Monday, February 22, 2021

கவிஞர் மீரா

எழுத்தாளர்களின் வேடந்தாங்கல்...! கவிஞர் மீராவின் நினைவலைகள் "கனவுகள்+கற்பனைகள்= காகிதங்கள்." வாசிக்கும் பழக்கமுள்ள யாரிடமும் இந்த வரிகளை சொன்னால் படக்கெந்து அவர்களுக்கு கவிஞர் மீராவின் ஞாபகம் வந்துவிடும். தீக்குச்சியை கொளுத்தி போட்டதுபோன்ற எழுத்துக்களால் சமுதாய அழுக்கை எரிப்பதற்காக 1970 - 80 கால கட்டங்களில் கொளுத்தி போட்டவர். பல புதிய கவிஞர்களுக்கு மெழுகுவர்த்தியாய் வாழ்ந்தவர். அவர் வாழ்ந்த காலம் வரை சிவகங்கையை கவிதை கங்கையால் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். அவர் குறைவான புத்தகங்கள் எழுதியிருந்தாலும், அனைத்தும் நிறைவானவை. ஆனால், அவர் நடத்திய அகரம் அச்சகம், அவர் உடலின் இரத்த ஓட்டம் போல் எப்போதும் ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும், தங்கள் படைப்புகளை புத்தகம் போட வசதியற்ற சக தோழர்களுக்காக அச்சகம் ஓடிக் கொண்டிருக்கும்.அன்னம் பதிப்பத்தை அவருக்காக நடத்தவில்லை. பாரதி விட்டு சென்ற புதுக்கவிதை தேரை, பலரும் இழுத்த போதிலும், அதை சிவகங்கை கருவைக்காட்டுக்குள்ளும், கண்மாய்க்குள்ளும் முடிந்த வரை இழுத்து கொண்டு வந்தவர். கவிஞர் மீராவை இன்றைய தலைமுறைக்கு அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். ஆனால் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவர். அதற்கு காரணம் அவருடைய கவிதைகள், கட்டுரைகள். எக்காலத்துக்கும் புரியும், படித்தால் அறிவு விரியும். அப்படிப்பட்ட அற்புதமான கவிஞர் மீராவின் நினைவு தினம் இன்று. மீரா என்ற மீ. ராசேந்திரன், 1938 ஆம் ஆண்டு சிவகங்கையில் பிறந்தவர், சிவன் கோயில் தெருவில் வளர்ந்தவர். இவருடைய பெற்றோர்கள் பர்மாவில் தொழில் செய்துவிட்டு சொந்த ஊரில் குடியேறியவர்கள். சிவகங்கைக் கல்லூரியில் படித்து அங்கேயே பேராசிரியராகவும் பணியாற்றி முதல்வர் பொறுப்பு வரைக்கும் வகித்து ஓய்வு பெற்றவர். ஆரம்பத்தில் திராவிட இயக்க கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, பின் பொதுவுடமைக்காராக மாறிப்போனார். சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரியில் இவர் பேராசிரியராக பணி செய்தார். கல்லூரிப்பணி, சமூகப்பணி, ஆசிரியர் இயக்க பணி இவைகளுடன் இலக்கிய பணியையும் மிகவும் விரும்பி செய்தார். இராசேந்திரன் கவிதைகள், மூன்றும் ஆறும், கோடையும் வசந்தமும், ஊசிகள், கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் , குக்கூ, வா இந்தப் பக்கம், மீரா கட்டுரைகள், பாரதியம், சுயம்வரம் போன்ற நூல்களை அவர் எழுதியுள்ளார். இதில் ஊசிகள், கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் ஆகிய கவிதை நூல்கள் இலக்கிய வெளியில் மட்டுமல்ல, பொதுவெளியிலும் மிக பரவலாக பேசப்பட்டது. இளைஞர்கள் கொண்டாடும் நூல்களாக அந்த காலகட்டத்தில் இவை இருந்தது. கந்தக பூமியான சிவகங்கையில், கவிதை சந்தனமாக திகழ்ந்தார் மீரா. அந்த காலகட்டத்தில் பிரபலமான கவிஞர்களும், எழுத்தாளர்களும் சிவகங்கைக்கு படையெடுத்து வந்தனர். மாதம்தோறும் மீரா வீட்டு வாசலில் கவி இரவு நடைபெறும். அதை பார்க்க ஊர் சனமெல்லாம் வெட்டலில் கூடும். வறுமைக்கு வாக்கப்பட்ட தன் மண்ணின் மக்களை, இலக்கிய செழுமையாக்க இதுபோன்ற இலக்கிய நிகழ்வுகளை நடத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார் கவிஞர் மீரா. கவிக்கோ அப்துல்ரகுமானும், சிற்பி, கா.காளிமுத்தும், பேரா.நா.தர்மராஜனும் மிகவும் நெருக்கமான நண்பர்களாக இருந்தனர். கல்லூரி பேராசிரியர் உரிமைகளுக்காக தீவிரமாக செயலாற்றி வரும் 'மூட்டாவை' அன்று உருவாக்கியவர்களில் முக்கியமானவர் மீரா. சமூக அவலங்களையும் சுட்டிக்காட்ட, கண்டிக்க அவர் தவறவில்லை. மீராவின் ‘ஊசிகள்’ நூல் அன்றைய தமிழகத்தின் அரசியல், சமூக வாழ்க்கையின் சிக்கல்களை, சிறுமைகளை, கொடுமைகளை அழகியலோடும் கடுமையாக சாடும் எள்ளல் வரிகளோடும் வெளியானது. எங்கள் ஊர் எம்.எல்.ஏ ஏழு மாதத்தில் எட்டுத் தடவை கட்சி மாறினார் மின்னல் வேகம் என்ன வேகம்? இன்னும் எழுபது கட்சி இருந்தால் இன்னும் வேகம் காட்டி இருப்பார்..... என்ன தேசம் இந்தத் தேசம்? இது போன்று அரசியல் சமூக வாழ்வின் சிக்கலை தனது கவிதையில் சுட்டிக்காட்டி வந்தார் கவிஞர் மீரா. அதேபோல் ஜப்பானிய ஹைக்கூ கவிதை வடிவத்தை கொஞ்சம் மாற்றி 'குக்கூ' என்று எழுதினார். மோசமான அரசியல் பண்பாட்டை, சாதி பெருமிதத்தை, சமூக அவலங்களை என எதையும் அவர் கண்டிக்க தவறவில்லை. "செத்த பிணத்தைக் கட்டி அழலாம் முடிந்தால் காட்டி அள்ளலாம்..." இது போன்ற கவிதைகளில், மோசமான அரசியல் பண்பாட்டை விமரித்தவர், படித்தவர்கள், முற்போக்காளர்கள் மத்தியிலும் சுயசாதி பெருமிதம் பின்னிக்கிடப்பதையும் தனது கவிதைகளில் எள்ளல் நடையில் விமர்சித்திருந்தார். உனக்கும் எனக்கும் ஒரே ஊர் - வாசுதேவ நல்லூர் ... நீயும் நானும் ஒரே மதம்... திருநெல்வேலிச் சைவப் பிள்ளைமார் வகுப்பும் கூட,.. உன்றன் தந்தையும் என்றன் தந்தையும் சொந்தக்காரர்கள்... மைத்துனன்மார்கள். எனவே செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே. (நூல்- ஊசிகள். ) தந்தை பெரியாரி ன் சுயமரியாதை இயக்க தாக்கம், அறிஞர் அண்ணா தந்த தமிழ்மொழிக் காதல், மார்க்சின் பொதுவுடைமைச் சித்தாந்தங்கள் ஆகியவற்றை உள்வாங்கிக்கொண்ட கலவையாகத்தான் கவிஞர் மீரா திகழ்ந்தார். அதன் வெளிப்பாடாகவே அவருடைய கவிதைகளும், கட்டுரைகளும் இருந்தன. அன்னம் விடு தூது என்ற சிற்றிதழையும் நடத்திக் கொண்டிருந்தார். அது ஒரு மாறு்பட்ட இதழாக அப்போது வந்து கொண்டிருந்தது. சிவகங்கை சீமைக்கு விடுதலை போராட்டத்துடன் தொடர்புடைய வரலாற்று பெருமை இருந்தாலும் அதன் இலக்கிய பெருமை மீராதான். இவ்வளவு பெருமை வாய்ந்த மீரா, 2002 ஆம் ஆண்டு இதே நாளில் மறைந்தார். ஆனால் அவரை நினைவுபடுத்த எந்த முயற்சியும் அரசு செய்யவில்லை. அவர் பேரை சொல்லும் வகையில் சிவகங்கையில் ஒரு தெருவுக்கு கூட அவர் பெயர் இல்லை. ஆண்டு தோறும் மீராவின் நினைவு தினத்தை சிவகங்கை மக்களுக்கு நினைவூட்டி வரும் ஆசிரியர் இளங்கோ நம்மிடம் பேசினார். "கவிஞர் மீரா மறைவுக்கு வந்த கவிஞர்கள் நடத்திய இரங்கற்கூட்டத்தில் கவிக்கோ அப்துல்ரகுமான், கவிஞர்கள் மறைந்துவிட்டால் மக்களும் மறந்து விடுகிறார்கள். மக்களும், சக கவிஞர்களும் ஆண்டுதோறும் அவருக்கு மரியாதை செய்ய ஒரு நினைவிடம் சிவகங்கையில் கட்டப்பட வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்தார். அப்போது இருந்த அரசியல் தலைவர்கள் அதை செய்வதாக சொன்னார்கள். ஆனால் அது அப்படியே விட்டுப்போனது. சிவகங்கைக்கு பெருமை சேர்த்தவர் மீரா. அவர் பெயரில் தெருவுக்கு கூட பேரில்லை என்பது தான் வேதனை. அவர் மனனர் துரைசிங்கம் கல்லூரியில் நீண்டகாலம் சிறப்பாக பணி புரிந்தவர். அதனால் அந்த கல்லூரிக்கு செல்லும் சாலைக்காவது அவர் பெயரை சூட்டலாம்" என்றார். தன் பதிப்பாக்கங்களால் மிகச்சிறந்த விருதுகள் பெற்ற படைப்பாளிகளை உருவாக்கி அற்புத படைப்பாளி கவிஞர் மீரா. எழுத்தாளர்களின் வேடந்தாங்கலாக திகழ்ந்தவர். அவரது நினைவை போற்றுவதும், அவர் புகழ் பரப்புவதும் நம் ஒவ்வொருவரின் கடமை. மீரா (கவிஞர்) மீரா என்ற மீ. ராசேந்திரன் 1938 ஆம் ஆண்டு சிவகங்கையில் பிறந்தவர். சிவகங்கைக் கல்லூரியில் படித்து அங்கேயே பேராசிரியராகவும் பணியாற்றியவர். பொருளடக்கம் [மறை] 1படைப்புகள் 1.1திறனாய்வு 1.2கவிதை 1.3கட்டுரைகள் 1.4முன்னுரைகள் 1.5கலந்துரையாடல் 1.6தொகுத்தவை 1.7நடத்திய இதழ்கள் 2சிறப்புகள் 3சான்றாவணங்கள் படைப்புகள்[தொகு] திறனாய்வு[தொகு] மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு கவிதை[தொகு] மீ.இராசேந்திரன் கவிதைகள் மூன்றும் ஆறும் மன்னர் நினைவில் கனவுகள்+கற்பனைகள்= காகிதங்கள் ஊசிகள் கோடையும் வசந்தமும் குக்கூ கட்டுரைகள்[தொகு] வா இந்தப் பக்கம் எதிர்காலத் தமிழ்க்கவிதை மீரா கட்டுரைகள் முன்னுரைகள்[தொகு] முகவரிகள் கலந்துரையாடல்[தொகு] கவிதை ஒரு கலந்துரையாடல் - மீராவும் பாலாவும் தொகுத்தவை[தொகு] தேன்சுவை (மீரா, அப்துல்ரகுமான் உள்ளிட்டவர்களின் மரபுக் கவிதைகள்) பாரதியம் (கவிதைகள்) பாரதியம் (கட்டுரைகள்) சுயம்வரம் (கதை, கட்டுரை, கவிதை ஆகியவற்றின் கதம்பம்) நடத்திய இதழ்கள்[தொகு] அன்னம் விடு தூது கவி சிறப்புகள்[தொகு] தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு பாவேந்தர் விருது சிற்பி இலக்கிய விருது தமிழ்ச் சான்றோர் பேரவை விருது சான்றாவணங்கள்[தொகு] தமிழகம்.வலை தளத்தில், கவிஞர் மீரா எழுதிய நூல்கள் 6.3 மீரா தமிழ்க் கவிஞர்களுள் பாரதியைப்போல் சமூகப் போராளிகளாகவும் திகழ்ந்தவர்கள் மிகச் சிலர். அவர்களுள் ஒருவர் கவிஞர் மீரா. நடையில் எளிமை, கருத்தில் வலிமை, தமிழ்க் கவிதை மரபில் பழுத்த புலமை, சொல்லுக்குச் சொல் புதுமை, அங்கதம் என்னும் குறும்பு குதிக்கும் தமிழ்நடை, ஆனால் எவரையும் புண்படுத்தாத பண்பாட்டு வரையறை! ஒருவகையில் ஈழத்து மஹாகவியுடன் மீராவை ஒப்பிடலாம். ஆனால் மீரா சிலவகைகளில் வேறுபட்டுத் தனித்து நிற்கிறார். சாதனையாளர் மரபிலும், வசன கவிதையிலும், புதுக்கவிதையிலும் சாதனைகள் செய்தவர். சிறந்த உரைநடை எழுதியவர். முன்னணிப் பதிப்பாசிரியராக இருந்து பல இளம் படைப்பாளிகளைத் தமிழ் உலகிற்கு அறிமுகம் செய்தவர். இலக்கிய இதழ்களின் ஆசிரியர். ஆசிரியர் சங்கம் மற்றும் உழைக்கும் மக்களின் சங்கத் தலைமைப் பொறுப்பில் இருந்து உரிமைப் போராட்டங்கள் நடத்தியவர். இப்படிப் பல சிறப்புகளுக்கு உரியவர் மீரா. பிறப்பு தமிழ்நாட்டின் இராமநாதபுரம் (இப்போது சிவகங்கை) மாவட்டத்தில் உள்ள சிவகங்கையில் 10-10-1938-இல் பிறந்தார். பெற்றோர்: மீனாட்சி சுந்தரம் - இலட்சுமி அம்மாள். இளம்பருவத்தில் பர்மாவில் (மியான்மர்) வளர்ந்தார். கல்வி மதுரைத் தியாகராசர் கல்லூரியில் தமிழ் இலக்கிய முதுகலைப் பட்டம் பெற்றார். கவிஞர் அப்துல் ரகுமான் இவரது வகுப்புத் தோழர். கவிதை நண்பர். பணி 1962 முதல் சிவகங்கை மன்னர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி தொடங்கினார். முதல்வர் பொறுப்பு வரை உயர்ந்து ஓய்வு பெற்றார். ஈடுபாடு தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தந்த பகுத்தறிவு; அறிஞர் அண்ணாவின் இயக்கம் தந்த தமிழ்மொழிக் காதல்; அறிஞர் காரல் மார்க்சின் பொதுவுடைமைச் சித்தாந்தம் இவை மூன்றின் சங்கமம் கவிஞர் மீரா. படைப்புகள் மீ. ராசேந்திரன் என்ற பெயர் கவிதைக்காக மீரா ஆனது.இராசேந்திரன் கவிதைகள் (1965), மூன்றும் ஆறும் (1967), கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் (1971), ஊசிகள் (1974), கோடையும் வசந்தமும்(2002), குக்கூ (2002) ஆகியவை இவரது கவிதை நூல்கள். பல உரைநடை நூல்களும் படைத்துள்ளார். குறிப்பிடத்தக்கது வா இந்தப் பக்கம். விருதுகள் சிற்பி கவிதை விருது, கவிக்கோ விருது முதலிய பல விருதுகள் பெற்றார். 1-9-2002-இல் மறைந்தார். 6.3.1 குறும்பாக்கள் மீராவையும் லிமரிக் கவிதை கவர்ந்தது. ஆனால் அந்த வடிவத்தை விட்டுவிட்டு உள்ளடக்கத்தை மட்டும் உள்வாங்கித் தமிழில் எழுதினார். அதனால் இவருடைய ஊசிகள் - நூல் மீராவின் தனித்தன்மை கொண்ட புதுக் குறும்பாத் தொகுப்பாக ஒளி வீசுகிறது. குக்கூ ஹைக்கூ என்னும் ஜப்பானியக் கவிதை வடிவத்தை அப்படியே தமிழில் பின்பற்ற முயன்று பலர் எழுதியுள்ளனர். மீரா அதிலும் வடிவத்தைப் பின்பற்றாமல், தம் தனித்தன்மையுடன் எழுதிக் குக்கூ என்ற நூலைப் படைத்தார், இந்தக் கவிதைகளில் பல ‘லிமரிக்’ தன்மையுடன் குறும்பாக்களாக அமைந்துள்ளன. அதாவது லிமரிக்குக்கோ, ஹைக்கூவுக்கோ மிக நெருங்கிப் போகாமல் தனித்தன்மையுடன் உள்ளன. நகைச்சுவை நடை, விமரிசனச் சொடுக்கு, சிந்தனை நறுக்கு இவற்றால் மீராவின் குறும்பாக்களாகவே விளங்குகின்றன. இவற்றைப் பற்றி இப்பகுதியில் பார்க்கலாம். 6.3.2 கவிதைக்கலை மீராவின் ‘ஊசிகள்’ அன்றைய தமிழகத்தின் அரசியல், சமூக வாழ்க்கையின் சிறுமைகளை அழகியலோடு சாடும் (கடுமையாய் விமர்சனம் செய்யும்) அங்கதப் பாக்களால் ஆனது. புதுக்கவிதை வடிவக் குறும்பாத் தொகுதி இது. சுயநல அரசியல் பணத்துக்காக, பதவிகளுக்காகக் கட்சிவிட்டுக் கட்சி மாறினர் கீழ்த்தர அரசியல்வாதிகள். இவர்களால் பொதுவாழ்க்கை தரம் தாழ்ந்து போனது. இதைக் குத்திக் காட்டும் ‘வேகம்’ - ஒரு தரமான எள்ளல் கவிதை. எங்கள் ஊர் எம்.எல்.ஏ ஏழு மாதத்தில் எட்டுத் தடவை கட்சி மாறினார் மின்னல் வேகம் என்ன வேகம்? இன்னும் எழுபது கட்சி இருந்தால் இன்னும் வேகம் காட்டி இருப்பார்..... என்ன தேசம் இந்தத் தேசம்? (ஊசிகள், பக்கம், 13) (எம்.எல்.ஏ = சட்டப் பேரவை உறுப்பினர்) ‘வேகம்’ என்ற தலைப்பு இகழ்ச்சித் தொனியுடன் அமைந்து உள்ளது. கட்சி மாறுவதில் காட்டிய வேகத்தைத் தன்னைத் தேர்ந்து எடுத்த மக்களுக்குத் தொண்டு செய்வதில் காட்டவில்லை என்று குறிப்பாக இகழ்கிறது. இன்னும் பல கட்சிகளுக்குத் தாவி இருப்பார். அவரது ‘வேகத்துக்கு' ஈடு கொடுக்க இங்குக் கட்சிகள்தாம் போதவில்லையாம் ! என்ன கிண்டல் பாருங்கள் ! போலியான மொழிப்பற்று “ஜாதி வேண்டும்” என்று சாஸ்திரி சொல்கிறார். தமிழ்ப் பற்றாளர் ஒருவர் “சாதி வேண்டும்” என்று சரியாய்ச் சொல்லும்படி திருத்துகிறார். ‘தமிழ்ப்பற்று’ என்னும் குறும்பா காட்டும் காட்சி இது. (ஊசிகள்: பக்.14) ‘தமிழ்ப் பற்று எப்படி இருக்கிறது? ‘ஜாதி’ கூடாது; ஆனாலும் ‘சாதி’ இருக்கலாம் என்று சொல்கிறது. மொழி, இன ஒற்றுமை பற்றி மேடையில் முழங்குபவன், பிரிவினை வளர்க்கும் சாதிப்பற்றை விடாமல் இறுகப் பிடித்துக் கொண்டிருக்கிறான். எழுத்தை மட்டும் திருத்தினால் போதுமா? செயல் திருந்த வேண்டாமா? ‘பேச்சில் சீர்திருத்தம், செயலில் பிற்போக்கு’ இந்த இரண்டு நிலைப்பாட்டைச் சுட்டுகிறார். கேலி மொழியால் சுடுகிறார். கணக்குப் பார்த்த காதல் தாய்வழி, தந்தைவழி, முன் அறிமுகம் எந்த வகையிலும் உறவினராய் இல்லாத இருவர் கண்டனர். காதல் பிறந்தது, செம்புலப் பெயல் நீர் போல (உழுது பண்படுத்திய நிலத்தில் பெய்த மழைநீர் போல) அன்புடைய நெஞ்சங்கள் தாமாகக் கலந்துவிட்டன. குறுந்தொகை காட்டும் - சங்க காலத்தின் - இயற்கையான காதல் இது. சாதி, சமய, வர்க்க பேதம் பார்க்காத உண்மையான காதல் ! மீரா தன் ‘குறும்புத்’ தொகையில் காட்டும் ‘நவயுகக் காதல்’- இக்காலக் காதல் - வேறு வகையானது. இது சாதி, மதம், உறவு முறை எல்லாம் ‘பார்த்து’ வருகிறது. உனக்கும் எனக்கும் ஒரே ஊர் - வாசுதேவ நல்லூர் ... நீயும் நானும் ஒரே மதம்... திருநெல்வேலிச் சைவப் பிள்ளைமார் வகுப்பும் கூட,.. உன்றன் தந்தையும் என்றன் தந்தையும் சொந்தக் காரர்கள்... மைத்துனன் மார்கள். எனவே செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே. (ஊசிகள், பக். 48) (வகுப்பு = சாதி) இவ்வாறு குத்தலாகச் சமூக இழிநிலைகள் மீது மின்னல் போல் பாய்வதுதான் மீராவின் குறும்பாக்களின் சிறப்பு. ‘ஊசிகள்’ என்ற தலைப்பு நூலுக்கு மிகவும் சிறப்பு. புற்றுநோய் போன்ற இந்தச் சமுதாயச் சீர்கேடுகளில் ‘ஊ’கதிர் ஊசிகள் போல் இவை பாய்ந்து - நோயை அழிக்கும் செயல் புரிகின்றன. 6.3.3 ‘குக்கூ’ குறும்பாக்கள் குக்கூ தொகுதியில் ஒருசில வரிகளில், சின்னப் பூக்கள்போல் மின்னும் அழகிய குறும்பாக்கள் பல படைத்துள்ளார் மீரா. சான்றாகச் சிலவற்றை மட்டும் காணலாம். உள்ளும் புறமும் மேலே மேலே பூக்கடை கீழே... சாக்கடை (குக்கூ : 41) (சாக்கடை = கழிவுநீர் வடிகால்) ஒரு நகரத்தின் கடைத் தெருவைக் காட்டும் கோட்டு ஓவியம் இது. இதுவே குறியீடாக மனிதனைக் குறிக்கும்போது- வெளியில் பார்த்தால் நல்லவன், உள்ளே நாற்றம் பிடித்தவன்; ஒழுக்கம், நேர்மை அற்றவன் என்று பொருள் தரும்.உலகத்தில் உள்ள பலதுறைகளுக்கும் பொருந்தும் கணிதக் குறியீடுபோல் அமைந்த சிறந்த குறும்பா இது. அனுதாப அரசியல் ஒரு சிறந்த குறும்பா. இது எம் நாட்டில் உள்ள அரசியல் சூழல் பற்றியது. மிக மோசமான ஆட்சியைச் செய்யும் ஒரு கட்சி அடுத்த தேர்தல் மூலம் அகற்றப்படலாம். ஆனால், அக்கட்சியின் தலைவர் ஒருவர் ‘திடீர்’ என இறந்துவிட்டால், எம்மக்கள் இரக்கப்பட்டு அக்கட்சிக்கே வாக்குகளை வாரி வழங்கி வெற்றியடையச் செய்து விடுவர். மீண்டும் ஆட்சியில் ஏற்றி வைத்துவிடுவர்.இந்த ‘அனுதாப அலை’ எம் நாட்டின் பரிதாப நிலை: செத்த பிணத்தைக் கட்டி அழலாம் முடிந்தால் காட்டி அள்ளலாம் (குக்கூ:91) கட்டி அழலாம். இந்தச் சொற்களை நீட்டி அழுத்தி, காட்டி அள்ளலாம் - ஒரு புதுமையான சொற் குறும்பு. புதுமையான பொருள் திருப்பம்:காட்டி அள்ளலாம்:வாக்குகளை; அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை; அதன்வழி, கோடி கோடியாய்ப் பணத்தை.... ‘முடிந்தால்’ - என்ற சொல்லில் அரசியல்வாதியால் எதுவும் முடியும் என்ற கொடிய நிலையைக் காட்டுகிறார். கும்பல் மனோபாவம் உலகத் தமிழ் மாநாடு மதுரையில் நடந்தது. கூடல் மா நகரில் அறிஞர் பலர் கூடித் தமிழ்மொழியில் ஆராய்ச்சிக் கட்டுரைகள், கருத்துரைகள் வழங்கினர். அவற்றைக் கேட்டுப் பயன் அடைய மக்கள் கூட்டம் கூடவில்லை. புகழ்பெற்ற திரை நடிகர்கள், அரசியல் தலைவர்களை வேடிக்கை பார்க்கக் கூடியது. அந்தக் கூட்டத்தை வேடிக்கை பார்க்கப் பெருங் கூட்டம் கூடியது. முத்துக்களைத் தேடாமல் நுரை அள்ளிப் போகும் ‘மேலோட்ட’ மனப்பக்குவமே பொதுவாக எம் மக்களிடம் உள்ளது. இதைக் கண்டு மீராவின் கவி உள்ளம் குமுறுகிறது. அவரது நகைச்சுவை உணர்வு வேதனையை, சிரிப்பூட்டும் குறும்பா ஆக வெளியிடுகிறது: கூடல் நகரில் கூட்டம் கூட்டம் கூட்டம் கூட்டம் கூட்டம் கூட்டம் கூட்டம் பார்க்க... (குக்கூ:1) நகரின் பெயரே கூடல். சங்கம் வைத்துத் தமிழ் ஆராய்ந்த நகரம். அங்கே ‘வேடிக்கை’ மனிதர்களின் கூட்டம். எங்குப் பார்த்தாலும் கூட்டம். பத்துச் சொற்கள் கொண்ட இக்குறும்பாவில் ஏழு இடத்தில் ‘கூட்டம்’ என்ற சொல்லே வந்துள்ளது. கண்முன் இந்தக் கூட்டத்தையே காட்டுகிறது. நெரிசலை உணர்த்தும் சொல் ஓவியமாய் நிற்கிறது. ஆங்கிலத்தில் இ.இ. கம்மிங்ஸ் (E.E.Cummings), ஜான் அப்டைக் (John Updike) போன்ற கவிஞர்கள் Concrete Poetry (கண்புலன் கவிதை) என்றொரு புதுமை வகையை அறிமுகப் படுத்தினர். தமிழில் சிறந்த கண்புலன் கவிதைக்கு இதுவே சான்று. நண்பர்களே! இவற்றைப் போன்ற மிக அழகான குறும்பாக்கள் ‘குக்கூ’வில் உள்ளன. இப்பாடப் பகுதியில் மீராவின் குறும்பாக்கள் சிலவற்றைக் கண்டோம். அவரது படைப்பு ஆக்கத் திறனையும் வாழ்வியல் பற்றிய கண்ணோட்டத்தையும் சில சான்றுகள் வழி அறிந்து கொண்டோம். காலங்களில் ‘அவர்' என் வசந்தம் கவிஞர்.மீராவின் மனைவி இரா.சுசீலாவிடம் ஒரு நேர்காணல்... தமிழ்மொழி, பொதுவுடமை, சமுதாய சீர்திருத்தம், தொழிலாளர் முன்னேற்றம் இவற்றில் பாரதி, பாரதிதாசனையொத்த எழுச்சிக் கவிஞர் தமிழுலகில் ‘மீரா' என்றறியப்படும் மீ. ராசேந்திரன்! பாவேந்தர் பாரதிதாசன் ... என் குரு! மகாகவி பாரதி... என் தெய்வம்! என்று தன் ‘மீரா கவிதைகள்' நூல் முன்னுரையில் குறிப்பிடும் இவர், கவிஞர், கல்லூரி முதல்வர், தொழிற்சங்கவாதி; மொழிப்பற்றாளர்; பதிப்பாசிரியர்; வானம்பாடி இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர்! ‘கவி'என்கிற கவிதை இதழ், ‘அன்னம்', ‘அன்னம் விடு தூது'என்ற இதழ்களின் ஆசிரியர்; பல பதிப்புகள் கண்ட ‘கனவுகள்+ கற்பனைகள்=காகிதங்கள்' ,'மூன்றும் ஆறும்', ‘ஊசிகள்' போன்ற நூல்களின் படைப்பாளி; மனிதாபிமானம் மிக்க ஒரு பகுத்தறிவுவாதி... எனப் பல்வேறு ஆளுமைத் திறமைகளைக் கொண்டவர். சிவகங்கைக்காரர். கவிக்கோ அப்துல் ரஹ்மான், டி.எம். அப்துல் காதர், கவிஞர்கள் சிற்பி, இன்குலாப், நா.காமராசன், மேத்தா, வைரமுத்து,பாலா, தமிழன்பன், பி.சிதம்பரநாதன், முருகு சுந்தரம், அபி தேனரசன், புவியரசு, தமிழ்நாடன், தணிகைச் செல்வன், இந்திரன், காசி ஆனந்தன், நவகவி, கல்யாண்ஜி, கலாப்ரியா, கந்தர்வன், அறிவுமதி, வெ.சேஷாசலம், க.வை.பழனிச்சாமி, நாஞ்சில் ஆரிது, வைகை வாணன், இக்பால், பஞ்சு, ரவிசுப்ரமணியன், வசந்தகுமார்-இவர்கள் என் அங்கங்களைப் போன்ற சகோதரக் கவிஞர்கள். இவர்கள் என்னுள் நிறைந்திருக்கிறார்கள். எனவே, நான் நானல்ல; நான் மட்டுமல்ல. எல்லாரும் கலந்த ஒரு அவதாரம். ஆமாம்... நான் செத்தாலும் வாழ்வேன்!( மீரா கவிதைகள் நூல் முன்னுரையில் மீரா). மீரா பலரை உருவாக்கியவர்; அம்முயற்சியில் தன்னை ‘உரு'வாக்கிக் கொள்ள மறந்தவர். மீராவின் பாடல்களில் கவித்துவ ஒளிக்கீற்றுகள் பலப்பல உள்ளன. ஆனால், அவரோ மற்றவர்களின் ஒளிச்சேர்க்கையில், தனது நிறத்தை இணைத்துக் கொண்டவர். தன்னை இழக்கத் துணிந்தவர்.(அறிஞர். தமிழண்ணல்) உடல்நலக் குறைவால் தமது 63வது வயதிலேயே மரணம்(01.09.2002) தழுவிய அவருக்குக் கடந்த செப்டம்பரில் (23.09.2010) நெய்வேலியில் ஒரு நினைவுக் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட மீராவின் துணைவியார் சுசீலா அம்மையாரிடமும், மகள் கண்மணி பாண்டியனிடமும் அவசரமாய் ஓரிரு வார்த்தைகள் பகிர வாய்ப்புக் கிடைத்தது. மறுநாள் மாலை, கண்மணி பாண்டியன் இல்லம் சென்று, ஆற அமர கவிஞர் பற்றிய நினைவுகளை, அவரது துணைவியாரிடம் பேச விழைந்தோம். அம்மையாரின் எளிமையான தோற்றமும், மாறாத புன்னகையும் வசீகரித்தது எங்களை. கவிஞர் மீராவின் உன்னதங்களை, அவரது இலக்கிய நண்பர்கள் வாயிலாகவே வெகுவாக அறிகிறோம். பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, அ. நல்லக்கண்ணு போன்ற அரசியலாரின் புகழ் மொழிகளையும் குறிப்பிடலாம். சாகாத வானம் நாம்/ வாழ்வைப் பாடும்/ சங்கீதப் பறவை நாம்/ பெருமை வற்றிப் போகாத/ நெடுங்கடல் நாம்/ நிமிர்ந்து நிற்கும்/ பொதியம் நாம்; இமையம் நாம்/ காலத்தீயில் வேகாத பொசுங்காத/ தத்துவம் நாம்... பேரறிஞர் அண்ணா போன்ற தலைவர்கள் அரசியல் தலைவர்கள் அடிக்கடி மேடையில் எடுத்தாண்ட மீராவின் கவிதையொன்றின் சில வரிகள் இவை. அவருடனான 38 ஆண்டுகால (10.09.1964)-(01.09.2002) வாழ்தலில் ஒரு துணைவியாக கவிஞரைப் பற்றிய அனுபவங்களை கேட்டறியும் ஆவலை வெளியிட்டோம். தென்றலாக வருடும் மென்குரலில் துவங்குகிறார்... (நாளைய பதிவில் நிறைவடையும்) “எனக்கு கல்யாணம் செய்யும் போது 16-17வயசு. அபூர்வமான மனிதர் என் கணவர். சோர்வில்லாதவர். நகைச்சுவையாளர். யாரையும் கடிந்து பேசமாட்டார். எல்லாருக்கும் தன்னாலான நல்லதை செய்யப் பிரயாசைப்பட்டவர். ருசித்து சாப்பிடுவார். அசைவ பிரியாணியும், மீன் குழம்பும் ரொம்ப இஷ்டம். காபி ரொம்பப் பிரியம். கேட்கறப்போவெல்லாம் தரணும். ஆசிரியர் போராட்டத்துல கலந்துகிட்டப்ப சிறைக்குப் போய் வந்த பெறகு, ‘அங்க சாப்பாடெல்லாம் எப்படி'ன்னு கேட்டதுக்கு, ‘பிரமாதம், வீட்டைவிடக் காபி நல்லாவேயிருந்துச்சு'ன்னார். (சிரிப்பு) கடைசியா உடம்பு முடியாமப் போனபோது கூட, ‘பத்தியமாச் சாப்பிட்டு 100 வயசு வாழறதை விட, விருப்பமானதைச் சாப்பிட்டு எந்த வயசிலயும் போகலாம்' அப்படீம்பார். இராத்திரி படுக்க ரெண்டு மணியானாலும் விடியக்காலையில 4-5 மணிக்குள்ள எழுந்திடுவார். பேராசிரியர் வேலையிலயிருந்து ஓய்வு பெற்ற பெறகும் கூட, பதிப்பிக்கிற நூல்களுக்கு அச்சுப் பிழை சரி செய்யறது, பேப்பர், இங்க் மத்த பொருட்கள் வாங்கிட்டு வரது, படிக்கிறது, எழுதுறது, தேடி வர்ற நண்பர்கள் கிட்ட பேசறதுன்னு நாள் பூரா ஏதாவது செய்துகிட்டேயிருப்பார். தினம் தினம் பயணத்துக்கும், புத்தகக் கட்டுகளை சுமந்து எவ்வளவு தூரமும் நடக்கவும் அசராதவர். வெளியே போனா கடைசி வண்டியாவது பிடிச்சு ஊருக்கு வந்து வீட்டில் படுத்தாத் தான் அவருக்கு நிம்மதியாயிருக்கும். இப்பவும் ஊருக்குப் போயிருக்கார்... வந்துடுவார்ன்னு தான் நெனைச்சு நெனைச்சு, ஒரேயடியாப் போயிட்ட துக்கத்தைக் கரைச்சுக்கறேன். சிவகங்கையில எங்க வீட்டுல 30 வருஷமா ஒரு அம்மா வேலை பாத்துச்சு. இப்பவும் நான் ஊருக்குப் போனா அப்படித்தான் சொல்லும்... “ஐயா ஊருக்குப் போயிருக்கார்ம்மா... வந்துடுவார், கவலைப் படாம இருங்க.” கவிக்கோ விருது வாங்க சென்னை போன போது, என் தம்பி கார்த்திகேயன் வீட்டில் திருவான்மியூரில் ஒரு மாசமிருந்தோம். தினமும் சாயங்காலமானா அப்துல் ரஹ்மான், மேத்தா, இந்தியா டுடேயிலிருந்த விஸ்வநாதன் எல்லாரும் இவரைப் பார்க்க வந்துடுவாங்க. என் தம்பி, இவர், அவங்க மூணு பேர் எல்லாருமா பீச்சுக்கு வாக்கிங் போயிட்டு 8.30 மணிக்கு மேல வீடு திரும்புவாங்க. அந்த ஒரு மாசமும் என்னோடவே அதிக நேரமிருந்தார். ரொம்ப சந்தோஷமாயிருந்தேன் அப்ப. இவ்வளவு வேலை செய்தவரை, இவ்வளவு பேரோடு பேசியவரை நம்மோட ஒரு மணி நேரமாவது பேச வைக்க முடியாமப் போனோமேங்கற ஏக்கம் எப்பவுமிருந்துச்சு. அதுவும், ஜெயலலிதா கண்ணகி சிலையை பீச்சுல இருந்து அப்புறப்படுத்தினப்போ தீர்ந்துச்சு. ‘அப்படியென்ன அந்த சிலை மேல பயப்படும் படி'ன்னு கேட்டேன் அவரை. அதிசயமா, ஒரு மணி நேரத்துல சிலப்பதிகாரம் காப்பியம் முழுக்க எனக்குப் புரியுற விதமா பாடம் மாதிரி சொன்னாரு. அந்த ஒரு மணி நேரப் பேச்சு இப்பவும் நினைவிருக்கு எனக்கு. மறக்கவே முடியாது. இப்ப, அவர் இல்லாத ஒரு குறைதான்... எது இருந்தும் அவர் இல்லாதது பெரும் குறைதான் எனக்கு.” காலமாகிப் போன தன் வசந்தகால நினைவுகளின் அழுத்தம் அவரின் குயில் குரலை இறுகப் பிடித்து கமறச் செய்கிறது. “உங்க அண்ணிய ரொம்ப காலமாவே நான் புரிஞ்சுகிடாமயே இருந்துட்டேன் ரவி” எனக் கும்பகோணத்தில் வைத்துக் கடைசியாகப் பார்த்த போது மீரா தன்னிடம் வருந்தியதாக ரவி சுப்ரமணியம் தன் இரங்கல் கட்டுரையில் (மீரா சிறப்பிதழ்-மண்/3, பக்கம் 47) குறிப்பிட்டிருப்பார். மீராவின் நண்பர்கள் அனைவரும் அவரது துணைவியாரை அண்ணி என்று தான் அழைப்பர். அதைப் படித்த போது மீராவின் ஆதர்சக் கவிஞர் கலீல் கிப்ரானின் ‘பிரியும் வேளை வரும் வரை தன் அடியாழத்தை அன்பு அறிவதில்லை' என்ற வரிகள் நினைவை நனைத்தன. முகில்களிடையே இருக்கும் வானவில்லாய் பிரபல மனிதர்களின் ஜொலிப்பு. அவர்களுக்கு வாழ்க்கைப் பட்ட மகராசிகளோ தத்தம் ஆசைகள், கனவுகள், தேவைகள், ஏக்கங்களைக் கனியறியும் ஆவலில் தம் பூவிதழ்களை உதிர்த்துக் காத்திருக்கும் பழமரங்கள் போலாகின்றனர். கணவர் பாதி குழந்தைகள் பாதி கலந்து செய்யப்பட்ட இவர்களது தினசரிப் பொழுதுகளூடே கொண்டாட யாருமற்றுப் பரண்மேலேற்றிய பழங்குப்பையாய் இவர்களுக்குள் ஒளிந்திருக்கும் உள்ளக் குமைச்சல்களை தமக்குள்ளேயே புதைத்துக்கொண்டு நீர்த்துப் போகச் செய்கின்றனர். சகிப்புத் தன்மையும் விட்டுக் கொடுத்தலும், அர்ப்பணிப்பு உணர்வும் வெற்றிகரமான இல்வாழ்வுக்கு அத்தியாவசியமாகிறது. சாதனை மனிதர்களின் துணையாகிறவர்களுக்கு இவற்றின் சதவீதம் சற்றுத் தூக்கலாகவே இருந்தால்தான் இணைநலம் இனிதாகிறது. “யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம்... ஆனால் கவிஞரின் மனைவியாக வாழ்வது கஷ்டம்” என்ற செல்லம்மா பாரதியின் வானொலியுரை (1951, திருச்சி வானொலி நிலையம்) வரும் தலைமுறைகளிலாவது மாறி ஒலிக்கட்டும்... ஒலிக்க வேண்டுமென்ற பிரார்த்தனையோடு விடைபெற்றோம். நவம்பர் 2010 'கிழக்கு வாசல் உதயம்' இதழில் வெளியானது. மனங்கவர் முன்னுரைகள்...நிலாமகளின் வலைப்பூவில் இருந்து ... “தமிழ்க் கவிதையின்... தமிழ்க் கவிஞர்களின்... ஒரு குறிப்பிட்ட காலத்தின் ஒளிசூடிய அடையாளம் ‘மீரா'. கவிதைப் பெருக்கில் கடல் செய்யும் ஆற்றல் கைவரப் பெற்றும் குளமாய் தன்னைக் குறைத்துக் கொண்டவர்; இங்கிதமான காதல் தமிழிலும் அங்கதமான அரசியல் தமிழிலும் முன்னேர் நடத்திய முதல்வர்”- இது அறிவுமதி, ‘மீரா சிறப்பிதழாய்' வெளியிட்ட தன் ‘மண்' மூன்றாமிதழில். “சிவகங்கை என்ற சிற்றூரை அவர் இலக்கிய வாதிகள் வந்து செல்லும் புண்ணியதலமாக்கினார். பிறர் படைப்புகளை வெளியிடும் வெறியில் அவருடைய எழுத்துக்கள் தடைபட்டுப் போயின.” என்றவர் மீராவின் கெழுதகை நண்பர் அப்துல்ரஹ்மான். பழனிபாரதி சொன்னாற்போல், ‘அன்பின் விதைகளுக்குள்ளே குறுகுறுத்த உற்சாகத்தின் தட்பவெப்பமான மீரா, ஓராயிரம் பெயர்களை ஊட்டி வளர்த்த ஒற்றைப் பெயர்'. “எழுதுபவர்களின் சாலைகள் அனைத்தும் சிவகங்கை நோக்கியே சென்றன. இளைஞர்களை அவர் ஊக்கப்படுத்தும் விதமே அலாதியானது. பயணங்களில் அவருக்கிருந்த ஆர்வம் அதிசயமானது” இது செழியனின் அஞ்சலிச் சொற்கள். “அவர் பரிவு மிக்க ஒரு பதிப்பாளர்; உயர்ந்த கவிஞர்; சிறந்த பண்பாளர் என்கிற தகுதிகளையெல்லாம் விட மேன்மையான இரண்டு உண்டு அவரிடம். ஒன்று... அவருடைய தேர்ந்த இரசனை; இரண்டு... அவரோடு நெருங்கியவர்களிடம் அவருக்கிருந்த பாசம். பலருடைய முகவரியை எழுதித் தமிழ்நாட்டுக்குக் கொடுத்தவர் மீரா. அது யாருக்குப் பொருந்துமோ இல்லையோ... எனக்குப் பொருந்தும்” -கந்தர்வனின் கண்ணியச் சொற்களிவை. “தன்னை விமர்சனம் செய்பவர்களைக் கூட, மன்னித்து ஏற்கும் மனநிலை மீராவின் தனிச் சொத்து. ‘மரணம் ஒரு கதிர் அரிவாள் அன்று. அதுவொரு புல்வெட்டும் கத்தி' என்றார் பிரெஞ்சு எழுத்தாளர் கில்லர்பெல்லாக். பயிர் முற்றிப் பால் பிடிக்கும் வரை கதிர் அரிவாளுக்குக் காத்திருக்கத் தெரியும். புல்வெட்டும் கத்திக்கு பூ எது; புல் எது என பேதம் பார்க்கத் தெரியாது. மரணம் புல்வெட்டும் கத்தி. அது மீராவை நம்மிடமிருந்து பிரித்து விட்டது” இப்படி உருகியவர் இந்திரன். “அவரது அன்பையும் அரவணைப்பையும் நட்பையும் உரிச்சொற்களோ உவமைகளோ எடுத்துக் காட்டிவிட முடியாது. மீரா ஓர் அனுபவம். எளிமை நிறைந்த அவரது அன்பில் திளைத்தவர்கள் பாக்கியவான்கள். இப்படியொரு கலப்படமற்ற அன்பை, நிபந்தனையற்ற நட்பை இனி யாரிடம் பெறப்போகிறோம்...?!” என நெட்டுயிர்த்தவர் கலாப்ரியா. சி. மகேந்திரன் சொன்னது...“சாவு சிலரை மட்டும் சாகடிக்கக் கூடியது. மரணத்தை வெல்லும் வீரியம் கொண்டவர்களுமுண்டு. இவர்கள் நம்பிக்கை மிக்க நெம்பு கோல்கள். மீராவின் மரணம் துயரை வேதனையைத் தந்தாலும், எந்த நம்பிக்கை வறட்சியையும் உருவாக்கவில்லை. அவர் தனது இறுதி நாட்களில், ‘மீரா கவிதைகள்' நூலுக்கு எழுதிய முன்னுரையில்... ‘எனது கனவுகளைப் படித்து என்னைப் போல் எழுதும் புதுக் கவிஞர்களே! இதோ உங்களுக்காக என் ‘மீராவின் கவிதைகள்'. இதிலுள்ள காதல் கவிதைகளோடு நின்றுவிடாதீர்கள். சமூகம் சார்ந்த சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். தமிழினம் வீழ்ச்சியுற்றுக் கிடப்பதில் எனக்குச் சம்மதமில்லை. எழுந்து நில்லுங்கள்; எழுச்சி கொள்ளுங்கள்; புரட்சி செய்யுங்கள்” எஸ். விஸ்வநாதன் சொல்வது போல், அவருக்கு கவிக்கோ விருது வழங்கும் விழாவில் வெளியிடப்பட்ட ‘மீரா கவிதைகள்', ‘கோடையும் வசந்தமும்' ‘குக்கூ' என்ற மூன்று நூல்களும் தான் அவரது கடைசி இலக்கியப் படைப்புகள் என அவர் தெளிவாக உணர்ந்திருந்தார் என்பதை அந்நூல்களுக்கு அவர் எழுதியிருந்த முன்னுரை, என்னுரை, நன்றியுரை போன்றவற்றைப் படிக்கும் போது யூகிக்க முடியும். தன் வாழ்வில் தான் நேசித்த, தன்னை நேசித்த, தான் வளர்த்தெடுத்த குழந்தைகள், தன்னை வளர்த்தெடுத்த உறவினர்கள், நண்பர்கள், சக ஆசிரியர்கள், தனது தமிழ் ஆசான்கள் எல்லோரையும் அநேகமாக ஒருவர் விடாமல் நன்றியுடன் குறிப்பிட்டுப் போற்றியுள்ளதையும், மூன்று நூல்களையும் தனக்கு தமிழ் கற்றுக் கொடுத்த மூன்று ஆசிரியர்களுக்கும், பள்ளித் தோழருக்கும், அன்புச் சகோதரர் மனோகரனுக்கும், காணிக்கையாக்கி இருப்பதையும் அவரது முன்னுரை, நன்றியுரையோடு சேர்த்துப் படித்தால், தனது மரண சாசனத்தைத் தான் இந்நூல்களில் பதிவு செய்திருக்கிறார் என்பது புலனாகும். (மீரா கவிதைகள் நூலில் முன்னுரையே 21 பக்கங்கள்!) “அறுபதுகளில் வந்த ஈழத்து மஹாகவியின் ‘குறும்பா'க்களில் மனம் பறிகொடுத்தவன் நான். ஆங்கிலத்திலுள்ள ‘லிமரிக்ஸ்' என்னும் கவிதை வடிவத்தை கச்சிதமாகப் பயன்படுத்தி தமிழுக்கு அழகு சேர்த்தவர் மஹாகவி. இது போல அடி, சீர் வரையறையின்றி என் பாணியில் எழுதத் தொடங்கினேன். இதிலுள்ள கவிதைகளை வாசகர்கள் ஓடுகிற ஓட்டத்தில் படித்து தூக்கியெறிந்து விடாமல் கொஞ்சம் நிதானமாகப் படிக்க வேண்டும். சரஸ்வதி பூசைக்குப் போனால் பொரிகடலை கொடுப்பார்கள். அதில் கடலையை விடப் பொரிதான் அதிகமிருக்கும். இருந்தாலும் பொரியை எடுத்தெறியாமல் கடலையுடன் சேர்த்துச் சுவைப்பது போல எல்லாக் கவிதைகளையும் சுவைக்க வேண்டும். ‘குக்கூ'வில் பின்பற்றப்பட்டுள்ள இயைபுத் தொடை பல இடங்களில் செயற்கையாகப் படுகிறது என்கிறார் கவிக்கோ. நியாயமான விமர்சனம். கலை(Art), செய்கலை (Craft) இரண்டுக்கும் இலக்கியத்தில் இடமுண்டு. சில கவிதைகள் முதல் வகையையும், பல கவிதைகள் இரண்டாம் வகையையும் சேர்ந்தவை. இப்படித்தான் நான் சமாதானம் சொல்ல முடியும். குழந்தைகளோடு குழந்தையாய் சில பொம்மைகளும் இருந்துவிட்டுப் போகட்டுமே!” (குக்கூ முன்னுரையில் மீரா) “கழகத்தில் நானெழுதிய கவிதைகளுக்கும்(மீரா கவிதைகள்), இப்போது இதில் (கோடையும் வசந்தமும்) உள்ள கவிதைகளுக்கும் அதிக வித்தியாசமில்லை. இரண்டிலுமே என் முற்போக்கு, அதிமுற்போக்கு அரசியல் முகங்களே தென்படுகின்றன. நடையில் வீரியக் குறைவு. வார்த்தைகளில் கலப்பு மொழி, சில இடங்களில் செயற்கைத் தன்மை இத் தொகுப்பில் காணப்படுகிறது” (கோடையும் வசந்தமும் முன்னுரை-பக்.26) 1971-ல் மீராவின் கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் வசன கவிதைக் காவியம் வெளிவந்தது.(நானெல்லாம் பிறந்த குழந்தை அப்போது!) கவிதை இலக்கியத்தில் மீரா அலை சுழன்று வீசியது. இந்நூலில் முன்னுரையாக ஒரு முடிவுரை எழுதியிருப்பார்... படித்தவர்கள் அத்தனை பேருக்கும் மறக்க முடியாத வரிகள் அவை. “என் வேட்கையே... நீ எனக்கு காதலைத் தந்தாய்; அது உழைப்பாளியின் வியர்வையைப் போல் உயர்வானது. நான் உனக்கு இந்த வசன காவியத்தைத் தருகிறேன்; இது ஏழையின் கண்ணீரைப் போல உண்மையானதா என்று பார். என் சத்தியமே... என்னை நீ புரிந்து கொள்ளவில்லையென்றால் வேறு யார் புரிந்து கொள்ளக் கூடும்? வேறு யார் புரிந்து கொண்டுதான் என்ன? என் அந்தரங்கமே... இதோ, என் சொல்லோவியம்... விசுவாமித்திரனைப் போல் வேண்டாமென்று சொல்லிவிடாதே.” நன்றி: http://www.nilaamagal.blogspot.com/ Thursday, 4 August 2011 கவிஞர்களின் கவிஞர் ‘மீரா' வசனகவிதை தந்த பாரதிக்குப் பின்னர் புதுக் கவிதையின் தந்தையாய்த் திகழ்ந்த ந. பிச்சமூர்த்திக்குப் பிறகு கவிதையின் காலம் முடிந்தேவிட்டது என்று ஆரூடம் கணித்தவர்களின் வாக்குப் பொய்க்க, நவகவிகளுக்கு நிலைபேறு மிக்க வாழ்வு கொடுத்த கவிஞர்களின் கவிஞர் மீரா திராவிடச் சிந்தனையில் அரும்பிப் பொதுவுடமைத் தத்துவத்தில் பூத்துக் குலுங்கிய கவிதை நந்தவனம். 10.10.1938-ல் தோன்றி 01.09.2002-ல் மறைந்த சிவகங்கைச் சீமையின் கவிதைக் குயில். "பிறந்தது தான் பிறந்தேன் நான் பெண்ணாய்ப் பிறந்தேனா" என்று கவிதை பாடிய கவிஞர் மீ. ராசேந்திரனின் முதல் இரு எழுத்துக்களின் இணைப்பிலிருந்து தான் கவிஞர் மீரா என்னும் பெயர் பிறப்பு. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள் "இலக்குமி அம்மாவும், எஸ். மீனாட்சிசுந்தரமும் என் மாதா பிதாக்கள். புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் என் குரு. மகாகவி பாரதி என் தெய்வம். என் குருவின் மூலமே என் தெய்வத்தை தரிசித்தேன். பாரதிதாசனின் தாசன் ஆன நான், மற்றும் ஒரு பாரதிதாசனானேன்" என்று குறிப்பிடும் மீரா, எழுத்துக்கும் வாழ்வுக்கும் இடையில் எந்தத் தடையுமின்றி குறிக்கோளுடன் வாழ்ந்து சிறந்தவர். அண்ணா, பாரதிதாசன், கண்ணதாசன், மு.வ. ஆகியோர் எழுத்துக்களில் ஏற்பட்ட ஈர்ப்பால் எழுத வந்த மீரா தொடக்கத்தில் மரபுக் கவிதைகள் எழுதியவர். சாகாத வானம் நாம்; வாழ்வைப் பாடும் சங்கீதப் பறவை நாம்; பெருமை வற்றிப் போகாத நெடுங்கடல் நாம்; நிமிர்ந்து நிற்கும் பொதியம் நாம்; இமயம் நாம்; காலத்தீயில் வேகாத பொசுங்காத தத்துவம் நாம்; வெங்கதிர்நாம்; திங்கள் நாம்; அறிவை மாய்க்கும் ஆகாத பழமையினை அகற்றிப் பாயும் அழியாத காவிரிநாம்; கங்கையும் நாம்; என்ற மீராவின் இப்பாடல், அக்காலத்தில் திராவிட இயக்க மேடைகளில் பாரதிதாசன் பாடல்களுக்கு அடுத்ததாக ஒலித்த பாடல் இது என்பார் அப்துல் ரகுமான். தெய்வங்கள் திருநாட்கள் எங்கட்கில்லை தெருவோரச் சாக்கடைக்கு வருமா தெப்பம்? என்ற மீராவின் கவிதை அண்ணாவை ஈர்த்த கவிதை. அவர் அரங்குகளில் எடுத்து முழங்கிய கவிதை. மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் பயின்ற கவிஞர் மீரா, சிவகங்கை மன்னர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியேற்றார். அக்காலத்தில் மதுரைப் பல்கலைக் கழகக் கல்லூரி ஆசிரியர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்குத் தொடங்கப்பட்ட மூட்டா (MUTA) இயக்கத்தில் தீவிரப் பங்காற்றினார். அவ்வமைப்பின் ஜர்னல் ஆசிரியரானார். போராட்டத் தீவிரத்தால், கல்லூரியினரால் இருமுறை பணி நீக்கம் செய்யப் பட்டார். அதுசமயம் உருவானதே அன்னம் பதிப்பகம். அகரம் அச்சகத்தின் வழி, நவீன படைப்பிலக்கியங்களை உருவாக்கித் தமிழுலகுக்குத் தந்தார். அபியின் ‘மெளனத்தின் நாவுகள்' என்ற தொகுப்பை அடுத்து, நீலமணி, கல்யாண்ஜி, இரா. மீனாட்சி உள்ளிட்டோர் கவிதைகளை, நவகவி என வரிசைகளாக்கி வழங்கினார். கி.ரா.வின் படைப்புகளை வெளியிட்டுப் பெருங்கவனிப்பை ஏற்படுத்தியது அன்னம். பின்னர்,'அன்னம் விடு தூது', ‘கவி' என்ற கவிதைக்கான சிற்றேடு ஆகியவற்றையும் அன்னம் வாயிலாக வெளியிட்டார் மீரா. மொழிபெயர்ப்பு, இலக்கிய விமர்சனம், படைப்பிலக்கியம் என தமிழின் துறைதோறும் பதிப்பாக்கங்களை வலுப்படுத்தித் தேர்ந்த பதிப்பகராகத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டார். தரமான இலக்கியக் கூட்டங்களை ஏற்பாடு செய்து இனிது நடத்தினார். அவற்றுள் மிகவும் குறிப்பிடத் தக்கது சிவகங்கையில் அவர் மூன்று நாள்கள் நடத்திய ‘பாரதி நூற்றாண்டு விழா'. பதிப்பகத் துறையில் எழுத்துப் பரம்பரையை உருவாக்கி வளர்த்த அவர், தம் கல்லூரிப் பணியிலும் சிறப்பான மாணவர்களை உருவாக்கினார். எந்தக் கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்துத் தெருவில் இறங்கிப் போராடினாரோ, அந்தக் கல்லூரியிலேயே பின்னர் தமிழ்த்துறைத் தலைமைப் பொறுப்பையும், பொறுப்பு முதல்வர் பணியையும் அவர் ஆற்ற நேர்ந்தது. அதுசமயம் கல்லூரி நிர்வாகத்தச் சீர்செய்து மாணவர்களிடையே ஒழுக்கக் கட்டுப்பாடுகளை வலியுறுத்திய அவர், அவ்வூரின் பெரிய மனிதர் ஒருவரது பிள்ளையின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததன் விளைவாக, கும்பகோணம் அரசுக் கல்லூரிக்குப் பணிமாற்றம் செய்யப்பட்டார். "கல்லூரிப் பணி, தமிழ்த்துறைத் தலைமைப்பணி, முதல்வர் பொறுப்புப் பணி, கல்லூரிப் போராட்டப் பணி, கல்லூரி ஆசிரியர்கள் தொழிற்சங்கப் பணி, கவி இதழ்ப்பணி, அன்னம் விடு தூது இதழ்ப் பணி, அன்னம் பதிப்பகச் சிறப்பாசிரியர் பணி, அகரம் அச்சு மேற்பார்வைப் பணி, கொஞ்சம் குடும்பப் பணி இவை எல்லாம் சேர்ந்து என் எழுத்துப் பணியை வளைத்துப் பிடித்துக் கட்டிப் போட்டுவிட்டன" என்று தாம் பணிகளால் பிணிக்கப்பட்டு கவிப் பறவையானதைக் குறிப்பிடும் மீரா, அவற்றையும் மீறித் தமிழுக்குச் சிறப்பான ஆக்கங்களை அளித்துள்ளார். ‘கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்' அக்காலத்தில் கல்லூரிக் காதலர்களின் வேதப் புத்தகமாகத் திகழ்ந்தது. இவர்தம் இலக்கிய, லட்சியக் கவிதைகளின் ஆவணமாகத் திகழ்ந்த ‘மூன்றும் ஆறும்' கவியரங்கக் கவிதைத் தொகுப்பு, ஊழல் அரசியலையும் நாணயமற்ற வாழ்வின் போக்குகளையும் அங்கதமாகக் குத்திக் காட்டும் கவிதைக்கூர் முனைகள் ‘ஊசிகள்'. ஹைகூவும் சென்ரியூவும் தமிழுலகில் இறக்குமதியான காலத்தில் தமிழ் மரபில் இவரிடமிருந்து ஒலித்தது குக்கூ. அழுக்கைத் தின்னும் மீனைத் தின்னும் கொக்கைத் தின்னும் மனிதனைத் தின்னும் பசி! என்பது அவர்தம் குக்கூக் கவிதைகளுள் ஒன்று. இராசேந்திரன் கவிதைகள், மீராவின் கவிதைதள், கோடையும் வசந்தமும் ஆகியன இவர்தம் பிற கவிதைத் தொகுப்புகள். ‘எதிர்காலத் தமிழ்க்கவிதை' கவிதை விமர்சன நூல். ‘வா இந்தப்பக்கம்' நிகழ்காலச் சமுதாய நிகழ்வுகளை அங்கதமாக விமர்சிக்கும் கட்டுரைத் தொகுப்பு. எளிமையும் அன்பும் தோழமையும் நிறைந்த புன்சிரிப்புக் கவிஞர் மீரா, எழுத்திலும் பேச்சிலும் பொங்கிப் பெருகும் அங்கதம் இவர்தம் உயிர்த் துடிப்பு. நிறைவுக் காலத்தில் ‘ஓம்சக்தி' இதழின் ஆசிரியராகவும், சிறிது காலம் கோவையில் தங்கிப் பணியாற்றிய மீரா, எஸ்.ஆர்.கே. யைப் போல் பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டார். "பாரியின் பறம்பை மூவேந்தர்கள் முற்றுகையிட்டது போல் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீரிழிவு, இதய நோய், வாத நோய் ஆகிய முந்நோய்களால் தாக்கப் பட்டுப் படுக்கையில் கிடக்கிறேன். இப்போதாவது கடவுளைக் கும்பிடுங்கள், கோயிலுக்குப் போங்கள்... என்று நெய்வேலியிலிருந்து வரும்போதெல்லாம் என் அருமை மகள் செல்மா சொல்லிப் பார்த்தும் எதுவும் நடக்கவில்லை. என்னால் முடியவில்லை. கடவுள் இருந்து காப்பாற்றினால் நல்லதுதான்.(நான் பிழைத்துப் போகிறேன்) ஆனால், இயல்பாய் எனக்கு அந்த நம்பிக்கை வரவில்லை. இனி சாகப் போகும்போதா வரப்போகிறது? திராவிடர் கழகத் தலைவர் திரு.கி.வீரமணி கொடுத்த பெரியார் விருது என் படுக்கை அருகே இருக்கிறது" என்று அக்காலகட்டத்திலும் அங்கதத்தோடு தன் நிலையை எழுதினார் மீரா. அப்துல் ரகுமான் வழங்கிய கவிக்கோ விருதும், கவிஞர் சிற்பி அறக்கட்டளை வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதும் இவருக்குப் பெருமை சேர்த்தன. இவர்தம் பதிப்பாக்கங்களால் மிகச்சிறந்த விருதுகள் பெற்ற படைப்பாளிகளை உருவாக்கிய படைப்பாளி கவிஞர் மீரா. ‘தனியாய்... தன்னந்தனியாய்... தன்னந் தனியனாய்...' இது மீரா எழுத நினைத்திருந்த நாவலின் தலைப்பு. நிறைவேறாது விடப்பட்ட இந்நாவலைப் போலவே இவர்தம் கனவாகிய, மாமல்லபுரச் சாலையில் கவிஞர்களுக்காக, பாரதி கவிதா மண்டலம் அமைக்க வேண்டும் என்ற ஆவலும்... கவிக்கனவு பலிக்கக் காலம் துணை செய்யட்டும்! -கிருங்கை சேதுபதி கவிஞர் மீரா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் மீரா என்ற மீ.ராசேந்திரன் 1938 ஆம் ஆண்டு சிவகங்கையில் பிறந்தவர். சிவகங்கைக்கல்லூரியில் படித்து அங்கேயே பேராசிரியராகவும் பணியாற்றினார். http://ta.wikipedia.org/s/njf http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-22.htm கவிஞர் மீரா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் 01. பாரதியம் 02. எதிர்காலத் தமிழ்க்கவிதை 03. கனவுகள்+கற்பனைகள்= காகிதங்கள் 04. கவிதை ஒரு கலந்துரையாடல் 05. கோடையும் வசந்தமும் 06. குக்கூ 07. மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு 08. மீரா கட்டுரைகள் 09. மீ.இராசேந்திரன் கவிதைகள் 10. மூன்றும் ஆறும் 11. முகவரிகள் 12. ஊசிகள் 13. சுயம்வரம் 14. வா இந்தப்பக்கம் தமிழ்மணி - கவிஞர்களின் கவிஞர் "மீரா" ஸ்ரீ சன கவிதை தந்த பாரதிக்குப் பின்னர் புதுக்கவிதையின் தந்தையாய்த் திகழ்ந்த ந.பிச்சமூர்த்திக்குப் பிறகு, கவிதையின் காலம் முடிந்தேவிட்டது என்று ஆரூடம் கணித்தவர்களின் வாக்குப்பொய்க்க, நவகவிகளுக்கு நிலைபேறுமிக்க வாழ்வு கொடுத்த கவிஞர்களின் கவிஞர் மீரா, திராவிடச் சிந்தனையில் அரும்பிப் பொதுவுடைமைத் தத்துவத்தில் பூத்துக்குலுங்கிய கவிதை நந்தவனம். 10.10.1938இல் தோன்றி, 01.09.2002இல் மறைந்த சிவகங்கைச் சீமையின் கவிதைக் குயில். "பிறந்ததுதான் பிறந்தேன் நான் பெண்ணாய்ப் பிறந்தேனா'' என்று கவிதை பாடிய கவிஞர் மீ.இராசேந்திரனின் முதல் இரு எழுத்துகளின் இணைப்பிலிருந்துதான் கவிஞர் மீரா என்னும் பெயர்ப் பிறப்பு. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். - இலக்குமி அம்மாவும், எஸ்.மீனாட்சிசுந்தரமும் என் மாதா பிதாக்கள் - புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் என் குரு - மகாகவி பாரதி என் தெய்வம். என் குருவின் மூலமே என் தெய்வத்தைத் தரிசித்தேன். "பாரதிதாசனின் தாசன் ஆன நான், மற்றும் ஒரு பாரதிதாசன் ஆனேன்'' என்று குறிப்பிடும் மீரா எழுத்துக்கும், வாழ்வுக்கும் இடையில் எந்தத் தடையுமின்றி குறிக்கோளுடன் வாழ்ந்து சிறந்தவர். - அண்ணா - பாரதிதாசன் - கண்ணதாசன் - மு.வ. ஆகியோர் எழுத்துகளில் ஏற்பட்ட ஈர்ப்பால் எழுத வந்த மீரா, தொடக்கத்தில் மரபுக்கவிதைகள் எழுதியவர். சாகாத வானம் நாம்; வாழ்வைப் பாடும் சங்கீதப் பறவை நாம்; பெருமை வற்றிப் போகாத நெடுங்கடல் நாம்; நிமிர்ந்து நிற்கும் பொதியம் நாம்; இமயம் நாம்; காலத் தீயில் வேகாத பொசுங்காத தத்துவம் நாம்; வெங்கதிர் நாம்; திங்கள் நாம்; அறிவை மாய்க்கும் ஆகாத பழமையினை அகற்றிப் பாயும் அழியாத காவிரி நாம்; கங்கை யும் நாம்; என்ற மீராவின் இப்பாடல், அக்காலத்தில் திராவிட இயக்க மேடைகளில் பாரதிதாசன் பாடல்களுக்கு அடுத்ததாக ஒலித்த பாடல் இது என்பார் அப்துல்ரகுமான். தெய்வங்கள் திருநாட்கள் எங்கட்கில்லை, தெருவோரச் சாக்கடைக்கு வருமா தெப்பம்? என்ற மீராவின் கவிதை அண்ணாவை ஈர்த்த கவிதை. அவர் அரங்குகளில் எடுத்து முழங்கிய கவிதை. மதுரைத் தியாகராசர் கல்லூரியில் தமிழ் பயின்ற கவிஞர் மீரா, சிவகங்கை மன்னர் கல்லூரியில் பேராசிரியப் பணி ஏற்றார். அக்காலத்தில் மதுரைப் பல்கலைக்கழகக் கல்லூரி ஆசிரியர்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்குத் தொடங்கப்பட்ட மூட்டா இயக்கத்தில் தீவிரப் பங்காற்றினார். அவ்வமைப்பின் ஜர்னல் ஆசிரியரானார். போராட்டத் தீவிரத்தால், கல்லூரியினரால் இருமுறை பணிநீக்கம் செய்யப்பட்டார். அதுசமயம் உருவானதே அன்னம் பதிப்பகம். அகரம் அச்சகத்தின்வழி, நவீன படைப்பிலக்கியங்களை உருவாக்கித் தமிழுலகுக்குத் தந்தார். "அபியின் மெளனத்தின் நாவுகள்" என்ற தொகுப்பை அடுத்து, - நீலமணி - கல்யாண்ஜி - இரா.மீனாட்சி உள்ளிட்டோர் கவிதைகளை, நவகவி என வரிசைகளாக்கி வழங்கினார். கி.ரா.வின் படைப்புகளை வெளியிட்டுப் பெருங் கவனிப்பை ஏற்படுத்தியது அன்னம். பின்னர், "அன்னம் விடு தூது கவி" என்ற கவிதைக்கான சிற்றேடு ஆகியவற்றையும் அன்னம் வாயிலாக வெளியிட்டார் மீரா. மொழிபெயர்ப்பு, இலக்கிய விமர்சனம், படைப்பிலக்கியம் எனத் தமிழின் துறைதோறும் பதிப்பாக்கங்களை வலுப்படுத்தித் தேர்ந்த பதிப்பகராகத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டார். தரமான இலக்கியக் கூட்டங்களை ஏற்பாடு செய்து இனிது நடத்தினார். அவற்றுள் மிகவும் குறிப்பிடத்தக்கது, சிவகங்கையில் அவர் மூன்று நாள்கள் நடத்திய "பாரதி நூற்றாண்டு" விழா. பதிப்பகத் துறையில் எழுத்துப் பரம்பரையை உருவாக்கி வளர்த்த அவர், தம் கல்லூரிப் பணியிலும் சிறப்பான மாணவர்களை உருவாக்கினார். எந்தக் கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்துத் தெருவில் இறங்கிப் போராடினாரோ, அந்தக் கல்லூரியிலேயே பின்னர் தமிழ்த்துறைத் தலைமைப் பொறுப்பையும், பொறுப்பு முதல்வர் பணியையும் அவர் ஆற்ற நேர்ந்தது. அதுசமயம் கல்லூரி நிர்வாகத்தைச் சீர்செய்து, மாணவர்களிடையே ஒழுக்கக் கட்டுப்பாடுகளை வலியுறுத்திய அவர், அவ்வூரின் பெரிய மனிதர் ஒருவரது பிள்ளையின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததன் விளைவாக, கும்பகோணம் அரசுக் கல்லூரிக்குப் பணிமாற்றம் செய்யப்பட்டார். "கல்லூரிப்பணி, தமிழ்த்துறைத் தலைமைப்பணி, முதல்வர் பொறுப்புப்பணி, கல்லூரிப் போராட்டப்பணி, கல்லூரி ஆசிரியர்கள் தொழிற்சங்கப்பணி, கவி இதழ்ப்பணி, அன்னம் விடு தூது இதழ்ப்பணி, அன்னம் பதிப்பகச் சிறப்பாசிரியர் பணி, அகரம் அச்சக மேற்பார்வைப்பணி, கொஞ்சம் குடும்பப் பணி இவை எல்லாம் சேர்ந்து என் எழுத்துப் பணியை வளைத்துப் பிடித்துக் கட்டிப் போட்டுவிட்டன'' என்று தாம் பணிகளால் பிணிக்கப்பட்டு கவிப் பறவையானதைக் குறிப்பிடும் மீரா, அவற்றையும் மீறித் தமிழுக்குச் சிறப்பான ஆக்கங்களை அளித்துள்ளார். "கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்", அக்காலத்தில் கல்லூரிக் காதலர்களின் வேதப்புத்தகமாகத் திகழ்ந்தது. இவர்தம் இலக்கிய, இலட்சியக் கவிதைகளின் ஆவணமாகத் திகழ்ந்த, மூன்றும் ஆறும் கவியரங்கக் கவிதைகளின் தொகுப்பு. ஊழல் அரசியலையும், நாணயமற்ற வாழ்வின் போக்குகளையும் அங்கதமாகக் குத்திக் காட்டும் கவிதைக் கூர் முனைகள், ஊசிகள், ஹைகூவும் சென்ரியூவும் தமிழுலகில் இறக்குமதியான காலத்தில் தமிழ்மரபில் இவரிடமிருந்து ஒலித்தது குக்கூ, அழுக்கைத்தின்னும் மீனைத்தின்னும் கொக்கைத் தின்னும் மனிதனைத்தின்னும் பசி! என்பது அவர்தம் குக்கூக் கவிதைகளுள் ஒன்று. - இராசேந்திரன் கவிதைகள் - மீராவின் கவிதைகள் - கோடையும், வசந்தமும் ஆகியன இவர்தம் பிற கவிதைத் தொகுப்புகள்; "எதிர்காலத் தமிழ்க்கவிதை" கவிதை விமர்சன நூல். "வா இந்தப்பக்கம்" நிகழ்காலச் சமுதாய நிகழ்வுகளை அங்கதமாக விமர்சிக்கும் கட்டுரைத் தொகுப்பு. இனிமையும், அன்பும், தோழமையும் நிறைந்த புன்சிரிப்பு கவிஞர் மீரா, எழுத்திலும், பேச்சிலும் பொங்கிப் பெருகும் அங்கதம் இவர்தம் உயிர்த் துடிப்பு. நிறைவு காலத்தில் "ஓம் சக்தி" இதழின் ஆசிரியராகவும், சிறிதுகாலம் கோவையில் தங்கிப் பணியாற்றிய மீரா, எஸ்.ஆர்.கே.யைப்போல் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டார். "பாரியின் பறம்பை மூவேந்தர்கள் முற்றுகையிட்டதுபோல் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீரிழிவு, இதய நோய், வாதநோய் ஆகிய முந்நோய்களால் தாக்கப்பட்டுப் படுக்கையில் கிடக்கிறேன். இப்போதாவது கடவுளைக் கும்பிடுங்கள், கோயிலுக்குப் போங்கள்.... என்று நெய்வேலியிலிருந்து வரும்போதெல்லாம் என் அருமை மகள் செல்மா சொல்லிப்பார்த்தும் எதுவும் நடக்கவில்லை,. என்னால் முடியவில்லை. கடவுள் இருந்து காப்பாற்றினால் நல்லதுதான். (நான் பிழைத்துப்போகிறேன்). ஆனால், இயல்பாய் எனக்கு அந்த நம்பிக்கை வரவில்லை. இனி சாகப்போகும்போதா வரப்போகிறது திராவிடர் கழகத் தலைவர் திரு.கி.வீரமணி கொடுத்த பெரியார் விருது என் படுக்கை அருகே இருக்கிறது'' என்று அக்காலக்கட்டத்திலும் அங்கதத்தோடு தன் நிலையை எழுதினார் மீரா. அப்துல் ரகுமான் வழங்கிய கவிக்கோ விருதும், கவிஞர் சிற்பி அறக்கட்டளை வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதும் இவருக்குப் பெருமை சேர்த்தன. இவர்தம் பதிப்பாக்கங்களால் மிகச்சிறந்த விருதுகள் பெற்ற படைப்பாளிகளை உருவாக்கிய படைப்பாளி கவிஞர் மீரா. தனியாய்.. தனித்தனியாய்.. தன்னந் தனியனாய்.. இது மீரா எழுத நினைத்திருந்த நாவலின் தலைப்பு. நிறைவேறாது விடப்பட்ட இந்நாவலைப் போலவே இவர்தம் கனவாகிய, மாமல்லபுரச் சாலையில் கவிஞர்களுக்காக, பாரதி கவிதா மண்டலம் அமைக்கவேண்டும் என்ற ஆவலும்... கவிக்கனவு பலிக்கக் காலம் துணை செய்யட்டும். கிருங்கை சேதுபதி நன்றி:- தினமணி கிருஷ்ணமூர்த்தி 4/24/11 Translate message to English கவிஞர் மீராவைப் பற்றி அவரை அறிந்தவர்கள் வழியாக ஒரு பன்முகப்பார்வை......! ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்த ஒரு கட்டுரை. திண்ணை இணைய இதழுக்கு நன்றியுடன் ---------------------------------------- காகிதங்கள் + கனவுகள் = மீரா நெப்போலியன் மீ.ராசேந்திரன் எனும் மீரா நம்மை விட்டுப் பிரிந்து இரண்டு வருடங்கள் (1-09-2002) ஓடிவிட்டன. ஆனால், மீரா என்ற பீனிக்ஸ் தமிழ் இருக்கும்வரை உயிர்த்தெழுதலுடன் இலக்கியவானில் சிறகசைத்துக் கொண்டுதான் இருக்கும். அர்ப்பணிப்பான வாழ்க்கையை இறுதிவரை இயக்கி முடிக்கும் இயல்புகொண்டோரை காலம் அவ்வளவு எளிதில் உதிர்த்து விடுவதில்லை மீரா என்ற இலக்கியவாதியை, பதிப்பகத்தானை, நேசமிகு மாமனிதனை தமிழ் இலக்கியவரலாறு தன் கருப்பையின் கருவாய் சுமந்தபடியே இருக்கும். சிவகங்கை அன்னம் அகரம் என்ற சாகாத வானத்தில் மீரா எனும் வெள்ளி மீன் சிமிட்டிக்கொண்டுதான் இருக்கும். மீரா ஒரு அர்ப்பணிப்பு ஆத்மா... 'நவீன இலக்கியத்தின்பால் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் தமிழுலகில் உருவான ஈர்ப்புக்கு மீரா தொடங்கிய அன்னம் பதிப்பகத்தின் செயல்பாடு மிக முக்கியமான காரணம். வலிமையான இலக்கியச் சூழலை உருவாக்குவதில் ஒரு பதிப்பகத்துக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. கவிதைகளிலேயே இயங்கி வந்த மீராவும் ஏதோ ஒரு கட்டத்தில் இப்படி நினைத்ததால்தான் தன் இயங்கு தளத்தை மாற்றிக் கொண்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. ' ---- பாவண்ணன் மீரா ஒரு பொதுநலப்பூங்கா... '1959 முதல் துவங்கி 1965 - 1966 ம் ஆண்டுகளில் உள்ள அவரது கவிதைகளின் நோக்கமும் , தாக்கமும் மிக மிக அதிகம். மீராவின் கவிதைகள் முதன் முதலில் 1965ல் வெளியானது பிறகு அவரின் அடுத்த பதிப்பு 2002ல்தான் வெளியானது. இந்த 37 ஆண்டுகால இடைவெளிக்கு என்ன காரணம் ? ' ---- மு.மாரிமுத்து மீரா ஒரு சிந்தனைச் சிவப்பு... 'திராவிட இயக்கத்தில் வளர்ந்து மலர்ந்தவர் மீரா. அண்ணாவாலும், கலைஞராலும் பாராட்டப் பெற்றவர் அவர். 70-களில் படிப்படியாக இடதுசாரித் திசையில் நகர்ந்து உறுதியான இடதுசாரிப் படைப்பாளியாகவும்,சிந்தனையாளராகவும் விளைந்தார். ' -- பொன்னீலன் மீரா ஒரு புதுமரபி... 'தமிழ் இலக்கியத்தில் மரபுக்கவிதை சவலை நோயால் பீடிக்கப்பட்டு கவலைக்கிடமாகி நலிவுறும் நிலைக்கு வந்தபோதுதான், கவிஞர் மீரா புதுக்கவிதை என்னும் சிவப்பு அணுக்களை அதன் ரத்தத்தில் பாய்ச்சினார். ' ---- கவிஞர் பவேரா மீரா ஒரு பதிப்பகத்தேனீ... 'மீரா ஒரு கவிஞர் மட்டுமல்ல வணிக நோக்கம் இல்லாத பதிப்பக உரிமையாளர். ஜீவநேசமும் தோழமையும் குடிகொண்ட மாமனிதர். சிறந்த சிந்தனையாளர். கல்லூரி முதல்வர். ' --- தேனிசீருடையான் மீரா ஒரு அங்கதப்பூ... 'அவரைக் கடைசி முறையாகப் பார்த்தது ஒரு குதூகலமான சூழ்நிலையில். ஒரு விநாயக சதுர்த்தி நாளன்று கவிக்கோவுடன் என் வீட்டிற்கு வந்திருந்தார். கொழுக்கட்டைகள் தந்து உபசரித்தார் என் மனைவி. ‘உங்க வீட்டிற்கு வரும்போது கொழுக்கட்டை கிடைக்கலாம் என்று நினைத்துக்கொண்டுதான் வந்தேன்’ என்றார் கவிக்கோ. ‘அவருக்கு டயாபடீஸ் .கேட்டாலும் கொடுக்க வேண்டாம் என்று சொல்லத்தான் நானும் கூட வந்தேன்’ என்றார் மீரா. அறை முழுக்கச் சிரிப்பு. அதை நினைத்தால் இப்போது மனம் கனத்துப் போகிறது. '--- மாலன் மீரா ஒரு கிரியாவூக்கி... 'நான் பதிப்பாளன் ஆனதற்கு ஒருவகையில் மீராதான் காரணம் என்று சொல்ல வேண்டும் ' -- காவ்யா சண்முகசுந்தரம் மீரா ஒரு வினைத்தொகை... 'அவர் கவிதையை வாழ்க்கையாகவும், வாழ்க்கையை கவிதையாகவும் ஆக்கியவர். சிவகங்கையில் மீராவுக்கு ஒரு நினைவு நூலகம் அமைக்க வேண்டும் என்பது என் ஆசை. நல்லவர்கள் அதை நிறைவேற்றித் தருவார்கள் என்று நம்புகின்றேன் ' --- கவிக்கோ.அப்துல் ரகுமான் மீரா ஒரு குருபீடம்... 'கவிஞர் மீராவின் மாணவர்கள் மற்றும் சீடர்களைப் பற்றிக் குறிப்பிடுவது அவசியம். முனைவர் ம.பெ.சீனிவாசன் (சிவகங்கை), முனைவர் இரா.பாலச்சந்திரன்(ஆங்கிலப்பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்),பேராசிரியர் சாகுல் அமீது(புதுக்கல்லூரி சென்னை), முனைவர் .ஏ.குணசேகரன்(பாண்டிச்சேரி) ஆகியோர். அவருக்கு சீடர்கள் பலர். அவர்களில் முனைவர் சுபாசு சந்திரபோசு(திருச்சி), முனைவர் மு.பழனி இராகுலதாசன்(தேவகோட்டை) முக்கியமானவர்கள். ஓய்வுபெற்ற ஆசிரியரும் அவருடைய உறவினருமான முகவை சோ.சண்முகம் மீரா நடத்திய இலக்கிய விழாக்களில் ஒத்துழைத்தார். அவரின் மாணவர் ரா.பாஸ்கரன். மீராவின் இறுதிக்காலத்தில் அவருடன் நெருங்கிப் பழகிய இரண்டு இளைஞர்கள் குறும்படத்தயாரிப்பாளரும் எழுத்தாளருமான செழியன், அடுத்தவர் சந்திரகுமார். ' ---- நா.தர்மராஜன் மீரா ஒரு சமர்க்களச்சிங்கம்... வார்த்தை வசீகரங்களுக்காக எந்தக் கொள்கையையும் எழுதியவர் அல்ல மீரா. பிள்ளைகளுக்கு கலப்பு திருமணம் செய்து வைத்தார். சொந்தமென்று ஏற்றுக்கொண்ட கோட்பாடு காரணமாகச் சொந்தச் சாதி ஆதிக்கக்காரர்களோடு சமரசம் செய்துகொள்ளாமல் சமர்க்களத்தில் இறங்கிய வரலாறு அவருக்கு உண்டு.பணிபுரிந்த கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக சாதி அபிமானங்களைத் தூரத்தள்ளியவர் இந்த இலட்சியக்கவிஞர். '---- கவிஞர் சிற்பி மீரா ஒரு கற்பகதரு... 'மீரா ஓராயிரம் பெயர்களை ஊட்டி வளர்த்த ஒற்றைப்பெயர் . எப்படிப் போட்டாலும் பூ விழும் நாணயம்’---- பழநிபாரதி மீரா ஒரு காரணி... 'மீராவின் படைப்புகள் மிகப் பொருத்தமான தேவையான நூல்கள். சமுதாயத்தை விழிப்படையச் செய்யக்கூடிய நூல்கள். மனித சமுதாயத்திற்கு ஏற்புடைய நூல்கள். '---- கலைஞர் மு.கருணாநிதி மீரா ஒரு புதுக்குறிஞ்சி... 'அவர் ஒரு குறிஞ்சிப்பூ. போதிய அளவு கண்டு போற்றப்படாத கவிஞர் அவர். திராவிட இயக்கக் கவிஞர்களுக்கு நேர்ந்த கதிதான் அவருக்கும் நேர்ந்தது. துதி பாடத் தெரியாதவர்கள் அங்கே தலை நிமிர்தல் இயலாது.மீரா எனும் பாவலன் தனித்திறன் உடையவன். மரபுப் பாடல்களில் பல சித்து விளையாட்டுக்கள் கண்டவன். அவனது உரை வீச்சுக்கள் ஒப்பற்றவை. உள்ளடக்கமும் புதுமையுடையது. வடிவ யாப்பும் புதிய பரிணாமம் காட்டுவது’ ---- அறிஞர் தமிழண்ணல் மீரா ஒரு காகிதச்சிற்பி... 'மீராவின் காகிதங்கள் கல்வெட்டுக்களாய் காலத்தை வென்று வாழக்கூடியவை. அக்காகிதங்களில் அவர் தமிழ் இலக்கியமாக நிலைத்து நின்று நீடித்து வாழ்வார். '---- இரா.சுப்பராயலு மீரா ஒரு விழிப்புணர்வு வாக்கியம்... 'தமிழக மக்களிடையே புத்தகப் புத்தாடைகளை வாங்கும் பழக்கத்தை ஊக்குவிக்க பிற பதிப்பாளர்களையெல்லாம் ஒன்று கூட்டிப் புத்தகக் கண்காட்சி நடத்தும் திருவிழாவிலும் மீரா ஒரு அறங்காவலர் போல விளங்கினார் '---- சு.குழந்தைநாதன் மீரா ஒரு தேமா... 'மீரா இந்த தேமாச் சீருக்குரிய ஈரசைப் பெயர், பெற்ற புகழ் இணையற்றது. மீரா இந்தப் பெயரை நினைக்கும்போது பெண்மைக்கேயுரிய நல்லியல்புகள் யாவும் நம் முன் தோன்றும். ராசேந்திரன் இந்த இயற்பெயரை எண்ணும்போது ஒரு பெரு வீரனுக்கே உரிய வீறும் வினைத்திறமும் விளங்கித் தோன்றும். அவரது கவிதைகளில் இவ்விரு இயல்புகளையும் கண்டு மகிழலாம்.’- ==ம.பெ.சீனிவாசன் மீரா ஒரு போராளி... 'அறிஞர் அண்ணா மீராவின் கவிதைகளைப் படித்ததோடு, கவனித்தும் வந்த காரணத்தால் அண்ணாவின் கடைசி மடலில் திராவிட இயக்கக் கவிஞர்களில் மீ.ராசேந்திரன் ஒருவர் என்று குறிப்பிட்டுள்ளார். அண்ணா தன் இயக்க மாநாட்டுக்குத் தொண்டர்களை அழைத்து எழுதிய கடிதத்தில் 'சாவா சந்திப்போம், வாழ்க்கை நமக்கென பூவா புறப்படுவோம், புல்லியரைத்தூள் செய்வோம் ' எனும் போர்க்குணம் மிக்க மீராவின் கவிதையை மேற்கோள் காட்டியுள்ளார் ' ---- சுபாசு சந்திரபோசு மீரா ஒரு மையம்... 'அறுபதுகளின் பிற்பகுதியில்... சென்னை வந்தால் திருவல்லிக்கேணியிலிருந்து கோட்டை, அங்கிருந்து பிராட்வே,அப்படியே மூர் அங்காடிப் பழைய புத்தகக்கடை, மீண்டும் திருவல்லிக்கேணி, பழைய புத்தகக்கடை வரிசை என்று ஒரு நிதானமான சூறாவளியாய்... ஏதாவது கேட்டுத் துளைத்துக் கொண்டே வரும் தம்பிமார்கள் கொண்ட ஒரு சின்ன மேகக்கொத்தைத் தள்ளிக்கொண்டு நடந்தே திரிந்து வந்த அந்தக் கால்கள் மிகுதியும் வாங்குவது புத்தகங்கள்தாம். அந்தச் சுமையைப் பறித்தாலும் தர மறுத்துத் தாமே சுமந்து வரும் அந்த உறுதியான கைகள்... மறுபடியும் மாலையில் மரீனா மணலில் வளையும் பெரியசாமி தோளில் கைபோட்டு உந்தியபடி இலக்கியம் பேசிக்கொண்டு முந்தி எட்டுவைத்துப் போகும் இவரைப் பார்த்தபடி பொன்னம்பலம் கேட்பான். 'அன்ணனுக்குக் கால் வலிக்கவே செய்யாதா ? ' 'ஒரு சொல்லைக்கூட இழந்துவிடக்கூடாது ' என்று ம.பெ.சீ.யும், ப.கா.வும்,ஞானசேகரனும், இராசரத்தினமும் நானும் ஈடுகொடுத்து நடக்க என்னதான் முயன்றாலும் ஓரடி முந்தியே போய்க்கொண்டிருக்கும் இந்தக் கால்கள். எந்த ஊரில் இருந்தாலும் பார்க்கச் சென்றால் பேருந்து நிலையம் வரை கூடவே நடந்து வந்து வழியனுப்பிவிட்டுச் செல்லும் அந்தக் கால்கள்... ' ---- இக்பால் மீரா ஒரு சினேகமழை... 'இறுதியாக நினைத்து மகிழ்வதற்கு மனிதநேயர்களிடம் கண்டதும் கொண்டதுமான நட்புதான் இருக்கும் என்று நம்புகிறேன். முதல் நாள் காட்டிய அன்பையும் பரிவையும் வாழ்வின் இறுதிவரை காட்டுபவர்களை நினைத்துப் பார்க்கும்போது அவர்கள் காட்டும் அன்பும் பரிவும் அவர்களது இயல்பு என்ற முடிவுக்கு வருகிறேன். கவிஞர் மீரா அவர்கள் இயல்பும் அதுதான். '---- இன்குலாப் மீரா ஒரு கனவு... 'மீரா உடல்நலக் குறைவினால் சிறைப்பட்டுவிட்டார் என்று அறிந்து சிவகங்கை போனேன். மனம் கனத்துக் கிடந்தது. அண்ணி, பஞ்சு வந்திருக்கிறார் என்றவுடன் எழுந்து வந்தார். தாடியோடு கூடிய அந்த முகத்தைப் பார்க்கப் பார்க்க எனக்கு அழுகையாக வந்தது. சமாளித்துக் கொண்டு 'என்ன அண்ணே இது ? '-அவரும் கலங்கினார். 'கி.ராஜநாராயணன் எப்படி இருக்கிறார் ? '- விசாரித்துப் பேச்சை மாற்றினார். 'படுக்க வைத்து விட்டது ' என்பதுதான் அவரால் சகித்துக்கொள்ள முடியாத துயரமாக இருந்தது. ' ---- க.பஞ்சாங்கம் மீரா ஒரு அசரா அலை... 'அப்போது சிவகங்கையிலிருந்து சென்னைக்கு திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகத்தின் ஒரே பேருந்துதான் இருந்தது. வசதியான சாய்வு இருக்கைகள் இருக்காது. சென்னையிலிருந்து சிவகங்கை வந்தால் நாள் முழுக்கத் தூங்கினாலும் அழுப்புத் தீராது. ஆனால் பயணங்களில் அவருக்கிருந்த ஆர்வம் அதிசயமானது. சென்னையிலிருந்து காலையில் வருவார். ஒன்பது மணிக்கு மதுரைக்கு கிளம்புவார். திருச்சி, பிறகு பொள்ளாச்சி, கோயம்புத்தூர் , கூட்டங்கள், சந்திப்புகள், பதிப்பகவேலைகள், ஒரு சாம்பல் நிறப்பெட்டியுடன் கிளம்பிவிடுவார். உடன் சதுரம் சதுரமாக சசியின் புத்தகக்கட்டுகள். அவர் வாழ்நாளின் பெரும்பகுதி பயணங்களிலேயே கழிந்தது. மதுரையிலிருந்து சிவகங்கைக்கு வரும் கடைசி இரவுப் பேருந்துகளில் குறைந்தது வாரம் இரண்டு முறையாவது அவரைப் பார்க்க முடியும். இத்தனை உழைப்புக்கிடையில் கேட்பவருக்கெல்லாம் முன்னுரை எழுதினார். பாரதி நூற்றாண்டு விழா நடத்தினார். நவீன வாசனையற்ற செம்மண் நிலத்தில் கவிதை இரவு நடத்தினார். புத்தகங்கள் மீதான அவரது காதல் அளவிடமுடியாது. வீட்டில் திரும்பும் இடமெல்லாம் புத்தகங்கள். கையெழுத்துப் பிரதிகள். வடிவமைப்பு பற்றியும் புத்தகங்களைப் பற்றியும் ஆர்வமாகப் பேசுவார் ' ---- செழியன் மீரா ஒரு விருது... 'வாழ்ந்த வாசம் மட்டும்தான்... மீராவின் குடும்பம் சுவைக்க முடிந்த அவரின் சொத்து. அவரின் பெட்டியில் இருந்தவையெல்லாம் ஒரு வேட்டியும் நூறு ரூபாய்வரை கொடுத்து வாங்கும் சட்டையும் தவிர முழுவதும் பலரின் எழுத்துக்கள்தான். இன்று பேசப்படும் பல புத்தகங்கள் அவர் தீண்டியதால் கலை வடிவமானவை. வார்த்தைகளையும் வரிகளையும் செதுக்கி அழகியல் கொள்ள மறைந்து தொழில் செய்தவர். படைப்பாளியாக மட்டும் மீரா செயல்பட்டு இருந்தால் தமிழ் இலக்கியத்திற்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்திருக்கும் '---- க.வை.பழனிசாமி மீரா ஒரு வானம்... 'குறிப்பாக, எழுதுபவர்களுக்கு வலதுகையில்தான் அதிக இயக்கம். வலது கையில் கடிகாரம் கட்டிக்கொண்டால் பார்த்துக்கொண்டிருக்கும் வேலையை நிறுத்தாமலே நேரம் பார்த்துவிடலாம். வலது கைக்கு கடிகாரத்தைக் கொண்டு வந்து கட்டிய காரணம் இது என்ரு வெகு சிலர்க்கே தெரிந்திருந்தது. அவர்களுள் கவிஞர் மீரா ஒருவர். மீரா உலக மக்கள் எல்லோரும் கவிதை எழுத வேண்டுமென்றும் முடிந்தால் அவை அத்தனையும் புத்தகங்களாகப் போட வேண்டுமென்றும் நினைத்தார். கவிதை வெளிப்பாட்டில் அவ்வளவு விரிந்த மனம் மீராவுக்கு ' --- கந்தர்வன் மீரா ஒரு யுகம்... 'எனது மனைவியை அழைத்துக்கொண்டு சிவகங்கையில் அவர் வீட்டுக்குச் சென்றபோது, மனித நேயராக கடைசி நிமிடம் வரை வாழ்ந்த ஒரு கவிஞன் மரணமற்ற பெருவாழ்வில் இருப்பதையும் அதே சமயம் அவர் வசித்து வந்த அந்தத் தேகம் அசைவற்றுக் கிடந்ததையும் பார்த்துக் கலங்கினேன். கை குவித்தேன் '---- பெ.சிதம்பரநாதன் மீரா ஒரு புத்தகச்சந்தை... 'புத்தகம் சம்பந்தமாய் வந்தாய் -- ஒரு புத்தகச் சந்தையில் பார்த்துக் கொண்டோம் புத்தகமாகவே ஆனாய், நண்பனே. '---- கி.ராஜநாராயணன் மீரா ஒரு தராசு... 'மீரா என்ற கல்லூரி ஆசிரியரின் போராட்ட முகத்தையும் நாம் உற்று நோக்கவேண்டும். எமக்குத் தொழில் கவிதை என்பதை முகமூடியாய் அணிந்து கொண்டு தன்னை அவர் தனிமைப்படுத்திக் கொண்டதில்லை. கல்லூரியில் நேருக்கு நேர் நின்று எதிர் கொண்ட போர்க்குணம் அவருடையது. ஆசிரியர் நலன் காப்பதற்கான போராட்டங்களின்போது உண்ணாவிரதம் இருப்பதற்கோ, கைதாகிச் சிறைச்சாலைகளில் அடைபடுவதற்கோ அவர் என்றைக்கும் பின்வாங்கியதே இல்லை. கல்லூரி ஆசிரியர்களின் போராட்டத்தின் ஒரு பகுதியாக அண்ணா சாலையில் ஒரு நாள் முழுக்கச் சுட்டெரிக்கும் வெயிலில் உடலை வருத்திக்கொண்டு உண்ணாவிரதம் இருந்ததை இன்று நினைதாலும் நெஞ்சம் பதைக்கும் '---- இளம்பாரதி மீரா ஒரு இளகியநிலவு... 'எழுத்தாளர்கள்மீது மிகுந்த மரியாதையும் அக்கறையும் கொண்டவராக இருந்தார் மீரா. அவர்களில் பலர் வாழ்க்கை நன்றாக இல்லையே என்று வருந்தியிருக்கிறார். மலையாள எழுத்தாளர்கள்போல் அவர்களுக்கும் போதிய வருமானம் உத்திரவாதம் செய்யப்படவேண்டும். அதற்காக அங்கிருப்பதுபோல் எழுத்தாளர் கூட்டுறவு பதிப்பகம் தோன்ற வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார் ' ---- எஸ்.விஸ்வநாதன் மீரா ஒரு உலகம்... 'மீரா வெறும் கவிஞர் மட்டுமன்று. அவர் சிறந்த வாசகர். பேராசிரியத் தன்மையற்ற பேராசிரியர். மனிதர்கள் சாகிறபோது அவர்களுக்குள் உலகங்கள் சாகின்றன என்றும் சொல்வார்கள். கவிஞர் மீரா மறைந்தபோது எனக்குள் பல இலக்கிய உலகங்கள் இறந்து போய்விட்டன ' ---- இந்திரன் மீரா ஒரு ஒளி... 'திராவிட முன்னேற்றக்கழகம், இடதுசாரி இயக்கங்கள், பல்கலைக்கழகங்கள், மூட்டா, பதிப்பகத்துறை, படைப்பாளிகள், சாகித்ய அகாதமி, தமிழ் வளர்ச்சித்துறை இவற்றின், இவர்களின் எந்த வெளிச்சமும் மீராவின் மீது உரிய நேரத்தில் உரிய அளவில் விழவில்லை ' ---- கல்யாண்ஜி மீரா ஒரு சமத்துவப்புறா... 'புதுமைக்கவிஞன், போர்க்களப்புலவன், அறத்தின் நாயகன் , அனைவர்க்கும் தோழன், சமத்துவ வேட்கையால் சரித்திரம் படைத்தோன், தன்னலமின்றித் தமிழ்ப்பணி புரிந்தோன், தமிழ் உள்ளவரை அவன் புகழ் வாழும் ! '---- தி.க.சிவசங்கரன் மீரா ஒரு நம்பிக்கை... 'கவிஞர் மீரா நம்பிக்கை மனிதர். தனக்கு எதிராக உலகமே சுழன்று தாக்கிய போதிலும் நம்பிக்கை மனிதர்கள் தளர்ந்து விடுவதில்லை. கம்பீரமாக எழுந்து நின்று தனக்காக வாழ்க்கையைப் பிரபஞ்சத்தில் பதிவு செய்து விடுகிறார்கள் ' ---- சி.மகேந்திரன் மீரா ஒரு தோழமைக்கடல்... 'இப்படியொரு கலப்படமற்ற அன்பை, நிபந்தனைகளற்ற நட்பை இனி யாரிடம் பெறப் போகிறோம். பூமிக் கிண்ணத்தில் வார்க்கப்பட்ட அவரது வாழ்வென்னும் பாலினை ஓர் துளியும் மிச்சம் வைக்காது அருந்திவிடும் அன்னம். ஆம் அவரது வாழ்வும் கலப்படமற்றது. அது அகரம். ' ---- கலாப்ரியா மீரா ஒரு சரி... 'அன்னம் பதிப்பகத்தின் நூல்களையெல்லாம் அச்சிடத் தாமே அகரம் என்ற பெயரில் அச்சகம் ஒன்றையும் நடத்தினார். பிழைகள் இல்லாது நூல்களை அச்சிட்ட பெருமை அகரத்திற்கு உரியது '---- பு.இராசதுரை மீரா ஒரு முரண்... 'மீராவின் கனவுகள் ஏதும் நனவாகுமா என்பது தெரியவில்லை. ஆனாலும் அவர் கனவொன்று பொய்த்ததை இங்கு சொல்ல வேண்டும். மீரா நாத்திகராக வாழ்ந்தார். தனது சாவிலும் கூட அவர் அவ்வாறே வாழ முடியும் என கற்பனைகள் செய்திருக்கக்கூடும். பகுத்தறிவு, பொதுவுடைமைச் சிந்தனைகள் மீதும் இயக்கங்கள் மீதும் பெரும் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார். ஆனாலும் அவரது உடல் இந்து மதச் சடங்குகளோடு எரியூட்டப்பட்டது. தன்னை ஏங்கல்ஸின் மாணவன் என்று பெருமையோடு தன் காதலியிடம் அறிமுகம் செய்து கொண்டவர் அவர். அவரது மரணத்தையும் விஞ்சிய அழுத்தத்தை அவரது உடல் எரியூட்டு உண்டாக்கியது. பாரதி குடில் உருவாக்க அவர் நினைத்த இடத்தில் அவரை அடக்கம் செய்திருக்கவேண்டும். '---- குருசாமி மயில்வாகணன் மீரா ஒரு கறையிலாக் கவிதை... 'மீரா ஓர் இனிய கவிதை. மீரா கடவுள் எழுதிய கவிதையா... காலம் எழுதிய கவிதையா... சமூகம் மாற்றி வடிவமைத்த காவியமா... ? ' ---- தனுஷ்கோடி ராமசாமி மீரா ஒரு வரலாறு... 'உ.வே சாமிநாதய்யரால் பல பழைய இலக்கியங்கள் நமக்குக் கிடைத்தன. மீரா இருந்திராவிட்டால் நமக்குப் பல புதிய இலக்கியங்கள் கிட்டியிரா ' ---- நீலமணி மீரா ஒரு காதலன்... 'குழல் ஊதும் கண்ணனைக் காதலித்தால் மீரா. இனிதான பாடும் குரலுக்காக என்னைக் காதலித்தார் கவிஞர் மீரா சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளைங்கலைப் பட்டம் முதலாண்டு படித்த காலம் 1979. எங்களுக்கிடையே காதல் அரும்பிய காலம் அது. ' ---- கே.ஏ.குணசேகரன் மீரா ஒரு பன்முகவெண்பா... 'சமணர் மொழியில் சொன்னால் அவர் ஒரு பக்குவ சீவன். பேராசிரியர் கூற்றில் சொன்னால் அவர் புதுக்கவிதையின் உ.வே.சா. மூட்டாவினர் கருத்துப்படி அவர் கோரிக்கைகள் நிறைவேற்றிய கோடிக்கைகள். அரசுக் கல்லூரி ஆசிரியர் பார்வையில் அவர் கல்லூரி ஆசிரியரின் குரல். சுருங்கச் சொன்னால் மனிதம் என்பதின் மருதுவின் கோட்டோவியம் அவர். '---- க.முத்துச்சாமி மீரா ஒரு சிவகங்கை... 'என் தந்தையையொத்த வயதில் ஒரு நெருங்கிய நண்பரைப்போல் மூத்த சகோதரரைப்போல் தனது இறுதிக் காலங்களில் என்னோடு அவர் கொண்ட அன்பு . சிவகங்கை எனும் ஊரின்மீதான பாசத்தைத்தான் விதைத்து விட்டிருக்கிறது. மீரா அவர்களின் ஊர்ப்பாசம் தாய்ப் பாசத்திற்கு நிகரானது. '---- சந்திரகுமார் 'மீரா எனக்குச் சிறுகதவாய் இருந்தார். லேசாகத் தொட்டாலே திறந்து கொள்ளும் கதவு. மீராவுக்கு ரொம்பவும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன் நான். ஆனால், அந்த மீராவை நேரிலோ கூட்டங்களிலோ ஒரு முறை கூட நான் பார்த்ததில்லை. சந்தித்ததில்லை. பெரிய இழப்பாக உணர்கிறேன் இப்போது ' என்று சொல்லும் பெருமாள் முருகனின் வார்த்தைகள் எனக்கும் பொருந்தும்... காரணம் நான் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்திருந்த அந்த மாகவியின் படைப்புகளிலேயே எனக்குள் அவன். பார்த்ததில்லை... பேசியதில்லை... பழகியதில்லை... இருப்பினும்,மீரா எனும் வார்த்தையும் அது செய்த இயக்கமும் என் ஆத்ம நெருங்குதலின் இனிய பதியமாய் என்றென்றும்...மீரா என்ற புல்புல்லின் நினைவோசை அவர் படைத்த சாகாத வானத்தில் சஞ்சரித்துக்கொண்டுதான் இருக்கும் எந்நாளும்... விடியலின் ஒவ்வொரு பூபாளமும் மீரா என்ற கீர்த்தனையை இசைத்துக் கொண்டுதான் இருக்கும் யுகத்தின் இறுதிவரை... மீரா நம்மை விட்டுப் பிரிந்த வருடங்கள் தங்களின் தொலைவைச் சொல்லலாம் ஆனால், தோன்றி மறைந்து மறையாமல் இருத்தலின் உயிர்ப்பை உணர்கின்ற ஓவ்வொரு படைப்பாளிக்குள்ளும் மீரா வாழ்கிறார்... ---- நெப்போலியன் என் அப்பாவின் பாச விரல்கள் பிடித்து நடை பயில ஆரம்பித்த அந்த முதல் வினாடியை, என் மௌனத்தை வென்ற அந்தப் பாசத்தின் உயிர் நாடியை, இந்தக் கட்டுரையினை எழுதத் துவங்கும் என் விரல்களுக்குப் பரிசளித்த உவகையோடு, அந்த இதமான பாசத்தின் நினைவுகளுக்குள் மூழ்கிப் பார்க்கின்றேன். அள்ள அள்ளக் குறையாத முத்துக்கள் குவிந்திருந்த நேரத்தினை எண்ணி பின்னோக்கி மகிழ்கின்றேன். பட்டாம் பூச்சியாய் சுற்றித் திரியும் மனமதில் மகிழ்ச்சியின் எல்லையில்லாத தருணமதை நிரப்புவது என்பது ஒவ் வொரு மகளுக்கும் அப்பாவிடமிருந்து கிடைக்கப் பெறும் வெகுமதியாகவும், சுதந்திரமாகவும்தான் பார்க்கின்றேன். நம் வாழ்வின் மிகப்பெரிய பலமும் அதுவாகத்தான் இருக்கமுடியும். அப்படித்தான் எனக்கும் கிடைத்தது என் அப்பாவிடமிருந்து, எத்தனையோ நேரங்களில். என் உயிரின் எல்லா நற்பண்புகளையும் இனிமையையும் விழிப்புறச் செய்தது. என் அப்பாவுடனான என் வாழ் நாள் பயணங்கள், கட்டுமீறிய அவரது செயல் ஓட்டத்தின் பிரமிப்புகளுக்குள் ஈடுகொடுக்க முடியாமல், அதே சமயத் தில் அவரது பணிகளின் அசாத்திய சுறுசுறுப்பினைக் கண்டு உள்வாங்கிய கண்களைப் பெற்ற நான் இன்னும் அந்த விந்தையிருந்து மீளவேயில்லை. அப்பா- மகள் என்ற உறவை மீறிய தோழமை எங்களுக்குள் எப்பொழுதும் உண்டு. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் என் அத்தனை செயல்களும் அப்பாவின் அன்பின் எல்லைகளுக்கு உட்பட்டதாய் இயல் பாகவே அமைந்து விட்டன. என்னு டைய கல்லூரிக் காலத்தில் மாணவர் களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சி களுக்காக “ஈகமஇ ஆஈபஒயஒபஒஊந&ஹல்ர்ள்;&ஹல்ர்ள்; என்று சொல்லக்கூடிய அமைப்புகள் செயல் பட்டன. அதில் போட்டிகள் நடை பெறும். கதை, கவிதை, இசை என்ற தளங்கள் பிரிக்கப்பட்டிருந்தது. நான் தெரிவு செய்து பங்கேற்றது கவிதைகளில்தான். வரிகளில் பற்றாக்குறை இருப்பினும் என் முயற்சிக் கான அட்சதையைத் தூவி என்னை எழுதுமாறு ஊக்கப்படுத்தி, ரசித்துப் போற்றிய முதல் ரசிகர் அப்பாதான். அதேபோன்று நான் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்து அழகு பார்த்த அவரது விழிகள், என் பாடங்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதிலும் தளர்ச்சி காட்டியதேயில்லை. ஆங்கிலக் கட்டுரைகளையும் மொழிபெயர்த்து தமிழ்வாசத்துடன் தந்த அழகான நாட்கள் இன்னும் என் நினைவுகளில் இளைப்பாறுகின்றன. அப்பாவுக்கு என்னிடம் ஒரே ஒரு குழப்பம் உண்டு. குறிப்பாக அது ஏழு எட்டு வகுப்பு வரைதான், பத்தாம் வகுப்பு சென்றவுடன் அது தீர்ந்துவிட்டது. குறிப்பாக அப்பாவைச் சந்திக்க வரும் படைப்பாளிகளிடம் என்னை அறிமுகப்படுத்தும்பொழுது, "ஏழு&ஹல்ர்ள்; தானம்மா படிக்கிறாய்? "எட்டு&ஹல்ர்ள்; தானம்மா படிக்கிறாய்? என்ற திணறல் களுடன் உறுதி செய்துகொள்வார். எனக்கோ கோபத்தின் எல்லையின் ஊடே எழும் சிரிப்போ என் கண் களில் ஈரமாய் தெரியும். இன்று நினைத்தாலும்கூட. இனிமை, ரசனை, நேர்த்தி, அன்பு, பாசம் என்ற மேலான பண்புகளை அப்பாவிடமிருந்து பெற்ற பாக்கியசாலியாகவே என்னை நான் கருதுகின்றேன். எத்தனையோ இரவுகள் அப்பா வின் பாசக்குரல் ஒலிக்கும். அது நான் விரும்பிக்கேட்ட பாடல் அல்லவா என எனக்கு உணர்த்திவிடும். என்னை எழுப்பி ஊட்டிவிட்டு அழகு பார்த்த அந்த விழிகளின் ஈரம் என் நெஞ்சத்தில் இன்பத்தூறலைச் சிந்திக் கொண்டேயிருக்கிறது. இரவுகளில் அப்பா ஊட்டியது உணவு மட்டு மல்ல; எனக்கான தன்னம்பிக்கையையும்தான். என் அப்பாவின் சைக்கிளில் நான் பயணம் செய்த இனிமையான அனுபவம் எந்த வானூர்தியும் கொடுக்க முடியாததொரு பசுமையான நினைவது. என் உடல் பருமனையும் பொருட்படுத்தாது, மிகவும் சிரமத்துடன் என்னை வைத்து அழுத்திய அந்த நொடிகளை விளையாட்டாய் ரசித்தேன்-. பின்னாளில் என் கண்கள் வலிக்கப் போவது தெரியாமல். அப்பாவின் மென்மையானதொரு நட்பின் பாசமிகு நண்பர்கள்தான் மிகப்பெரிய சொத்தெனக் கருதி மகிழ்ச்சி அடைந்தார். என் தந்தையார், கவிக்கோ, பேராசிரியர் இ.வா. பாலசுந்தரம் மூவரும் அன்பில் ஒன்றாய் இணைந்தே இருந்தார்கள். இவர்களது செல்லச்சண்டைகள் தான் என் மனதைப் பறித்தது. கவிக்கோ, கவிஞர் சிற்பி, கவிஞர் மு. மேத்தா, விஜயா பதிப்பகம் மு. வேலாயுதம், கவிஞர் அப்துல் காதர், கவிஞர் அறிவுமதி, கவிஞர் பெ. சிதம்பரநாதன், கவிஞர் இரா. மீனாட்சி, கவிஞர் இந்திரன், கவிஞர் க.வை.பழனிச்சாமி, நாவலாசிரியர் கு. சின்னப்பபாரதி, எழுத்தாளர் கி.ரா, கவிஞர் ரவி சுப்ரமணியன், ஒளிப் பதிவாளர் செழியன், கவிஞர் இலக்கியா நடராசன், கவிஞர் இசாக், கவிஞர் கலாப்ரியா, கவிஞர் கல்யாண்ஜி, "தி இந்து&ஹல்ர்ள்; நாளிதழ் விசுவநாதன் என்று நீண்டு முழக்கமிடும் அப்பாவின் நட்பின் பாசப் பட்டியல். வேர்விட்டு வளர்ந்திட்ட தங்களது ஆழமான நட்பின் அடையாளமாக என்னையும் ஊக்கப்படுத்தி பாசத்துடன் வழி நடத்தி அழகு பார்க்கிறார்கள். சென்னைக்குச் செல்லும்பொழுது கவிக்கோ அவர்களைச் சந்தித்து விட்டு வந்தால்தான் என் மனம் மகிழ்ச்சியில் அதன் கொள்ளள வைத் தொட்டதெனக் கருதி நிறைவு பெறும். அப்பாவின் சுவாசக்கூட்டின் முழுமையான சுவாசம் நட்பானதால், என் அப்பா தன் நண்பர்கள் அனைவரையும் தன் உடல் உறுப்பு களின் அங்கங்கள் என்றே கூறினார். நானும் இன்று என் அப்பாவின் நடை, உடை, பாவனைகள், தொனி, கம்பீரம், அன்பு எல்லாவற்றிற்கும் மேலான பாசத் தினை, அவரது அன்பில் ஊறித்திளைத்த ஒவ்வொரு வரிடத்தும் செதுக்கியிருப்பதை எண்ணி உள்ளம் பூரிக்கின்றேன். இப்படியான அப்பாவின் மேலான நட்பின் பாரம்பரியத்துக்குள் நானும் வசித்து வருகின்ற பெருமை மிகுந்த நாட்கள் இன்றும் எனக்குள். படைப்பாளர்களை உற்சவமூர்த்தியாய் அலங் கரித்துத் தேரில் ஏற்றி, இலக்கிய உலகில் வலம் வரச் செய்து, தேரின் வடத்தை தானே பிடித்து இழுத்து மகிழ்ந்த அந்த நேரங்களில் அப்பா யானை பலம் கொண்டு செயல்பட்டார். இலக்கியத்திற்கென அர்ப்பணிக்கத் துணிந்த தன் வாழ்வினை, புதிய தன் எழுத்துகளில் கொண்டுவர விழிகள் நிறைய ஆசைகளிருந்தும், வழிமறித்த நேரமின்மையால் பதியம் செய்வதைத் துறந்தார். சிவகங்கை கவிக் குயிலின் மண்வாசம் அனேக படைப்பாளர்களை, கரங்கள் பிடித்து அழைத்துவரச் செய்தது. பல எழுத்தாளர்கள் தங்களது எழுத்தின் முதல்விதையை விதைக்கச் செய்த பெருமை சிவகங்கைக்கு உண்டு. அப்பாவின் கனவுகளின் மெய்ப்பாடாய் தொடங்கபெற்ற "அகர&ஹல்ர்ள்;த்தின் பதிப்புப்பணிகள் இன்று முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. அப்பாவின் கனவுகள் காற்றில் கரைந்து போகாமல் என் அண்ணன் திரு. கதிர் அவர்கள் அச்சாக்கத்தில் புதிய புதிய உத்திகளைக் கையாண்டு மெருகேற்றி வருகிறார். அச்சுத்துறையும் கல்லூரிப்பணியும் அப்பா வின் அதிகப்படியான நேரத் தினை முடக்கிப் போட் டாலும் சோர்வு ஏதுமின்றி மீண்டு விடுவார். சிவகங்கை வீட்டுக்கு வரும் படைப்பாளிகளை உபசரித்து விருந்தோம்பல் செய்வதுதான் அவரின் மனதிற்கு மிகவும் பிடித்தமானதொரு பழக்கம். அம்மாவின் பங்கு இதில் ஈடு இணையில்லாதது. விருந்தோம்பல் முத்திரை பதித்து, அப்பாவின் எண்ணங்களின்படி செயலாற்றுவதை தனக்குப் போதுமான மனநிறைவாக்கிக் கொண்டார். இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கி, மதுரை பல்கலைக் கழக ஆசிரியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தொடங்கப்பட்ட "மூட்டா (MUTA)-வில் தீவிரமாகக் களமிறங்கி, சிறைசென்று செயலாற்றியது மட்டுமின்றி, மன்னர் துரைசிங்கம் கல்லூரியை அரசுடைமையாக்கும் பெரும் பொறுப்பினை ஏற்று அதில் வெற்றியும் பெற்றார். அவரது கவிதைகள் அரசியல் களங்களிலும் குதித்து கவிமுழக்கம் செய்தன. "தெய்வங்கள் திருநாட்கள் எங்கட்கில்லை தெருவோரச் சாக்கடையில் வருமா தெப்பம்?" பேரறிஞர் அண்ணாவை ஈர்த்த கவிதை இது. என் அப்பாவிடம் எனக்கான ஆசைகள் ஒவ்வொன்றாய் உதிர்க்கக் கற்றுக் கொடுத்தன, அவரின் மென்மையான ஆளுமை. அப்பாவின் நிழலாக வளர்ந்த நான் அவர் செல்லும் கவியரங் கங்கள், இலக்கிய விழாக்களுக்குச் செல்வதை பிடித்தமான பழக்கமாக வைத்திருந்தேன். புரியாத விழிகளுடன், அப்பா பேசி முடித்தவுடன் என்னிட மிருந்து கைதட்டல்கள் பலமாக இருக்கும். அப்பாவிற்கு கைகள் தட்டுவதற்காகவே கிளம்பிய என் நோக்கமானது நிறைவேறிய பெருமிதத்துடன் நகரும் என் கால்கள், உள்ளூர மழையை முத்தமிட்டது போன்றதொரு மகிழ்ச்சியில். என் விழிகளுக்கு பார்க்கவும் நேசிக்கவும் கற்றுக்கொடுத்த என் தந்தையாரை நான் பார்க்கும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் அவரது கம்பீரத்தை இறுகப் பற்றிக் கொள்ளத் தோன்றும். என் அப்பாவை இழந்த இரவுகளின் வலி என் நெஞ்சத்தை அறுத்துக்கொண்டேயிருந்தது. காலத்தின் குடைச் சல்களில் வேதனைகள் சுரந்து கொண்டே இருந்தன. அரித்துத் தின்ற சோகத்தின் பக்கங்களை உதடுகள் வாசித்துக் கொண்டேயிருந்த நொடிகளிலிருந்து தொடங் கிற்று என் கவிதைகள் ஒவ்வொன்றும் அப்பாவின் இயக்கமாய். என் தகப்பன் எனக்கு சொல்லிக்கொடுத்தவை நிறைய புத்தகங்கள் படி வாசிப்புத் தளத்தை விரிவாக்கு இது என் அப்பாவின் குரல்மொழி மட்டுமல்ல; அவரது செயல்வழியும் அப்படித்தான் இருந்தது. அப்பாவின் கூற்று மெல்லமெல்ல பிடிபட ஆரம்பித்த நேரத்திற்குள் அப்பா வெகுதூரம் சென்றுவிட்டார். அவர் விட்டுச் சென்ற கவிதைகள் காற்றில் உலாவந்து என் மனதை உற்சாகப்படுத்திக் கொண்டே யிருக்கின்றன. அப்பா புறப்பட்டுப்போய் பத்தாண்டுகள் ஆகியும் நான் இன்று எழுதிக்கொண்டிருப்பதை எனக்குப் பின்னால் இருந்து பார்த்துக் கொண்டே யிருப்பதைப் போலத்தான் உணர்கின்றேன். சிவகங்கை வீட்டின் அரணாய் நிற்கும் அரசமரத்தின் சருகுகள் எல்லாம் அப்பா கடந்து வந்த பாதைகளை அசை போட்டுக் கொண்டேயிருக்கின்றன. அப்பாவின் விரல்கள் தொடும் புத்தகங்களை காற்று உச்சி முகர்ந்து புரட்டிக் கொண்டேயிருக்கிறது. -------------------- சாகாத வானம் நாம் சாகாத வானம் நாம்; வாழ்வைப் பாடும் சங்கீதப் பறவை நாம்; பெருமை வற்றிப் போகாத நெடுங்கடல் நாம்; நிமிர்ந்து நிற்கும் பொதியம் நாம்; இமயம் நாம்; காலத்தீயில் வேகாத பொசுங்காத தத்துவம் நாம்; வெங்கதிர்நாம்; திங்கள் நாம்; அறிவை மாய்க்கும் ஆகாத பழமையினை அகற்றிப் பாயும் அழியாத காவிரிநாம்; கங்கையும் நாம்; சுயநல அரசியல் எங்கள் ஊர் எம்.எல்.ஏ ஏழு மாதத்தில் எட்டுத் தடவை கட்சி மாறினார் மின்னல் வேகம் என்ன வேகம்? இன்னும் எழுபது கட்சி இருந்தால் இன்னும் வேகம் காட்டி இருப்பார்..... என்ன தேசம் இந்தத் தேசம்? கணக்குப் பார்த்த காதல் உனக்கும் எனக்கும் ஒரே ஊர் - வாசுதேவ நல்லூர் ... நீயும் நானும் ஒரே மதம்... திருநெல்வேலிச் சைவப் பிள்ளைமார் வகுப்பும் கூட,.. உன்றன் தந்தையும் என்றன் தந்தையும் சொந்தக் காரர்கள்... மைத்துனன் மார்கள். எனவே செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே. அனுதாப அரசியல் செத்த பிணத்தைக் கட்டி அழலாம் முடிந்தால் காட்டி அள்ளலாம்! கும்பல் மனோபாவம் கூடல் நகரில் கூட்டம் கூட்டம் கூட்டம் கூட்டம் கூட்டம் கூட்டம் கூட்டம் பார்க்க... உள்ளும் புறமும் மேலே மேலே பூக்கடை கீழே... சாக்கடை ! கத்திரிக்காய் என்ன காதலா? இரவில் காதல் என்ன கத்திரிக்காயா? தொடர் கதை எழுதிய வாணி மணாளன் பகலில் காய் கறிக்கடை சந்தைக்கு சென்று கத்திரிக்காய் விலை கிலோ இரண்டென கேட்டு அதிர்ந்தார் அயர்ந்தார் கத்திரிக்காய் கடைக்காரன் கடுப்பில் சொன்னான் அவ்வளவு மலிவாய் அள்ளிக்கொண்டு செல்ல கத்திரிக்காய் என்ன காதலா? தமிழாமோ? திங்கள்முக மங்கைவிரல் தீண்டித்தரும் இனிமை தெங்கின்குலை இளநீர்ச்சுவை தேக்கித்தரும் இனிமை செங்கள்தரும் இனிமை நறுந் தேமாதரும் இனிமை எங்கள் தமி ழினிமைக்கொரு இணையாய்வரு மாமோ? கடலில் விளை முத்தும்நிலக் கருவில்விளை பொன்னும் தொடவும் முடி யாமல்முகில் தொட்டேவிளை சாந்தும் தொடரும்மலைக் கூட்டம்விளை தூய்மைநிறை மணியும் சுடரும்தமி ழுயர்வுக்கிணை சொல்லத்தகு மாமோ? குயிலின்மொழி குழலின்மொழி குயிலின்மொழி குழலின்மொழி குழந்தைமொழி கட்டில் துயிலும்பொழு திசைக்கும் இளந் தோகைமொழி கேட்டுப் பயிலும் ஒரு கிளியின் மொழி பண்யாழ்மொழி எல்லாம் உயிரில்எம துளத்தில் உரம் ஊட்டும்தமி ழாமோ? அந்தி அடிவானம் சிரிக்கிறது! மோதி மோதி ஆயிரமா யிரமான வாள்மு ழக்கம் முடிவான பெருங்கலிங்கப் போர்க்க ளத்தின் முகமாகச் சிவக்கிறது! மினுக்கும் வைரப் பொடியான விண்மீன்ஒவ் வொன்றாய்த் தோன்றிப் புன்னகையை விரிக்கிறது! யானைக் கொம்பு வடிவான பிறைத்திங்கள மேகம் கீறி வருகிறது! வளர்கிறது! வாழ்க அந்தி! காலைமலர் கதிரவனின் பிரிவுக் காகக் கண்ணீரை வடிக்கிறது! காத்தி ருந்த மாலைமலர் மாப்பிள்ளை மதியைக் கண்ட மகிழ்ச்சியிலே சிலிர்க்கிறது! கண்ப றிக்கும் சோலைமலர் வண்டுக்குத் தேனை ஊட்டித் தூங்கவைக்கப் பார்க்கிறது! வனப்பு வாழும் சேலைமலர்க் குழுஒன்று குடத்தைத் தூக்கிச் செல்கிறது சித்திரத்தேர் போல சைந்தே! வண்ணநிலவே, வரவா? கன்னிப் பெண்ணின் கவின்நெற் றியைப்போல் முகிழ்த்து மேலும் முயன்று முயன்று வளர்ந்தே அவள்முக வடிவம் அடைகிறாய்; வண்ண நிலவே வா! வா! இயற்கை அன்னையீன் றெடுத்த அருமை மக்களுள் உன்னைப் பார்க்கையில் உவகை வளர்க்கிறேன். உன்னுடன் பிறந்தவன் உண்மையில் வஞ்சிக் குட்டுவன் போலக் கோபக் காரன்! இளங்கோ போல இருக்கிறாய் நீ தான் - இப்படிச் சொல்வதை இதம்தெரி யாமல் காலை வேலைக் கார னிடம்போய்ச் சொல்லி விடாதே; சுடுவான் என்னை! என்ன நிலவே, எதற்குச் சிரிக்கிறாய்? திரைப்பட நடிகையைத் தெருவில் பார்த்ததும் முந்தி யடித்து மொய்த்துக் கொள்ளும் விசிறிகள் போல விண்மீன் கூட்டம் உன்னைப் பார்த்ததும் ஓடோடி வந்து கண்ணடிப் பதனைக் கண்டா சிரிக்கிறாய்? நிலா முத்தம் என்றதும் முயல்வே கத்தில் ஓடவா பார்க்கிறாய்? ஒளியவா பார்க்கிறாய்? கூடாது... முத்துக் குடையே! கொஞ்சிக் கூடாது பிரியக் கூடாது! சற்றே இரு!இரு! என்றன் இருவிழி யைப்பார்! பருவத் தால்நான் படும்பாட் டைப்பார்! உருவம் மெலிந்தே உள்ளேன்! என்னைக் கொஞ்சம் கவனி, கொய்யாப் பழமே! துயரை மறக்கத் துணைசெய்; வரவா? சம்மதம் தானா? “சரி” சொல்! உன்னை எட்டிப் பிடிக்கவா? இதயங் குளிரக் கட்டிப் பிடிக்கவா? களிக்கவா நிலாவே? காக்கைக்கு....! தன்சாதி என்று தமிழ்க்கவிஞன் பாரதியும் உன்சாதி யைக்கண்(டு) உவகையுடன் பாட வைத்தாய்; பாடத் தெரியாப் பறவையே! காக்கையே! காடு மலையெங்கும் கண்டபடி சுற்றிப்பின் பாட்டுக் கலைஞானப் பண்டிதன் நான் வாழுகின்ற வீட்டுச் சுவர்மீது வேந்தனைப்போல் வீரமுடன் வந்தே அமர்கின்றாய்; வந்தவே கத்தில்நீ முந்தி எழுப்புகின்றாய் காகா எனும்முழக்கம்! என்ன கருத்தில் நீ காகாகா என்கின்றாய்? ‘என்னைக்கா’ என்றோ இயம்புவாய்? மாட்டாயே! எண்ணம் புரிகிறது; சூழ்ந்துவரும் ஏழ்மையினால் உண்ண உணவின்றி வாடும் உயிர்களைத்தான் கா என்பாய் போலும்! கவிதைத் திருநாட்டைக் கா என்பாய் போலும்! கருங்குயிலின் அண்ணனே! பெண்ணாகப் பிறந்தேனா? பிறந்ததுதான் பிறந்தேன் நான் பெண்ணாகப் பிறந்தேனா? துகிலுக்குள் மூடுபடாத் தூயமுகம் காட்டித்தான் முகிலுக்குள் போய்நிலவை முகம்மூடச் சொன்னேனா? பிறந்ததுதான் பிறந்தேன் நான் பெண்ணாகப் பிறந்தேனா? முள்ளில்லாத முல்லைப்பூ முறுவலிக்கும் போதில்என் வெள்ளைப்பல் வெளிச்சமிட்டு ‘வெவ்வெவ்வே’ என்றேனா? பிறந்ததுதான் பிறந்தேன்நான் பெண்ணாகப் பிறந்தேனா? தீந்தேனைச் சிந்துகின்ற தென்னாட்டுப் பூக்களைஎன் கூந்தலிலே சிறைவைத்துக் குதூகலம்தான் அடைந்தேனா? பிறந்ததுதான் பிறந்தேன் நான் பெண்ணாகப் பிறந்தேனா? பலாச்சுளைபோல் மின்னும்என் பாதநடம் பார்த்துமயில் கலாபத்தை விரித்தாடக் கற்றுத்தான் கொடுத்தேனா? பிறந்ததுதான் பிறந்தேன்நான் பெண்ணாகப் பிறந்தேனா? மரக்கிளையில் அமைர்ந்திருக்கும் மாங்குயில்கள் மயக்கும்என் குரல்கேட்டுப் பின்கூவக் குருவாய்நான் ஆனேனா? பிறந்ததுதான் பிறந்தேன்நான் பெண்ணாகப் பிறந்தேனா? நள்ளிரவு நாடகத்தில் நகைச்சுவையாய் வந்துதித்த பிள்ளைக்குப் பாலூட்டும் பெரும்பேறு பெற்றேனா? பிறந்ததுதான் பிறந்தேன்நான் பெண்ணாகப் பிறந்தேனா? ஆ! பசும்புல்லை மேய்வதனால் என்னை நீங்கள் பசுஎன்பீர்; என்பேரோ கார ணப்பேர்! முசுகுந்தன் முன்னோனாம் மனுவின் மைந்தன் முறைதவறித் தேரோட்டி என்னி னத்தின் சிசுமாய்த்தான்; ஆராய்ச்சி மணிய டித்தேன்; செவியுற்ற சோழன்ஓ டோடி வந்தான்; பசுவாஆ ராய்ச்சிமணி யடித்த தென்று பார்த்தே ‘ஆ’! என வியந்தான், “ஆ” ஆனேன்நான்! பெண்பால் நான்! என்பாலை உண்டே நீங்கள் பெரும்பாலும் உரங்காண்பீர்! நீங்கள் தாய்ப்பால் உண்பதெலாம் ஒருபருவம்; ஆனால் என்பால் உயிர்போகும் வரைபருகி வருவீர்! இந்தப் பண்புணர்ந்தே குறளுக்கு ‘முப்பால்’ என்று பழந்தமிழர் பெயரிட்டார். ஆனால் இன்று பண்பாட்டில் மிகமட்டம் நீங்கள்; கன்று பால், கூடக் குடிப்பதற்கு விடுகின் றீரா? எனக்கிருக்கும் ஆசையெல்லாம்....! அவன்:- எனக்கிருக்கும் ஆசையெல்லாம் இதுதான்: கண்ணே! எள்ளளவும் மாசில்லாப் பொன்னால் செய்த வனப்புள்ள சங்கிலியை வாங்கி உன்றன் வாசச்சந் தனக்கழுத்தில் போட வேண்டும்; பனிமலரே, நீ மிகவும் கவர்ச்சி யாய் என் பக்கத்தில் வந்தமர வேண்டும்; அந்தத் தனியழகை நான் உண்ண வேண்டும்; உம்.... உம்... தைமாதம் பிறக்கட்டும்; வழிபி றக்கும்! எனக்கிருக்கும் ஆசையெல்லாம் இதுதான்: கண்ணே! எப்படியும் பளபளக்கும் பட்டுச் சேலை உனக்கொன்று வாங்கிவந்து கொடுக்க வேண்டும்; ஒளிவிடியல் அமைதியைப்போல் திகழும் நீ, உன் இனிக்கின்ற உடலிலதை அணிந்து கொண்டே என்எதிரில் வந்துநிற்க வேண்டும்; அந்தத் தனியழகை நான்சுவைக்க வேண்டும்; உம்.... உம்... தைமாதம் பிறக்கட்டும்; வழிபி றக்கும்! எனக்கிருக்கும் ஆசையெல்லாம் இதுதான்; கண்ணே! என்கையில் பணம்நிரம்ப இருக்க வேண்டும்; உனை அழைத்துக் கொண்டு நகர்ச் சந்தைக் குப்போய் உனக்குமிகப் பிடித்தமுள்ள பொருள்கள் எல்லாம் கனிவோடு நான் வாங்கிக் கொடுக்க வேண்டும்; கண்களினால் நீ சிரிக்க வேண்டும்; அந்தத் தனியழகை நான்பருக வேண்டும்; உம்....உம்.... தைமாதம் பிறக்கட்டும்; வழிபி றக்கும்! அவள்:- எனக்கிருக்கும் ஆசையெல்லாம் இதுதான்.. அத்தான்! இருவிழிக்கும் இருகைக்கும் இருதோள் கட்கும் நினைக்கமுடி யாஇனபம் அளிக்கும் பேசும் நிலாப்பிஞ்சைப் பெற்றெடுக்க வேண்டும்; அன்பு மனம்துள்ளப் பாலூட்ட வேண்டும்; என்றன் மார்புக்கும் மதிப்புவர வேண்டும்; அந்தத் தனியழகில் நாம் மயங்க வேண்டும்; உம்....உம்.... தைமாதம் பிறக்கட்டும்; மகன் பிறப்பான்! வையை நிருவாண மாய்க்கிடந்தாய் வையை! - இன்று நீர்ச்சேலை அணிந்துள்ளாய்; நன்றுன் செய்கை! வருமான மில்லாமல் நின்றாய் - இன்று வள்ளல்போல் வாரிநீ வழங்கு கின்றாய்! மாமதுரைப் பதிகண்ட கொடையே! - தீய வறுமைத்தீக் கேள்விக்கு வாய்ந்த விடையே! தேமதுரத் தமிழ்நாட்டின் மறத்தை - இன்று தெரிவிக்கக் காட்டினையோ சிவப்பு நிறத்தை? கோடிப்பூ மாநாட்டு மேடை! - உன்றன் கொடும்பகைவன் யார்? சொல்ல வா, நான் - கோடை வாடிப்போ கும்பிள்ளைப் பயிரும் - இனிநீ வார்க்கின்ற நீர்ப்பாலால் வளரும்; உயரும்! புதுவெள்ளப் பெருக்குக்கு நன்றி - உன்னால் புதுஇன்பம் காண்கின்றேன் கவலை யின்றி மதுஉள்ளம் கவின்காணும் நேரம் - என்றன் மனம்ஊறும் பாட்டாறும் உனையே சேரும்! தீயும் குளிரும்.... காயும் கனியும் - உன் கைவிரல் மெல்லத் தொட்டால்; தீயும் குளிரும் - உன் தேனகைத் தூற்றல் பட்டால்! கல்லும் உருகும் - உன் கள்ளிசை பருக லுற்றால்; புல்லும் மணக்கும் - உன் பூவடி பொருந்தப் பெற்றால்! முடியுமா? தொலைவில் பூத்துத் தொங்கும் பரிதியைத் தொட்டுப் பார்த்திட முடியுமா? தும்பிவாய்ப் படாத தூயவிண் மலர்களைத் தொடுத்துக் கட்டிட முடியுமா? கலைவான் வில்லின் கவினைக் கையால் கட்டிப் பிடித்திட முடியுமா? கரும்பே! காதல் மலர்ந்தென்? உன்னைக் கடிமணம் புரிந்திட முடியுமா? ஊமை ஒருவன் உயிர்ப்பண் பாடிட உலகில் என்றும் முடியுமா? ஒருகால் கூட இல்லோன் இமயத்(து) உச்சியில் ஏறிட முடியுமா? சீமைப் பயணம் செய்திட ஏழைச் சிறுவன் நினைத்தால் முடியுமா? சிலையே! சிந்தை கலந்தென்? உன்னைச் சேர்ந்திட என்னால் முடியுமா? என்னடி செய்வாய்? என்னைப் பார்த்திட வேண்டாம் போங்கள் என்றே பிணங்கும் பெண்ணே! இன்துயி லாய்உன் கண்ணிற் புகுந்தால் என்னடி செய்வாய் கண்ணே! என்னை நினைத்திட வேண்டாம் போங்கள் என்றே ஊடும் பெண்ணே! இன்பக் கனவாய் இரவில் வந்தால் என்னடி செய்வாய் கண்ணே! என்னைத் தொடர்ந்திட வேண்டாம் போங்கள் என்றே ஓடும் பெண்ணே! இனிக்கும் தேனாய் இதழில் விழுந்தால் என்னடி செய்வாய் கண்ணே! என்னை நெருங்கிட வேண்டாம் போங்கள் என்றே முறைக்கும் பெண்ணே! இருள்வண்டாய் உன் கூந்தல் நுழைந்தால் என்னடி செய்வாய் கண்ணே! என்னைத் தழுவிட வேண்டாம் போங்கள் என்றே திமிரும் பெண்ணே! இளமென் காற்றாய் மேனியைத் தொட்டால் என்னடி செய்வாய் கண்ணே! குறைப்பிறவி! நித்திரை யின்றி உணவுமின்றி - மன நிம்மதி யின்றிப் பொலிவிழந்து - துயர்ச் சித்திரம் போலப் படுக்கையிலே - அவள் சேர்ந்திருக்க - முகம் சோர்ந்திருக்கக் - கண்டு பத்தரை மாற்றுப் பசும்பொன்னின் - உடல் பற்றிய நோயினைப் போக்கிடவே - ஒரு வைத்திய னாய்நான் பிறந்தேனா? - அவள் வாச மலர்க்கை பிடித்தேனா? ஆதிரை போலவே கண்ணழகும் - இடை அசையும் அழகும் நடையழகும் - கொண்ட மாதிடம் சென்று நெருங்கிநின்றே - ‘உன்றன் மனத்துக் கவலை மடிந்துவிடும் - அடி நீ, திட மாயிரு உன்கனவு - இனி நிச்சயம் வென்றிடும்’ என்றிடவே - ஒரு சோதிட னாய்நான் பிறந்தேனா? - அவள் சுந்தரப் பொற்கை பிடித்தேனா? விண்ணைக் கிழித்திடும் மின்னல்நிறம் - பகல் மேக நிறம் அந்தி வானநிறம் - இரு கண்ணைக் கவர்ந்திடும் கிள்ளை நிறம் - தேக்கு காட்டும் நிறம்செந்நெற் காட்டுநிறம் - சோலை வண்டு நிறம் இன்னும் என்னென்னவோ - நிறம் வாய்த்த வளைகாட்டிப் போட்டிடவே - அவள் வண்ணக் கரத்தைப் பிடித்தேனா? - ஒரு வளையல் காரனாய் வந்தேனா? என்ன பிறப்படா என்பிறப்பு! - சே! சே! என்ன பிழைப்படா என்பிழைப்பு! - சுவைக் கன்னற் கவிதை மொழியுடையாள் - துள்ளும் கயலைப் பழிக்கும் விழியுடையாள் - அந்த அன்னம் அருகினில் போயமர்ந்து - மின்னும் அழகுக் கரம்தான் பிடித்தேனா? - தினம் என்னை மறந்து களித்தேனா? - நான் ஏற்ற பிறவி எடுத்தேனா? உனக்கென்ன உனக்கென்ன... ஒரு பார்வையை வீசிவிட்டு போகிறாய் என் உள்ளமல்லவா வைக்கோல் போறாய் பற்றி எரிகிறது உனக்கென்ன ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு போகிறாய் என் உயிர் அல்லவா மெழுகாய் உருகி வழிகிறது நீ என்னை ஒரு முறை பார்த்தாய் நீ என்னை ஒரு முறை பார்த்தாய் இதயத்தில் முள் பாய்ந்தது தயவுசெய்து இன்னொருமுறை பார் .... முல்லை முள்ளால் தானே எடுக்க வேண்டும். கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் பூங்கொடியே உனக்குப் பூ வாங்கி வருகிறேன் முதன்முதலில் தானம் தர ஆசைப்பட்டவன் கர்ணன் வீட்டுக் கதவைத் தட்டியது மாதிரி!

No comments:

Post a Comment