மகேந்திரனின் ‘நண்டு’ திரைப்படம்
மகேந்திரன் இயக்கிய படங்களில் “நண்டு” என்னும் திரைப்படம் குறிப்பிடப்பட வேண்டியது. எழுத்தாளர்களின் ஆக்கங்களைத் திரைப்படமாக எடுத்தவர்களில் மகேந்திரனே முதலாமவர். சிவசங்கரியின் கதையை மகேந்திரனின் அழுத்தந்திருத்தமான திரைமொழி வேறொரு தளத்திற்கு எடுத்துச் சென்றது. சில இயக்குநர்களின் படங்களைப் பார்ப்பதற்கு வேறு வகை மனவலிமை தேவைப்படும். மகேந்திரன் அத்தகைய மனவலிமையைக் கோரும் திரைமொழியாளர். முன்பே பார்த்திருந்த படம்தான் என்றாலும் நகராதிருந்த நாளொன்றின் பிற்பகலில் நண்டு திரைப்படத்தினைப் பார்த்தபோது இனம்புரியாத அயர்ச்சி ஏற்பட்டது. எழுத்தில் வராத, அப்படியே வந்திருந்தாலும் ஓரிரு சொற்றொடர்களில் கடந்து சென்ற பல அகத்தவிப்புகளை மகேந்திரன் திறமையாக வடித்தெடுத்திருந்தார்.
நண்டு திரைப்படம் வட இந்திய இளைஞனுக்கும் தமிழ்ப் பெண்ணுக்கும் ஏற்படும் காதல், திருமணம், இறப்பினால் நேரும் பிரிவு பற்றியது. அலகாபாத்தில் ஓர் அரச வம்சத்தின் மகனாகப் பிறந்த இராம்குமார் சர்மாவுக்கும் சென்னையில் கீழ்நடுத்தர நிலையில் தட்டச்சுப்பணியாற்றி வாழும் சீதா என்னும் பெண்ணுக்கும் ஏற்படும் உறவைக் குறித்தது. படத்தில் மொழி ஒரு தடையாக வருகிறது. ஏனென்றால் இராம்குமார் சர்மா அவன் தந்தையோடு முரண்படுகின்ற இடங்கள், தாயொடு நெகிழ்ந்தழும் இடங்கள், வேலைக்காரர்களோடு உரையாடும் வாய்ப்புகள் என்று பல இடங்களில் தமிழைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட காட்சிகள் இருக்கின்றன. பாத்திரங்கள் தத்தம் மொழியைப் பேசிக்கொண்டிருக்க அவற்றின்மீது
தமிழ்ப்பேச்சொலியைப் பொருத்தி அக்காட்சிகளை எடுத்திருக்கிறார் இயக்குநர். தந்தை கூறும் பெண்ணை மணக்க மறுக்கும் பொறியாளர் இராம்குமார் அரண்மனை வீட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறான். தந்தையின் பெண்வேட்கையும் தாயாரை அவர் பொருட்படுத்தாதிருப்பதும் இராம்குமாருக்குப் பிடிக்கவில்லை. தனக்கு அடங்காப் பிள்ளையை மேலும் வைத்திருந்து துன்புற விரும்பாத தந்தை அவனை வெளியேற்றிவிடுகிறார். சென்னையில் வேலை கிடைக்கப்பெற்ற இராம்குமார் வீடு வெறுத்து, தாயாரின் அழுகைக்கிடையே இடம்பெயர்கிறான். சென்னை நிறுவனத்தில் அவன் சந்திக்கும் தட்டச்சுப்பெண்தான் சீதா. அவள் குடியிருக்கும் அதே வாடகைக் குடியிருப்பகத்திற்கு இராம்குமாரும் வந்து சேர்கிறான்.
இளவரசனாயிற்றே, இராம்குமார்மீது அவ்வளாகத்தின் பிற பெண்களுக்குக் காதலாகிறது. தவறான புத்தகங்களைப் படிப்பதில் ஈடுபாடு கொண்டிருக்கும் வீட்டு உரிமையாளரின் மகளுக்கு இராம்குமார் மீது தாளாக் காதல். அவளை மிதியிழுனியில் (சைக்கிள் ரிக்ஷா) கல்லூரிக்குக் கூட்டிச் செல்லும் இளைஞனும் காதலிக்கிறான். கடிதம் தருகிறான்.
“எனக்கு டெல்லி லக்னோன்னு ஆள் வந்திட்டிருக்கு….” என்று தவிர்க்கிறாள். மூச்சிரைப்பு நோயாளியான இராம்குமார் படும் பாடுகளைப் பார்த்து அவன்மீது இரக்கம் கொள்ளும் சீதா சில பணிவிடைகளைச் செய்கிறாள். சீதாவின் குடும்பத்தில் அவளே பொருளீட்டுபவள். தாயும் தங்கையும் அவளை நம்பியிருப்பவர்கள். கட்டிக்கொடுக்கப்பட்ட தமக்கையை அவள் கணவன் கொடுமைப்படுத்துகிறான். ஒரு கட்டத்தில் இராம்குமார் சீதாவைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுகிறான். அலகாபாத் சென்று தம் குடும்பத்தினரிடம் இசைவு பெற்று வருவதாக உறுதி கூறிச் செல்கிறான். அவனுடைய தந்தை அதை ஏற்கவில்லை. ஏமாற்றத்தோடு சென்னை திரும்புகிறான். யாருமற்றவனாக சீதாவைத் திருமணம் செய்துகொள்கிறான். குழந்தை பிறக்கிறது.
இராம்குமாரின் தங்கைக்குத் திருமணம் என்பதைக் கேள்வியுறுபவன் அலகாபாத் செல்ல நினைக்கிறான். “நீங்கள் பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்க வேண்டும்… உங்கள் தாய் தந்தையரைப் பார்க்க வேண்டும். நம் பிள்ளையைப் பார்த்தால் உங்கள் தந்தையின் மனம் மாறும்… என்னையும் அழைத்துச் செல்லுங்கள்…” என்ற சீதாவின் வேண்டுகோள் ஏற்கப்படுகிறது. மூவரும் அலகாபாத் செல்கிறார்கள். தாயாரும் உடன்பிறப்புகளும் இராம்குமார் குடும்பத்தினரை வரவேற்றுக் கொண்டாடுகிறார்கள். வழக்கு தொடர்பாக வெளியே சென்றிருந்த இராம்குமாரின் தந்தை வீடு திரும்பியவுடன் அவனை வெளியேறச் சொல்கிறார். அவர்கள் கண்ணீரோடு வெளியேறுகிறார்கள். தன் வீட்டாரே தன் மனைவியையும் பிள்ளையையும் நள்ளிரவில் வெளியேற்றியதை எண்ணி இராம்குமார் நலிகின்றான். சென்னை திரும்பியவுடன் இராம்குமாரின் உடல்நிலை ஈனமடைகிறது. புற்றுநோய் என்று தெரிகிறது. மருத்துவத்தை மீறி இறந்துவிடுகிறான். “ஒரு பெண்ணுக்குப் புருசனின் காலத்திற்குப் பிறகும் வாழ்க்கை இருக்கிறது… அதைத் துணிச்சலோடு எதிர்க்கொள்…” என்பதுதான் இராம்குமார் கூறும் இறுதி அறிவுரை. “உன்னைப்போன்ற பெண்ணுக்கு இவ்வாறு நேரும்போதுதான் இறைவன் இருக்கின்றானா என்ற ஐயம் வருகிறது…” என்று சீதாவின்
குடும்பத்தின்மீது அக்கறை கொண்டிருந்த பெரியவர் நாத்தழுதழுக்கிறார். சீதாவின் கலங்கிய விழிகளோடு படம் முடிகிறது. குடும்பம் ஒரு கதம்பம், பயணங்கள் முடிவதில்லை ஆகியவற்றுக்குப் பிறகு சென்னை வாழ்க்கையின் சிறுகுடித்தன வளாகம் இப்படத்தில் வருகிறது. வீட்டுத் தரகராக வரும் குமரிமுத்து, காப்பீட்டுக் கழக முகவராக வரும் வெண்ணிற ஆடை மூர்த்தி, வீட்டு உரிமையாளர் சாமிக்கண்ணு, செந்தாமரை என்று மகேந்திரனின் விருப்புக்குரிய கலைஞர்கள். இன்றைய காலத்திலிருந்து பார்க்கையில் அவர்களுக்கிடையே எழும் சச்சரவுகள் வேடிக்கையாக இருக்கின்றன.
கழிப்பறைத் தகராறு, பகிர் குளியலறை, கவுச்சி சமைக்கக்கூடாது என்னும் கட்டுப்பாடு, புதியவன் ஒருவன்மீது ஏற்படும் மையல், மூத்தோரின் புறம்பேசுதல் ஆகியவை நன்றாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. உறவுகளாய் வருபவர்கள் துணையாகின்றார்களா, சுமையாகின்றார்களா என்கின்ற அடிப்படைக் கேள்வியைப் படம் முன்வைக்கிறது. பூமியை தாண்டி இனி விண்ணிலும்… இளையராஜாவின் பாடல்… இசைஞானியின் மற்றுமொரு சாதனை! இந்தப் படத்தின் உரையாடல்களில் சிவசங்கரியின் பாதிப்பு இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். அதைத் தாண்டிய வீச்சுடைய
உரையாடல்களை மகேந்திரன் எழுதியிருக்கிறார். கொழுந்தியாளின் காதலை எதிர்க்கும் தமக்கைக் கணவனை அடக்குமிடத்தில் செந்தாமரை கூறுவது இதுதான் : “அட…. ஏன்பா நீ வேற… காலம் தெரியாம பேசிக்கிட்டு…”. “நான் எடுத்த படங்களுக்கு உயிரூட்டியவர் இளையராஜாதான்” என்று மகேந்திரன் கூறுகிறார். நண்டு திரைப்படத்திற்கு இளையராஜா செய்திருக்கும் இசைப்பங்களிப்பு இன்னும் பெருந்திரள் மன்றத்தின் கவனத்திற்கு வரவில்லை. நாயகன் தன் மனைவி மக்களுக்கு
அலகாபாத்தினைச் சுற்றிக் காட்டும்போது வருகின்ற “அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா…” என்னும் பாடலைக் கதையோடு சேர்த்துப் பார்க்க வேண்டும். வட இந்தியப் பனியிடையே விடியலில் மலரும் அந்த வரலாற்று நகரம் தன்னை நாடி வந்த தளிர்களுக்குத் தன்னழகைக் காட்டுவதற்காக முகையவிழ்வதை உணரலாம். வெறும் பத்துப் பன்னிரண்டு
படங்களுக்குள்ளாகவே இவ்வளவு தாக்கங்களை ஏற்படுத்திய மகேந்திரன் ஐம்பது அறுபது படங்களை இயக்கியிருந்தால் எப்படி இருக்கும் என்று நான் எண்ணுவதுண்டு. அந்த வாய்ப்பினைத் திரையுலகம் வழங்கவில்லையா, அவர் முனைந்து இயங்கவில்லையா என்பது தெரியவில்லை. இரண்டில் எது உண்மையென்றாலும் அதற்கு நாம் தகுதியில்லையோ என்ற ஐயத்தையும் சேர்த்துக்கொள்ளத்தான் வேண்டும். நிறைய மலர்ந்திருந்தால் கொல்லையில் வளர்ந்த கொடியாகியிருப்பார். அரிதாய் மலர்ந்ததால்தான் குறிஞ்சிச் செடியாய்க் கொண்டாடப்படுகிறார்.
No comments:
Post a Comment