிக்கி சீக்கிரமே புதைமணலில் மாட்டிக்கொள்கிறான்.

 கிராமவாசிகள் நாய்களின் குரைப்பை வைத்து அவன் மாட்டிக்கொண்ட இடத்துக்கு வந்து அவனைக் காப்பாற்றி மீண்டும் அவனை இளம் விதவை வீட்டில் சேர்த்துவிடுகிறார்கள். நிக்கி தன்னிடமிருந்து தப்பி ஓடுவதிலேயே குறியாக இருக்கிறான் என்பதை நம்ப முடியாதவளாய் பார்க்கிறாள் அந்தப் பெண். அவள் நீண்ட நாளாய் வேண்டி விரும்பும் ரேடியோ ஒன்றை அவளுக்கு வாங்கி அனுப்புவதாய் தான் உத்தேசித்திருந்ததாய் அவன் அவளை சமாதானப்படுத்துகிறான். பொறியில் அகப்பட்டுக்கொண்ட நிக்கி காகங்களை பிடிப்பதற்காக பொறி அமைப்பது அடுத்த கட்ட முரண் நகை. பிடிபடும் காகத்தின் காலில் தான் மாட்டிக்கொண்ட விபரத்தை செய்தியாக எழுதி அனுப்பினால் யாராவது பார்த்து நகரத்திலிருந்து தனக்கு உதவி அனுப்புவார்கள் என்று அவன் நம்புகிறான். காகத்திற்காக அவன் ஏற்படுத்தும் பொறி ஒரு மரப்பீப்பாயை மணலுக்குள் புதைத்து வைப்பதாக இருக்கிறது. தற்செயலாக அந்த மரப்பீப்பாயில் மணல் குன்றுகளிலிருக்கும் நீர் அழுத்தத்தினால் தூய்மையான நீராக சேகரமாவதைக் கண்டு பிடிக்கிறான். இந்தக் கண்டுபிடிப்பு அவனை மிகவும் மகிழ்ச்சிப்படுத்துகிறது, தண்ணீருக்காக தான் யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை என்பது மட்டுமல்ல அந்த தொழில்நுட்பத்தை கிராமவாசிகளிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் நினைக்கிறான். 

ஆனால் அதற்கான சந்தர்ப்பம் அமைவதற்குள் அவன் துணையாக ஆகிவிட்ட அந்தப்பெண் கடுமையாக நோய்வாய்ப்படுகிறாள். கிராமத்து வைத்தியர் அவள் கர்ப்பமாக இருப்பதாகவும் ஆனால் அந்த கர்ப்பத்தில் சிக்கல்கள் இருப்பதினால் அவளை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து செல்ல வேண்டும் என்றும் முடிவு செய்கிறார்கள். படுக்கை அமைத்து அதில் அவளைக் கட்டி மணல் பள்ளத்திலிருந்து மேலே தூக்கி ஏற்றுகிறார்கள். கிராமவாசிகளின் தலைவன் அந்த சமயத்தில் அவள் நீண்ட நாட்களாகக் கேட்டுக்கொண்டிருந்த ரேடியோவைத் தருகிறான். நிக்கி தான் கண்டுபிடித்த தண்ணீர் சேகரிக்கும் முறையை கிராமவாசிகளிடம் தெரிவிக்க முயன்று பின்னொரு சமயத்தில் சொல்லலாம் என்று முடிவு செய்கிறான். கிராமவாசிகள் கயிற்று ஏணியை அப்படியே விட்டுவிட்டுச் செல்கிறார்கள். நிக்கி அதில் ஏறி மேலே வந்து கடலையும் வெளியுலகையும் பல மாதங்களுக்குப் பின் பார்க்கிறான். 

நகரத்து நீதிமன்ற அறிவிப்பு ஒன்றில் அவன் பெயரும் ஏழு வருடங்களாகக் காணாமல் போனவர்கள் பட்டியலில் வருவதை காண்பிப்பதோடு படம் முடிகிறது. போருக்குப் பிந்திய ஜப்பானிய சமூகத்தின் உருவகமாக ஒரு penal colonyஐ கோபோ அபே இந்த நாவலில் கற்பனை செய்திருப்பது ஆச்சரியமில்லைதான். காஃகா முதல் சோல்சனிட்சன் வரை பல கலைஞர்கள் போரினால் சீரழிந்த சமூகத்தினையும் யதேச்சதிகார அரசு கோலோச்சும் சமூகங்களையும் தண்டனை குற்றவாளிகள் வாழும் சமூகமாகவே தங்கள் படைப்புகளில் உருவகத்திருக்கிறார்கள். கோபோ அபேயின் தனித்துவம் என்னவென்றால் தண்டனைக் குற்றவாளிகள் வாழும் காலனி அல்லது கிராமம் நம் கால நவீன சமூகத்தின் குற்றங்களையும் அவற்றின் இயங்கு தளங்களையும் துல்லியமாக சுட்டுவதில் அடங்கியிருக்கிறது.

 ‘மணல் குன்றுகளில் பெண்’ படைப்பில் மாறிக்கொண்டேயிருக்கும் மணல் ‘சிறையின்’ சுவர்களாக, உருவகங்களாக, தான் ஒடுக்கப்படுவதன் மூலம் தான் யார் என்பதினையும் நிக்கி கண்டறிகிறான். “சிறைச்சாலையின் பிறப்பு” புத்தகத்தில் கோபோ அபேயின் நாவலும் திரைப்படமும் வெளிவந்து பல ஆண்டுகளுக்கு பின்பு ஃபூக்கோ எழுதுவார் அரசர் கால பௌதீக சிறைச்சாலைகளிலிருந்து நவீன கால சிறைச்சாலைகள் மாறுபட்டு கண்காணிப்பில் வைக்கின்ற சமூக ஒழுங்கமைப்பாக நிமிட நேர ஆசுவாசத்தை வழங்காத அமைப்புகளாக மனதையும் எண்ணங்களையும் ஆத்மாவையும் கண்காணிப்பில் வைக்கின்ற சிறைச்சாலைகளாக ஓட்டு மொத்த நவீன சமூகங்களும் மாறியிருக்கின்றன என்று. ஃபூக்கோவின் சிந்தனைகளுக்கான முன்னோடி படைப்பாகவே பல விதங்களிலும் திகழ்கிறது கோபோ அபேயின் ‘மணற் குன்றுகளில் பெண்’. முதலாளித்துவ ஜப்பானில் அறுபதுகளுக்கு பிறகு மரபார்ந்த கிராமங்களுக்கு நேர்ந்த கதியாக ‘மணற் குன்றுகளில் பெண்’ முன்வைக்கும் சித்திரம் இன்றைய இந்திய கிராமங்களின் நிலையைச் சொல்வதாகவும் நான் வாசித்தேன். 

கோபோ அபேயின் நாவலில் வரும் கிராமத்தின் பிரச்சினைகள் ஜப்பானிய கடற்கரை நகரமாகிய சகாடாவைச் சுற்றியுள்ள கிராமங்களில் இன்றளவும் உண்மையிலேயே நிலவுகின்ற பிரச்சினைகளே. கோபோ அபே தன் கற்பனையினால் அந்தப் பிரச்சினைகளை நுட்பப்படுத்தியிருக்கிறார். கண்காணிப்பின் அதிகாரம், ஃபூக்கோ எழுதுவார், சூழலின் தனிப்பட்ட தேவைகளிலிருந்தும், அடிமட்டத்திலிருந்துமே உருவாகின்றன என்று. கோபோ அபேயின் நாவலின் முதல் பாகத்தில் நிக்கி சிக்கிக்கொள்ளும் கடற்கரையோர கிராமத்தில், மணல் தன் அழிவுசக்தின் மூலம் தன்னை சூழலின் அதிகாரமாக நிலை நிறுத்திக்கொள்கிறது கோபோ அபே எழுதுகிறார் “ 1/8 மில்லிமீட்டர் அளவுகூட இல்லாதது மணல் தனக்கென்று ஒரு வடிவம் கூட இல்லாதது மணல், இருப்பினும் அதன் வடிவமற்ற அழிவு சக்தியை எதிர்த்து ஒன்றுமே நிற்க இயலாது”. வீட்டுக்கூரைகளில் மணல் கொட்டுவதால் அந்த கிராமத்தில் வீடுகள் சிதைந்து விடுகின்றன. கிராமவாசிகள் நகர்சார் அரசாங்கம் தங்களை கைவிட்டுவிட்டதாக நினைக்கிறார்கள். அவர்களுக்கு தங்கள் கிராம வாழ்க்கையின் அக்கறைகளை மீறிய எதன் மீதும் ஈடுபாடு இல்லாமல் போகிறது. அப்பாவித்தனமாக தன்னை கிராமவாசிகளோடும் மணலின் அழிவுசக்தியோடும் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் இளம் விதவைக்கு தன் அடையாளம் மீறி எதன் மீதும் அக்கறை இல்லை; அதனால்தான் நிக்கி இப்படி கடற்கரை மணலை நகர் சார் கட்டுமானங்களுக்கு சட்டவிரோதமாக விற்கிறீர்களே அணைக்கட்டுகளும் பெரிய பெரிய கட்டிடங்களும் உடைந்து விழுந்துவிடுமே என்று வினவும்போது அடுத்தவர்களைப் பற்றி எங்களுக்கு என்ன கவலை என்று நிசாரமாக பதில் சொல்ல முடிகிறது. மேலும் நகரங்களை நோக்கி இளைஞர்கள் அனைவரும் சென்று விடுவதால் மணல்வார ஆளில்லாமல் போகிறது; 

அவர்களுடைய மரபான வாழ்க்கை முறையே அபாயத்திற்குள்ளாகிறது. மரபான வாழ்க்கை முறையில் நீடித்திருப்பது என்பதே ஒரு வகையில் குற்ற வாழ்க்கையாக மாறிவிடுகிறது. அடிமட்ட சூழல்களையும் தேவைகளையும் கருதி மொத்தமாக கிராமத்தையும் கிராமவாசிகளையும் காப்பதற்காக உருவாக்கப்படும் ஒழுங்குமுறை அமைப்பு, நகைமுரணாக, முடியாட்சி அதிகாரமே போல யதேச்சதிகாரமாகவும், மையமுடையதாகவும், ஒவ்வொருவரும் அவ்வதிகாரத்தை அகவயப்படுத்தியவர்களாகவும் மாற்றிவிடுகிறது. நாவலில் வரும் நான்கு மீனவர்களும் அவர்களுடையே தலைவன் போல இருக்கும் வயசாளியும் கண்காணிப்பிலிருக்கும் சிறை சமூகத்தின் முகவர்களாகிவிடுகின்றனர். கோபோ அபே எழுதுகிறார் “இந்த இரக்கத்தைக் கோரும் புவி அமைப்பை காப்பதற்காக கடற்கறையோரம் இருக்கும் பத்து வீடுகளுக்கு மேல் அடிமை வாழ்க்கையினை வாழ வேண்டியிருக்கிறது.

” சில அடிமை வீடுகளில் கயிற்று ஏணிகள் அகற்றப்படுவதில்லை சில வீடுகளில் அகற்றப்படுகின்றன என்பதினை கவனிக்கும்போதுதான் அந்த சிறு சமூகத்திலும் கூட இரண்டு வகையான அதிகாரங்கள் செயல்படுகின்றன என்று தெரிய வருகிறது. வெளியினை ஒழுங்குபடுத்துவதும், கயிற்று ஏணிகளை அகற்றாமல் விட்டு வைப்பதும் அடிமைகள் தாங்களாக மணல்வாரும் விதியினை ஏற்று வாழ்கிறார்களா அல்லது அதை மறுத்து தப்பிக்க யத்தனிக்கிறார்களா என்பதினைச் சாந்திருக்கிறது. ஒரு வகையான வலைபின்னல் ஒழுங்கும் சீரமைப்பும் அந்த கிராமத்தில் இயங்குவது நமக்கு தெரியவருகிறது. பத்து நாட்கள் மண் வாரி விற்கவில்லையென்றால் கிராமம் பௌதீகமாகவும் அழிந்துவிடும் அதன் பொருளாதாரமும் அழிந்துவிடும். அதனால் ஃபூக்கோ விவரிப்பது போன்ற அலுப்பூட்டுகின்ற கடுமையான உடலுழைப்பினை கோருகின்ற எந்திரத்தனமான வாழ்க்கை அவர்கள் மேல் சுமத்தப்படுகிறது; அந்த வாழ்க்கையினை இளம் விதவை போன்ற அந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள் அந்த வாழ்க்கையே ‘இயற்கையானது’ என்று நம்பத் தலைப்படுகின்றனர். நகர வாழ்க்கையிலிருந்து தப்பி சில நாட்கள் கிராமத்தின் ‘அமைதியையும்’, ‘இயற்கையினையும்’ அனுபவிக்கலாம் என்று மணல் கிராமத்திற்கு வந்து சேர்கின்ற நிக்கிக்கு கிராமம் என்பது கடுமையான ஒடுக்குமுறை அமைப்பு இயற்கை என்பது மிருகத்தனமானது என்று அவன் அந்த அமைப்பினால் சிறைப்பிடிக்கப்படும் வரை தெரிவதில்லை. 

சாதீய ஒடுக்குமுறைக்கும் கட்டுப்பாடுகளுக்கும் ஆட்பட்ட இந்திய கிராமங்களின் உருவகமாகவே இன்னொரு வகையில் கோபோ அபேயின் கிராமம் இருக்கிறது. இந்த ஒழுங்கின் அமைப்புக்குள்ளாகவே நிக்கியின் தன்னிலையின் எல்லைகள் அவனுடைய உடலின் எல்லைகளாக மட்டுமே குறுக்கப்படுகின்றன. மணல் நரகத்தில் தள்ளப்பட்டுவிட்ட நிக்கியை மூக்கு, காது, கழுத்து, உடலின் இண்டு இடுக்குகள் என்று மணல் ஆக்கிரமிக்கிறது. நிக்கியின் துணையோ இந்த ஒழுங்கமைப்பின் விதிகளை நன்றாகக் கற்றுக்கொண்டவளாகவும் அவற்றை அகவயப்படுத்திக்கொண்டவளாகவும் இருக்கிறாள். ‘சிறைச்சாலையின் பிறப்பு’ நூலில் ஃபூக்கோ எழுதுவார், ஒழுங்குபடுத்தப்பட்ட உடல் என்பது பொருளாதார உற்பத்திக்காக சீரமைக்கப்பட்ட உடல்; 

அந்தந்த பொருளாதார பாங்கிற்கு ஏற்ப உடல்கள் ஒழுங்கமைக்கப்படும். “ஒழுங்கு இவ்வாறாக நன்கு பயிற்றுவிக்கப்பட்ட, தன்னிலை ஒடுக்கப்பட்ட மந்தமான (docile) உடல்களை உருவாக்குகிறது. ஒழுங்கு உடலின் பொருளாதார பயன்பாடு சார்ந்த சில சக்திகளை வளர்த்தெடுக்கிறது; கீழ்ப்படியாமை போன்ற வேறு சில உடல் சார் அரசியல் சக்திகளை குறைத்துவிடுகிறது. வேலை சார்ந்த உற்பத்தி சார்ந்த மனப்பாங்கினையும், பலத்தையும் அதிகரிக்கின்ற அதே வேளையில் அவற்றுக்கு எதிரான உடல் சக்திகளை கணிசமாகக் குறைத்துவிடுகிறது.” (Foucault in ‘Discipline and Punish’) நிக்கி தன் தேவைகளைக் குறைத்துக்கொண்டு தண்ணிரில்லாமல் சாவோமோ போன்ற தான் சிக்கிவிட்ட சிறை அமைப்பு உண்டாக்கும் பயங்களிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறான். அவன் சிக்கிக்கொண்ட கிராமவாசிகளுக்கு அவனின் இறந்த காலத்தைப் பற்றியோ, அவன் ஒரு பள்ளி ஆசிரியன் என்பது பற்றியோ அவன் அறிவியல் ஆராய்ச்சியாளன் என்பதோ முக்கியமாகப்படவில்லை. சரி, சிறைப்பட்டவனாக என்னுடைய ‘உரிமைகளைக்’ கோருகிறேன் என்று நிக்கி தன்னை அரை மணி நேரமாவது தினசரி கடலைப் பார்ப்பதற்கும், கடற்கரையில் உலா போவதற்கும் தன்னை அனுமதிக்குமாறு கிராமவாசிகளிடம் இறைஞ்சும்போது அவர்கள் அதற்கு பதிலாக அவனும் அவன் துணையும் உடலுறவு கொள்வதை அவர்கள் பார்க்கவேண்டும் என்று கேட்கிறார்கள். 

அதாவது ஒரு ஒழுங்கமைப்புக்கு உட்பட்டுவிட்டவர்களுக்கு ‘உரிமைகள்’ என்று ஏதும் இல்லை; எல்லாமே கொடுக்கல் வாங்கல்களுக்கு உட்பட்டவை. தன் மானத்தை முழுமையாக இழக்கும் நிக்கி தன் துணையாக மாறிட்ட இளம் விதவையை எல்லோரும் பார்க்க உடலுறவு கொள்ள வரும்படி இழுக்கிறான். அவளோ அவனுக்கு உடன்பட மறுத்து வீட்டுக்குள் ஓட நிக்கி அவளை மீண்டும் மீண்டும் இழுத்து வர நிக்கியின் முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன. சமூக அதிகாரம் தன்னுடைய எல்லைகளை எப்பொழுதுமே எல்லையற்றதாக மாற்ற விழைகிறது. நிக்கி பகிரங்கமாக தன் துணையோடு உடலுறவு கொள்ள விழையும் காட்சிகளில் கிராமவாசிகள் ஏதோ ஆதி சடங்கினை நிகழத்துபவர்கள் போல இசைக்கருவிகளை முழக்குகிறார்கள்; கோரமான முகமூடிகளை அணிந்திருக்கிறார்கள். கோபோ அபே எழுதுகிறார்: “ அவனால் (நிக்கியால்) மேலே நுனியில் நின்று பள்ளத்தினுள் எட்டிப்பார்க்கும் அந்த கிராமவாசிகளின் சுவாசத்தினை உணர முடிந்தது. அவனால் அந்த பார்வையாளர்களுள் ஒருவனாக இருந்திருக்க முடியும். அவர்கள் அவனுடைய அங்கம், அவர்களின் வாயிலிருந்து ஒழுகிக்கொண்டிருந்த எச்சில் அவனுடைய ஆசையின் ஒழுகலே.அவனுடைய மனதில் அவன்

 கொடுமைப்படுத்துகிறவர்களின் பிரதிநிதி பலிகடா அல்ல.” அடிமைப்படுத்தப்பட்டு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட வாழ்க்கை அந்தப் பெண்ணினுடையது என்றும் நிக்கி அவளுக்குச் சொல்கிறான். அப்பாவித்தனமும் ஒழுங்கமைப்பின் மிருக விதிகளை இயல்பானதாக ஏற்றுக்கொள்ளும் தன்மையும் மணலோடு தன்னை அடையாளப்படுத்தியும் வாழும் அந்தப் பெண் சுதந்திரத்திற்கான விழைவும் தன்னுணர்வும் அற்றவளாக இருக்கிறாள். மணலின் கோடூர துன்புறுத்துதல்களை எதிர்கொண்டு அதற்கேற்ப தன் வாழ்க்கையயும் உழைப்பையும் அமைத்துக்கோல்வது போலவே நிக்கியின் வன்முறைகளையும் எதிர்கொண்டு தாண்டிச் செல்கிறாள். அவள் பதிலுக்கு எந்த வன்முறைச் செயலையும் செய்வதில்லை. நிக்கிக்கும் அந்தப்பெண்ணுக்குமான உறவு சூழலின் நிர்ப்பந்தம் சார்ந்தது; அதில் காதல் இல்லை. அந்த ஊறவு வெறும்

 காமத்தினால் ஆனது. பல வருடங்களைக் கொடூர தனிமையில் கழித்த பெண்ணின் காமமும் தாபமும் ஒப்புக்கொடுத்தலும் கலந்ததால் உருவாகும் உறவு. தான் சிக்குண்டதிலிருந்து நாற்பத்தி ஆறாவது நாள் மணல் பள்ளத்திலிருந்து தப்பிக்கும் நிக்கி புதைமணலில் விழுந்து மீண்டும் மாட்டிக்கொள்கிறான். அவன் திறந்த வெளியில் ஓடும்போதும் கண்காணிக்கப்படுகிறான். கண்காணிப்பு எங்கும் விரவியிருக்கிறது. காட்டிக்கொடுப்பதற்கும் பிடித்துக்கொடுப்பதற்கும் மனிதர்களும் நாய்களும் தயாராகவே இருக்கிறார்கள். நிக்கி தன் அடிமைத்தனத்தை ஏற்றுக்கொள்ளாத போதே சிலவகை மரங்களை நட்டு மணல் சரிவை தடுப்பது போன்ற எண்ணங்களும் , மரப்பீப்பாயை மணலில் புதைத்து தண்ணீர் சேகரிக்கும் கண்டுபிடிப்புகளும் சாத்தியமாகின்றன என்று கண்டுகொள்கிறான். தன் தப்பித்தல் மட்டுமின்றி ஒட்டு மொத்த கிராம சமூகத்திற்குமான

 விடுதலைக்கான வழிகளே அவனை சக்தியுள்ளவனாகவும் காதலுக்கும் மென்மைக்கும் மனதில் இடம் கொடுக்கும் வல்லமை உள்ள மனிதனாக மாற்றுகின்றன என்றும் அவன் உணர்கிறான். தன் அடிமைத்தனத்தினை அவன் உணர்ந்திருப்பதாலேயே அதிலிருந்து விடுபடும் வழியையும் சக்தியையும் அடைந்த மனிதனாகவும் அவன் பரிணாம வளர்ச்சி பெறுகிறான். “மணற் குன்றுகளில் பெண்” பல அபூர்வமான

 காட்சிப்படிமங்கள் நிறைந்த திரைப்படம். மணல் வெளிகளும், மணலின் நெகிழ்வும், சரிவும், உதிர்தலும் வித விதமான படிமங்களாகின்றன. கூடவே சிறு பூச்சிகளின் குளோசப் காட்சிகளும். அபூர்வமும் அதிசயமும் நிறைந்த பின்னணி இசைக்காகவும் இந்தப் படம் விமர்சகர்களால் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவ்வபோது ‘மணற் குன்றுகளில் பெண்’ போன்ற திரைப்படம்/நாவலைப் படிப்பது, விமர்சிப்பது, விவாதிப்பது கலை இலக்கியம் என்றால் என்ன என்ற பார்வையை நம்மிடம் கூர்மையாக்கக்கூடும்.

2 comments:

  1. சிறப்பான பதிவு. வாழ்த்துகள். உங்களுடைய "இடைவெளி" பற்றிய பதிவும் மிக முக்கியமானது. ஹிரோஷி தெஷிகஹாராவின் திரைமொழி முற்றிலும் புதிய உலகத்தை காட்டுகிறது. "The face of another" is also a deep and mind-boggling movie.

    நன்றி,
    பிரவின் சி

    ReplyDelete

Raagam Thaalam Pallavi - ராகம் தாளம் பல்லவி - Theerppugal Thiruththapadalaam

 Raagam Thaalam Pallavi  ராகம் தாளம் பல்லவி  Theerppugal Thiruththapadalaam Movie - Theerppugal Thiruththapadalaam Music - Shankar Ganesh S...