Monday, February 22, 2021

சிற்பி பாலசுப்பிரமணியம்

சிற்பி பாலசுப்பிரமணியம் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பேராசிரியர், இதழாசிரியர் சிறந்த கவிஞர், புகழ்பெற்ற கல்வியாளர், இலக்கிய இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்ட ஒரு பல்துறை அறிஞர். பொருளடக்கம் [மறை] • 1வாழ்க்கைக் குறிப்பு • 2பணிகள் • 3சிறப்புச் செய்திகள்: • 4சிற்பி அறக்கட்டளை • 5நூலாசிரியர் o 5.1கவிதை நூல்கள் (20) o 5.2கவிதை நாடகம் (1) o 5.3சிறுவர் நூல்கள் (2) o 5.4உரைநடை நூல்கள் (13) o 5.5வாழ்க்கை வரலாற்று நூல்கள் (8) o 5.6மொழிபெயர்ப்பு நூல்கள் (11)  5.6.1கவிதைகள் (5)  5.6.2புதினங்கள் (3)  5.6.3பிற(3) o 5.7இலக்கிய வரலாறு (1) o 5.8ஆங்கில நூல் (1) o 5.9அறக்கட்டளைப் பொழிவு நூல்கள் (3) o 5.10உரை நூல்கள் (3) o 5.11தொகுப்பு நூல்கள் o 5.12பதிப்பித்த நூல்கள் (11)` • 6நெறியாளர் • 7இதழாளர் • 8விருதுகள் • 9கவிஞர் சிற்பியைக் குறித்து வெளிவந்துள்ள படைப்புகள்.. • 10ஆய்வுத் திட்டங்கள் UGC - பெருந்திட்டங்கள் • 11மதிப்புறு பொறுப்புகள் வாழ்க்கைக் குறிப்பு[தொகு] கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம் ஆத்துப்பொள்ளாச்சி கிராமத்தில் பிறந்தவர். கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள தத்தமங்கலம் சீலி நினைவு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். 1953 ஆம் ஆண்டு திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இடைநிலை கல்வி பயின்றார். [1]அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ., ஆனர்ஸ் (தமிழ் இலக்கியம்) கற்று, 1958 முதல் பொள்ளாச்சி நல்லமுத்து மகாலிங்கம் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தவர். 1989-இல் கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்று 1997 வரை சிறப்புறப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். மொழிபெயர்ப்புக்காகவும் (2001), படைப்பிலக்கியத்துக்காகவும் (2003) இருமுறை சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.தமிழக அரசின் பாவேந்தர் விருது, குன்றக்குடி ஆதீனம் கபிலர்விருது, திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க மகாகவி உள்ளூர் விருது, மூத்த எழுத்தாளருக்கான லில்லி தேவசிகாமணி விருது எனப் பலவிருதுகள் பெற்றவர். பணிகள்[தொகு] • 1989-1997 தமிழியல் துறைத் தலைவர், பாரதியார் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641046 • 1958-1989 விரிவுரையாளர் - பேராசிரியர் - தமிழ்த்துறைத் தலைவர், நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி - 642001 சிறப்புச் செய்திகள்:[தொகு] • தேசியக் கவிசம்மேளனம் - AIR புதுதில்லி, 1971 • மும்பை, கொல்கத்தா, புதுதில்லி, பெங்களூர், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க நிகழ்வுகளில் பங்கேற்பு • ஆசான் நினைவிடம், துஞ்சன் பறம்பு, கேரள சாகித்ய அகாதமி, கருநாடக சாகித்ய அகாதமி, சாகித்ய பரிஷத், சிரவண பெல்கோலா மகா மஸ்தாபிடேகக் குழு(2006)ஆகிய அமைப்புகளில் சிறப்பு அழைப்பாளர் • சிற்பியின் கவிதைகள் ஆங்கிலம், கன்னடம், இந்தி, மலையாளம், மராத்தி மொழிகளில் வெளிவந்துள்ளன. • ICCR, சாகித்ய அகாதமி, NBT, ஞானபீடத் தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளன. சிற்பி அறக்கட்டளை[தொகு] 1996-இல் தொடங்கப்பட்ட சிற்பி அறக்கட்டளை தமிழில் தலைசிறந்த கவிஞர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள், பரிசுகள் அளித்து வருகிறது. நூலாசிரியர்[தொகு] கவிதை நூல்கள் (20)[தொகு] 1. நிலவுப் பூ (1963) கோலம் வெளியீடு , பொள்ளாச்சி முதற்பதிப்பு-1963 2. சிரித்த முத்துக்கள் (1966) மணிவாசகா் பதிப்பகம் சென்னை, முதற்பதிப்பு-1968 3. ஒளிப்பறவை (1971) அன்னம் வெளியீடு சிவகங்கை முதற்பதிப்பு-1971 4. சர்ப்ப யாகம் (1976) கோலம் வெளியீடு , பொள்ளாச்சி முதற்பதிப்பு-1976 5. புன்னகை பூக்கும் பூனைகள் (1982) அன்னம் வெளியீடு சிவகங்கை முதற்பதிப்பு-1982 6. மௌன மயக்கங்கள் (தமிழக அரசு பரிசு பெற்றது) (1982) 7. சூரிய நிழல் (1990) கோலம் வெளியீடு , பொள்ளாச்சி முதற்பதிப்பு-1990 இரண்டாம் பதிப்பு 1995 8. இறகு (1996) கோலம் வெளியீடு , பொள்ளாச்சி 9. சிற்பியின் கவிதை வானம் (1996)(திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது) மணிவாசகா் பதிப்பகம் சென்னை, முதற்பதிப்பு-1996 10. ஒரு கிராமத்து நதி (1998)(சாகித்ய அகாதெமி விருது பெற்றது) 11. பூஜ்யங்களின் சங்கிலி (தமிழக அரசு பரிசு பெற்றது) (1999) கோலம் வெளியீடு , பொள்ளாச்சி 12. பெருமூச்சுகளின் பள்ளத்தாக்கு(2001) 13. பாரதி - கைதி எண் : 253 (2002) 14. மூடுபனி (2003) 15. சிற்பி : கவிதைப் பயணங்கள் (2005) 16. தேவயானி (2006) 17. மகாத்மா (2006) 18. சிற்பி கவிதைகள் தொகுதி - 2 (2011) 19. நீலக்குருவி (2012) 20. கவிதை வானம் (சிற்பியின் கவிதைத் தொகுப்பு) கவிதை நாடகம் (1)[தொகு] 1. ஆதிரை (1992) சிறுவர் நூல்கள் (2)[தொகு] 1. சிற்பி தரும் ஆத்திசூடி (1993) 2. வண்ணப்பூக்கள் (1994) உரைநடை நூல்கள் (13)[தொகு] 1. இலக்கியச் சிந்தனைகள் (1989) 2. மலையாளக் கவிதை (1990) 3. இல்லறமே நல்லறம் (1992) 4. அலையும் சுவடும் (1994) 5. மின்னல் கீற்று (1996) 6. சிற்பியின் கட்டுரைகள் (1996) 7. படைப்பும் பார்வையும் (2001) 8. கவிதை நேரங்கள் (2003) 9. மகாகவி (2003) 10. நேற்றுப் பெய்த மழை (2003) 11. காற்று வரைந்த ஓவியம் (2005) 12. புதிர் எதிர் காலம் (2011) 13. மனம் புகும் சொற்கள் (2011) வாழ்க்கை வரலாற்று நூல்கள் (8)[தொகு] 1. இராமாநுசர் வரலாறு (1999) 2. ம.ப.பெரியசாமித் தூரன் (1999) 3. பாரத ரத்னம் சி.சுப்பிரமணியம் (1999) 4. ஆர்.சண்முகசுந்தரம் (2000) 5. சே.ப. நரசிம்மலு நாயுடு (2003) 6. மகாகவி பாரதியார் (2008) 7. நம்மாழ்வார் (2008) 8. தொண்டில் கனிந்த தூரன் (2008) மொழிபெயர்ப்பு நூல்கள் (11)[தொகு] கவிதைகள் (5)[தொகு] 1. சச்சிதானந்தன் கவிதைகள் (1998) 2. உஜ்ஜயினி (ஓ.என்.வி.குரூப்) (2001) 3. கவிதை மீண்டும் வரும் (சச்சிதானந்தன்) (2001) 4. காலத்தை உறங்க விடமாட்டேன் (என்.கோபி) (2010) 5. கே.ஜி. சங்கரப்பிள்ளை கவிதைகள் (2012) புதினங்கள் (3)[தொகு] 1. அக்கினி சாட்சி (லலிதாம்பிகா அந்தர்ஜனம்) (1996) (சாகித்ய அகாதெமி விருது பெற்றது) 2. ஒரு சங்கீதம் போல (பெரும்படவம் ஸ்ரீதரன்) (1999) 3. வாராணசி (எம்.டி.வாசுதேவன் நாயர்) (2005) பிற(3)[தொகு] 1. தேனீக்களும் மக்களும் (1982) 2. சாதனைகள் எப்போதும் சாத்தியந்தான் (கிரண்பேடி) (2006) 3. வெள்ளிப்பனி மலையின்மீது (எம்.பி.வீரேந்திரகுமார்)(2009) இலக்கிய வரலாறு (1)[தொகு] 1. தமிழ் இலக்கிய வரலாறு (2010) ஆங்கில நூல் (1)[தொகு] 1. A Comparative Study of Bharati and Vallathol (1991) அறக்கட்டளைப் பொழிவு நூல்கள் (3)[தொகு] 1. கம்பனில் மானுடம் (2002) 2. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை (2006) 3. பாரதிதாசனுக்குள் பாரதி (2011) உரை நூல்கள் (3)[தொகு] 1. திருப்பாவை : உரை (1999) 2. திருக்குறள் : சிற்பி உரை (2001) 3. மார்கழிப்பாவை (2009) (திருப்பாவை,திருவெம்பாவை,திருப்பள்ளியெழுச்சி உரை) தொகுப்பு நூல்கள்[தொகு] 1. நதிக்கரைச் சிற்பங்கள் (2012) பதிப்பித்த நூல்கள் (11)`[தொகு] 1. மகாகவி பாரதி சில மதிப்பீடுகள் (1982) 2. பாரதி - பாரதிதாசன் படைப்புக்கலை (1992) 3. தமிழ் உலா I & II (1993) 4. பாரதி என்றொரு மானுடன் (1997) 5. மருதவரை உலா (1998) 6. நாவரசு (1998) 7. அருட்பா அமுதம் (2001) 8. பாரதியார் கட்டுரைகள் (2002) 9. மண்ணில் தெரியுது வானம் (2006) 10. கொங்கு களஞ்சியம் (2006) 11. வளமார் கொங்கு (2010) நெறியாளர்[தொகு] • 15 பி.எச்.டி. மாணவர்கள் • 6 எம்ஃபில் மாணவர்கள் இதழாளர்[தொகு] • வானம்பாடி (கவிதை இதழ்) • அன்னம் விடு தூது (இலக்கிய மாத இதழ்) • வள்ளுவம் (ஆசிரியர் குழு) • கவிக்கோ (ஆசிரியர் குழு) • கணையாழி (ஆசிரியர் குழு) விருதுகள்[தொகு] • மௌன மயக்கங்கள் - கவிதை நூல் - தமிழக அரசு விருது (1982) • பாவேந்தர் விருது - தமிழக அரசு (1991) • கபிலர் விருது - கவிஞர் கோ பட்டம் - குன்றக்குடி அடிகளார் (1992) • A Comparative study of Bharati and Vallathol • உ. சுப்பிரமணியனார் ஆங்கில நூல் பரிசு - தமிழ்ப் பல்கலைக்கழகம் (1994) • இந்துஸ்தான் லீவர் Know your India போட்டி முதல் பரிசு (1970) • பாஸ்கர சேதுபதி விருது - முருகாலயா - சென்னை (1995) • தமிழ் நெறிச் செம்மல் விருது - நன்னெறிக் கழகம் கோவை (1996) • திருப்பூர் தமிழ்ச் சங்க விருது - சிற்பியின் கவிதை வானம் நூலுக்கு - (1997) • கம்பன் கலைமணி விருது - கம்பன் அறநிலை, கோவை (1998) • சொல்கட்டுக் கவிஞர் விருது - திருவாரூர் இயல் தமிழ் பதிப்பகம் (1990) • தமிழ்ப் புலமைக்கான சென்னை கொங்கு நண்பர்கள் சங்க விருது (1997) • மூத்த எழுத்தாளருக்கான லில்லி தேவசிகாமணி விருது (1998) • ராணா விருது - ஈரோடு இலக்கியப் பேரவை (1998) • சிறந்த தமிழ்க் கவிஞர் விருது - கேரள பண்பாட்டு மையம் (1998) • இருபதாம் நூற்றாண்டில் சிறந்த எழுத்தாளர் விருது - DIYA (1998) • பாரதி இலக்கிய மாமணி விருது - அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் மன்றம், சென்னை (1998) • ‘பூஜ்யங்களின் சங்கிலி’ - தமிழ்நாடு அரசு பரிசு (1998) • 'The Pride of Pollachi’ விருது - பொள்ளாச்சி காஸ்மோ பாலிடன் கிளப் (1999) • ராஷா சர் அண்ணாமலைச் செட்டியார் பிறந்த நாள் பரிசு -மதுரைத் தமிழிசைச் சங்கம் (2000) • சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு விருது - 2000 (அக்கினி சாட்சி நாவலுக்கு - 2001) • சாகித்ய அகாதமி படைப்பிலக்கிய விருது 2002 - (ஒருகிராமத்து நதி கவிதை நூலுக்கு - (2003) • பாரதி விருது - தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் (2002) • மகாகவி உள்ளூர் விருது - திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் (2003) • பணியில் மாண்பு விருது - ரோட்டரி சங்கம் (வடக்கு) கோவை (2003) • தலைசிறந்த பழைய மாணவர் விருது- ஜமால் முகமது கல்லூரி (2003) • பாரதி பாவாணர் விருது - மகாகவி பாரதி அறக்கட்டளை கோயம்புத்தூர் (2004) • பாராட்டு விருது - அரிமா மாவட்டம் 324 / 01 வட்டார மாநாடு, கோயம்புத்தூர் (2004) • தமிழ் வாகைச் செம்மல் விருது - சேலம் தமிழ்ச் சங்கம் (2005) • ராஷா சர் முத்தையா விருது (2009) • கவிக்கோ அப்துல்ரகுமான் விருது (2006) • அரிமா சங்கம் பொள்ளாச்சி, பிரம்மகுரு விருது (2007) • ரோட்டரி சங்கம் பொள்ளாச்சி [No Paragraph Style]For the Sake of Honour Award (2008) • வெற்றித் தமிழர் பேரவை விருது (2008) • தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது (2009) • ‘நல்லி’ திசை எட்டும் மொழியாக்க விருது (2010) • ச.மெய்யப்பன் அறக்கட்டளை - தமிழறிஞர் விருது (2010) • பாரதிய வித்யாபவன் கோவை, தமிழ்மாமணி விருது (2010) • கம்பன் கழகம் சென்னை எம்.எம்.இஸ்மாயில் விருது (2010) • பப்பாசி கலைஞர் பொற்கிழி விருது (2012) கவிஞர் சிற்பியைக் குறித்து வெளிவந்துள்ள படைப்புகள்..[தொகு] • சிற்பியின் படைப்புக்கலை - முனைவர் தே.ஞானசேகரன் (ப.ஆ.) (1993) • கோபுரத்தில் ஒரு குயில் - சி.ஆர்.ரவீந்திரன் (1996) • சிற்பி - மரபும் புதுமையும் - முனைவர் தே.ஞானசேகரன்(ப.ஆ.) (1996) • கவிஞர் சிற்பி -கருத்தியல்வளம் - முனைவர் இரா.சந்திரசேகரன் (ப.ஆ.) (2003) • கவிஞர் சிற்பி - கவிதைவளம் - முனைவர் இரா.சந்திரசேகரன் (ப.ஆ.) (2003) • கவிஞர் சிற்பி - கவிதைக்குள் ஒரு பிரபஞ்சம் - முனைவர் இரா.சந்திரசேகரன் (2004) • சிற்பியின் படைப்புலகம் - பேராசிரியர்கள் மா.நடராசன், மதியழகன் (ப.ஆ.) (2004) • சிற்பியின் கவிதையில் சிறைப்பட்ட சீர்திருத்தக் கவிஞர் - அ.சங்கரவள்ளி நாயகம் (2006) • சிற்பி துளிகளில் ஒளிரும் வெளிகள் - சொ.சேதுபதி (2011) • சிற்பி - மௌனம் உடையும் ஒரு மகாகவிதை - நவபாரதி (2011) • ஆழிக்கவிதைகளும், ஆழியாற்றுக்கவிதைகளும் - உ.அலிபாவா (ப.ஆ) (2012) • Sirpi Poet as Sculptor - P.Marudanayagam (2006) • A noon in Summer (1996) • Sirpi Poems - A Journey (2009) ஆய்வுத் திட்டங்கள் UGC - பெருந்திட்டங்கள்[தொகு] • தமிழ் இலக்கியத்தில் விடுதலை இயக்கத் தாக்கம் (1989 - 1991) • இடைக்காலக் கொங்கு நாட்டின் சமூக - பொருளாதார அமைப்புகள் (1993- - 1997) • கொங்கு களஞ்சியம் - இரு தொகுதிகளின் பதிப்பாசிரியர் மதிப்புறு பொறுப்புகள்[தொகு] • காந்திகிராம் பல்கலைக்கழகம், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், துணைவேந்தர் தேர்வுக்குழு உறுப்பினர். • சாகித்ய அகாதமி செயற்குழு உறுப்பினர் / ஒருங்கிணைப்பாளர் தமிழ் ஆலோசனைக் குழு (2008) • சாகித்ய அகாதமி பொதுக்குழு / தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினர் (1993 - 1998) • எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் தமிழ்ப்பேராயம் செயற்குழு, விருதுக்குழு உறுப்பினர். • தலைவர், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் (2000 - 2005) • தலைவர், ஞாலத் தமிழ்ப் பண்பாட்டு மன்றம் (2009) • தலைவர், கவிஞர் சிற்பி அறக்கட்டளை • தலைவர், பி.எம்.எஸ்., அறக்கட்டளை • செயலர், பொள்ளாச்சி இலக்கியக் கழகம் • உறுப்பினர், பாரதிய வித்யா பவன் நிர்வாகக் குழு, கோவை • உறுப்பினர், டாக்டர் NGP கல்லூரிக் குழு, கோவை • முன்னாள் உறுப்பினர், RKR கல்வியியல் கல்லூரிக் குழு, உடுமலைப் பேட்டை • தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் ஆசிரியர் தேர்வுக்குழு, பாடத்திட்டக்குழு முன்னாள் உறுப்பினர் • பல்கலைக்கழக மானியக்குழு, மத்திய அரசு பண்பாட்டுத்துறை, மத்திய அலுவலர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசு செயலர் தேர்வாணையத் தேர்வுக்குழு முன்னாள் உறுப்பினர் • உறுப்பினர், நிர்வாகக்குழு, பாரதியவித்யா பவன், கோவை • சென்னை, அண்ணாமலை, பாரதியார், பாரதிதாசன், கொல்கத்தா, அழகப்பா, மதுரை, கேரளப் பல்கலைக் கழகங்களிலும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலும் அறக்கட்டளை உரையாளர் • பப்பாசி, புதியதலைமுறை, இளையராஜா அமைத்த பாவலர் வரதராஜன் நினைவு விருதுக்கான தேர்வுக்குழு உறுப்பினர் சிற்பி பாலசுப்ரமணியம் 10 தமிழ் இலக்கியவாதி, கவிஞர் தமிழகத்தின் தலைசிறந்த படைப்பாளிகளுள் ஒருவரும் இரு முறை சாகித்ய அகாடமி விருது வென்றவருமான சிற்பி பாலசுப்ரமணியம் (Sirpi Balasubramaniam) பிறந்த தினம் இன்று (ஜூலை 29). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: கோவை மாவட்டம், ஆத்துப் பொள்ளாச்சி கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் (1936). கிராமத்து திண்ணைப் பள்ளியில் பயின்றார். பொள்ளாச்சியில் 5-ம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். ஆனால் பள்ளிப் படிப்பு கசந்தது. பள்ளியையும் வீட்டையும் விட்டு வெளியேறி ஒரு உறவினர் வீட்டில் அடைக்கலம் புகுந்தார். மகனின் செயலால் தந்தை ஏமாற்ற மடைந்தார். குடும்ப நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி கேரளத்தில் ஒரு ஆசிரியரிடம் படிப்பதற்கு ஏற்பாடு செய்தார் தந்தை. அதன் பின்னர் மேற்படிப்புக்காக தமிழகம் திரும்பினார். கி.ஆ.பெ.விசுவநாதன், தொ.பொ.மீ., மா.பொ.சி. உள்ளிட்டோரின் சொற்பொழிவுகளைக் கேட்டதாலும் பாரதியார், பாரதிதாசன் கவிதைகளைப் படித்ததாலும் தமிழ் மீது ஆர்வம் பிறந்தது. இதனால் தந்தை விரும்பியபடி மருத்துவப்படிப்பில் சேராமல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் பி.ஏ. ஹானர்ஸ் சேர்ந்து, பட்டம் பெற்றார். இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். தொல்காப்பியம், நன்னூல், யாப்பிலக்கணம் என அத்தனையும் கற்றார். 1987-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். தமிழ், ஆங்கிலம், மலையாளம், ரஷ்ய மொழிகளை நன்கு அறிந்திருந்தார். 1958 முதல் பொள்ளாச்சி நல்லமுத்து மகாலிங்கம் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். அப்போது முதல் கவிதை எழுதினார். நல்ல வரவேற்பு கிடைத்ததால் தொடர்ந்து நிறைய எழுதினார். 1963-ல் ‘நிலவுப்பூ’ என்ற தலைப்பில் இவரது முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்தது. 1989-ல் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றார். வானம்பாடி, அன்னம் விடுதூது, வள்ளுவம், கவிக்கோ உள்ளிட்ட இதழ்களின் ஆசிரியர் குழுவில் இணைந்து செயல்பட்டார். மொழிபெயர்ப்புக்காகவும், படைப்பிலக்கியத்துக்காகவும் இருமுறை சாகித்ய அகாடமி விருது பெற்றார். மேலும் பாவேந்தர் விருது, கபிலர் விருது, தேவசிகாமணி விருது, சொல்கட்டுக் கவிஞர் விருது என ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் படைத்த ‘சிரித்த முத்துக்கள்’, ‘சர்ப்ப யாகம்’, ‘சூரிய நிழல்’, ‘இறகு’, ‘மவுன மயக்கங்கள்’, ‘ஒரு கிராமத்து நதி’ உள்ளிட்ட கவிதை நூல்கள், ‘ஆதிரை’ என்ற கவிதை நாடகம், ‘சிற்பி தரும் ஆத்திச்சூடி’, ‘வண்ணப்பூக்கள்’ உள்ளிட்ட சிறுவர் நூல்கள், ‘மலையாளக் கவிதை’, ‘மின்னல் கீற்று’, ‘மகாகவி’, ‘நேற்று பெய்த மழை’ உள்ளிட்ட உரைநடை நூல்கள் குறிப்பிடத்தக்கவை. ‘ராமானுஜர் வரலாறு’, ‘நம்மாழ்வார்’, ‘சே.ப. நரசிம்மலு நாயுடு’ உள்ளிட்ட வாழ்க்கை வரலாற்று நூல்கள், ‘சச்சிதானந்தன் கவிதைகள்’, ‘உஜ்ஜயினி’, ‘கே.ஜி. சங்கரப்பிள்ளை கவிதைகள்’ உள்ளிட்ட மொழிபெயர்ப்பு நூல்கள், ‘அக்கினி சாட்சி’, ‘வாரணாசி’ உள்ளிட்ட புதினங்களும் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தன. பல்வேறு இலக்கிய அமைப்புகளின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டு, அவற்றின் செயல்பாடுகளை ஆவணப்படுத்தினார். இலக்கியத்தின் பல களங்களில் தடம் பதித்திருந்தாலும் ஒரு சிறந்த கவிஞராகவே இவர் பெரிதும் அறியப்படுகிறார். இவரது கவிதைகள் ஆங்கிலம், கன்னடம், இந்தி, மலையாளம், மராத்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்தியப் பல்கலைக்கழக தமிழாசிரியர் மன்றத்தின் தலைவராகவும், ஞாலத் தமிழ்ப் பண்பாட்டு மன்றத் தலைவராகவும் செயலாற்றிய சிற்பி பாலசுப்ரமணியம், இன்று 81 வயதை நிறைவு செய்கிறார். கவிஞர் சிற்பியின் கவிதையுலகம் நான் யாரென்று என்னிடம் கேட்காதீர்கள்; என்றைக்கும் ஒன்றுபோல் இருங்கள் என்றும் என்னிடம் மன்றாடாதீர்கள்; இவற்றையெல்லாம் நம்முடைய அதிகாரவர்க்கத்திற்கும் நம்முடைய போலீஸ்காரர்களிடமும் விட்டுவிடுங்கள். நம்மைக் குறித்த விவரங்களை ‘ஒழுங்காக’ அடுக்கிவைத்துக் கொள்வதை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள். -மிகயீல் பூக்கோ. கவிஞர் சிற்பியின் முதல் கவிதைத் தொகுப்பு ‘நிலவுப்பூ’ 1963-இல் வெளிவந்தது. ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம் ஒரு சிறிதும் இடைவெளி விடாமல் ‘கவிதை’ என்கிற ‘பிசாசோடு’ கூடிக் குலாவி வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதே மிகப்பெரிய சாதனைதான். சிரித்த முத்துக்கள் (1968), ஒளிப்பறவை (1971), சர்ப்பயாகம்(1976), மௌன மயக்கங்கள் (1982), புன்னகை பூக்கும் பூனைகள் (1982), சூரியநிழல் (1990), ஆதிரை-கவிதை நாடகம் (1992), இறகு (1996), ஒரு கிராமத்து நதி (1998), பூஜ்யங்களின் சங்கிலி (1999), பாரதி கைதி எண் 253 (2001) என்று தமிழ் இலக்கியப் பரப்பில் தன் கவிதைகளைத் தொகுப்புக்களாக விதைத்துள்ள சிற்பி, தன் கவிதைகளைக் குறித்துத் தானே இவ்வாறு பிரகடனம் செய்கிறார். உயரம் குறைந்தவன் நான் ஆயினும் எனது எழுத்துக்கள் குள்ளமானவை அல்ல கூலிக்கு அவைகள் பிறந்ததுமில்லை வேலிக்குள் முடங்கிக் கிடந்ததும் இல்லை இவ்வாறு தன் கவிதையாக்கம் குறித்த பார்வை கொண்டிருக்கும் கவிஞர், தமிழ்த் திறனாய்வாளர்களை நோக்கி ‘அகோ வாரும் பிள்ளாய்’ என்று ஒரு கவிதை எழுதியுள்ளார். என்னை நானே சிதையில் ஏற்றி எருவிட்டு மூடி மூணுதரம் சுற்றிவந்து எரித்துப் பார்த்து முடித்தாச்சு போடா போ! உன் நமத்துப் போன தீக்குச்சிகளை வெயிலில் காயப் போடு வீணையை வெட்டி விறகாக்கு விரலை நறுக்கிக் குழம்பு வை இதயத்தை வற்றலாக்கு ஊரைக் கூப்பிட்டு விருந்து வை ஒருத்தரும் வராவிட்டால் பந்திக்கு நீயே முந்து இப்படிக் கவிதை எழுதியதோடு மட்டுமல்லாமல், “தங்கள் சொந்தக் கோபுரங்களில் இருந்தபடியே ஒருவர் குடுமியை இன்னொருபவர் பற்றி இழுக்கும் திறனாய்வாளர்கள் மீது எனக்குள் பொங்கிய சினத்தின் ‘ஒரு சிறு பகுதிதான்’ இது. இன்றும் கூட என் மொழி விமர்சகர்களோடு எனக்கு நேசமும் இல்லை; பாசமும் இல்லை” என்று 1994-இல் கேரளாவில் நடந்த ஒரு கருத்தரங்கில் பிரகடனம் செய்கிறார். பொங்கிய சினத்தின் “ஒரு சிறு பகுதிதான்” இந்தக் கவிதை. அந்தச் சிறு பகுதியே ‘நெற்றிக் கண்’ மாதிரி பாய்கிறது. சினம் முழுவதும் பாய்ந்தால்!-நினைக்கவே பயமாக இருக்கிறது. இத்தகைய ஒரு படைப்பாளியை முன்னால் வைத்துக் கொண்டு அவர் கவிதைகளைக் குறித்து நான் இங்கே திறனாய்வு செய்வது என்பது பக்கத்தில் ஒரு “தாமரைக் குளம்” இல்லாமல் சாத்தியமில்லை என்றுதான் தோன்றுகிறது. இருந்தாலும் சாகித்திய அகாடெமிக்காக, தென்மண்டலச் செயலாளர் நண்பர் பொன்னுத்துரையின் வேண்டுகோளுக்கிணங்க இந்த அக்னி பரீட்சையில் இறங்குகிறேன். இங்கே வானம்பாடிக் கவிஞர்கள் சிற்பி உட்பட ஞானி, மேத்தா, தமிழ்நாடன் என்று பலர் வந்திருக்கின்றனர். வானம்பாடி இயக்கம் என்று இங்கே அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1971-இல் கோவையில் ‘வானம்பாடி இலக்கிய வட்டம்’ என்று தான் தொடங்கப்பட்டது. ஓர் இயக்கத்திற்கு வேண்டிய அடிப்படையான விதிமுறைகளோ, கொள்கை கோட்பாடுகளோ, நிறுவனத்திற்கான செயல் முறைகளோ, அமைப்பு முறைகளோ ஒழுங்காக உட்கார்ந்து வரையறுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. 1971-இல் சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலை படித்துக் கொண்டிருந்த நானும் ‘விலையிலாக் கவிதை மடல்’ என்ற முத்திரை மொழியோடு வந்த அந்த வானம்பாடி இதழ் ஒவ்வொன்றையும் வாசிக்கின்றவனாக இருந்திருக்கிறேன். 1967-இல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்துவிட்ட சூழலில் அதன் செயல்பாட்டில் அதிருப்தியுற்ற கொள்கைப் பற்றாளர் பலரும் ஏமாற்றமுற்றனர். பெருஞ்சித்தனார் போன்று சிலர் நேரடியாக ஆளுங்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தனர். பலர் இடதுசாரி இயக்கத்திற்குள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். இவ்வாறு தமிழ், தமிழ் இனம், தமிழ்த் தேசியம் முதலியவற்றோடு மார்க்சியத்தையும் இணைத்துக் கொண்ட அறிவாளிகளுக்கு, ஆளுங்கட்சியால் தாங்கள் அடைந்த ஏமாற்றத்திற்கான மாற்றீடாகத்தான் ‘வானம்பாடி இலக்கிய வட்டம்’ உருவானது. வானம்பாடி இலக்கிய வட்டத்தைத் தொடங்கியவர்களில் ஒருவரான கனல்மைந்தனின் கணிப்பும் இதுவாகத்தான் இருக்கிறது. ஆனால் கவிஞர் சிற்பி ‘நடை’, ‘கசடதபற’ ஆகிய இதழ்களுக்கு எதிர்நிலைப்பாடாக வானம்பாடி இயக்கம் தோன்றியதாகக் குறிப்பிடுகிறார். மார்க்சியத் தத்துவத்தில் தம்மை கரைத்துக் கொண்டிருந்த கோவைக் கவிஞர்களிடம் ஏற்கனவே கனிந்து சிவந்திருந்த கவிதை நெருப்பை இவ்விதழ்கள் (நடை, கசடதபற) கிளறிவிட்டன. எழுபதுகளின் தொடக்கத்தில் இதன் விளைவாக ‘வானம்பாடி இயக்கம்’ பிறந்தது. ஞானி, புவியரசு, அக்கினி புத்திரன், கங்கை, ஜன.சுந்தரம், மு.மேத்தா போன்ற பலருடன் நானும் தீவிரமாக இவ்வியக்கத்தில் ஈடுபட்டேன். இவ்வியக்கத்தின் மையமாக விளங்கியவர்களில் நானும் ஒருவனானேன் (சிற்பியின் கட்டுரைகள், ப.539) ஒன்று உருவாவதற்குப் பன்முகப்பட்ட காரணங்கள் நம்முடைய அறிதல் நிலையிலும் அறிதலுக்கு அப்பாற்பட்ட நிலையிலும் பல்வேறு தளங்களில் வினைபுரிந்திருக்கலாம் என்பதுதான் சரியான பார்வையாக இருக்கும். அந்தக் கோணத்தில் சிற்பியின் கணிப்பிற்கும் வானம்பாடி இலக்கிய வட்டத்தின் தோற்றம் குறித்த கருத்திற்கு இடம் உண்டு. இவ்வாறு தோன்றிய வானம்பாடி இலக்கிய வட்டத்தை “இயக்கமாகப்” புனைவதற்கான சூழல் எவ்வாறு உருவானது என்பதையும் கவனிக்க வேண்டும். பி.எஸ்.இராமையா போன்றவர்கள் மணிக்கொடி பத்திரிக்கைச் சூழலை ஓர் இயக்கமாகக் கட்டமைக்க முனையும் போது, சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ இதழ் சூழலை எழுத்து இயக்கமாகப் புனையும் பொழுது, வானம்பாடி இலக்கிய வட்டச் சூழலையும் இயக்கமாக வளர்த்துக் காட்ட வேண்டிய வரலாற்று நெருக்கடி ஏற்படுகிறது. வரலாறு என்பதும் கட்டமைக்கக்கூடிய ஒன்றுதான் என்பது இதிலும் புலப்படுகிறது. கூடவே தமிழர்களுக்கான வரலாறு எழுதுதல் என்பது தமிழ்ப் பிராமணர்கள் கட்டமைக்கின்ற வரலாற்றின் பக்க விளைவுகளாகவே அமைகின்றன என்பதும் உண்மையாகிறது. இவ்வாறு வானம்பாடி இயக்கத்திற்குள் வந்து சேர்ந்த சிற்பியின் கவிதைப் பயணத்தை மூன்று கட்டமாகப் பிரித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். 1. வானம்பாடிக்கு முந்திய காலகட்டம் 2. வானம்பாடி காலகட்டம் 3. வானம்பாடிக்குப் பிந்திய காலகட்டம் கவிஞர் சிற்பி வானம்பாடி இயக்கத்திற்கு வருவதற்கு முன்பே ‘நிலவுப்பூ’, ‘சிரித்த முத்துக்கள்’, ‘ஒளிப்பறவை’ ஆகிய மூன்று தொகுதிகளை வெளியிட்டு விட்டார். அக்கவிதைகள் பெரும்பாலும் அவரே கூறுவதைப் போல இரண்டாயிரம் ஆண்டு தமிழ் இலக்கிய இலக்கணத்தை முறையாகக் கற்று அந்தச் சுமையில் பிதுங்கும் ஒரு தமிழ்க் கல்வியாளரின் தொடக்க காலக் கவிதை முயற்சிகளாகும். பாரதி, பாரதிதாசன் ஆகியோரின் கவிதை மொழியில் மனதை நனையவிட்டுச் சுகம் கண்டவராவார் சிற்பி. இதனாலேயே மற்ற வானம்பாடிக் கவிஞர்களிடமிருந்து தனியான ஒரு கவிஞராகவம் இவர் அறியப்பட வேண்டியவராகிறார். அதாவது மற்ற வானம்பாடிக் கவிஞர்கள் தமிழ், தமிழ்த் தேசியம் , மார்க்சியம் என்ற வெளியில் பெரிதும் நடமாடுகிறவர்கள் என்றால் கவிஞர் சிற்பி அவற்றுடன் இந்திய தேசியம், காந்தியம் என்கின்ற தளத்திற்குள்ளும் நடமாடுகின்றவராக விளங்குகின்றார். வசதியான பண்ணையார் குடும்பச் சூழல், ‘ஆத்துப் பொள்ளாச்சி’ கிராமத்தில் உயர்சாதிச் சூழல், இந்தச் சூழலில் இருந்து முற்றிலும் வேறாகத் தன்னை உணர்ந்து இல்லாதவர்கள்ஃபாதிக்கப்பட்டவர்கள் பக்கமாக, குரல் இழந்தவர்களின் குரலாகத் தன்னை வடிவமைத்துக் கொள்வதற்கு, அவருக்குள் இந்த மரபான தமிழ் இலக்கியக் கல்விதான் வினைபுரிந்துள்ளது. கணியன் பூங்குன்றனார் தொடங்கிப் பாவேந்தர் பாரதிதாசன் வரைக்குமான தமிழ் இலக்கியக் கல்விக்கு இப்படி ஒரு மன அமைப்பை வடிவமைக்கிற உயிர் ஆற்றல் வற்றாமல் இருந்து கொண்டிருக்கிறது. எனவேதான் 1970-இல் வானம்பாடி இலக்கிய வட்டத்திற்குள் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முடிகிறது. வானம்பாடி இயக்கத்திற்குள் வந்த பிறகு அவர் வெளியிட்ட நான்காவது கவிதைத் தொகுப்பு ;சர்ப்பயாகம்’ என்கிற தொகுப்பாகும். இத்தொகுப்புதான் தமிழ் இலக்கிய வெளியில் அவருக்கு ஓர் ஆழமான இடத்தை உறுதிப்படுத்தியது. புதிய உவமைகளும், உருவகங்களும், படிமங்களும், குறியீடுகளும் இத்தொகுப்பிற்குள் சர்வ சாதாரணமாக அமைந்து வாசகனுக்கு ஒரு புதிய அரசியல் கவிதை வெளியைத் திறந்துவிட்டன. சர்ப்பயாகம், நாய்க்குடை, மதுரை வீரன், மௌனத் திரை, ஞானபுரத்தின் கண்கள், சாக்கடைகள், காலைச் சுற்றும் நாய்கள், ஆப்பிரிக்காவின் இதயம் முதலிய குறியீடுகள் அத்தொகுப்பைப் படிக்கிற யாருக்குள்ளும் விதைகளாய் விழுந்து மரங்களாய் வளரும் தன்மை கொண்டவைகளாகும். இத்தொகுப்பில் கதைத் கவிதைகளைப் புதுக்கவிதையில் எழுதும் முயற்சியிலும் ஈடுபட்டுத் தன் தனித்தன்மையை நிலைநிறுத்திக் கொண்டார். இத்தகைய கவிதைகளில் குறிப்பிடப்பட வேண்டியவை ‘மௌன மயக்கங்கள்’ என்ற கவிதையும், ‘சிகரங்கள் பொடியாகும்’ என்ற கவிதையும் ஆகும். இந்த இரண்டு கவிதைகளுமே விளிம்புநிலை மக்களைக் கவிதையின் பாடுபொருளாக முன்னுக்கு எடுத்தவை ஆகும். ‘சிகரங்கள் பொடியாகும்’ எழுபதுகளில் உருவான தலித் கவிதை என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். இந்தக் கதைக் கவிதையின் சிறப்பே ஒரு தலித் பெண்ணைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கும் ஒருத்தரின் சாதியைக் குறிப்பிட்டு அதுவும் அவர் சார்ந்த உயர்சாதியைக் கவிதைக்குள் குறிப்பிட்டுப் பாடிய துணிச்சலாகும். சாதியைச் சொல்லாமல் பொத்தம் பொதுவாகப் பாடுவதுதான் பெரும்பாலான போக்கு. கருவேலங்குச்சியை மென்றபடி நின்ற சென்னிமலைக் கவுண்டரின் பற்களுக்கு வயதானாலும் உறுதி குன்றவில்லை என்று ஆதிக்க சக்தியைக் காட்சிப்படுத்தும் பாங்கும் வாசகர் மனத்தில் நின்றுவிடக்கூடியது. வானம் காயம்பட்டுக் கிடந்த விடியற்பொழுது அருக்காணியின் ஈட்டி மரச்சிற்பமேனி வாய்க்காலில் மூழ்கிக் கிடந்தது. என்று கதையின் உச்சத்தை முதலில் சொல்லிப் பிறகு பின்னோக்கிக் கதையைச் சொல்லும் பாங்கு வாசகர்களைச் சுண்டி இழுக்கக் கூடிய உத்தி. கவுண்டரின் பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் அந்தச் சக்கிலியர்கள் அவரைச் சம்பந்தியாகக் கொண்டு, அவர் மகள் காமாட்சியைப் பெண் கேட்கப் போவது போல் ஒரு கதைப் பின்னலை, ஓர் உண்மைக் கதை அடிப்படையில் அந்தக் காலத்தில், அதுவும் ஒரு கல்வியாளர் படைப்பது என்பது சாதி உணர்ச்சிமிக்கத் தமிழ்ச் சூழலில் எளிய காரியமில்லை. மேலும் பெண் கேட்டுப் போவது மட்டுமல்லாமல் சின்னான் தலைமையில் ஒரு போராட்டத்திற்குப் பூணாச்சி மலையின் அடிவாரத்தில், சுருளி ஆற்றங்கரையில் திரண்டார்கள் என்று படைப்பதும் அம்பேத்கரின் நூற்றாண்டையொட்டி பிறகு 1990-களில் கிளம்பிய தலித்துகளின் எழுச்சியை முன்கூட்டியே ய+கிப்பது போல அமைந்துள்ளது. இதே போன்ற ஓர் உண்மைக் கதைதான் ‘மௌன மயக்கங்கள்’ என்கிறார் சிற்பி. விளிம்புநிலையில் தள்ளப்பட்டுக் கிடக்கும் ஒரு விலைமகளின் கதையை, அதுவும் தனது இனிய நண்பன் ஒருவனின் அந்தரங்கமான கதையை ‘அவனும் அவளும்’ என்று சுட்டுப் பெயராலேயே பாடியிருப்பதும் ‘குரலாற்றவர்களின் குரல்தான் சிற்பியின் குரல்’ என்பது உறுதிப்படுகிறது. தொண்ணூறுகளுக்குப் பிறகு சிற்பியின் கவிதைப் பயணம் வேறொரு தளத்திற்குத் தாவுகிறது. எண்பதுகளில் அவர் நம்பிக் கொண்டிருந்த மார்க்சியம் உலகளவில் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது. ஒன்றிய சோவியத் ரஷ்யா சிதறியது. கம்ய+னிசத்துக்குள் ஈவிரக்கமற்று வினைபுரிந்து கொண்டிருந்த ஆணவமிக்க அதிகாரக் குரல்கள் வெளிச்சத்திற்கு வந்தன. உலக அரசியலில் முதலாளித்துவம் மீண்டும் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கியது. உள்நாட்டு அரசியலிலும் அடிப்படைவாதிகளின் மதவாதம், மனிதாபிமானத்தை நெருப்புக்குள் பொசுக்கியது. இந்நிலையில் கவிஞர் சிற்பி தன் உள்ளொளியை நோக்கி அகமுகமாகப் பயணிக்கத் தொடங்கி விடுகிறார். இந்நிலையைச் சிற்பி கீழ்க்கண்டவாறு வர்ணிக்கிறார்: நம் சமுதாயத்தைப் பொறுத்த அளவில், நம் பயணம் இருட்டிலிருந்து நள்ளிரவை நோக்கியதாக இருக்கிறது. அழிவின் தூதுவர்கள் வலிமை பெற்று வருகிறார்கள். தலித்துகளின் கோபம் அபாயமான உச்சியை எட்டி இருக்கிறது. அரசியல் நுட்பம் வளைந்து நசுங்கிக் கிடக்கிறது. ஒரு புறம் மத அடிப்படை வாதத்தின் குரல் மேலோங்கி இருக்கிறது. வரலாற்றில் இன்னொரு அடிமை யுகம் நோக்கிப் பொருளாதாரம் பயணப்பட்டிருக்கிறது. தொழில் நுட்பம் அதிர்ச்சி அலைகளை உருவாக்கி வருவதுடன் இயற்கை வளம் சர்வநாச விளிம்புகளை எட்டுமாறு தன் அரக்கப் போக்கைத் தொடங்கி இருக்கிறது. மனித வாழ்வின் இந்தச் சூழல்களை நிச்சயமாக ஓர் எழுத்தாளன் காணாமல் கண்களை மூடிக் கொள்ள முடியாது. இந்த வெறிச் சூழல் என்னைப் பெரிதும் பாதித்தமையால் துயர்க்கோலம் பூண்ட என் மனம் தனக்குள் பயணிக்கத் தொடங்கியது. உள்ளொளியை நாடிய என் கவிதை சற்றே அகமுகமாக மாறலாயிற்று (சிற்பியின் கட்டுரைகள், பக் 542-543) மனது முழுவதையும் மாந்தர்களை, அவர்களது வாழ்க்கைப் பாடுகளை, அவர்களது மேன்மைகளை, வலிகளை நிரப்பிக் கொண்ட கவிஞர் சிற்பி, இப்பொழுது மனத்தை வெறுமனே காலியாக வைத்துக் கொள்ள வேண்டுமென அவாவத் தொடங்கிவிட்டார். பறவையின் எச்சமும், மேகத்தின் மழைத் துளியும் அவருக்கு ஒன்றாகவே தோன்றத் தொடங்கிவிட்டன. இத்தகைய மனநிலையில் ‘பூஜ்யங்களின் சங்கிலி’ பிறக்கிறது. வாழ்க்கை வெறும் சூனியம், பூஜ்யம். ஆனால் அது மனிதர்களுக்குள் சங்கிலியாய்த் திரண்டு அவர்களைக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது. இவர்களுக்கு விடுதலை இல்லை. இவர்களுக்குள் “கல்லறைக்குப் போகும் மட்டும் சில்லறை தேவை” என்ற நரகமெனப்படும் நகர ஆட்டோவின் முதுகில் பொறித்த வாசகமே வேதவாக்காகப் பாய்ந்து வினைபுரிந்து கொண்டிருக்கிறது. கவிதை மனம் நைந்து போவதைத் தவிர வேறு வழியில்லை. “படைப்பில் தனித்தன்மையை (ழுசபைiயெடவைல) ஒரு சிறிதாவது உருவாக்கிக் காட்ட வேண்டும் என்றால் இளமைக் காலத்து நினைவுகளோடு உரத்த குரலில் மொழியாடத் தெரிந்திருக்க வேண்டும்” என்பர். கவிஞர் சிற்பி அவ்வாறு தன்னுடைய இளமைக்கால நினைவுகளோடு உரையாடிய உரையாடல்களின் தொகுப்புதான் அவருக்குச் சாகித்திய அகாடெமி பரிசு வாங்கிக் கொடுத்த ‘ஒரு கிராமத்து நதி’ என்ற கவிதைத் தொகுப்பாகும். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தன்னுடைய ‘சூரிய நிழல்’ என்ற கவிதையில், யாருடைய நிழல் நான்? என்று மூலத்தை நோக்கி வினாக்களோடு புறப்பட்டவர், ஒரு கிராமத்து நதியிலும் இந்த வினாக்களைக் தொடர்கிறார். தன் ஆத்துப் பொள்ளாச்சியில் ஓடும் நதியை யமுனையாகவம், கங்கையாகவும், காவிரியாகவும், தாய்ப் பாலாகவும் காணுகின்ற கவிஞர் இப்படி வினாக்களைக் கேட்கிறார். எங்கிருந்து வருகிறது இந்த நதி! மலைகளின் மௌனம் உடைந்தா? முகில்களின் ஆடை கிழிந்தா? வனங்கள் பேசிய இரகசிங்கள் கசிந்தா? என்று கேட்பவர் விடையும் காணுகிறார். என்னிலிருந்து… என் அந்தரங்கங்களின் ஊற்றுக்கண் திறந்து என் மார்புகள் புல்லரித்து என் ரத்தக் குழாய்களில் புல்லும் பூவும் மணந்து என்னை முழுக்காட்டி என்னையே கரைத்துக் கொண்டு… அங்கிருந்து வருகிறது இந்த நதி. ஒரு கிராமத்து நதி என்ற இந்தத் தொகுப்பு, நம்முடைய காற்றும் நீரும் இயற்கை வளமும் நம்மைப் பெற்றெடுத்த மண்ணும் சூறைபோய் கொண்டிருக்கிற நுகர்வு பண்பாட்டை தூக்கிப் பிடிக்கும் உலகமயமாதல் சூழலில் இயற்கைக்குத் திரும்பு, நம்முடைய மண்ணைக் காப்பாற்று, நம்முடைய மனிதர்களை, நம்முடைய பண்பாட்டை விட்டுவிடாதே என நமக்குள் இருந்து புறப்பட்டு வரும் ஆதிகாலத் தொன்ம மனத்தின் குரலாக எனக்குப் படுகிறது. கவிஞர் சிற்பி தன் கவிதைச் செயல்பாடு குறித்து இவ்வாறு ஓர் இடத்தில் பதிவு செய்கிறார். சுருக்கமாகச் சொன்னால் இக்கால மனிதனின் சிக்கலைப் புரிந்து கொள்ளும் இடையறாத முயற்சியே என் கவிதை. என்கிறார். இக்கால மனிதப் பிரச்சினைகளோடு பிரச்சினைகளாகத் தன் கவிதைகளை இடையறாமல் எழுதி வந்திருக்கிறார் என்பது உண்மைதான். அவரின் பேருள்ளம் பெரிதுதான். ஆனாலும் என்னுடைய அவதானிப்பு ஒன்றை இங்கே சொல்லத் தோன்றுகிறது. பாரதியார்தான் என் குரு; பாரதிதாசன் மேல் உள்ள ஈர்ப்பு ‘பிள்ளைக் காதல்’ போன்றது என்கிறார். ஆனால் படைப்புத் தளத்தில் பார்த்தால் குருவைவிடப் பாரதிதாசனைத்தான் அதிகம் பின்பற்றியுள்ளனர். எப்படியென்றால் பாரதிதாசனைப் போலவே தன் ‘சூழல்’ குறித்துச் சிந்தித்த சிந்தனைகளைத்தான் பெரிதும் கவிதையாக்கியுள்ளார். பாரதியார் போல ஆன்மீகம், அக உலகமெனப் பயணிக்கத் தொடங்கி விட்டாலும், அகத்திலும் புறத்திலும் ‘சூழல்’ தன் மேலும், தன் வாழ்க்கை மேலும் நிகழ்த்திய கொடூரங்களை, அதர்மங்களை, அனுபவங்களை இவர் கவிதையாக்க முயலவில்லை எனப்படுகிறது. இப்படி இருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது. இருவரும் நிரந்தர வருமானம் தரும் ஆசிரியத் தொழில் என்கிற எல்லைக்குள் வாழ்ந்தவர்கள். ஆனாலும் முன்பே சொன்னது போல அந்தச் சூழலையும் வென்று கவிதை ஊற்றுக்கே அடிப்படை ஆதாரமாக இருக்கும் “அறச்சீற்றம்” கொண்ட மாமனிதராகச் சிற்பி தன்னையும் தன் கவிதைகளையும் மேன்மை நிலைக்கு உயர்த்திக் கொண்டார் என்பதில் ஒரு சிறிதும் ஐயமில்லை. பயன்பட்ட நூல்கள் 1. சிற்பி, சிற்பியின் கவிதை வானம், (1996), மணிவாசகர் நூலகம், சிதம்பரம். 2. சிற்பி, சிற்பியின் கட்டுரைகள், (1996), மணிவாசகர் நூலகம், சிதம்பரம். 3. சிற்பி, ஒரு கிராமத்து நதி, (1998), கோலம் வெளியீடு, பொள்ளாச்சி. 4. சிற்பி, பூஜ்யங்களின் சங்கிலி, (1999), கோலம் வெளியீடு, பொள்ளாச்சி. 5. சிற்பி, பாரதி கைதி எண் 253 (2001), அகரம் வெளியீடு, தஞ்சாவூர். 6. சந்திரசேகரன்.இரா. கவிஞர் சிற்பி: கவிதை வெளி: சூரியப்பறத்தல், (2004) பாரதியார் இல்லம், கோவை. 7. பெரியசாமி.தி முதலியோர் (தொ) பனிமலர் நெஞ்சம், (1996) கோணக்காடு, சேலம். 8. ரவீந்திரன் சி.ஆர். கோபுரத்தில் ஒரு குயில், (1996), கோலம் வெளியீடு, பொள்ளாச்சி. சிற்பியின் ‘ஒரு கிராமத்து நதி’ - ஒரு பார்வை புறநானூறு, ‘எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்ல வாழிய நிலனே’ என்று மனிதனின் வாழ்வில் மண்ணின் மைந்தர்களின் தாக்கத்தை எடுத்துக்காட்டுகின்றது. மண்ணுக்கும் அம்மண்ணில் பிறந்த மனிதனுக்கம் உள்ள தொடர்பு, உடலுக்கும் உயிருக்கும் இருக்கின்ற தொடர்பைப் போன்றது. இத்தகய தொடர்பின் தாக்கத்தால் உருவான கவிதைத் தொகுப்பே சிற்பியின் ‘ஒரு கிராமத்து நதி’ யாகும். இந்த பிறந்த மண்சார்ந்த படைப்புச் சிறப்பிற்காகவே இந்நூல் 2003-ல் சாகித்ய அகாடமி விடுதலைப் பெற்றது என்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. பாலக்காட்டுக் கணவரியன் தெற்குத் தாழ்வாரத்தில் அமைந்த ஆத்துப் பொள்ளாச்சி கிராமம் சிற்பியின் பிற்நத மண்ணாகும். சுpற்பி, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் எத்தகைய அகப்புற மாசுகள் படியாத சூழலில், தன் வாழ்வு அரங்கேறிய ஊரை – ஊரை வாழ்வித்த நதியை – வளம் சேர்த் இயற்கையை – சரித்திரச் சுவடுகளை – தன் மனதில் பதிவான அம்மண்ணின் மைந்தர்களை மண்ணியப் பற்றோடு பதிவுசெய்கிறார். இப்பதிவை, மானிடவியல் பார்வையில் ஆராயும்வகையில் இக்கட்டுரை அமைகின்றது. நதியை நேசித்தல் சிற்பி தன் கிராமத்தைச் சார்ந்து ஓடிய நதியை அதன் தொப்புள் கொடியாகப்பார்க்கின்றார். தனக்கும், அந்நதிக்கும் இடையிலான தொடர்பை அவர், “தானும் உணவாகி மீனும் உணவாகி இந்த நதிக்கு நானும் உணவானேன்” (ஒ.கி.ந.ப.6) என்று விளக்கிக் காட்டுகின்றார். நதிகளின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தக்கூடாது. அதனுடைய இயற்கையான ஓட்டம் மானுடத்திற்குத் தடையின்றிச் சொந்தமாக வேண்டும் என்று சிற்பி விரும்புகின்றார். அணைகளின் நீர்த்தேக்கம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பயனைத் தருகின்றது. இந்தத் தேக்கத்தைக் கூட சிற்பி விரும்பாத தன்மையை, “அணைகளை உடையுங்கள் ஆறுகள் பாடட்டும்” (ஒ.கி.ந.ப.7) ஏன்று சொல்கிறார். இயற்கையை நேசிக்கும் சிற்பி தன் கிராமத்து நதியையும் தாயாக நேசிக்கிறார். தன் கிராமத்தை வளத்தோடு வாழவைக்கும் நதியுடன், தானும் சங்கமம் ஆகத்துடிக்கும் தவிப்பை, “இது என் உதிரத்தின் உப்பு இது என் தாய்ப்பால்”(ஒ.கி.ந.ப.10) என்ற வரிகள் தெரியபடுத்துகின்றன. நதிக்கும் தனக்கும் உள்ள தொடர்பை, நதிப்படுகை’, தாய்வீடு’, கோரைப்பாய்’, வீணை’, பள்ளியறை’, துயரங்களின் வடிகால், சந்தோஷத்தின் சங்கமம்’ என்று பட்டியலிட்டுத் தருகின்றார். பூமித்தாயின் மாராப்பாகத் திகழும் அந்நதியே ஆத்துப் பொள்ளாச்சியின் வாழ்வுக்கும், வளத்திற்கும் அடிப்படை என்பதை, “ஆடிஆடி நகரும் நடனக்கார நதி இல்லாவிட்டால் சபிக்கப்பட்ட இந்தக்கிராமதத்தை யார் சீண்டுவார்கள்?” (ஒ.கி.ந.ப.12) என்று கூறவதில், சிற்பி நதிக்குத் தரும் மரியாதையைக் காணமுடிகின்றது. இயற்கையை நேசித்தல் : சிற்பி, தன் கிராமத்தில் மக்களுக்கு நிழல்தரும் அத்திமரத்தை ஊர்காக்கும் காவலனாகப் பார்க்கின்றார். அம்மரத்தின் சிறப்பை, “அந்த அத்திமரமும் கெத்து கெத்தென்று ஆற்றங்கரைக் கொரு நிரந்தரக் காவலனாக” (ஒ.கி.ந.ப.18) நிற்கின்றது என்று பெருமிதத்துடன் குறிப்பிடுகின்றார். அந்த அத்திமரம் இன்று வெட்டப்பட்டு அந்த ஞாபகம் மட்டும் எஞ்சி இருப்பதை, “நாற்பது இலையுதிர்காலம் கடந்து போனபின் ஆற்றங்கரை யோரம் காவல் இருந்தது ஒரு ஞாபகம் மட்டும்” (ஒ.கி.ந.ப.19) என்று தாயாகக் காவலானாக, அம்மாவின் முத்தம் போல் குளிர்ச்சி தந்த மரம் இன்றில்லை என்பதை ஆதங்கத்துடன் புலப்படுத்தகின்றார். காற்றை நேசித்தல் சிற்பி, மாசு சூழ்ந்த இந்த இயந்திரச்சூழலில் மனதைச் சுகமாகத் தாலாட்ட சுத்தமானக் காற்றைச் சுமந்துவர நதியை அழைக்கின்றார். மலையாளக் காற்று தேக்குமரக் காடுகளில் பாய்ந்து, தென்னை மரங்களைத் தடவி, மிளகுக் கொடிகளை வருடி, தாழம் மடல்களை அசைத்து, “இளங்காலைப் பொழுதில் தெருவே மனக்கவரும் பூக்காரி போல் வாசனை நடை போட்டு வா” (ஒ.கி.ந.ப.40) என்று அழைக்கின்றார். மண்ணின் மைந்தர்களை நேசித்தல் சிற்பி, தன் கிராமத்து மக்களின் எளிய வாழ்வு, களங்கமற்ற பேச்சு, இயல்பான அணுகுமுறை, தொடர்புடைய நிகழ்வுகள் ஆகியவற்றைப் பிறந்த மண்ணின் மேல் கொண்ட ஆசையின் தாகத்தோடு அசைபோடுவதைக் கவிதைகள் புலப்படுத்துகின்றன. சிற்பி, இன்றைய முதலாளித்துவச் சமுதாயத்தில் தீவுகளாக வாழ்கின்ற நகரியசூழலை ஒருபுறம் ஒதுக்கிவைத்து, தன் கிராம மக்கள், நின்று பேசி சாவகாசமாய் வாழும் போக்கைச்சுட்டிக்காட்டுகின்றார். ஊரையே உறவாக நேசிக்கும் மாமனிதர் பாட்டைய்யா, கதை எடுக்காத பீமனான ஊமையன்: இளம்பருவத்தோழன் ஆறுமுகம்: ஓருக்கெல்லாம் உதவும் அங்கம்மா: ஆண்டுதோறும் தன் தலைமையில் தெருக்கூத்தை அரங்கேற்றும் மயில்சாமிக் கவுண்டர்: பெரியவர் முதல் சிறுவர் வரை அனைவருக்கும் பிரியமான மாப்பிள்ளைக் கவுண்டர்: ஆட்டுக்கல் கொத்தும் பறவை பழனியப்பன்: ஆசாரி தங்கப்பன்: ஊருக்கெல்லாம் மருத்துவம் பார்க்கும் வெள்ளைச்சாமியார் என்று அக்கிராமத்தில் பாரம்பரியப் பண்பாட்டுச் சின்னங்களாக உலாவந்த மக்களை அவர்தம் செயற்பாட்டுப் பிண்ணனியோடு சிற்பி சித்தரிக்கின்றார். சிற்பி, அம்மக்களுள் தன் தாயைப் தனியே பிரித்துப்பார்க்கிறார். தன் குடும்பத்தைப் போலவே ஊர்மக்களையும நேசித்துவாழ்ந்த தன் தாயைப்பற்றி அவர், “நேசிப்பு நேசிப்பு புருஷனைப் போலவே பண்ணையத்தையும் குழந்தைகள் போலவே எருமைகளையும் உறவுகளைப் போலவே அக்கம் பக்கத்தையும்..” (ஒ.கி.ந. ப.29) நேசித்த, அழித்து எழுதமுடியாத சித்திரம் போன்றவள் என்று பெருமைப் படுத்துகின்றார். விழாக்களை நினைவு கூர்தல் சிற்பி கிராமதேவதையான மாகாளி அம்மனுக்கு எடுக்கப்படும் பண்டிகையைக் குறிப்பிடுகின்றார். மக்கள், மழைபெய்யத் தவறும் காலங்களில் அம்மனுக்கும், விநாயருக்கும் மழை வேண்டி விழா எடுப்பார். விழா எடுத்தவிதத்தைச் சிற்பி, “மாகாளி கோயில் முன் கொடும்பாவி எரித்தனர் மழைக்கஞ்சி காய்ச்சி மக்கள் எல்லாம் குடித்தனர் ……. விநாயகருக்குக் குடம் குடமாய் நீராபிஷேகம் செய்தனர்” (ஒ.கி.ந.பக.86-87) என்று விளக்குகிறார். சரித்திரச் சுவடுகள் சிற்பி, தன் கிராமத்தின் சரித்திரச் சுவடுகளைப் பற்றிப் பெருமிதத்துடன் பகிர்ந்து கொள்கிறார். ஆற்றுப்படுகைகளில் கிடைத்த சங்ககால காசுக்கள், திகம்பரச் சமணர் கற்படுக்கைகள், தீர்த்தங்கள் சிலைகள் என்று சரித்திரச் சின்னங்களை அவர் பட்டியலிட்டுத் தருகின்றார். (ஒ.கி.ந.பக.58-59) பறைச்சிற்பங்கள் சிற்பி, நதியோரம் கிடந்த பாறைகள் மேல் நதியின் நீரோட்டம் ஏற்படுத்திய இயற்கைச் சிற்பங்களை ரசத்து எழுதுகின்றார். அப்பாறைச் சிற்பங்களை, மைக்கேல் ஏஞ்சலோக்கனின் கர்வத்தை அடக்கும் சிற்பக் கலைக்கூடம் (ஒ.கி.ந.ப.22) என்று மகிழ்ச்சியுடன் வருணிக்கிறார். நிறைவாக சிற்பியின் ஒவ்வொரு கவிதையிலும் தான் பிறந்த மண்சார்புடைய அனுபவம், பாதிப்பு தாக்கம், நேசிப்பு ஆகியவை அழுத்தமான முத்திரையாக் பதித்துள்ள்மையைக் காணமுடிகின்றது. சிற்பி, நிகழ்வுகளை, செய்திகளை வெறும் கவிதைப்பதிவுகளாகத் தராமல், அவற்றை தன் உயிருடன், நாடிநரம்புகளுடன் தொடர்புகொண்ட உயிர்ப்புடன் வெளிப்புடுத்துகின்றார். இன்று, இயந்திரக்கதியில் இயங்கும் மக்கட்கூட்டம், தனித்தனித் தீவுகளாக அந்நியப்பட்டு வாழ்ந்துவருகின்றது. இச்சூழலில், இந்த இருத்தல் மாற வோண்டும். ஒவ்வொருவரும் தாம் பிறந்த மண்ணை நேசிக்க வேண்டும்: அம்மண்ணின் மக்களோடு உறவுகொண்டு வாழவேண்டும் என்ற சிற்பியின் ஆதங்கத்தை- எதிர்ப்பார்ப்பை அவருடைய ஒரு கிராமத்து நதி’ அறிவுறுத்தகின்றது. இந்த அறிவுறுத்தைல வழிமொழிந்து கட்டுரை நிறைவடைகின்றது. முதன்மைச்சான்று நூல் சிற்பி, ஒரு கிராமத்து நதி, கோலம் வெளியீடு, பொள்ளாச்சி, முதல்பதிப்பு, டிசம்பர் 1998 சுருக்க விளக்கம் 1. ஓ.கி.ந. ஒரு கிராமத்து நதி 2. ப. பக்கம் 3. பக். பக்கங்கள்

No comments:

Post a Comment